அமிலி : அரிசங்கர்

அமிலி : அரிசங்கர்

1.

நான் அமிலியை முதன்முறையாக பார்த்தது மணக்குள விநாயகர் கோயில் வாசலில், லட்சுமி யானையிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு இருந்தபோது. அன்று நான் சவாரிக்குப் போகவில்லை. எனது ஆட்டோவை கோவிந்தன் ஷெட்டில் விட்டிருந்தேன் — சின்னப் பிரச்சனை ஒன்று நீண்ட நாட்களாக பல்லில் மாட்டிய துனுக்குப் போல என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. கோவில் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கட்டணம் கட்ட வந்தபோது, தூரத்தில் பெருமாள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அவன் அருகே சென்று விசாரிக்க, அவன் கோவில் வாசலில் நின்றுகொண்டிருந்த அமிலியைக் காட்டி “சவாரி” என்றான்.

அமிலி சற்று பயந்து நடுங்கிக்கொண்டே யானையிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டிருந்தாள். ஐரோப்பிய சுற்றுலா பயணிகளுக்கு எப்போதும் யானை என்பது ஒரு ஆச்சர்யமே. அவ்வளவு பெரிய மிருகம் மனிதர்களுக்குக் கட்டுப்பட்டு, சொன்னதைச் செய்யும் நாய்க்குட்டியைப்போல் பழக்கப்படுத்தப்பட்டிருப்பது, சுற்றுலா பயணிகளுக்கு மிக விசித்திரமாகப் தோன்றும்.

“ரெகுலர் சவாரி போலவே?” என்றேன்.

அவன் சிரித்தபடி, “ஆமா மச்சி. ஏதோ குரூப்பா வந்திருக்காங்க. அடிக்கடி கூப்பிடுவாங்க. யாரையோ பேட்டி எடுப்பாங்க. ஏதோ டாக்குமென்ட்ரின்னு சொன்னாங்க. இன்னாதுன்னு மறந்துட்டேன்,” என்றான்.

“சரி மச்சான், நீ பாரு. நான் கிளம்புறேன். பில்லு கட்டிட்டு, கொஞ்சம் வேல இருக்குது,” என்று சொல்லி, அவன் தோளில் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். அவன் சிரித்தபடி கையாட்டிவிட்டு திரும்பி, தன் சவாரி வருகிறதா என்று பார்க்க ஆரம்பித்தான். நான் நேராக சென்று பில்லைக் கட்டிவிட்டு புறப்பட்டேன்.

இரண்டு வாரங்கள் கழித்து ஒருநாள், பெருமாள் என் வீட்டுக்கு அதிகாலையிலேயே வந்தான். அவன் முகம் இருண்டிருந்தது. பதறியபடியே வந்திருந்தான். நான் அப்போதுதான் குளித்து முடித்து, சவாரிக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தேன். அவனைப் பார்த்ததும், ஏதோ பிரச்சனை என்று உணர்ந்தேன். அவனை உட்காரவைத்துவிட்டு அம்மாவை டீ போடச் சொன்னேன். மனதிற்குள் கையிருப்பில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கணக்குப் போட்டேன். பெருமாளை அம்மாவிற்கு பிடிக்கும். உடனே எழுந்து சென்றாள். வேறு நண்பர்கள் என்றால், அம்மா உட்கார்ந்த இடத்திலிருந்து கூட நகர்ந்திருக்க மாட்டாள்.

“இன்னடா?”

“மச்சான்… முந்தாநேத்து காலை, அம்மா தூக்குமாட்டிகிட்டா,” என்றான்.

நான் அதிர்ச்சியடைந்து அவனைப் பார்த்தேன். உடனே எதுவும் பேச இயலவில்லை.

“காப்பாத்திட்டோம்…”

“இன்னா சொல்றடா? எங்கிட்ட யாருமே சொல்லவே இல்ல. நீயும் இப்போதான் வந்து சொல்ற. எதுக்குடா? உன் பொண்டாட்டி சண்டையாயிருக்கா? அது மாதிரியெல்லாம் இல்லையே…”

“அதெல்லாம் ஒன்னுமில்லை. இது வேறு…”

“இன்னா?” என்று கேட்கிறபோதே, அம்மா டீ கொண்டு வந்தாள். நாங்கள் இருவரும் அமைதியாக இருந்தோம். ஏற்கனவே போட்டிருந்த டீயை சூடாக்கி கொண்டு வந்திருக்கிறாள். அதனால்தான் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாள். பெருமாளிடம் டீயைக் கொடுத்தபோது, “அம்மாவுக்கு இப்ப பரவாயில்லைப்பா,” என்றாள்.

நான் மீண்டும் அதிர்ந்து, அம்மாவைப் பார்த்தேன். பெருமாள் எதுவும் சொல்லவில்லை. அம்மாவுக்குக் கூட இது தெரிந்திருக்கிறது. எனக்குத்தான் தெரியவில்லை. உண்மையில் இது எனக்குச் சங்கடமாகவே இருந்தது. சிறிது நேரம் நின்றுவிட்டு, அம்மா அந்த இடத்தைவிட்டுச் சென்று விட்டாள்.

“சொல்லுடா?”

“அம்மாவுக்கு கழுத்தில் ஏதோ கட்டி மாதிரி இருந்திருக்குதுன்னு டாக்டரைக் பார்த்திருக்காங்க. அவர் டெஸ்ட் எடுக்கணும்னு சொல்றாரு. கேன்சர் கட்டி மாதிரி இருக்குன்னு கூறியிருக்காரு. இதைக் கேட்டு பதறிப் போயி, அக்கம்பக்கத்து பொம்பளைங்ககிட்ட சொல்லி அழுது இருக்காங்க. அந்த அறிவில்லாதவங்க, புள்ளைகளுக்குப் பரவிடும்னு கெளப்பி விட்டுருச்சிங்க. எங்க எல்லாருக்கும் பரவப் போகுதுன்னு நினைச்சு தூக்குமாட்டிகிட்டா…” என்றான்.

“இதுங்களுக்கு அறிவு மயிரே இல்லயா?”

“எதுங்களுக்குத் தான் இருக்குது. அதுங்க பேச்சைக் கேட்டுட்டு என் பெண்டாட்டியும் ஒரேடியா அழுது ஆரப்பாட்டம் பண்ணுது. என் புள்ளைகளுக்குப் பரவிடும்னு. அப்புறம் மொத்தமா எல்லாத்தையும் இழுத்துகிண்டு டாக்டர்கிட்ட போயி, அவரு இதுங்களுக்கு புரிய வைக்கறதுக்குள்ள நாக்கு தள்ளிப் போச்சி.”

“ம்…”

“மச்சான்… எனக்கு ஒரு உதவி வேணும் டா.”

“எவ்வளவு வேணும்?”

“அதுவும் வேணும் தான். ஆனா இப்ப வேற ஒரு அவசரம். கொஞ்ச நாளைக்கு அந்த ரெகுலர் சவாரியை பாத்துக்கடா.”

“என்னால ரெகுலரா போக முடியாதுனு தான் நான் ஸ்கூல் சவாரியும் எடுக்காம இருக்கேன்.”

