பகுதி 1
கட்டிடங்களும் பேசுகின்றன
6.
தோற்றத்திற்கு பொருட்கள் எந்தவிதத்திலும் மனிதர்களைப்போல இல்லாவிட்டாலும்கூட, அவற்றுக்குள் எந்த மனித குணாதிசயம் ஒளிந்திருக்கக்கூடும் என்பதை நாம் எளிதாகவே கற்பனைசெய்துவிடமுடியும். பொருட்களைத்தாண்டி வடிவங்களிலும், மேற்பரப்பின் தன்மைகளிலும், நிறங்களிலும்கூட (forms, textures and colors) மனிதர்களுக்கிணையான தன்மையை அடையாளம் கண்டுவிடுவதில் நாம் அபார தேர்ச்சி பெற்றுள்ளோம். சொல்லப்போனால், நமக்கு முப்பரிமாண வடிவம்கூட தேவைப்படுவதில்லை; சாதாரண கோடுகளை வைத்தே நாம் அதையொத்த மனிதப்பண்பை கண்டறிந்துவிடலாம். ஒரு நேர்க்கோடு, வாழ்வில் புதிதாக ஒன்றுமற்று நிலைத்துவிட்டிருக்கிற ஒருவரையும் அவரின் மந்தமான மனநிலையையும் குறிக்கிறது. அலையலையான கோடு, அழகுணர்ச்சியை முன்னிலைப்படுத்தும் அதேநேரத்தில், அமைதியைக் கொண்டிருப்பவரை சுட்டுகிறது. ஒழுங்கற்று கரடுமுரடாக இருக்கும் ஒன்று கோபத்தையும், குழப்பத்தையும் குறிக்கிறது.
இந்நாற்காலிகளின் பின்னிருக்கும் அமைப்பை எடுத்துக்கொள்வோம். அவை அந்நாற்காலிகளுக்கு பலம்சேர்க்கின்றன என்பதைத்தாண்டி, இரண்டும் வெவ்வேறு மனநிலைகளை வெளிப்படுத்துவதாக தோன்றுகிறது.
வளைவான பின்னமைப்பு, எந்த அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ளாத விளையாட்டு மனோபாவத்தையும், நேரான ஒன்று தீவிர மனநிலையையும், தர்க்க ஒழுங்கையும் பேசுகின்றன. ஆனால் இவ்விரண்டு வடிவங்களுமே தோராயமாகவேணும் மனித தோற்றத்தை ஒத்திருக்கவில்லை. மாறாக இவ்வமைப்புகள் இருவேறு குணங்களை அருவமாக குறிப்புணர்த்திவிடுகின்றன. நேரான குறுக்குச்சட்டம் அதற்கேயான வழியில் செயல்படுகிறது – ஒரு நிலையான, கற்பனைற்ற நபர் தன் வாழ்வில் நடந்துகொள்வதைப்போல. அதேநேரம், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் ஒருகோணத்தில் வளைவான சட்டங்களிலிருக்கும் ‘நெளியாறுகள்’ (meanders) இயல்பான நளினத்தோடு கலங்கமற்று ஒளிரும் ஆன்மாவை ஒத்துள்ளது.
உளவியலால் தொகுக்கப்படும் நம் அகத்தை, பார்வையால் விரிந்ததும், தொடுவுணர்வோடும், புலனுணர்வுகளாலானதுமான வெளியுலகோடு இணைக்க முயற்சிக்கும்போது, இயல்பாக நம் மொழியில் உருவகங்கள் விருட்சமடைகின்றன. ஒருவர் பிறழ்வுடனோ அல்லது கசப்பு நிறைந்தோ இருப்பதாக நாம் சொல்லக்கூடும். ஒருவரை மென்மையானவர் என்றோ அழுத்தக்கார் என்றோகூட குறிப்பிடலாம். ஒருவேளை நம் நெஞ்சமேகூட சமயங்களில் ‘சிவந்து’ போய்விடக்கூடும் அல்லது காலப்போக்கில் அது ‘கல்லாய்’ மாறிவிடக்கூடும். நாம் ஒரு நபரை பாறை போன்ற பொருட்களுடனோ அல்லது குறிப்பிட்ட நிறத்துடனோகூட ஒப்பிட முடியும். நிச்சயமாக அந்த ஒப்பீடு அவரது குணாதிசயத்தை குறிப்புணர்த்தி தொடர்புறுத்திவிடும் என எந்த ஐயமுமின்றி சொல்லலாம்.
