ஆவிக்கு ஒரு ரோஜா (பகுதி 3) : ஏ.வி.மணிகண்டன்

வடிவமைப்பு : ராஜசேகர்

முந்தைய பகுதிகள்
ஆவிக்கு ஒரு ரோஜா (பகுதி 1)
ஆவிக்கு ஒரு ரோஜா (பகுதி 2)

[5]

முதலில் இவ்வோவியத்தை பார்த்த போது அது உருவாக்கிய திகைப்பைக் குறிப்பிட்டிருந்தேன். நான் கண்டது நிலத்தின் கதையை மட்டும்தான். அதன் குகைக்குள்ளிருந்து வரும் லாவாவின் மணத்தை அறிந்திருக்கவில்லை.

பிறகு இது எனக்குள் திறந்தது நெடுங்காலம் கழித்து நான் வாசித்த வில்லியம் ஃபாக்னரின் ‘எமிலிக்காக ஒரு ரோஜா’ கதையால். [தமிழில் மூன்று முறை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ]. இக்கதையும் ஓவியத்தின் அதே வருடத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது.

கதையில் வரும் எமிலி க்ரேயர்ஸன் பாதிக்கப்பட்டவரா அல்லது அவரே தீமையின் வடிவமா என்ற குழப்பம் உருவாக்கிய கேள்வி முக்கியமானது. ஓவியத்தைப் போலவே இக்கதையும் அதன் மர்மத்தால் மூளையை ஆக்கிரமித்துக் கொண்டது. ஃபாக்னர் அமெரிக்கன் கோத்திக்கின் எழுத்தாளரும் கூட என்பது தற்செயல் அல்ல. கோத்திக் கலையின் அத்தனைக் கூறுகளையும் கதை கொண்டிருக்கிறது.

எமிலியின் மரணச்சடங்குடன் துவங்குகிறது கதை. அவருடைய வீடு பழங்காலத்தில் செல்வந்தர்கள் இருந்த பகுதியில் இருக்கிறது. வீடும் செல்வந்தர்களுடையதைப் போன்று ஆடம்பரமானதுதான். ஆனால் இன்று அது தன் பெருமைகளை இழந்து மங்கிக் கிடக்கிறது. கதை எவருடைய கண்ணால் சொல்லப்படுகிறது என்பது விவரிக்கப்படுவதில்லை, அதுவே கோத்திக்கின் பிரதான கூறுதான். யாருமற்றவரின் கண்ணால் பார்க்கப்படுவது எல்லாவற்றையும் காணும் வரலாற்றால் பார்க்கப்படுவதுதான். ஆகவேதான் கதை ஐந்து துண்டுகளாக, காலத்தில் முன்னும் பின்னுமாக ஓடி சொல்லப்படுகிறது.

எவரும் நெடுங்காலமாக உள் நுழையாத அந்த வீட்டில், யார் கண்ணுக்கும் காணப்படாமல் இருக்கும் எமிலி ஒரு வகையில் அச்சமூகத்திற்கு மரபின் கடனாகிவிட்டவர். அவருடையை தந்தை இறந்த பிறகு அவரிடம் செல்வமென்று ஏதுமில்லாமல் இருக்கிறது. ஆகவே அவரால் வரி செலுத்த இயலாதென்பதால் அவமானப்படுத்தப்படாமல் இருக்கச் செய்ய கவர்னரால் புதிய கதை உருவாக்கப்படுகிறது. நகரம் அவருடைய முன்னோர்களுக்கு கடன்பட்டிருக்கிறது, ஆகவே அவர் வரி செலுத்த வேண்டாம் என அறிவிக்கிறார் கவர்னர் சர்ட்டோரிஸ். சர்ட்டோரிஸும் இறந்த பிறகு வரும் புதிய கவர்னர் அவரிடம் வரி வசூலித்தே ஆவது என தீர்மானமாக இருக்கிறார். வசூலிக்க வருபவர்களிடம் எமிலி மீண்டும் மீண்டும் சர்ட்டோரிஸிடம் சென்று கேட்டுக் கொள்ள சொல்கிறார். சர்ட்டோரிஸ் இறந்து பத்து வருடங்களாகியிருக்கின்றன.

