
கோத்திக் என்ற கலைச்சொல்லை இணையத்தில் தேடினால் கட்டடக் கலையும், உதட்டிலும் தாடையிலும் வளையங்கள் மாட்டிய உருவப்படங்களும், ஹாலோவீனுக்கு உண்டான அலங்காரத் தோற்றங்களும், இசைக் குழுக்களும் என கலவையான சித்திரங்களை அளிக்கிறது இணையம். மறுபுறம் கல்விப்புலக் கட்டுரைகளில் மற்றமையை, ஆழுள்ளத்தை, பிறழ்வெழுத்தை முன்வைக்கும் சொல்லாடல்களிலும் கோத்திக் பயன்படுத்தப்படுகிறது.
கோத்திக்கின் வரலாற்றெழுத்து பல்வேறு கால அடுக்குகளைக் கொண்டது. கல்விப்புலத்தில் பயன்படுத்தப்படும் கோத்திக், அரசியல் கோத்திக், கலை கோத்திக், இலக்கிய கோத்திக் என ஒவ்வொன்றும் வெவ்வேறு காலத்தில் உருவாகி வந்தவை. ஆகவே எந்த துறை சார்ந்து வாசிக்கிறோமோ அந்தத் துறை சார்ந்து அது துவங்கிய காலத்திலிருந்து ஆரம்பிப்பவை அத்துறையின் கோத்திக் வரலாறு.
கல்விப்புல பயன்பாட்டு கோத்திக் என்பது ஃப்ராய்டின் ஆழ் மனம், அழுத்தப்பட்ட இச்சைகள், தன்னிலையின் சிதைவு போன்ற பேசுபொருட்களால் ஆனது. ஆனால் ஃப்ராய்டின் பயன்பாடே அதற்கும் முந்தைய காலகட்டத்திலிருந்த அர்த்தத்தை எடுத்தாள்வது. அதன் பின்புலத்தை தேடிச் சென்றால் பதினெட்டாம் நூற்றாண்டிற்கு சென்று சேரும்.
அறிவொளிக்காலத்திற்கு எதிரானதாக கோத்திக் உருவானதாக பரப்புக் கலை வரலாறு கூறும். கலை வரலாறோ பனிரெண்டாம் நூற்றாண்டிற்கு இட்டுச் செல்லும். கோத்திக் என்ற சொல்லை குடைச்சொல்லாக பயன்படுத்தப்படும் இத்தகைய சூழலில் அதை வரலாற்று நோக்கில் அறிந்து கொண்டால், கலை, பரப்புக்கலை, இலக்கியம், கோட்பாடுகளில் வெவ்வேறு அர்த்தங்களில் ஏன் பயன்படுத்தப்படுகிறது எனவும், அவரவர் துறை சார்ந்து ஏன் வெவ்வேறு துவக்கப்புள்ளிகளை முன்வைக்கிறார்கள் எனவும் விளங்கும்.
ரோம் வீழ்ந்ததற்கு காரணம் அதன் மீதான அன்னியர் படையெடுப்பு. படையெடுத்து வந்தவர்கள் கோத்கள். பண்படாதவர்கள் என்ற அர்த்தத்தில் “பார்பாரியன்கள்” என ரோமானியர்கள் அவர்களை அழைத்தனர். கோத்கள் ரோமை சூறையாடிய பிறகு அதிகாரத்தில் நிலைத்துக் கொண்ட பிறகு தங்களை ரோமைக் காப்பாற்றியவர்களாக மறுவரையறை செய்து கொண்டனர். வரலாற்றை மாற்றிப் புனைவதன் மூலம்.
கோத்களால் ரோம் எதிர்கொண்ட தாக்குதல் கிருஸ்துவர்களின் மீதான பாகன் கடவுளின் கோபம் என கிருஸ்துவர்களாக மாறாத ரோமானியர் கூறினர். மாறாக அது பாகன்களிடமிருந்து கிருஸ்துவர்களை பாதுகாப்பதற்கான கிருஸ்துவக் கடவுளின் திட்டம் என கிருஸ்துவர்கள் (Augustine, Orosius போன்ற வரலாற்று எழுத்தாளர்கள்) கூறினர். நடந்த பேரழிவின் பழியை எந்தக் கடவுள் மீது போடுவது அல்லது எந்தக் கடவுளின் வெற்றியாக அதை மாற்றிக் கொள்வது என்பது மதங்களின் நடுவேயான பிரச்சனையாக இருந்தது.
