/

திரைகடல் : வெற்றிராஜா

பெயர்: கியோம். முழுப்பெயர்: கியோம் ஜொசப் எசாந்த் ழான்- பப்திஸ்த் லெ ஜாந்தி தெ லா கலெசியர். வயது: 35. இடம்: ஃபிரான்ஸ். பதவி: ராயல் சயின்ஸ் அகாடமியில் வானவியல் நிபுணர். காலம்: சூயஸ் கால்வாய் (Suez Canal) தோண்டப்படாத காலம்.

ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு சென்ற கப்பல்கள் ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கு பகுதி வரை சுற்றி பயணித்த காலம். ஞானத்தை தேடி மானுடம் அலைந்து திரிந்த காலம். ஐரோப்பாவில் மறுமலர்ச்சி (Renaissance) இயக்கம் அதன் உச்சத்தை தொட்ட பின், ஒளி வீசிக்கொண்டு நவீன யுகத்தை நோக்கி நகர்ந்த காலம்.

‘மன்னருக்கு ஒரு வேண்டுகோள். பாண்டிச்சேரிக்கு பதிலாக நான் ரஷ்ய சைபீரிய பகுதிக்கு செல்ல விரும்புகிறேன்’ என்றார் கியோம்.  

‘கேட்பது கிடைத்துவிட்டால், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், வாழ்விலே சுவாரசியம் இருக்குமா, கியோம்?’ மன்னர் பதினைந்தாம் லூயி மெலிதாக புன்னகைத்தார்.

மன்னர் தொடர்ந்தார்.

‘ஒன்று சொல்லட்டுமா? எனது பாட்டனுக்கு பிறகு முடி சூடி அரியணை ஏறும் கனவு, கடைசி வரை பலிக்காமல் இறந்து போனவர் என் தந்தை. பாட்டன் மரித்த பின் அவரது கிரீடம் ஐந்து வயது சிறுவனான என் தலைக்கு வந்தது. நமக்கு விதிக்கப்பட்ட சிலுவையை, நாம் சுமப்பதுதானே நியாயம்?’

மன்னர் குரலை உயர்த்தி சபை நோக்கி பேசினார், ‘Father Chappe சைபீரியா செல்வார். Father Pingre மடகஸ்கர் நோக்கி, மேசன் தென்னாப்பிரிக்காவுக்கு, கியோம் லெ ஜாந்தி பாண்டிச்சேரி செல்வார். உங்களது பயணத்தின் தூரங்களை வியந்து பாராட்டி, நீங்கள் செய்யப்போகும் சாதனைகளை வாழ்த்தி வரவேற்க, பாரிஸ் நகரம் ஆவலுடன் காத்திருக்கிறது. சபை கலையலாம்.’

கியோம் லெ ஜாந்தி – Wikipedia

ஃபிரான்ஸ் தேசத்தின் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட தயாரானது. கியோமின் உறவினர்களும், பிள்ளைகளும், மனைவியும் முத்தங்களை காற்றில் பறக்கவிட்டு கையசைத்து வழியனுப்பினர். புறத்தில் புலப்படாத தொப்புள்கொடி ஒன்று, தாய்நாட்டை பிரிந்து பயணிக்கும் எவரையும் அவர்தம் பிறந்த மண்ணுடன் பிணைத்து, என்றும் அறுபடாமல் அகத்தில் நீள்கிறது. கடற்கரையில் கண்ட காட்சிகள் யாவும் சுருங்கி புள்ளியாகி மறைவதை கப்பலின் மேல் தளத்திலிருந்து கவனித்தார் கியோம். வசந்தகால வானமும், வண்ணக்கடலும் நீல ஆடியென ஒன்றையொன்று ப்ரதிபலித்தது. பொல்லாக், ஹேடாக் மீன்கள் கூட்டம் துள்ளி குதித்து விளையாடி கப்பலுடன் போட்டியிட்டு விரைந்தன. அலை அலையாய் நெளிந்து ஓடிய கடலும், காற்றின் ஓயாத ஓசையும், கப்பலை தாலாட்டி முன்னே தள்ளின. உச்சி சூரியன் தத்தித் தவழ்ந்து சென்று மேற்கில் குப்புற கவிழ்ந்து தனது கண்ணாமூச்சி ஆட்டத்தை துவங்கியது. தொடுவானில் தீப்பந்தம் ஏந்தி கடலுக்கு தீ வைக்கும் நேரம். செஞ்சுடர் பரவி கடல்நீர் முழுவதும் பொன் நிறத்தில் எரிய, அலைகள் மேலெழும்பி முகில் சரங்கள் தீப்பற்றி வானம் மேலும் சிவப்பானது. கடலும் வானும்  இணைந்து கதிரவனின் தூரிகை கொண்டு தீட்டிய செவ்வந்தி நீரோவியத்தின் வர்ணஜாலம் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருந்ததை வியப்புடன் பார்த்து நின்றார் கியோம்.

