
செருக்கெனும் நஞ்சும் அழித்தருள் தெய்வமும்
ஒருங்குறை உளமிது உள்ளொளி பெருக்குவாம்
நாகத்துறை ஐசுவரிய சித்தர்
அந்த வெள்ளிக்கிழமை தனக்கு மிகுந்த தலைவலியைத் தரப்போகும் நாளாக இருக்கப் போகிறது என்று காவல் ஆய்வாளர் பார்த்திபன் அறிந்திருக்கவில்லை. காவலர் குடியிருப்புப் பகுதியில் உள்ள தன் வீட்டில் வழக்கம் போல காலை ஏழு மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளித்து, தன் குலதெய்வமான இசக்கி அம்மனுக்கு தீபம் காட்டிக் கொண்டிருந்தபோதுகூட உற்சாகமான மனநிலையில்தான் இருந்தார். கொமாரபாளையத்தில் வெள்ளிக்கிழமை என்பது வாரத்தின் கூலி நாள். சிறு தறிக்கார முதலாளிகளும், மார்க்கெட்டில் காய்கறி, மீன் கடை வைத்திருப்பவர்களும், தங்களது அன்பளிப்புகளோடு காவல் நிலையத்துக்கு வந்து அவரிடம் சமர்ப்பிக்கும் நாள். தேவியைத் துதிப்பதைச் சற்றே நிறுத்தி, தலையை சற்றே திருகலாகச் சுழற்றி, “என்ன இன்னுமா டிஃபன் தயாராகலை?” என்று அடுக்களையில் உழன்று கொண்டிருந்த வீட்டம்மாளிடம் அதட்டலாகக் கேட்டார். அதற்குப் பதில் போல, உள்ளிருந்து ஒன்றிரண்டு பாத்திரங்கள் உருளும் ஒலி கேட்டது.
கட்டில் மேல் அமர்ந்து, முன்னால் ஸ்டூலில் வைக்கப்பட்டிருந்த காலையுணவைக் கண்டதும் சுர்ரென்று ஏறியது ஆய்வாளருக்கு. தட்டில் உப்புமாவும், கெட்டிச் சட்டினியும் வைக்கப்பட்டிருந்தன. “ஏன் மாவு இல்லையா?” என்றார் எதிரில் நின்ற மனைவியிடம். அவர் குரலில் கோபமும், ஏக்கமும் கலந்திருந்தன.
“இல்லீங்க. நேத்து சாயங்காலம் அண்ணாச்சி கடையில போய்க் கேட்டேன். மாவு தீர்ந்துடுச்சுன்னு சொன்னாங்க. இன்னிக்கு வாங்கி வைச்சுடுறேன்.”
“ஏன் வீட்டில அரைக்க வேண்டியதுதானே?” என்றார் எரிச்சலோடு. வீட்டு கிரைண்டர் பழுதாகி விட்டதை ஒரு கணம் மறந்து விட்டார். கிரைண்டர் நன்றாக அரைத்தபோது, தினமும், இட்லி, தோசை கிடைத்துக் கொண்டிருந்தது. மேலும் கடை மாவு, வீட்டு மாவைப் போல் ருசியாக இருப்பதில்லை. மனைவியை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தார். துப்பாக்கி சுட்டவுடன் என்னேரமும் எழும்பிப் பறந்து போகப்போகிற தடகள வீரனைப் போல நின்று கொண்டிருந்தாள். அவருக்குள் எரிச்சல் பொங்கிக் கொண்டு வந்தது. இப்போழுதெல்லாம் அவளைக் கண்டாலே வெறுப்பு உடலெங்கும் பரவுகிறது. தட்டை எடுத்து அவள் தலையில் அப்படியே கவிழ்த்து விட்டால் என்ன என்று தோன்றியது. அவளும், அவளது கசங்கிய புடவையும்! எப்போ பார்த்தாலும் வியர்வை வழியும் முகமும், அக்குளும். அந்த மண்டை மூக்குக்கு அலங்காரமாக மூக்குத்தி வேறு.
“போ, போயி சக்கரை எடுத்துட்டு வா,” என்றார். சிறுவயதிலிருந்து அவருக்கு ஏற்பட்ட பழக்கம், உப்புமாவுக்கு சக்கரை தொட்டுக் கொள்ளுவது.
மனைவி அடுக்களைக்குள் திரும்பிய ஒரு கணம், ஆய்வாளர் தன் மனதையே ஒரு கணம் ஆராய்ந்து பார்த்தார். திருமணமான புதிதில் நாம் இப்படி இல்லையே. மோட்டார் சைக்கிளில் அவளைப் பின்னால் வைத்து ஊரைச் சுற்றியபோதும், உறவினர், உடன் வேலை செய்வோர் இல்ல நிகழ்வுகளில் தனக்குச் சில அடிகள் பின் தங்கி அவள் நடந்து வர, முகத்தில் பெருமிதப் புன்முறுவலுடன் கம்பீரமாக நடைபோட்டு வலம் வந்தபோதும் கர்வமாகவும், மிதப்பாகவும்தானே இருந்தது. பையன் பிறந்தபிறகுதான் மனைவி மீதிருந்த கவர்ச்சி குறைந்து கொண்டே வந்தது. இப்போது அவன் வளர்ந்து, படித்து கோயம்புத்தூரில் வேலையில் இருக்கிறான். மகள் இந்த வருடம் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டால் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட வேண்டியதுதான். இருவரும் இப்போதே கிட்டத்தட்ட தனியாகத்தான் வாழ்ந்து வருகிறோம். இருப்பினும் திருமணமான புதிதில் இருந்த அதே உல்லாச வாழ்வு இப்போது சாத்தியமா என்ன? அதற்கு வயது குறைந்த, வளப்பமான இன்னொரு பெண்ணைச் சேர்த்துக் கொண்டால்தான் உண்டு. காவல் ஆய்வாளர் பதவியில் இருந்து கொண்டு ரகசியமாகப் பெண் தொடர்பு வைத்துக் கொள்வதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா என்ன? ஒருவேளை இவள் மண்டையைப் போட்டால் நாம் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு நாம்தான் இவளைப் போட்டுத் தள்ள வேண்டும். இந்த எண்ணம் மனதில் ஓடியவுடன் திடுக்கிட்டு உடல் பதறிவிட்டார் பார்த்திபன். சே! என்ன எண்ணம் இது, என்று தன்னையே கடிந்து கொண்டார்.
மனைவி வைத்த சர்க்கரையில் ஒரு விள்ளல் உப்புமாவைத் தொட்டு வாயில் போட்டுக் கொண்டார். அவரது கட்டுப்படுத்துதலையும் மீறி அவருக்கு மனைவி மீது சொல்லொணாத சினம் பீறிட்டு எழுந்தபடி இருந்தது. நிமிர்ந்து பார்த்தபோது அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. என்ன என்று கண்களை ஏறிட்டுக் கேட்டார்.
“ஸ்வேதா… அப்ளிகேஷனுக்கு ஒரு இரண்டாயிரம் ரூவா வேணும்னு கேட்டாங்க,” என்றாள். சொற்கள் தொண்டைக்குள் அழுத்தப்பட்டு, சரியாக அலைவரிசை அமையாத வானொலி நிலையத்தின் ஒலி போல பிசிறடித்தபடி வந்தன.
“ஏய்! நான் உங்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன். டிகிரியை முடிச்சதுக்கப்புறம் வீட்டில கெடக்கட்டும். ஒரு பையனப் பாத்து ஆறே மாசத்துல கல்யாணம் பண்ணி அனுப்பிறலாமுன்னு.”
“புள்ள ஆசைப்படறா, மேல படிக்கணுமுன்னு…”
“அதெல்லாம் போதும். டிகிரி பத்தாதா. சண்முகம் பொண்ணு டிகிரிதானே முடிச்சா. இப்போ அமெரிக்காவிலே இல்லை?”
“அது அவ கல்யாணம் பண்ணி அங்கே போயிட்டா.”
“இவளுக்கும் அப்படியே பண்ணுவோம். அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ ஒரு பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் குடுத்துருவோம். புள்ள நல்லாருப்பா.”
“எங்க? சண்முகம் பொண்ணு அங்க கஷ்டப்படுறததான் அவன் பொண்டாட்டி என்கிட்ட கதகதயா சொல்றாளே. வேலைக்குப் போய்ட்டு வந்து, புள்ளைங்களைப் பாத்துகிட்டு, அவ மாமனார், மாமியாருக்கு சவரட்டனை பண்ணி…”
“ஏண்டி, பொம்பளைக்கு அதானடி வேலை. வேற என்ன பண்ணனுமாமாம் அவளுக்கு?”
“ஏங்க, நம்ப புள்ள காலேஜில டீச்சர் வேலைக்குப் போகணும்னு ஆசைப்படுதுங்க.”
உப்புமா தட்டை எடுத்து எதிர்ச்சுவற்றில் விட்டெறிந்தார். தட்டு சுவற்றில் அறைந்த வேகத்தில் அவர் மனைவி அதிர்ந்து பின்வாங்கினாள். அது உருண்டு படுக்கையறையை நோக்கிச் சென்றது. உப்புமா சுவற்றிலிருந்து வேண்டா வெறுப்பாக வழிந்தது.
“இப்பிடியே பேசீட்டிருந்தீங்கன்னா ஆத்தாளையும், மகளையும் வெட்டி ஆத்துல உட்டுருவேன்,” என்று கத்தினார். கோபத்தில் உடல் முழுக்கச் சூடேறி வியர்த்து விட்டது. அவர் மனைவி அடுக்களைச் சுவற்றுக்குப் பின்னால் நின்று விசும்பும் ஒலி கேட்டது.
தன் இடையில் ரிவால்வரை எடுத்து மாட்டிக் கொண்டபோது, சற்றுமுன் அவளைக் கொல்லும் எண்ணம் தனக்குள் தோன்றியது நினைவில் தோன்றி அவரது உடல் சற்றே நடுங்கியது. மூன்று மாதங்களாகவே இவளோடு இதே ஓரியாட்டம்தான். முதலில் ராமர் கோயில் சோதிடரிடம் பெண்ணின் ஜாதகத்தைக் கொடுக்க வேண்டும்; வெளிநாடோ, உள்ளூரோ ஒருத்தனைப் பார்த்து விரைவில் முடித்து விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். காலையில் எழுந்தபோதிருந்த உற்சாகமான மனநிலை வடிந்து, மனம் காரணம் புரியாத பதற்றத்துடன் அலைபாயத் துவங்கியிருந்தது.
* * *
தன் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்தை அடைந்தபோது, வழக்கத்துக்கு மாறாக அவ்விடம் களையிழந்து காணப்பட்டதைப் போல் தோன்றியது பார்த்திபனுக்கு. வழக்கமாக வெளியில் அணிவகுத்து நிற்கும் சீஸ் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஏதுமில்லை. வலதுபக்கச் சுவரின் ஜன்னல் கண்ணாடி விரிசல் விட்டிருந்ததும், உத்தரத்தில் தொங்கிய நூலாம்படைகளும் கூட அவர் கண்ணில் பட்டு மனதின் சலனத்தை ஆழப்படுத்தின. இருந்த ஐந்து கான்ஸ்டபிள்களில் நாலு பேர் அமைச்சர் வருகைக்கு பாதுகாப்புக்காக முந்தின நாள் இரவே சேலம் சென்றிருந்தனர். வாயிலில் கான்ஸ்டபிள் முகுந்தன் மட்டும் ஒரு ஸ்டூலில் அமர்ந்து தேனீர் குடித்துக் கொண்டிருந்தார். இவரைப் பார்த்ததும் தன் தொண்ணூறு கிலோ தேகத்தை எழுப்பி நின்று விரைப்பாக ஒரு சல்யூட் வைத்து விட்டுப் புன்னகைத்தார்.
