ஒரு சிறிய இணையத் தேடலிலேயே, லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான ஹூலியோ கொர்த்தஸாரைத் தமிழ்ச் சிற்றிதழ் உலகம் மிகுந்த பிரேமையுடன் வாசித்து அறிமுகப்படுத்தி மகிழ்ந்திருப்பதை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது. Latin American Boom என்னும் இயக்கம், வழக்கமான கதைசொல்லல் முறையை உடைத்து, மாய யதார்த்தம் உள்ளிட்ட புதிய பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டதற்காக, சமகால அரசியலைப் பேசுபொருளாக்கியதற்காக அறியப்படுவது. அதில் கொர்த்தஸார் முதன்மையானவர். The House Taken Over, Graffitti உள்ளிட்ட அவரது புகழ்பெற்ற கதைகளை வாசித்தாலே இதனை நாம் புரிந்துகொண்டுவிட முடியும். கொர்த்தஸார், அவரது சிக்கனமான, சிக்கலான சொற்கட்டுமானத்திற்காகவும் பெயர்பெற்றவர்.
கொர்த்தஸாரின் சிறுகதைகளைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சிறிய கையேடாக, சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள நம்பியின் கட்டுரையை நாம் கொள்ள முடியும்:
’Orientation of Cats’ என்னும் சிறுகதையை கொர்த்தஸார், ஓவியரும் சிற்பியுமான தன் நண்பர் யுவான் ஸோரியானோவிற்குச்(Juan Soriano) சமர்பித்துள்ளார். தன் ஓவியங்களில் தொன்மங்களையும் சமகாலத்தையும் பிணைப்பவராக, உள்நாட்டின் நிகழ்வுகளை உலகளாவிய தன்மையுடன் வெளிப்படுத்துகிறவராக அறியப்படுகிற ஸோரியோனோவின் பிரம்மாண்டமான சிற்பங்களை இப்போதும் மெக்ஸிகோவிலும் ஐரோப்பாவிலும் காண முடியும்.’la rupture’ (the rupture) என்கிற கலை இயக்கத்தின் அங்கமாகவும் அவர் இருந்துள்ளார்.
எந்தவொரு கலையின் நோக்கமும் மனித ஆன்மாவின் சாரத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் எனக்கூறுகிற ஸோரியானோவிற்கு இந்தக் கதை மிகப் பொருத்தமான சமர்ப்பணம் என்றே கூறவேண்டும்.

அலானாவும் ஆஸிரிஸும் என்னைப் பார்க்கும் விதத்தில் சிறு ஒளிவுமறைவும் இருக்காது, அவை போலியென்றும் சொல்லிட இயலாது. அவர்கள் என்னை நேர்கொண்டு பார்ப்பார்கள்: அலானா தன் நீல ஒளியுடனும் ஆஸிரிஸ் தன் பச்சைக் கதிர்கொண்டும். மியாவ் என்றபடி பால் கிண்ணத்திலிருந்து ஆஸிரிஸ் திருப்தியாக நிமிர்கையில், அலானா அதன் கரிய முதுகைத் தடவியவாறு, அவர்கள் ஒருவரையொருவரும் அப்படித்தான் பார்த்துக் கொள்வார்கள், என்னால் அடைய முடியாத என் சீராட்டுதல்கள் எட்ட முடியாத, ஒரு பெண்ணும் பூனையும் பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தளங்கள் அவை. ஆஸிரிஸ் மீதான எனது ஆளுகையை நான் சமீபமாக விலக்கிக் கொண்டுவிட்டேன், ஒருவருக்கொருவர் நெருங்கமுடியாத ஒரு தொலைவில் நாங்கள் நல்ல நண்பர்கள்; ஆனால் அலானா என் மனைவி, எங்கள் இருவருக்கிடையிலான தொலைவு வேறுமாதிரியானது. அதை அவள் உணர்ந்ததுபோல் இல்லை என்றாலும், அலானா என்னைப் பார்க்கும்போது, ஆஸிரிஸைப் போலவே கண்ணுக்குக் கண் பார்க்கும்போது – தன் முழு உடலும் அக்கண்களென முழுமையாகச் சரணடைந்து தடங்கலற்று அவள் என்னுடன் இசைகின்ற கலவியின்போது போல – தன் ஒவ்வொரு அசைவிலும் அனைத்திலும் தன்னை முழுமையாக வெளிப்படுத்தியபடி சிறு தயக்கமுமின்றி அவள் என்னிடம் சிரித்து, என்னுடன் உரையாடுவது என் மகிழ்ச்சிக்கு ஊறுசெய்துவிடுகிறது.