இதற்கு முப்பது வருடங்கள் முன்பு அவருடைய வீட்டிலிருந்து கொடு நாற்றம் வருகிறது. என்ன செய்வதென்றறியாமல் [பெண்னிடம் சென்று முகம் பார்த்து உங்கள் வீடு நாறுகிறது என்று சொல்ல முடியுமா?] இரவில் சுற்று சுவருக்குள் குதித்து சென்று சுற்றுப்புறத்தில் சுண்ணாம்பை தூவி விட்டு வருகின்றனர்.

அதற்கும் முன்பு எமிலி இளமையில் இருக்கும் போது எமிலியின் தந்தை மகளின் மீது அதிகாரம் செலுத்துகிறார். அவருக்கு வரும் வரன்களை எல்லாம் நிராகரித்து விடுகிறார். எவரும் எமிலிக்கு பொருத்தமானவர்கள் இல்லை என. அவரின் மறைவுக்கு பிறகு எமிலி காலத்தில் உறைந்தவராகி விடுகிறார். அவர் தந்தையின் சடலத்தை எடுக்க அனுமதிக்காமல் மூன்று நாட்கள் ஊரோடு அடம் பிடிக்கிறார்.

பிறகு ஜெஃபர்ஸனுக்கு வரும் கட்டுமானத் தொழிலாளிகளின் மேற்பார்வையாளர் ஹோமெர் பாரன் என்ற வடக்கு அமெரிக்கனுடன் [Yankee] அவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. ஊரில் புறம் பேசப்படுகிறது. ஒரு நாள் எமிலி எலிகளுக்கான மருந்தை வாங்கிக் கொண்டு போகிறார். எமிலி தற்கொலை செய்து கொள்ளப் போகிறார் என நினைக்கிறார்கள்.

அதற்கு முன்பு ஹோமெருடனான உறவு திருமணத்தில் முடிவதைப் போலிருக்கிறது. ஆனால் அவர் திருமணம் செய்கிறவராகத் தெரியவில்லை. மணமாகாத உறவு ஊரில் மீறலாக பார்க்கப்படுகிறது. ஹோமெர் தன்பாலின ஈர்ப்பாளராக இருக்க வாய்ப்பிருக்கிறது என ஒரு ஊகம் நிலவுகிறது (மற்றமையை அஞ்சுதல்). எமிலியின் உறவினருக்கு சொல்லி அனுப்புகிறார்கள். திருமணத்தில் முடிய வேண்டும் அல்லது உறவு முடிய வேண்டும். ஜெஃபர்ஸனின் மானம் காற்றில் போகக் கூடாது.

உறவினர்கள் வந்த உடன் எமிலி ஹோமெருடைய முதலெழுத்து பொறிக்கப்பட்ட அலங்காரப் பொருட்களையும் ஆடைகளையும் வாங்குகிறார். ஹோமெர் ஜெஃபர்ஸனிலிருந்து கிளம்புகிறார், உறவினர்களும். மறுபடி ஹோமெர் வீட்டுக்கு வந்த பிறகு மீண்டும் அவரை எவரும் காணவில்லை. எமிலி ஏமாற்றப்பட்டு விட்டார் என நினைக்கிறது ஜெஃபர்ஸன். பிறகு அவர் ஊரோடு முற்றிலும் துண்டித்துக் கொண்டு தனிமையில் வாழ்கிறார் (காலம் உறைந்து விட்டது). இறுதிச் சடங்கிற்கு உள்ளே நுழையும் மக்கள் மணமகனின் அலங்காரத்தில் ஹோமெரைக் காண்கின்றனர் மேல் மாடியின் படுக்கையில். பக்கத்து தலையணையில் நீண்ட வெள்ளை முடியையும்.

[6]

