
[1]
அமெரிக்க ஓவியர் க்ராண்ட் வுட்டின் (Grant Wood) இவ்வோவியத்தின் பெயர் அமெரிக்க கோத்திக். கோத்திக் என்ற உடன் நமக்கு நினைவுக்கு வரும் எதுவும் இதில் இல்லை. இரவுக்காட்சி, அரண்மனை, ஆவி, பாழடைந்த தேவாலயம், வௌவ்வால்கள். இங்கே எல்லாம் தெளிவாக இருக்கிறது. அனேகமாக முன் பகல் நேரம். அவர்கள் இருவரும் யார்? கணவனும் மனைவியுமா? தந்தையும் மகளுமா? நல்ல வசதியான குடும்பத்தை சார்ந்தவர்களாக தெரிகிறார்கள். பின்னாலிருக்கும் வீடும் அதன் கொட்டடியும் வசதியைக் காட்டுகிறது. அவர்களிடம் தெரியும் இறுக்கமும் உறுதியும் குடும்ப பாரம்பரியத்தைக் காட்டுகிறது.
எல்லாமே அவ்வளவு தெளிவாக இருக்கிறது. நிறைவான குடும்பம் எனத் தோன்றுகிறது. அவ்வளவுதானா என்றால் அத்தனை உறுதியாக சொல்லி விட முடியாத ஒரு அமைதியும் அவ்வுலகில் இருக்கிறது. கொஞ்சம் அசௌகரியமான அமைதி. அது உருவாக்கும் அசௌகரியம் வேறு சில கேள்விகளையும் எழச் செய்கிறது.
பணம் இருக்கிறது என்பதற்காக ஆடம்பரமாக எதையும் செய்து கொள்பர்வகளாக தெரியவில்லை. செய்து கொள்பவராக என்பதுதான் சரியாக இருக்கும், அந்தப் பெண்ணுக்கு விருப்பமே இருப்பினும் அதிகாரம் அனைத்தும் இவரிடம் இருப்பதாகதான் தெரிகிறது. பண்ணையில் வேலை பார்க்கும் போதும், வீட்டில் இருக்கும் போதும் தேவையற்ற எந்த உரையாடலும் நிகழாத ஒரு வீடாக இருக்கும் அது.
அனேகமாக இசையும் சிரிப்பும் ஒலிக்காத ஒரு வீடு. ஆனால் அவர்கள் மதிப்பீடுகளோ, பிணைப்புகளோ இல்லாத மனிதர்களாகவும் தெரியவில்லை. கடுமையான ஒழுங்கு விதிகள் இருக்கும் வீடாகதான் இருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் பின்னால் தொட்டிச் செடிகள் இருக்கின்றன, அவை அந்தப் பெண்ணுடைய குடும்ப மதிப்பீட்டை சொல்கின்றன. வயலில் விவசாயம் செய்வதுடன் வீட்டையும் நிர்வகிப்பவர். முடியை வகிடு எடுத்து இழுத்துக் கட்டியிருப்பதில் கூட இறுக்கம் தெரிகிறது. அத்தனை வேலையிலும் ஒரு முடி கூட பறக்கக் கூடாது. காலை எத்தனை மணிக்கு எழுவது என்பதிலிருந்து இரவு எத்தனை மணிக்கு படுப்பது என்பது வரைக்கும், ஊரில் எதிர்ப்படும் எவரிடமும் எவ்வளவு தூரம் தலையை அசைப்பது என்பது வரை அனைத்து விதி போல எழுதி ஓட்டியிருக்கக்கூடிய அளவிற்கு இறுக்கமான நெறிகள் கொண்டவராக தெரிகிறார் அந்த ஆண். முட்கரண்டியை அவர் இறுக்கிப் பிடித்திருப்பதில் வாழ்க்கையின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கண்டுவிட்ட, அல்லது காணத் தேவையில்லை என்ற ஒருவரின் உறுதிப்பாடு தெரிகிறது. அரசியல் நிலைப்பாடு, சக மனிதர்கள் மீதான மதிப்பீடு, கடவுள் நம்பிக்கை என அனைத்து மதிப்பீடுகளும் ஏற்கனவே கல்லில் பொறித்து வைத்திருக்கக்கூடும் வீட்டின் பின்புறம், இனி அவருக்கு யோசிக்க எதுவுமில்லை. செய்ய வேண்டியவை மட்டுமே இருக்கின்றன. இவற்றை அவருக்கு தந்தது ப்யூரிட்டானிய கிருஸ்துவம்தான். அதன் தேவாலயக் கோபுரம்தான் இடது புறத்தில் மரங்களின் நடுவே தொலைவில் தெரிகிறது. மரங்களெல்லாம் வளைவாக இருக்கையில் கோபுரம் மட்டும் கூர்மையாக இருக்கிறது. இதெல்லாம் அவருடைய அந்த கிராமத்து மன உறுதியை பாராட்டுகிறதை போலதான் தோன்றுகிறது.