பார்பாரியன்கள் எப்படிக் கிருஸ்துவால் அனுப்பப்பட்ட காவலர்களாக முடியும்? Orosius, இதை இப்படி விளக்கினார். கோத்கள் முற்றிலும் காட்டுமிராண்டிகள் அல்ல; ஏற்கனவே அவர்களும் கிறிஸ்தவர்கள்தான் எனப் புனைந்து எழுதினார். அவர்களில் சிலர் எகிப்திலிருந்து வந்த கிருஸ்துவத்தை தழுவியர்கள். ஆகவே ரோம கிருஸ்துவத்திற்கு அன்னியமாக இருப்பதாக தெரிகிறது. பாகன்களிடமிருந்து ரோமைக் காக்க கிருஸ்து எகிப்திலிருந்து அனுப்பிய பாதுகாவலர்கள் அவர்கள் என்று வரலாற்றை எழுதினால் முடிந்தது.
வரலாறும், தொல் குடிப் பண்பாடும் இல்லாமலிருந்த கோத்களுக்கு இதன் மூலம் தங்களுக்கென ஒரு வம்ச மரபும், பைபிள்–கிறிஸ்தவ வரிசையிலான இடமும் கிடைக்கும் சாத்தியம் உருவானது. அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு தங்கள் வரலாறாக அதை ஆக்கிக் கொண்டனர். நடுவே கிருஸ்துவத்தின் மானமும் காப்பாற்றப்பட்டது. கிருஸ்துவர்களும் தங்கள் மதத்தின் மீதான வசையை பாராட்டாக ஆக்கிக் கொண்டனர்.
அதே வரலாறு வெற்றிகொண்ட பார்பாரியர்கள் பக்கம் போகும் போது கொஞ்சம் மாற்றிக் கொண்டது. கிறிஸ்தவ வரலாற்றைத் தங்கள் பக்கமாக மாற்றி, தங்களை ரோமாவை அழித்தவர்கள் என்பதிலிருந்து, ரோமாவின் உரிமையாளர்களாகவும் கத்தோலிக்கத்தின் காவலர்களாகவும், ஆகவே ரோமானியர்களை விட மேலானவர்களாகவும் தங்கள் வரலாறை மாற்றிக் கொண்டனர்.
புறவயமான, மாறாத எழுத்துதான் வரலாறு என நாம் நம்பும் ஒன்று மாறி மாறி புனைந்து கொள்வதுதான் என்பதே கோத்திக்கின் துவக்கமாக இருந்திருக்கிறது. இன்று இது நமக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடும். கோத்திக்கின் உலகில் எல்லாமே புனைவுதான்.
ரோமப்பேரரசு வீழ்ந்து ஆயிரமாண்டுகள் கழித்து, மறுமலர்ச்சி காலத்தில் இத்தாலியர்களுக்கு தங்கள் பண்பாட்டு பெருமைகளை மீட்டெடுத்துக் கொள்ள வேண்டிய வலுவான தேவை உருவானது. அந்தத் தேவையை நிறைவேற்றிக் கொள்ள இரண்டு வழிகள் கண்டடையப்பட்டன.
ஒன்று கடந்த காலத்தில் தாங்கள் ஆளப்பட்டதை இருண்ட காலம் என எழுதுவது. இரண்டு சமகாலத்தில் ஐரோப்பாவின் பண்பாட்டு மையமாக இருக்கும் மேற்கு ஐரோப்பாவை தங்கள் கலாச்சாரத்தை விட கீழானவர்களாக நிறுவுவது.
அவ்வகையில் ஆயிரமாண்டு வரலாற்றில் பிறரால் ஆளப்பட்டதை இருண்ட காலம் என்று எழுதினார்கள். உண்மையில் ரோம் அந்த காலத்தில் பண்பாட்டு வளமோடு இருந்தது என்றாலும் கூட. அப்படி தாழ்த்தி எழுதுவதால் அதை சிறுமையாக்கி தங்கள் பெருமிதத்தைக் காத்துக் கொண்டார்கள். இரண்டு, மேற்கு ஐரோப்பாவில் உருவாகி வந்திருந்த ஃப்ராங்கு மக்களின் எழுச்சியை சிறுமைப்படுத்தி தங்களை உண்மையான பழைய ரோமானிய தொடர்ச்சியாக நிறுவிக் கொண்டார்கள்.
அந்த ஆயிரமாண்டுகளில் கோத்திக்குகள், பைசாண்டியர்கள், ஜெர்மானிய பழங்குடிகள் என பல்வேறு படையெடுப்பாளர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. இத்தாலியின் இருண்ட காலம் என அழைக்கப்பட்ட அதே காலத்தில் ஷாலேர்மேன் மேற்கு ஐரோப்பாவை ஒருங்கிணைத்து, ப்ராங்குகளை (ஃப்ரான்ஸின் பழங்குடிகள்) மையமாக்கி, ஒரு பேரரசை உருவாக்கி இருந்தார். பனிரெண்டாம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் உருவாகி வந்திருந்த மத்திய காலகட்டக் கலை வழியாக ஐரோப்பா தன் வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. ப்ரான்ஸை மையமாக்கிய அந்த பேரரசும் தன்னை புனித ரோமப் பேரரசு என்று முன்வைத்துக் கொண்டது.
