
க.மோகனரங்கனின் இதுவரை வெளியான கவிதைகளின் மொத்தத் தொகுப்பான ‘சொல்லின் நிழலில்’ கவிதை நூல் இந்த ஆண்டு வெளியாவதை ஒட்டி அவருடனான ஒரு உரையாடல்.
கேள்வி: உங்கள் முதல் தொகுப்பு ‘நெடுவழித் தனிமை’ 2000ஆம் ஆண்டு வெளியானது. இருபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை ஐந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஒப்பீட்டளவில் கவிதைகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளன. கவிதைகளின் எண்ணிக்கையைவிட தாக்கம்தான் முக்கியம் என்பதுதான் இதற்கு காரணமா?
பதில்: இருபத்தி ஐந்து வருடங்களில் ஐந்து தொகுப்புகள் என்பது அதிகம் என்று சொல்ல முடியாவிட்டாலும் குறைவு என்றும் கூறவியலாது. தொடர்ச்சியாக எழுதுவது என்றில்லாமல், தோன்றும் போது எழுதுவது என்கிற எனது விட்டேற்றியான மனநிலையும் இந்த எண்ணிக்கைக் குறைவிற்கு ஒரு காரணம் எனலாம். மட்டுமில்லாமல் முழுமை, வடிவ நேர்த்தி, மொழித் துல்லியம் குறித்த என் அதீத பிடிப்பும் (பீடிப்பு என்றே சொல்லலாம்) மற்றொரு காரணம். பல கவிதைகளை ஒரே வரைவில் எழுதியிருக்கிறேன். சில கவிதைகளுக்காக மாதக் கணக்கில் ஏன் வருட அளவிலும் கூட காத்திருந்ததுண்டு. மற்றபடி கவிதைகளின் எண்ணிக்கைக்கும் அவை ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் நேரடியான தொடர்பு எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், கவிதை என்பது தொடர்ச்சியான செயல்பாட்டை வேண்டுகிறது என்றே எண்ணுகிறேன்.
கேள்வி: இன்று கால் நூற்றாண்டுக்குப் பிறகு உங்கள் கவிதைகளை மொத்தத் தொகுப்பாகப் பார்க்கும்போது உங்கள் கவிதையில், கவிமொழியில் என்னவிதமான மாற்றங்களை பார்க்கிறீர்கள்?
பதில்: உரைநடையானது காலத்தை ஒட்டிய மாறுதல்களுக்கு இயல்பாக இடம்தருவதோடு விரைவாகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் கூடியது. அவ்வாறான உடனடி மாறுதல்களை கவிதையில் எதிர்பார்க்கவியலாது. பொதுவாக கவிதையின் ஏற்பியல் என்பது எப்போதும் நிதானமானதொரு கதியில் நிகழக்கூடிது.
காரணம் ஒரு கவிதை, மொழியின் புறவயமான தர்க்கத்தைக் காட்டிலும் அதிகமும் சார்ந்திருப்பது, அது உருவாக்க முயலும் உணர்வுத் தளத்தின் ஒருமையையே. என் முதல் தொகுப்பில் தென்பட்ட முன்னோடிகளின் நிழல்களிலிருந்து விலகி, அடுத்த தொகுப்பில் பயின்று வந்த அழுத்தமான படிமம், இறுக்கமான மொழி ஆகியவற்றினின்றும் விடுபட்டு, நெகிழ்வானதொரு வடிவத்தை விவரணைத் தன்மை கொண்ட மொழியை அதற்கடுத்த தொகுதிகளில் படிப்படியாக அடைந்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். அது வெறும் மொழியிலான மாற்றமாக மட்டும் அல்லாமல் பார்வையில் உள்ளார்ந்து கூடிவந்திருக்கிற தெளிவாகவும் நேர்ந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன்.
கேள்வி: தமிழ் நவீனக் கவிதை மரபில் உங்களுக்கு முன்னிருந்த முக்கியமான கவிஞர்கள், அவர்களுடைய கவிதைகளின் தாக்கத்தை உங்கள் கவிதைகளில் உணர்ந்திருக்கிறீர்களா? அதேபோல, உங்களைத் தொடர்ந்து எழுத வந்திருக்கும் கவிஞர்களில் எவரிடமேனும் உங்கள் கவிதையின், கவிமொழியின் தாக்கத்தைக் கண்டிருக்கிறீர்களா?