இது விநோதமானது… ஆஸிரிஸின் உலகத்துள் நுழைவதை நான் தவிர்த்துவிட்டேன், ஆனால் அப்படியொரு எளிதான முடிவை அலானாவின் மீதான – வாழ்நாள் முழுமைக்குமான இணையான, ரகசியங்களற்ற ஒரு வாழ்க்கையை நடத்துகிற – என் காதல் அனுமதிக்காது. அந்த நீலக் கண்களுக்கு மறுபுறம் ஏராளம் இருக்கிறது, அந்த வார்த்தைகளின் முணகல்களின் மௌனங்களின் ஆழத்தில் இன்னொரு உலகம் பிறக்கிறது, மற்றொரு அலானா அங்கு சுவாசிக்கிறாள். இதை நான் அவளிடம் சொன்னதில்லை, எண்ணற்ற நாட்களையும் ஏராளம் ஆண்டுகளையும் நாங்கள் இதுவரையில் கடக்கத் துணைபுரிந்த அந்த மகிழ்வான மேற்பரப்பைச் சிதைப்பதில் எனக்கு விருப்பமில்லை, நான் அவளைப் பெரிதும் நேசிக்கிறேன். எனக்குரிய வழியில் இதைப் புரிந்துகொள்ளவும் கண்டறியவும் தொடர்ந்து முயல்கிறேன்; நான் அவளைக் கண்காணிக்கிறேன், ஆனால் அது உளவு அல்ல; நான் அவளைப் பின் தொடர்கிறேன், ஆனால் அது அவநம்பிக்கையால் அல்ல; உருக்குலைந்த ஒரு செஞ்சிலையை, முடிக்கப்படாத ஒரு பிரதியினை, வாழ்வின் சாளரத்தில் பதிந்துள்ள ஒரு துளி விசும்பினை நான் நேசிக்கிறேன்.
அலானாவிடம் என்னை எடுத்துச் செல்லும் பாதையாக இசை எனக்குத் தோன்றிய காலம் ஒன்று இருந்தது; எங்களிடமிருக்கும் பர்டோக், ட்யூக் எலிங்க்டன் மற்றும் ’கா’ல் கோஸ்டாவின் இசைக் கோர்வைகளை அவள் ரசிப்பதைப் பார்ப்பது கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குள் முழ்க என்னை அனுமதித்தது, இசை ஒரு புதியவகையில் அலானாவை மேலும் மேலும் திறந்து காட்டியது, ஏனெனில் எதையும் மறைக்காமல் எப்போதும் என்னை நேர்கொண்டு பார்த்த அந்தப் பெண்ணாக மட்டுமே அலானா இருந்துவிட முடியாது. அவளை மேலும் நேசிப்பதற்காக, நான் அலானாவிற்கு எதிராக அலானாவிற்கு அப்பால் அலானாவைத் தேடினேன்;வெவ்வேறு அலானாக்களைக் கண்ணுற முதலில் எனக்கு இசை வழிவகுத்த போதும், ஒரு நிலப்பரப்பின் வெளிச்சத்தையும் இருளையும் சட்டென மாற்றிவிடுகிற மேகக்கூட்டத்தைப் போல ரெம்ப்ராண்ட்டின் அச்சோவியம்(Print) ஒன்று, அவளில் மேலும் மாற்றத்தை உண்டாக்கிய நாள் ஒன்று வந்தது. அவளையும் மீறி அந்த ஓவியம் அவளை எங்கோ எடுத்துச் செல்வதாக நான் உணர்ந்தேன். அலானாவிலிருக்கும் ஒரு அலானாவை அளவிட முடிகிற ஒரு பார்வையாளர் மட்டுமே காண்கிறபடி, ஒருபோதும் மீளாத கனநொடி உருமாற்றத்தை அது நிகழ்த்தியது. அநிச்சையாகவே ஒருவரை மாறச்செய்யும் கெய்த் ஜார்ரெட், பீத்தோவன், அனிபல் ட்ரொலொ ஆகியோர் நான் அவளை நெருங்க உதவினார்கள்தான், ஆனால் ஓர் ஓவியத்தையோ அச்சினையோ எதிர்கொள்ளும் போது தன்னைக்குறித்து அலானா எண்ணிக் கொண்டிருப்பவற்றிலிருந்து அவள் மேலும் விடுபட முடிந்தது. ஒரு ஓவியத்திலிருந்து இன்னொரு ஓவியத்திற்கு அமைதியாகவோ அதுகுறித்த தன் கருத்தினைக் கூறியபடியோ நகர்கிறபோது அவள் தன்னையறியாமல் தன்னிலிருந்து வெளியேறி ஒரு நொடி ஒரு கற்பனையான உலகத்தில் பிரவேசித்தாள். அவளது கைகளைப் பற்றியபடி சற்றுப் பின்போ முன்போ சப்தமின்றி கவனமாக நகர்கிற ஒருவருக்கு, அவளது ஒவ்வொரு சிந்தனையின்போதும், கலைக்கப்பட்ட ஒரு சீட்டுக் கட்டினைப் போல ஒன்றன்பின் ஒன்றாக ராணிகளும் ஏஸ்களும் ஸ்பேட்களும் க்ளப்களும் அலானாவிலிருந்து வெளிப்படுவதைக் காண இயலும்.
ஆஸிரிஸைப் பற்றி என்ன? வயிற்றை நிரப்பி திருப்தியில் முணகுகிற ஒரு கரிய பந்து போல தனியாக விட்டுவிடலாம். ஆனால் அலானாவை நேற்றுப்போல ஒரு ஓவியக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல முடியும், கண்ணாடிகளும் இருட்படப் பெட்டிகளும் உள்ள திரையரங்கிற்கு மீண்டும் செல்ல இயலும், கித்தானிலிருக்கும் கூர்மையான சித்திரங்கள், நீலக் காற்சட்டையும் சிவப்புச் சட்டையும் அணிந்து நுழைவுவாயிலில் சிகரெட்டை வெளியே எறிந்துவிட்டு ஒவ்வொரு படமாக நகர்ந்து தனக்குத் தேவையான துல்லியமான தொலைவில் நின்று என்னிடம் திரும்பி அவை பற்றிப் பேசி ஒப்பிட்டு நகர்கிற களிப்பான நபரைக் கண்ணுறுகின்றன. அவளுக்குச் சற்றுப் பின்போ பக்கவாட்டிலோ நடக்கும் நான் அவற்றைப் பார்ப்பதற்கும் அவள் அவற்றைப் பார்ப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை, அந்தப் படங்களைப் பார்ப்பதற்காக நான் அங்கே செல்லவில்லை என்பதை அவள் ஒருபோதும் கண்டறியவில்லை, ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கான அவளது சிந்தனைவாய்ந்த நிதானமான நடையானது அவளில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது என்பதையும் அவள் உணரவில்லை போல. வேகத்துடன் அவளைக் கைகளில் பொதிந்து சுற்றத்தின் நடுவே அவளுடன் ஒரு முழுமையான பித்துநிலைக்குச் செல்லும் உந்துதலிலிருந்து என்னைத் தடுத்துக்கொள்ளும் பொருட்டு நான் கண்களை மூடிக்கொள்ள வேண்டியிருந்தது. மகிழ்வும் கண்டடைதல்களும் நிறைந்த நிதானமான அவளது தயங்குதல்களுக்கும் தாமதங்களுக்கும் முற்றிலும் வேறான ஒரு காலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தன எனது தாகமிகு எதிர்பார்ப்பின் பதட்டங்கள்.
இசையுடனான அலானா, ரெம்ப்ராண்ட்டைப் பார்க்கும் அலானா என அதுவரையிலான எல்லாமும் ஒரு தெளிவற்ற சமிக்ஞைதான். ஆனால் இப்போது எனது எதிர்பார்ப்பு தாளமுடியாத அளவு நிரம்பத் தொடங்கியிருந்தது; நாங்கள் வந்த நொடியிலிருந்தே அலானா தன்னை அந்த ஓவியங்களுக்கு ஒரு பச்சோந்தியின் கட்டற்ற பேதைமையுடன் ஒப்படைத்துவிட்டாள். ஒரு பார்வையாளன் அவளது தோரணைகளை, தலை சாய்தல்களை, கைகளின் உதடுகளின் அசைவுகளை அவற்றினூடாக வெளிப்பட்ட ஆழ்மனதின் நிற மாற்றங்களை அலானா மேலும் மேலும் வெவ்வேறு அலானாக்களால் நிரம்பி சீட்டுக் கட்டு ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி முழுவதும் நிறைவுறும்வரை மறைந்திருந்து வேவு பார்க்கிறான் என்பதை அறியாமல் வெவ்வேறு படிநிலைகளுக்கு அலானா மாறிக்கொண்டிருந்தாள். புகைப்படத் தொகுப்பினூடாக அவளருகில் மெதுவாக நகர்ந்தபடி அவள் ஒவ்வொரு ஓவியத்திலும் மூழ்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் படம்பிடித்து, அவளுக்கு அவளது உண்மையான உச்சபட்ச நிர்வாணத்தைக் காட்சிப்படுத்தும்படி அடுத்தடுத்த நொடி புதிது புதிதான வெளிச்சத்தால் அவளை சூழச் செய்யும் ஒளிவட்டங்களை உண்டாக்கிய ஒரு முக்கோணத்தின் – அவளிடமிருந்து ஓவியத்திற்கும் ஓவியத்திலிருந்து எனக்கும் நகர்ந்து என்னிடமிருந்து அவளிடம் மீண்டும் சென்று சேர்ந்த – ஒளிமையத்தினை என் கண்கள் பெருக்கிக் கொண்டே இருந்தன. அந்த ஊடுபாவல் எவ்வளவு தூரம் அடுத்தடுத்து நிகழும், இறுதியாக நாங்கள் இருவரும் நிறைவாக வெளிப்படும் அந்த இணைவிற்கான ஒளியிழைவிற்கு இன்னும் எத்தனை புதிய அலானாக்கள் தோன்றவேண்டும் என நான் எண்ணிக்கொண்டிருக்க, இதொன்றும் அறியாமல் இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு என்னிடம் அவளுக்கொரு பானம் பெற்றுவரச் சொன்னாள் அலானா; என் தேடல் இறுதியாக அதன் உச்சத்தை எட்டிவிட்டது: மூடிய கதவுகளின் அவநம்பிக்கையோ பாதைகளில் இடைஞ்சலோ இல்லாது, இனி புலப்படுகிற புலப்படாத அனைத்தையும் உள்ளடக்கியிருக்கும் என் காதல், அலானாவின் நேர் பார்வையை ஏற்றுக்கொள்ளும்.
கரிய பாறைகளின் முற்றத்திலிருக்கும் தனித்த படகின் எதிரில் அவள் அசைவின்றி நெடுநேரம் நிற்பதைப் பார்த்தேன்; உள்ளுக்குள் படபடத்த அவளது கைகள், கடல் தாண்டி தொடுவானத்தின் மேலே அவள் காற்றில் நீந்துவதைப் போன்ற தோற்றத்தைத் தந்தது. எல்லையிலிருக்கும் மரங்களைச் சென்றுசேர இயலாதபடி இடைநிற்கும் கூர்முனை வேலி கொண்ட அடுத்த ஓவியத்தை நன்கு காணத் தோதான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் விதமாக அவள் சற்றே பின் நகர்ந்தது எனக்கு ஆச்சரியம் எதையும் ஏற்படுத்தவில்லை. ஒப்புக்கொள்ள இயலாத அந்தத் தடங்கலை மறுக்கும் எதிர்ப்பாக அது சட்டென மாறியது. பறவைகள், கடல் ராட்சசர்கள், மௌனத்தை நோக்கித் திறக்கிற அல்லது மரணத்தை அனுமதிக்கிற சாளரங்கள்… ஒவ்வொரு புதிய ஓவியமும் அவளது முந்தைய வண்ணத்தை அழித்து சுதந்திரத்தின் வெவ்வேறு பரிமாணங்களை – பறப்பதற்கான, பரந்த வெளிகளுக்கான, இரவுகளையும் சூன்யத்தையும் அவள் விலக்குவதைச் சுட்டுவதற்கான, சூரியனை மறுத்துப் பறப்பதற்கான ஒரு ஃபீனிக்ஸின் தீவிர உந்துதலை அவள் கொண்டிருப்பதற்கான – அவளுக்குள்ளிருந்து வெளிக்கொணர்ந்து அலானாவைத் தன்னுடன் இழுத்துச் சென்றன. நான் பின்னாலேயே நின்றுவிட்டேன்; இதுவும் நான்தான், இது அலானாவைக் குறித்த என் செயல்திட்டம், அலாவினுடனான என் வாழ்வு இது, இந்நொடியானது என் அத்துமீறல்; இறுதியாக இப்போது அலானா, இனி அலானாவும் நானும் மட்டும் என்பதாகத் திகைப்புற்று உறுதிசெய்துகொண்டிருக்கும் என் முகத்தைக் காண்கையில் அவளது கண்களில் வெளிப்படும் வியப்பையும் வினாவையும் என்னால் எதிர்கொள்ள இயலாதென்பதை அறிவேன். அவளை நான் என் கைகளில் நிர்வாணமாக ஏந்திக்கொள்ள, எல்லாமும் தெளிவாக இருக்கிற, எங்களுக்கிடையே எப்போதைக்குமாய் எல்லாமும் பேசப்பட்டிருக்கிற வகையில் காதல் செய்ய விரும்பினேன்; அக்காதலின் முடிவற்ற இரவின் இறுதியில் (ஏற்கனவே அதுபோல் பலவற்றைக் கடந்திருக்கிறோம்) வாழ்வின் முதல் விடியல் பிறக்கும்.