“பந்தல் ராஜூ ஏற்கனவே வந்துட்டுப் போயிட்டாருங்க, சார். உங்களுக்காகக் கொஞ்ச நேரம் காத்திருந்தாரு. அப்புறம் சாயங்காலம் வந்து பாக்கறேன்னு சொல்லிட்டுக் கெளம்பிட்டாரு,” என்றார். முகுந்தன் சட்டென்று ஐந்து வயது குறைந்தவர் மாதிரித் தெரிந்தார். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் அவசரமாகச் சவரம் செய்து கொண்டிருப்பார் போலிருக்கிறது. மேலுதட்டில் மழிக்கப்படாத மீசை மயிர்கள் சில தெரிந்தன. மூக்குக்குள்ளிருந்தும் சில மயிர்கள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன.
“ம்!” என்றார், ஒரு ஆய்வாளருக்குரிய அதிகாரத்தோரணையை வரவழைத்துக் கொண்டு. “முகுந்தன், தெரிஞ்சவங்க தவிர யாரையும் உள்ள விட வேண்டாம் கொஞ்ச நேரத்துக்கு. தலை வலிக்கற மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்,” என்றார்.
“சரிங்க, சார். டீ சொல்லட்டுங்களா, சார்,” என்றார் முகுந்தன்.
டீயை வைத்து விட்டு முகுந்தன், “சார் அடுத்த வாரம் பேத்திக்குக் காது குத்து, குடும்பத்தோட வரணும். பக்கத்துலதான் சார், பல்லக்காபாளையம். நம்ம குலதெய்வம்.”
முகுந்தனுக்கும், பார்த்திபனுக்கும் ஒரே குலதெய்வம். “கண்டிப்பா, முகுந்தன். அதான் போன மாசமே வீட்டுக்கு வந்து பத்திரிகை வைச்சுட்டீங்களே!”
முகுந்தன் தருவித்த டீயை உறிஞ்சி முடிப்பதற்குள் கோபால் டெக்ஸ்டைலிலிருந்து சிவராமும், மார்க்கெட்டிலிருந்து பழக்கடைகள் சார்பில் முருகானந்தமும் அன்பளிப்புகளோடு வந்து, சென்றார்கள். வழக்கமாக இவர் இருக்கை முன் அமர்ந்து அவரிடம் அளவளாவிச் செல்பவர்கள் அன்று அவரது நிலையைக் கருத்தில் கொண்டு லுங்கி பண்டல்களையும், பழக்கூடைகளையும் ஆவண அறைக்குள் சென்று வைத்தவுடன் விடைபெற்றுத் திரும்பி விட்டார்கள். காவல் நிலையத்தில் தலைக்கு மேல் மின்விசிறிகள் சுழலும் ஒலியும், ரைட்டர் நமச்சிவாயம் முதற் தகவல் அறிக்கைகளில் கிறுக்கும் ஒலியும், பார்த்திபன் மனதைச் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தன.
மெல்லத் தலை தூக்கிச் சாலையை நோட்டமிட்டார். பதினோரு மணி வெயில் தகித்துக் கண்களைக் கூசச் செய்தது. சைக்கிளில் பிளாஸ்டிக் பொருட்களும், பொம்மைகளும் விற்கும் ஒருவன் எழும்பி நின்று சைக்கிளை மிதித்தபடி காவல் நிலையத்தைக் கடந்து போனான். மார்க்கெட்டில் மீன் வெட்டும் சகாயம் இடது கையில் மஞ்சள்பையொன்றைப் பிடித்தபடி நிலையத்தின் வாயிலை அணுகிக் கொண்டிருந்தான். இவன் எதற்கு இப்போது வருகிறான்? வழக்கமாக மீன்கடைக்காரர் சங்கச் செயலாளர் செந்தில்குமார்தானே வருவான்? பார்த்திபன் அவனை நன்றாக உற்றுப் பார்த்தார். அவன் வலது கையில் கருப்பாக எதுவோ தெரிந்தது. அதென்ன கத்தியா? மீன் அறுத்துக் கொண்டிருக்கையிலேயே அவனை இங்கு அனுப்பி விட்டார்களா என்ன? மஞ்சள் பையில் கொண்டு வந்திருப்பதென்ன மீனா? அதையெதற்கு இங்கு கொண்டு வருகிறான்? வீட்டுக்கு அனுப்பி விட வேண்டியதுதானே?
பார்த்திபனின் கட்டளைக்கிணங்க முகுந்தன் சகாயத்தை வாயிலிலேயே வைத்து விசாரித்துக் கொண்டிருந்தார். சகாயம் அவர் பேச்சைக் கேட்காமல் தடதடவென்று நேரே உள்ளே வந்து விட்டான். முகுந்தன் பதறிக் கொண்டே அவன் பின்னாலேயே ஓடி வந்தார்.
“சார். சொன்னா கேட்க மாட்டிங்கறான் சார். உங்களைப் பார்த்தே ஆகணும்கிறான்,” என்றார் முகுந்தன்.