ஜெர்மன் உளவியலாளர் ரூடால்ஃப் ஆர்ன்ஹைம் (Rudolf Arnheim) ஒருமுறை அவரது மாணவர்களுக்கு நல்ல மணவாழ்வையும் மோசமான ஒன்றையும் வெறும் கோடுகளைக்கொண்டு(வரைந்து) விளக்குமாறு பணித்தார். சமர்பிக்கப்பட்ட இவ்வரைபடங்களிலிருந்து ஆர்ன்ஹைமின் கருத்துருவை அடையாளம் காண்பது சற்றே கடினமாக தோன்றலாம். இருந்தும் கொஞ்சம் முயற்சிக்கும்போது, ஒருவகையில் அவை திருமண வாழ்க்கையின் இருவேறு துருவங்களை கச்சிதமாக கைப்பற்றியிருப்பதை நிச்சயம் கவனிக்கலாம்.
முதல் வரைபடத்தில் மென்மையான வளைவுகள் சச்சரவுகளற்ற, அமைதியானதொரு உறவை பிரதிபலிக்கிறது – காதல் நிறைந்த இணையையும் அவர்களது நெகிழ்ந்தோடும் வாழ்வையும் அதில் அடையாளம் காணமுடிகிறது. மாறாக அடுத்த வரைபடம் கூர் முனைகளுடன் வன்முறை தெறிக்க காட்சியளிக்கிறது – வார்த்தை போர்களில் அடைந்த மனக்கீறல்களுக்கும், அறைந்து மூடப்பட்ட கதவுகளுக்குமான காண்பியல் வடிவம் போல.
ஒழுங்கற்ற வடிவில் இருக்கும் சாதாரன கோடுகளே நம் மனநிலைகளை இவ்வளவு தூரம் துல்லியமாகவும், சரளமாகவும் பேசமுடியும் எனும்போது, ஒரு முழுக்கட்டிடமே ‘பேசு’பொருளாகும்போது அது வெளிப்படுத்தும் ஆற்றல் நிச்சயம் எல்லையற்றதாக விரியக்கூடும். பயூ கேத்தீட்ரல்-யில் (Bayeux Cathedral) உள்ள தோரணவாயில் வடிவத்தைக் காணலாம். அவற்றின் கூர்மையான தூண் வளைவுகள் ஆழ்வுணர்வையும் தீவிரத்தையும் தெரிவிக்கின்றன. அதேவேளையில் உர்பீனோ-வில் உள்ள மாளிகையின் முற்றத்தில் (courtyard of the Ducal Palace in Urbino) அமைந்திருக்கும் அரைவட்ட வளைவுகள் பேரமைதியையும், சமநிலையையும் உருவகப்படுத்துகிறது. ஒருவரது வாழ்வு பல்வேறு தடைகளின் அனுபவத்தால் சூழலுக்கேற்ப தகவமைப்பு பெறுவதைப்போல இம்மாளிகையின் வாயில் வளைவுகள் (arches) எல்லாதிசைகளிலிருந்து வரும் அழுத்தங்களையும் தாங்கியபடி சமநிலையை பறைசாற்றுகிறது. சொல்லப்போனால் பொதுவாக பேராலயங்களில் குவியும் ஆன்மீக உளநெருக்கடிகலிளிருந்தும், உணர்ச்சிகரமான கொந்தளிப்புகளிலிருந்தும்கூட இவை விலகியே நிற்கின்றன.
மாணவர்களுக்கு ஆர்ன்ஹைம் அளித்த பயிற்சியை நாம் இன்னும் பல படிநிலைகள் முன்னோக்கி விரிவுபடுத்தலாம். வரலாற்றில் ஜெர்மனியின் இரு வேறு காலகட்டங்களை உருவகமாக வழங்குமாறு நாம் பணிக்கப்படுவதாகக் கொள்வோம். பாசிச அரசையும், ஜனநாயக குடியரசையும் அது பிரதிபலிக்கவேண்டும். வெறும் பென்சில் கோடுகளால் அல்லாமல், நமது படைப்பு கற்களாலும் இரும்பாலும் கண்ணாடிகளாளும் ஆனதாக இருக்கவேண்டும். நாம் எவ்வளவு முயற்சித்தாலும் அது ஆல்பர்ட் ஸ்பியரின், ஈகொன் ஐர்மன்-யின் (Albert Speer and Egon Eiermann) வடிவங்களின் உரையாடல்களைப்போல அக்கருத்தை பேசி நிலைநாட்டிவிடப்போவதில்லை – இரண்டாம் உலகப்போரின் முன்பும் பின்பும் நடந்த உலக கண்காட்சிகளில் ஜெர்மனிக்கான தேசிய அரங்குகளில் இவர்களது படைப்புகளே இடம்பெற்றிருந்தன.
1937-ல் அரங்கேறிய பாரிஸ் கண்காட்சிக்காக (Paris Fair of 1937) ஸ்பியர் வடிவமைத்து வழங்கிய இப்படைப்பில் ஆற்றல்வாய்ந்த காட்சி உருவகங்களான உயரம், நிறை, நிழல் என அனைத்தையும் மிகச்சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கண்காட்சிக்கு அப்படைப்பை அங்கீகரித்து அனுப்பிய அரசின் பிரசித்திபெற்ற சின்னத்தை ஒருவேளை நாம் கவணித்திராவிட்டாலும்கூட, அப்படைப்பு அதற்கிணையான உணர்வுகளை கடத்திவிடுவதை நாம் நிச்சயம் உணர்வோம். அச்சுறுத்தும் அந்த 500அடி நியோகிளாசிக்கல் கட்டமைப்பு வலிமை மிகுந்த, பணிய மறுக்கிற பிரமாண்டத்தை கம்பீரமாக அறிவிக்கிறது.