மறுநாள் கப்பலின் கீழ்தளத்து அறையில் கியோம் தனது தொலைநோக்கியை சோதித்து பார்த்த பிறகு அதை பெட்டிக்குள் பத்திரமாக வைத்து மூடினார். அள்ளி வந்த அறிவியல் புத்தகங்களை மேசையின் மீது வரிசையாய் அடுக்கினார். நாட்குறிப்பை திறந்து, ‘மார்ச் 1760’ என்று தேதியிட்டார். சிறிது யோசித்து ‘Transit Of Venus’ என்று தலைப்பிட்டார். பிறகு எழுதத் தொடங்கினார். “கெப்ளரின் மூன்று விதிகளை இன்று மீண்டும் வாசித்தேன். கிரகங்கள் சூரியனை வட்டமாய் சுற்றாமல், நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன. கிரகங்கள் சூரியனின் அருகே செல்கையில் வேகமாகவும், தூரத்தில் இருக்கும்போது மெதுவாகவும் பயணிக்கின்றன. ஒரு கிரகத்தின்  நீள்வட்ட பாதையின் தூரம், அது சுற்றுகின்ற வேகத்தையும், சுற்றி முடிக்கும் காலத்தையும் சார்ந்துள்ளது. கெப்ளரின் மூன்றாவது விதிக்கும், ஐசக் நியூட்டனின் Inverse Square விதிக்கும் உள்ள ஒற்றுமை ஆச்சரியமான ஒன்று. அண்டத்தின் மிகப்பெரிய பொருட்கள் இயங்கும் விதிகளை கெப்ளர் கூறிய பிறகு, புவி ஒரு ஆப்பிளை ஈர்க்கும் விசையை அவதானித்து புதிய விதிகளை  நியூட்டன் கண்டடைந்தார். நாளை எவரேனும் வந்து ஒரு அணுவின் உள்ளே இயங்கும் துகள் கூட இதே விதியை பின்பற்றுவதாக சொல்லக்கூடும். அண்டங்களும் பிண்டங்களும் அளவுகளில் வேறுபட்டாலும், அவற்றை இயக்குகின்ற விதி என்னவோ ஒன்றுதான் என யூகிக்கிறேன். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, பூமியை அளந்து பார்க்காமலே, கணிதத்தை பயன்படுத்தி பூமியின் ஆரம் (Radius), விட்டம் (Diameter), சுற்றளவு (Circumference) ஆகிய மூன்றையும் துல்லியமாய் கணித்தது மானுடம். அதே உத்தியின் மூலமாக சூரியனை தொடாமலே,  பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை கணிக்க வெள்ளி (Venus) கிரகத்தை மானுடம் தேர்ந்தெடுத்தது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வெள்ளிக் கிரகம் பலமுறை குறுக்கிட்டாலும், ஒவ்வொரு நூற்றாண்டிலும், எட்டு ஆண்டு இடைவெளியில் இரண்டு முறை தென்படும் வெள்ளிக் கோளின் இடைநகர்வு மட்டுமே அதை அளப்பதற்கு ஏதுவானது. வானியல் விஞ்ஞானிகள் அந்த வருடங்களின் ஜோடிகளை பட்டியலிட்டு (1761 & 1769) (1874 & 1882) (2004 & 2012) (2117 & 2125), வெள்ளியின் இடைநகர்வு தரவுகளை பயன்படுத்தி கொள்ள அறைகூவல் விடுத்தனர். பூமியின் நூற்றுக்கணக்கான பகுதிகளிலிருந்து வெள்ளியின் சூரியக் கடப்பை பதிவு செய்து, Parallax முறைமையின் மூலம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தை கணக்கிட முடிந்தால், அதன் பிறகு ஓட்டுமொத்த சூரிய குடும்பத்தையே கட்டுடைத்து விடமுடியும். இன்று உலகின் பல்வேறு நகரங்களை நோக்கி பயணிக்கின்ற மிக முக்கிய வானியல் நிபுணர்களில் நானும் ஒருவன். Transit Of Venus நிகழ்வை பதிவு செய்யப்போகும் எனது டெலஸ்கோப்பின் தரவுகளை, வானியலில் அவை ஏற்படுத்தப்போகும் புரட்சிகளை எண்ணி பெருமையும் பெருங்கிளர்ச்சியும் அடைகிறேன்” நாட்குறிப்பை மூடி வைத்துவிட்டு கியோம் ஒரு மெழுகுவத்தியை ஏற்றினார். அலைகளில் ஆடிய கப்பலுடன் ஒத்திசைந்து மெழுகின் சுடரொளியும் நடனமாடியது.

வடக்கு அட்லாண்டிக் கடல்வழி துவங்கிய கப்பல், பிறகு தெற்கு அட்லாண்டிக் கடலில் பயணித்து  ஜூலை 1760 பத்தாம் தேதி Isle of France (இன்றைய மொரிஷியஸ்) தீவுக்குள் நுழைந்தது. அங்கிருந்து பாண்டிச்சேரி செல்ல வேண்டிய கப்பலுக்காக கியோம் காத்திருந்தார். கோடை கடந்து, இலைகள் உதிர்ந்து, புத்தாண்டு (1761) பிறந்தது. அச்சமயம் ப்ரிட்டனுக்கும் ஃபிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் கடல் பிரயாணங்கள் தவிர்க்கப்பட்டன. போர்ட்ஸ்மவுத்திலிருந்து வானியல் நிபுணர்களுடன் புறப்பட்ட ப்ரிட்டிஷ் கப்பல் ஒன்று ஃபிரெஞ்சு படையினரால் தாக்கப்பட்டு மீண்டும் ப்ரிட்டனுக்கே திரும்பியது. அந்த கப்பலில் பயணித்த பதிமூன்று ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் ஜூன் 1761 ஆறாம் தேதிக்குள் பாண்டிச்சேரி செல்ல வேண்டுமென்பதே கியோமின் திட்டம். மடகஸ்கரில் உள்ள ரொட்ரிக்ஸ் தீவு நோக்கி சென்ற வழியில் மொரிஷியஸ் இறங்கிய Father Pingre, போர் விளைவுகளை உத்தேசித்து கியோமை தனது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு  கோரினார். வேறு வழியின்றி கியோம் மனம் மாறிய தருணத்தில், Sylphide என்ற கப்பல் பாண்டிச்சேரிக்கு புறப்பட இருப்பதாக செய்தி வந்தது. 

‘இங்கிருந்து பாண்டிச்சேரி செல்ல இரண்டு மாதம் தானா?’ கியோமின் விழிகள் விரிந்தன.

‘ஆம். வருகின்ற ஏப்ரல் நீங்கள் 

பாண்டிச்சேரி மண்ணை மிதித்துவிடலாம்’ என்றார்  கப்பலின் கேப்டன் ஃபிரான்சுவா

‘நம்பவே முடியவில்லை!’

‘இவளை யாரென்று நினைத்தீர்? Sylphide கப்பல் என் மனைவி போன்றவள். அதற்கும் மேலே. எனது இணைமனம் இவள். நாங்கள் இணைந்து பயணித்த கடல்களும் திசைகளும் ஏராளம். தயங்காமல் ஏறுங்கள் நண்பரே.’ புன்முறுவல் பூத்தார் கேப்டன் ஃபிரான்சுவா.

AI generated image

போர்ட் லூயி கரையை விட்டு விலகிய சில்ஃபைடு கப்பல் இந்திய பெருங்கடலில் மிதந்து சென்றது. ஒரு நள்ளிரவில் புழுக்கம் தாளாமல் உறக்கம் கலைந்து எழுந்தார் கியோம். கப்பல் அசைவற்று நிற்க, மேல் தளத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவ, மாலுமிகள் அவசர கதியில் ஓடிக்கொண்டிருந்தனர். பாய்மரத்தை இறக்கிவிட கட்டளையிட்டார் கேப்டன் ஃபிரான்சுவா. மின்னல் வெளிச்சத்தில் தெரிந்த   மலையளவு மேகங்கள், யானை கூட்டமாய் கப்பலை நோக்கி வருவதை கண்டு திகைத்து நின்றார் கியோம். விழி கூசும் வெண் வாளால் வெட்டப்பட்ட களிறுகளின் பிளிறலென இடியோசை செவிகளை கிழித்தது. மழைத்துளிகள் பெருகி அருவியாய் பொழிந்தன. கிழக்கிலிருந்து வந்த புயல் காற்று கப்பலின் முன்பகுதியை மேற்கு நோக்கி திருப்பியது. பேரலைகள் பொங்கியெழுந்து கப்பலை ஓங்கி அறைந்தன. புயல் காற்றின் சுழற்சிக்கு ஏற்ப கப்பல் முழு வட்டமடித்து மீண்டும் கிழக்கு நோக்கி திரும்பியது. சுழற்சியின் வேகம் அதிகமாகி, கப்பல் ஒரு பம்பரம் போல சுற்றியபடி நகர, அதனுடன் சேர்ந்து கியோமும் சுழன்று கொண்டிருந்தார். யாருமற்ற பெருங்கடலின் தனிமையில், இயற்கை சக்திகள் தூக்கி போட்டு விளையாடுவதற்கு சிக்கிய சிறு பொம்மையானது கப்பல்.

அடுத்த இரண்டு மாதங்களும் பாண்டிச்சேரி நோக்கி செல்வதற்கான கேப்டன் ஃபிரான்சுவாவின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவின. விளக்கு ஒளியை தேடியோடும் விட்டில் பூச்சியாய் சில்ஃபைடு கப்பல் அரேபிய நிலமும், ஆப்பிரிக்க கண்டமும் இருந்த திசை நோக்கியே திரும்பியது. ஜூன் மாதம் நெருங்கி வர கியோம் பதட்டமடைந்தார்.

‘நீ என்னவோ இந்த கப்பல் உன் பொண்டாட்டி மாதிரி என்று கூறினாய். அவள் உன்னை மதிப்பதாகவே தெரியவில்லை. நீ கிழக்கு நோக்கி செலுத்தினால், அவள் மேற்கு வழி செல்கிறாள். உங்கள் ஊடலுக்கு முடிவே கிடையாதா?’  விரக்தியுடன் கேட்டார் கியோம்.

‘இப்படி ஒரு கொடூர புயலையும், தொடர்ந்து அலைகழிக்கும் பருவ நிலையை என் வாழ்நாளில் காண்பது இதுவே முதல் முறை. கப்பலில் கோளாறு ஏதுமில்லை. அவளை இழிவுபடுத்தாதே. ஒரு யோசனை. இந்த அரபிக்கடல் வழியே பயணித்து கேரளா சென்றால் அங்கே மாஹே என்னும் ஊர் ஃபிரெஞ்சு ஆட்சியின் கீழ் உள்ளது. அங்கு சென்று தரையிறங்கலாம். என்ன சொல்கிறாய்? சம்மதமா?’ என்றார் கேப்டன் ஃபிரான்சுவா.

ஆனால் கேப்டனின் திட்டம் பொய்த்து போனது. ப்ரிட்டிஷ் அரசர் மூன்றாம் ஜார்ஜின்  படைகள் ஃபிரெஞ்சு ஆட்சியை தோற்கடித்து மாஹே பட்டினத்தை கைப்பற்றி விட்டதால், அரபிக் கடலில் நின்றிருந்த சில்ஃபைடு கப்பலுக்கு கேரள அனுமதி மறுக்கப்பட்டது. கேப்டன் ஃபிரான்சுவா கப்பலை சிலோன் திசை நோக்கி திருப்பினார். பாண்டிச்சேரியும் ப்ரிட்டிஷாரிடம்  சரணடைந்துவிட்ட துரதிர்ஷ்ட தகவலே அவர்களுக்காக சிலோனில் காத்திருந்தது. ஆனாலும் கப்பலை பாண்டிச்சேரிக்கு செலுத்த கியோம் வற்புறுத்தினார். கேப்டனுக்கும் கியோமுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு தவிர்க்கப்பட்டு, சிலோனிலிருந்து மீண்டும் மொரிஷியஸ் தீவுக்கே திரும்புவதாக முடிவானது. 

விடிந்தால் ஜூன் ஆறு. இன்னமும் இந்திய பெருங்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தார் கியோம். கடல் அலைகளுடன் சேர்ந்து அவரது மனமும் கொந்தளிக்க, வயிற்றுப்போக்கு அவரை பலவீனமாக்கி, உடல் சோர்ந்து, பார்வை மங்கலானது. இரவு நேர வானத்தை பார்த்து கண் கலங்கி புலம்பினார். ‘அன்னையே, உனது மார்பிலிருந்து சுரந்து வழியும் தாய்ப்பால் இந்த பிரபஞ்சத்தின் பால்வெளி எங்கும் சிதறியுள்ளது. அதில் ஒரே ஒரு துளி மட்டும் போதும் இந்த சிசுவுக்கு. என்னை நடுக்கடலில் கைவிட்டு விடாதே’. தொடுவானில் அதிகாலை சூரியன் மெல்ல எழ, கியோம் டெலஸ்கோப்பை திறந்தார். பயமறியா கன்றுகுட்டிகளாய் பல்லாயிரம் அலைகள் எம்பி குதிக்க, கப்பலின் இரண்டு முனைகளும் அதில் ஏறி இறங்கி ஊசற்கட்டையாடின. முழு சூரியனும் மலர்ந்த பிறகு, அதன் இடது ஒரத்தில் கரு வண்டு போல வெள்ளிக் கோள் தோன்றியது. சில்லென்று தென்றல் வீச, மெலிதாய் துவங்கிய தூறல் பலத்த காற்றுடன் மழையாய் பொழிந்ததில் கப்பலின் ஊசலாட்டம் அதிகரிக்க, கியோம் தனது டெலஸ்கோப்பை இயக்குவதில் தடுமாறினார். கப்பல் தொடர்ந்து ஆடியதால், அவர் எடுத்த அளவைகள் யாவும் பிழையாகவே வந்தது. வெறுத்துப்போய் அருகிலிருந்த ஜாடியை எடுத்து ஓங்கி தரையில் அடிக்க, அது நொறுங்கி சிதறியது. இந்த களேபரங்கள் எதையும் கண்டுகொள்ளாமல்   வெள்ளிக்கோள் மெதுவாக சூரியனை கடந்து சென்றது.  ஜூன் 1761 23ஆம் தேதியன்று மொரிஷியஸ் தீவுக்குள் மீண்டும் நுழைந்தார் கியோம்.