“பரவாயில்லை, முகுந்தன். நான் பேசிக்கறேன். நீங்க வெளிய இருங்க,” என்றார் பார்த்திபன். முகுந்தன் வாயிலிலேயே நின்று, திரும்பி தன் காவற்பணியைத் தொடர்ந்தார். சகாயம் சாவி கொடுத்து முடுக்கப்பட்டவன் போல முன்னேறி உள்ளே வந்தான். கழனித் தண்ணீரில் அலசி உலர்த்தப்பட்டது மாதிரி மங்கலடைந்து வெளுத்திருந்த அவனது கட்டம் போட்ட நீல லுங்கி, சுவற்றில் வடிந்து காய்ந்த மழைநீர் போல அழுக்குத் தீற்றல்கள் தோய்ந்திருந்த அவனது வெள்ளைச்சட்டை, இவற்றிலிருந்து மார்க்கெட்டிலிருக்கும் சகல மீன்களின் வாடையும் குப்பென்று எழுந்து பார்த்திபனை அடைந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தார். உலர்ந்த மரக்கிளை போன்ற உடலை அவர் முன் நிறுத்தி, புகையிலைக் கறை படிந்த புளியங்கொட்டைப் பற்கள் தெரிய புன்னகைத்தான். முகத்தில் பளபளத்துக் கொண்டிருந்த வியர்வையையும் மீறி அவன் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டு கொண்டார்.
“என்ன ஆச்சு, சகாயம்? கடையில எதுவும் பிரச்னையா?” என்றார். ஒன்று விட்ட ஞாயிற்றுக் கிழமைகளில் சகாயம் அவருக்கென்றே பிடித்தமான லோகு, கட்லா மீன்களை வீட்டுச் சட்டியில் வறுக்கும் சைஸ்களில் வெட்டி, அவனே அவரது வீட்டுக்குச் சென்று கொடுத்து வருவான். அந்த வகையில் அவன் பேரில் அவருக்குத் தனிப்பட்ட பாசமிருந்தது.
“தப்பு நடந்து போச்சுங்க சார்,” என்றான் சகாயம். சொன்னபோது அவன் உதடுகள் நடுங்கியதைக் கவனித்தார்.
அவன் கைகளும், கால்களும் கூட நடுங்கிக் கொண்டிருந்தன. கத்தியைப் பிடித்த கையை மஞ்சள் பைக்குள் விட்டு ஒரு பாலிதீன் பையை வெளியே எடுத்தான். உள்ளே உருண்டையாக எதுவோ பாலிதீன் பையை நிறைத்திருந்தது.
“அவளோட வர வர ரொம்ப சடவாப் போயிடுச்சு சார்! இன்னிக்கு ரொம்ப முத்திப் போச்சு. அவளைப் போட்டுத் தள்ளிட்டேன் சார். என்ன மன்னிச்சுடுங்க சார்!” என்று கேவல் மேலிடும் குரலில் சொன்னான். பையை அவர் மேஜையின் மீது வைத்து விட்டு தரையில் குத்த வைத்து அமர்ந்து கொண்டான். கைகளை முகத்தில் அறைந்து கொண்டு, “ஐயோ! ஐயோ!” என்று கதற ஆரம்பித்தான்.
என்ன நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள பார்த்திபனுக்கு மேலும் சில வினாடிகள் தேவைப்பட்டன. அவனது அலறல் கேட்டு முகுந்தன் உள்ளே ஓடி வந்தார். பார்த்திபனுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. சிறுநீர் சட்டென்று முட்டிக் கொண்டு வந்தது. “யோவ், அது என்ன கருமம்னு பாருய்யா!” என்றார், பாலிதீன் பையை நோக்கிக் கைகாட்டி.
முகுந்தன் குத்த வைத்து உட்கார்ந்து அரற்றுகிறவனின் பக்கம் ஒரு சந்தேகப்பார்வையை வீசியபடி பைக்குள் கைவிட்டார். நொதநொதவென்று எதுவோ தட்டுப்பட கையை விலுக்கென்று வெளியே இழுத்துக் கொண்டார். பின் தன் கைக்குட்டையைக் கொண்டு உள்ளிருந்து அதை வெளியே எடுத்தார். அது ஒரு பெண்ணின் தலை.
“ஐயோ, சரசு! அவரசப்பட்டு உன்னக் கொண்டு போட்டுட்டனே!”
அறுபட்டிருந்த கழுத்திலிருந்து இன்னும் பெருகிக்கொண்டிருந்த ரத்தம் ஒழுகத் துவங்கி தரையெல்லாம் சிவப்பானது.
* * *
சகாயத்தை முறைப்படி கைது செய்து, முன்னூற்றி இரண்டில் வழக்குப்பதிவு செய்து, அவனை கொமாரபாளையம் காவல் நிலையத்தில் வைத்திருப்பது பாதுகாப்பில்லை என்பதனால் முகுந்தனை காவல் நிலையத்தில் விட்டு விட்டு, கொலையாளியை விலங்கிட்டு ஜீப்பில் அழைத்துக் கொண்டு சேலம் மத்திய சிறைக்குக் கொண்டு போய் சேர்த்து, அங்கிருக்கிற சிறைத்துறை காவல் ஆய்வாளரிடம் நடந்தவற்றை விவரித்துவிட்டு வீடு திரும்புவதற்க்கு இரவு பதினோரு மணியாகி விட்டது. பைக்கை விட்டிறங்கி தாழ்ப்பாளிடப்பட்டிருந்த வீட்டின் வெளிகேட்டை அவரே திறந்து உள்ளே சென்று, சாத்தப்பட்டிருந்த வீட்டின் கதவைத் தட்டினார். இரண்டு நிமிடங்களாகியும் உள்ளிருந்து அசைவில்லை. மீண்டும் சில முறைகள் தட்டிப் பார்த்தும் பயனில்லை. வீடு பூட்டப்பட்டிருந்தது தெரிந்தது. எங்கே போயிருப்பாள்? வாயிலிலிருந்த பூத்தொட்டியை சரித்துப் பார்த்தபோது அதனடியில் வீட்டுச்சாவி வைக்கப்பட்டிருந்தது. திறந்து உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே யாருமே இல்லை. அலைபேசியில் முயன்றபோது அவர் மனைவி, மகள் இருவரின் அலைபேசிகளும் அணைக்கப்பட்டிருந்தன.