ஆகவே இத்தாலியின் ரோமானியர்களுக்கு தாங்கள்தான் மெய்யான ரோமானியர்கள் என்று நிறுவிக் கொள்ள வேண்டிய அழுத்தம் உருவானது. தங்கள் பெருமிதத்தை உருவாக்க வேண்டுமானால் முதலில் இருக்கும் பிற ஐரோப்பிய பெருமிதங்களை அவமானப்படுத்த வேண்டுமே. ஆகவே ஃப்ரெஞ்சு கலை அழகியல் எதிர்மறையாகக் சித்தரிக்கப்பட்டது. அன்று உருவாகி வந்திருந்த மனிதனை அளவுகோளாகக் கொண்ட அழகியலின் அடிப்படையில் ஃப்ராங்குகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டடங்கள் அஞ்சத்தக்கதாகவும், அருவருப்பூட்டுவதாகவும் சித்தரிக்கப்பட்டது. மனிதனை அளவுகோளாகக் கொண்ட தங்கள் கட்டடக் கலையே அழகானது என்று முன்வைத்தனர், வஸாரிதான் அதன் முதன்மை வரலாற்றாசிரியர்.
ஆகவே, கோத்திக் என்ற சொல் மத்தியக் கால கலைக்கும், ஃப்ராங்குகள்,பிரிட்டானியர்கள் ஆகியோரைக் குறிக்கவும், அவர்களின் கட்டடங்களுக்குமான இழிசொல்லாக பயன்படுத்தப்பட்டது. அவை அசிங்கமானவையாகவும், பண்பாடற்றவையாகவும் (ரோமானியம் அல்லாத எதுவும் பண்பாடும் அற்றவைதானே) சுட்டப்பட்டன, அந்த காலத்திற்கு அவை மிகவும் முன்னேறியவையாகவும், அழகியவையாகவும் இருந்தாலும் கூட. ஆனால் கலையிலும், வரலாற்றிலும் அந்த புனைவு உண்மையாகவே நிலைத்துப் போனது இன்னொரு ஆச்சரியம். வரலாற்றை விட புனைவு வலிமையானது. நிழலை அசைத்தால் சுடரும் அசையும் என மானுடம் மீண்டுமொரு முறை அறிந்து கொண்டது.
1510-களில் Bramante போன்ற மறுமலர்ச்சிக் கால இத்தாலிய சிந்தனையாளர்களால் மேற்கு ஐரோப்பியக் கால (12ம் நூற்றாண்டு) கட்டடக் கலை ஜெர்மானியத் தன்மை எனவும், கரணிய அறிவற்றது எனவும் [irrational] ரோமை அழித்த கோத்களுடைய காட்டுத்தன்மை கொண்டது எனவும் சுட்டப்பட்டது. ரோமிற்கு பிறகு மறுமலர்ச்சி காலம் வரையிலான இடைப்பட்ட காலத்தை கோத்களின் இருண்ட காலம் எனவும் சுட்டினர்.
இவ்வாறு கோத்திக் மக்களைப் பற்றிய ஒளியாலான வரலாறு (பாகன்களிடமிருந்து கிருஸ்தவத்தை மீட்டவர்கள் என்ற புகழ்) திரிக்கப்பட்டு பாகன்களின் இருண்ட காலமாக சித்தரிக்கப்பட்டது.

ஃப்ரான்ஸ், பிரிட்டானியக் கட்டடக் கலை ஏன் இத்தாலியரால் வெறுக்கப்பட்டது? ஒன்று, அது ரோம அரசிற்கு பிறகான காலத்தின் கலைவடிவமான ரோமெனெஸ்கிலிருந்து தன் தொடர்ச்சியை உருவாக்கிக் கொண்டது. மீண்டும் தங்கள் ரோம பொற்காலத்தைக் முன் வைக்க அதற்கு பிறகான கலையை நிராகரித்து மீண்டும் செவ்வியல் கலைப் போக்கான கிரேக்க, ரோமக் கலையை முன் வைக்க முனைந்தனர் மறுமலர்ச்சிக் காலத்து இத்தாலியர் (நவீன ரோமானியர் என எண்ணிக் கொண்டவர்கள்).
இரண்டு, ரொமெனெஸ்கிலிருந்து உருவான இங்கிலாந்தின் நார்மன் கட்டடக் கலை அழகியல்தான் இன்று நாம் கோத்திக் என அழைக்கும் கட்டடக் கலையாக உருமாறியது. இத்தாலியருக்கு மேற்கத்திய ஐரோப்பியரின் மீது எப்போதும் அச்சமும் வெறுப்பும். அவர்களால் சூறையாடப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் கூட. இதனால்தான் அழகிய இந்தக் கலைவடிவத்தை கோத்திக் என்றனர். இதற்கு எதிராக உயரம் குறைவான மனிதர்களை அளவாகக் கொண்ட கட்டடக் கலையை முன் வைத்தனர். கோத்திக்கின் பயபக்திக்கு எதிராக, கரணிய அறிவையும், நம்பிக்கையையும் வலியுறுத்தினர்.