“தெரியும் மச்சான். ஒரு பத்து நாளுக்கு.” என்று கெஞ்சினான்.

என்னால் தவிர்க்க முடியவில்லை. சரி என்று ஒப்புக்கொண்டேன். அவன் முகம் மலர்ந்து விபரங்களை கொடுத்துவிட்டுச் சென்றான். நான் சிறிது நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். பிறகு மெல்ல எழுந்து வெளியே சென்று ஆட்டோவை இயக்கி, ஆரோவில்லை நோக்கி சென்றேன்.

பெருமாள் சொன்ன இடத்திற்கு சென்றபோது, இரண்டு பெண்கள் வாசலிலேயே தயாராக நின்றுக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கோவிலில் பார்த்த பெண். நான் நேராக அவர்கள் அருகில் சென்று ஆட்டோவை நிறுத்தினேன். முதலில் விழித்தவர்கள், பிறகு மெல்ல அரைகுறைத் தமிழில் “பெருமாள் வருவாரு?” என்றனர். நான் பதிலுக்கு பிரெஞ்சில், “சில நாட்களுக்கு பெருமாள் வரமாட்டார். அவர்தான் என்னை அனுப்பினார். அவர் திரும்ப வரும் வரை நான்தான் வருவேன்” என்றேன்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு தங்கள் கைப்பையிலிருந்து சிறிய போன்களை எடுத்தனர். அப்போதுதான் அதுமாதிரியான சிறியவகை போன்கள் வந்திருந்தது. எனக்கு அவசரம் என்றால் ஒரு ரூபாய் போனே போதும் என்று நினைத்திருந்தேன். ஆனால், பெருமாள் ஒன்று வாங்கி வைத்திருந்தான்.

அவள் பெருமாளுக்கு போன் செய்து விசாரித்தாள். அவன் நல்லவிதமாக சொல்லியிருப்பான் போல, அவர்கள் வேகமாக வந்து வண்டியில் ஏறினார்கள். அவர்களுடைய வழக்கமான பயணத் திட்டம் எனக்கு தெரியாது என்பதால் வண்டியைக் நகர்த்தாமல் அவர்களைப் பார்த்தேன்.

காலை உணவுக்காக ஒரு பிரெஞ்சு உணவுக்கடைக்கு போகச் சொன்னார்கள். அன்று மதியம் வெயிட் டவுனில் இருந்த ஒரு வீட்டின் முகவரியை கொடுத்துப் போகச் சொன்னார்கள். இந்த முறை எங்களுடன் இன்னொருவனும் சேர்ந்துகொண்டான். அவன் கையிலொரு சிறிய கேமரா பை. அவன் எனக்கு பிரெஞ்சு தெரியாது என்ற நினைப்பில் என்னைப் பற்றியும் ஊரைப் பற்றியும் நக்கலாக பேசிக்கொண்டே வந்தான்.

அவர்கள் இருவரும் ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டே இருந்தவர்கள், சட்டென அமைதியானார்கள். அவனையும் அமைதியாக இருக்கச் சொன்னார்கள். நான் காலையில் பிரெஞ்சு பேசியது நினைவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவன் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தான்.

நான் எந்தவித பாவனையும் காட்டாமல் அமைதியாக அவர்கள் சொன்ன முகவரிக்கு கொண்டு சென்றேன். அவன் என்னைக் காத்திருக்கும்படி பிரெஞ்சில் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். திரும்பி அந்தப் பெண்களிடம் எனக்குப் புரிய வைக்கச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “நான் காத்திருக்கிறேன், நீங்கள் போய் வாருங்கள்” என்று பிரெஞ்சில் சொன்னேன். அவன் திகைப்பாக என்னைப் பார்த்தான். நான் நட்பாக சிரித்ததும், இயல்புக்கு வந்தான்.

அன்றிலிருந்து தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் அவர்களுக்காக ஆட்டோ ஓட்டினேன். சில முறை காத்திருக்க வேண்டியிருந்தது. சில முறை விட்டுவிட்டுப் புறப்பட்டுவிடுவேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அமிலி என்னைப் பார்க்கும் போதெல்லாம் நட்பாக சிரிக்க ஆரம்பித்தாள். நான் அவர்கள் மொழியில் ஓரளவு பேசுவது அவர்களுக்கு வசதியாக இருந்தது.

“பெருமாள் திரும்பி வந்தாலும் நீயே எங்களுக்காக வண்டி ஓட்டு” என்று அமிலியுடன் இருந்த பெண் சொன்னாள். உண்மையில் அவள்தான் அந்தக் குழுவிற்கு தலைவி. ஆனால் யார் வந்தாலும் அவர்களின் முதல் பார்வை அமிலியின் மீதே விழும். அவளிடமே பேசுவார்கள். அவளை முதன்முறையாகப் பார்க்கும் எவரும் அவள் அழகில் மயங்கிவிடுவார்கள். அவள் அழகு ஒரு குழந்தைத் தனமானது. காமத்தோடு பார்ப்பவர்கள் அபூர்வம். அப்படிப் பார்ப்பவர்கள் பாவம் செய்தவர்கள். அவள் சிரிப்பு ஒரு ஆசீர்வாதம். என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவள் சிரித்தாள். பெருமாள் மீண்டும் வந்ததும் அவனே தொடர்ந்து அவர்களுக்காக வண்டி ஓட்டினான். ஆனால் அதன் பிறகு அமிலி மட்டும் என் ஆட்டோவில் பலமுறை தனியாக பயணம் செய்தாள். பயணம் செய்யும்போதெல்லாம் என்னுடன் பேச ஆரம்பித்தாள். என்னிடமிருந்து தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டாள். மணக்குள விநாயகர் கோயிலில் யானையைப் பார்ப்பது அவளுக்குப் பிடித்தமான ஒன்று. வழக்கமான கருங்கல் கடற்கரையை அவள் விரும்பவில்லை. அவளுக்கு அலைகளில் கால் நனைக்க வேண்டும். அவள் தங்கியிருந்த ஆரோவில் கடற்கரையிலேயே அவளுக்கு அதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அவள் வேறு எங்காவது தான் போக விரும்புவாள். அவளுக்கு ரொட்டிகள் போரடிக்க ஆரம்பித்தன. சாம்பாருக்கு அடிமையானாள். வாரத்திற்கு மூன்று நாட்கள் நான் முழுமையாக அவளுடன் சுற்ற வேண்டியதாக இருந்தது. ஆவணப்பட வேலைகளின் போது மட்டும் மற்றவர்களுடன் பயணிப்பாள்.

எப்படியோ அமிலியைப் பற்றி ராஜிக்கு தெரிந்துவிட்டது. ராஜி என்னுடைய அத்தை மகள். எனக்கும் அவளுக்கும் திருமணம் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே பேசி முடிவாகியிருந்தது. எனக்கும் அதில் விருப்பம் தான். ராஜி சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டவள். அத்தை அவளுக்கு திருமணம் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்த போது அப்பா கொடுத்த வாக்கு அது. ஆனால், எப்போது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ராஜியிடம் பெருமாள் சொல்லியிருக்க வாய்ப்பு உண்டு. யாரும் இதுவரை என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எதுவும் இல்லாததால் நானும் யாருக்கும் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. ராஜியின் முகத்தில் ஒரு கவலை ரேகை புதிதாக தோன்றியிருந்ததை அனைவருமே கவனித்திருந்தனர். இப்படியே விடக்கூடாது என்று அவர்கள் அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினர். நான் மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.