மூன்று நாட்கள் ஆகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் எவற்றிலும் அவர்கள் இல்லை. அவரது மகன் இன்னும் வேறெங்கெல்லாம் அவர்கள் இருக்கக்கூடுமென்பதை யூகித்து கோயம்புத்தூரிலிருந்து புறப்பட்டு அங்கு சென்று தேடுவதாகச் சொன்னான். பார்த்திபனும் தன் காவல் நிலைய நண்பர்களிடம் சொல்லி ரகசியமாகத் தேட கோரிக்கை வைத்திருந்தார். காட்டுக்குள், கிணற்றுக்குள், பாழடைந்த வீடுகளுக்குள் கண்டெடுக்கப்படும் பிணங்கள் குறித்த தகவல்கள் தன்னுடைய நிலையத்துக்கு வரும்போதெல்லாம் வயிற்றில் கிலியேற்பட்டது பார்த்திபனுக்கு.
* * *
மனைவியும், மகளும் மாயமாகி ஏழு நாட்கள் கழித்து நடந்த முகுந்தன் பேத்தியின் காதுகுத்து வைபவத்தில் ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார் பார்த்திபன். அவர்தான் சகாயம் வழக்கை விசாரிப்பவர். இசக்கி அம்மன் கோயில் ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு காட்டுக்குள் ஏகாந்தமான வெட்டவெளியில் அமைந்திருந்தது.
“இது சும்மா ஓபன் அன் ஷட் கேசு சார். பட்டுன்னு முடிச்சு விடலாம்னு பாத்தா, விமோசனான்னு ஒரு குரூப் வந்து அவனைத் துருவித் துருவி விசாரிக்குது. நாலு நாளா தினம் பத்துமணி நேரம் விசாரணை. நானும் கூடவே உக்காரணும். எப்படா முடியும்னு இருக்கு.”
“என்னதான் சொல்றான்?”
“முத நாள் முழுக்க, ‘அய்யோ என் தங்கத்த கோவத்துல கொண்டு போட்டேனே’ன்னுதான் திரும்பத் திரும்ப புலம்பிகிட்டிருந்தான். இந்த விமோசனா லேடிஸ் கேள்விகளை மாத்தி மாத்தி கேக்குறாங்க. அப்புறம் ஒவ்வொன்னா வெளிய வருது. பய பொண்டாட்டிய ரொம்பப் படுத்தியிருக்கான். தெனம் குடிச்சிட்டு வீட்டுக்குப் போயி எதையாவது காரணத்தைச் சொல்லி அடி உதை. வாசல்ல செருப்பெல்லாம் ஒழுங்கா அடுக்கி வைக்கலன்னு போட்டு ஒரு நாள் மிதிச்சிருக்கான். இதெல்லாம் அவனே சொல்றான். கைக்குழந்தைக்காரி எப்படித் தாங்குவா? போஸ்ட்மார்ட்டம்ல அவள் வயிற்றுக்குள்ள உறுப்பெல்லாம் அடிபட்டு சிதைஞ்சிருக்கறது தெரிய வந்திருக்கு. கேக்க கேக்க ஒவ்வொண்ணா வெளிய வருது. அவன் பொண்டாட்டிய பண்ண சித்திரவதையெல்லாம் தொகுத்தா பெரிய புத்தகமே போடலாம் போலருக்கு.”
“அதான் கொலையே பண்ணிட்டானே. எல்லாத்துக்கும் ஒரு தண்டனைதானே. இப்படி விசாரிக்கறதுல என்ன பிரயோஜனமாம்?”
“ரிபோர்ட் குடுப்பாங்களாம். மத்திய, மாநில அரசின் பெண்கள் பாதுகாப்புத் துறைக்கு. அதில ஒரு அம்மா, பெண்களுக்கெதிரான வன்முறை வீட்டிலதான் ஆரம்பிக்கிதுன்னு கடுங்கோபத்தோட எங்கிட்ட விளக்கறாங்க. சகாயம் மாதிரி ஆளுங்க கொலை பண்ற வரைக்கும் காத்திருந்துதான் தண்டனை கொடுக்கணுமாங்கறது அவங்க கேள்வி. இதுக்கெல்லாம் லோக்கல் போலீஸ்தான் ஒரு வாட்ச் டாக் மாதிரி இருந்து செயல்படணும்னு நமக்கு புத்திமதி வேற. பெண்கள் பாதுகாப்புக்கு இன்னும் கடுமையான சட்டங்கள் வேணும், பெண் கல்விக்கு இன்னும் தாராளமான நிதி உதவி வேணும்னு பெரிய சொற்பொழிவு. கொலைகாரனைக் கையில வைச்சுக்கிட்டு கேசை முடிக்க முடியாத என் நிலைமையைப் பாருங்க,” என்றார். பின் அவரை நோக்கிக் குனிந்து தாழ்ந்த குரலில், “உங்க வைஃப், டாட்டர் எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுதா? நானும் என் சைடு பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.”
பார்த்திபன் முகம் சுரத்திழந்தது. இல்லையென்று தலையாட்டி விட்டு சுற்றிலும் பார்த்தார். புளிய மரத்தின் பின்புறம் ஒரு கும்பல் குத்தவைத்து உட்கார்ந்திருந்தது. டாஸ்மாக் பாட்டில்கள் திறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பட்டுப்புடவையும், ஜொலிக்கும் சுரிதாருமாக சுற்றி அமர்ந்து பேசிச் சிரித்துக் கொண்டிருந்த பெண்களை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். மெருகேறிய, மலர்ந்த முகங்கள். சிரிக்கும் கண்கள். கருணையும், கனிவும் சுரக்கும் பூரித்த உடல்கள். சிலர் கைக்குழந்தைகளை தாலாட்டிய வண்ணமிருந்தனர். ஸ்வேதா வயதுள்ள ஒரு பெண் சற்று தள்ளி ஒரு மரத்தில் சாய்ந்து ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்த பூப்போட்ட சட்டைபோட்ட ஒரு பையனோடு பார்வையாலேயே பேசிக் கொண்டிருந்தாள்.
