
”நறுமணத்துயரே நறுமணத்துயரே”- கம்பனின் காதல் கவிதைகள் பற்றிய இசையின் ரசனைக்கட்டுரைகளின் தொகுப்பு. அதை ஒட்டி ஆனந்த்குமாருடனான இந்த உரையாடலில் இசை தன் கவிமனம் மரபிலக்கியத்தை எப்படி எதிர்கொள்கிறது, எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை விரிவாக விவாதிக்கிறார். மரபிலக்கியத்தை வழிபாட்டுணர்வுடன் மட்டும் அணுகாமல் நவீன கவிஞன் அதை அணுகும்போது எச்சரிக்கைகொள்ள வேண்டிய இடங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.
கே: எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்தக் கம்பன் மீதான காதல்? ‘தேனொடு மீனி’லும், ‘அழகில் கொதிக்கும் அழலி’ லும் கம்பன் வந்து போகிறான். இப்போது முழுதாக கம்பனின் காதலில் கரைந்து ஒரு தொகுப்பு வருகிறது. எப்போதும் கூடவே இருப்பவன்தானா கம்பன்?
ப: தமிழில் எழுத வரும் எல்லோருக்கும் கம்பன் என்கிற பெயர் மீதான ஆர்வம் தவிர்க்கவே முடியாது என்று நினைக்கிறேன். அவன் பாரதி என்கிற மகாகவி கைகூப்பி நின்ற மகாகவி. பட்டிமன்றங்களில் விதந்தோதப்படும் கமபன்தான் சிறுவயதில் முதல் அறிமுகம். கம்பன் வலுவாக அறிமுகம் ஆனது ஊட்டி காவிய முகாமில் , நாஞ்சில்நாடன் வழியாக. பின்பும் அவர் பரிசளித்த “ கம்பர் கவியும் கருத்தும்” நூல் வழியாகவே நிறையப் பாடல்களை வாசித்து முடித்தேன். என்னுள் மட்டுமல்ல சொற்களில் இயங்கும் பலருள்ளும் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவன் உடன் இருப்பான் என்றே நினைக்கிறேன்.
நானும் இன்னும் கம்பனை முழுமையாக வாசிக்கவில்லை. என் முயற்சிகளை முயன்று கற்பது, பின் கற்றதை முடிந்த அளவு இனிமையோடும், சுவை குன்றாத எளிமையோடும் இன்னொருவருக்குக் கடத்துவது என்பதாகச் சொல்லலாம்
கே: நவீன கவிஞர்களில் தொடர்ந்து மரபிலக்கியத்தின் மீதான தீராத காதலை வெளிப்படுத்தி வருபவர் நீங்கள் . பழந்தமிழ் இலக்கியத்தை வாசிக்காத ஒரு நவீனக் கவிஞன் எதை இழக்கிறான் அல்லது எந்த அளவிற்கு அது அவனுக்கு அவசியம் என நினைக்கிறீர்கள் ?
ப: நீண்ட நெடிய மரபு கொண்டது நம் கவிதை. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றில் எழுத வரும் ஒருவன், தன் மொழியில் தனக்கு முன்னால் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்தானே? அவன் அதனுள் ஆராய்ந்து செல்ல வேண்டியதில்லை. அதற்கு தனி அறிஞர்கள் உள்ளனர். ஆனால் ஒரு மொழியின் எழுத்தாளனாக தன் பண்டைய இலக்கியங்கள் குறித்து அவன் கொஞ்சமேனும் அறிந்து வைத்திருப்பது அவசியமே. தஸ்தாயெவ்ஸ்கி மட்டுமல்ல கபிலரும் அமரன்தான்.
பக்தி இலக்கியத்தின் கண்ணீர் நாம் காணவேண்டிய கண்ணீர்தான். நமக்குள் இன்னும் கண்ணீர் உண்டு என்று நாம் நம்புவதே கூட இன்றைய காலத்தின் சவால்களில் ஒன்றே. நான் ஒரு பக்தன் என்றால் அதை எந்த தெய்வமும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. ஆனாலும் உலகளந்த பெருமாளுக்கும், அங்காளபரமேஸ்வரிக்கும் ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு, மாணிக்கவாசகர் சன்னிதியில் வந்து மண்டியிடும் வழக்கம் இப்போதும் எனக்குண்டு. நம் கண்ணீரை மீட்டெடுக்கவேணும் அந்தத் தெய்வம் அவசியம். பக்தி என்பது தனிமனிதத் தேர்வு. ஆனால் கண்ணீர் மானுடத்தின் சாரங்களில் ஒன்றல்லவா?
காதலும் காமமும் மனிதரை விடாது துரத்துபவை.
“ விம்மியிருக்குமுந்தன்
தனக்குன்றிலேறி விழுவேன் நின் அல்குல் தடாகத்திலே”
என்று பாடிய ‘ பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்’ எப்படி பழைய கவி ஆவான்? தாளவே முடியாதபடி வாட்டி வதைக்கும் வறுமையின்முன் நின்று “ இன்றைக்கே சற்றே இரு” என்று பாடிய மதுரகவிராயர் பசி மடியும் மட்டும் பழைய கவி ஆகிவிட மாட்டான்.வள்ளுவனின் காமத்துப்பாலை வாசிக்கும் ஒருவர் அது இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றே என்பதை எளிதாகவே அறிந்து கொள்வார். நான் அவர்களை வணங்கச் சொல்லவில்லை. அறிந்து கொள்ளச் சொல்கிறேன் அவ்வளவே.
கம்பன் ஐந்து நிமிட அளவுக்கேனும் என்னைத் ‘தூயோன்’ ஆக்குகிறான். மனிதன் முழு பொறுக்கியல்ல , அவன் அவ்வப்போது குணசீலன் என்பதை தயவு செய்து நீ நம்பவேண்டும்.
மூவாயிரம் ஆண்டுகள் என்கிற மிக நெடிய பரப்பை கடந்து வந்தாலும் மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளில் பெரிய அளவில் மாற்றங்கள் நேர்ந்துவிடவில்லை. பழந்தமிழின் மொழிதான் நமக்குக் கடினமே ஒழிய, உணர்ச்சிகள் அல்ல.அப்புறம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் அதன் சொல் வளம். கேட்பார் பிணிக்கும் மிகப் பெரிய சொற்கிடங்கு அதில் விரவிக்கிடக்கிறது. சொல் அன்றோ கவிகளின் இதயம்?
ஒளவையோடும், அய்யனோடும் கைகோர்த்து நிற்கையில் என் நரம்புள் ஓடிச்சொல்லும் ஒன்றை என்னால் உணர முடிகிறது.
கே: நீங்கள் ஒரு உரையாசிரியரா?
ப: இல்லை அய்யா. நான் முழுப்பாடலுக்கும் தெளிவுரை அளிப்பதில்லை. கொண்டு கூட்டு சொல்வதில்லை. அகராதிகள், நிகண்டுகள் இணையத்தில் இலவசமாகவே கிடைப்பதால் அருஞ்சொற் பொருள் விளக்கமும் அளிப்பதில்லை. எனக்கே இலக்கணம் முழுமையாகத் தெரியாது என்பதால் இலக்கணக் குறிப்பையும் சொல்வதில்லை. ஆகவே நான் உரையாசிரியன் அல்ல. இது இப்போது தான் பிறந்திருக்கிற ஒரு புதிய தொழில். இதற்கு இனிமேல்தான் கவர்ச்சிகரமாக ஏதாவது பெயர் சூட்ட வேண்டும்.’ கவி’ என்ற எழுத்துக்களில் துவங்கும் பெயரெனில் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.
உரையாசிரியர்கள் நம் மதிப்பிற்குரியவர்கள். அவர்கள் வழியாகத்தான் நமது தொல் செல்வங்களை நம்மால் தொட முடிந்தது. ஆனால் தெளிவுரை, விளக்கவுரை, சுருக்கவுரை, மிகச் சுருக்கவுரை, ஸ்மார்ட் உரை என்று விதவிதமான உரைகள் பெருகி வந்த பின்னும், பழந்தமிழ் இலக்கியங்களைக் காண வாசகன் ஏன் அஞ்சுகிறான் என்பதும் எஞ்சி நிற்கிற ஒரு கேள்வியே.
கே: தொடர்ச்சியாக பழந்தமிழ் இலக்கியங்களின் மீதான உங்களது இந்த ஈடுபாடு உங்கள் கவிதைகளில் இயல்பாக முயங்கி மிகப்பிரகாசமான மொழிச்சாத்தியங்களை உருவாக்குகின்றன. நீங்களே குறிப்பிட்டுள்ளது போல, நைஸ் எனும் ஆங்கில வார்த்தைக்குப் பக்கத்தில் “வைகறை வாளாகிறதா?” என்று அள்ளூர் நன்முல்லையார் வந்து அமரும்போது எந்த உருத்தலும் இருப்பதில்லை. ஆனால் இந்த தொடர் செயல்பாடுகளினால் (வள்ளுவன், ஒளவை, இப்போது கம்பன்) மொழி உங்களை பின்நோக்கி இழுக்காமல் இருக்கவேண்டிய கவனத்துடனும் இருக்க வேண்டியுள்ளதா ? அல்லது நேர்மறையாக மட்டும்தான் இதைப் பார்க்கிறீர்களா?
ப: நான் புலவனாகிவிடும் ஆபத்துண்டு என்கிற அச்சம் என்னுள்ளும் உண்டு. தமிழின் இனிமை போதை பழக்கத்துக்குப் பக்கத்தில் இருப்பதுதான். அந்தப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலரையும் நாம் காணவே செய்கிறோம். நான் எச்சரிக்கையாகத்தான் இருக்கிறேன்( இந்த இடத்தில் சிரிக்கிறார் என்று போட்டுக் கொள்) . எல்லாவற்றையும் தாண்டி அந்த வழியேதான் அழிவு வரும் எனில் வரட்டும்.
தவிர, பைத்தியத்தின் கிழிசலாடையைக் காட்டிலும், புலவனின் சரிகைத் துண்டு சற்று கெளரவமானதுதானே?

கே: கவிதையில் படிமம் மீதான அலுப்பை அல்லது உவமைகள் மீது உங்களுக்குள்ள விலகலை சில இடங்களில் பகிர்ந்துள்ளீர்கள். கம்பன் போன்ற ஒருவரை அனுகி வாசிக்கையில், இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
ப: உவமை எனக்கு அலுப்பதில்லை. சொல்லில் வாழ்பவன் உவமையைத் தவிர்க்க முடியுமா? ஆனால் உருவக அலர்ஜி உண்டுதான். முடிந்த அளவு என் எழுத்தில் அதை தவிர்க்க நினைப்பேன் அதையும் மீறி அது நிகழ்ந்துவிடுவதும் உண்டு. “மனச்சுவர் “ என்று எழுதுவதில் தோல்வி போன்ற ஒன்றை உணர்கிறேன். ஆனால் சமீபத்திய கவிதையில் “ நினைவுறுப்பேய்” என்று எழுதி வைத்தேன். எல்லாம் ஒரு ஆசைதான் அய்யா, ஆசைப்படுவதெல்லாம் நடக்கிறதா என்ன?
கம்பன் போன்ற ஒருவன் நமக்கு பிடிக்காததை எல்லாம் பிடிக்க வைக்கும் மாயம் அறிந்தவன். நூலின் உள்ளேயும் இது குறித்துப் பேசியுள்ளேன்.
கே: காதல் மட்டுமென கம்பனை அணுகக் காரணம்?
ப: அப்படிச் சொல்லி அழைத்தால்தானே நீ அருகில் வருவாய். வந்தவுடன் இழுத்துப் பிடித்து சாக்கில் போட்டுக் கட்டி விடுவேன்.
கம்பனை அணுகும் வழிகளில் இதுவும் ஒன்று. கொஞ்சம் இனிய வழி என்று சொல்லலாம் அவ்வளவே. இந்த இனிய வழியில் சென்று கம்பனைக் காணும் ஒருவர் இன்னொரு வழியிலும் வருவார் என்று ஒரு நம்பிக்கை.
காதல் என்றாலும் வெறும் உடல் வர்ணனைகளால் தொகுப்பை நிரப்பிவிட நான் விரும்பவில்லை. அதைத் தவிர்க்கவே செய்துள்ளேன். காதல் அல்ல, கம்பனே, அவனது கவித்துவமே இந்த நூலின் பிரதானம். மேலும் கம்பனில் , குகன்- இராமன் உறவு குறித்து கட்டுரையே என் முதல் முயற்சி. அதாவது சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உன்னதங்களை முன்வைத்துள்ளேன். ஆகவே முழுநேரக் காதலன் போல் என்னைக் காணும் தங்கள் பார்வை பிழைபட்டது. எனக்கென்று இந்த நூலிற்கான இன்னொரு காரணமும் உண்டு. தமிழ் தழைப்பதற்கும் அந்தக் காரணத்திற்கும் சம்பந்தமில்லை. ஆகவே அது வாசகர்க்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
2026 சென்னை புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் நூல்கள்
- காதலின் குறுவாள்- மீரா கவிதைகள்- தமிழில் செங்கதிர்( நூல்வனம் வெளியீடு)
- ஜல்லிக்கட்டு – கிளர்ச்சி எனும் சூழ்ச்சி- டி. தர்மராஜ்- சால்ட் பதிப்பகம்
- பஷீர் நாவல்கள்- முழுத்தொகுப்பு- காலச்சுவடு பதிப்பகம்
வாசகர்களுக்கான பரிந்துரை:- இசைபட வாழ்தல்- சஞ்சய் சுப்ரமணியன்- கிருபா ஜி- தமிழில்: ப.சகதேவன்( காலச்சுவடு பதிப்பகம்)
- கருப்பு இருட்டல்ல- கல்பற்றா நாராயணன்- தமிழில்: அழகிய மணவாளன்- ( விஷ்ணுபுரம் பதிப்பகம்)
- சொல்லின் நிழலில்- மோகனரங்கன் கவிதைகளின் முழுத்தொகுப்பு- தமிழினி வெளியீடு
கே: கம்பனை இப்படி வாசித்தால் போதுமா? அல்லது இது ஒரு சாத்தியம் தானா? ஒரு காவியமென கம்பராமயணம் வாசிக்கும் காலம் இனி இல்லையென நினைக்கிறீர்களா?
ப: இப்படியாவது வாசிக்கலாம் என்கிறேன். கம்பன் காவியமாக, முழுமையாக இப்பொழுதும் வாசிக்கத்தானே படுகிறான். காவியம் வெவ்வேறு ஆழங்களைக் கொண்டது. அந்த வாசிப்பு அவசியம்தான். ஒரு இலக்கியமாக கம்பனை முழுமையாக வாசிக்கத் தூண்டுவதாக இந்நூல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.
ஆனால் கம்பனின் இருந்து எது எழுந்து வருகிறது, எந்த இராமன் எழுந்து வருகிறான்? என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டிய சூழலும் இப்போது உள்ளது. இந்த நூலின் முன்னுரையில் இருந்து சில வரிகளை இங்கு சொல்லலாம்
“ இராமனுக்காக அல்ல, கம்பனுக்காக..
இந்த வரியை எழுதுகையில் தோழர் ஜீவாவின் மென்கரமொன்று என் தோள்களில் படர்ந்து இறுக அணைப்பதாக உணர்கிறேன்.”
கே: கவிதையைப் போலவே உரைநடையிலும் தனித்த பாணியை உருவாக்கியவர் நீங்கள். மிகுந்த பிரயாசையுடன் வாசிக்கவேண்டியவை என எண்ணச் செய்கின்ற பழைய இலக்கியங்களை தோளில் கைபோட்டு ஜாலியாக பேசியபடியே, அதன் இலக்கியச்சுவை குன்றாமலும் இன்றைய வாசகனுக்கு ஊட்டிவிட்டுவிடுகிறீர்கள். காதலின் தீவிரத்தை, ஆறாத அதன் கண்ணீர்ச் சூட்டை , சற்றும் சலிக்காமல் இந்த நூலிலும் அடைய முடிகிறது. இந்த ஏமாற்று வேலைக்கு உரம் சேர்க்கும் உங்கள் நடைபற்றி சொல்லுங்கள். கசப்பில் சேர்க்கவென்றே இவ்வளவு இனிப்பை எங்கே பெற்றீர்கள் ?
