குறுங்கதைகள் : அரவிந்தன் பெருமாள்

புகை 

சருகுகளின் பழுப்புக் குவியல்களில் தனது நிறத்தைத் தொலைத்த பாம்புகளின் பின்னல்களைப்போல அவளது கைகளிரண்டும் படுக்கையில் பின்னிக் கிடப்பதாகக் கண் முன்னே வந்த காட்சியை எண்ணி அவள் திடுக்கிடவில்லை.இது போல விநோத காட்சிகள் அவ்வப்போது அவளுக்கு ஏற்படுவதுண்டுதான்.முதலில் அதிர்ச்சியடைந்தவள் அது பழக்கமான நிலையில் அம்மாதிரியான இல்பொருள் காட்சிகளைக் கடந்து போகக் கற்றுக்கொண்டாள்.

இந்த நிலை ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லைதான். முன்பொரு பெரு மழைக்காலத்தில் தனது குடும்பத்தினர் வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட பொழுதில் அவளால் அவர்களைச் சீக்கிரமாகக் காப்பாற்ற முடியாமல் போனது.அதன் விளைவாகக் கோபித்துக்கொண்டு அவளுடைய கணவன்   தனது குழந்தைகளுடன் பிறந்தகம் சென்றுவிட்டிருந்தான்.இதை ஒரு பெரிய காரணமாகச் சொன்னாலும் இதற்கு மாற்றாக வேறு ஒரு பெரிய காரணம் இருக்குமென்றும் அந்தக் காரணம் அவளது ஒழுக்க நடத்தை குறித்த கேள்வியாக இருக்கவேண்டுமெனவும் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் பேசிக்கொண்டனர் .பிறர் துன்பப்படும்போதுதான் சுற்றம் தன் வாயைப் பலமாக அசைபோடும் .ஆனால் அது குறித்துத் துளியளவும் கவலை கொள்ளவில்லை அவள்.உண்மை எதுவெனத் தனக்குத் தெரிந்ததால் பெற்ற தெளிவு அது.

இரு குடும்பத்தினரும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் சுரேஷின் பிடிவாதம் குறையாததால் அவளுக்கு இப்படியொரு தனித்து விடப்பட்ட நிலை.தனது படிப்பின் விளைவாக வந்த வேலை அவளுக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்தது.பால்யத்தில் தனிமையில் விடுமுறை நாட்களைக் கழித்த ஏரிக்குள் தற்போது பச்சைப் பாவடையும்  வெள்ளை அரைக் கை சட்டையுமாக ஒரு மஞ்சள்  நிற துணிப்பையில் பள்ளிப் பாட புத்தகங்களைச் சுமந்து  நடந்து கொண்டிருந்தாள்.இந்தக் காட்சி ஏன் இப்போது வருகிறது என்று நினைத்துக்கொண்டு அறையின் கதவினை ஜன்னல்களை மூடிக்கொண்டால் இக்காட்சி வராதென நினைத்துக் கதவினையும் ஜன்னல்களையும் மூடினாள்.

 எங்கிருந்தோ இருள் வந்து சூழ்ந்தது.காற்று கூட எளிதில் புக இயலாத அந்த அறையில் கரியமில வாயுவின் ஆக்கிரமிப்பு அதிகரித்த போது சற்று மூச்சுத் திணறியது.அவளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் விலங்கொன்றின் வேட்கை ‘அறையைவிட்டு வெளியேறு வெளியேறு’ என்று கத்திக்கொண்டே இருந்தது.

உடனே ஒரு ஜன்னலின் மேலிருக்கும் உட்புற தாழ்ப்பாளை மட்டும் நீக்கி சற்றுத் திறந்தாள்.அறைக்கு வெளியே துணையின்றி அலைந்து கொண்டிருந்த காற்று ஐன்னல் கதவினை முட்டிக்கொண்டிருந்த ஆவேசத்துடன் உள் நுழைந்து சற்று ஆசுவாசமளித்தது.காற்று தனியே வரவில்லை.கூடவே கொஞ்சம் வெளிச்சத்தையும்,அவளுக்கு ஏற்கனவே பழக்கமாயிருந்த நடராஜ் மார்க் இரப்பர் அழிப்பானின் வாசனையயும் கொண்டுவந்திருந்தது.அறைக்கு வெளியே தவிட்டுக் குருவிகளீன் கீச்சொலி சன்னமாகக் கேட்டது.அவற்றின் ஒலி அவளது தனிமையின் மலர்தலைக் கட்டுப்படுத்துவதாக உனர்ந்தாள்.எனவே மேஜையில் இருந்த கண்ணாடியால் ஆன ‘பேப்பர் வெய்ட்’ ஐ எடுத்து ஒலி வந்த திசையில் எறிந்தாள்.எறிந்த திசையிலிருந்து சிறகுகள் படபடக்கும் ஒலி கேட்கவே சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் .

தனது அறைக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் அறையிலிருந்த ஏதோ ஒன்று வெளியேறியிருப்பதாகவும் புதிதாக ஏதோ ஒன்று குடியேறி இருப்பதாகவும் தோன்றிற்று.இந்த முறை குடியிருப்பது எது என்பதைப் பற்றி கவலை கொள்ளவில்லை அவள்.

அந்தத் தனியறையில் அவளுக்குத் துணையாக இருக்க உயிரிகள் என எடுத்துக்கொண்டால் கொசுக்களும்,பல்லிகளும்,சில கரப்பான் பூச்சிகளும்தான்.கழிவறையில் எப்போதாவது சலங்கை சையான் எனப்படும் பூராணும்  தென்படுவதுண்டு.

அதிக புத்தகங்களைக் கொண்ட அறையில் எப்போதும் கேட்டபடியே இருக்கும் சத்தம் சொற்களின் சத்தம்தான்.அவள் அறையில் இருக்கும் போது அவை அமைதியாகவும்  அறையவிட்டு வெளியே செல்லும்போது தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதையும் தூரத்திலிருந்தே பார்க்கவும் கேட்கவுமான புலனறிவை அந்தப் புத்தகங்களில் இருந்த சொற்கூடுகளும் சொல்திரட்சிகளுமே அவளுக்குத் தந்திருந்தன.

அறைக்குத் திரும்பியவுடன்  செய்த முதல் வேலை சண்டைக்குக் காரணமான சொற்களைக் கொண்ட அந்தப் புத்தகங்களை எரிவாயு அடுப்பிலிட்டுக் கொளுத்தியதுதான்.அதனால் வெளியேறிய புகையினை அறைக்கு வெளியே செல்லாதவாறும் பார்த்துக் கொண்டாள்.

அறைக்குள்ளே காற்றுக் குறைவாகவே உலவியதால் புகையின் உலாவலும் மெதுவாகவே  இருந்தது.வெம்மையூட்டப்பட்ட காற்றில் கலந்த புகை,அவள் கண்களை மூடித் தியானித்திருக்கும் சமயங்களில் வந்து போகும் அளவற்ற எண்ணப் புழுங்குதலை நினைவு படுத்திற்று.காற்று வளையங்கள் புகையாக மிதந்தலையும் அறையில் பொருட்களும் அவற்றின் இருப்பின் நிலையிலிருந்து வளைந்து நெளிவதாகக் கண்டாள்.நிலைத்த திடப்பொருட்கள் இளகுவது குறித்து ஆச்சர்யமும் அடைந்தாள்.நேரம் ஆக  ஆக அறையிலுள்ள  எல்லாப் பொருட்களும் புகையினால் எரிய ஆரம்பித்தன.முடிவற்ற எரிதலின் நீட்சியாகப் புகையின் வாசம் மட்டும் எப்படியோ அறையை விட்டு வெளியேறிவிட, புகையோடு கலந்திருந்த ஜடப் பொருட்களின் தீய்ந்த வாசம் முகர்ந்த அக்கம்பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் என்னவோ ஏதோவென்று அலறி பதறி ஓடிவந்து அறைக்கதவைத் தட்டினார்கள்.திறந்து கொண்ட புகைக்கதவுகளின் வழியே அவள் நிதானமாக புகையுருவாக மாறி வெளியே சென்றதை ஒருவரும் கவனிக்க இயலாதவாறு புகை ஆக்கிரமித்திருந்தது அறையை..

௦௦௦

டாஸ்

அப்போது அவன் வீட்டில் தொலைக்காட்சி கிடையாது .அந்தக் காம்பவுண்டுக்குள் இருக்கும் வீடுகளில் அவன் வீட்டைத் தவிர்த்து மற்றெல்லா வீடுகளையும் தொலைக்காட்சி நிறைத்திருந்தது.இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் மேட்ச்சை எப்படியாவது பார்த்துவிட வேண்டும்.ராஜேந்திரன் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்தார்.அவர் வீட்டில் பார்க்க வேண்டுமென்றால் ஜன்னல் வழியாகத்தான் பார்க்க முடியும்.அதுவும் எல்லா நண்பர்களும் ஒரே நேரத்தில் அந்தச் சிறிய ஜன்னலுக்கு வெளியே நின்று பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.குமார் வீட்டில் மற்ற வீட்டுப் பிள்்ளைகளுக்கு அனுமதி இல்லை.குறிப்பாக அவனுக்கு.எனவே என்ன செய்வதென்று புரியாத கணத்தில் போலீஸ்கார மாமா டொனால்ட்  நினைவுக்கு வந்தார் .கெடா மீசையும் எப்போதும் சிவந்த கண்களும் கொண்ட அவரைப் பார்க்கவே மாணவப்பருவத்துப் பையன்கள் பயப்படுவார்கள் .ஒருமுறை  ஒருவனை சப் ஜெயில் அருகே அவர் புரட்டி எடுத்தபோது அவருடைய மூர்க்கத்தனத்தைப் பார்த்தான். .அன்று இரவு அவன் கனவில் அதே மூர்க்கத்தனத்தோடுதான் வந்தார் .அவனுக்கு மட்டுமல்ல.அவன் நண்பர்களுக்கும் அவரைக் கண்டால் பயம்தான் .ஆனால் அவரது மனைவி அவருக்கு நேர் தலைகீழ் சுபாவம் மிக்கவர் .அவர் இல்லாத நேரங்களில் அவரது மனைவியான அக்கா, வீட்டில் டி வி பார்க்க அனுமதிப்பார்.டொனால்ட் மாமா வந்தால் அவர்கள் விரட்டப்படுவார்கள்.மேட்ச் நடக்கும் நாளன்று டொனால்ட் மாமாவிற்கு ட்யூட்டி. எனவே அவனுக்கு வசதியாகப் போய்விட்டது.முன்கூட்டியே  அக்காவிடம் தெரிவித்து விட்டான் . அக்கா  டொனாலட்  மாமாவுக்கு ரெண்டாந்தரம்.திருமணமாகி இரண்டு வருடங்கள்தான் ஆகின்றன .குழந்தைகள் இல்லை.செட்டியார் அண்ணாச்சி கடையில் ஏதேனும் மளிகைப் பொருட்கள் வேண்டுமெனில் அவனைத்தான் அக்கா அனுப்புவார்.மளிகைச் சாமான்கள் வாங்கியதற்காகத் திண்பண்டங்களும் தரப்படுவதுண்டு .டி.வி பார்க்கும்போது கூட ஏதாவது திண்பண்டங்கள் தருவார் அக்கா.அவனுடைய வீட்டில் அடிக்கடி திண்பண்டங்களுக்கு வாய்ப்பு இல்லாதததும்  அக்காவின் வீட்டுக்கு அவன் அடிக்கடி செல்வதற்கான காரணம் எனலாம்.குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை எனில் நிறைய திண்பண்டங்கள் கிடைக்கும் .வெள்ளிக்கிழமை அருகிலிருக்கும் மாரியம்மன் கோவிலுக்குத் தவறாமல் சென்று வழிபட்டு வீடு வரும்போது ஒரு வாரத்திற்கான திண்பண்டங்களை வாங்கி வந்துவிடுவாள் அக்கா .தினமும் முன்னிரவுகளில் சந்திரபாபுவின் பாடல்களைக் கேட்டபடி டொனால்ட் மாமா தண்ணியடிக்கும்போது அவை அக்காவால் பறிமாறப்படும். அவன் அவர் குடிப்பதையும் குடித்தபிறகு அன்பாகப் பேசுவதையும் இரசித்துப் பார்ப்பான்  .அப்போதைய நேரங்களில் அவரது அன்பும் பிரியமும் அலாதியானது .அன்பொழுகப் பேசுவதும் திண்பண்டங்களை இந்தா எடுத்துக்கோ எனச் சொல்லி நீளும் அவருடைய கைகள் வாஞ்சையானவையாக அப்போது இருக்கும்.

மேட்ச்சும் வெள்ளிக்கிழமைதான் நடக்க இருந்தது .இந்திய நேரப்படி காலை ஒன்பதரை மணிக்கு.வெள்ளிக்கிழமைகளில் பள்ளியில் பி ஈ டி மாஸ்டர் கண்டிப்பாக விளையாட்டு பீரியடுக்கு எல்லோரையும் வரச்சொல்லுவார்.அதற்கான நேரம் இரண்டாவது பீரியட் என்பதால் எல்லோரும் காலையில் பிரசன்ட் ஆகவேண்டும் .ஆப்சென்ட் ஆகுபவர்களின் கதி,திங்கள் கிழமை அவர் செய்யச் சொல்லும் நாற்காலி போஸ்ஸின் நேர நீட்டிப்பும் இடுப்பு கை கால்களில் ஏற்படும் வலியில் தெரியும் .அத்தகைய வலிக்குப் பழக்கமானதால் அவன் மனதளவில்  மேட்ச் பார்ப்பதற்குத் தயாராகிவிட்டான் .உடன் இருந்த நண்பர்கள் சிலர் பள்ளிக்குச் சென்றுவிட்டனர் .அவன் மட்டும் பள்ளிக்குச் செல்லாமல். அக்கா வீட்டுக்கு மேட்ச் பார்க்க சென்றான் .அந்தக் காம்பவுண்டில் பெரும்பாலோர் அவரவர் வேலைக்குச் சென்றுவிட்டிருக்க அவசரமும் பரபரப்பும் குறைந்த அமைதியில் ஒரு காகம் மட்டும் டி வி ஆண்டெனா மீதமர்ந்து கரைந்தது.கதவை அக்காதான் திறந்தார் .மாமா ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றுவிட்டிருந்ததைப் பார்த்திருந்தான்  .

“அப்படி என்னதான் இருக்கோ இந்த கிரிக்கெட்ல”

“நீங்க நாடகம்லாம் ஒண்ணு விடாம பாக்கறீங்க இல்ல ?,அது போலத்தான்க்கா எங்களுக்குக் கிரிக்கெட் மேட்ச் “

“நீங்களும் பாக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா  விடமாட்டீங்க”

“எனக்கு வேணாம்பா ,ஆட்டமும் புரியாது ,அவனுங்க பேசுற இங்லீஷும் புரியாது .

எனக்கு வேல கிடக்கு ,நீ பாரு “

சொல்லிவிட்டுச் சமயலறைக்குள் சென்றார் அக்கா .சிறிய வீடுதான் .ஒரு வராண்டா சைக்கிள் ,பைக் நிறுத்துவதற்கு .வராண்டாவைத் தாண்டி உள்ளே சென்றால் ஹால் .இடப்புறம் பெரிய அறை உறங்குவதற்கும்,சிறிய அறை சாமி கும்பிடுவதற்கும் இருந்தன. அவற்றைத் தாண்டி சென்றால் இடப்புறம் குளியலறையும் கழிவறையும் ஒரு சுவரால் பிரிக்கப்பட்டிருந்தது கடைசியாகத்தான் வலப்புறம் சமையலறை .எதையோ தாளிப்பதன் வாசனை நாசிக்கு வந்தது.அவன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்க ஆயத்தமானான் .வெதர் ரிப்பார்ட்டுக்கு முன்னான விளம்பரம் போடத்துவங்கினார்கள் .

“மேட்ச் ஆரம்பிச்சாச்சாடா”

“ஆரம்பிச்சிடுவாங்க்கா”

“ஆரம்பிக்கறதுக்குள்ள அண்ணாச்சி கடைக்கு போயிட்டு வாயேன்” 

“சரிக்கா”

ஓர் இருபது ரூபாய் நோட்டை எடுத்துவந்து கையில் கொடுத்து

“குளிக்கிற சோப் தீந்து போச்சு ,போய் வாங்கிட்டு வந்துடறியா”

“என்ன சோப்புக்கா?”

பிராண்டைச் சொன்னார் அக்கா

 டாஸ் போடுவதற்குள் வந்துவிடலாம் என்று ஒரே ஓட்டமாகத் தெருவில் ஓடிச்சென்றான் .தெருநாய் ஒன்று அவனது அவசரத்தைக் கண்டு ஓடி ஒளிந்தது.அண்ணாச்சி கடையில் சோப்பை வாங்கிக்கொண்டு ஒரே மூச்சில் வீட்டுக்கு வந்தான் .வீட்டுக் கதவு சாத்தப்பட்டிருக்கும் என நினைத்து ”அக்கா” எனக் கூப்பிட்டுக்கொண்டே தட்டினான்.கதவு உள்வாங்கி திறந்து கொண்டது .டி.வி ஓடிக் கொண்டிருந்தது.

நல்ல வேளை இன்னும் டாஸ் போடவில்லை.

அக்கா என மீண்டும் அழைத்தான். பதில் இல்லை .டி வி வால்யூமைக் குறைத்தான் .

இப்போது அக்காவின் குரல் வந்தது .

“வந்துட்டியாடா” குரல் குளியலறையில் இருந்து வந்தது.

“ஆமாக்கா ,சோப்ப எங்க வைக்கிறது ?“

“இங்க கொண்டு வாடா” 

குளியலறையை நோக்கிச் சென்றான் . கதவு சாத்தப்பட்டிருந்தது .கதவின் மேல்  அக்கா அணிந்திருந்த உடைகள் வரிசையாகப் போர்த்தப்பட்டிருந்தன.  அறைக்குள்ளிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை .

“அக்கா”

“கதவுகிட்டயா நிக்கற”?

“ஆமாக்கா”

சட்டென கதவைத் திறந்தாள்.கதவைத் திறந்த அதே நொடி குப்பென வந்த சந்தன சோப்பின் வாசனையிலும் அவள் நின்ற கோலத்தைக் கண்ட நிலையிலும்  என்ன செய்வதெனத் தெரியால் திடுக்குற்றுக் குழம்பி சட்டென  அவன் வலப்புறம் திரும்பி தொலைக்காட்சியைப் பார்த்தான் .

 “அங்க என்னடா பாக்குற?”

”டாஸ் போட்டுட்டாங்கக்கா ,நாம பேட்டிங்கா பவுலிங்கா ன்னு தெரியல” என்றான் .

௦௦௦

அரவிந்தன் பெருமாள்

Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop