மீண்டும் தாயாகும் பெரியம்மா
அண்ணனுக்குக் கல்யாணம் முடிந்து
அண்ணி வந்ததால்
மாமியார் ஆகிவிட்டாள்
அதற்கு முன்பே
நான் பிறந்ததால்
பெரியம்மா ஆகிவிட்டாள்
அதற்கும் முன்னே அண்ணனுக்கு
தாய் ஆகிவிட்டாள்
நேற்று ஒரு குட்டிப் பூனை வந்ததால்
மறுபடியும் அதற்கு தாய் ஆனாள்
அதன் குறும்புகளை ரசித்து
விளையாடி
தன் வீட்டையே அதற்கும் வீடாக்கி
அதனிடம் பேசி
அரவணைத்து
ஒரு குழந்தையாகவே பாவித்து
மீண்டும் தாய் ஆகிறாள் பெரியம்மா.
000
மனதின் அகத்துள்
ஆழ்கடலை
பள்ளத்தாக்குகளை
பாதாளங்களை
மண்ணறைகளை
இடுமுடுக்குகளை
முட்டுச்சந்துகளை
சுடுகாடுகளை
பாம்பு புற்றுகளை
சிலந்தி வலைகளை
கண்ணீர் குளங்களை
வெந்நீர் ஊற்றுகளை
மகிழ்ச்சி குமிழ்களை
பரந்த வெளியினை
பால் வீதியினை
வேற்று கிரகத்தினை
அகம் கொண்ட
இப்பிரபஞ்சத்தின் சிறு மனமே.
000
இரவு
இரவின் காலடிகளுக்கு
தெளிந்த சப்தம்
மங்கிய தடம்
ஆயிரம் கண்கள்
ஒன்றையொன்று அறியாத ரகசியம்
ஆயிரம் காதுகள்
பரஸ்பரம் அறிந்த பரசியம்
நாய்களின் குரல்
பூனைக் கண்களின் ஒளி
வவ்வால்களின் திறந்தவெளி
மரங்கள் அசைத்துப் பார்க்கும் நிழல்
நிலவின் ராச்சியம்
நட்சத்திரங்கள் கடலில் முகம் பார்க்கின்றன
கடல் அலைகள் இரவு காற்றுடன் பேசுகிறது
காற்றுத் தென்றலாக உருமாறுகிறது
மேகம் ஊர் ஊராகப் பயணிக்கிறது
கண்கள் மூடுகிறது, கனவு விழிக்கிறது
தெருவின் உறக்கச் சாலையில்
லாரிகள் தடதடத்து செல்கின்றன
வயல்களை பூச்சிகள் மொய்க்கின்றன
ஆசைகள் பறக்க துவங்கும்
இருண்ட வானோடும்
இருட்டுப்பூச்சியின் சத்தத்தோடும்
இரவு நகர்கிறது
இரவில் பகல் உறங்கும்
பகலில் இரவு உறங்கும்
எல்லோர் கண்களும் மூடிய பின்னும்
இரவின் கண்கள் திறந்தே இருக்கின்றன
000
அப்பாவைக் காண்பது
அடர் வனத்தில்
அமாவாசை இரவில்
நட்சத்திரம் இல்லாத மழை நாளில்
மிதக்கும் மின்மினி பூச்சியாக அப்பாவைக் கண்டேன்
கொதிக்கும் மதியத்தில்
அனல் காற்று வீசுகையில்
சுடுமணற் கடற்கரையில்
குளிர் தென்றலாக
அப்பாவை கண்டேன்
குளிர் போர்த்திய அந்தியில்
உறைய வைக்கும் பனியில்
உடல் மரத்துப் போகையில்
கம்பளிப் போர்வையாக
அப்பாவைக் கண்டேன்
முட்கள் நிறைந்த புதரில்
கால்கள் குத்தி நிற்கையில்
உதிரம் கொட்டி தீர்க்கையில்
காலில் கவசமாக
அப்பாவைக் கண்டேன்
விளையாடி கொண்டிருக்கையில்
வெற்றி நழுவும் சூழலில்
மண்ணை கவ்வும் பொழுதினில்
வெற்றிக்கொடி என
அப்பாவைக் கண்டேன்
பரீட்சை அறையில் இருக்கையில்
ஒன்றுமே தெரியாமல் முழிக்கையில்
ஒரு வரி கூட எழுதாமல் இருக்கையில்
விடை என
அப்பாவைக் கண்டேன்
தெரியாத ஊருக்கு செல்கையில்
புரியாத நபரிடம் பேசுகையில்
வழி தவறி நிற்கையில்
கூகுள் மேப் ஆக
அப்பாவைக் கண்டேன்
அண்டத்தில் பறக்கையிலே
புரியாத கிரகங்ளை பார்க்கையிலே
புதிராக குழம்பும் மயக்கத்திலே
பசுமைப் பூமியாக
அப்பாவைக் கண்டேன்
துன்பம் வந்து தீண்டுகையிலே
கதறியழும் நேரத்திலே
செய்வதறியா தருணத்திலே
ஒரே ஆறுதலாக
அப்பாவைக் கண்டேன்
நீர் இல்லா பாலையிலே
தாகம் மேவிய கணமதிலே
விக்கி நிற்கும் சமயத்திலே
ஊற்று நீராக
அப்பாவைக் கண்டேன்
கற்கள் நிறைந்த மலையிலே
சறுக்கி விடும் வேளையிலே
கீழே விழும் தருணத்திலே
பற்றும் கிளையாக
அப்பாவைக் கண்டேன்
செடியாக மண்ணில் முளைக்கையிலே
நீரின்றி தவிக்கையிலே
பட்டுப் போகும் கணத்திலே
பெய்த மழையாக
அப்பாவைக் கண்டேன்
கடற்கரையில் நிற்கையிலே
ஆழி அடித்து செல்கையிலே
நீச்சல் தெரியாமல் தவிக்கையிலே
நீந்தி வரும் படகாக
அப்பாவைக் கண்டேன்
000
சஹானா
கவிஞர் சஹானா "கண்ணறியாக் காற்று", "அஞ்சனக்கண்ணி" ஆகிய கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர்.