இந்த இருமையின் வேர்கள் கரணிய அறிவு x அறிய முடியாமை, நம்பிக்கை x அச்சம், மனிதன் x தெய்வம் என்ற மேலை மரபின் அடிப்படைகளான துருவப்படுத்தல்களோடு இணைந்து கொண்டது.
பிரிட்டனில் நிகழ்ந்த கோத்திக் அலையின் கண்டுபிடிப்பு கூர்முனை வளைவுகள். கோபுரங்களில், ஜன்னல்களில், கதவுகளில், தாழ்வாரத்தின் தூண் வளைவுகளில் என இந்தக் கூர்முனைகள் எடைப்பகிர்வை எளிதாக்குவதன் வழி உயரமான, அகலமான கட்டடச் சாத்தியங்களை அளித்தன. உயரமான சன்னல்கள் நெருக்கமாக அடுக்கி உருவாக்கப்பட்ட போது அவற்றின் கண்ணாடிச்சன்னல்களில் புதிய கதை சொல்லலுக்கு உதவின. கண்ணாடிச்சன்னல்களிலும் மேற்புறத்தில் புதிய வளைவு அலங்காரங்கள் [window tracery (trefoils, quatrefoils] உருவாக்கப்பட்டன.
இக்கலைப் போக்கின் மைய தரிசனமாக இருந்தது கடவுளின் விண்ணுலகை தேவாலயமாக மண்ணுலகில் உருவாக்குவது. அதன் வழி தேவாலயங்களை நம்பிக்கையின் குறியீடாக ஆக்குவது. பயங்கரமூட்டும் அழகு, விண்ணகத்தின் வண்ண ஒளி [கண்ணாடிச் சாளரங்கள் வழியாக], பிரம்மாண்டமான ஆலயம் உருவாக்கும் ஆன்மீகமான எழுச்சி ஆகியவை உருவாகும் பக்தி உணர்ச்சியை உத்தேசித்து கட்டப்பட்டது. அதன் இயல்புகள் அனைத்தும் நேர் மறையானவையே. ரோமானியர்கள் சொல்லி வந்ததைப் போல இருண்மையானவை அல்ல.

[4]
1348–1350 கருப்பு மரணம் ஐரோப்பாவை உலுக்கியபோது, மரணம் அன்றாடத்தின் பகுதியானது. ஆலயங்கள் இறுதி சடங்குகளால் நிரம்பிக் கிடந்தன; வாழ்க்கை குறித்த குற்ற உணர்வும் அழுத்தமும் மக்கள் மனதில் பதிந்தது. இந்த அனுபவமே பின்னாளில் “மரணத்தின் தாண்டவம்” (macabre) எனப்படும் கலை மரபின் அடிப்படையான உளவியல் நிலையை அமைத்தது. இதே சூழலில் தான் கோத்திக்கின் ஆரம்ப கூறுகளான மரணம்—பயம்—குற்ற உணர்வு—சிதைவு என்ற நான்கு உளவியல் அம்சங்களும் ஒன்றிணைந்தன.
ஆனால் கோத்திக் உண்மையான திருப்பத்தை எட்டியது மறுசீரமைப்பின் (Reformation) போது. இங்கிலாந்தில் மடாலயங்கள் கலைக்கப்பட்டு, நூலகங்கள் எரிக்கப்பட்டு, புனிதச் சின்னங்கள் அழிக்கப்பட்டபோது. அன்று ஒரு முழு கலாச்சாரத்தின் கற்பனை உலகமே அழிக்கப்பட்டது. ஒரு கலாச்சாரத்தின் புனிதக் கற்பனை உலகமே அழிந்தது.

மக்கள் இந்த அழிவிலிருந்து மீண்டபோது, “இங்கிலாந்து தன் உறுதியால் இருளை வென்றது” எனும் தேசியத் தொன்மத்தை உருவாக்கிக் கொண்டனர். ஆனால் மனத்தின் ஆழத்தில் அந்த சிதைவுகளும், தியாகங்களும், வன்முறைகளும் மறைக்கப்பட்ட காயங்களாக இருந்தன. பண்பாட்டு அடியில் அந்த லாவா கொந்தளித்துக் கொண்டுதான் இருந்தது.
Foxe-இன் Acts and Monuments நூல் இந்த அழிவை பிராட்டஸ்டண்டுகளின் நோக்கில் வரலாறாக எழுதப்பட்டது. ஆனால் நிகழ்ந்தது மத வன்முறை என்பதாக அல்லாமல் பிராட்டஸ்டண்டுகளின் தியாகத்திற்கான, உரிமைக்கான போர்க்களமாக மாற்றி எழுதப்பட்டது. சிதைந்த ஆலயங்களையும் கொல்லப்பட்ட பிராட்டஸ்டண்ட் தியாகிகளையும் புதிய தேசிய அடையாளத்தின் பகுதிகளாக மாற்றி அமைத்தது. தேசிய உரிமைக்காக பிராட்டஸ்டண்டுகள் செய்த போராட்டம் என்று வரலாறாக்கப் பட்டது.
அதே காலத்தில் பிராட்டஸ்டண்டுகளும் கத்தோலிக்கர்களை அதே போலவே சித்திரவதை செய்திருக்கிறார்கள்தான், ஆனால் அது பிராட்டஸ்டண்ட் வரலாற்றில் வரவில்லை. வரலாற்றை எழுதுபவரும் வாசிப்பவரும்தானே பண்பாட்டை உருவாக்கிக் கொள்கின்றனர்.

இந்த அதிகார வரலாற்றிக்கு மாறாக பொது மக்களின் கலை உருவாகி வந்தது. வன்முறை கத்தோலிக்கர் அல்லது பிராட்டஸ்டண்ட் எவருடையதாக இருந்தாலும் மக்களுடைய மனதில் எஞ்சியிருந்தது வன்முறையின் பயங்கரமும், அழிவும்தான். அதிகாரத்தின் வரலாற்றில் எவற்றுக்கெல்லாம் இடமில்லையோ அவை எல்லாம் கேளிக்கைக் கலைகளில், நாட்டார் கலைகளில் வெளிப்படுத்தப்பட்டன. வன்முறையின் பேரழிவில் மக்களுக்கு எந்தக் கடவுளும் வரவில்லை, கத்தோலிக்கக் கடவுளும், பிராட்டஸ்டண்டுக் கடவுளும்.
ஆகவே, நாட்டார் பாடல்கள் மற்றும் எலிசபெத்தியன்–ஜேக்கோபியன் பழிதீர்க்கும் நாடகங்கள் வன்முறையான, மீட்சியற்ற உலகத்தை கற்பனையில் எதிர்கொண்டன. பேய்களுக்கு இடமில்லை என்ற புராட்டஸ்டண்ட் கோட்பாடு இருந்தபோது கூட, மக்கள் கற்பனையில் பேய்களும் சிதிலங்களும் நிரம்பத்தொடங்கியது.
1600–1700களில் ஒரு புதிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்தது. முன்பு ரோமை அழித்த காட்டுமிராண்டிகள் என கருதப்பட்ட கோத்கள் இப்போது ஐரோப்பாவின் முன்னோர்கள், (கத்தோலிக்க கிருஸ்துவ வன்முறைக்காலத்திற்கு முந்தைய பொற்காலத்தின்) சுதந்திரத்தின் காவலர்கள், உண்மையான கிறிஸ்தவ நெறிகளின் வாரிசுகள் என மாற்றி எழுதப்பட்டது. ஏனெனில் எதிரில் இருப்பர்வர்கள் கத்தோலிக்க அதிகாரமும், அரசரை ஏற்றுக் கொண்ட பழமைவாதிகளும். ஆகவே அவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை முன் வைப்பவர்கள் தங்கள் அடையாளமாக கோத்திக் மரபை எடுத்துக் கொண்டனர்.
ஆயிரத்தைனூறு ஆண்டுகளுக்கு முன்பு ரோமில் நிகழ்ந்ததைப் போல மீண்டும் ஒரு முறை கத்தோலிக்கர்களிடமிருந்து காக்க வந்தவர்களாக அடையாளத்தை மாற்றிக் கொள்ள கோத்திக் அழகியல் உதவியது. இங்கே “கோத்திக்” எனும் சொல் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து வீரம், சுதந்திரம், இன அடையாளம் ஆகியவற்றைக் குறிப்பது என மாற்றப்பட்டது.
இதனால் பின்னர் மத்தியகால அழகியல் என்பது மறுமலர்ச்சிக் காலத்தினர் முன்வைத்தது போல இருண்ட காலமாக அல்லாமல் தொன்மங்கள், ருனிக் பாடல்கள், வீர மரபு ஆகியவற்றாலான இங்கிலாந்தின் தேசிய அடையாளமாக மாறியது. கோத்திக் என்பது காட்டுமிராண்டிகளின் இருண்ட காலம் அல்ல. இனி அரசியல் சுதந்திரத்தின் வரலாற்று மரபு என்றானது.