2

யாரையோ பார்க்க வேண்டுமென்று அமிலி காலையிலேயே அழைத்திருந்தாள். காலை வெய்யில் எப்போதும் சலிப்பேற்படுத்தக்கூடியது. ஆனால், அன்று வித்தியாசமாக உற்சாகமாக உணர்ந்தேன். காரணம் அமிலியாக இருக்கலாம் என்று நினைத்தபோதே ஏனோ ராஜியின் முகம் நினைவில் தோன்றியது. அந்த அர்ப்பத்தனமான கற்பனையை நினைத்து லேசாக சிரித்துக்கொண்டேன்.

அமிலி எனக்காக வாசலிலேயே காத்திருந்தாள். வெள்ளை நிற பருத்தி மேலாடையும் கீழே கருப்பு நிற பாவாடையும் அணிந்திருந்தாள். அவளுடைய சுருள் முடி அந்த ஆடைக்கு எடுப்பாக இருந்தது. நான் ஆட்டோவை அவள் அருகில் நிறுத்தியதும், என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே அழுத்தமாக, “வணக்கம்” என்று பிரெஞ்ச் உச்சரிப்பில் சொன்னாள். நான் சிரித்தேன். அதைப் பார்த்து அவள் சிரிப்பு மேலும் அதிகரித்தது.  ஆட்டோவில் ஏறியதும் ஒரு துண்டு சீட்டை என்னிடம் நீட்டினாள். நான் வாங்கி அந்த விலாசத்தைப் பார்த்தேன். மிகவும் நெருக்கடியான ஒரு பகுதியின் விலாசம் அதில் குறிப்பிட்டிருந்தது.  நான் சீட்டை அவளிடம் கொடுத்துவிட்டு ஆட்டோவை இயக்கினேன். ஆட்டோ போக ஆரம்பித்ததும் வழக்கம் போல் அவள் கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.  சாப்பிட்டியா, என்ன சாப்பிட்ட என ஒரே மாதிரியாக கேள்விகள். நான் பதில் சொல்லிக்கொண்டே வந்தேன். சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். சட்டென, “நீ யாரையாவது காதலிக்கிறாயா?” என்றாள்.

நான் சிரித்தேன். எந்த பதிலும் சொல்லவில்லை. “ஏன் சிரிக்கிற?” என்றாள். “பெருமாள் என்ன சொன்னான்?” என்றேன். அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்ணாடியில் கவனித்தேன்.

“உனக்கு எப்படி தெரியும்?” என்றாள். நான் எதுவும் சொல்லவில்லை.

ஆட்டோ அவள் கொடுத்த விலாசம் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தது. தெருக்கள் மிக மிக குறுகலானவை. நான் ஜாக்கிரதையாகவே வண்டியை ஓட்டினேன். அப்படியிருந்தும் ஒரு சிறுமி வண்டிக்கு எதிரே ஓடி வந்துவிட்டாள். நான் முடிந்த அளவிற்கு வண்டியை நிறுத்தவும், அதே சமயம் வேறு பக்கம் திருப்பவும் முயற்சி செய்தேன். ஆனால், எப்படியோ வண்டி சிறுமியின் மீது லேசாக இடித்துவிட்டது. சிறுமி கீழே விழுந்து அழ ஆரம்பித்தாள். அடியைவிட அதிர்ச்சி அவளை அதிகமாக அழவைத்தது. அந்த நேரத்தில் தெருவில் யாருமே இல்லை. அமிலி, “வண்டியை எடு… வண்டியை எடு” என்று கத்தினாள்.  நான் வண்டியின் இயக்கத்தை நிறுத்திவிட்டு சிறுமியை நோக்கி வேகமாகச் சென்றேன். என் பின்னால் அமிலியும் வண்டியிலிருந்து இறங்கினாள். ஆனால், பயத்தில் ஆட்டோவின் அருளேயே நின்றுகொண்டாள்.

நான் சிறுமியை தூக்கிய நொடி சடசடவென பலர் ஓடிவந்தனர். சிறுமியின் கையில் ரத்தம் வந்துகொண்டிருந்ததைப் பார்த்து ஒரு பெண் “ஐயோ…” என்று கத்தினாள். நான் அவளை நிமிர்ந்துப் பார்த்தபோது என் பின்னங்கழுத்தில் சுளீர் என்று ஒரு அடி விழுந்தது. அடிவாங்க ஒருவன் கிடைத்துவிட்டதும், பலாப்பழத்தைக் கண்ட ஈக்கள் போல மக்கள் கூடி அடிக்கத் தொடங்கினர். அமிலி ‘வேண்டாம்’ என்று கதறுவது என் காதில் கேட்டது. யாரோ ஆட்டோவை கிழித்தனர். சிலர் அடிப்பவர்களைத் தடுத்தனர். அந்த வழியாக வேகமாக வர முடியாது என்று அங்கிருந்த அனைவருக்குமே தெரிந்தாலும், சிக்கிவிட்டவனை விட்டுவிட மனமில்லாமல் துடித்துக்கொண்டிருந்தனர்.

என் சட்டை கிழிந்திருந்தது. வழக்கமாக ஒரு ஆட்டோகாரனுக்கு பிரச்சனையென்றால் மற்றவர்கள் கூடிவிடுவார்கள் என்பது உண்மைதான். ஆனால், அது எல்லா இடத்திற்கும் பொருந்தாது. பெருத்த உடல் கொண்ட ஒருவர் வந்து அனைவரையும் சமாதானம் செய்து என்னைக் காப்பாற்றினார். 

“போலீஸைக் கூப்பிடு…” என்று சொன்னவனை பார்வையாலேயே மிரட்டினார். குழந்தையைப் பார்த்தார். பிறகு என்னைப் பார்த்தார்.

என்னிடமிருந்து குழந்தையின் மருத்துவ செலவிற்கு கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு போகும்படி சொன்னார். அவர் சொன்னாரா, மிரட்டினாரா, கட்டளையிட்டாரா எதுவும் புரியவில்லை. இருந்ததை எடுத்துக் கொடுத்துவிட்டு வண்டியை நோக்கி நடந்தேன்.

அமிலி அழுதுகொண்டிருந்தாள். என்னைத் தாங்கிப் பிடிக்க முயற்சித்தாள். நான் அவளைத் தடுத்து, வண்டியில் ஏறச் சொன்னேன்.

