
கபிலர், பாரி என்கிற இரண்டு பெயர்களும் தமிழ் நினைவில் பிரிக்க இயலாதவை. கபிலர் அதிகமும் போற்றிப் பாடியது பாரியைத்தான். பாரி இறந்த பின் தானும் வடக்கிருந்து உயிர் துறக்கும் அளவு அன்பால் பிணைந்தவர் இருவரும். சு.வெங்கடேசனின் புகழ்பெற்ற படைப்பான ‘ வீரயுக நாயகன் வேள்பாரி’ கபிலரில்தான் துவங்குகிறது. ‘மன்னர்களை ஆளும் தெய்வம்’ என்று கபிலர் அதில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.
பாரி அரசன் அல்லன். அவன் ஒரு குலத்தலைவன். வேளிர் குலத்திற்குத் தலைவன். நமது இன்றைய புரிதலில் ‘குறுநில மன்னன்’ என்பதாக விளங்கிக் கொள்ளலாம். வேளிர் குலம் குறித்து குழப்பமான கதைகளே சொல்லபடுகின்றன. ‘கடையெழு வள்ளல்கள்’ என்று சுட்டப்படுபவர்களில் வேளிர் குலத்தலைவர்களே அதிகம். ‘ வேந்தரும், வேளிரும்’ என்று அரசர்க்கு இணையாக வைத்து சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வேளிர் பாடப்பட்டுள்ளனர்.
“வேள் எவ்வி “ என்பவன் பாரியின் மூதாதையாகச் சொல்லப்படுகிறான். வேள் எவ்வியும் முருகனும் நண்பர்கள் என்கிறது ‘வேள்பாரி’ நாவல். ஆம்… நம் முப்பாட்டன் முருகன்தான். சுவராஸ்யமான புனைவு இது. ‘வேளிர்’ என்பதற்கு ‘ அபிதான சிந்தாமணி’ தரும் விளக்கத்தில் உள்ள சில பகுதிகள்..
“ தமிழ்நாட்டுப் பழைய குடிகள். இவர்கள் தம் தொழில் வேற்றுமையால் பல பெயருற்றனர் எனவும் கூறும். இவர்களே வேளாளர். இவர்கள் உழுவித்துண்போர், உழுதுண்போர் என இரு வகையர்… தென்னாட்டில் தமிழை வளர்த்தவர்கள்… இவர்கள் அகத்தியர் தமிழ்நாடடையாத முன்பே தமிழ் நாட்டிலிருந்தவர்கள். இவர்கள் அகத்தியருடன் தமிழ் நாடடைந்தோர் என்பது சிலர் கொள்கை…”

முல்லைக்கு தேர் ஈந்த வள்ளன்மையின் வழியே இன்றும் தமிழ் மக்களின் அன்றாடப் பேச்சு வரை நிலைத்துவிட்டவன் பாரி.
“ சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரி”
என்கிறது ‘ சிறுபாண் ஆற்றுப்படை’
‘வஞ்சப்புகழ்ச்சிக்கு அணி’க்கு உதாரணம் காட்டப்படும் கபிலரின் பாடல் ஒன்று புகழ் பெற்றது. என் பள்ளிப்பருவத்தில் கவிதை மீதான ஆர்வத்தைப் பெருகச் செய்த பாடலது. குழந்தை, தன் விரியும் விழிகளால் விந்தையொன்றைக் காண்பதைப் போல் நான் அந்தக் கவிதையின் அழகைக் கண்டேன்.
“பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர், செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே” ( புற; 107)
பாரி பாரி என்று ஒருவனையே எல்லோரும் புகழ்ந்து புகழ்ந்து பாடுகிறார்களே? இப்பரந்த உலகைக் காக்க பாரி ஒருவன்தான் உண்டா என்ன? மாரியும் உண்டன்றன்றோ?