*

1760களில் வால்போல் மற்றும் லீலண்ட், கோத்திக்கைக் வரலாற்றுப் பதிவாக அல்லாமல், ஒரு கலை அழகியலின் உணர்ச்சியாக மறு ஆக்கம் செய்தனர். கட்டடக் கலையில் Strawberry Hill போன்ற மத்தியகாலக் கூறுகள் கொண்ட கட்டடக்கலையும், The Castle of Otranto போன்ற அமானுடப் புனைவுகளும், கோத்திக் கடந்தகாலத்தை “உண்மையாக என்ன நடந்தது?” என்ற கேள்வியிலிருந்து, “வரலாறு எவ்வகை உணர்ச்சியை உருவாக்குகிறது?” என்பதாக மாற்றின. மத்தியகால வரலாறு இனி புறவய நிகழ்வுகளின் தொடராக அல்ல; அதன் கட்டடங்கள், இடிபாடுகள், இருள் ஆகியவை உண்டாக்கும் பயம், மர்மம், பதற்றம் ஆகிய அனுபவங்களின் வழியாகக் கற்பனை செய்யப்பட்டது.
மதப்படுகொலைகள், அரச அதிகாரத்தின் குற்றங்கள், விளைவாக நீதியற்ற சமூக சூழல் ஆகியவற்றால் உருவான கொந்தளிப்பிற்கும், நேரடி அரசியல் வெளிப்பாட்டிற்கு பதிலாக புனைவு ஒரு மாற்று வெளியாகவும் அமைந்தது. இன்றும் நாம் ஒரே நாளில் முதல்வராகி சமூகத்தை திருத்தி புகார்ப்பெட்டியில் பூக்கள் மட்டும் விழுவதாகக் கற்பனை செய்து கொள்வதைப் போல.
இந்தக் கோத்திக் புனைவு, அறிவொளிக்காலத்தின் அறிவால் நேரடியாகப் பேச முடியாத கடந்தகால வன்முறைகளையும் குற்றங்களையும், அமானுடமான, திகிலின் மொழியில் வெளிப்படுத்தியது.
அடுத்த ஐம்பது ஆண்டுகளில், ஆன் ராட்க்லிஃபின் பதற்றங்களிலிருந்து மலிவு “ஷில்லிங் ஷாக்கர்கள்” வரை, கோத்திக் நாவல்கள் பெருகி, மர்மம் – பயம் – அறிவைக் கடந்த உன்னத அனுபவம் (sublime) ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரந்த கலைப் பரப்பாக உருவெடுத்தன. இருள், இடிந்த கோட்டைகள், கல்லறைகள், கனவுகள், பைத்தியம், மறைக்கப்பட்ட குற்றங்கள் போன்ற கூறுகள் மூலம், அறிவால் முழுமையாக விளக்க முடியாத உளவியல் மற்றும் வரலாற்று உண்மைகளை ஆராயும் இலக்கிய வடிவமாக கோத்திக் நிலைபெற்றது.
சுருக்கமாக சமூகம் கரணிய நோக்கிலும், அதிகாரபூர்வமான வரலாற்று நோக்கிலும் எவற்றையெல்லாம் பேசினவோ அவற்றால் பேசப்படாதவற்றை பேசுபவையாக இருந்தது இந்த நவீன புனைவு அழகியல். விளைவாக சமகாலத்திற்கு எதிராக கடந்த காலத்தில் தங்கள் வேர்களை தேடும் அழகியலாக ஆனது.
18ஆம் நூற்றாண்டின் இறுதியில், இனம், தேசிய அடையாளம், பழங்குடி தொன்மங்கள் பற்றிய விவாதங்கள் “மத்தியகாலவாதம் (medievalism) என்ற புதிய கலாச்சாரச் சிந்தனையை உருவாக்கின. ஹெர்டர் தொகுத்த Volkslieder நாட்டார் பாடல்களை ஜெர்மனி தன் தேசிய அடையாளத்தின் வேர் எனக் கொண்டது.
இங்கிலாந்தில் அதே கற்பனை “கோத்திக் வழியான ஒன்றிணைவு” என உருவெடுத்து பிரிட்டனாக தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டது. ஆனால் பிரிட்டனில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஸ்கொட்லாந்தும் அயர்லாந்தும் இந்த இணைப்பால் நிகழ்ந்த தங்களது தேசிய சிதைவுகள், காலனித்துவத்தின் காயங்கள், மத அடக்குமுறைகள் ஆகியவற்றை தங்களுக்கேயுரிய கோத்திக் படிமங்களாக மறுவடிவமைப்பு செய்து கொண்டன.
