
1
பெரியம்மா அங்கு எப்படி வந்து சேர்ந்தாள் என்பது இப்போதுவரைக்கும் குழப்பம்தான். ஆனால் அவள் அங்கு வந்திருந்தாள். கைவிடப்பட்ட ஓராயிரம் பொருள்களுக்கு மத்தியில், அவளுக்கு மற்றவர்கள் மீது காட்டிய அபரிமிதமான அன்புக்கு ஈடாக இல்லையெனினும், சற்று குறைச்சலாகவாவது அன்பு தர யாருமே இல்லாது போனதை இந்த உலகம் கைக்கட்டி வேடிக்கை பார்க்கமாலாவது இருந்திருக்கலாம். அவள் எளிதில் மனநிலை குலைந்துபோயிருக்க மாட்டாள்.
அம்மாதான் முதலில் அவளை கண்டாள். முகமெல்லாம் நகக் கீறல்களும், மண்ணில் விழுந்து படுத்ததால் முகத்தோலில் அழுந்தி போன கற்களின் தடங்களுமாக பார்க்கவே கோரமாக இருந்தாள். முடிக் கற்றைகள் ஒன்றோடு ஒன்று பின்னி தேங்காய் நார் போல இருந்தது.
என் மகளுக்கு மொட்டையடிப்பதற்காக சேவாத்தாள் முன்பு கூடியிருந்த எல்லோரும் ஒரு நிமிடம் திடீரென சூழலில் ஏற்பட்ட அமைதியால் சுதாரித்து பின்னர் பெரியம்மாவை அடையாளம் கண்டுகொண்டோம்.
தங்கச்சி மகன் என் கையை பற்றியிருந்த இறுக்கத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்டு அவனின் பாதி உடலை என் வலக்காலினிடையே ஒளித்துக் கொண்டான்.
நான் முன்னேற முடிவெடுத்த போது அவன் பிடியை தளர்த்திவிட்டு பக்கத்தில் நின்ற மாப்பிளையிடம் சரணடைந்தான்.
“வா, பெரியம்மா”
அவளுக்கு கேட்டிருக்காது. அல்லது அவளுக்கு கேட்காத குரலில் நான் பேசியிருக்கலாம். வெறித்து பார்த்தாள். பார்வையில் பல ஆண்டுகளாக தகித்த வெப்பத்தை உணர முடிந்தது. ஆனால் அது குறிப்பிட்டு யார் மீதும் இல்லாததுபோல, தன் மீதான தகிப்பாக நொடியில் மாறி வெளிப்பட்டது.
அவள் கையில் கட்டியிருந்த சிவப்பு நிற கயிறு நிறம் மங்கி போயிருந்தது. தோள்கள் தளர்ந்திருந்தன. ஒரு பக்க முலைக்கான இடம் வெற்றிடமாக இருந்தது பெரியம்மாதான் என்பதை உறுதிப்படுத்தியது.
நம்ம குடும்பத்திலேயே குங்குமப் பூ கலர்ல பிறந்தது உங்க பெரியம்மாதான் என அம்மா சொல்வாள். அவளா இது?
தங்கச்சி அதற்குள் நிலைமை உணர்ந்து பெரியம்மாவை அழைக்க முன்வந்தாள். அவள் பெரியம்மாவின் கையை பற்றி முன்னிழுத்தாள்.
பெரியம்மா மறுப்பேதுமின்றி முன்நகர்ந்தாள். காற்றின் தொடுகைக்கு உதிர்ந்துவிடுகிற கனிந்த இலையை போல அவள் அழைத்தவரின் விருப்பத்துக்கேற்ப அசைந்தாள்.
முன்பின்னாக ஒன்றோடுன்று பதிக்கப்பட்டிருந்த கோயில் பிரகார கற்களில் அவளின் பிளவுபட்ட பாதங்கள் நகர்ந்தன. அவள் நடக்கும்போது பெரிதாக சிரமமேதும் படவில்லை. காற்றே நகர்த்தி செல்வதுபோல நடை இருந்தது. அத்தனை எடையற்று ஆகியிருந்தாளா. உட்புறத்தில் கனம் ஏதும் இல்லையெனினும் அப்படி எளிதில் நடந்துவிட முடியலாம்.