உலகையே காத்து இரட்சிக்கும் மழையை ஒரு சிறிய துணைக் கதாபாத்திரம் போல் ஆக்கிவிடுகிறது “மாரியும்” என்கிற சொல். ஆனால் இணையாக வைப்பது போல் பாவனை செய்கிறது. சங்கத்திரட்டில் இது போன்ற கவிதைகள் குறைவு. நேரடியாக, புறச்சித்தரிப்புகள் இன்றி, மிகச் சுருக்கமாக, துப்பாக்கி இரவையால் துளைத்தாற் போன்ற ஒரு மொழிதலை இக்கவிதையில் காண முடிகிறது.
“ நீரினும் இனிய” என்று போற்றுகிறது இன்னொரு பாடல்.. வறுமையில் உழலும் ஒரு விறலியை பாரியிடம் ஆற்றுப்படுத்துவது போல் அமைந்த பாடல்.
“சேயிழை பெறுகுவை, வாள் நுதல் விறலி!…
நீரினும் இனிய சாயல்
பாரிவேள் பால் பாடினை செலினே” ( புறம்: 105)
“நீரினும் இனிய” என்கிற போற்றுதலில் அலங்காரமோ ஆர்ப்பாட்டமோ இல்லை.ஆனால் நீர் இன்றி உலகில் ஒன்றுமில்லை அல்லவா?
பாரியின் பறம்பு மலை எப்படிப்பட்டது என்பதைச் சொல்கிறார்…
“ தடவுவாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யாதாயினும், அருவி
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக
மால்புடை நெடுவரைக் கோடு தோறு இழிதரும்…” ( புற; 105)
மலைச்சுனையில் மலர்ந்திருக்கிற, வண்டுகள் மொய்க்கும் குவளை மலரில் மழைத்துளிகள் விழுந்து கலக்குமாறு மழை பொழிந்தாலும், பொய்த்தாலும் அம்மலை அருவியானது , கொள் விதைப்பதற்காக உழுது வைத்திருக்கிற நிலத்தில் வாய்க்கலாக ஓடிச்செல்லும். அம்மலையின் ஒவ்வொரு சிகரத்திலிருந்தும் அருவிகள் வற்றாது வழியும்.
மழை பொழிந்தாலும் பொய்த்தாலும் அம்மலைவளம் குறைவதில்லை. அதுபோலவே வளம் கொழித்தாலும் வருவாய் குறைந்தாலும் பாரியின் கொடையில் ஒரு குறையும் நேர்வதில்லை.
“ கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே…நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே…நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே…” என்கிறது திருவருட்பா. பாரியும் அப்படித்தான். அறிவில் சிறந்தோர் , தாழ்ந்தோர் என்று பாகுபாடு பாராமல் வழங்கக் கூடியவன். எளியபக்தன் எருக்கம் பூவைச் சூட்டினாலும் தெய்வம் அதை ஏற்க மறுக்கிறதா என்ன? பாரியும் அப்படியே.
“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா, ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன், பாரி கை வண்மையே” (புறம்: 106)
“ நறுமணம் இல்லாத காரணத்தால் எருக்கம் பூ நல்ல பூக்களின் வகையில் சேராது. ஆனால் எருக்கம் பூ கடவுளுக்குச் சூட்டப்படும் பூக்களில் ஒன்று என்பதால் அது தீய பூக்களின் வகையிலும் சேராதது. ஆகவேதான், அதை “ நல்லவும் தீயவும் அல்ல” என்கிறார் கபிலர் என்கிறது ஒளவை துரைசாமி உரை.
சூராதி சூரர்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்வார்கள். உண்மையில் காக்கப்பட வேண்டியவர்கள் மடவரும், மெல்லியரும்தான். அவர்களைக் காப்பதும் இயற்கையின் கடனே. அந்தக் கடனில் தவறாத கடவுள் பாரி. ‘மெல்லியர்’ என்பதை அறிவில் குறைந்தவர் என்றும், குணத்தில் குறைந்தவர் என்றும் விரிக்கலாம்.
பாரி வள்ளலெனில், எவ்வளவு ஈவான்? எதுவரை ஈவான்? பரிசிலர் அவனையே பரிசாகக் கேட்டால், அதையும் மறுக்காது தன்னையே தருபவன் அவன்.
“… அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்
‘வாரேன்’ என்னான், அவர் வரையன்னே” ( 108)
“ குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு …” ( 108)
பறம்பு நாட்டில் குறத்தி அடுப்பில் ஒரு விறகை இட்டால், அது சந்தன மரமாக இருக்கும். அப்புகை அருகிருக்கும் வேங்கை மரத்தின் பூங்கிளைகளில் தவழ்ந்து மணமணக்கும். அவ்வளவு வளம் கொழித்தது அம்மலை.
“பறம்பு பாடினரதுவே” ( புற; 108)
பறம்பு நாடு முந்நூறு ஊர்களை கொண்டது. அந்த முந்நூறு ஊர்களையும் அதைப் போற்றி பாடியவர்க்கே கொடுத்துவிட்டானாம் பாரி.
மூவேந்தர்களாலும் பாரியை நேருக்கு நேராக போரிட்டுக் கொல்ல இயலவில்லை. ஆகவே சூழ்ச்சி செய்தே கொன்றனர் என்பது பொதுவான நம்பிக்கை. சிலர் அந்த சூழ்ச்சி என்னவெனச் சொல்வதில்லை. பாணர்களுக்கு வரையாது வழங்குபவன் பாரி என்பதால் வேந்தர்கள் மூவரும் பாணர் வேடமிட்டுச் சென்றே பாரியைக் கொன்றொழித்தனர் என்றும் சிலர் சொல்வதுண்டு. இந்தக் கதையாடல் கபிலரின் பாடல்கள் வழியே உருவானவைதான். போரிட்டு உங்களால் பாரியை வெல்ல முடியாது. ஆகவே நீங்கள் விறலியரை அழைத்துக் கொண்டு , பாணனைப் போல் பாடிச் சென்று அவனிடம் யாசித்தால் அவன் தன் நாடு , மலை என எல்லாவற்றையும் தருவான் என்கிறார் கபிலர்.
“… விறை ஒலி கூந்தல் நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே”
( புற; 109)
“ ….ஆங்கு
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்…’ ( புற 109)
நீங்கள் பறம்பில் உள்ள ஒவ்வொரு மரத்திலும் ஒரு யானையை கட்டி வைக்குமளவு யானைப்படை மிக்கவராக இருக்கலாம். அம்மலை முழுக்க நீங்கள் உங்கள் தேர்களை நிறுத்தி வைக்கலாம். ஆனால் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் உங்களால் அவனை வாள் கொண்டு வென்றுவிட முடியாது.
பறம்பின் வளத்தை திரும்பவும் பாடுகிறார்..
“… உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;
மூன்றே கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே
வான் கண் அற்று அவன் மலையே; வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே… “ ( புற; 109)
உழவர் வருந்தி உழாமல் தானே விளையும் நால்வகைப் பொருட்களை உடைத்து அம்மலை. ஒன்று சிறிய இலைகளையுடை மூங்கில் நெல் இரண்டு தீம்பலா. மூன்று வள்ளிக்கிழங்கு. நான்கு நெடுங் குன்றம் எங்கும் வழிந்து ஒழுகும் தேன். வான் போன்று அகன்றது அம்மலையே. வானின் மீன் போன்று நிறைந்தது அதன் சுனையே.
பாடி வந்தால் மட்டுமே அவனிடம் நாடு பெற முடியும். அது அல்லாமல் நீங்கள் மூவரும் ஒன்று கூடி வலிய படை திரட்டி வந்தாலும் அவனை வென்று விட முடியாது. பாரியின் முந்நூறு ஊர்களும் பரிசிலர்க்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது இருப்பதோ நானும் பாரியும் இப்பறம்பு மலையும்தான். நீங்கள் இவற்றை உறுதியாகப் பெறலாம், ஆனால் இரந்து நின்று பரிசாகத்தான், போர் புரிந்து வெற்றியாக அல்ல.
“ கடந்து அடுதானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே;
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு;
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும், பாரியும் உளமே;
குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே”
( புற; 110)
வேல்படை திரட்டி வரும் வேந்தர்க்கு அரியதான பறம்பு நாடு, குவளைகள் போல் மலர்ந்த, மையுண்ட கண்களை உடைய விறலிக்கோ மிக எளிது என்கிறார்.
அளிதோ தானே, பேர் இரும் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே ( புற; 111)
கிணை என்பது தடாரி பறை. விறலி அதைக் கொட்டியபடி பாடி வந்தால் பறம்பைப் பரிசாகப் பெறலாம்.
“ பாடினள் வரினே” என்கிற சொற்றொடரை சற்றே அழுத்தி, அவளாலும் புறஅழகால் அதை வென்று விட முடியாது என்பதாக உரை சொல்லப்படுகிறது. வேந்தர்கள் விறலிபால் காதல் வயப்பட்டதாக நான் வாசித்த நினைவில்லை. பாடல் இல்லையா, அல்லது இல்லவே இல்லையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வேந்தன் விறலியைப் போன்ற ஒருத்தி மீது காதல் கொள்வது போல ஒரு திரைப்பாடல் உண்டு.கே.வி.மகாதேவன், கண்ணதாசன், சிவாஜி, பத்மினி, பி. சுசீலா, ஏ.பி.நாகராஜன் என்று வல்லோர் கூட்டம் சூறையாடிய பாடல் அது. “ மன்னவன் வந்தானடி” என்று துவங்கும் அப்பாடல் மேல் மாளாத காதல் எனக்கு.
மூவேந்தர் பாரி மகளிரைத் தங்களுக்கு மணம்முடித்துக் கொடுக்க வேண்டினர்.
பாரி அதை மறுக்கிறான். சூழ்ச்சியால் கொல்லவும் படுகிறான். பாரியின் உற்ற தோழனான கபிலர் பாரி மகளிரை மணம் முடித்துக் கொள்ளுமாறு சில குறுநில மன்னர்களை கோருகிறார். சிலர் மூவேந்தரின் பகைகருதி மறுக்கிறார்கள். கடைசியில் கபிலர் அம்மகளிரைத் தக்க சான்றோர்களிடம் அடைக்கலமாக ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர் துறந்தார் என்று சொல்லப்படுகிறது. திருமுடிக்காரியின் மகன்களுக்கு மணம்முடித்துக் கொடுத்தார் என்றும் சொல்வர். ஆனால் அவர்களை மணம்முடித்துக் கொடுக்க அவர் பல ஊர்களுக்கு அலைந்து திரிந்தார் என்பதற்கு அவர் பாட்டிலேயே சான்றுகள் உள்ளன.

“ அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” என்கிற பாடல் புகழ் பெற்றது. அப்பாடலை பாரி மகளிர் பாடியதாகச் சொல்வர். அவர்களின் கூற்றாக கபிலர் பாடியது என்றும் சொல்வர்.
அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவில்
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண்நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! ( புற; 112)
விளக்கம் அவசியமில்லாதபடிக்கு புகழ் பெற்ற பாடல் இது. இப்பாடலின் நீடித்த புகழுக்கு என்ன காரணம்? பாரியின் வீழ்ச்சியா? பெண்களின் கண்ணீரா? வீழ்ச்சியும் கண்ணீரும் விடாது மனித குலத்தை துரத்தி வரும் தொடர்பா? கையறுநிலைப் பாடல்களில் மனிதன் தன் கையறுநிலைகளை கண்டு கொண்டு அப்பாடலைத் தனதாக்கிக் கொள்கிறானா? இப்பாடலை யோசிக்கையில் கூடவே வரும் இன்னொரு பாடல்.. “ இளையோர் சூடார்: வளையோர் கொய்யார்” என்கிற பாடல். குடவாயிற் கீரத்தனார் பாடியது. இரண்டும் கையறுநிலைப் பாடல்கள்தான். இரண்டிலும் துயர் உண்டு என்பது வெளிப்படை. இரண்டையும் மூவாயிரம் ஆண்டுகளாக பூஜிக்க வைப்பது அவற்றின் இசைத்துடிப்பு என்றே நம்புகிறேன். சொற்பொருள் கடந்த தூய துயரிசை.
பாரி கொல்லப்பட்டு , பறம்பு மூவேந்தரால் முற்றுகையிடப்பட்ட பின்பு கபிலர் பாரி மகளிர் இருவரையும் தம்மோடு அழைத்துக் கொண்டு தப்பிச் செல்கிறார். அப்படிச் செல்கையில் அதுநாள் வரையிலும் தன் உயிர் வளர்த்த பறம்பு மலையிட்ம் விடைபெறும் பாடல் ஒன்று…
நீர் பெருகி வழியும் கண்களோடு நின்னை வாழ்த்திவிட்டுச் செல்கிறோம் பெரும் புகழ் பறம்பே!
“… நீர்வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சிச்
சேறும்- வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே! “
(புற; 113)
பாரியின் பெண்களுக்குத் தகுந்த கணவரைத் தேடிச் செல்கிறேன்..
“ கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே” ( புற; 113)
“ மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டு ஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனைமன்னோ, முன்னே..” ( புற; 113)
கள்வாய் திறந்து பெருகவும், ஆட்டுக்கிடாய்கள் வெட்டி வீழ்த்தப்படவும், அதைச் சுட்டு அதன் கொழுங்கறிச் சோற்றை போதும் போதும் எனும்படிக்கு அன்போடு அளித்த பெருவள மலையே ! நாங்கள் போகிறோம்..இனி அந்த அன்பு இல்லை
“ களிறு மென்று அட்ட கவளம் போல
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல்
வார் அசும்பு ஒழுகும் முன்றில்
தேர்வீசு இருக்கை நெடியோன் குன்றே..” ( புற ; 114)
களிறு மென்று இட்ட கவளம் போல, மதுவை வடித்த பின் எஞ்சிய சக்கையிலிருந்து மதுச்சேறு கசிந்தொழுகும் மலை மறம்பு. அதன் தலைவனோ இரப்போர்க்கு தேர்களையே வரையாது வழங்கும் நெடியோன்.
பாரியைப் போன்றே பறம்பும் நெடியது. வானளாவ வளர்ந்து நிற்பது. ஆகவே அது அருகில் நின்று காண்போர்க்கு தெளிவாகத் தெரியும். தூரம் சென்று காண்போர்க்கும் அதே அளவு தெளிவாக தெரியக் கூடியது
“ ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறுவரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும்..”( புற; 114)
பிரிந்து செல்வோர் ஏன் திரும்பிப் பார்க்கிறார்கள்? பச்சைப் புண்ணுள் கூரியதைச் செலுத்தி, பெருகும் குருதியைக் காண்பதில் அப்படி என்ன ஆனந்தம்!

இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















முடிவில் வரும் உவமை அருமை… கட்டுரையும் சிறப்பு.. எனக்கென்னமோ பாரியின் மறைவுக்காக கபிலர் வருந்தியதை விடவும் பறம்புலலையின் அழிவுக்கே கபிலர் அதிகம் அழுதிருப்பாரோ என எண்ண வைக்கிறது “நீர்வார் கண்ணே.. பெரும்பெயர் பாம்பே…” எனும் அடி. இந்தப் பாடலை மட்டும் படிக்கந்தோறும் என்னையுமறியாது என் கண்கள் நீர் சொரிந்து விடுகிறது.