19ஆம் நூற்றாண்டில் அறிவியல் எழுச்சி மற்றொரு கோத்திக் மாற்றத்தைக் கொண்டுவந்தது. உயிரியல், மின்சாரம், மருந்தியல், பரிணாமம் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனால் கட்டுப்படுத்த முடியாத சக்திகளாக, பிரம்மாண்டமாக உருமாறுவதாக தோன்றத் தொடங்கியது. இதனால் “மருத்துவ–கோத்திக்” உருவானது—Frankenstein அறிவியலால் உயிரும் மரணமும் புரிந்து கொள்ள முடியாத குழப்பமாக மாறும் அச்சத்தை வெளிப்படுத்தியது; Jekyll and Hyde பரிணாமத்தால் மனிதன் மீண்டும் மிருக நிலைக்கு சரிவது என்ற பயத்தை காட்டியது. அறிவியலை புரிந்து கொள்ள முடியாமை உருவாக்கும் பதற்றம்தான் அது. தாமஸ் டி குவின்சியின் எழுத்துக்களின் போதை, கனவுகள் குறித்த விசாரணை கோத்திக் உளவியலை மூளை, மயக்கம், மனச்சிதைவு ஆகியவற்றின் உள்ளார்ந்த நிழல்களுக்குள் இழுத்தன.
இதன் அடுத்த வடிவம் வாம்பயர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய மரணக் கதைகளில் வந்ததுதான். ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது அரசியல் சுரண்டல், முதலாளித்துவ நுகர்வு, பாலியல் அச்சம் ஆகியவற்றின் உருவகமாக மாறியது. Dracula அதை முழுமையாக நவீன உலகின் அச்சங்களின் தொகுப்பாக்கியது. குடியேற்ற பயம், இனக்கலப்பின் பயம், நோய் மற்றும் சிதைவு உருவாக்கிய பயம், பேரரசின் வீழ்ச்சி குறித்த அச்சம் ஆகிய அனைத்தும் ஒரே அமானுட உருவில் வெளிப்படுத்தப்பட வாம்பயரின் வடிவம் படிமமாகியது.
இப்படியாக தங்களை படையெடுத்து வென்ற மற்றமையைக் குறித்த வரலாறு, மத வன்முறைகளால் உருவாக்கிய பயங்கள் மாற்று வரலாறாக ஆகி, சம கால மத அதிகாரத்திற்கு எதிரான போரில் தங்கள் இனக்குழு வேர் தேடலாக உருமாறி, நவீனத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புகள் தங்களை மீறிச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தவதாகி, கோத்திக் என்பது அச்சமூட்டும் எது ஒன்றையும் வெளிப்படுத்தும் அழகியலாக ஆனது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான அமெரிக்க கோத்திக் இதற்கெல்லாம் மாறுபட்டது. அங்கே மத்தியகால இடிபாடுகள் இல்லை. அதற்கு பதிலாக நாட்டின் புதைக்கப்பட்ட வன்முறை வரலாறு, அடிமைத்தனம், இனவெறி, காலனித்துவ வன்முறை, எல்லை வனத்தின் (frontier) பயம், நவீனப்பெண்கள் மீதான ஆணாதிக்கப் பயம் ஆகியவையாக உருவாகி வந்தது. அதுவே அமெரிக்கக் கோத்திக்கின் மையம்.
Brown மற்றும் Poe போன்றோர் அமெரிக்கக் கோத்திக் என்பது கோட்டைகளால் ஆனது அல்ல, மனம், வீடு, குடும்பம் மற்றும் தேசத்தின் உளவியல் இருள் என, பயத்தை உளவியலாக மாற்றிக் காட்டினர். Melville முதல் Toni Morrison வரை Black Gothic என்பது அடிமைத்தனத்தின் மனக்காயங்களை பேய்கள் போன்ற அமானுஷ்யங்கள் மற்றும் அடிமை மானுட உடல் மற்றும் மனதின் சிதைவுகள் என்று வெவ்வேறு தளங்களில் புதிய படிமங்களின் வழி வெளிப்படுத்தியது.
இவ்வாறு கோத்திக் வரலாறு இலக்கிய வரலாறாக அன்றி மற்றமையை அஞ்சும் இனங்கள், மதங்கள், மானுட மனம் என அனைத்தும் தங்கள் பயங்களை ஏற்றி வைக்கவும், ஆராயவுமான படிமக் களஞ்சியமாக்கிக் கொண்டன. சிதிலமடைந்த வரலாறுகள், புதைக்கப்பட்ட குற்றங்கள், தேசியப் பயங்கள், அறிவியலால் தோன்றிய அச்சங்கள், இன–பாலின வன்முறைகள் என இவை அனைத்தும் “பேய்களாக” திரும்பி வரும் படிமங்களாலான கற்பனை வெளியின் அமைப்பாக ஆனது.
கோத்திக் ஒரு அழகியல் மட்டும் அல்ல. ஒவ்வொரு நாகரீகமும் தன் மறைக்கப்பட்ட உண்மைகளை எதிர்கொள்ள கற்பனை வெளியிலிருந்து தனக்கான படிமங்களை எடுத்து சொல்லாடலை உருவாக்கிக் கொள்ளும் அல்லது மற்றமையின் சொல்லாடலை எதிர் கொள்ளும் மொழியாக ஆனது. ஒளியால் எழுதப்படும் ஒவ்வொரு வரலாற்றுக்கும் அடியில் இருளால் எழுதப்படும் ஒரு வரலாறை மானுடம் உருவாக்கிக் கொண்டது. ஒளியின் வரலாறு அறிவாலும், தொகுத்துக் கொள்ளும் தன்மையாலும் ஆனதென்றால் இருளால் எழுதப்படும் வரலாறு கனவால், பயங்களால் ஆனதாக இருந்தது.
[மேலும்…]

ஏ.வி மணிகண்டன்
ஆசிரியர் குறிப்பு: பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஏ.வி.மணிகண்டன், கலை இலக்கிய விமர்சகரும்கூட. காண்பியல் கலை சார்ந்தும் நவீன கவிதைகள் சார்ந்தும் தமிழில் விரிவான திறனாய்வுகள் எழுதியிருக்கிறார். இந்திய தத்துவம் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
ஒளியால் எழுதப்படும் வரலாற்றை நிறுவி, வல்லுகட்டயாமாக நிறுவங்கள் அமைத்து புகட்டி தலைமுறைகளுக்கு கடத்தினாலும். இருளால் எழுதப்பட்டிருக்கும் வரலாறு இத்தனை நூற்றாண்டு கடந்தும் அழியாமல் இருந்துகொண்டிருக்கும் மர்மத்தை விளங்கிக்கொள்வது சற்று திகிலாகவே உள்ளது. மானுட உள்ளம் கொள்ளும் உணர்வு நிலைகள் அறுபடாத ஒரு தொடர்ச்சியாக இருந்துகொண்டிருப்பதும் ஒரு ஆழ்மன ஒருமையை காட்டுகிறதோ என தோன்றாமல் இல்லை. பல் தெய்வ வழிபாடு கொண்ட சமூகங்கள் மற்றமையை தன் ஆழுள்ள வெளிப்பாடாகவும் தம் கலைகளில் வெளிப்படுத்தியிருப்பது வெறும் நம்பிக்கை கடந்த ஒரு நிலையை காட்டுகிறது. கோத்திக் இன் அழகியலை இவ்வாறு வரலாற்று காலகட்டங்கள் மூலமாகவும், சமூக உருமாற்றம் வழியாகவும் அறிந்துகொள்ளும் போது உருவாகும் இந்த விரிவான சித்திரத்தியும் அது உண்டாக்கும் உணர்வுநிலைகளையும் நிச்சயமாக துணுக்குகளாக அறிந்துகொள்ளும் போது அடைய வாய்ப்பில்லை. இந்த கட்டுரையை வாசித்தபின் முதல் பகுதியான அமெரிக்கன் கோத்திக் இல் இருக்கும் தெளிவும், அந்த மனிதர்கள் முகத்தில் வெளிப்படும் இறுக்கமும் மேலும் அர்த்தம் கொள்கிறது.
மணி சார் க்கு நன்றி!
ஆவிக்கு ஒரு ரோஜாவின் இந்த வார பகுதியின் மூலம் கிடைக்கும் ஒரு முக்கியமான தெளிவு, கோதிக் என்பது எங்கோ ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ நடந்த நிகழ்வோ, பண்பாட்டு எதிர்வினை மட்டுமல்ல; அது உலகளாவிய சமூக–உளவியல் வெளிப்பாடாகவும், எதிர்வினையாகவும் பார்க்கலாம்.
இந்திய பண்பாட்டு வரலாற்றில் பொருத்திப் பார்த்தால் எவ்வளவு திகைப்பை தருகிறது. கிராமதெய்வங்கள், சிறு மதங்களில் இருந்து பெருமதங்களுக்கு இடம்பெயர்ந்த தெய்வங்கள், பல தொன்மங்கள், பேய் பிடித்தல், பேய்க்கதைகள், நடுகற்கள், குலதெய்வங்கள்—என மறுவாசிப்பைக் கோரும் நீண்டு செல்லும் பட்டியலைப் பார்த்தால் திகைப்படைய வைக்கிறது.
ஒரு உரையாடலில் மணி, ஓணம் எவ்வளவு பெரிய கோதிக் பண்டிகை என்றார். அங்கு ஆரம்பித்து, வரலாற்றில் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டதெல்லாம் தொடர்ந்து மேலெழுந்து வந்துகொண்டிருக்கும் தொடர்ச்சியை—அழிக்கப்பட்ட பைசாசிக மொழிக் காவியம் ஜெவின் “காவியம்” ஆக வருவது வரை—காணலாம்.
மற்றுமொரு அற்புதமான கட்டுரைக்கு நன்றி, மணி!