வைரவர் சந்நிதிக்கு வலது பக்கமாக இருந்த அடி குழாயில் அவளை அமரவைத்து தங்கையும் நிவேதாவும் சேர்ந்து அவள் மீது நீரை ஊற்றினர். அதற்குள் பெண்கள் குழாம் அவர்களை சூழ்ந்துகொண்டது. நீளமான ஜமுக்காளத்தை திரையாக மாற்றி மாப்பிள்ளையும் அய்த்தானும் பிடித்துக்கொள்ள அவள் குளிக்க வைக்கப்பட்டிருந்தாள்.
பேத்திக்கு மொட்டை போடுற சேதி பெரிய அப்பத்தா காதுக்கு எப்படியோ எட்டி அவள் கிளம்பி வந்ததாக கூடியிருந்தவர்கள் பேசிக் கொள்வது காதில் விழுந்தது.
பெரியம்மா தொலைந்து போய் ஆறு வருடங்கள் இருக்குமா. இருக்கலாம். அவளாக தொலைந்து போனாளா. இல்லை நாங்கள் தொலைத்தோமா.
2
அன்றைக்கு என் மீதான கோபத்தில் வீடே பற்றி எரிந்து கொண்டிருந்தது. பெரியம்மாதான் எனக்கு ஆதரவாக நின்றாள். இப்போ என்ன செய்துட்டானு அவனை எல்லோரும் சுத்தி நின்னு பேசுறீங்க. பிடிச்ச பொண்ண கூட்டிட்டு வந்துருக்கான். அதுனால என்ன ஆகி போச்சு.
பெரியப்பா, “நீ பேசாம இரு, வள்ளி. நீ கொடுக்கிற இடத்தாலதான் அவன் ஆடுறான்.”
அவர் இரண்டு வார்த்தைகள் கோர்வையாக பேசுவது இதுபோலான சண்டைகளில் மட்டும்தான். அல்லது மதுவின் தெம்பில் இன்னொரு மனிதராக ஆனாரென்றால்.
என் பின்னால் நிவேதா நின்றிருந்தாள். அவள் முகத்தில் தெளிவும் குழப்பமும் இரண்டற கலந்திருந்ததை பார்க்க முடிந்தது. அங்கு நடக்கிற நிகழ்வுகளுக்கு வெவ்வேறு பாவனைகளை சூடிக் கொள்ளும் அவள் முக அழகை ரசித்துகொண்டிருந்தேன்.
இத்தனை மைல் தொலைவு அவள் வந்தது என் மீதான நம்பிக்கையால் அல்ல. அவள் மீதான அவளின் நம்பிக்கை என தெரிந்ததாலே என்ன நடந்தாலும் பரவாயில்லை என கையை பிடித்து அவளை வீட்டுக்குக் கூட்டி வந்தேன்.
இந்த பிரச்னையில் பேச வேண்டிய அம்மா மூலையில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு நான் செய்ததோ பெரியம்மா செய்துகொண்டிருப்பதோ உவப்பானதாக இல்லை.
பெரியம்மா போல அதிர்ந்து பேச மாட்டாதவள் எனினும் தனது வஞ்சத்தை எப்படியேனும் தீர்த்துக்கொள்வாள்.
அல்லது அப்பாவை நினைத்துகொண்டிருக்கக் கூடும். பிரச்னைகளின்போதும் சந்தோசங்களின்போதும் அவள் பேசுவதை காட்டிலும் இப்படி அமர்ந்திருப்பதே பெரும்பாலான நேரங்களில் காணக் கூடியது.
தங்கச்சி இதனை எதிர்ப்பாள் என நான் நினைக்கவே இல்லை. “என்ன ண்ணே இப்படி பண்ணிட்டு வந்து நிக்குற” என அவள் பேசியது யாரை விடவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
சின்ன ஐயா நான் கூப்பிட்டதன் பேரில் வந்திருந்தார். வீட்டில் சொல்லிக் கொள்ளும் பெரியவராக அவர் மட்டுமே இருப்பதால் தங்கச்சியின் கல்யாணம் தொடங்கி பலவற்றுக்கும் அவரே வந்து முன்னால் நிற்க வேண்டியிருந்தது.
பெரியப்பாவின் ஆத்திரம் குறையவில்லை. பால் கறக்கிறவுகளும் நாமளும் சரி சமமா எனச் சீண்டியது நிவேதாவின் மூக்கில் சிவப்பின் கறைகளை உண்டு செய்தது. அவளின் மெருதுவான கையை நான் சற்று அழுத்த வேண்டியதானது.
அவரின் கறை படிந்த பற்கள் உதிர்க்கும் சொற்களின் தெறிப்புக்குக் கூடுதல் ஒளியை பளபளக்கும் கழுத்து ஆபரணம் அளிக்க, அவர் பேசிக்கொண்டே போனதை கட்டுப்படுத்த முடிகிற ஒரே ஆள் பெரியம்மா மட்டும்தான்.
“இப்போ சாதி என்னவா இருந்தா என்ன. முத்தும் பவளமுமா இங்க புழங்கிட்டு இருக்கு. எங்க ஆத்தா பார்க்காத வேலையா. அவ வீட்டுல மாடு வளர்த்து பால் கறந்து படிக்க வச்சுதான் என்னையும் தங்கச்சியும் கறை ஏத்துனா. என்னைய கட்டிக்க வந்தப்போ பால் வித்த காசுன்னு தெரிஞ்சதால 25 பவுன வாங்காம விட்டீகளா என்ன”
எதை கேட்டால் அவர் வாயை மூடுவார் என்பது பெரியம்மாவுக்கு தெரியும். ஆகிருதையாக இருந்தவள், நீ வாம்மா என நிவேதாவை கையை பிடித்து இழுத்து உச்சி முகர்ந்தாள். அவள் கைகளில் கோழிக்குஞ்சு போல நிவேதா அகப்பட்டு விழித்தாள். சற்றைக்குள் மருளல் அழுகையாக மாறியது.
3
நிவேதா பெரியம்மாவை இந்த கோலத்தில் பார்த்ததும் முதலில் கண்ணீர் விட்டாள். மகளுக்கு மொட்டை போட பேச்சு எடுத்தபோது உங்க பெரியம்மா வருவாங்களாடா எனக் கேட்டவள் அவள்தான்.
பெரியம்மாவை தேடிக் கொண்டே இருந்தோம். அவள் தங்கியிருந்த மூத்தோருக்கான இல்லத்தில் இருந்து ஒரு அமாவசை நாளில் தொலைந்து போன சேதி வந்து சேர்ந்ததில் இருந்து வாரம் ஒரு முறை தவறாமல் அவர் குறித்த தகவல் கிடைத்ததா என காவல் நிலையத்துக்கும் அவள் தங்கியிருந்த முதியோர் இல்லத்துக்கும் அலைவதும் தாக்கல் எதுவுமில்லை என திரும்புவதும் வழக்கமாக நடந்து கொண்டே இருந்தன.
பெரிய மாமி மேல அப்படி என்ன பிரியம் என யார் கேட்டாலும் அவள் கலங்கிவிடுவாள்.
நிவேதாவுக்கு அம்மா இல்லை. அவள் வளர்ந்தது அப்பாவிடம். பெரிய மாமிக்கு நான் மகளாக பிறந்திருக்கலாம் என வாய்விட்டே சொல்லியிருக்கிறாள். மாமிக்கு குழந்தையா நீ இருந்தா எனக்கு தங்கச்சி முறையாவாதா என நானும் சீண்டியிருக்கிறேன்.
பெரியம்மாவுக்கு குழந்தைகள் இல்லை. என்னையும் தங்கையையும் அவள் குழந்தைகளாக நினைத்து கொண்டாள். நான் அவளிடம் சின்ன வயதில் வளர்ந்ததால் தங்கச்சியை காட்டிலும் என்னிடம் கூடுதல் அன்புடனே இருப்பாள்.
செம்மண் ஊடாக அவளை குளிப்பாட்டிய நீர் பாய்ந்து சென்றதை ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். புதிதாக சேவாத்தாளுக்கு கொண்டு வரப்பட்ட சேலை ஒன்றை பெரியம்மாவுக்கு சுற்றி விட்டபோது யாரும் கேள்வி கேட்கவில்லை.
அவள் மெலிந்திருந்தாள். கைகள் ஆதாரமின்றி காற்றில் பறந்தன. நிவேதா என்னருகில் வந்தபோது, “எதுவும் பேசுனாங்களா” எனக் கேட்டேன்.
“இல்லை” என்றவள், மீண்டும் பெண்களுக்கு மத்தியில் சேர்ந்து கொண்டாள்.
திருநீறை அள்ளி பட்டையாக பெரியம்மா முகத்தில் மனோகரி ஆயா அள்ளி நெற்றியில் பூசியதும் எதற்காக கூடியிருந்தோமா அந்த நிகழ்வை தொடங்கினோம்.
நீரில் நனைந்த முடிக்கற்றை இலகியிருக்க முகத்தில் என்னவென சொல்ல இயலாத அமைதியோடும் வெருளும் கண்களோடும் பெரியம்மா சேவாத்தாளை பார்த்தபடி அமர வைக்கப்பட்டாள்.
கிழக்கு பார்த்த அய்யனார் கோயிலில் தெற்கு பார்த்த சந்நிதியாக சேவாத்தாள் அமர்ந்திருந்தாள்.
முத்தப்பர் சேவாத்தாவுக்கும் அய்யனாருக்கும் இல்லாமல் பொதுவாக ஒரு திசையில் கைக்கூப்பி சிலையாக நின்றுக் கொண்டிருந்தார்.
ஆதிரைக்கு மொட்டையடித்து சந்தனம் பூசி காது குத்தும் நிகழ்வு நடந்துக்கொண்டிருந்தது.
ஆதிரையின் தலையை பூவாக கையில் ஏந்தி, நிவேதாவின் மாமன் முறையில் அமர்ந்திருந்த என் நண்பன் சுகுமார், ஆசாரியின் கைக்கு வாகாக குழந்தையின் தலை இருக்கும் மடியை அருகில் கொண்டு சென்றான்.
பெரியம்மா அமர்ந்த கோணத்திலோ பார்வையிலோ எந்த மாற்றமும் இல்லை. பொட்டல் காற்றுக்கு பூவரச மரத்திலிருந்து பூக்கள் உதிரும் சத்தமே பெரிதாக கேட்கும் சூழலின் அமைதியை ஆதிரையின் கீச்சொலி கிழித்து பரவியது.
பெரியம்மா வந்ததில் இருந்து முதன்முறையாக கண்ணசைத்ததை அப்போது நான் பார்த்தேன்.
4
இந்த வீடு ஒன்னுமில்லாமல் போனதுக்கு குடியும் ஒரு காரணம் என சுய நினைவோடு இருக்கும்போதெல்லாம் பெரியம்மா புலம்புவாள். அவள் சொல்வதில் பிழையில்லாமல் இல்லை. தாத்தா தொடங்கி அப்பா வரை அந்த சாபம் குடும்பத்தை ஊடறுத்து இருந்தது. அது பெரியப்பாவையும் விடாது தொடர்ந்ததில் பெரியம்மாவுக்கு தாங்க முடியாத எரிச்சல்.
பெரியப்பா வீடு திரும்புகிற வேளை ஒவ்வொரு நாளும் மாறும். அதுவரை வாசலிலேயே மெலிந்த நாயோடு அமர்ந்திருக்கும் அவளை வயக்காடு வேலை, கட்டிட வேலையெல்லாம் முடிந்து, பால் நிறத்தில் இருக்கும் கண்மாயில் விழுந்து எழுந்து வீடு நோக்கி செல்லும் ஊரார் யாரும் கேட்காமல் போக மாட்டார்கள்.
பெரியப்பா வீடு சேரும் கதை ஊருக்கே தெரிந்திருக்கும். குடித்து காசை அழித்தது மட்டுமில்லாமல் குடிக்கும் போதான கூட்டாளிகளின் பேச்சை கேட்டு வட்டிக்கு கொடுத்தும் வாங்கி கொண்டிருந்தார் அவர்.
திருப்பி கொடுக்காதவர்களை அதே வேகத்தில் பேசிவிடவும் செய்கிற பெரியப்பாவால் ஒருபோதும் திருப்பி வாங்க முடியாத காசாக கொள்ளை பணம் ஊராரிடம் கரைந்தது. அவர் குடித்துவிட்டால் நிதானம் தவறி உதிர்க்கிற கெட்ட வார்த்தைக்கு பதிலாக அதிகாலை நான்கு மடங்கு வார்த்தைகளை பெரியம்மா கேட்க நேர்ந்தது. அது போக வழக்குகளும் சச்சரவுகளும். நீதிமன்ற படிகளில் ஏறுவதும் சாட்சி சொல்வதுமாக அவள் உடைந்து போயிருந்தாள்.
பெரியப்பாவுடனான ஓயாத சண்டைகள் அவளை மன அமைதியை இழக்கச் செய்தன. எப்போதும் அவர் குடித்துவிட்டு வந்தால் தெருவே திரும்பி பார்க்குமளவுக்கு சண்டையிடுபவள் ஒருநாள் முற்றிலும் அமைதியானாள்.
எங்காவது வெறித்துக்கொண்டிருப்பதும் யாரோ தன்னை வேவு பார்ப்பதாக கற்பனை செய்வதும் அவளது பழக்கங்களாகின.
அவள் பேசினாலும் குரல் தடுமாற தொடங்கியது. இன்னார் காசை கொண்டுவந்து கொடுத்தார்களா எனக் கேட்பதும் பதில் எதிர்பார்க்காமல் தனக்குள் எதோ சொல்லிக்கொள்வதும் எந்நேரமும் கண்ணீர் உகுக்கிற முகமுமாக அவள் இருந்தது எல்லோரையும் உலுக்கியது.
நாங்கள், எது சொல்லியும் கேட்காத மனிதராக பெரியப்பாவை கருதிவந்ததால் பெரியம்மாவை மட்டுமாவது பார்த்துக்கொள்ள முடிவெடுத்தோம்.
அப்பா இல்லாத நாளில் பெரியம்மா நின்றது பெரும்துணையாக இருந்தது. ஆனால் அதற்காகவெல்லாம் அம்மா, பெரியம்மா மீது பரிவு கொண்டதில்லை.
சின்ன வயதில் ஆயா புதிதாக வாங்கிய கன்றை பெரியம்மா அவிழ்த்துவிட பின்வாசலில் எதையோ ஆய்ந்து கொண்டு நின்ற அம்மாவை மாடு முட்டியதால் விலாவில் உண்டான தழும்பு, இன்னமும் பின்புற ரவிக்கைக்குக் கீழே அவள் கொசுவத்தை இழுத்துவிடாத நேரங்களில் காண முடிகிற ஒன்று.
பெரியம்மா ஒரு மெலிந்த நாயினை வளர்த்து வந்தாள். அவ்வவ்போது நாயின் முகமும் பெரியம்மா கொண்டிருக்கும் பாவனையின் சாடையை சூடிக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன்.
அதற்குள் பெரியப்பா போய் சேர்ந்தார். அவர் கூடவே திரும்ப பெறலாம் என எண்ணியிருந்த அவ்வளவு பணமும்.
பிறகு பெரியம்மா வெளியே செல்வது குறைந்து போனது. எப்போதும் வீட்டின் ஜன்னல்களை அடைத்து வைத்துக்கொண்டாள். அவன் அங்க இருந்து பார்க்கிறான் என ஜன்னலை காட்டி அடிக்கடி சொல்லி வந்தாள்.
அவளை யாரோ கண்காணிப்பது போல தோன்றி கொண்டே இருந்திருக்கும். பாதுகாப்புக்காக போடப்பட்ட சிசிடிவி கேமரா வழியாக தன்னை யாரோ பார்த்து கொண்டிருக்கிறார்கள் என பயந்து அதனை தொரட்டி கொண்டு அடித்து உடைத்து வைத்திருந்தாள்.
எனக்கும் அம்மாவுக்கும் மாறி மாறி அழைத்து உங்களுக்கு எதுவுமில்லையே, கெட்ட சொப்பனம் வந்துச்சு எனப் புலம்ப தொடங்கினாள்.
நாயையும் வீட்டுக்குள்ளே அடைத்துவைத்துக் கொண்டாள். பெரியம்மாவை பார்ப்பதற்காக சென்றிருந்த ஒருநாள் அவள் வீட்டை நெருங்குவதற்கு முன்பே துர்நாற்றம் அடித்தது.
வீட்டுக் கதவை திறந்ததும் மெலிந்த நாய் கத்திக் கொண்டே வெளியே பாய்ந்தது. மூத்திரத்தின் வீச்சம் நாசியை கூச செய்தது.
சாப்பிட்டுருப்பாளா எனத் தெரியாதளவுக்கு கண்கள் உள்ளே சென்று முகம் ஒடுங்கியிருந்தது.
அவளை மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தோம். தூங்காது இருந்ததால் கண்களை சுற்றி உருவான கருவளையம் கொஞ்ச நாள் சிகிச்சைக்கு பிறகு மறைய துவங்கியது.
மனநல மருந்துகள் அவளை எந்நேரமும் மயக்கத்தில் வைத்திருந்தன. யார் என்னவென அறிந்து கொள்ளவியலாத மயக்கம்.
நிவேதா பெரியம்மாவை பார்க்க சென்ற நாளில் அவளை யாரென பெரியம்மா மறந்திருந்தாள்.
மருத்துவமனையில் இருந்து அவள் வீட்டுக்குக் கூட்டிச் செல்லாமல், அம்மா இருந்த பூர்வீக வீட்டுக்கு அழைத்து சென்றோம்.
அம்மா ஒவ்வொருமுறையும் பெரியம்மா மீது குறை சொல்லிக்கொண்டே இருந்தாள். இரவுகளில் ஒரே மூலையை வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருப்பதாகவும், நடுஜாமத்தில் முழிக்கும் வேளையில் பெரியம்மா உறங்காது எழுந்து கண்முன் அமர்ந்திருப்பது தெரிவதும் தொடர்வதாக பயந்து நடுங்கும் குரலில் அதிகாலை 3 மணிக்கு அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தபின் எங்களுக்கு வேறு வாய்ப்பிருக்கவில்லை.
அம்மாவின் உடல்நலமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால் பெரியம்மாவை பார்த்துக்கொள்ள சமூகத்தினர் நடத்தும் முதியோர் இல்லத்தில் அவளை சேர்த்தோம்.
நிலையத்தில் தங்களின் ரயிலுக்காக குளிர்சாதன அறையில் காத்திருக்கும் பாவனையோடு அந்த இல்லமெங்கும் முதியவர்கள் மாறாத புன்னகையோடு நிறைந்திருந்தார்கள்.
மாதம் மாதம் ஒரு தொகை அறக்கட்டளையின் கணக்குக்கு அனுப்ப வேண்டியிருந்தது. ஊருக்கு போகும்போதெல்லாம் நான் பெரியம்மாவை சென்று பார்த்து வந்தேன். ஒருமுறை நிவேதாவும் உடன் வந்திருந்தாள்.
நிவேதாவை பெரியம்மா மறந்திருந்தாள் என்பது அவளுக்கு தாங்க முடியாத ஒன்றாக இருந்தது. திரும்ப சென்னை வரும்வரை அவள் அழுதுக்கொண்டே இருந்தாள்.
சில நாள்களில், பெரியம்மா காணாமல் போன சேதி அறக்கட்டளையில் இருந்து வந்து சேர்ந்தது.
5
அய்யனாருக்கு அர்ச்சனை எல்லாம் முடிந்தபிறகு பூசை செய்த வேளாருக்கு தொகை கொடுத்து பந்திக்கு சென்றோம்.
சொல்லியிருந்த நேரத்துக்கு முன்பே உணவினை கொண்டு வந்து காத்திருந்த கேட்டரிங் அண்ணன் எல்லோருக்கும் பரிமாற ஆட்களை தயாராக வைத்திருந்தார்.
50-க்கும் குறையாத ஆட்களுக்கு ஒரே பந்தியில் உணவு பரிமாற தொடங்கினர். வெண்டைக்காய் புளி மண்டையும் மாங்காய் பச்சடியும் அன்றைய நாளின் வெயிலுக்கு உகந்ததாக இருந்தது.
பெரியம்மா பச்சடி நன்றாக வைப்பாள். பனிக்குழவை போல இருக்கும் பச்சடியில் அசாத்தியமான சேர்க்கையில் காரமும் புளிப்பும் இனிப்பும் கூடியிருக்கும்.
பந்தியில் அமர வைக்கப்பட்டார் பெரியம்மா. எதையும் பார்க்காது சோறு வைக்கப்பட்டதும் அவள் கை போன வேகத்துக்கு இலை தடுமாறியது.
சோறு வைக்க வைக்க சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். வாய்க்குள் சரியாக செல்லாத சோற்று பருக்கைகள் கழுத்தில் வழிந்து கிடந்தன.
ஆக்கிவைத்திருந்த சோற்றை எல்லாம் கவளங்களில் அள்ளி சாப்பிட்டுவிடுபவள் போல ஆக்ரோஷத்தோடு அவள் சாப்பிட்டதை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம் என்கிற பிரக்ஞை அவளுக்கு எதுவுமில்லை.
சாப்பிட்டதும் தான் உடுத்தியிருக்கும் புதிய சேலையில் கையை அனிச்சையாக துடைத்து கொண்டாள். துடைக்கும்போது கையின் ஸ்பரிசத்துக்கு பட்ட ஆடையின் தன்மை உறுத்தியிருக்கும்போல, ஒரு கணம் தான் அணிந்திருப்பதை கவனித்தாள்.
பெரியம்மா செல்வதை பார்த்ததும் ஆதிரையை கையில் ஏந்தி நிவேதா அவள் முன்வந்தாள். இருவரையும் ஒரு கணம் நின்று பார்த்தவள் பின்னர் எதுவும் சொல்லாமல் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.
கூட்டம் விலகியது. என்ன நடந்தது என நான் உணர்வதற்குள் கோயிலின் எல்லையை அவள் கடந்திருந்தாள். பொட்டலை ஊடறுத்து அவள் கால்கள் நடந்து செல்வது மட்டுமே தெரிந்தது.
எங்கிருந்தோ வந்த ஒரு மெலிந்த நாய் அவளுடன் சேர்ந்துகொண்டது. வெம்மையில் கண்கள் கூசியது.
அம்மா நடந்த எதையும் காணாதது போல பந்தியில் இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.
000

பிரபாகரன் சண்முகநாதன்
“மருள்’ என்கிற தலைப்பில் சிறுகதைகள் தொகுப்பாக யாவரும் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. கலை, இலக்கியம், பண்பாடு மீது ஆர்வம் உண்டு. சிறார் இலக்கியம் விருப்பத்தளம். தற்போது கோவையில் வசிக்கிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