இருபத்தோரு வருடமும் ஒரு உலகப்போரும் கடந்த பிறகு, ப்ரசெல்ஸ்-ல் 1958ஆம் ஆண்டு நடந்த உலக கண்காட்சியில் (1958 World Exposition in Brussels) அவரது ஜெர்மன் அரங்கில் ஈகொன் ஐர்மன் தனது படைப்பிற்காக மூன்று மிகவித்தியாசமான உருவகங்களின் உதவியை நாடியிருந்தார் – அமைதியை பரிந்துரைக்க கிடைமட்ட வடிவத்தையும், மென்மையை குறிக்க இதமான இளகிய அமைப்பையும், ஜனநாயகத்தை பறைசாற்ற வெளிப்படைத்தன்மையையும் (கண்ணாடிகளும் காலி இடங்களும்) பயன்படுத்தியிருக்கிறார்.
பொருட்களும் நிறங்களுமே இவ்வளவு மொழியாளுமை பெற்றிருக்கும்போது, ஒரு பிரமாண்ட கட்டிடத்தின் முகப்புத் தோற்றம் (façade) ஒரு நாடு எவ்வாறு ஆளப்படவேண்டும் என்றும் எவ்வகையான வெளியுறவுக் கொள்கைகளை அது கடைபிடிக்க வேண்டும் என்றும் நிச்சயம் பேசி ஊர்ஜிதப்படுத்திவிடும். ஆக, அரசியல் கருத்துக்களையும், நீதியுரைகளையும்கூட நாம் ஜன்னல் கம்பிகளிலும், கதவு தாழ்களிலும் எழுதிவிட முடியும். ஒரு தட்டையான கல்லாலான பீடத்தின் மேலிருக்கும் அரூபமான கண்ணாடிப் பெட்டி ஒரு நாட்டில் நிளவும் அமைதியையும் அதன் நாகரீகத்தையும் அறிவித்துவிடும் என நிச்சயம் நம்பலாம்.
7.
இவற்றைத்தாண்டி இன்னொரு முக்கியமான வகையிலும் பொருட்களும், கட்டிடங்களும் நமக்கு பொருட்படுகின்றன. வாஷிங்டன், டிசி –யிலுள்ள ஜெர்மன் தூதரது இல்லத்திற்கு, இரவு விருந்திற்காக ஒருவேளை நாம் அழைக்கப்பட்டால், அவ்வுணர்வு மெல்ல நம்மை அணுகக்கூடும். அமெரிக்க தலைநகரின் வடமேற்கில், மரங்கள் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இக்குடியிருப்பின் கட்டமைப்பு அனேக வடிவ நுணுக்கங்களைக் கொண்டுள்ளது. செவ்வியல் பாணியின் வீச்சும், வெளிப்புற சுவர்களில் பதிக்கப்பட்டிருக்கும் வெள்ளை சுண்ணாம்புக் கற்களும், உட்புற பளிங்குத் தளங்களும், கருவாலி(oak) மரத்தாலான கதவுகளும், இரும்பாலும் தோலாலும் செய்யபட்ட இதர வேலைப்பாடுகளும் அறைக்கலன்களும் என ஒட்டுமொத்தமாய் அவை நம்முள் பெரும் ஆதிக்கத்தை செலுத்துகின்றன.
உணவுக்கு முந்தைய விருந்தோம்பலில், மின்னும் ஜெர்மானிய ரைன் ஒயினுடன் இக்கட்டிடத்தின் வராண்டாவில் நிற்கும்போது நாம் அதையொட்டி ஒரு வரலாற்று விழிப்புணர்வை அடையக்கூடும். கள்ளங்கபடமற்ற நமது ஜெர்மன் உபசரிப்பாளர், இயல்பான ஆங்கிலத்தில் அந்நகரில் அமைந்திருக்கும் கட்டிடங்களின் உச்சிதொடும் பின்வானத்தை நமக்கு சுட்டிகாட்டும்போது, நாம் எதிர்பாராத ஒன்றைக்கண்டு திடுக்கிடக்கூடும். நமக்கேற்படும் திணறலுக்குக் காரணம் அந்நகரில் வானுயர்ந்த கட்டிடங்களின் பின்னனியில் இருக்கும் இலஞ்சிவப்பு பூத்த வானமல்ல (அதுவும் நமக்கு ஒரு சிறுதிகைப்பை ஏற்படுத்தியபோதிலும்கூட), அதற்கு மாறாக அந்த போர்டிகோதான் அவ்விசித்திர உணர்வை நமக்களிக்கிறது. தீப்பந்தமேந்திய அணிவகுப்புகளையும், இராணுவ ஊர்வலங்களையும், நாஜிகளின் வீர வணக்கங்களைப்பற்றியும் அது மெல்ல நம் காதுகளில் கிசுகிசுக்கிறது. இதற்கு காரணம், ஜெர்மன் தூதரது இருப்பிடத்தின் பின்பகுதி கட்டமைப்பு, நீள அகல விகிதாசாரத்திலும்சரி, வடிவ அமைப்பிலும்சரி, நூரம்பகிலுள்ள ஆல்பர்ட் ஸ்பியரி-ன் அணிவகுப்பு மைதானத்துடன் அப்பட்டமான ஒத்திசைவை கொண்டிருப்பதுதான் (Albert Speer’s ambulatory at the Nuremberg Parade Ground).