எமிலியின் தந்தையின் காலத்தில் இருக்கும் ஜெஃபர்ஸனும் அதன் மக்களும் [சர்ட்டோரிஸ்] அமெரிக்க சிவில் யுத்தத்திற்கு முன்பான பழைய தென்னகத்தின் குணத்தைக் கொண்டிருந்தவர்கள். உயர்குடி மக்கள், தீரமானவர்கள். அச்சமூகத்தின் பெண்கள் ஒழுக்கத்தின் காவலர்கள். [நிலவுடமைச் சமூகம் போன்ற அடிமைச்சமூகத்தின் மதிப்பீடுகளாக அமெரிக்கர்கள் கற்பித்துக் கொண்டது]. யுத்தத்திற்கு பிறகான தென்னகத்தில் அவர்கள் வீடு இருந்த பெருமிதமிக்க இடங்கள் கூட சந்தைகள் போலாகி விட்டன. அதனால்தான் சர்ட்டோரிஸுக்கு பிறகான கவர்னர் எமிலியிடம் வரி வசூலிக்க முற்படுகிறார். அங்கே இருப்பது பழம் பெருமை அல்ல, அனைவரும் ஒன்றே என்ற ஜனநாயகக் காலம். எமிலியால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை, அவர் இன்னமும் தந்தையின், சர்ட்டோரிஸின் காலத்திலேயே இருக்கிறார். புதிய தலைமுறையினருக்கு எமிலி, ஹோமெர் உறவில் எந்த சிக்கலும் இல்லை. பழைய தலைமுறையினருக்கு தென்னகத்தின் பெண் ஒரு வடக்கனிடம் உறவில் இருப்பது ஏற்றுக்கொள்ள இயலாததாக படுகிறது. கடந்த காலத்தில் பிடிவாதமாக உறைந்து நிற்கும் தென்னகத்தின் வடிவம்தான் எமிலி.

வில்லியம் ஃபாக்னர்

வாழும் போது ஊருக்கு ஒரு வினோதமான ஆர்வமாக மட்டுமே இருந்த எமிலி இறப்புக்கு பிறகு ஊருக்கு கடப்பாடாக தோன்றுகிறார். பெண்கள் அவரை வெறுக்கிறார்கள். ஆண்கள் ஆர்வமூட்டும் வதந்திகளின் ஊற்றாகக் காண்கின்றனர். சிவில் யுத்தத்திற்கு முன்பான தென்னகத்தில் பண்ணை முறை விவசாயம் பிரதானமாக இருந்தது. அதற்கு அன்றிருந்த அடிமை முறை பெரிதும் உதவியது. அடிமை முறை ஒழிப்பிற்கு பிறகு அமெரிக்க தென்னகம் ஊழியர் பற்றாக்குறையையும் அதனால் பொருளியல் சரிவையும் சந்தித்தது. இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ள வட அமெரிக்க மாகாணங்களிலிருந்து தெற்கே வந்தவர்களை carpetbaggers என அழைத்தனர் தென்னகத்தினர். ஃபாக்னரின் Yoknapatawpha கதைகள் இந்த காலத்தை மையமாக்கி எழுதப்பட்டவை.

இந்தக் கதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கால் பகுதியை சித்தரிக்கும் ஒரு கதை. ஏறத்தாழ வுட்டின் ஓவியத்தில் வரும் அதே உலகம். பண்ணைகளும், அடிமைகளும் போய், அனைவரும் வரி கட்டும் காலம் வந்த பின்னரும் மனதால் கடந்த காலத்தில் இருந்து கொண்டு ஜம்பமாக வாழ்ந்தவர்களைப் பற்றிய கதை. சர்ட்டோரிஸும் அந்த காலத்தை சார்ந்தவர் என்பதால்தான் கதைகளை உருவாக்கி (வரலாற்றை புனைந்து கொள்வது) தந்தையுமில்லாத, திருமணமுமாகாத, எமிலியைக் காப்பாற்றினார். ஜட்ஜூம் துர்நாற்றம் வரும் போதும் கூட சென்று கேட்க (பெண்கள் இன்னொரு பிரஜை அல்ல, ஆண்களின் உடமை). இயலாதென்றார்.  காலம் சென்று புதிய தலைமுறை வரும்போது அங்கே பழைய கதைகளுக்கு இடமில்லை. அங்கே இருப்பது மரபோ, மாண்போ அல்ல, போலியானதாகவே இருந்தாலும் கூட. அனைவருக்கும் பொதுவான விதிகள் மட்டும்தான். துயரத்திலிருக்கும் பழம் பெருமைமிக்க பெண்ணல்ல அவர், வரி கட்டாத தொந்தரவு மட்டுமே. உண்மையில் எமிலியே வரலாற்றின் படுக்கையில் பல வருடங்களாக சடலமாக இருந்தவர்தான், அவருடைய வீடே ஜெஃபர்ஸனின் பழைய படுக்கை. அல்லது ஜெஃபர்ஸனும், தென்னகமுமே அமெரிக்கப் பண்பாட்டின் குகைகளும், அதன் ஓவியங்களும்தான்.