அன்புள்ள ராயல் அகாடமிக்கு, 

கியோம் எழுதிக்கொள்வது. நான் நலம். நீங்கள் நலம்தானே? கடந்த ஐந்தாண்டுகளாக மொரிஷியஸ் அருகில் உள்ள தீவுகளில் சுற்றி அலைந்தபடி வாழ்கிறேன். 1761ல் பாண்டிச்சேரி செல்ல முடியாதது எனது தீயூழ். ஆனால் 1769ல் மீண்டும் ஒரு வெள்ளிக்கோள் இடைநகர்வு நிகழ இருப்பது எனது நல்லூழ். இது போன்ற நிகழ்வை 19ஆம் நூற்றாண்டில் காண நாம் யாருமே உயிருடன் இருக்கப்போவதில்லை. அதனால் எனது பயணத்தை 1769 வரை கூடுதலாய் ஒரு பத்து ஆண்டுகள் நீட்டித்து விட்டேன். இம்முறை பாண்டிச்சேரிக்கு பதிலாக பிலிப்பைன்ஸ் பகுதி உகந்தது என்று எனது ஆராய்ச்சி தரவுகள் கூறுகின்றன. இப்போது பாரிஸ் திரும்பி வந்தால் நானும் எனது குடும்பத்தினரும் பலவகை பரிகாசங்களை, பழி சொற்களை, அவமானங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே பிலிப்பைன்ஸ் அரசுக்கு ஒரு பரிந்துரை கடிதமும்,  அகாடமியின் டெலஸ்கோப்பை தொடர்ந்து வைத்துக்கொள்ள அனுமதியும் தர வேண்டுகிறேன்.

தற்சமயம் கரோலஸ் லின்னேயஸ் எழுதிய ‘Systema Naturae’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். உலகில் உள்ள தாவரங்களை அவர் வகைப்படுத்துகின்ற முறைமை நுட்பமாக உள்ளது. Isle de France, Isle de Bourbon, ரொட்ரிக்ஸ் தீவு, மடகாஸ்கர் பகுதிகளில் உள்ள அரிய தாவரங்களின் மாதிரிகளை பறித்து Herbarium செய்துள்ளேன்.  தாவரங்களுக்கு கேட்டலாக் (Catalogue) உள்ளது போல விண்மீன்களுக்கு ஒரு கேட்டலாக் உருவாக்குவதே என் நோக்கம். கேப்டன் ஜேம்ஸ் குக் தலைமையில் ஆங்கிலேய விஞ்ஞானிகள் நியூசிலாந்து அருகே உள்ள Tahiti தீவுக்கு செல்கிறார்களாம். நம் நாட்டு Father Chappe கலிஃபோர்னியா செல்வதாக கேள்விப்பட்டேன். நான் பிலிப்பைன்ஸ் செல்ல அனுமதி கோருகிறேன். இந்த முறை நிச்சயம் வெற்றியுடன் திரும்புவேன்.

அன்புடன்,

கியோம்

திரு கீயம் லெ ஜாந்தி,

உனக்கு பித்து முற்றிவிட்டதா என்ன? உன் இஷ்டத்துக்கு முடிவெடித்து உல்லாசமாய் உலகம் சுற்றுகிறாய். அகாடமிக்கு சொந்தமான டெலஸ்கோப்பை ஏன் இன்னும் தரவில்லை? உனது பதவியிலிருந்து உன்னை தூக்கிவிட்டு வேறொருவரை நியமித்துவிட்டோம். பிலிப்பைன்ஸ் தேசத்தை தற்சமயம் ஸ்பானிஷ் மன்னர் ஆள்கிறார். நீ பாண்டிச்சேரி போவதே உத்தமம். அல்லது டெலஸ்கோப்புடன் பாரிஸ் வந்து சேரவும். 

இப்படிக்கு,

ராயல் சயின்ஸ் அகாடமி, பாரிஸ்

அகாடமியின் கடிதம் வந்து சேரும் முன்னரே, கியோம் 1766 மே மாதம் ஒன்றாம் தேதியன்று ஒரு ஸ்பானிஷ் போர் கப்பலில்  கிளம்பி ஜூலை மாதம் 1766 பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார். மரியானா தீவுகளில் தங்கி சுமார் இரண்டு வருட காலம் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். கியோம் கூறிய கதைகளை நம்ப மறுத்த ஸ்பானிஷ் அரசாங்கம், அவரது செயல்பாடுகளை சந்தேகித்து, ஃபிரான்ஸ் நாட்டின் ஒற்றன் என தீர்மானித்து அவரை கைது செய்ய முயற்சித்தது. அச்சமயம் பாண்டிச்சேரி மீண்டும் ஃபிரெஞ்சு ஆட்சியின் கீழ் வந்துவிட்டதாக அறிந்த கியோம்  கப்பலேறி பயணித்து பசிபிக் பெருங்கடல் தொட்டு, பின்னர் வங்காள விரிகுடா நுழைந்து  மார்ச் மாதம் 1768ஆம் ஆண்டு பாண்டிச்சேரி மண்ணில் பாதம் பதித்தார்.

சமுத்திரத்தில் சதா காலமும் அவதிப்பட்ட கியோமுக்கு, பாண்டிச்சேரியில் வசித்த நாட்களை சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். வசந்தத்தின் இதமான வெயிலும், நெய்தல் நிலத்தின் சுவையான உணவும், விளிம்பு நிலை மக்களின் அன்பும் சூழ்ந்த சுகமான வாழ்க்கை. தலைக்கு மேலே முகாலயர்கள், மராட்டியர், கன்னடம், தெலுங்கு, ஃபிரெஞ்சு மற்றும் ஆங்கில விசைகளுக்கு இடையே ஆட்சியும் அதிகாரமும் மாறிக்கொண்டே இருந்தாலும், அதை பற்றிய கவலை ஏதுமின்றி உழைத்தல், உழைத்த கூலியில் குடித்தல் என்பதே பாண்டிச்சேரி மக்களின் எளிய வாழ்க்கை தத்துவம். 

‘துரை இருக்காரா?’ கையில் வேர்க்கடலை கொத்துடன் கேட்டான் மாரி.

துப்பாக்கியை மாரி நோக்கி திருப்பி ‘சுட்டு விடுவேன்’ என்றான் ஃபிரெஞ்சு படை வீரன். 

‘சீக்கிரம் எறங்கி வா துரை’ கூவினான் மாரி.

துப்பாக்கிகளும் வெடி மருந்துகளும் நிறைந்த பழைய ஆயுதக்கிடங்கின் மேலிருந்தது கியோமின் அப்சர்வேட்டரி அறை. 

‘ஒரு ஓட்டை குழாய வெச்சுகிட்டு வானத்த பாக்குற இந்த பயலுக்கு தெனமும் கறிவிருந்து, ஒயின்,  ராஜ உபச்சாரம். துப்பாக்கி தூக்குற படை வீரனுக்கு மரியாத இல்ல. ஒரு நாள் இந்த இடத்தை வெடிகுண்டு வெச்சு தகர்க்க போகிறேன் பார்’ என்றான் ஃபிரெஞ்சு படை வீரன்.

கூச்சல் கேட்டு கீழே இறங்கி வந்தார் கியோம்.

‘பச்ச மல்லாட்ட துன்றியா துரை? இப்ப தான் புடுங்கினது. பால் மாறி இனிக்கும்’. என்றான் மாரி.

‘வேண்டாம் மாரி. வா ஒரு காலை நடை போவோம். அப்படியே ஞானமுத்துவை சந்திக்கலாம்’ என்றார் கியோம்.

புதுவை கடற்கரை – Clicked by ‘Vettri Raja’ 

அவர்கள் இருவரும் கடற்கரை மணலில் நடந்தனர். சாலைகளில் பெண்கள் நுங்கு, வெள்ளரி, மீன்கள் விற்றனர். சோலைகள் சூழ்ந்த இடது புறத்தில் மக்கள் பதநீரும், தென்னங்கள்ளும் குடித்தனர். வலது புறம் சிலர் கடலில் மலம் கழிப்பதை பார்த்து முகம் சுளித்தார் கியோம்.

‘தூப்ளே கவர்னரும் ஆனந்த ரங்கரும் ஓலைத்தடுப்பு சட்டம் போட்டாங்க. ஆனாலும் சில நாயிங்க இன்னமும் கடல்ல தான் குண்டி கழுவுது.’ என்றான் மாரி.

‘இயற்கையை நாம் சரியாக பாதுகாக்க வேண்டுமல்லவா?’ என்றார் கியோம்.

சிறிது தூரத்தில் செங்கழுநீர் அம்மன் கோவில் வந்தது. 

‘சேங்கேணியம்மா தாயே!’ வாசலில் இருந்தே கையெடுத்து கும்பிட்டான் மாரி.

தாமரை நிறைந்த குளத்தை சுற்றி ஏராளமான வெண் கொக்குகள். பல ஏக்கர் பரப்பளவில் வாழைத் தோப்புகள். வீதியெங்கும் பழ வாசனை. இலவ மரங்களின் காய்கள் வெடித்து பஞ்சுகள் பறந்தன. பச்சைக்கிளிக் கூட்டம் எழுப்பிய பேரோசை காதை கிழித்தது. 

‘துரை. அங்க பாரு யானை மூஞ்சி மரம்.’

‘மரத்தை மறைத்தது மாமத யானை’ ஒரு பண்டாரம் சத்தமாய் திருமந்திரம் ஓதிக்கொண்டிருந்தது.  

‘புள்ளயாரப்பா’ என்றபடி  தோப்புகரணம் போட்டான் மாரி.

அங்கிருந்து மதராசபட்டினம் ராஜபாட்டையை பிடித்து மீண்டும் பாண்டிச்சேரி நோக்கி நடந்தனர். ஊருக்குள் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் அருகருகில். 

‘அரியும் ஹரனும் ஒன்னு. அறியாதவர் வாய்ல மண்ணு.’ என்றான் மாரி.

அக்ரஹாரத்துக்கு பக்கத்து தெருவில் ஞானமுத்துவை தேடினார்கள். 

‘அவன் சிங்கிடி கோயிலுக்கு ஒரு வேலையா போய்ட்டானே’ என்றாள் ஞானமுத்துவின் தாய்.

‘சிங்கிடி ரொம்ப தூரம் துரை’

‘குதிரையில் போகலாம் வா’

‘எனக்கு குதிர ஓட்ட தெரியாதே’

‘எனக்கு தெரியும். நீ வழி காட்டு.’

இருவரும் கடலூர் திசையில் இருந்த சிங்கிரிக்குடி நரசிம்மர் கோவிலுக்கு குதிரையில் சென்றனர். கியோமுக்கு தமிழக பக்தி மார்க்கமும், ஏராளமான கடவுள்களும், சடங்குகளும் வியப்பை அளித்தது. தமிழக மரபின் சரடுகள் பண்டிகை கொண்டாட்டமாய் அவர்களது வாழ்வியலில் பின்னி பிணைந்து இருப்பதை கண்டார். பழைய பஞ்சாங்கம் மூலம் பௌர்ணமி, அமாவாசை, சந்திர கிரகணம், சூரிய கிரகணம் யாவற்றையும் துல்லியமாய் கணித்து விடுகிறார்கள். கியோமுக்கு பிராமணர்களுடன் அணுக்கமாகி வானியல் சாஸ்திரத்தை பெறுவதும், சமஸ்க்ருத மொழியை கற்பதும் தடையாக இருந்தது. பிராமணர்களுக்கு வேலை செய்த ஞானமுத்துவை மாரிதான் அறிமுகம் செய்து வைத்தான். 

‘இங்கு ஏன் வந்தீர்கள்?’

கோவிலுக்குள் நுழைய முயன்ற இருவரையும் தடுத்து நிறுத்தி அருகிலுள்ள குடிலுக்கு அழைத்து சென்றான் ஞானமுத்து. 

‘டேய் ஞானமுத்து, அடுத்த மாசம் கிரகணம் வந்து கவ்வ போவுதாம். உன்னால தேதி சொல்ல முடியுமா?’ என்றான் மாரி.

‘நானே ஒரு கத்துக்குட்டி. முயற்சி பண்றேன்.’ ஞானமுத்து சில மந்திரங்களை மனதுள் முனகினான். ஓலைச்சுவடிகளை வாசித்தபடி சோழிகளை உருட்டினான். அரை மணி நேரம் கழித்து கிரகண தேதியையும் நேரத்தையும் கூறினான். 

கியோம் மிரண்டு போனார். அறிவியல் கணக்குகள் மூலம் பல நாட்களாக மூளையை கசக்கி அவர் கண்டடைந்த கிரகண தேதியை ஞானமுத்து அரை மணி நேரத்தில் துல்லியமாய் கூறிவிட்டான்.

‘இந்த வித்தையை எனக்கு கற்று தர முடியுமா?’ என்றார் கியோம். 

‘இவன் வெறும் அம்பு. எய்தலின் நோக்கத்தையும் திசையையும் தீர்மானிப்பது அம்பு அல்ல.’ கர்ஜித்தபடி ஒரு உருவம் குடிலுக்குள் நுழைந்தது. அடர்ந்து நீண்ட வெண் தாடி. ஜடா முடி. மின்னிய விழிகளால் கியோமை உற்று நோக்கியது.

‘அய்யா சாமி. என்னை மன்னிக்கணும்.’ நரசிம்மர் காலில் விழுந்தான் ஞானமுத்து.

‘நான் கியோம். வானியல் விஞ்ஞானி. இந்திய வானியல் சாஸ்திரங்களை கற்க விரும்புகிறேன். பிராமணர்கள் ஏன் இந்த ஞானத்தை பொது மக்களுக்கு சொல்லித் தருவதில்லை?’ 

கியோமின் கேள்வி நரசிம்மரை சீண்டியது. அவர் உக்கிரத்துடன் பதிலளித்தார்.

‘யேசு பிறப்பதற்கு முன்பே உலகம் உருண்டை என்று ஐரோப்பா கண்டுபிடித்து விட்டது. 

ஆனாலும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சூரியன் தான் பூமியை சுற்றுகிறதென்றும் ஏன் நம்பினீர்கள்? நவீன அறிவியலை பொதுவெளியில் சொன்னவர்களை ஏன் உயிருடன் எரித்து கொன்றீர்கள்? கலீலியோவை கைது செய்து வீட்டுச்சிறையில் அடைத்தது நினைவில்லையா? ஞானத்தை எதிர்கொள்ளும் பக்குவம் மானுடத்துக்கு உண்டா என்ன? உண்மையை நடுவீதியில் உரக்க கூவினால் என்ன நிகழுமென்பது உங்களுக்கு தெரியாததா? 

கியோம் மெளனமானார்.

‘கற்றுத்தருபவர் கடவுளுக்கும் மேலானவர். குரு சிஷ்யர்களிடம்  பிரச்சினை இல்லை. நடுவிலே அரசியல் சூழ்ச்சி செய்கின்ற அரைவேக்காடு ஜென்மங்களால் உருவாகிறது சிக்கல்.’

‘புரிகிறது. மன்னிக்க வேண்டும்.’ என்றார் கியோம்.

கியோமுக்கு இந்திய வானவியல் சித்தாந்தம் மற்றும் ஜோதிடம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினார் நரசிம்மர். சித்தாந்தம் என்பது கணிதவியல், வானவியல் நிபுணர்களுக்கு. கரணங்கள் கடைநிலை ஜோதிடர்களுக்கு. இந்த இரண்டு புள்ளிகளை இணைக்கும் தந்திரங்களை எடுத்துரைத்தார். திருவாரூர் தரவுகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற சூட்சுமத்தை உடைத்தார்.

கிட்டதட்ட ஒன்றரை ஆண்டு காலம் பாண்டிச்சேரியில் கழித்த பின், கியோம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஜூன் 1769 வந்தது. கியோமின் திட்டத்தை கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் மதராஸ பட்டினத்திலிருந்து புதிய டெலஸ்கோப் ஒன்றை பரிசாக அனுப்பி வைத்தனர். ஜூன் நாலாம் தேதி பாண்டிச்சேரி ஃபிரெஞ்சு கவர்னர் கியோமுக்கு விருந்தளித்தார். அன்றிரவு கவர்னர் அப்சர்வேட்டரி சென்று டெலஸ்கோப்பில் ஜூபிட்டர் கிரகத்தை கண்டு களித்தார். ஜூன் ஐந்தாம் தேதி அதிகாலை. மிகவும் அனுகூலமாய் துவங்கிய சீதோஷ்ண நிலை. ஆனால் கதிரவன் உதித்தவுடன் துரதிர்ஷ்டவசமாக பெரிய மேகம் ஒன்று தோன்றி வெள்ளிக்கோள் இடைநகர்வு தரிசனத்தை முழுவதுமாய் மறைத்தது. மனம் உடைந்து போனார் கியோம்.  பத்து வருட முயற்சிகள் வீணாகி போனதை எண்ணி, தோல்வியின் துயரத்திலிருந்து மீள முடியாமல், பித்தனைப் போல பிதற்றினார். உணவு தவிர்த்து உறக்கம் தொலைத்து உடல் மெலிந்தார். பாண்டிச்சேரியை விட்டு செல்ல முடிவெடுத்தார். ஞானமுத்துவும் மாரியும் அவரை தடுக்க முயன்று தோற்றனர். 1769 செப்டம்பர் மாதம் கிளம்பி மூன்றாவது முறையாக மொரிஷியஸ் தீவுக்குள் நுழைந்தார். அங்கே அவர் சேகரித்து வைத்திருந்த Herbarium, ஆய்வு கட்டுரைகள், பயணக் குறிப்புகள், நினைவுப் பரிசுகளுடன் கப்பலேறி ஃபிரான்ஸ் நோக்கி புறப்பட்டார்.

கப்பலில் காய்ச்சல் அதிகரித்து கியோமின் உடல் நெருப்பாய் கொதித்தது. வாந்தியும் வயிற்றுப்போக்கும் அவரது உடல்நிலையை மோசமாக்கி  பார்வைக்கு எல்லாமே இரண்டாக தெரிந்தன. இரண்டு சூரியன். இரண்டு நிலா. இரண்டு புயல். அட்லாண்டிக் கடலில் அமைதியாய் உருவான புயல் வலுவடைந்து, அதன் சூறாவளிக் காற்று கப்பலை தாக்கியது. நிறுத்தாமல் பெய்தது பேய்மழை. ஆழிப்பேரலைகள் ஆதிசேஷ நாகமாய் சீறியெழந்து கப்பலை இடைவிடாமல் கொத்தின.  இந்த முறை பதட்டங்கள் ஏதுமின்றி புயலின் ஆட்டத்தை ஆனந்தமாய் வேடிக்கை பார்த்தார் கியோம். சிங்கிரிக்குடியில் நரசிம்மர் கூறிய பாற்கடல் கதையை மனம் அசைபோட்டது. காற்றின் விசை கூடி பலமாய் தாக்க பாய்மர கட்டைகள் முறிந்து உடைந்தன. மாலுமிகள் கடலில் வீசப்பட்டு இறந்தனர். கேப்டனை காணோம்.  கியோமின் டெலஸ்கோப்புடன் அவர் பத்து வருடம் உழைத்து சேகரித்த பொருட்கள் யாவும் பறந்து சென்று கடலில் மூழ்கின. வேகமாய் வந்த ஒரு கட்டையின் ஆணி கியோமின் வலது காலை கிழித்து குருதியில் நனைத்தது. அவரது சிந்தை மயங்கி காட்சிகள் பிழையாகி கடலும் வானும் ஒன்றானது. இது திரைகடலா? பாற்கடலா? சாவுக்கு பயந்து ஓடுகின்ற இந்த மாலுமிகளில் தேவர்கள் யார்? அசுரர்கள் யார்? நாவில் உப்பு கரிக்கும் கடலின் துளி அமிர்தமா? விஷமா? கேப்டன் இல்லாத கப்பலை இயக்க முயன்று சறுக்கினார் கியோம். உடைந்து விழுந்த மரக்கட்டை ஒன்றை இறுகப் பற்றிக்கொண்டார். ஞானமுத்து கற்பித்த திருக்குறள் ஒன்று நினைவு வர அதை மனதுள் முனகி ஜெபித்தார். “பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவன் அடிசேரா தார்”

பல மாதங்களாய் வெட்டப்படாத தலைமுடி. அடர்ந்து வளர்ந்து முகத்தை மறைத்த தாடி. வற்றிய உடலும் கிழிந்த ஆடையுமாய் கியோமின் கட்டை ஸ்பெயின் தேசத்தின் கரை ஒதுங்கியது. இதற்கு மேல் கடல் பிரயாணம் செய்ய திராணியற்று ஸ்பெயின் நாட்டின் நிலம் வழியாகவே பயணித்து ஃபிரான்ஸ் மண்ணை 1771 மிதித்தார். 35 வயதில் துவங்கிய கியோமின் பயணம் 46 வயதில் முடிவடைந்தது. ஊரில் அவரை யாருமே அடையாளம் காண முடியவில்லை. கியோம் இறந்துவிட்டதாக கருதி அவரது மனைவி வேறொரு திருமணம் செய்து கொண்டார். உறவுகள் அவரது சொத்துகளை விற்று சூறையாடி விட்டனர். நண்பர்கள் அவரது ஆய்வு கட்டுரைகளை தங்கள் பெயரில் பிரசுரித்து அவரது பதவியை அபகரித்து விட்டனர். கியோமின் மரண சான்றிதழை அவருக்கே தந்தனர். கியோம் சொன்ன எதையுமே நம்ப மறுத்து, அவரை சாத்தான் என்று கூறி  விரட்டி அடித்தனர். பாரிஸின் நீதிமன்ற வீதிகளில் பிச்சைக்காரனாய் அலைந்து திரிந்த கியோமின் கதை கடைசியில் மன்னர் 15ஆம் லூயி சபைக்குள் நுழைந்தது.

முகம் வற்றி, வயிறு ஓட்டி, உருக்குலைந்து, கடல் பகுதிகளின் பிசுபிசுப்பான உப்புக்காற்று தீண்டி வயதான தோலுடன், எலும்புக்கூடு போல் வந்து நின்ற கியோமையும், அவரது கண்களில் மின்னிய ஒளியினையும் உற்று நோக்கினார் மன்னர்.

மன்னர் கையசைத்ததும் பேசத் தொடங்கினார் கியோம்.

‘மன்னவனுக்கு வந்தனம். சைபீரியா செல்ல விரும்பிய எனது வேண்டுகோளை மறுத்து பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தீர்கள். நம் சிலுவையை, நாம்தான் சுமக்க வேண்டும் என்று சொன்னீர்களே, நினைவிருக்கிறதா, மன்னா?பாண்டிச்சேரி சென்று வந்து விட்டேன். பதினோரு ஆண்டுகளாய் என் சிலுவையை சுமந்து அலைகிறேன். இனிமேல் இந்த சிலுவையை சுமப்பதற்கு என்னிடம் தெம்பு இல்லை. இழப்பதற்கு இனி என் உயிர் மட்டுமே எஞ்சியுள்ளது. மன்னரிடம் கேட்க விரும்புவது ஒன்று மட்டும்தான். மன்னிப்பு. நீங்கள் ஆணையிட்டு அனுப்பிய காரியம் கைகூடவில்லை. வெறும் கையோடு வந்து இங்கு நிற்கவே கூசுகிறது. என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.’ என்று மண்டியிட்டார் கியோம்.

‘கேட்பது கிடைத்துவிட்டால், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், வாழ்விலே சுவாரசியம் இருக்குமா, கியோம்?’ மன்னர் பதினைந்தாம் லூயி மெலிதாக புன்னகைத்தார்.

பின்னர் குரலை உயர்த்தி சபை நோக்கி பேசினார்.

‘ஒன்று சொல்லட்டுமா? நமது ராஜகுமாரனை சிலுவையில் அறைந்தபோது அவர் தலையில் அணிந்திருந்த முள் கிரீடமானது, பல தேசங்களை சுற்றி தற்சமயம் ஃபிரான்ஸ் மண்ணில் பத்திரமாக உள்ளது. விலைமதிப்பற்ற அந்த முள் கிரீடத்தை பெருஞ்செல்வம் கொடுத்து வாங்கி வந்தனர் நமது முன்னோர்கள். ஒரு சிலுவையை சுமப்பதின் வலியை, முள் கிரீடத்தில் வழிகின்ற குருதியின் துளியை இந்த மண் நன்கு அறியும். ஒரு செயலின் பலாபலன்களை விட செயலின் நோக்கம்தான் முக்கியம். நமது கியோம் நிரபராதி. அவரை ராயல் சயின்ஸ் அகாடமி வானியல் பிரிவின் தலைவராக மீண்டும் நியமிக்கிறேன். இது முடிவல்ல. இனி அவர் செய்ய போகின்ற சாதனைகளின் தொடக்கம். சபை கலையலாம்.’

கியோம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை பிறந்தது. மனைவியின் அன்பும், மகளின் பாசமும் அவரது ஆன்மாவை மீட்டது. அதன் பிறகு வானியல் துறையில் கியோம் கண்டுபிடித்த பல வீண்மீன்கள் மிக முக்கியமானவை. அவரது interstellar objectகளை கியோம் லெ ஜாந்தி objects, Messier Objects (M32, M36,M38), Nebula object (M8) என்றழைக்கபடுகிறது. அவர் விரும்பியது போலவே வீண்மீன்களுக்கு ஒரு கேட்டலாக் உருவாக்கிவிட்டு 67 வயதில் இறந்து போனார். அவர் மறைந்த இரண்டு வருடங்களில் ஃபிரெஞ்சு புரட்சி வெடித்தது. உழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து அறிவுத்துறைகள் தேவையற்றது என்று தீர்மானித்தனர். ராயல் சயின்ஸ் அகாடமியின் வானியல் அப்சர்வேட்டரியை குண்டு வைத்து தகர்த்தனர். அறிவியல் நிபுணர்களை கொன்று குவித்தனர். நல்ல வேளை. புரட்சியின் பெயரால் நிகழ்ந்த அட்டூழியங்களையும் கோமாளித்தனங்களையும் காண்பதற்கு கியோம் லெ ஜாந்தி  அப்போது உயிருடன் இல்லை.

இன்று நிலாவில் உள்ள ஒரு பள்ளத்துக்கு லெ ஜாந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையும் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதானே? இனி நீங்கள் நிலாவை பார்க்கும் பொழுதோ  அல்லது வாழ்வின் மேடு பள்ளங்களில் சிக்கி தவிக்கும் பொழுதோ, உங்களுக்கு கியோம் லெ ஜாந்தியின் பயணங்கள் நினைவு வரலாம். இந்த பிரபஞ்சத்தில் நாம் அவதரிக்கும் பல பிறவிகளில் தோன்றுகின்ற இன்பமும் துன்பமும், இரவும் பகலும், வெற்றியும் தோல்வியும், ஞாபகமும் மறதியும், உடலும் அதில் ஒட்டியிருக்கும் உயிரும், வியாழனும் வெள்ளியும், எதுவும் ஒரு நாள் கடந்து போகும். 

ஆம், இதுவும் கடந்து போகும்.

வெற்றிராஜா

புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.

3 Comments

  1. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும். கியோமுக்கு உடல் வருந்தியதே மிச்சம்! கூலி நமக்கு!
    முயற்சியின் முக்கியத்தை (நிரந்தரத்தை) நன்றாக உணர்த்தும் தொகுப்பு. கியோம் நம் நினைவு வானில் கடந்த விடிவெள்ளியாய் இல்லாமல் நம் முயற்சிக்கு தூண்டுதலாய் இயங்கும் தருவ நட்சத்திரமாய் நின்று பணியாற்ற செய்த வெற்றிராஜாவின் கட்டுரை அருமை.
    பல வரலாற்று கூறுகளை செவ்வன ஆராய்ந்து அவற்றை கதையின் ஒட்டத்தோடு இணைத்து அமைந்த நடை, புருவம் உயர்த்த வைத்தது. நரசிம்மர், ஞான மத்து, மாரி பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டவையா அல்ல வரலாறா?
    கியோமை திருக்குறள் கூறி முனுமுனுக்க வைத்தது அருமை.
    பாண்டிச்சேரியின் வரலாற்று கதையாக இந்த கட்டுரை எளிய நடையில் அமைந்தது சிறப்பு.
    மல்லாட்டையும் பாண்டிச்சேரியும் எப்படி வழக்கில் இருந்து விலகாதோ அதுபோல வெற்றிராஜாவும் கதையநடையும். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  2. எனக்கு வரலாறு மற்றும் பயணத்தில் போதிய அறிவு இல்லாததால், இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரையை இரண்டு முறை படித்தேன். அதன் பிறகு நான் புரிந்துகொண்டேன், இந்த கட்டுரையின் எழுத்தாளர் கியோமியின் பயணத்தின் பல அற்பமான விவரங்களை சேகரிப்பதில் நிறைய முயற்சிகளை எடுத்துள்ளார். இந்தக் கட்டுரையிலிருந்து நான் மிகவும் வியப்படைந்தேன் மற்றும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். திரை கடல் தேடியும் திரவியம் தேடு, இது கியோமியின் பயண அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட எளிய சொல் அல்ல. நம் சிலுவையை நாம்தானே சுமக்க வேண்டும். உண்மையில் அற்புதமான மற்றும் விருப்பமான வார்த்தை இது நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பொருந்தும். இந்தக் கட்டுரையின் எழுத்தாளர் வெற்றி ராஜா, கியோமியின் அனுபவத்தின் மூலம் பாண்டிச்சேரியின் உண்மைத்தன்மையையும் அழகையும் நமக்குக் காட்டியிருக்கிறார், இதுபோன்ற ஒரு புதுமையையும் அனுபவத்தின் நுணுக்கங்களையும் கொண்டு வந்ததற்கு நன்றி வெற்றி ராஜா. இனி வரும் நாட்களில் இது போன்ற ஆழமான மற்றும் அற்புதமான கட்டுரைகளை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  3. This work of yours beautifully reminds me of Richard Bach, especially his Jonathan Livingston Seagull. Just as Bach seamlessly weaves together themes of flight and spirituality, you’ve masterfully intertwined astronomy with profound reflections on life. The meticulous detailing in your narrative elevates it to a whole new dimension. I am not sure whether it’s me or it’s the actual intent, I love the connections across the article like:
    ‘மரத்தை மறைத்தது மாமத யானை’ ஒரு பண்டாரம் சத்தமாய் திருமந்திரம் ஓதிக்கொண்டிருந்தது. …..
    “ஆனால் கதிரவன் உதித்தவுடன் துரதிர்ஷ்டவசமாக பெரிய மேகம் ஒன்று தோன்றி வெள்ளிக்கோள் இடைநகர்வு தரிசனத்தை முழுவதுமாய் மறைத்தது.”

    Love to see more from you in 2025 Raja.

உரையாடலுக்கு

Your email address will not be published.