மேற்கோள்களின் மொழியிலேயே கட்டிடங்கள் நம்மோடு பேசுகின்றன. அதாவது இதுவரை நாம் பார்த்த உதாரணங்களின்வழி, கட்டிடங்கள் நம் நினைவுகளில் தங்கியிருக்கும் விஷயங்களை தூண்டக்கூடிய வடிவ ஒத்திசைவுகொண்ட மாதிரிகளின் வழியாகவும், அவை உருவான சூழலைச் சார்ந்தும் நமக்கு பொருளுணர்த்தின என அறிந்தோம். அக்கட்டிடங்கள் உருவான சூழலும், அத்தருவாயில் அரங்கேறிய வரலாறும்கூட அதில் நிரந்தரமாக படிந்துவிட்டிருப்பதையும் காணலாம்.
ஒட்டுமொத்தமாக உருவகங்களின் வாயிலாகவே கட்டிடங்கள் தொடர்புறுத்துகின்றன. நாம் அவற்றை காணும் தருவாயில் நம் தனிபட்ட சூழ்நிலையும் அவற்றின் வரலாற்று படிமமும்கூட அதில் பதிந்துவிடுகின்றன. எனவே, கட்டிடக்கலையும், அலங்கார வடிவங்களும் நாம் அவற்றை கடந்துவந்த தருணத்தில் நமக்கிருந்த உணர்வுகளுக்கான நினைவுசின்னங்கலாகிவிடுகின்றன.
நம் கண்களும் மூளையும் எந்த அளவிற்கு விழிப்புடன் செயல்படுகின்றன என்றால், குறிப்பிடத்தக்கதாய் இல்லாத ஒரு சிறு விவரத்திற்கான ஒப்புமையையும்கூட நம் எண்ணக்குவியலிலிருந்து தேடிக் கண்டறிந்து சடுதியில் நமக்கு நினைவுபடுத்திவிடுகின்றன. ஆர்ட் டெக்கோ எழுத்துருவில் இருக்கும் (Art Deco font) அதிகப்படியாக விழுங்கி, அடிவயிறு பெருத்திருக்கும் ‘B’ யோ, அல்லது தாடையை திறந்தபடி இருக்கும் ‘G’ யோ மட்டுமே போதும்; குல்லா அணிந்திருக்கும் தலைமுடி சிறுத்த பெண்ணையும், விடுமுறை தினங்களுக்கான விளம்பரப்பலகைகளில் வாய்பிளந்தபடி இருக்கும் சாகச மனிதர்களையும் பற்றிய நினைவில் நம்மை ஆழ்த்திவிட போதுமானதாக இருக்கிறது.
நம் மனதிற்குள் அடைபட்டுக் கிடக்கும் பால்யத்தை சிறகடித்து மேலெழச்செய்ய ஒரு சலவைத்தூளின் நறுமனமோ அல்லது டீயின் சுவையோ போதுமானதாக இருக்கிறது எனும்போது, ஒரு முழுமையான கலாச்சாரத்தைக்கூட ஒரு கோணத்தில் இடப்பட்ட சில கோடுகளின் மூலம் மலரச்செய்துவிடமுடியும். ஓடு வேயப்பட்ட, செங்குத்தாக சாய்ந்த மேற்கூரை, ஆங்கில கலை, தொழில்நுட்ப இயக்கத்தை (English Arts and Crafts movement) நினைவுபடுத்தலாம். கேம்ப்ரல் வடிவ (gambrel-shaped) மேற்கூரை ஸ்வீடனின் வரலாற்றையும் நாம் விடுமுறை நாட்களை அங்கு கழித்த நினைவுகளையும் நமக்கு உடனடியாக தூண்டலாம்.
லண்டன் எஸ்செக்ஸ் சாலையிலுள்ள கார்ல்டன் சினிமாவை தாண்டிச் செல்லும்போது, அதன் ஜன்னல்களில் ஏதோவொரு எகிப்திய அம்சம் தென்படுவதாக நாம் எண்ணக்கூடும். அதற்கு காரணம், எப்போதோ ஒருமுறை மந்தமான மாலைவேலையில் உணவருந்திக்கொண்டே நாம் பார்த்த எகிப்திய ஆவணப்படமாக இருக்கலாம் – அதில் காண்பிக்கப்பட்ட லக்சரிலுல்ல கர்டாக் மற்றும் ஃபிலே கோவில்களில் உள்ள பைலான் வடிவ நுழைவுவாயிலின் கோண விகிதாச்சாரங்களை நம் கண்கள் நாமறியாமலேயே உட்பதிவு செய்துவிட்டிருக்கின்றன. (pylon gateways to the temples at Karnak, Luxor and Philae). இப்போது நம் அரைநினைவிலிருந்து அது மீட்டெடுக்கப்பட்டு, குறுகி நீண்டிருக்கும் ஒரு நகர்ப்புற ஜன்னலோடு ஒப்பிட்டு அதை உறுதிசெய்கிறது.
நம் திராணியற்ற வெளிமனத்தால், சுயநினைவோடு மீட்டெடுக்க இயலாத இவ்வகையான நுண்தகவல்களைக்கூட நம் ஆழ்மனம் ஒரு புதிரான மூளைநரம்பியல் செயல்பாட்டின்வழி (நம்மால் இதுவரை புரிந்துகொள்ளமுடியாத) அவற்றை சோதனைக்குள்ளாக்கி பிறிதொன்றோடு தொடர்புப்படுத்தி நமக்கு புதிதொன்றை உணர்த்திவிடுவதில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
கட்டிடக் கலைஞர்கள் புது கட்டிடங்களை வடிவமைக்கும்போது, அதன் இரு தூண்களுக்கிடையேயான தோரணவாயில்களையும், ஜன்னல்களையும் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளைத்தும், கூராக்கியும் வடிவமைப்பதன்மூலம் அது இஸ்லாமிய மரபை சுட்டும் என்று நம்பிக்கையோடு செயல்படுகிறார்கள். அதற்கு காரணம் நம்மிடம் இருக்கும் இந்த தொடர்புபடுத்தி புரிந்துகொள்ளும் ஆற்றல்தான்.
அவர்கள் காரிடார்களில் மரத்தாலான தரைத்தளமிடுவதன்மூலம், அது எளிமையான நாட்டுபுற அழகியலை வெளிப்படுத்தும் என நினைக்கலாம். பால்கனிகளில் கணமான வெள்ளை கைப்பிடிகள் பொருத்துவதன்வழி, அந்த கடற்பகுதி வில்லாக்கள் கப்பல்களையும் கடல் வாழ்வையும் பற்றி பேசும் என நம்பலாம்.
இவ்வாறு தொடர்புபடுத்திக்கொள்ளும் இயல்பில் உள்ள சிக்கல் யாதெனின், கட்டிடங்களின்/பொருட்களின் மேல் நமது தன்னிச்சையான சுய முன்முடிவை பூசிவிடுகிறோம். ஒவ்வொரு வகையான கட்டிடக்கலை மரபிலும் அவற்றுக்கே உரித்தான நிறைகுறை என்ற அடிப்படையில் மட்டும் அணுகாமல், நாம் அவற்றின் மேல் அதைச் சார்ந்த வரலாற்று (அந்த அழகியலுக்குத் தொடற்பற்ற) சாயங்களையும் திணித்து தீர்ப்புரைத்துவிடுகிறோம். ஆனால், உண்மையில் நாம் அவை எதைக்குறிப்புணர்த்துகின்றன என்பதை மட்டுமே கருதி முடிவெடுக்கவேண்டும்.
உதாரணமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் கோதிக் (Gothic) வகைமையை நாம் வெறுப்பதாக தீர்மானித்திருக்கலாம். ஒருவேளை அதற்கு காரணம், பல்கலைக்கழகத்தில் நாம் மகிழ்சியற்று வாழ்ந்த அந்த வீடு, கோதிக் தன்மைகளால் நிறைந்திருந்ததால் உருவாகியிருக்கலாம். அதேபோல நாம் நியோகிளாசிக்கல் படைப்புகளை ஒவ்வாமையோடு அணுகலாம் (முன்பு பார்த்த ஜெர்மன் தூதரது இருப்பிடம்); ஏனென்றால் அது நாஜிகளுக்கு சாதகமாக பணிபுரிந்ததால் துரதிருஷ்ட்டத்தை சம்பாதித்துவிட்டது.
கட்டிடக்கலை பாணிகளும், கலைவகைகளும் மோசமான ஒப்புமைகளுக்கு பலியாவதற்கான சான்றாக, அவை காலஓட்டத்தில் அந்த அவப்பெயரிலிருந்து மீண்டுவருவதையும், அவற்றின் நிகர்ப்பொலிவைப் பெறுவதையும் கவனிக்கலாம். பொருட்களின்/கட்டிடங்களின் மீது படிந்திருக்கும் அக்காலகட்டத்தின் சாபம் நீங்க ஒன்றிரண்டு தலைமுறைகள் ஆகலாம். அப்படி அவற்றின் மேல் பூசபட்டிருந்த சார்பு உதிர்ந்துபோகும்போது அவை வேறொரு பரிமாணம் அடைவதையும் நாம் உணரலாம்.