ஆனால் வடிவங்களாக பார்க்கும் போது வேறொன்று நிகழ்கிறது. கையில் இருக்கும் முட்கரண்டியின் வடிவம் போலவே அவருடைய கோட்டுக்குள் இருக்கும் நீல ஆடையின் தையலமைப்பும் இருப்பது தற்செயலா? மேலே இருக்கும் சட்டையின் கோடுகள் வீட்டின் மேற்பகுதியில் இருக்கும் கோடுகளை ஒத்திருப்பதும் கூடவா? அந்தப் பெண்ணுடைய ஆடையில் இருக்கும் பூக்களைப் போலவே மாடி ஜன்னலில் இருக்கும் திரைச் சீலையின் வடிவமும் இருப்பது? எதெல்லாம் ஒழுங்கின், உறுதியின் குறியீடாக இருந்தனவோ அவை எல்லாமும் ஏன் இன்னொரு நகல் வடிவத்தை, சுற்றியிருக்கும் பொருட்களிலும் கொண்டிருக்கிறது? உள்ளார்ந்து ஒரு பரிகாசம் இருக்கிறதா என்ன? சற்று முன்பு எதெல்லாம் கிராமத்தான் தன்மை (Midwestern character) அனைத்தையும் வறட்டுக் கம்பீரம் என கேலி செய்கிறதா இவ்வோவியம்?
ஒன்றையும் பேசாத இத்தனை சாதாரண ஓவியம் எப்படி ஒரு தேசத்தை மௌனமாகவே உலுக்கியது? ஆத்திரமூட்டியது? இதை தன் அடையாளமாக ஏற்றுக் கொள்ள வைத்தது? காண்பவற்றின் எளிமைக்கப்பால் வேறேதும் இருக்கிறதா இதில்?
ஆகஸ்ட் 1930-ல் வுட் சக ஓவியர் ஜான் ஷார்ப்புடன் ஐயோவா நகரைச் சுற்றி பயணம் செய்திருக்கிறார். அப்போது கண்ட ஒரு வீட்டை அங்கேயே நின்று சிறிய வண்ண ஓவியமாக தீட்டிக் கொண்டிருக்கிறார், அதன் நோக்கம், கீற்றோவியம் (sketch) போன்றது. அப்போது அதை ஓவியமாக்கும் எண்ணம் கூட இருந்ததைப் போல் இல்லை. பிறகு அந்த வீட்டில் வாழும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என கற்பனை செய்திருக்கிறார். அவர்களுக்கு பின்ணணியில் இவ்வீட்டை வைத்தால் முழுமையாக இருக்கும் எனத் தோன்றியிருக்கிறது. க்ராண்ட் வுட் அவருடைய தங்கையையும் பல் மருத்துவரையும் மாதிரியாக நிற்க வைத்து வரைந்திருக்கிறார். உள்ளுணர்வால் ஐயோவா நகரின் மக்கள் எப்படி இருப்பார்கள் எனத் தோன்றியதோ அப்படிக் காட்ட அவருடைய காலத்திற்கு சற்று பழைய ஆடைகளை அணிய வைத்து வரைந்திருக்கிறார். குழி விழுந்த, இறுக்கமான முகம் கொண்ட, பியூரிட்டானிய கிருஸ்துவ மதத்தீவிரம் வெறி அளவுக்கு முற்றிய மனிதர்களாக அவர்கள் தெரியுமளவிற்கு. அது ஐயோவாவினரை கொந்தளிக்க செய்திருக்கிறது. வுட் எதிர்ப்பட்டால் அவருடைய காதைக் கடிப்பேன் என ஒரு பெண் அறிவிக்குமளவிற்கு. அவர் தலையில் ஒன்று போட வேண்டும் என அனைவரும் பேசிக் கொள்ளுமளவிற்கு. வுட் தன் தரப்பை கூறிப் பார்த்தார், “நான் அமெரிக்க கிராமத்து மக்களை கேலி செய்வதற்காக இதை வரையவில்லை, நானும் ஐயோவன்தான்”. அக்கூற்று எதையும் மாற்றவில்லை. ஆனால் 1929-ல் துவங்கிய பெரும்பஞ்சம் நீண்டு அமெரிக்காவின் பெருமிதங்களை உலுக்கிய போது இவ்வோவியத்தின் மீதான வாசிப்பு மாறியது. பஞ்சத்தின் துயருக்கும் அவ நம்பிக்கைக்கும் நடுவே அமெரிக்காவின் கிராமத்து மக்களுக்கு தங்கள் மன உறுதியைக் காட்டுவதாக ஆனது.
இவை எதுவும் தெரியாமல் முதல் முறை பார்க்கும் போது நார்மன் ராக்வெல் வரைந்திருக்க சாத்தியமான விவரணைச்சித்திரம் (illustration) போல இருந்தது. எதனால் இவ்வோவியம் அமெரிக்காவின் அடையாளமானது என்பது புரிந்து கொள்ள இயலாமல் இருந்தது. ஹட்ஸன் ரிவர் பள்ளியிலிருந்த ஓவியங்கள் எமர்சனின், தோராவின் அமெரிக்க விரிநிலத்தைக் காட்டுவன. பிறகு வந்த பொல்லாக், ரோத்கோ போன்றோரின் ஓவியங்கள் அமெரிக்கத் தன்மை என்பதை உணர்வார்ந்து வெளிப்படுத்துவன. அவற்றை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும்.
பின்னாலிருக்கும் வீட்டின் மாடி ஜன்னலில் இருக்கும் வடிவத்தின் பெயர் gothic Lancet. அதன் கட்டடக்கலை கண்டுபிடிப்பு நிகழ்ந்தது இரண்டு முக்கியமான காரணங்களால், ஒன்று, மத்திய கால தேவாலயங்களில் அதன் வடிவத்திற்குள் வண்ணக் கண்ணாடிகளை பொருத்தி வண்ணமயமான ஒளியை உள்ளே கொண்டு வருவதற்கு. அதன் வழி தேவாலயங்களை விண்ணகத்தின் ஒளி மயமான கதிர்கள் நுழையும் மானுட பிரார்த்தனையின் தலமாக மாற்றுவது. இது செயிண்ட் தாமஸ் அக்வினாஸின் அழகியல் நோக்கு. கிரேக்க அழகியலையும், கிருஸ்துவ இறையியலையும் ஒன்றாக்கி சிந்தித்த முதல் மேலை ஐரோப்பியர் அவரே. அந்த ஜன்னலின் நடுவே இருக்கும் கம்பி அமைப்பு சிலுவையாகவும், ஈட்டியாகவும் வடிவமைக்கப்பட்டது. பாதுகாப்பும், வன்முறையும். ஆன்மீகமும், மதமுமாக.
இரண்டு, கோத்திக் கட்டடக் கலை கடுமையான எடை கொண்ட கற்களைக் கொண்டு கட்டப்படுவது. அதன் எடை மிக்க கட்டுமானம் பெரிய ஜன்னல்களை அனுமதிக்காது. ஆகவே குறுகிய அகலத்தில், உயரமிக்க ஜன்னல்கள் கண்டடையப்பட்டன. கோத்திக் ஆலயத்தின் உட்பகுதியான உயரமான கூரைகள், இரு பக்கமும் உயரமான தூண்கள் ஆகியவை உள்ளே நுழையும் மனித மனத்தில் உருவாக்கும் எளிமை உணர்வை இந்த ஜன்னல்களும் வெளிப்படுத்துபவையாக இருந்தன. ஆனால் இங்கே இருக்கும் கோத்திக் ஜன்னல் இருளாக இருப்பது ஏன்?
