
விண்
*
எனக்கும்
நிலா போகும் ஆசை வந்தது
எலானிற்கு ஓர் மடல் எழுதினேன்
பதில் விரைவாக வந்தது.
“வா.’
நான் அமெரிக்கா சென்றேன்.
அவர் வெள்ளை. நான் கறுப்பு.
“உங்களிற்கு மண் தெரியுமா?”
“விண்தான் தெரியும்.”
நானும் அவரும் பயணம் செய்தோம்
நிலாவில் சில ஆடுகள் இருந்தன
எனக்கு ஆச்சரியம் வந்தது
“இவை விஞ்ஞான ஆடுகள்.”
அவர் ஓர் ஆட்டை தொட்டார்
அது அவரது தலையைத் தின்றுவிட்டது
நான் வானிலிருந்து குதித்தேன்
௦
இறைவன்
*
இன்று இரவு
எனது கதவு தட்டப்பட்டது
திறந்தேன்
“யார் நீங்கள்?”
“இறைவன்.” என்றார்
அவரது உடல் களைப்பில்
“நீங்கள்தான் கடவுளா?”
“ஆம், இப்போது எனக்கு
வேலை இல்லை
பசிக்கின்றது…”
“கடவுள் வேலை செய்வாரா?”
“யார் வேலை செய்யவில்லை?”
உள்ளே நுழைந்தார்.
அனைத்து உணவுகளையும்
எனது பூனைகள்
உண்டு விட்டன
பழைய பாண்தான் இருந்தது
கொடுத்தேன்
கடிக்க முடியாத பாண்
என்னை அதனால் அடித்துவிட்டு
இறைவன் தப்பித்தார்
௦
பூ
*
“இது பூவின் தினம்”
எனது துணைவி சொன்னார்
சரி
பூக்களை வாங்குவோம்
எனக் கிளம்பினேன்
எனது வசிப்பிடத்திற்கு
அருகில் உள்ள பூக்கடை
பூட்டப்பட்டே இருந்தது
வேறு கடையைத் தேடினேன்
நடை… நடை
காணவே முடியவில்லை
கோப்பிக்கடை ஒன்றிற்குச் சென்று
வைன் அருந்தினேன்
ஓர் அழகிய பெண்
பூக்களோடு இருந்தார்
“அழகிய பூக்கள்” என்றேன்
“நான் அழகி இல்லையா?”
“தேவதை” என்றேன்
அவளது வீட்டில் நாம்
கட்டிலில்
தனது பூக்களால் அடித்து
என்னைக் கொலை செய்தாள்
௦
கொலைகள்
*
இன்றும் எமது உலகு
மனிதக் கொலைகளின் உலகில்லையா?
போர்களது
கொடூரப் பற்களால் கடிக்கப்படவில்லையா?
முதலாளித்துவம்
எமது மனிதர்களைக் கடிக்கின்றது
எப்போதும் இரத்த வெள்ளங்கள்
வெள்ளிகள் வானில் இருந்து
அழுகின்றன
எமது பள்ளிகளும் சாகின்றன
எமது நிலத்தில்
அதிக சடலங்கள்
எமது நிலம் எது?
அது ஓர் சுடலை
௦

க. கலாமோகன்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

அருமையாக உள்ளது ஐயா
கலாமோகன் கவிதைகள் அடி மனதைக் கிளறுகின்றன –
எமது நினைவுகள் பின்னோக்கிச் சிதறுகின்றன..!