பதில்: எழுத்தைப் பொருத்த மட்டிலும் நேரடியான தாக்கம் என்றில்லாவிட்டாலும், முன்னோடிகளின் மறைமுகமான பாதிப்பு என்பது பின்வருபவர்களிடம் எதோவொரு வகையில் ஒரு கட்டம் வரையிலும் இருக்கவே செய்யும். தமிழ் மரபிலக்கியத்தை முறைப்படி கற்கவில்லை என்றாலும், என் எழுத்திற்கும் அதன் நடைக்கும் உதவுமென்பதால், சுய விருப்பத்தின் பேரில் பருந்துப் பார்வையாக பகுதியளவிற்கு அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன். ஒரு கவிதையின் நீடித்த ஆயுளுக்கும் அதன் உணர்வு பூர்வமான தாக்கத்திற்கும் ஏன் அதன் கவித்துவத்துவத்திற்குமே கூட மொழியின் இசைத் தன்மை ஒரு முதன்மையான காரணமாக அமைகிறது என்பது என் நம்பிக்கை. அவ்வகையில் அபி,ராஜசுந்தரராஜன் சுகுமாரன் ஆகிய மூவரும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆதர்சம். என்றாலும் வாசிப்பு என்று வரும்போது மொழிதல் முறையிலிலும், வடிவ ஒழுங்கிலும் பன்முகத்தன்மை கொண்ட கவிதைகளை விரும்பிப் படிக்கிறேன்.
அவ்வகையில் எனக்கும் மூத்த தலைமுறையினரிடமிருந்து மாத்திரமல்ல இன்றைய தலைமுறையிடமிருந்தும் அறிந்து கொள்ள எனக்கு விஷயங்கள் இருக்கிறது. என் பாதிப்பு அல்லது தாக்கம் யாரிடமாவது இருக்கிறதா என்பதை அப்படி உணர்கிறவர்கள்தான் சொல்லவேண்டும்.
கேள்வி: உங்கள் கவிதையுலகின் முக்கியக் கூறாக அமைந்திருப்பது நினைவேக்கம் என்று சுட்ட முடியும். புனைவின் பொது அம்சங்களில் ஒன்றுதான். இந்தப் பாடுபொருள் உங்கள் கவிதையுலகை இத்தனை ஆழமாக ஊடுருவியிருக்க ஏதேனும் காரணம் உண்டா?
பதில்: இன்று திரும்பிப் பார்க்கும் போது, நம் வாழ்வின் முக்கியமான தருணங்கள் என்று நாம் கருதும் எல்லா அனுபவங்களிலும் அவை நேரிட்டபோது அவற்றை நாம் முழுமையாக உணர்ந்ததோ உள்வாங்கியதோ பெரும்பாலும் கிடையாது. அந்த அதிருப்தி உணர்வை முன்னிட்டே அவற்றை மீண்டும் மீண்டுமாக நினைவில் மீட்டிப் பார்க்கிறோம் என்று படுகிறது. அவ்வகையில் ஒர் அனுபவத்தின் பூரணத்தை எட்டிப் பிடிப்பதற்கான ஒரு முயற்சி என்று அதைக் கருதலாம். கவிதை என்பதும் ஒரு வகையில் காலத்தை உறைவைக்கிற உத்தியைதான் அதிகமும் கையாள்கிறது என்பதால் நினைவேக்கம் என்பது இயல்பாகவே
அதில் அதிகமும் கூடிவிடுகிறது போலும். ஆனால், எதிர்வரும் காலத்தில் இதுவொரு தொடர்ச்சியான பிரதிபலிப்பாக அமையாதிருக்க முயல்கிறேன்.
2026 சென்னை புத்தகக் காட்சியில் வாங்க விரும்பும் நூல்கள்
- திசை ஒன்பது – சயந்தன்
- நெருப்பில் வளர்பவை – திருச் செந்தாழை
- குவளைக் கண்ணன் கவிதைகள்
- கே. என். செந்தில் கதைகள்
- காதலின் குறுவாள் – செங்கதிர்
- மனை மாட்சி- எம். கோபாலகிருஷ்ணன்
- Anticlimax நீதிக் கதைகள் – பொன்முகலி
- நறுமணத் துயரே! நறுமணத் துயரே! – இசை
- நீல குண்டு பல்பு – சங்கரராமசுப்ரமணியன்
- டேக் 5 – நம்பிகிருஷ்ணன்
- ஆபிஸ் – விமலாதித்த மாமல்லன்
- பதினான்காம் சகாயராணி – கதிர்பாரதி
- மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று ரயில்கள் – தூயன்
- யமுனா இருந்த வீடு- மனுஷ்ய புத்திரன்
- உஸ்தாத் – சுகுமாரன்
கேள்வி: உங்கள் கவிதைகளின் முக்கியமான அம்சங்களாக அமைந்திருப்பன செறிவான மொழி, நெகிழ்ச்சியற்ற கட்டமைப்பு, துல்லியமான சொற்தேர்வு. க.மோகனரங்கனின் முத்திரையாக இவற்றை அடையாளம் காணமுடியும். ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்த முத்திரையை உடைக்கவேண்டும், மீற வேண்டும் என்ற எண்ணம் எழுந்ததுண்டா?முயன்றுள்ளீர்களா?
பதில்: தனக்கு ஆகிவந்த ஒன்றிலிருந்து விடுபட்டு அறியாத அடுத்த ஒன்றை நோக்கி எட்டு வைக்கும்போதுதான் ஒருவன் தன் எழுத்தில் உயிர்ப்பினைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். அவ்விதத்தில் வெளிப்பாட்டு மொழியில் மாறுதலை முயன்றே வந்திருக்கிறேன். முன்பே கூறியதுபோல அவ்வாறான மாற்றம் அதிரடியான ஒன்றாக அல்லாமல், இயல்பான கதியில் நிகழவேண்டும் என்பதே என் விழைவு. அத்தகைய மாறுதல்கள் என் கவிதைகளிலும் ஒரளவு நடந்திருக்கிறது என்றே கருதுகிறேன்.
கேள்வி: நீங்கள் உலகக் கவிதைகளை தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறீர்கள். இந்த மொழியாக்கப் பணி உங்கள் தனிப்பட்ட கவிதைகளை, கவிதை மனநிலையை, மொழியை பாதித்திருப்பதாக நினைக்கிறீர்களா? சாதகம், பாதகம் என இரண்டுவிதமான நிலைகளும் இருக்கலாம். சாதகங்கள் என்ன, பாதகங்கள் என்ன?
பதில்: நேரடியான பாதிப்பு என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஆனால், நான் எழுதத்தேறும் விஷயங்கள், அவற்றை விவரிக்கும் விதம், காட்சிப்படுத்தும் கோணம் ஆகியவற்றில், நான் வாசித்த, மொழியாக்கம் செய்த பிறமொழிகவிதைகளின் உள்ளார்ந்த பாதிப்பு எதேனும் ஒரு விதத்தில் இருக்கவே செய்யும். சாதகம் என்று பார்த்தால் நாம் உள்வாங்கும் உலகத்தை, எழுதுவதற்காக தேர்ந்தெடுக்கும் சாத்தியங்களை விரிவாக்குகிறது. பாதகம் என்று புழங்கு மொழியின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள், அரசியல் சமூக எல்லைகள் மங்கி மறைந்துபோகும் தன்மையைக் குறிப்பிடலாம்.
கேள்வி: சங்க காலந்தொட்டு இன்றுவரை தொடரும் தமிழ்க் கவிதை மரபு என்பது புதிதாக கவிதை எழுத வரும் ஒரு இளம் கவிஞனுக்கு எந்தவிதமான சவால்களை முன்னிறுத்துகின்றன? இவற்றிலிருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக்கொண்டு கவிதை எழுதுவது சாத்தியமா?
பதில்: தமிழைப் போல அறுபடாத நெடிய மரபுடைய மொழிகள் வெகுசிலவே. அதில் எழுத வரும் ஒரு இளம் கவிஞன் தன்னுடையது என்று உரிமைபாராட்ட அளவிறந்த பாரம்பரிய சொத்து அவனுக்கிருக்கிறது. பிற மொழியில் எழுதுபவர்கள் பலருக்கும் வாய்க்காத வளம் இது. வாரிசு என்ற வகையில் இது எவ்வளவு பெருமிதமோ அவ்வளவுக்கு சுமையும் கூடத்தான். தொழில் புரட்சிக்கு பிந்தைய அச்சு தொழில்நுட்ப வளர்ச்சியோடு உலகின் எல்லா மொழிகளிலும் உரைநடை இலக்கியம் செழித்ததோடு உப விளைவாக கவிதைகள் இலக்கணத்தை துறந்து வசனத்திற்கு நெருக்கமான வடிவத்தை எட்டின. யாப்போடு சேர்த்து மரபின் சுமைகளையும் உதறிவிட்டே புதிய கவிதை பிறந்தது. ஆயினும் ஒரு மொழியின் ஆழத்தில் உறைந்திருக்கும் பண்பாட்டு நினைவுகள் என்பது காரண காரிய தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு தன்னிச்சையாக நமது நினைவிலி மனதைத் தீண்டும் வலிமை பெற்றவை. அவற்றின் சாரமான தொடர்ச்சி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் எழுத்தில் தொடரவே செய்யும். அவ்வகையில் நமது கவிதையில் நாம் உத்தேசிக்காதபோதும் மரபின் ஒரு தொடர்ச்சி இருக்கவே செய்யும். அதை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு எழுதுவது சாத்தியமில்லை என்றுதான் எண்ணுகிறேன். நான் எனது முன்னூறாவது கவிதையை எழுதிமுடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால் இரண்டாயிரம் வருடமாக தனது இருக்கையைவிட்டு எழாமல் அமர்ந்திருக்கும் கணியன் பூங்குன்றன் அவனது ஒரே ஒரு கவிதையை அளவீடாக நீட்டுகிறான். அவனை கடக்க இயலாவிட்டாலும் இணையாகவோ இலக்காகவோ வைத்துதான் இன்று எழுதவரும் ஒவ்வொரு கவிஞனும் இயங்கவேண்டியிருக்கும். இதுவே அவன் எதிர்கொள்ள வேண்டிய சவால்.

கேள்வி: கூரிய, செறிவான, ஆழமான விமர்சனப் பார்வைகொண்டவர். எழுத்துகளை மதிப்பிடுவதற்கான நிதானமும் அனுபவமும் கொண்ட நீங்கள் ஏன் தொடர்ந்து விமர்சனங்களில், மதிப்பீடுகளில் ஈடுபடுவதில்லை?
பதில்: நல்ல கேள்வி. ஒரு படைப்பை முதன் முதலாக வாசிக்கும் போது ஒரு வாசகனுக்கு கிடைக்கும் இன்பம் அதை மறுபடியும் வாசித்து வகைப்படுத்தி மதிப்பிடும்போது ஒரு விமர்சகனிடத்தில் வெகுவாக மட்டுப்பட்டுவிடுகிறது. கறாறான மதிபீடு அல்லது விமர்சனம் என்பது பரந்து பட்ட வாசிப்பை, தொடர்ச்சியான உழைப்பை கோரும் ஒன்று என்பதோடு, அது ஒரு வகையான சுயவதையும் கூடத்தான். முன்பும் கூட நண்பர்கள், இதழாசிரியர்களின் வேண்டுகோள்களை தட்டமுடியாமல்தான் அவ்வாறான கட்டுரைகளை எழுதிவந்தேன். அவை ‘சொல்- பொருள் -மெளனம்’, ‘மை பொதி விளக்கு’ என்று இரு நூல்களாக வெளிவந்திருக்கின்றன. என் மதிப்பீட்டில் இன்னும் கறார்த் தன்மையோடு இருக்கவேண்டும் என்றும் சில நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், விமர்சனம் என்று வரும்போது குறைகளை நிர்தாட்சண்யமாக சுட்ட வேண்டும். அது என் இயல்பான குணமல்ல என்று புரியவந்ததும் மெல்ல அதிலிருந்து விலகிக்கொண்டேன். கவிதை மொழியாக்கத்தில் ஆர்வம் வந்ததும் இன்னொரு காரணமாகலாம்.
கேள்வி: இத்தனை நீண்டகால கவிதையோட்டத்தில், தமிழ்க் கவிதை இதுவரையில் தொடாத, தொட முயலாத இடம் என்று எதுவும் உண்டா? அல்லது இன்னும் ஆழமாகப் போயிருக்கலாம் என்று நீங்கள் உணரும் தளங்கள் எதுவும் உண்டா?
பதில்: நிச்சயமாக. மனித வாழ்வைப் போலவே இலக்கியமும் அறிந்ததிலிருந்து அறியாததை நோக்கி தொடர்ந்து பரிணமிப்பதுதான். எனவே புதிய தளங்களையும் புதிர்களையும் அவை எதிரிடவே செய்யும். உதாரணமாக உலகமயமாக்கல், புலப்பெயர்வு, இவற்றின் காரணமான அடையாளச் சிக்கல்கள், பால்திரிபுநிலை, தன்பாலின ஈர்ப்பு,செயற்கை நுண்ணறிவு முதலியன உருவாக்கியிருக்கும் நெருக்கடிகள், சூழல்கள், விழிப்புணர்வு, போன்றவை சில ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு திண்ணமாக உணரப்படாதவையே. புறவுலகின் இயந்திரத்தனமான மாறுதல்கள் உருவாக்கும் அக நெருக்கடிகளை இலக்கியம் பிரதிபலிக்கவே செய்யும்
கேள்வி: சமகாலப் போக்கில் கவிதைகளை வெளியிடுவதற்கான களமாக, இடமாக அமைந்திருப்பவை சமூக ஊடகங்களே. நீங்கள் உட்பட பலரும் முகநூலை முக்கியமான இடமாக பயன்படுத்துகிறீர்கள்? தமிழ்க் கவிதைக்கு இன்றைய நவீன அறிவியல் ஊடகங்களின் பங்கு எத்தகையது?
பதில்: சமூக ஊடகங்களில் தணிக்கை இல்லை. எனவே எவரும் எதையும் எழுதி வெளியிடும் சுதந்திரம் இருக்கிறது. உங்கள் எழுத்திற்கு உடனடி எதிர்வினைகள் கிடைக்கும். முன்பு போல் பிரசுர வாய்ப்பிற்காக காத்திருக்கத் தேவையில்லை. தேவையான தகவல்களை தேடிப் பெறுவதும் பகிர்ந்து கொள்ளுவதும் மிகவும் எளிமையாகிவிட்டது.தொழில் நுட்பம் காரணமாக நூலாக்கமும் பரவலாகிவிட்டது. இவையெல்லாம் படைப்புகளின் பன்மைத்துவத்திற்கும் பெருக்கத்திற்கும் காரணமாகியிருக்கிறது. இடையீடு, காத்திருப்பு எதுவும் இல்லாமல் எழுதிய உடனே வெளியாவதால் இணைய எழுத்தின் தரத்தையும் தகுதியையும் நிர்ணயிப்பவர் எவருமில்லை. எனவே இவற்றிலிருந்து உங்களுக்குரியதை தேர்வு செய்து நுகர்வது என்பது உங்கள் பொறுப்பு. தவிரவும் முகநூலில் தொடர்ந்து எழுதும் போது, உங்கள் படைப்புகளுக்கு கிடைக்கும் உடனடி ஏற்பு, பாராட்டுதல்கள் என்பது நாளடைவில் நீங்கள் எதை எழுதவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆகிவிடக்கூடிய ஆபத்தும் உண்டு. இவையெல்லாம் குறித்த புரிதல்களோடும் தீர்க்கமான தெளிவோடும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் எழுத்தாளர்களுக்கு அவை அனுகூலமானவையே.
000
சொல்லின் நிழலில், தமிழினி வெளியீடு.

எம்.கோபாலகிருஷ்ணன்
எம்.கோபாலகிருஷ்ணன் (டிசம்பர் 2, 1966) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுகிறார். ஆங்கிலத்தில் இருந்தும் இந்தியில் இருந்தும் மொழியாக்கங்களும் செய்கிறார். திருப்பூர் பின்புலத்தில் தொழில்மயமாக்கம் உருவாக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை சித்தரிக்கும் படைப்புக்களால் முக்கியமான படைப்பாளியாகக் கருதப்படுகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
மோகனரங்கனின் ஒட்டுமொத்த கவிதைகளைப் படிக்கத்தூண்டும் உரையாடல். அண்ணன் கோபாலகிருஷ்ணன் கவிஞர் சூத்ரதாரியாக 1990களின் பிற்பாதியில் அறிமுகமானார். மோகனரங்கன் அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு. இரண்டு பேருமே நல்ல தன்மையானவர்கள். அத்தன்மை இந்த உரையாடலிலும் வெளிப்படுகிறது
very detailed analysis of poetry form .congratulations to mohan and gopal