பதினேழாம் நூற்றாண்டு கன்னி மேரியை காணும்போது, அதீதபக்தியின் முகமான ஜேசுயிட்ஸ்-சோ (Jesuits- கத்தோலிக்க திருச்சபை), மதவிசாரணையின் கொடூரங்களோ (Inquisition) நம்மை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்கு காரணம் இப்போது காலத்தின் பிடி மெல்ல விலகியிருப்பதால்தான். ரொக்காக்கோ-வை(Rococo) பிரபுத்துவ சீரழிவின் அடையாளச்சின்னமாகவும், அதை அழித்தொழித்து பழிதீர்த்த பெரும்புரட்சிகளின் நினைவோடு மட்டுமே அணுகுவது புரிந்துகொள்ளக்கூடியதுதான். இருந்தும் காலம் கடக்கும்போது, ரொக்காக்கோ-வின் அதீத விவரங்களையும்கூட அவற்றின் தன்மையாக கருதி ஏற்றுக்கொள்ளவும் நேசிக்கவும் தொடங்குவோம். அதேபோல, சரியான நேரம் வரும்போது ஜெர்மன் தூதரது குடியிருப்பிலுள்ள வராண்டாவில் அமைதியாக நின்றபடி நம்மால் அதன் அழகியலை ரசிக்கமுடியும். நாஜி புயல் படையினரோ (Stormtroopers_NAZI), அவர்களது தீப்பந்தமேந்திய இராணுவ அணிவகுப்புகளின் நோக்கமோ நம் மனதை அப்போது தொந்தரவு செய்ய அனுமதிக்காமல் அவற்றை நாம் பெருமிதத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்தும் வடிவங்களாகக்கூட கண்டு வியந்துபோவோம்.
உண்மையிலேயே அழகான பொருட்கள் என்பவை மிகைஉணர்ச்சிகளால் நம் அகத்தினுள் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ எழுந்தவையாக அல்லாமல், அப்பொருட்களில் இயல்பாக வீற்றிருக்கும் தன்மைகளிலிருந்து உருவானதாக இருக்கும் என்று வரையறை செய்யலாம். அவை ஒரு அம்சத்தின் நினைவுகூரலாக இல்லாமல் அத்தன்மையையே அவற்றுள் கொண்டிருக்கின்றன. ஆகவே, அவை தற்காலிகத்தன்மையை விடுத்தும், அவை தோன்றிய காலவெளிகளைத்தாண்டியும் நிலைபெறும்.
அவற்றின் முதன்மை வாசகர்கள் மறைந்து நீண்டகாலம் ஆனபின்னும் அவற்றின் மூலநோக்கத்தை தொடர்புறுத்தியபடி நிலைநிற்கின்றன. காலச்சுழலில் அவற்றின்மேல் மாறி மாறி பூசப்படும் கற்பனாவாத மேண்மைகளுக்கும், பழிகளுக்கும் அப்பாற்பட்டு அவற்றின் இயற்பண்புகளோடு உறுதியாக காட்சியளிக்கின்றன.
8.
தொடர்புறுத்துவதில் பொருட்களும், கட்டிடங்களும் அதீத ஆற்றலைக் கொண்டிருக்கும்போதும், அவை எதை பேசுகின்றன என்ற உரையாடல் நம்மில் அரிதாகவே இருக்கிறது. அவை கடத்தும் உணர்வெழுச்சியையோ, உருவகப்பொருளையோ, வெளிப்படுத்தும் மனிதசாயலையோ/மனதின்சாயலையோ பற்றி ஆராய்ந்து அறிவதில் நம் மூளையை செலுத்துவதில்லை. மாறாக, அதைச்சார்ந்த வரலாற்று தரவுகளையோ, அழகியல் தொழில்நுட்ப கூறுகளையோ கவனிப்பதிலேயே நாம் நிறைவடைந்துவிடுகிறோம். எனவே ஒரு கட்டிடம் என்ன சொல்கிறது என்பதைப்பற்றிய விவாதத்தை தொடங்குவது இன்னும் அபூர்வமாகவே எஞ்சிவிடுகிறது.
ஒருவேளை கட்டிடக்கலை அம்சங்கள் யாவும் வெளிப்படையான வாசகங்களால் (ஆவற்றுக்கு நிகரான) இணைக்கப்பட்டால் இம்மாதிரியான உரையாடலில் ஈடுபடுவது எளிதாகக்கூடும். அதாவது ஒரு அகராதி கையிலிருப்பதுபோல – உதாரனமாக, வடிவங்களையும், ஊடகங்களையும் அது உணர்வுகளோடும், கருத்துக்களோடும் முறையாக தொடர்புப்படுத்தி வைத்திருக்கலாம். அவ்வகராதி நாம் பயன்படுத்தும் மூலப்பொருள்களைப் பற்றியும் (இரும்பு, அலுமினியம், டெரகோட்டா, கான்கிரீட்) பாணிகளைப்பற்றியும், அவற்றின் நீள அகல விகிதாசாரங்களைப் பற்றியும்கூட (புரிந்துகொள்ளக்கூடிய – தற்போது இருக்கும் எல்லா வகையான தளங்களின் கோண விகிதங்களையும், அடர்த்தி/தடிமனையும், தூனின் வகைகளையும் பற்றி) மிகவிரிவான தகவல்களை வழங்கி உதவும். இன்னும் கூடுதலாக, அது சாதாரன கண்ணாடிகளையும் பிரதிபலிக்கும் ஒன்றையும் பற்றி சில பத்திகளைக் கொண்டிருக்கலாம்; குழிவான மற்றும் குவியமான கண்ணாடிகளுக்கு இடையேயான வேறுபாட்டையும் தனிச்சிறப்பையும் விளக்கலாம்.
இரும்பாலான அறைக்கலன்களையும், விளக்கு வகைமைகளைப்பற்றியும் (light fittings and ironmongery) தெரிந்துகொள்ள கட்டிடக்கலைஞர்கள் உபயோகிக்கும் தடிமனான கையேடுகளை இவ்வகராதி நினைவுபடுத்தலாம். ஆனால், அவற்றின் செயல்பாட்டுத்திறன் சார்ந்தும் கட்டிடத்துறை நெறிகள் தொடர்பாகவும் அவை கவனம் செலுத்துவதுபோல் அல்லாமல் இவ்வகராதி கட்டிடக்கலை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு அம்சத்தைப்பற்றியும் குறியீட்டு மொழியில் உணர்வூட்டும் தனிச்சிறப்பைப் பற்றியும் விவரிக்கும். ஒவ்வொரு நுணுக்கங்களையும் நோக்கி அது காட்டும் அசலான அக்கறை நமக்கொரு திறப்பை அளிக்கும் – அதாவது ஒரு அழகிய கவிதையிலிருக்கும் ஒரேயொரு சொல்லை நீக்கிடும்போது அதன் ஒட்டுமொத்த அர்த்தக்கட்டுமானமும் நிலைகுலைவதைப்போல, ஒரு வீட்டில் சுன்னாம்புக்கல் பதித்த நேரான லின்டல் (கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கு மேலுள்ள பகுதி) செங்கலால் ஆன வளைந்த ஒன்றாக மாற்றப்படும்போது அந்த வீட்டின் படிமமும் மாறிவிடுகிறது. இப்படி ஒரு பெரும்வளம் நமக்கு கிடைக்கும் பட்சத்தில், நாமேகூட நமது சுற்றுப்புறத்திற்கு இன்னும் அதிக விழிப்புணர்வு கொண்ட வாசகர்களாகவும்; ஏன் அதன் ஆகச்சிறந்த எழுத்தாளர்களாகவும்கூட ஆகிவிடக்கூடும்.
9.
அவ்வகராதி ஒரு மகத்தான கையேட்டின் பயன்பாடுகளை ஒத்திருக்கலாம். இருந்தும் கட்டிடக்கலை நம்மிடம் என்னவெல்லாம் பேசுகின்றன என்பதைச்சார்ந்த விளக்கவுரைகளை உள்ளடக்கியபோதும் அது ஒருபோதும் தன்னிச்சையாக இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது – குறிப்பிட்ட சில கட்டிடங்கள் மட்டும் ஏன் நமக்கு மிகஅழகாக தோன்றுகின்றன?
நாம் கண்ணுயர்த்தி மெச்சும் கட்டிடங்கள் யாவும் நாம் உன்னதமாக மதிக்கும் விஷயங்களை வெவ்வேறு வகையில் உள்ளடக்கி இருப்பவைதான் – அதாவது நட்பு, கனிவு, நுணுக்கம், வலிமை, அறிவு போன்ற புராதனமான நற்பண்புகளை அக்கட்டிடம் வெளிப்படுத்தலாம். அக்கட்டிடத்தின் மூலப்பொருட்களோ, வடிவமோ, நிறமோ அவ்வுணர்வை உள்ளெழச் செய்திருக்கலாம்.
அழகு பற்றிய நம் பார்வைக்கோணமும், நல்ல வாழ்க்கையோட்டம் பற்றிய நம் புரிதலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால்தான் நம் படுக்கையறைகளில் நிம்மதிக்கான பிரதிபலிப்பை நாடுகிறோம்; நாற்காலிகளில் பெருந்தன்மைக்கான உருவகங்களையும், நல்லிணக்கத்தையும் எதிர்நோக்குகிறோம்; தண்ணீர் குழாய்களில்(water tap) நேர்மையையும், உண்மையையும் கேட்க விரும்புகிறோம். நயம்பொருந்தி ஒரு தளத்தில் இணையும் ஒரு தூணைக்கண்டு நாம் உணர்ச்சிவயப்படக்கூடும், புராதனமான கற்படிகளில் ஞானத்தையும், ஜியார்ஜிய பாணி வாசலின் (Georgian doorway) மேல் ஜன்னலில் (fanlight window – வாசலின் மேலுள்ள வெளிச்சத்திற்கான அமைப்பு) சூட்டிகைத் தன்மையையும், உபசரனையையும் கண்டுணரலாம் .
நமது காண்பியல் ரசனைக்கும், நம்மை செலுத்தும் தார்மீகத்திற்கும் இடையேயான நெருங்கிய உறவை படிகத்தன்மையானதொரு உணர்வோடு சுட்டிக்காட்டியவர் ஸ்டென்டல்தான் (Stendhal). “அழகு நம் மகிழ்ச்சிக்கான வாக்குறுதி” என்று அவர் எழுதினார். அவர் முழுமையான மனிதர்களாக நாம் நிறைவுபெற அவசியமான பண்புகளோடு அழகை ஒருங்கிணைத்தார். அதன் வழியாக அழகை நோக்கிய உண்மையான காதலுக்கும், வெறும் புத்தகத்தனமான முன்முடிவுகொண்ட அழகியலுக்குமான வித்தியாசத்தை அவரது இப்பொன்மொழி வெளிச்சமிட்டு தெளிவுபடுத்துகிறது.
மகிழ்சிக்கான தேடல்தான் நம் வாழ்க்கையின் அடிநாதம் எனும்போது, அழகின் அடிப்படையாக அதனுட்பொதிந்திருக்கும் சாரமும் அதுவாகவேயிருப்பது இயற்கையானதுதான் என்றே தோன்றுகிறது. அதேநேரத்தில் மகிழ்ச்சிக்கான நமது பட்டியல் மிகச்சிக்கலானது என்று உணர்ந்ததனால்தான், ஸ்டென்டல் எந்த வகையான அழகு என்று குறிப்பிடுவதை மிகக்கவனமாக தவிர்த்துள்ளார். தனிநபர்களாக ஒருவேளை கருணைக்கு நிகராகவே கர்வமும் நம்மை ஈர்க்கலாம்; கண்ணியத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் மூர்க்கமும் நமக்கு கிளர்ச்சியூட்டலாம்.
மனிதர்கள் அடைந்த பரந்த இலக்குகளையும் உள்ளடக்கும் விதத்தில் ‘மகிழ்ச்சி’ என்ற சொல்லை அவர் விசாலமான அர்த்தத்தில் பயன்படுத்தி இருக்கிறார். மனிதகுலம் எப்போதும் தார்மீக ஒழுக்கத்தைப்பற்றி முரணியக்கதோடு செயல்படுவதைப் போலவே காண்பியல் ரசனையையும் அணுகுகிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அதனால்தான் அவர் இப்படி குறிப்பிடுகிறார் “மகிழ்சியடைவதற்கு எத்தனை வகையான சாத்தியங்கள் இருக்கின்றனவோ அழகிற்கும்கூட அத்தனை வகையாகவும் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது”. நம் நிறைவிற்கும் செழுமைக்கும் முக்கியமாக விளங்கும் நம் தனிப்பட்ட லட்சியங்கள், அதன் பொருள்வய வடிவமாக நம்முன் உயிர்ப்பெறும்போதுதான் ஒரு வடிவத்தையோ, கட்டிடக்கலைப் படைப்பையோ நாம் அழகு என அடையாளம் காண்கிறோம்.
மகிழ்ச்சிக்கான கட்டிடக்கலை (பகுதி 1) : அலான் டி பாட்டன்

தென்னவன் சந்துரு
வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.
வணக்கம் தென்னவன்,
மிக அருமையான பதிவு என்னூள் எப்போதும் கட்டிடத்தின் மேல் ஒரு தனி பார்வை இருக்கும் அதை வெளியில் பகிரும் போது என் சுற்றத்தில் யாவரும் அதை பொருட்படுத்தியது இல்லை. என்னை போன்றோர்க்கு இது ஒரு பெரிய திறப்பு இன்னும் ஊக்கம் அடைந்து கட்டிட மற்றும் பொருள் வடிவ கலையின் அழகியலை ஆழ ரசிக்க வழிவகுக்கும் என்று உணர்கிறேன். உங்கள் கலை ரசனை மென்மேலும் பூத்து குலுங்க வேண்டும்
வாழ்த்துக்கள்
நன்றி
யு
சிறப்பு . அழகியல், உளவியல் , கருத்துருவாக்கம் இவற்றில் புதிய சாளரங்களைத் திறந்துவிடுகிறது .