யதார்த்தவாதக் கதை போலத் துவங்கும் இக்கதை மெல்ல நகர்ந்து கொண்டெ சென்று கோத்திக் கதையாக முடிகிறது. ஒரு காலகட்டத்தின் பெருமிதத்தை சொல்வதைப் போல சொல்லிக் கொண்டே சென்று கடந்த காலம் எப்படி நிகழ் காலத்தின் அடியின் துர் நாற்றம் வீசும் ஒன்றாக இருக்கிறது எனவும் விவரிக்கிறது. நகரம் காலத்தோடு கடந்து செல்லும் போது கடந்த காலத்தில் தங்கி விடுபவர்கள் ஊருக்கு பேய்க்கதைகளாக எஞ்சுகிறார்கள். கோத்திக் கதைகளின் அரண்மனை, திருமணமாகாத கன்னி, மரணம், கொலை என அனைத்தும் இக்கதையிலும் வருகின்றன என்றாலும் இதை அமெரிக்காவின் தென்னக கோத்திக்காக மாற்றுவது வடக்கு தெற்கு முரண்பாடுகளும், சிவில் யுத்தத்துக்கு முன்னும் பின்னுமான உலகும். எமிலியை விவரிக்கும் போது பேய்களை விவரிப்பதைப் போன்றே [நெடுங்காலம் தேங்கி நின்ற நீரில் மூழ்கி இருந்த உடல் போல ஊதிப் போய், வெளிறிய நிறத்தில் இருந்தாள்] விவரிக்கிறார்கள். வழக்கமான கோத்திக் கதைகளில் பேய்களும் ஆவிகளும் கறுப்பாக இருப்பார்கள். அனேகமாக கறுப்பினத்தவரையே நேரடியாக சுட்டும் விதமாக. ஃபாக்னர் இங்கே வெள்ளை இனத்தவரை கோத்திக் கன்னியாக ஆக்குவதன் வழி பேய்க் கதை ஒன்றை இன வரலாற்றின், தேச வரலாற்றின் கதையாக ஆக்குகிறார். அதை உணர்ந்திருந்தால்தான் அவர் நோபெல் வாங்கிய பிறகும் கூட இக்கதைக்கு கடும் எதிர்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.  

அல்லது இந்தக் கதையை உளவியல் நோக்கில் மட்டுமே கூட வாசிக்கவும் இயலுமா? எமிலி கடந்த காலத்தின் பெருமிதங்களில் வளர்ந்தவர் என்பதால், தந்தையைப் போல, சர்ட்டோரிஸ் போல அந்த பெருமிதங்களை தக்க வைக்க முயன்று முடியாமலாகி, அதன் பொருண்மை வடிவமாக ஹோமெரின் உடலை பாதுகாத்துக் கொண்டிருக்க முயலும் வரலாற்றின் கைதியா? அவருடைய அப்பா சொன்னது போல இங்கே இருக்கும் எவரும் அவருக்கு உகந்த வரன் இல்லை என்ற பெருமிதத்தால் வடக்கே இருந்து வரும் ஹோமெரிடம் சேர வேண்டியதாயிற்றா? அவர் கடந்த காலத்தில் பெருமிதமாக வீற்றிருக்கிறாரா? அல்லது உறைய வைக்கப்பட்டாரா? அவர் வன்முறையின் வடிவமா அல்லது புதிய காலத்தால் வரலாற்றின் மரத்தில் ஆணி அடித்து வைக்கப்பட்ட ஆவியா?

அது தென்னகம் எப்படி தன் வரலாற்றை வாசிக்கிறது என்பதோடு சம்பந்தப்பட்டதா? மெல்ல மெல்ல தென்னகத்தின் வரலாற்றுக்குள் இருக்கும் வன்முறையின் அடுக்கு வெளிப்படுகிறது. எமிலி அதில் ஒரு கோத்திக் சின்னமாகிறார். இனவாதமும், அதிகாரமும் புதைக்கப்பட்ட அல்லது உடன் உறங்கும் சடலமாகின்றது. ஃபாக்னர் அந்த வீட்டை திறந்து சடலத்தை நமக்குக் காட்டுகிறார். அது அமெரிக்கப் பண்பாட்டின் அடியில் இருக்கும் இருள் வரலாற்றைக் காட்டும் குகை ஓவியம் போலிருக்கிறது.

[7]

டிராகுலாவைப் போல எமிலிக்காக ஒரு ரோஜா கேளிக்கைப் புனைவாக உத்தேசித்து எழுதப்பட்டது அல்ல (பின்னாளில் டிராகுலா பெரிய படிமமாக ஆனதென்றாலும் கூட அதன் ஆரம்பம் கேளிக்கையை உத்தேசித்ததுதான்). இறக்க மறுக்கும் உடலாக இருக்கும் வரலாற்றை அறுத்து ஆராய்வதுதான் பாஃக்னரின் இலக்கு.

தங்களை மேலானவராக எண்ணிக் கொண்டு வரன்களை மறுத்த தந்தை மகள் மீது செலுத்திய அதிகாரம் அந்த பழைய பண்னையின் அதிகாரம் (old authoritarian Southern order) என்றால் அவர் இறந்து விட்டார் என்பதை ஏற்றுக் கொள்ளாத மகள் தென்னகத்தின் காலம் கடந்து விட்டதை மறுப்பதுதானா? மாறாத காலத்திலிருக்கும் பண்ணைவீட்டுப் பெண் எதற்கு எவரிடம் வரி கட்ட வேண்டும்? கிழட்டு சர்ட்டோரிஸ் இதையெல்லாம் கவனித்துக் கொள்ள மாட்டாரா என்ன ஹோமெரை ஏன் கொன்று தக்கவைத்துக் கொள்ள முயல வேண்டும்? காதலையும் அடிமை முறையைப் போலவே கண்டாரா எமிலி, தன் பெண் தன்னுடைய உடமை என எண்ணிய அப்பாவைப் போலவே? உடல் என்பது அதிகாரம் செலுத்தப்படத்தானே? இத்தனை ஆண்டுக்காலம் அடிமைகள் அப்படித்தானே இருந்திருக்கிறார்கள்? அடிமைகள் மீது ஆண்டைகள் செலுத்தும் “அன்புதானே” அவர்களை அடிமைகளாக வைத்திருப்பது? அதிகாரத்தை உறைய வைக்க வரலாறு முயன்றதுதான் அடிமை முறையா, எமிலி ஹோமெரின் உடலை பாதுகாக்க முயன்றதைப் போல? வாழ்க்கையின் மீதான காதலை விட அதிகாரமே பிரதானமானதாகும் போதுதான் சமூகமும், அமைப்புகளும் அடிமைகளை தேட ஆரம்பிக்கிறதா? நவீனம், சமத்துவம் என்பது அதிகாரத்திற்கு பதிலான படைப்பூக்கமிக்க வாழ்க்கைதான் என்றும் சொல்லலாமா?

மற்ற உடல் மீது தனக்கு இருக்கும் இந்த அதிகாரம் என்பது எதன் மீது கட்டப்பட்டது? வடக்கன், தொழிலாளி, அனேகமாக தன்பால் ஈர்ப்பாளன் என்ற சந்தேகம் இவற்றால் நம்மை விடக் கீழானவன் என்ற எண்ணம் இவற்றின் மீதுதானே அதிகாரம் நாட்டப்படுகிறது. வெள்ளை, பண்ணை முதலாளியின் (இன்று அனைத்தையும் இழந்து விட்டாலும் கூட வெள்ளைப் பண்ணை முதலாளியின் மகள்தானே) மகள் வடக்கனை விரும்புவது என்பது வர்க்கம், இனம், சமூக அடுக்கு நிலை இவை அனைத்தையும் குலைத்து விடுவதுதானே.

சிவில் யுத்தத்துக்கு பிறகு அடிமை முறை, நில அதிகாரம், விவசாயத்திற்கான வல்லமை ஆகியவற்றை இழந்துவிட்டிருந்தது தென்னகம். ஆனால் அவற்றால் உருவான மன நிலையை இழந்து நவீன சமூகமாகவும் மாறி இருக்கவில்லை. இந்த இழப்பை ஏற்றுக் கொள்ளவுமில்லை. வலுக்கட்டாயமாக அது திருத்தப்பட்டது. ஆகவே அதன் ஆழ்மனத்தில் இன வெறியும், அதிகார நோக்கும் இருந்து கொண்டேதான் இருந்தது.  பாழடைந்த பண்ணை வீடு, காலத்தில் உறைந்த எமிலி, அடைக்கப்பட்ட அறையில் இருக்கும் சடலம், இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் ஜெஃபர்ஸன் நகரம் என கோத்திக்காக வருவது அதுவேதான். கதையில் சொல்லப்படாத ரோஜா எது? அதிகாரபூர்வமாக அழிக்கப்பட்டவை அனைத்தும் இன்னமும் புதைக்கப்படாமல் அழுகிக் கொண்டிருக்கிறதா அதன் ஏதோ ஒரு பழைய பண்ணை வீட்டில்? அதைத்தான் மீண்டும் ஒரு முறை ஒற்றை ரோஜாவை வைத்துவிட்டு புதைக்க முயல்கிறதா தென்னகம்?  ஒவ்வொரு முறையும் அதிகாரபூர்வமான வரலாறும், கரணிய நோக்கும் புதைக்க முயலும் ஒன்றை மீட்டெடுத்து முறையாக அடக்கம் செய்து அதற்கொரு ரோஜாவை வைப்பதைத்தான் கலையும் இலக்கியமும் கோத்திக் கதைகளின் வழி செய்துகொண்டிருக்கிறதா? ரோஜாக்கள் வைக்கப்படாத ஆவிகள் அடங்குவதில்லையா?

கதையில் காலம் முன் பின்னாக வருவது நேர்கோட்டு சிந்தனையான வரலாறு முன்னேறுகிறது என்பதை மாற்றி பிளவு பட்டதாக மாற்றுகிறது. நாம் நடக்கும் நிலத்தின் கீழிருக்கும் ஆழங்களை காட்டுவதாக ஆகிறது. சிறிய வெடிப்பு போதும் பிலங்கள் திறந்து அனைத்தும் மேலே வர. நெடுங்காலம் கடந்தும் கூட  எதுவும் நிகழாத நம் அன்றாடத்திற்குள் எதுவும் மீண்டு வரலாம். டபிள்யூ ஹெச் ஆடன் கவிதையில் வரும் வரிகளைப் போல,

“பனிப்பாளங்கள் முட்டுகின்றன அலமாரியை
பாலையின் பெருமூச்சு படுக்கையில் 
விரிசலிடும் தேனீர்க் கோப்பைகளில்
திறக்கிறது ஒரு பாதை இறந்தவர்களின் உலகிற்கு.”

இதைத்தான் பாஃக்னர் கடந்த காலம் என்பது கடந்த காலமே கூட அல்ல என்றாரா? எமிலியின் வீட்டுக்குள் வரி வசூலிக்க வரும் இளையவர்கள் காண்பது வீடு முழுக்க நிறைந்திருக்கும் தூசுப்படலத்தை. அந்தப் படலத்தைதான் எலியட் கூறினாரா தன் கவிதையில்? “கைப்பிடியளவிலான தூசில் உனக்கு பயத்தைக் காட்டுவேன்” என்று. அந்தத் தூசுப்படலம் எமிலியுடைய வீட்டுடையது மட்டுமல்ல, தென்னகத்தின் அடிமை வரலாறும், வன்முறையுமான கடந்த காலத்துடையது என்று அறிந்துதான் ஜெஃபர்ஸன் அந்த துர் நாற்றத்தையும் தாண்டி அதைத் துடைக்க முயலாமல் இருந்ததா?

எந்தக் காரணங்களால் எமிலி அவனைக் கொன்று அருகே வைத்துக் கொள்ள விரும்பினாளோ அந்த பெருமிதங்களும், உடல் மீதான அதிகாரமே அன்பாகும் என்ற நோக்கும் அர்த்தமிழந்து விடும் என்றுதானே ஜெஃபர்ஸன் அஞ்சுகிறது. எமிலியைப் போலவே ஜெஃபர்ஸனும் மௌனமாக ஒரு கொலை செய்ய முயல்கிறது, தன் அதிகார அடுக்கு நிலை உருவாக்கிய மன நிலையை பேணிக் கொள்ள எனலாமா? அந்தக் குற்ற உணர்வின் வெளிப்பாடுதான் வைக்கப்படாத அந்த ரோஜாவா? இறுதியாக அந்த சடலத்தை அப்புறப்படுத்தும் காலம் வந்துவிட்டதா? அதற்கு நாம் அனைவரும் ஒரு ரோஜாவை வைத்து விடை குடுக்கும் போது நம்முடைய கடந்த காலத்தை ஒத்துக் கொள்கிறோமா?

[8]

American Gothic – James Wood

வுட்டின் ஓவியத்தில் கம்பீரமாக நிற்கும் அந்த தென்னகத்து பண்ணை வீட்டுக்காரர் உண்மையில் உறுதியாகவும் கம்பீரமாகவும் நிற்கிறாரா, ஜமீன் போல? அல்லது புதைக்கப்பட்ட வரலாற்றைக் காவல் காத்துக் கொண்டிருக்கிறாரா, பூதத்தை போல? அது உண்மையிலேயே கம்பீரமா அல்லது உறைந்த நிலையா (rigidity)? பின்னால் இருக்கும் கோத்திக்கின் ஜன்னல் காட்டுவது அவர் எதைக் காத்துக் கொள்ள முனைகிறார் என்பதையா? அந்த வீட்டின் ஆடம்பரம் எதன் மீது எழுப்பப்பட்டிருக்கிறது என்பதையா? அவர் தன்னுடைய கடந்த கடந்தகாலத்தைக் காத்துக் கொள்ள முனைகிறாரா? நம்மை எச்சரிக்கிறாரா, எனக்கு பின்னாலிருப்பவற்றைக் அருக விட மாட்டேன் என? அது அவருடைய வீட்டில்தானே என விட்டுச் செல்ல முடியுமா? ஒரு காலத்தில் தேவாலயங்களின் அழகியலாக இருந்த கோத்திக் இன்று இவ்வீட்டில் சடலங்கள் இருக்கக்கூடும் என்ற பதற்றத்தின் அழகியலாக வெளிப்படுகிறதா? ஒரு வேளை அங்கே இருக்கும் சடலத்தின் நாற்றம் நகர் முழுக்க பரவுமா?

அந்த இளம்பெண்ணுக்கு அவர் பாதுகாவலரா? அல்லது அடக்குமுறையாளரா? அங்கே இருப்பது உறவா வன்முறையா? அவ்வீடென்பது பாதுகாப்பா அல்லது அதுவே சவங்களின் இடமுமா? அந்த வீடுதான் அமெரிக்காவேவா? அதற்கும் இன்றைய அரசியல் சூழலுக்குமான தொடர்பு இருக்கிறதாக தோன்றுகிறதா? கல்லறைக் காவலாளி போல நிற்கும் அந்த மனிதரின் கீழ்த்தாடைத் தசைகளின் இறுக்கம் இன்றைய அமெரிக்க அரசியல்வாதிகள் எவரிடமும் காணக் கிடைக்கிறதா?அவர் கையிலிருக்கும் முட்கரண்டி விவசாயிகளின் கருவியாகவும் உழைப்பின் சின்னமாகவும் இருந்த காலம் இன்றும் இருக்கிறதா? அல்லது இன்று வன்முறையின் கருவியாக இருக்கிறதா?

நீண்ட ஒளிப்பதிவு (long exposure) போலத் தோன்றும் படத்தில் அந்தப் பெண் ஏன் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார்? அங்கே இருக்கும் எதிலும் அவருக்கு பெருமிதம் ஏதும் இல்லையா அந்த மனிதரைப் போல? தப்பித்துச் செல்ல விழைகிறரா? வேலிக்கு அப்பால் எதுவும் அசைந்து கொண்டிருக்கிறதா?

வுட் அமெரிக்காவை பெருமைப்படுத்த எண்ணி வரைந்த ஓவியத்தில் ஒளியின் வரலாற்றில் இருளைப் போல இந்தக் கேள்விகளும் தவிர்க்கவே இயலாமல் வெளிப்படுகிறதா? நஞ்சு இல்லாமல் அமுதத்தை மட்டும் கடைந்தெடுக்க இயலாதா? அறிவியலும், தத்துவமும் அமுதத்தை உத்தேசிக்கையில் கலையும் இலக்கியமும் நஞ்சினை ஏந்தி அமுதத்தை எண்ணி ஏங்கச் செய்கிறதா நம்மை? அந்த நஞ்சுதான் மனிதர்களை இத்தனை இறுக்கமானவர்களாக ஆக்குகிறதா? அதைத்தான் நாம் கம்பீரம் என்றும், மரபென்றும் எண்ணிக் கொள்கிறோமா? அந்தக் கைகள் கொஞ்சம் தளர்ந்தால், விவசாயத்திற்கு மட்டும் முட்கரண்டிகளை பயன்படுத்துவோம் எனில் நாம் இன்னமும் மேலானவர்களாக ஆவோமா?

எமிலியின் வீடு கடந்த காலத்தை பரிதாபமாக பதுக்கிக் காப்பது எனில் இங்கே அது அதிகாரமாக வெளிப்படுகிறது. எமிலியில் அடக்கப்பட்ட காமம் இங்கே கன்னிப் பெருமிதமாக,  ஒழுக்கத்தின் இறுக்கமாக இருக்கிறது. இரு படைப்பிலும் காலம் உறைய வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலம் அதிகாரத்தின், இறுக்கத்தின் வடிவில் நிகழ் காலத்தை காவுகிறது (haunting).

[மேலும்…]

ஏ.வி மணிகண்டன்

ஆசிரியர் குறிப்பு: பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஏ.வி.மணிகண்டன், கலை இலக்கிய விமர்சகரும்கூட. காண்பியல் கலை சார்ந்தும் நவீன கவிதைகள் சார்ந்தும் தமிழில் விரிவான திறனாய்வுகள் எழுதியிருக்கிறார். இந்திய தத்துவம் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. ஒவ்வொரு பண்பாடும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் பழம் பெருமிதிங்களில் உறையும் ஆழமான சமூக மன வெளிப்பாட்டை அழகாக காட்டுகிறது. சம காலகட்டத்தின் ஓவியத்திலும், இலக்கியத்திலும் அது வெளிப்பட்ரிப்பதை ஒப்பீடு செய்து காட்டியிருப்பது இன்னும் அர்த்தம் கொள்கிறது. உளவியல் நோக்கில் வாசிக்கும் போது, அதே அர்த்தம் இன்னும் கூர்மையாக பல்நோக்கில் விரிகிறது, ஆனால் சென்று சேரும் புள்ளி ஒன்றே. கோதிக் கதை என்பதால் வாசித்து முடித்தவுடன் வைக்கப்பட்ட ரோஜா அனுதாபத்தின் வெளிப்பாடா? அல்லது மரியாதையின் குறியீடா? என்ற சந்தேகம் எழுகிறது. எடுக்கப்படாத சடலமும், வைக்கப்படாத ரோஜாவும் கொஞ்சம் பயத்தை உண்டுசெய்கிறது.

    பி.கு. எமிலிக்கு ஒரு ரோஜா – தமிழினி இணையதளத்தில் வாசிக்க கிடைக்கிறது.

  2. கோத்திக் கலை என்பது ஐரோப்பிய தேவாலயக் கலை என்ற எளிய புரிதல்தான் எனக்கு இருந்திருக்கிறது. ஏ வி மணிகண்டனின் இத்தொடர் கோத்திக் பண்பாட்டு வரலாறையும் ஐரோப்பியர்களின் உளவியலையும் கலைக்கும் வரலாறுக்கும் இடையிலான குறுக்குமறுக்கான உறவையும் ஆழமாக விவரிக்கிறது. அமெரிக்கன் கோத்திக் ஓவியத்தின் அம்சங்களை நம்மை ஆழமாகப் பார்க்கவைத்து வில்லியம் ஃபாக்னர் படைத்த இன்றைக்கும் வாசிக்கும்போது அழியாத எழிலைத் தக்கவைத்திருக்கும் ‘எமிலிக்காக ஒரு ரோஜா’வை ஆழமாகத் திறந்துகாட்டியது எனக்கு மணிகண்டன் அளித்திருக்கும் பரிசு. அப்படி அவர் திறந்துபார்க்கும் வகையில் தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளில் ஒன்றான தஞ்சை பிரகாஷின் ’மேபல்’ கதையை நாம் வாசித்து உரையாடி விரித்து விவாதிக்கலாம்..அது அழியாச் சுடர்களில் வாசிப்பதற்கும் கிடைக்கிறது

    https://azhiyasudargal.wordpress.com/2010/09/18/மேபல்-தஞ்சை-பிரகாஷ்/

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss