கடவுளை படைத்தல்
~
இருவர் சந்திக்கிறோம்
இருவருக்கும் பெயர் தெரியாது
தான் என்ன செய்கிறோம்
என்ன ஏது என்பது
தெரியும்
தானாய் நிகழும் சந்திப்பின் தடுமாற்றத்தில் பழைய பழியை பிடிக்கிறோம்
அறியா பிள்ளை போன்ற குழந்தைத்தனத்தை கொஞ்சம் பதுக்கி வைத்திருந்து
யாரிடம் அதை எப்போது எப்படி
நீட்ட வேண்டுமோ
அந்த சந்தர்ப்பம் வரும் வரை காத்திருக்கிறோம்
சகஜமடைய காலம் எடுத்த பின்பு
ஏற்கனவே திறந்த கதவுடைய பெட்டியில் அடைந்த வன்மம் எல்லாம்
எதை விட்டு கொடுத்து எவை திறந்து எங்கே தாக்குகிறது தெரியும்
ஊர் பேர் தெரியாதவர்கள் வரும் வரை வேண்டியவர்களை பார்த்து சேர்த்துக்கொள்ளலாமென நாம் காரியத்தை தள்ளி போடுவதில்லை
அன்பின் வீடுகளை யாரும் சந்தேகிக்காத படி கைமாற்றும் பல திட்டங்களை குருவி போல சேர்த்து கொள்கிறோம்
குழந்தைகளை கண்டு வாய் வலிக்க சிரிக்கிறோம்
அது ஏன் அப்படியென்ற யோசனையே சதா படுத்தி எடுக்கிறது
கால வேகத்தை மீறி புலி பாய்ச்சலில் முத்தமிடும் காதலர்களாக ஆள் மாறியதும் காரியம் முடிந்ததும் ஆளை கைவிடுவதும்
இத்தகைய தீடீர்களில் காணாமல் போகாமல் பிச்சையும் எடுக்கிறோம்
ஒரு குற்றத்திற்கு பின்
என்னை ஏமாற்றி யார் ஓடினாலும் இன்னொரு ஆள் வருகிறார்
கூடவே இருக்கிறார்
தனிமையாயில்லை
தனியர்களாகாமல் எந்நேரமும்
வேலை செய்கிறோம்
யாருக்கும் சந்தேகம் வராத நம் விசாரணை அதிகாரிகள்
நிரந்தரமாக தங்கும்
தீர்ப்புகளின் கோட்டையை
எழுப்புவதற்கு
~
அன்பின் வடிவம்
~
குப்பைகளின் நினைவிலிருந்த மிச்சமிருக்கும் உலகத்தில்
மணலுக்குள் காணாமல் போய்விட்ட
பரிவின் மிகச்சிறிய பிரதேசத்தில் இருக்கிறேன்
அச்சத்தை இறையென விரும்பும் வீடுகளும்
மீந்து போன வீண்பண்டங்களோடு சுற்றும்
பாழ்வெளி விளையாட்டின் ஒரு பகுதி அது
என் வீட்டுக்கு வந்து சேர வேண்டிய
கடவுளின் சந்திப்பை தாமதப்படுத்துகிற பலம் அது
நான் யாருடைய ஆள் என்பது இன்னுமே முழுமை பெறவில்லை
மர்மம் விலகாத சொல்லி முடிக்காமல் விட்டுப்போன ஒவ்வொரு
துகளில் துருவலிலும் ஒன்று சேர்ந்து மெல்ல
அதிகாரமற்ற அதிகாரமானது அது
காலப்போக்கிலிருந்து தப்பித்த யார் தயவின் கண்ணிலும் விழாத துண்டு துண்டான அறிக்கையில் எழுதப்படும்
முள் காம்பில் சொற்களை சேகரித்து கொண்டேன்
அன்பு
யார் வழியாகவோ அழியக்கூடிய பருவம்
எந்த கட்டமைப்பும் கோட்பாடும்
நிற்க முடியாத அதிகாரம்
அன்பின் பெயரால் பெற்ற இரு முத்தத்தை மூட்டை கட்டுகிறேன்
நிஜங்களோடு துயில் கொள்ள விட்டால்
நான் கட்டிய கோட்டைகளை நானே அழித்து
எரித்திட சாம்பலாக்கும்
இல்லையெனில்
சாம்பலாவேன்
~
எப்போதும்
~
எவை எவை எத்திசை பறவை
தெரியாது
எது எது யாருடைய மேகம்
புரியவில்லை
எதற்கு இந்த சொற்கள்
அதற்கு அர்த்தம் தானென்ன
டோனி பிரஸ்லர்
ககனம் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். தொடர்ச்சியாக பல்வேறு இதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார்.