“உங்களுக்கு ஒரு பாட்டில் எடுத்து வைச்சிருக்கேன் சார்,” என்றார் முகுந்தன். அவர் இவர்களருகில் வந்ததை பார்த்திபன் கவனித்திருக்கவில்லை.
“இல்ல, வேணாம், முகுந்தன். எந்த இடத்தில மொய் எழுதறாங்க?”
“சார் எங்க கெளம்பலாம்னு பாக்கிறீங்களா? இந்தா கறிக்கொழம்பு கொதிச்சிட்டிருக்கு. சாப்புட்டுட்டுதான் போகணும்,” என்றபடி அவரருகில் அமர்ந்தார். பார்த்திபன் நிலையைப் பார்த்து அவர் மேல் மிகுந்த இரக்கமேற்பட்டது முகுந்தனுக்கு.
“இசக்கியம்மனுக்கு வேண்டிக்கோங்க சார். அம்மாவும், பெண்ணும் சீக்கிரமே கெடைச்சுருவாங்க. எங்க போயிருப்பாங்க? எல்லாம் உங்க மேல உள்ள கோபம் தணிஞ்சதும் திரும்பி வந்துருவாங்க,” என்றார்.
“கடசீல அந்த தெய்வம்தான் துணை நிக்கணும். குலதெய்வம் கோவிலுக்கு ஒழுங்கா போறதேயில்ல, முகுந்தன். ஒருவேளை அதுதான் காரணமோன்னு சந்தேகமா இருக்கு.”
“ஆள்தாரை இசக்கி அம்மனுக்கு குடும்பத்தோட வர்றேன்னு வேண்டிக்கோங்க, சார். நாகர்கோயில்கிட்ட பறக்கையில இருக்கு அவ கோயில். நல்ல சக்தி வாய்ந்த அம்மன் சார். உக்கிரமானவளும் கூட. அவ கோபம் தணிக்கற மாதிரி எதாவது படையல் போடறேன்னு வேண்டிக்கோங்க.”
“அம்மனுக்கு எம்மேல கோபம்னு நெனக்கிறீங்களா முகுந்தன்?”
“அதில்லை சார். அப்படி ஒருவேளை இருந்தா நாம ஏன் அதுக்கு இடம் கொடுக்கணும்? தவிர, அம்மா நம்ம தெய்வம் இல்லையா? அவ நாம கேக்கறத கண்டிப்பா நிறைவேத்துவா.”
“முகுந்தன், அது ஏன் எல்லா அம்மனும் உக்கிரமானவங்களாவே இருக்காங்க? ஒருவேளை பொம்பளைங்களுக்கு நம்ம மேல இருக்கற கோபத்தைக் காட்டறதுக்கான கருவியா இந்த அம்மன்ங்கற தெய்வம்?” என்றார் ராதாகிருஷ்ணன் புன்முறுவலுடன்.
“அதென்னமோ தெரியலை சார். அம்பிகாங்கற பொண்ணுதான் எங்க குலதெய்வம் இசக்கியம்மனா மாறினதா ஐதீகம். மூதாதைச் சடங்குக்கு வச்சிருந்த சாப்பாட்டை எடுத்து பசியோடு வந்த துறவிக்குப் பறிமாறிடுறா அந்தப் பொண்ணு. ஆத்துக்குக் குளிக்கப் போய் திரும்பி வந்த புருஷனுக்கு, ‘அதெப்படி சடங்கு முடியறதுக்கு முன்னாடி அப்படி ஒரு அபச்சாரம் பண்ணப்போச்சு’ னு அவ மேல கடுங்கோபம். குழந்தைகளோட சேர்த்து பொண்டாட்டியை அடிச்சு வெளிய துரத்திடுறான். காட்டுக்குள்ள ஓடிப் போய் குழந்தைகளைக் கொண்ணு தன்னையும் மாய்ச்சிக்கிறா சார் அவ. அவளே திரும்பி யட்சிணியா பிறந்ததாகவும், ஏழு ஜென்மங்கள் அதே கணவனுக்கு மனைவியாப் பிறந்து அவனைக் கொண்ணு பழி தீர்த்துக்கிட்டதாகவும் செவிவழிக்கதை. ஆனா நாங்க அவளை எங்களைக் காக்கிற யட்சிணி தேவதையாத்தான் பாக்குறோம். எங்க குடும்பத்தை இயக்கற தேவதை சார் அவ. அதனாலதான் அவ பேர் இசக்கி,” என்றார் முகுந்தன்.