அந்த முகவரி மறந்துவிட்டதாகச் சொல்லி அவளிடம் துண்டுச் சீட்டைக் கேட்டேன். “வேண்டாம், திரும்பிப் போய்விடலாம்,” என்றாள். போகும் வழி முழுக்க மன்னிப்புக் கேட்டுக்கொண்டே வந்தாள். “அது என் தவறு தான்” என்று எவ்வளவு எடுத்துச் சொல்லினாலும், அவள் கேட்கவேயில்லை. அவளது கைகள் நடுங்கிக்கொண்டேயிருந்தன. முகம் சிவந்துவிட்டது. “ப்ளீஸ்… என்ன கண்ணாடி வழியா அப்படிப் பாக்காத,” என்று அழுதாள். எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால் முடியவில்லை. வாயில் அடித்துவிட்டார்கள்.

கடைசியாக எப்போது சண்டையிட்டேன், அடிவாங்கினேன், அடித்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். நீண்ட நாட்கள் ஆகியிருந்தது. கடைசியாக வாங்கிய அடிக்கும் ஏதோ ஒரு வகையில் பெருமாள் தான் காரணமாக இருந்தான்.

அவள் என்னை நேராக மருத்துவமனைக்குப் போகச் சொன்னாள். ஆனால், நான் அவள் இருப்பிடத்திற்குச் சென்றேன். அவளை இறக்கிவிட்டபோது மீண்டும் மன்னிப்புக் கேட்டாள். நான் தலையாட்டிவிட்டு நேராக வீட்டிற்குச் சென்றேன்.

3

மறுநாள் அமிலி பெருமாளோடு வீட்டிற்கு வந்தாள். அவள் வந்த சமயம் ராஜி என் அருகில் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தாள். பெருமாளையும் உடன் வந்திருந்த அமிலியை அவள் பேந்து பேந்து விழித்தவாறே பார்த்துக்கொண்டிருந்தாள். வந்திருப்பவள் யாரென்று அவள் மனதிற்கு உரைக்க சில நொடிகள் தேவைப்பட்டன. பிறகு பெருமாளை முறைத்தாள். அவன் ராஜியைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

என்னால் சட்டென எழுந்திருக்க முடியவில்லை. உடல் அப்படி வலித்தது. வலியைப் பொருத்துக்கொள்ளலாம். ஆனால், எதிர்த்து செயல்பட முடியாது. நான் எழ முயல்வதைப் பார்த்து அமிலி பதறினாள். சட்டென அருகில் வந்து என்னைப் பிடித்து படுக்கையில் உட்கார வைத்துவிட்டு அப்படியே அவளும் உட்கார்ந்துகொண்டாள். இப்போது ராஜியைப் பார்ப்பதை நான் தவிர்த்தேன். அருகிலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு பெருமாள் உட்கார்ந்துகொண்டான். அதற்குள் சேதி பரவி கூட்டம் கூடியது. எங்கிருந்தோ அம்மாவும் அப்பாவும் கூட வந்துவிட்டார்கள். வந்தவர்கள் முதலில் அமிலியையும் பிறகு ராஜியையும் பார்த்தார்கள். அவர்களின் பார்வையையும் நடத்தையையும் அமிலி புரிந்துகொண்டாள்.

சட்டென அவள் கையிலிருந்த பழங்களை ராஜியிடம் கொடுத்தாள். கொடுக்கும் போதே, “நீ ரொம்ப அழகா இருக்க, நீங்க ரொம்ப பொருத்தமா இருக்கீங்க,” என்று ப்ரெஞ்சில் சொன்னாள். ராஜியும் மற்றவர்களும் புரியாமல் என்னைப் பார்த்தனர். அதை எப்படி அவர்களிடம் சொல்வது என்று விழிக்க, அவர்கள் வேறு அர்த்தம் கற்பித்துக்கொள்ள வாய்ப்புள்ளதால், விட்டத்தைப் பார்த்தபடி அவர்களுக்கு மொழிபெயர்த்தேன். வந்தவர்கள் சிரித்துக்கொண்டே கலைந்தார்கள்.

அம்மா ஒரு பெருமூச்சு விட்டாள். ராஜியிடம் டீ போடச் சொன்னாள். அம்மாவும் பெருமாளும் கண்ணாலேயே ஏதோ பேசிக்கொண்டார்கள். பெருமாள் கெஞ்சினான். அம்மா முறைத்தாள். அநேகமாக சீட்டுக்காசுக்காக இருக்கலாம். அம்மா முறைத்துவிட்டு போக, அவன் சமாதானப்படுத்த பின்னாலேயே ஓடினான்.

நானும் அமிலியும் மட்டும் தனியாக இருந்தோம். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராஜி டீயோடு வந்தாள். அவளிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. அவளை மதிய சாப்பாடு தயார் செய்யச் சொன்னேன். அமிலியும் சாப்பிட்டுவிட்டு போகும்படி சொன்னேன். அவள் மறுக்கவில்லை. ராஜி உள்ளே சென்றதும், “நீ பள்ளியில் ஆசிரியராக இருந்தாயாமே,” என்றாள்.

இன்னும் பெருமாள் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறான் என்று நினைத்தபோது கோபம் வந்தது. நான் அமைதியாக இருந்தேன்.

“என்ன பதிலே காணோம்?”

“அதைச் சொன்னப் பெருமாள் நிச்சயம் மற்றதையும் சொல்லியிருப்பான். நான் அதைப் பற்றி பேச விரும்பல.”

“சொன்னார். உன் சக ஆசிரியர் ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும், நீ அவரை அடிச்சு உன் மேல வழக்கு வந்துட்டதாகவும் சொன்னார்.”

“அவ்வளவுதான். அதுல வேறு சொல்ல ஒன்னுமில்லை,” என்று நான் சொல்வதற்குள், என் குரலில் என்னையும் மீறி ஒரு எரிச்சல் வந்திருந்ததை உணர்ந்தேன்.

அமிலியும் அதை உணர்ந்திருக்கலாம். அவள் வாடிப்போய் உட்கார்ந்திருந்தாள். நான் அவளை சமாதானப்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். “அமிலி, அதுவொரு சாதாரண விஷயம். அதுல பெருசா பேச எதுவும் இல்ல,” என்றேன். அவள் விரக்தியாக சிரித்தாள். “என்ன?” என்றேன்.

ஒன்னுமில்லையெனத் தலையாட்டினாள். சிறிது நேரம் கழித்து, “உன் கிட்ட ஒன்னுக் கேக்கலாமா?” என்றாள்.

“கேளு.”

“நேத்து நீ நினைச்சிருந்தா சுலபமா தப்பிச்சு போயிருக்கலாம். அந்தப் பொண்ணுக்கு பெருசா எந்த அடியும் இல்ல. ஆனா, நீயா போயி எல்லாத்தையும் ஏத்துகிட்டு அவ்வளவு அடி வாங்கின. திருப்பி ஒரு வார்த்தை பேசவோ, எதிர்க்கவோ இல்ல. அப்போ உன்னால் அது முடியாது, நீ ஒரு பயந்த சுபாவம் உடையவன்னு நினைச்சேன். ஆனா, பெருமாள் உன்னப்பத்தி, ஸ்கூல்ல நடந்த விஷயத்தப்பத்தி சொன்னப்ப என்னால் நம்பவே முடியல. இதுல எது நிஜம்? எது உண்மையான நீ? இல்ல அந்த பிரச்சனைக்கு அப்பறம் பயந்துட்டியா? இனி எதுவும் வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா வாழலாம்னு. அப்ப கூட, எதுக்கு நேத்து நான் கூப்பிட்டப்ப நீ வரல? ஒருவேளை அவங்க என்ன எதனா செஞ்சிருந்தா?” என்று படபடவென்று கேட்டாள்.

நான் அனைத்தையும் கேட்டுவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தேன். நான் எதைப் பற்றியோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த பெருமாள் என் அருகிலேயே வராமல் அப்படியே வெளியேறிவிட்டான். ராஜியும் கூட இரண்டு முறை எட்டிப் பார்த்தாள். ஆனால் அருகில் வரவில்லை.

நான் ஏதோ நீண்ட யோசனையில் இருப்பதாக நினைத்து அமிலி என்னை உலுக்கினாள். நான் அவள் கண்களைப் பார்த்தேன். அதில் ஆயிரம் கேள்விகள் வண்டுகளாக என்னைக் கொத்தக் காத்திருந்தன. ஆனால், அவள் கேள்விக்கு என்னிடம் அவளைத் திருப்திப்படுத்தும் தத்துவார்த்தமான பதில் எதுவும் இல்லை. இருந்தாலும் சொன்னேன்:

“ஒருவேளை நீ சொல்றபடி நான் நடந்திருந்தா, நேத்து மட்டுமில்ல, என்னால எப்பவுமே நிம்மதியா தூங்க முடியாது. அந்தக் குற்றவுணர்வு என்ன சிறுக சிறுக கொன்னுடும். என் இயல்பை மாற்றி, என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்லும். தப்ப ஏத்துக்கிட்டு தண்டனை அனுபவிச்சதுக்குப்பிறகு கிடைக்கற விடுதலையுணர்வு கொடுத்த தூக்கத்த தூக்கிப் பார்த்தாதான் தெரியும். அது நிம்மதியான தூக்கம். அத அனுபவிக்க முதல்ல நமக்கு தப்ப ஒத்துக்கற தைரியம் இருக்கணும். தண்டனையைத் தாங்கிக்கற வலிமை இருக்கணும்,” என்றேன்.

சொல்லி முடித்த பிறகுதான் எனக்கே தோன்றியது — ஏதோ சினிமா வசனம் போலப் பேசியிருக்கிறேன் என்று. அமிலி அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தாள். நான் அவள் யோசனையை கலைக்கவில்லை. சாப்பாடு தயாராகிவிட்டதாக ராஜி வந்து தெரிவித்தாள். என்னால் எழுந்திருக்க முடியாததால், அங்கேயே கொண்டுவரச் சொன்னேன்.

ராஜி சாப்பாடு பரிமாறிக்கொண்டே அமிலியிடம், “உங்களுக்கு என் மாமா ரொம்ப பிடிக்குமோ?” என்றாள். அவள் கேட்டது அமிலிக்கு புரியவில்லை. அவள் என்னைப் பார்த்தாள். எனக்கு சங்கடமாக இருந்தது. நான் ராஜியை முறைத்தேன். அவள் என்னை முறைத்தாள்.

அமிலி என்னவென்று சொல்லச் சொல்லி வாற்புறுத்தினாள். நான் ராஜி சொன்னதை மொழிபெயர்த்தேன். அவள் சிரித்துவிட்டு, ராஜியின் தோளில் கைவைத்தபடி, “உன் அளவுக்கு இல்ல,” என்றாள். இப்போது அதையும் மொழிபெயர்த்தேன்.

ராஜியின் முகம் மாறியது. அவள் சாப்பாடு பரிமாறிவிட்டு எழுந்துச் சென்றுவிட்டாள். பெருமாளும் எங்களோடு சாப்பிட்டுக்கொண்டிருந்ததை, பாதி சாப்பாட்டில்தான் கவனித்தேன். மதியத்திற்கு மேல் அமிலி அனைவரிடமும் சொல்லிக்கொண்டுப் புறப்பட்டாள்.

அவள் புறப்பட்ட சிறிது நேரத்தில், என் அப்பாவும் அம்மாவும் வந்து திருமணத்தைப் பற்றி பேசினார்கள். “இந்த வருஷம் எப்படியும் நடத்தி முடிச்சிடனும். எப்போன்னு நீயே சொல்லு,” என்றார்கள். “மலைக்கு போயிட்டு வந்துடறேன்,” என்றேன்.

4.

மூன்று நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் சவாரிக்குச் சென்றேன். அமிலியிடமிருந்து எந்தவொரு அழைப்பும் இல்லாததால் என் வழக்கமான பணிகளில் மூழ்கினேன். அவ்வப்போது பெருமாளைப் பார்த்தேன். அவனும் அமிலியைப் பற்றி எதுவும் பேசவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை. வாழ்க்கையில் அனைவருக்குமே அவ்வபோது இதுபோல் ஏதாவது நிகழும். யாராவது வருவார்கள். சில காலம் நாம்மோடு இருப்பார்கள். சட்டென காணாமல்போய்விடுவார்கள். ஆனால், வாழ்நாள் முழுக்க நம் நினைவுகளில் தாங்கிவிடுவார்கள். இதையெல்லாம் கடந்து அடுத்தடுத்து என்று போய்கொண்டிருப்பதில் தான் வாழ்வின் சூட்சமமே அடங்கியிருக்கிறது. யாருக்காகவும் எதற்காகவும் தேங்கிவிடக்கூடாது. அமிலியும் அப்படியான ஒருத்திதான். ஒருகோடை மழையைப் போல வந்தவள். கோடை மழையை யார்தான் வெறுப்பார்கள்? ஆனால், அது நிரந்தரமில்லை என்று சுயவுணர்வு எனக்கு இருக்கிறது. சட்டென மூளைக்குள் ராஜி நுழைந்தாள். ராஜியைப் பற்றி நினைத்துமே என்னையும் அறியாமல் என் உதடுகளில் லேசான சிரிப்பு உதிர்ந்தது. நான் ராஜியின் நினைவுகளில் மூழ்கியிருந்தபோது பெருமாளின் ஆட்டோ என் அருகில் வந்து நின்றது. “மச்சான், அந்தப் பொண்ணு உன்னப் பாக்கனும்னு வரச் சொல்லிச்சுடா” என்றான். நான் உடனேப் புறப்பட்டேன். ஏனென்றால் ராஜியின் சோகமான முகம் அப்போது நினைவுக்கு வந்தது.