ஆனால் மிக எளிமையான இவ்வோவியம், யதார்த்தமான நடையில் வரையப்பட்டிருக்கும் ஒரு புனைவு என்பது நம் புரிதலைக் குழப்புகிறது. ஒரு வேளை, அதனால்தான் மிகச்சரியாக அமெரிக்கக் கிராமத்தின் ஆன்மாவைக் காட்டுகிறது எனவும் தோன்றுகிறது. அந்த இடைவெளிதான் காண்பவர்களின் எதிர்வினையையும் குழப்புகிறது. நகரத்தில் இருந்தவர்களுக்கு கிராமத்தை கிண்டல் செய்கிறார் எனவும், கிராமத்தில் இருந்தவர்களுக்கு கோபமூட்டவும், அவர்களிலேயே சிலருக்கு இதுதான் நாங்கள் எனவும் பெருமிதம் கொள்ளவும் அடையாளமாக ஆகியிருக்கிறது.
வேறெந்த தேசத்தை விடவும் பெரும்புனைவு என்பது அமெரிக்காவிற்கே பொருந்தும். அதன் இலட்சியங்கள், தன்னைப் பற்றிய மிகுபுனைவுகள், பல்வேறு இனங்களின் தொகுப்பாக ஆனது இவை எல்லாம் அதுவே புனைந்து கொண்டவை என்றால், அது தனக்குத் தானே மறைத்துக் கொண்ட வரலாறுகள், இதைச் சாத்தியமாக்க அது அழித்த பூர்வக்குடிகள், உருவாக்கிய அடிமை முறைமை, அன்னிய நிலத்தை தனதாக்கிக் கொண்டு அதில் தன்னுடைய மேட்டிமையை பேசுவது ஆகியவை அந்த புனைகதைகளின் நடுவேயான இடைவெளிகளில் முளைத்து வரும் செடிகள் போல வெளி வந்து கொண்டே இருக்கின்றன. கோத்திக்கின் இயல்பென்பதே அதுதான், சொல்லப்பட்டவற்றின் நடுவே இருக்கும் இடைவெளிகளின் வழி சொல்லப்படாதவை எழுந்து வருதல். இதை உணர நேர்ந்த பிறகு ஓவியத்தின் மீதான பார்வை இன்னமும் விந்தையாகவும் அதே நேரம் தீவிரமான பாதிப்பை செலுத்துவதாகவும் ஆகிறது. முன்பு குறிப்பிட்டது போல ஆமாம் எனவும் அசௌகரியமான மெளனமும் ஒன்றாக இருப்பதை உணர நேர்கிறது.
இந்த ஓவியத்திற்கு ஏன் அமெரிக்கக் கோத்திக் எனப் பெயரிட்டார்? அது தற்செயல்தானா? நம் ஆன்மா, நம் நாட்டின் ஆன்மா என்றெல்லாம் நாம் அழைத்துக் கொள்ளும் அனைத்தும் அவ்வாறான புனைவு வழி வெளிப்படுத்தப்படும் உண்மைதான் என்பதை தற்செயல்களின் வழி கலை நமக்கு உணர்த்தும் தருணங்களில் ஒன்றா இப்படைப்பும்? அத்தகையை தற்செயல்களில் நாம் உத்தேசிக்காத பூதங்கள் வெளிப்படுவதால் அடையும் பரவசமும் பதற்றமும் ஒன்றாக உருவானது. அதுவே ஒரு கோத்திக் தருணமும் கூட.

[2]
ஆர்ச் பிஷப் James Ussher (1581–1656) கடவுள் உலகை படைத்தது கிமு 4000-த்தில் என்றார். பிறகு Bishop John Lightfoot மேலும் துல்லியமாக கணக்கிட்டு கிமு 4004 ல் அக்டோபர் 23 மூன்றாம் தேதி காலை ஒன்பது மணிக்கு கடவுள் உலகைப் படைத்தார் என்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் டார்வினின் கோட்பாடுகள் வரும் வரை எவரும் அதை கேள்வி கேட்கவில்லை. உலகைப் படைக்கும் முன்பே கடிகாரத்தையும், நாட்காட்டியையும் சொந்த உபயோகத்திற்காக படைத்திருந்தாரா எனக் கேட்பது சர்ச்சிற்கு நாக்கை காணிக்கையாக தருவதற்கு சமம்.
ஐரோப்பியர்களுக்கு ஆதி மனிதர்கள் குகைகளில் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் கலை எனத் தோன்றாதற்கு காரணம் இந்த நோக்குதான். உலகமே ஆறாயிரம் வருடம்தான் பழையது என்றால் அதற்கு முன்பு எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் கிருஸ்துவத்திற்கு முன்பு நாகரீகம் இருந்திருக்க வாய்ப்பும் இல்லை. கலை நாகரீகத்தின் வெளிப்பாடு. ஆகவே குகை மனிதர்களுக்கு கலை இருந்திருக்க வாய்ப்பில்லை.
மிகச்சமீபமாகதான், டார்வினில் துவங்கிய காலப்பரிணாமம், பிறகு கிடைத்த தொல்லியல் துறை சான்றுகள், அகழாய்வுத் துறையின் வளர்ச்சி ஆகியவற்றாலும், உளவியல், நரம்பியல் நோக்குகளாலும்தான் கலை என்பது நாகரீகத்தின் வெளிப்பாடு அல்ல, பண்படா ஆழ் மனத்தின் வெளிப்பாடும் கூட என்ற இடத்திற்கு வந்திருக்கிறோம், தொல்லியல் ஆய்வாளர் David Lewis Williams போன்றவர்களால். இந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததில் ஒரு முக்கியமான கேள்விக்கு பங்கிருக்கிறது. குகை ஓவியங்கள் பண்படா மக்களுடைய நம்பிக்கைகளின், அச்சங்களின் வெளிப்பாடு எனில், இன்று நாகரீகம் அடைந்த பிறகு நமக்கு “மூட நம்பிக்கைகள்” இல்லாமலாகி விட்டனவா என்பது.
மனிதன் எல்லாக்காலத்திலும் அறிவும், ஆழ்மனமும் என இரண்டாலும் இயங்கும் ஒருவனாகவே இருந்திருக்கிறான். குகைகளில் வரைந்த போதும் கூட கொழுப்பிலிருந்து தீவட்டிகளை எரிக்கலாம் எனவும், விதவிதமான கற்களைக் கரைத்து வண்ணங்களை உருவாக்கி வரையலாம் எனவும், சிறிய பொருட்களில் சிற்பங்களைச் செதுக்கலாம் எனவும் அறிந்திருக்கிறான் என்கிறார் வில்லியம்ஸ்.
இந்தக் கண்டுபிடிப்புகளால் அவன் ஆழ்மனத்திற்கு அப்பாற்பட்டவனாகி விடவில்லை. இன்று செயற்கை நுண்ணறிவுகள் வந்த பிறகும் கூட மனிதர்கள் அடையும் துயர்கள் பெரும்பகுதி ஆழ் மனத்தின் விளைவாக இருக்கின்றனவே தவிர புறக்காரணிகளால் அடைவன அல்ல. அவை கரணிய அறிவாலோ, அறிவியலாலோ தீர்த்துவிடக் கூடியனவாக இல்லை. நம்மில் பெரும்பாலானோனோரின் வாகனங்கள் ஓடிக்கொண்டிருப்பது எலுமிச்சைப் பழங்களால்தான்.
மனிதன் கரணிய அறிவும், ஆழ் மனத்தின் வெளிப்பாடுகளையும் ஒருங்கே கொண்டவனாகவும் தான் எப்போதுமே இருக்கிறான். குகைகளின் காலத்தில் மட்டுமில்லை இன்றும் கூட என்கிறார் வில்லியம்ஸ்.
மேற்பார்வைக்குத் தெரியும் கரணிய நோக்கு, யதார்த்தம், வரலாறு, அறிவியல் சிந்தனைகள் ஆகிய அனைத்தும் இந்த ஆழ் மனத்தின் குகைகளின் ஓவியங்கள் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆழ் மனத்தின் குகை ஓவியங்களை வடிவமைப்பவை மேலே சொன்ன புறச் சொல்லாடல்களும் கூடதான். அது தேசமானாலும், இனமானாலும், தனி மனிதனின் ப்ரக்ஞையானாலும். ஆகவே வரலாறும் அறிவியலும் உருவாக்கிக் கொண்டே செல்லும் புனைவுகள் அனைத்தின் நடுவேயும் இருக்கும் இடைவெளிகளில் தொடர்ந்து வெடித்து வந்துக் கொண்டே இருக்கின்றன நம் இருண்ட ஆழங்கள்.
நாம் நடந்து கொண்டிருக்கும் நிலம் பண்பாடு எனில் காலடிக்கு கீழிருக்கும் நிலத்தின் ஆழத்து கொதிநிலை லாவாவைப் போன்றது பண்பாட்டால் அழுத்தி கீழிருத்தி வைக்கப்பட்டிருக்கும் அகவெளி. குகைகள் அதற்குச் செல்லும் வழிகள். அத்தகைய குகை ஆழங்களின் ஓவியங்களே கோத்திக் என்பது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு மனப்பதிவுவாதம் ப்ரெஞ்சுடைது, கற்பனாவாதத்தில் ஜெர்மானியர்களுடையதும், பிரிட்டனுடையதும் வேறு வேறு என்பதைப் போல கோத்திக் ஒரு கலை இயக்கமோ, அழகியலோ அல்ல. ஒரு காலத்தை சார்ந்ததோ, ஒரு தேசத்தை மட்டும் அடையாளமாகக் கொண்டதோ அல்ல. நம்முடைய அனைத்து சொல்லாடல்களின் மீதும் ஒளிரும் ப்ரக்ஞைக்கு அடியில் இருக்கும் இருளின் உலகு. ஒளி எத்தனை தீவிரமாகச் சுடர்கிறதோ அத்தனை தீவிரமாக இருக்கிறது நிழலின் அசைவும். ஆகவேதான் பிற அழகியல்களைப் போல, கலை இயக்கங்களைப் போல எளிதில் ஒரு குறிப்பிட்ட காலத்தின், தேசத்தின் வரலாறை புரிந்து கொள்வதால் புரிந்து கொள்ளக் கூடிய வரலாறாக இல்லை கோத்திக்கைப் புரிந்து கொள்வது. அதன் வரலாறே திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்தது. புனைவுகளுக்கு இணையானது. அதைப் முழுமையாக பகிர கோத்திக்கின் முழு வரலாறையும் எழுதுவது இங்கே சாத்தியமில்லை, அதை தனியொரு கட்டுரையாகதான் எழுத வேண்டும்.
ஆனாலும் கோத்திக்கின் வரலாறு உருவாகி வந்ததில் இருக்கும் ஒளி, நிழல் விளையாட்டைச் சுட்டும் சில திருப்பத் தருணங்களை மட்டும் இங்கே பார்ப்பது முக்கியம். பௌதீக உலகில் ஒளியை அசைப்பதால் நிழலை அசைக்க முடியும், கோத்திக் உலகில் நிழலை அசைப்பதால் ஒளியையும் அசைக்க முடியும், அதைத்தான் மானுடத்தின் ஆழ் மனம் கலைகளின், இலக்கியங்களின் வழி தொடர்ந்து செய்து வந்திருக்கிறது.
*
[மேலும் …]
ஆவிக்கு ஒரு ரோஜா (பகுதி 2)

ஏ.வி மணிகண்டன்
ஆசிரியர் குறிப்பு: பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஏ.வி.மணிகண்டன், கலை இலக்கிய விமர்சகரும்கூட. காண்பியல் கலை சார்ந்தும் நவீன கவிதைகள் சார்ந்தும் தமிழில் விரிவான திறனாய்வுகள் எழுதியிருக்கிறார். இந்திய தத்துவம் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















இந்த கட்டுரையை வாசித்ததில் இருந்து – ஒரே ஒரு ஓவியத்தை வைத்து மானுட வாழ்க்கை வளர்ச்சியின் ஏதோ ஒரு புள்ளியை இத்தனை நூற்றாண்டு கழித்தும் தொட்டுவிட முடிகிறது என்பதை சிலிர்ப்புடன் உணர்கிறேன். ஓவியத்தில் இருந்து மானுட ஆழ்மனம் வெளிப்படும் கலையை தொடர்புறுத்தியிருப்பது ஓர் பெரிய திறப்பை கொடுக்கிறது. புகைப்படக்கலை இத்தனை பெருகிவிட்ட இந்த காலத்தில், ஓவியக்கலையின் கலை அம்சம் காலத்தில் என்றும் குன்றாமல் உணர்வுநிலைகளை கடத்தவல்லது என்பது திகைப்பாகவுள்ளது, அதுவே அக்கலையின் தேவையை நிலைநிறுத்திக்கொண்டும் இருக்கிறது. நிழல்கள் வெறும் பிம்பங்கள் அல்ல போல. ஆசிரியர் மணிகண்டன் அவர்களுக்கு பேரன்பு. தொடர்ச்சியாக முனைப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் அகழ் ஆசிரியர் குழுவிற்கு நன்றிகள்.
அண்ணன் மணி அவர்களுக்கு,
சிறிய கட்டுரையின் மூலம் ஆழத்திற்கு கூட்டி சென்று, ஓவியத்தின் நுட்பங்களை புரிந்து கொள்ள எங்களை கூர்மை ஆக்கியது இந்த பதிவு.
இதற்கு முன்பு கிரான்ட் வுட் இன் இந்த ஓவியம், மேலோட்டமாக நான் அவதானித்திருந்தேன். கீழ் காணும் வார்த்தைகளின் வழியாக நான் கண்டது Distorted face, monotony, ordinary life, village and elders life which meant to orthodox people.
அன்பும் நன்றியும்
யுவராஜ்
ஆவிக்கு ஒரு ரோஜாவின் முதல் பகுதி, ஒரு பிரமாதமான ஆரம்பம். ஒரு ஓவியத்துக்கு வடிவம் சார் வாசிப்பு தமிழில் கிட்டதிட்ட இல்லை என கூறலாம். அந்த வாசிப்பின் மூலமாக திறக்கும் சாத்தியங்களை மணி காண்பித்திருப்பது அபாரம். மேலும் அந்த ஒவியத்தை தொடர்ந்து பார்த்ததில், சமீபத்தில் ஒரு நண்பர் அவரது தாயாரின் மறைவுக்கு பிறகு, அவருடைய திருமண புகைப்படத்தை காட்டி பேசிக்கொண்டிருந்தபோது, எங்கள் உரையாடல் உறவு, வாழ்வின் இருண்ட பக்கங்களுக்கு சென்றது ஞாபகம் வந்தது (எழுபதில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் கம்போஷிசனில் அமெரிக்கன் கோதிக் ஓவியம் போல் இருந்தத்து ஒரு தற்செயல்தான்).
ஆழ்மன வெளிப்பாடுகள், படைப்பிலும், வாசிப்பிலும் ஒரு விளக்கமுடியாத, அமானுஷ்யம் போல வெளிப்படுவது ஒரு சமூக-உளவியல் விந்தைதான். நம் இந்திய வரலாற்றையும், படிம உருவாக்கத்தையும் கூட வேறு கோனத்தில் பார்க்கத்தோன்றுகிறரது.
“நாம் நடந்து கொண்டிருக்கும் நிலம் பண்பாடு எனில் காலடிக்கு கீழிருக்கும் நிலத்தின் ஆழத்து கொதிநிலை லாவாவைப் போன்றது பண்பாட்டால் அழுத்தி கீழிருத்தி வைக்கப்பட்டிருக்கும் அகவெளி”
“பௌதீக உலகில் ஒளியை அசைப்பதால் நிழலை அசைக்க முடியும், கோத்திக் உலகில் நிழலை அசைப்பதால் ஒளியையும் அசைக்க முடியும்,”
– இது போன்ற கவித்துவ வரிகள் அபுனைவுக்கட்டுரைகளில் கான்பது அரிது.