நாங்கள் ஓவியக் கண்காட்சியின் இறுதிக்கு வந்திருந்தோம், சூழலும் தெருவிளக்கும் அலானா அறிந்த ஒருவனாக என்னை மாற்றும் என்னும் நம்பிக்கையுடன் இன்னமும் முகத்தை மறைத்தபடி நான் வெளியேறும் கதவருகே சென்றிருந்தேன். அவ்வளவு நேரம் மற்றவர்கள் என்னிடமிருந்து மறைத்திருந்த ஓர் ஓவியத்தின் முன் அவள் நிற்பதைப் பார்த்தேன், ஒரு பூனையும் ஜன்னலும் கொண்ட அந்த ஓவியத்தின் முன் அவள் நெடு நேரம் அசைவற்றிருந்தாள். ஒரு கடைசி நிலை-மாற்றம் அவளை மற்றவர்களிடமிருந்தும், கித்தானில் மூழ்கியிருக்கும் அவளது கண்களுக்குள் குழப்பத்துடன் தேடியபடி அருகில் சென்ற என்னிடமிருந்தும் முழுமையாகப் பிரித்து அவளை ஒரு மென்சிற்பமாக்கியிருந்தது. அப்பூனை ஆஸிரிஸைப் போலவே இருந்ததையும் ஜன்னலின் வழியாக வெகுதொலைவில் அது பார்த்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்க இயலாதவாறு ஜன்னலின் பக்கச்சுவர் மறைத்துக் கொண்டிருந்ததையும் நான் கவனித்தேன். சிந்தனையிலாழ்ந்து அசைவற்றிருந்த அதன் நிச்சலனத்தைவிட அலானாவின் நிச்சலனமே அதிகமாய் இருந்தது. ஏதோ ஒரு வகையில் அந்த முக்கோணம் உடைந்துவிட்டதாக எனக்குத் தோன்றியது; அலானா என்னை நோக்கித் திரும்பியபோது அங்கே அந்த முக்கோணம் இல்லை; அந்த ஓவியத்திற்குள் சென்றுவிட்டிருந்த அவள் அதிலிருந்து மீளவே இல்லை. இன்னமும் அந்தப் பூனைக்குப் பின்னாலேயே நின்றிருந்த அவள், ஜன்னலுக்குத் தொலைவில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என வேறு யாரும் அறிய இயலாத ஒன்றை, அலானாவும் ஆஸிரிஸும் என்னை நேர்கொண்டு பார்த்த ஒவ்வொரு முறையும் அவர்களிருவரும் பார்த்த ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
000
- (யுவான் ஸோரியானோவிற்கு)

இல. சுபத்ரா
இல.சுபத்ரா, பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர். மொழிபெயர்ப்பாளர். திருப்பூரில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அமிதபா பக்சியின் ‘பாதி இரவு கடந்துவிட்டது(Half the night is gone)’ நாவலின் மொழிபெயர்ப்பு, 'அது உனது ரகசியம் மட்டுமல்ல', யுவான் ரூல்ஃபோவின் 'எரியும் சமவெளி' , அனா பர்ன்ஸின் 'ஆயன்(Milkman)' ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். பல்வேறு இணைய இதழ்களிலும் புனைவு அபுனைவு இருவகைமைகளிலும் மொழிபெயர்த்து வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.