ப: ஏமாற்று வேலையை எப்படி இன்னொருவருக்குச் சொல்லித் தருவது? சின்னத் திட்டம் உண்டு என்பதை ஏற்கிறேன். ஆனால் முழுதையும் அப்படி திட்டமிட்டு எழுதிவிட முடியாது. சில பழந்தமிழ் நூல்களை வாசிக்கையில் இவ்வளவு அழகானதை இன்னும் அழகாகச் சொல்ல முடியுமே என்று தோன்றியது. அதற்குத்தான் முயன்று பார்த்தேன். அதன் கடினத்தை எப்படிக் களைவது என்று யோசித்தேன். எல்லோருள்ளும் ஒரு விளையாட்டுப் பையன் உண்டு. அவன் எழுத்தாளருள்ளும் இருப்பவன்தான். ஆனால் பெரும்பாலான எழுத்தாளர்கள் அவனைத் தங்கள் எழுத்து மேசை வரை அனுமதிப்பதில்லை. ஆனால் நான் அவனை என் எழுத்துள்ளும் அனுமதித்தேன். நீ சொல்கிற ‘ இனிப்பு’ அந்த விளையாட்டுப் பையன் கொண்டு வந்து சேர்த்ததாக இருக்கக் கூடும். இந்த நூலில் அவன் அப்படி குறுக்கும் மறுக்கும் ஓடக் காணோம்.ஆனாலும் எங்கோ ஒளிந்து கொண்டிருப்பான் என்றே எண்ணுகிறேன்.
“ தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிதர மொழிந்திடுதல்” என்பதே என் வாத்தியார் எனக்கு முதல் வகுப்பில் நடத்திய பாடம். அந்த இனிப்புக்கும் தெளிவிற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்றே நினைக்கிறேன்.
கே: சங்க இலக்கியத்தில் இருக்கும் உள்ளடங்கிய இசைத்தன்மையும் வாக்கியச்செறிவும், உள்ளுறை போன்றவையும் நவீன கவிதைக்கு நெருக்கமாக உள்ளவை. கம்பனின் அழகியல் அப்படியானதல்ல. அவர் பாடல்களில் காணப்படும் ஒருவித தோரணத்தன்மை கவிதையை மறைப்பதாக நீங்கள் எண்ணவில்லையா?
ப: சங்கக்கவிதையும், கம்பன் பாடல்களும் வேறு வேறு அழகியல்கள் கொண்டவைதான். ஆனால் இரண்டிற்கும் ஒரு வலுவான ஒற்றுமை உண்டு. அது, இரண்டும் ‘ கவிதைகள்’ என்பது.
ஒரு நவீன கவியாக என்னைக் கம்பன் ஈர்த்தமைக்கு காரணம் அவனது சொல்வளம், உணர்ச்சிகரம். அவன் ஒரு இசை வல்லுநனன் என்பது இன்னொரு முக்கியமான காரணம். கம்பனை ‘ மிகையில் நின்றுயர் நாயகன்’ என்று முன்பு எழுதினேன். மிகையைக் கையாள்வது அவ்வளவு சுலபமல்ல. நீ சொல்கிற அந்தத் தோரணத்தன்மையை இன்னொரு அழகியல் என்றே உணர்கிறேன்.நிச்சயம் அது கவிதையை மறைப்பதில்லை. இப்படிச் சொல்வது அவனது பத்தாயிரத்தி சொச்சம் பாடல்களுக்கும் சேர்த்தல்ல. நூற்றாண்டு இடைவெளியில் கம்பன் இன்றைய வாசகனுக்கு உவக்காத இடங்களும் இருக்கும். அது இயல்பானதே. ஆனால் அதன் நிமித்தம் நிராகரிக்க முடிகிற கவியல்ல அவன்.
கே: ஆரம்பகால கட்டுரைகளில் கம்பனில் இருந்து குறுந்தொகைக்கு , அங்கிருந்து தாவி அய்யனுக்கு, அப்படியே நவீன கவிதைகளில் அதே கவித்துவம் எப்படி கையாளப்படுகிறது என, ஒரு பொன்வலைபின்னலென கவிதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். பிறகு ஒளவைக்கும் , வள்ளுவனுக்கும், கம்பனுக்கும் (இப்போது கபிலனுக்கு) என தனித்தனியே விரித்தெழுதும் அளவிற்கு ஆர்வம் விஞ்சியிருக்கிறது.. நிஜமாகவே நாஞ்சிலாருக்கு பிறகு மிகுந்த தீவிரத்துடன் இதைச்செய்கிறீர்கள், எனக்குத்தெரிந்து நிறைய குழுமங்களில் இன்று கம்பனும் சங்க இலக்கியமும் வாசிக்கப்படுகிறது, உண்மையில் அப்படி ஒரு குட்டி புரட்சி நடக்கிறதா என்ன?
ப: நவீன இலக்கியம் மேற்கின் குழந்தை என்று சொல்லப்பட்டாலும், ஏப்ரல், மே- க்களில் கூட நாம் ஸ்வெட்டர் சூடியபடி வலம்வர வேண்டிய அவசியமில்லை. சமீப நாட்களில் நமது தொல் இலக்கியம் குறித்த ஆர்வம் கொஞ்சம் கூடியிருப்பதாகத்தான் தோன்றுகிறது ஆனால் அதிலிருந்து எதைப் பெறுகிறோம் என்பதிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நவீன காலச் சிக்கல்களை மறப்பதற்காக அல்ல, அதை மேலும் விளங்கிக் கொள்வதற்கே நமது இலக்கியங்கள் பயன்பட வேண்டும். போதை வஸ்து போல அல்ல, மாறாக ஒரு சத்தாக நாம் அதை கிரகிக்க வேண்டும். அவை இனிய பொழுது போக்கு சாதனங்கள் அல்ல. பழந்தமிழ்க் கவிதைகள் ‘ ஸ்வீட் பீடா’ க்கள் அல்ல என்கிற கவனம் நவீன எழுத்தாளருக்கும், நவீன வாசகருக்கும் அவசியம்.
000
இசையின் சமீபத்திய நூல்கள்:
- நறுமணத்துயரே! நறுமணத்துயரே! (கம்பனின் காதல் கவிதைகள் மீதான வாசிப்பு) விஷ்ணுபுரம் பதிப்பகம் (2025)
2. களிநெல்லிக்கனி (ஔவையார் கவித்துவ திரட்டு )- காலச்சுவடு பதிப்பகம் (2024)
3. இசை கவிதைகள் முழுத்தொகுப்பு (2008-2023), காலச்சுவடு பதிப்பகம்

ஆனந்த் குமார்
கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
கம்பனையும் சங்க இலக்கியத்தையும் விட்டு விலகாத நேர்த்தியான நேர்காணல்.நெகிழ்வான நேர்காணல்கள் கூட. காரணம், இசை நம் தோழன். நாம் காணும் காட்சிகளில் ஒளிந்திருக்கும் குறும்புகளை கண்டறியும் மாயாவி. நூலை வாங்க பணம் செலுத்தி விட்டேன். வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.
இசை நல்ல கவிஞர் மட்டுமல்ல நல்ல கட்டுரையாளரும் ஆவார்.இன்று மற்றும் ஒரு பரிணாமம் நேர் கேள்விக்கும் பாசாங்கு இல்லாத பதிலுரைத்துள்ளார்.இசையின் நறுமணத்துயரே நறுமணத்துயரே வாங்க பணம் அனுப்பி உள்ளேன், ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
நல்ல உரையாடல். நறுமணத்துயரே நறுமணத்துயரே கவிதை நூலினை வாசிக்கும் ஆர்வம் மிகுந்து விட்டது. வாங்க வேண்டும். நன்றிகள் இருவருக்கும்.