அமிலி என்னை அறைக்குள் அழைத்தாள். நான் “புறப்பட்டு வாருங்கள், காத்திருக்கிறேன்” என்றேன். “எங்கேயும் போகப் போவதில்லை, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்றாள். அவள் முகம் ஒரு மாதிரியாக இருந்தது. அழுதிருக்கிறாள். வழக்கமாக தெரியும் கலை அன்று அவள் முகத்தில் இல்லை. அவள் சிரிப்பின் மூலம் என்னை ஆசிர்வதிக்கவில்லை. நான் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தேன். அங்கிருந்த ஒரு இருக்கையைக் காட்டினாள். உட்கார்ந்தேன். அறை சுத்தமாக இல்லை. கலைந்து அலங்கோலமாக இருந்தது. அறையில் வேறு யாராவது இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. ஆனால், அப்போது எங்களிருவரைத் தவிர யாருமில்லை. ஏனோ மீண்டும் ராஜியின் முகம் என்முன் வந்துபோனது. சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். நான் அறையை அலசி ஆராய்வதை முடிந்த அளவிற்கு கட்டுப்படுத்திக்கொண்டேன். ஒரு பெண்ணின் அறைக்குள் நுழைந்திருப்பது என்பது அவள் அந்தரங்கத்திற்குள் நுழைத்துவிட்டதுபோல் எனக்குப்பட்டது. அது அவள் அனுமதியோடு நிகழ்ந்திருந்தாலும் என்னால் எனது தயக்கத்தையும் அச்சத்தையும் விளக்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென எழுந்த அமிலியின் குரல் கேட்டு அவளைப் பார்த்தேன். அவள் வேறு எங்கோ பார்த்தபடி பேசினாள்.

“நீங்க சொன்ன விஷயத்தப் பற்றியுதான் மூனு நாளா யோசிச்சிகிட்டு இருக்கேன்” என்றாள்.

நான் குழப்பத்துடன் அவளைப் பார்த்தேன். நான் பார்ப்பதை கவனித்தவள், “அதான், நீங்க ஏன் அந்த விபத்துக்குப் பிறகு தப்பித்துப் போகாம தண்டனைய ஏத்துகிட்டேன்னு சொன்னீங்களே, அதப்பத்திதான் சொல்றேன்” என்றாள்.

நான் அமைதியாக இருந்தேன்.

“நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். சொல்லலாமா?”

நான் சரியென்று தயக்கத்துடன் தலையாட்டினேன். மீண்டும் அவள் பார்வை வேறு எங்கோ சென்றது.

“நான் ஒரு குற்றம் செஞ்சிட்டு அதிலிருந்து தப்பித்து ஒளிந்துகொள்வதாகத்தான் இங்க வந்திருக்கேன்.” என்று சொல்லிவிட்டு என் கண்களைப் பார்த்தாள்.

நான் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஆரோ, சுறுக்கிக் கொண்டிருக்கும் பல வெள்ளைக்காரர்களைப் பற்றி இப்படியொரு கதையை ஊருக்குள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஊரில் குற்றம் செய்துவிட்டு இங்கு வந்து தலைமறைவாக இருக்கிறார்கள் அல்லது வேலைக்கு போகப் பிடிக்காத சோம்பேறிகள் அவர்கள் நாட்டில் அரசு கொடுக்கும் பணத்தைக் கொண்டு இங்கு வந்து செலவழித்துச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என பலவிதமான கதைகளை யாராவது சொல்லிக்கொண்டிருப்பார்கள். அமிலி அதில் ஏதோ ஒரு உண்மைக்கதையைச் சொல்லப் போகிறாள் என்று நினைத்துக்கொண்டு அமைதியாக இருந்தேன். அவள் தொடர்ந்து பேசினாள்.

“நான் நிம்மதியா தூங்கி பல மாதங்கள் ஆகிறது. கண்ணை மூடினால் வெறும் கெட்டக் கனவுகள். பல இரவுகளில் அலறியடித்துக்கொண்டு எழுந்து மற்றவர்களையும் எழுப்பியிருக்கிறேன். நான் செய்த ஒரு தவறு என்னை நீண்ட நாட்களாக தூங்கவிடமாட்டேங்கிறது. நான் நன்றாக தூங்க விரும்புகிறேன். அதற்கு ஒரே வழி நீங்கள் சொன்னதுபோல் எனது குற்றத்தை ஏற்றுக்கொண்டு தண்டனையை அனுப்பவிப்பது மட்டும் தான் என்று தோன்றுகிறது.”

“நீங்க எதப்பத்தி பேசறீங்கன்னு தெரியல. என்னால இந்த நிலையில என்னா சொல்றதுன்னும் தெரியல” என்றேன்.

அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் நீர் வழிந்தது. அழுது அழுது அவள் முகம் சிவந்திருந்தது. தன் முகத்தை மறைத்த முடியை விளக்கிவிட்டாள். ஏதோவொரு உலகத் திரைப்படத்தின் துயரக் காட்சியை திரையில் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இவள் என்ன குற்றம் செய்திருப்பாள் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவள், “நான் ஒருவனைக் கொன்றுவிட்டேன்” என்றாள்.

உண்மையில் நான் அதிர்ச்சியில் தான் இருந்தேன். ஆனால், சட்டென என்னால் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை. நான் அப்படியே அமைதியாக இருந்ததை அமிலி விநோதமாகப் பார்த்தாள். நான் அவளை சந்தேககிப்பதாக நினைத்திருக்கலாம். நான் எதாவது கேட்க வேண்டுமென்று அவள் நினைக்கிறாள் என்று தோன்றியது. அவள் அதைச் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாள். தலையைத் திருப்பிக்கொண்டு ஏதோ நினைவுகளில் மூழ்கினாள். எனக்கு என்ன செய்வது, என்ன பேசுவதென்று தெரியவில்லை. இவள் ஏன் இதை என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்? இவள் என்னை நம்பும் அளவிற்கு நான் என்ன செய்துவிட்டேன். இப்போது என்ன செய்வது? இங்கிருப்பதா, இல்லையா? குழப்பமாக இருந்தது. அவள் என்னிடம் இப்போது என்ன எதிர்ப்பார்க்கிறாள்? ஆறுதலா அல்லது பாவமன்னிப்பா? நான் யார் அந்த இரண்டையும் கொடுக்க? நினைக்க நினைக்க தலைக்குள் ஏதோ வெடித்துச் சிதறுவது போல் இருந்தது. நான் என்னையும் மீறி அவளிடம், “யாரைக் கொன்றாய்?” என்றேன். சிறிது மெளனாத்திற்குப் பிறகு அமிலி தன் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தாள். பிறகு பேச ஆரம்பித்தாள்.

“நான் எனது பதினாறாவது வயதில் மாடலிங் உலகத்தில் நுழைந்தேன். அதுவொரு மாயவுலகம். எத்தனையோ பெண்களின் கனவு. என்னால் எனது நண்பனின் மூலம் சுலபமாக அதற்குள் நுழைய முடிந்தது. அவன் பெயர் கேப்ரியல். என்னை விட மூன்று வயது பெரியவன். சிறு வயதிலிருந்தே கேப்ரியலை எனக்கு தெரியும். எனக்காக கேப்ரியால் எதையும் செய்வான், அவன் நண்பர்களின் மூலமாக எனக்காக வாய்ப்புகளைத் தேடிக் கொடுத்தான். நான் எப்போது கேப்ரியலை விரும்பத் தொடங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை. என்னுடைய விருப்பத்தை அவனிடம் தெரிவித்தேன். அவன் என்னை ஏற்றுக்கொள்வான் என்று நம்பினேன். ஆனால், அவ்வாறு அது நிகழவில்லை. அவனுக்கு என்னைப் பிடிக்கும். ஆனால் அது காதல் இல்லை என்று புரியவைத்தான். அவன் சரியென்று சொல்லியிருந்தால், அவன் என்ன சொன்னாலும் நான் செய்திருப்பேன். அந்த அளவுக்கு அவன் மீது காதல் வையப்பட்டிருந்தேன். அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அதன்பிறகு எனக்கும் கேப்ரியலுக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி எழுந்தது. அது என் வாழ்க்கையைப் இரண்டாக பிளக்கப் போகும் விரிசல் என்று எனக்கு அப்போது தெரியாது. கேப்ரியல் மூலமாக வாய்ப்புகள் வருவது குறைந்தபோது, நானே வாய்ப்புத் தேட ஆரம்பித்தேன். அப்படி தேடிக்கொண்டிருக்கும்போது தான் மிஷேலும் ஜுவானாவும் எனக்கு அறிமுகமானார்கள். இருவரும் எனக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். அவ்வபோது சிறு சிறு வாய்ப்புகள் பெற்றுத் தந்தார்கள். அவர்கள் மூலமாக மெல்ல மெல்ல போதை பழக்கம் ஒரு சாத்தானைப் போல எனக்குள் புகுந்தது. மிஷேல் என்னை அவ்வபோது சீண்டத் தொடங்கினான். ஜுவானா அதைக் கண்டும் காணாமல் இருந்தாள். இந்தத் துறையில் இதெல்லாம் என்று ஆரம்பித்தாள். நான் போதையில் சில முறை அவனுடன் உடலுறவில் ஈடுபட்டேன். நான் எனது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. அதனால், அவர்களிடமிருந்து விலக முடிவெடித்தேன். அப்போது தான் மிஷேல் எனக்கு அதை காண்பித்தான். நான் முழுபோதையில் இருந்த போது என்னுடன் உடலுறவு கொண்டு அதை படம் பிடித்து வைத்திருந்தான். மேலும் அதை இணையத்தில் பதிவேற்றியிருந்தான். அதைப் பார்த்ததும் நான் நரம்புகள் வெடிப்பது போல் இருந்தது. கோபத்தில் கத்தினேன். கையில் கிடைத்ததையெல்லாம் கொண்டு அவனைத் தாக்கினேன். அவன் தடுத்தான். கீழே விழுந்தான். நான் நீண்ட நேரம் அழுதேன். அதுவரை அவன் எழவேயில்லை. நான் மெல்ல எழுந்துச் சென்று அவனைப் பார்த்தேன். அவன் அருகில் ரத்தம் கொட்டிக்கிடந்தது. நான் வீசிய ஏதோ ஒன்று அவன் தலையில் பட்டு அவன் இறந்திருந்தான். ஜூவானா எங்கே சென்றாள் என்றே தெரியவில்லை. நான் எழுந்தேன். நேராக கேப்ரியலிடம் ஓடினேன். அவனிடம் அனைத்தையும் சொன்னேன். அவன் என்னைக் காப்பாற்ற முன்வந்தான். மிஷேலின் மரணம் வெளி வருவதற்குள் என்னை தப்பிக்க வைக்கத் திட்டம் போட்டான். ஜுவானாவும் தலைமறைவாகிவிட்டாள் என்று தெரிந்தது. அப்போது இந்தியா புறப்படவிருந்த தன் நண்பர்கள் குழுவுடன் என்னை அனுப்பி வைத்தான். அவனாக கூப்பிடும் வரை அவனை அழைக்கக் கூடாது என்று சொன்னான். இதுவரை நான் கேப்ரியலை அழைத்துப் பேசவில்லை. கடிதம் எழுதவில்லை. அங்கே அதன்பிறகு என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியாது. அப்போது முதல் இதுநாள் வரை நான் மனதளவில் நரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.” என்று சொல்லி முடித்தாள்.

நான் அசைவற்று அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் கண்கள் வற்றிப் போய்விட்டிருந்தது. என்னிடம் சொல்ல எந்த வார்த்தைகளும் இல்லை. ஏதோவொரு கனவு கண்டு விழித்ததுபோல உணர்ந்தேன். இப்போது என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியவில்லை. “அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்” என்றேன். அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். பிறகு மெல்ல எழுந்து அங்கிருந்து வெளியேறினேன்.

நான் சபரிமலைக்கு மாலைப் போட்டு நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. இன்னும் சில நாட்களில் இருமுடிக் கட்டி மலைக்குப் போய்விட்டு வந்தால் திருமண வேலைகளை ஆரம்பித்துவிடலாமென்று வீட்டில் காத்திருந்தார்கள். அமிலியை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிறது. அமிலி என்ன முடிவெடுக்கப் போகிறாள் என்ற குழப்பம் எனக்குள் இருந்துகொண்டேயிருந்தன. அவளுடைய நிலைமையும் இன்று நான் இருந்த நிலைமையும் வேறு. அப்போது நான் எடுத்த முடிவை அவள் தன்னுடைய விஷயத்துடன் பொருத்திப் பார்ப்பது நிச்சயம் சரியில்லை என்றே தோன்றியது. அன்று அவளுக்கு நடந்ததை ஒரு விபத்தாகவோ அல்லது அதுவொரு தற்காப்பிற்காக செய்ததாகவோ கருதலாம். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் இதில் இவ்வளவு தூரம் போகிறேன். எனக்கு இது தேவையில்லாத வேலை என்று மனம் என்னை வேறு வழியில் திசைத்திருப்ப முயன்றாலும் அதில் தொங்கிக்கொண்டிருக்கும் குரங்கு என்னை மீண்டும் மீண்டும் அதற்குள்ளேயே இழுத்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அதைப் பற்றியே எதையாவது யோசித்துவிட்டு ‘சாமி சரணம்’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

அன்று மாலை கோவிலில் இருமுடிக் கட்டுப்பவர்களின் சொந்தங்கள் பலர் வந்திருந்தனர். என் வீட்டிலிருந்து அப்பா அம்மா ராஜி மேலும் சிலர் வந்திருந்தார்கள். பெருமாளை மட்டும் காணவில்லை. நான் சென்று பூஜையில் உட்கார்ந்துகொண்டேன். ஐயப்பன் பாடல்கள் பாடிக்கொண்டே வேலைகள் நடந்தன. அப்போது பெருமாள் தயங்கி தயங்கி வருவதை கவனித்தேன். அவன் பின்னால் அமிலியும் வந்துகொண்டிருந்தாள். அமிலி நேராக ராஜியின் அருகில் சென்று ஏதோ சொன்னாள். அமிலி தட்டுத்தடுமாறி தமிழில்தான் சொல்லியிருக்க வேண்டும். ராஜியால் பிரெஞ்சைப் புரிந்துகொள்ள முடியாது. அமிலி சொன்னதும், ராஜி அவள் கையைப் பிடித்துக்கொண்டாள். அருகிலிருந்த என் அப்பாவையும் அம்மாவையும் அழைத்து ராஜி எதையோ தெரிவித்தாள். அவர்கள் பதற்றமாக அமிலியின் கைகளைப் பிடித்துக்கொண்டனர். என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அங்கிருந்து எழுந்து அவர்களிடம் வந்தேன். என் முகத்தில் தெரிந்த கேள்வியை அனைவரும் புரிந்துகொண்டனர். ராஜிதான் என்னிடம், “மாமா… அவங்க இன்னிக்கு நைட் ஊருக்கு போறங்கலாம்.” என்றாள்.

எனக்கு திக்கென்றது. மற்றவர்களுக்கு அமிலி வெறும் ஊருக்கு போகிறாள் அவ்வளவுதான். ஆனால், அவள் தன் வாழ்க்கையையே பணயம் வைக்கப் போகிறாள் என்று எனக்குத்தான் தெரியும். இனி அமிலி என்கின்ற பறவை வானத்தில் எங்கோ பறந்து மறையப்போகிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நான் திரும்பி வரும் வரை காத்திருக்கச் சொன்னேன். அவள் தன் முடிவில் பிடிவாதமாக இருந்தாள். அவளையும் மீறி அவள் கண்ணிலிருந்து நீர் வழிந்தது. அங்கிருந்த அனைவரின் கண்களும் எங்கள் மீதே இருந்தன. அவள் சட்டென எக்கி என்னை அனைத்துக்கொண்டாள். ஒரு சில நொடிகள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் அவளை நான் விலக்கினேன். அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியில் இருந்தனர். அவள் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டாள். அங்கே இருமுடிக் கட்டவுருந்த ஒரு சாமி பயங்கியரமாக கத்தினார். அருகிலிருந்த ஒரு பெண், “ஏன் சாமி கத்துற, அந்த புள்ளக்கு இன்னா தெரியும், ஏதோ அன்புல கட்டிபுடிச்சிகிச்சி” என்று சொன்னாள். அமிலி அவரிடம் மன்னிப்புக் கேட்டாள். மற்ற அனைவருமே அவளைப் பாவமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். நான் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தேன். ஒருசிலர், தீட்டாகிவிட்டது என்றும் நான் வரக்கூடாது என்றும் வாதிட்டனர். நான் குருசாமியைப் பார்த்தேன். அவர் பொதுவாக எல்லோரையும் பார்த்து, “அந்த பொண்ணுக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. அதான் மன்னிப்பு கேக்குது, அழுவுது. அது அழுததுலயே எல்லா தீட்டும் போயிடுச்சி. அதத் தாண்டி எந்த தீட்டும் இல்ல. தெரியாம செஞ்சத விட்டு ஆக வேண்டியதப் பாருங்க” என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “சாமி வரதும் வராததும் உங்க விருப்பம்.” என்று சொல்லிவிட்டு அவர் பூஜைக்கு செண்றுவிட்டார். ஏதோ ஒருவகையில் அமிலி எடுத்த இந்த முடிவுக்கு நான் காரணமாகிவிட்டேன். அவளுடன் சென்று அவளை வழியனுப்ப வேண்டுமென்று தோன்றியது. மற்றைவர்களிடம் சொல்லிவிட்டு மாலையைக் கழட்டினேன். அவளுக்கு நான் இதைச் செய்தது அவளுக்கு மிக மழிச்சியாக இருந்தது. அமிலியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றேன். அனைவருக்கும் ஏதோவொரு குழப்பம். நான் யாரிடமும் அமிலியைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று முடிவெடுத்தேன். ஆனால், ராஜியிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். அவளிடம் மட்டும் தனியாக அனைத்தையும் சொன்னேன். முதலில் அதிர்ந்தாள். பிறகு அழுதாள். நேராக அமிலியிடம் வந்து வேண்டாமென்று கெஞ்சினாள். அமிலி சிரித்துக்கொண்டே அவளை சமாதானப்படுத்தினாள்.

மறுநாள் அதிகாலை அமிலி பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றாள். நான் விமான நிலையம் வரை அவளுடன் சென்றேன். கடைசி நேரத்தில் என்னை மீண்டும் அனைத்துக்கொள்ள வந்தாள். ஆனால், சட்டென பின்வாங்கிக்கொண்டள். “நான் மீண்டும் உன்னை வந்துப் பார்ப்பேன்” என்றாள். நான் சிரித்தேன். அவளுடன் வந்திருந்த மற்றவர்கள் அவளை அனைத்துக்கொண்டார்கள். கடைசியில் ஒருமுறை தன் சிரிப்பின் மூலம் என்னை ஆசிர்வதித்தாள். அமிலி என்ற பறவை மீண்டும் தன் இடத்தை நோக்கி தனக்காகக் காத்திருக்கும் கூண்டிற்குள் அடைபடப் பறக்க ஆரம்பித்தது.

௦௦௦

அரிசங்கர்

அரிசங்கர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். பிரபஞ்சனுக்குப்பின் பாண்டிச்சேரி வாழ்க்கையை எழுதும் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக அரிசங்கர் கருதப்படுகிறார்.  பதிலடி, ஏமாளி, உடல், சப்தங்கள் ஆகிய  சிறுகதைத் தொகுப்புகளையும், மாயப்படகு, பார்க்காடி, பாரிஸ், உண்மைகள் பொய்கள் கற்பனைகள் மற்றும் மாகே கஃபே ஆகிய நாவல்களையும் வெளியுட்டுள்ளார்.

தமிழ் விக்கியில் 

2 Comments

  1. அமலி ஐரோப்பியர் மனநிலையையும் இந்தியர் மன்நிலையையும் ஒப்பிட்டு நோக்க வைக்கும் கதை என்று புரிந்துகொள்கிறேன். ஒருகால் கதைசொல்லி அந்த விபத்து காரணமாக தண்டனையைப் பெறவில்லியென்றால் அமலி தன் குற்றத்திலிருந்து முழுமையாகத் தப்பிக்க வாய்ப்பிருந்திருக்கலாம். தன் கவனமின்மையால் உண்டான அந்த விபத்துக்காக அவன் அடிவாங்குவதே பொருத்தமான தண்டனை என்று அவன் சொன்னதும் அமலி தன் குற்றத்தை உணர்கிறாள். அவள் அதுவரை உல்லாசமாகத்தான் இருந்திருக்கிறாள். அதாவது தன் குற்றத்தை மறந்து திரிந்திருக்கிறாள். பின்னாளில் முற்றாக மறந்திருக்கவும் கூடும். யானைகள்கூட கதையில் ஒரு குறியீடாகவே வைக்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். இக்கதையை ஒரு ஆட்டோ ஓட்டுனர் மூலம் சொன்னது கதை ஓட்டத்துக்குப் பொருத்தமாகவே இருக்கிறது.

  2. அமலி என்ற ஒற்றைக் கதாப்பாத்திரத்தைத் தாண்டி ராஜி மனதில் நிற்கிறாள். மொழி இனம் தாண்டி தவறுக்கு தண்டனை ஏற்பது….. நமக்கான விடுதலை. ஆட்டோ ஓட்டுநர்களிலிடம் இதுபோல் பல கதைகள் இருக்கலாம். வாழ்த்துகள்

உரையாடலுக்கு

Your email address will not be published.