பார்த்திபனுக்கு இந்த மாதிரியான வேண்டுதல்களில் பெரிய நம்பிக்கை இருந்ததில்லை. அன்றாடம் கடவுள் படத்துக்கு ஆரத்தி காட்டிவிடுவது மட்டும்தான் அவர் பக்தியின் எல்லை. ஆனால் இப்போது அவருக்கு முகுந்தனின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் போல் இருந்தது. மனைவியும், பெண்ணும் திரும்பக் கிடைத்து விட்டால் பறக்கை இசக்கியம்மன் ஆலயத்துக்கு வந்து கடா வெட்டுவதாக வேண்டிக் கொண்டார். தன்னைச் சுற்றிலுமிருந்த பெண்களை (அப்போது அங்கிருந்தது பெரும்பாலும் பெண்கள்தாம். கிட்டத்தட்ட எல்லா ஆண்களுமே இப்போது புளியமரத்துக்குப் பின்னால் குழுமி விட்டனர்) மீண்டுமொருமுறை நோட்டமிட்டார். குடிக்கச் செல்லாத கணவனிடம் நாணிக் குனிந்தபடி பேசிக்கொண்டிருக்கும் அந்தப் புதுப்பெண், குழந்தையை மடியில் கிடத்தி, தாலாட்டி உறங்க வைத்துக்கொண்டிருக்கும் அந்தத் தாய், அலைபேசியின் திரைமீது விரல்களால் தாளமிட்டபடி இருக்கும் ஸ்வேதா வயதுள்ள அந்தப் பெண், நெற்றி வியர்வையை வழித்து விட்டு, ‘உஸ்ஸப்பா’ என்றபடி, தாளாத வெயிலுக்கு முந்தானையால் முகத்துக்குக் காற்று வீசிக்கொண்டிருக்கும் அந்த அம்மா (ஒரு சாயலில் அவரது மனைவியைப் போலவே இருந்தாள் அவள்.) எல்லாருமே இசக்கி அம்மனின் வடிவங்களாகத் தெரிந்தனர் பார்த்திபனுக்கு. பார்த்துக்கொண்டே வந்தவரின் பார்வை சூலமும், குழந்தையும் ஏந்தி, காலடியில் ஓர் ஆணை மிதித்தபடி (ஒருவேளை அவன்தான் அவளது முன்ஜென்மக் கணவனோ?) உக்கிரப்பார்வை பார்த்துக்கொண்டிருந்த இசக்கி அம்மனின் திருவுருவத்தின் மீது நிலை கொண்டது. திடீரென்று அவரது உடல் சிலிர்த்துக் கொண்டது.
* * *
இரண்டு வாரங்கள் கழித்து கோயம்புத்தூருக்குச் சென்றார் பார்த்திபன். அவரது மகன் அவரிடம் பேச வேண்டுமென்று அழைத்திருந்தான். நேரில் வரச்சொல்கிறானென்றால் மனைவி, மகள் குறித்த ஏதாவது தகவலாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ஒருவேளை அவளே அவனைத் தொடர்பு கொண்டு தான் இருக்குமிடத்தைத் தெரிவித்திருக்கலாம். அவனோடு சேர்ந்து மனைவியையும், மகளையும் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தபோது பார்த்திபனுக்கு குதூகலமும், குற்றவுணர்ச்சியும் ஒருங்கே ஏற்பட்டன.
வானம் இருண்டிருந்த முன் மதியவேளையில் அவன் காத்திருக்கச் சொன்ன உணவகத்துக்குள் நுழைந்தார். குளிர்காற்றும், காஃபி வாசனையும் அவரைத் தழுவிக் கொண்டன. உயரமான மேஜைகளும், ஸ்டூல்களும், சோஃபாக்களும், மங்கலான மின் விளக்குகளுமாக ஆடம்பரமாக இருந்தது அந்த உணவகம். மெலிதான மேற்கத்திய இசை கூரையிலிருந்து கசிந்து கொண்டிருந்தது. உள்ளே பத்துபேருக்குமேல் கூட்டம் இல்லை. சேவகன் வந்து அவரை ஒரு இருக்கையில் அமரச் செய்தான். பார்த்திபன் அமர்ந்தபடி மகனுக்காகக் காத்திருந்தார். அவருக்கு மூன்று மேஜை தள்ளி ஒரு ஜோடி அமர்ந்து ஐஸ் காஃபி குடித்துக் கொண்டிருந்தது. அந்தப்பெண் தலை குனிந்து அலைபேசியில் ஆழ்ந்திருந்தாள். உட்கார்ந்திருந்தபோதும் அந்த இளைஞன் உயரமானவன் என்பது புலப்பட்டது. நல்ல களையான முகம். வசீகரமான தோற்றம். இப்படி ஒரு பையனை ஸ்வேதாவுக்குப் பார்க்க வேண்டும், பொருத்தம் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டார். அவன் பக்கத்திலிருந்த பெண் கூட ஸ்வேதா மாதிரியேதான் இருந்தாள். அவளது பொன்னிற முடியும், அகன்ற தோள்களும். அவள் அணிந்திருந்த சுரிதார் போலவே தன் மகளிடம் ஒன்று இருக்கிறதோ! அந்தப் பையன் தலைதிருப்பி அவளை பார்த்த பார்வையில் காதலும், பரிவும் இருந்தன. தோளிலிருந்து சரிந்து கிடந்த துப்பட்டாவைச் சற்றே சரி செய்து மேலேற்றி விட்டான். அந்தப் பெண் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவளைப் பார்த்ததும் பார்த்திபன் அதிர்ந்தார். அது அவர் பெண்ணேதான். விலுக்கென்று எழுந்து அவர்களை நோக்கிச் சென்றார்.
“அப்பா, உட்காருங்கப்பா,” என்றாள் ஸ்வேதா. அவள் கண்களில் இருந்த தயக்கத்தையும், அதிர்ச்சியையும் பார்த்தபின் அவளிடம் கத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டார் பார்த்திபன். அவர்களுக்கு முன்னால் இருக்கையில் அமர்ந்தார்.
“அம்மாவும், நானும் கோயம்புத்தூர்லதான்பா இவ்வளவு நாளா இருக்கோம். அண்ணாதான் அவன் ஃபிரண்டு வீட்டுல தங்க வைச்சிருக்கான்,” என்றாள்.
பார்த்திபனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. “இது யாரு? இங்க என்ன பண்றாரு இவரு?” என்றார்.
“அப்பா, இது சம்பத், என் க்ளாஸ்மேட். ஐவிக்கு வந்திருக்கான்.”
“ஹலோ அங்கிள்,” என்றான் சம்பத்.
“எப்ப ரெண்டுபேரும் வீட்டுக்கு வரப்போறீங்க?” என்றார். எவ்வளவு சிரமப்பட்டு குரலில் அதிகாரத்தொனியை வரவழைக்க முயன்றாலும் அவரது தொனி கொஞ்சம் கெஞ்சலாகத்தான் வெளிப்பட்டது.
“அது வந்து, அப்பா. அண்ணன் வந்து எல்லாத்தையும் சொல்வான். அம்மா கொஞ்சம் பயப்படறாங்க.”
“எதுக்கு பயப்படணும்? அவளை ஃபோன் பண்ணச்சொல்லு எனக்கு. அவ ஃபோன் நம்பர் இருக்குதா உங்கிட்ட? இந்த மாசம் குடும்பமா குலதெய்வம் கோயிலுக்குப் போறோம்னு சொல்லு அவகிட்ட.”
சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். சம்பத் தலை குனிந்து கேக்கைக் கிளறிக் கொண்டிருந்தான். ஸ்வேதாவும் தலையைக் குனிந்து கொண்டாள்.
“ஸ்வேது,” என்றார் பார்த்திபன்.
“ப்பா?”
“உன் அப்ளிகேஷன் போட என்னிக்கு கடைசி நாள்?” என்றார்.
உணவகத்தின் கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே அவர் மகன் மோட்டார் சைக்கிளில் வந்து நிற்பது தெரிந்தது. பின்னால் அவரது மனைவி அமர்ந்திருந்தாள். வானம் மெல்லியதாக பூத்தூறல் போட ஆரம்பித்திருந்தது. குலதெய்வம் கோயிலுக்குக் குடும்பமாகச் செல்லப் போகிறோம் என்று சொன்னால் மனைவி குதூகலமாகி விடுவாள் என்று நினைத்துக் கொண்டபோது பார்த்திபன் மனதுக்குள் திருப்தியும், உற்சாகமும் ஏற்பட்டது. உதட்டில் அவரையுமறியாமல் ஒரு புன்னகை தோன்றியது. மகனும், மனைவியும் வண்டியை விட்டிறங்கி உணவகத்துள் நுழைவதை ஆர்வமாகப் பார்த்தபடியே இருந்தார் பார்த்திபன்.

ஜெகதீஷ் குமார்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















மனித மனம் அரூபமானவற்றை அப்படியே புரிந்துகொள்ள இயலாத. நாம் கருத்துக்களை விளக்கினாலும், அவற்றை உள்வாங்கிக்கொள்ள ஏதோ ஒரு வடிவம், ஒரு பெயர், ஒரு கதை தேவைப்படுகிறது. அநீதிக்கு எதிரான குரல் என்பது ஒரு கருத்தாக்கம் – அது மனதில் தொடர்ந்து நிற்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு உருவம் தேவை.
“உள்நின்று உடற்றும்” கதையில் இதைத்தான் பார்க்கிறோம். அநீதிக்கு எதிரான குரல் “இசக்கி அம்மன்” என்ற பெயரில், உருவத்தில் வந்திருக்கிறது. இந்த உருவகப்படுத்தல் வெறும் கற்பனையல்ல. இது மனிதர்களின் அனுபவத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கருவி.
மனதின் இயல்பு: பெயரும் வடிவமும் இல்லாதவற்றை மனித மனம் தொடர்ந்து சிந்திக்க முடியாது. மறுக்கப்பட்ட நீதிக்கு எதிரான குரலை வடிவமாக்கி, கதையாக்கி, பெயரிட்டு முன்வைக்கும்போது, அவை மக்களின் மனதில் ஆழமாகப் பதிகின்றன.
சக்தி என பெயரிட்டு உருவம் அமைத்தல்: இசக்கி அம்மன் வெறும் கல் சிலை அல்ல – அவள் பெண்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்க்கும் சக்தியின் பரு வடிவம். இந்த வடிவுக்கு கதை சொல்லப்படும்போது அது மக்களை ஆழமாகத் தொடுகிறது. “அம்பிகா” என்ற சாதாரண பெண்ணின் கதை, பின்னர் “இசக்கி அம்மன்” என்ற தெய்வமாக மாறும் நிகழ்வு, பெண்ணியம் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சமூக சக்தியாக மாறும் வரலாற்றின் சின்னமாக அமைகிறது.
மீட்சி: இந்த கதையில் பார்த்திபன் மாற்றம் அடைவது வெறும் தனிப்பட்ட முடிவாக இல்லாமல், கலாச்சார சட்டகத்திற்குள் நடக்கும் ஒரு நிகழ்வாக காட்டப்படுகிறது. இசக்கி அம்மனின் புராணம் அவருக்கு ஒரு மொழியை, ஒரு சட்டகத்தை வழங்குகிறது, அதனூடாகத்தான் அவர் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைய முயல்கிறார்.
இந்தக் கதையில், கலாச்சாரம் வெறும் பழக்கவழக்கங்களின் தொகுப்பு அல்ல , அது சமூகத்தில் நீதியை வலியுறுத்தும் ஒரு முறையாக, ஒரு மொழியாக செயல்படுகிறது. இசக்கி அம்மன் போன்ற உருவகங்கள் மூலம், நீதிக்கான குரல் என்ற கருத்து சமூகத்தில் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கிறது.
கடைசியாக, இந்த கதையில் முக்கியமான நுணுக்கம் என்னவென்றால், இசக்கி அம்மன் பார்த்திபனுக்கு வெறும் கோபத்தின் வடிவமாக அல்ல, மீட்டெடுப்பின் வழியாகவும் தோன்றுகிறாள். அவரது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய கோவிலுக்குச் செல்ல முடிவெடுப்பது அதற்கு சான்று.