மலர்களை நசுக்கும் குற்றத்தின் வீச்சம் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

யசுனாரி கவபட்டாவின் "உறங்கும் அழகிகளின் இல்லம்" நாவலை முன்வைத்து

“மனிதாபிமானமில்லாத எந்தச் செயலும் பழக்கத்துக்குள்ளாகும்போது அது மனித இயல்பை அடைந்துவிடுகின்றன.” 1961 ஆம் ஆண்டு ஜப்பானிய எழுத்தாளர் யசுனாரி கவபட்டா எழுதிய “உறங்கும் அழகிகளின் இல்லம்” நாவலில் வரும் வாக்கியம்தான் அந்தப் படைப்பின் இன்றைய பொருத்தப்பாட்டை கவனிப்பதற்கான ஒரு குறிப்பு.

67 வயதில் முதுமையின் நலிவுக்குள் எட்டுவைக்கும் எகுச்சியின் நண்பர் கிகாவின் ஆலோசனையைக் கேட்டு, உறங்கும் அழகிகளின் இல்லத்தை நாடி வருவதில் இந்த சிறிய நாவல் ஆரம்பிக்கிறது. நிர்வாணமாய் ஆழ்ந்த உறக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு அழகியுடன் உறங்கமுடிவதற்கான இடம் அது. அந்த இல்லத்தைப் பராமரிக்கும் 40 வயதுப் பெண், உடன் உறங்கும் அழகியிடம் மோசமாக நடந்துகொள்ளக் கூடாது என்பதே அந்த இல்லத்தின் விதியென எச்சரிக்கிறாள்.

ஐந்து வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு வயதுகளைச் சேர்ந்த அழகிகளுடன் எகுச்சி அடையும் அனுபவமுமே இந்த நாவல். தளர்ச்சியையும் முதுமையையும் அருகாமையில் மரணத்தையும் மட்டுமே வாழ்வின் ஒரே சாத்தியமாகக் கொண்ட கிழவர் என்று தன்னை உணர்கிறார். வயோதிகத்தின் சுமையை மறந்து, உடைகளை நீக்கி அம்மணமாக்கிக் கொண்டு, இறகுபோல எகுச்சி போன்றவர்களை உணரவைக்கும் மாத்திரைகளைத் தந்து, மரணம் போன்ற உறக்கத்தை நல்கும் இல்லம்தான் அது.

முதல் நாள் பெரியவர் எகுச்சி தனக்காக உறங்கவைக்கப்பட்டிருக்கும் அழகியின் அறைக்குள் நுழையும்போது, ஜன்னல் வழியாக கடல் அலைகள் பாறையில் மோதும் சத்தம் கேட்கிறது.

சிறுவயதில் புற்றுநோயில் இறந்துபோன ஜப்பானிய பெண் கவி ஒருத்தி எழுதிய கவிதையை எகுச்சி நினைவுகூர்கிறார். “தேரைகள் மற்றும் கருப்பு நாய்கள் மற்றும் நீரில் மூழ்கிய சடலங்கள்தான் இரவு அளிக்கும் படையல்” என்ற வரியைப் படிக்கும்போது அச்சானியம் நமக்கு மெலிதாகப் படரத்தொடங்குகிறது. கருஞ்சிவப்புத் திரைச்சீலைகள் ஜன்னலில் போடப்பட்டிருக்கும் அறைக்குள் எகுச்சி நுழைகிறார். உறங்கும் அழகிகளின் இல்லத்தைப் பராமரிப்பவள், இங்கு வரும் முதியவர்களுக்கு அவர்களது இளம்வயது ஞாபகங்களை எழுப்பும் இடம் இது என்று சொன்னது ஞாபகத்துக்கு வர, நிர்வாணமாய் உறங்கும் அழகியை கண்களால் அங்கம் அங்கமாகப் பார்வையிடத் தொடங்குகிறார். இல்லத்தைப் பராமரிப்பவள் இடதுகை பழக்கமுள்ளவள். அவள் அணிந்திருக்கும் அங்கியின் பின்புறத்தில் இருக்கும் ஓவியப் பறவை, அவளின் பதற்றத்தை முகத்தில் வைத்திருப்பதாக எகுச்சி கவனிக்கிறார்.

உறங்கும் அழகியின் கைகளைத் தொட்டு எடுத்து தன் உள்ளங்கையில் வைத்துக்கொள்கிறார். அவளது தேகத்தின் கதகதப்பு சிறுவயதில் பார்த்த காதலி ஒருத்தியை ஞாபகப்படுத்துகிறது. அவளுடன் உறவுகொள்ளும்போது, மார்பிலிருந்து கசிந்த ரத்தத்தின் மணமும் பால்மணமும் சேர்ந்து அவருக்கு ஞாபகத்துக்கு வருகிறது. பால்மணம் அவர் தூக்கி வளர்த்த அவரது மூன்று மகள்களின் குழந்தைப் பருவத்துக்குக் கொண்டுபோகிறது. முதல்நாள் முதல் அழகியிடம் அந்த இல்லத்தின் விதிகளுக்குப் புறம்பாக பெரிதாக அத்துமீறாமல் இரண்டு மாத்திரைகளையும் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிட்டு நளிநாகரிகத்துடன் உறங்கிப் போகிறார்.

ஐந்து அழகிகளைச் சந்திக்கும் தருணங்களிலும் அந்த இல்லத்தைச் சுற்றியும், எகுச்சியின் நினைவிலும் மலர்கள் விதவிதமாக விவரிக்கப்படுகின்றன. அந்த இல்லம் இருக்கும் சூழலையும் ஒவ்வொரு தருணமும் இந்த மலர்கள் மாற்றிவிடுகின்றன. எகுச்சியின் சிறுவயது நினைவுகள், அதீதக் கற்பனைகள், உணர்வு நிலைகளை பிரதிபலிப்பவையாக மலர்கள் இருக்கின்றன.

பியோனி மலர்களும் தேயிலைப் பூக்களும் எகுச்சியின் சிறுவயது காதல், திருமணம், குடும்பம், குழந்தைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன. கிழவர் அமைதியாகவும் அத்துமீறாமலும் இருக்கிறார்.

கருங்குவளை, ஆர்க்கிட் மலர்கள் நுழையும்போது, கிழவருக்கு மாயத்தோற்றங்களும், மரணம் சார்ந்த நினைவுகளும் ஊற்றெடுக்கிறது. நான்காவது பெண் மிகவும் மெலிந்தவள். வயதிலும் சிறுமி எனச் சொல்லத் தகுந்தவள். உதிர்ந்துவிழும் மேப்பிள் இலைகளோடு வண்ணத்துப்பூச்சிகள் ஒன்றிரண்டு மூன்றாகப் பறக்கத்தொடங்கி கொத்துக்கொத்தாக ஆகிறது. அந்த சிறுமியின் மார்பு அவருக்கு வெள்ளை வண்ணத்துப்பூச்சிகளின் படை திரண்டெழுவதைப் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.

சிவப்பு டாலியாக்கள் வரும் இடத்தில் மிக இருண்ட தன்மைக்குள் கதை போகிறது. கிழவர் கடைசியாக சந்திக்கும் பெண்ணுக்கு நிகழும் துயரத்தோடும் நாவலின் ஒட்டுமொத்த பயங்கரத்தோடும் தொடர்புடைய சின்னமாக அது ஆகிவிடுகிறது.

கடைசிப் பெண்ணிடம் தாயை உணர்கிறார். தாயின் முலைகளைப் பற்றிப் பிடிக்கும் காட்சியும் அவருக்கு உறக்கத்தில் எழுகிறது.  

Francesca Woodman, Untitled, 1979 (Courtesy : Aperture)

முதல் அழகியிடம் மென்மையாக நடந்துகொள்ளும் கிழவர் எகுச்சிக்கு அடுத்தடுத்து உடன் உறங்கும் அழகிகள், அவரது செயலின்மையையும் கையாலாகாத்தனத்தையும் ஞாபகப்படுத்துபவர்களாகத் தெரிகிறார்கள். இதுபோன்ற இல்லங்களில் அசிங்கமாக தளர்ந்துபோய் பெண்கள் இருப்பார்கள் என்று நினைத்துவந்த அவருக்கு ஒவ்வொரு அனுபவமும் தீராத மாயத்தன்மையைத் தருகிறது. அதேநேரத்தில் அந்த இல்லத்தின் விதிமுறைகளை மீறும், கேள்விகேட்கும் வேகத்தையும் தருகிறது. கிழவர்களின் முன்னால் ரோஜாக்களைப் போல கன்னிகளாக உறங்கும் அழகிகள் அவருக்கு உள்ளூர வன்முறை உணர்வை எழுப்புகிறார்கள். எந்த எதிர்வினையும் இல்லாமல் இருக்கும் அழகிகளை கைகளால் தூக்குகிறார். வாய்க்குள் விரலைவிடுகிறார். உதட்டுச் சாயத்தை எடுத்து ரத்த வடுக்கள் போல அவர்கள் மேல் தடவி ரசிக்கிறார். மெதுமெதுவாக தனது எல்லைகளை மீறுகிறார்.

கிழவர் எகுச்சி உறங்கும் அழகிகளின் இல்லத்துக்குள் இருக்கும்போது உணரும் அனுபவங்களின் விவரணையும் நுட்பமான விவரணைகளால் ஆனது. கிட்டத்தட்ட சடலங்கள் போல உறங்கும் ஒவ்வொரு அழகிக்கும் அவர்களுடைய செயல்படாமையைத் தாண்டி, உறக்கத்திலும் தனிஜீவிதம் ஒன்றை கவபட்டா வழங்கியிருக்கிறார். ஜப்பானில் ஏதோவொரு மூலையில் ரகசிய சமூகம் இயங்கும் ஒரு வீடென்று முதலில் இந்த இல்லம் அறிமுகமானாலும் மெதுவாக, இன்றைக்குப் படிக்கும் சூழலில், நம் எல்லாருடைய வாழ்க்கையிலும் அடியோட்டமாக இயங்கிக்கொண்டிருக்கும் குற்றங்களின் உலகம்தான் என்ற தோற்றத்தை முடிவில் ஏற்படுத்திவிடுகிறது.

இல்லத்துக்கென்று விதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் விதிகளை மீறிச் செயல்படும் குற்றவாளிகளே பெரும்பான்மையாக நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறது இந்த நாவல்.

கடைசி அழகியின் மரணம் நேர்ந்தபிறகு, அவளது சடலம் எடுத்துச்செல்லப்படும் நிலைமையும் அங்கே அதுபோன்ற நிகழ்ச்சிகள் சகஜமே என்று எகுச்சிக்குத் தோன்றச் செய்வதும் (உடனடியாக மாற்றுக்கு இன்னொரு உறங்கும் அழகி இருக்கும் அறைக்கு அனுப்பவும் படுகிறார்). பயங்கரங்கள் மூலையில் அல்ல, நமது மையத்தில் நடக்கின்றன; பயங்கரங்கள் அபூர்வம் அல்ல; பயங்கரங்களும் அநீதியுமே இந்த உலகின் நியமம் என்பதை உறங்கும் அழகிகளின் இல்லம் நாவலுக்கு வெளியேயும் நம்மை உணரவைப்பதே அதன் வெற்றியும் நாம் வந்துசேர்ந்திருக்கும் இடம் மற்றும் காலத்தின் தோல்வியும் ஆகும். அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கி இந்தியா வரை அரசியல் முதல் பண்பாடு, கலை வடிவங்களிலும்கூட சர்வாதிகாரிகளாக உலவும் குற்றவாளிகள் புழங்கும் இல்லமாகவே, குழந்தைகளுக்கு இந்த உலகத்தை நாம் பரிசளித்துவிட்டிருக்கிறோம். குழந்தைகளையும் சிறுமிகளையும் உலகப் பணக்காரர்கள், ஆட்சியாளர்களின் வக்கிரப் பசிக்கு இரையாக்கிய எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளும், விபரீதக் காட்சிகளும் அதைத் தொடர்ந்து உலக யுத்தம் போன்ற நிகழ்ச்சியை நோக்கி நகரும் மோதல்களின் சந்தடியும், உறங்கும் அழகிகளின் இல்லம் புனைவை வெளியேயும் நிஜமாக்கிக் கொண்டிருப்பது அவலம்.

டிரம்ப், பெஞ்சமின் நேதான்யாகு போன்ற வல்லாதிக்க வயோதிகர்களிடமிருந்துதான் நாம் நம் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறோம்? கற்பனையின் அந்தத்தில் மரணம் மட்டுமே முன்னால் ஒரே சாத்தியமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்தக் கிழவர்களின் அச்சம், பீதி, வக்கிரங்களிலிருந்து எப்படி இந்த உலகத்துக்குக் குணத்தை எப்படி அளிக்கப்போகிறோம்? மரணத்தின் அச்சம்தான் எகுச்சியையும் இந்த உலகத்தின் செல்வாக்கும் வளமும் அதிகாரமும் படைத்த கிழவர்களையும் ஆசை, அதிகாரம், காமத்தால் உந்தப்பட்டு எல்லாவற்றையும் கசக்கிப் பிழிந்து சுவைப்பதற்கு இட்டுச்செல்கிறது.

உறங்கு அழகிகளின் இல்லத்தில் கிழவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு மாத்திரைகளில் முதல் மாத்திரை மெல்லுறக்கத்துக்கும், அடுத்த மாத்திரை வல்லுறக்கத்துக்கும் இட்டுச்செல்பவை. இப்போது நாவலுக்கு வெளியே உள்ள சூழ்நிலையைப் பார்க்கும்போது இந்த இரண்டு மாத்திரைகளும் வேறு பொருள் கொண்டதாக மாறிவிடுகின்றன.   

பலவீனமான ஒரு உயிர்  மனிதனின் கையில் நிராயுதபாணியாக நிராதரவாகக் கிடைக்கும்போது, அந்த உயிரைத் துன்புறுத்தாமல் வாழ்வதற்கு மனித இனம் இத்தனை நாகரிகத்துக்குப் பிறகும் கற்றுக்கொள்ளவில்லை. இதைத்தான் இன்றைய நிலைமையும், உறங்கும் அழகிகளின் இல்லத்துக்குள் நடப்பதும் நமக்குக் காட்டுகிறது. காமம், மோதல், நுகர்வு, அதிகாரத்துக்கு முன்னால் பண்பாடு, அறம், அறிவு எனப் போர்த்திய போர்வைகள் எல்லாம் கிழிந்து தொங்குகின்றன. மேற்கென்றும் கிழக்கென்றும் வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு பௌத்த மறைஞான நூல் போன்ற தொனியில், முகமூடியில் யசுனாரி கவபட்டா இந்த நிதர்சனத்தைச் சுட்டுகிறார்.

“குறிப்பிட்ட வகையில் இந்த நாவலுக்கு ஒரு வாசிப்பை வழங்கிப் பார்க்கும்போது, பிலிம் நெகட்டிவ் போலத் தோற்றமளிக்கிறது. அதிலிருந்து நாம் ஒரு பிரிண்டைக் கழுவியெடுத்துப் பார்க்கும்போது, நாம் வாழும் முழுநாளும் அதன் ரகசியங்களோடு பகிரங்கமாகிவிடும். அது அளிக்கும் ஒவ்வொரு விவரமும் நமது பட்டவர்த்தனமான பாசாங்கு வாழ்க்கையைத் தெரிவித்துவிடும்” என்கிறார் கவபட்டாவின் சமகாலப் படைப்பாளியான யூகியோ மிஷிமா.

கவபட்டா நிர்வாணமாய் உறங்கும் அழகிகளை அதீதமான நுட்பத்துடன் விவரிக்கிறார். எகுச்சியுடன் உறங்கும் அழகிகள் அனைவரையும் கவபட்டா தனது சொற்களாலேயே அரவணைக்கிறார் என்று தோன்றுமாறு விவரிக்கிறார்.

ஆனால், ஒரு பெண்ணை உடலாக பார்க்கும்போது அந்த ஆணின் காமப்பார்வையில் காட்சிப்பொருளாகப் பார்க்கும் இயல்பும் சேர்ந்தே வந்துவிடுகிறது என்று மிஷிமா கூறும்போது, நான் பெண்ணைக் காட்சிப்படுத்திய எத்தனை கவிதைகள் மனிதாம்சத்துடன் உயிராம்சத்துடன் அவளை அணுகியிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. இந்த உணர்வு எழாமல் இந்த நாவலை ஒரு எழுத்தாளனும் படிக்க இயலாது.

யசுனாரி கவபட்டாவின் ‘உறங்கும் அழகிகளின் இல்லம்’ நாவலுக்கான புகழாஞ்சலியாக, The Airplane of the Sleeping Beauty சிறுகதையை எழுதியுள்ளார்.  

யசுனாரி கவபட்டா

காமத்துக்கு அருகே வன்முறை, காமத்துக்கு அருகே மரணம் இரண்டையும் வைத்து யனாரி கவபட்டா ஆழ்ந்த பரிசீலனையை ஒரு தியானம் போல இப்படைப்பில் செய்துள்ளார். எல்லா யுத்தங்களும் குழந்தைகள், சிறுமிகள் மீதே நடைபெறும் ஒரு எதார்த்தம், எனக்குப் புலனாகி ஒரு முடிவை நோக்கிச் செல்கிறோம் என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வெள்ளைப்பரப்பின் மீது ரத்தத்தின் சிவப்பைப் பார்க்கும் உந்துதல் எதிலிருந்து நமக்கு எழுகிறது.எகுச்சியின் நண்பர் கிழவர் கிகா, தோட்டத்தில் பரவலாக உதிர்ந்துகிடக்கும் களாப்பழமொன்றைப் பொறுக்கி கையிலெடுத்துப் பார்க்கும்போதுதான் இந்த உறங்கும் அழகிகளின் இல்லத்துக்கு அவரை ஆற்றுப்படுத்தும் வேளை முக்கியமானது. 

யுத்தங்கள் வெளியிலும் உள்ளேயும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. படிப்படியாக அவை நம்மை இட்டுச்செல்லும் பயங்கரங்களின், அவநம்பிக்கைகளின் அடுக்கடுக்கான தன்மைகளைப் பார்க்கும்போது, காஃப்காவின் விசாரணை நாவலில் யோசப் கே.வின் முடிவுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

மனிதாபிமானம் மற்றும் ஒழுங்கின் வரம்புகளை ஆராயும் இயக்குனர் கிம் கி டுக்கின் ‘ஹியூமன், ஸ்பேஸ், டைம் அண்ட் ஹியூமன்’ திரைப்படத்தில் அந்தரத்தில் சிக்கிய போர்க் கப்பலில் வாழ்க்கை படிப்படியாகச் சிதையும் காட்சிகளும் ஞாபகத்தில் வருகின்றன.

உலகின் இருட்டுக்குள் அனைத்துவகை அத்துமீறல்களும் புதைக்கப்படுகின்றன என்கிறார் யசூனரி கவபட்டா. அந்த வாக்கியத்திலிருந்து மட்டும் இன்றைய வாசகனாக நான் மாறுபடுகிறேன். அனைத்துவகை அத்துமீறல்களும் பட்டவர்த்தனமாக அரங்கேறுகின்றன என்றே எனக்குச் சொல்லமுடிகிறது. சென்ற நூற்றாண்டில் நவீனத்துவம் உண்டாக்கிய பெருங்கனவுகளையும், மனிதகுலம் தொடர்பாக இருந்த மேலான நம்பிக்கைகளையும் சீக்கிரமே நாம் திவாலாக்கிவிட்ட நிலையில் யாருக்கும் எதையும் மறைத்துச் செய்வதற்கான எந்தத் தேவையும் இல்லை.  

யோசப் கே., சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சந்தித்த அந்த இழிவு நமக்குப் பின்னும் தொடரவே செய்யும் என்பதைப் போல.   

OOO

(இந்நூல் தமிழில் எதிர் பதிப்பகத்தால் வெளியிடப்படுள்ளது. அரிசங்கர் மொழிபெயர்ப்பு)

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss