
புதுமைப்பித்தன் முதலான ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் புத்தகங்களை வரையாது வழங்கிக்கொண்டிருந்த தாசன், வெங்கடேசன் என்ற இரு புத்தகக் கடைக்காரர்களை அறிய முயலும் ‘புதுமைப்பித்தனும் புத்தகக் கடையும்’ என்ற கட்டுரை அகழ் (மார்ச் 23, 2025) மின்னிதழில் வெளியானது.
பழைய புத்தகக் கடையில் கிடைத்த க.நா.சு.வின் ‘ஏழுபேர்’ (1947) நாவலின் முதல் பதிப்பில் ‘தாசன் தமிழ் நூல் நிலையம் – வேப்பேரி, சென்னை’ என்ற முத்திரையைப் பார்த்ததுதான் அந்தக் கட்டுரைக்கான தொடக்கப் புள்ளி. அந்த முத்திரை, தொ.மு.சி. ரகுநாதன் குறிப்பிடும் தாசன் என்ற புத்தகக் கடைக்காரரை நினைவூட்டியது. மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு அரிய புத்தகங்களைக் கொடுத்துவந்த தாசன் என்பவர்தான், தாஸன் தமிழ் நூல் நிலையத்தை நடத்தியிருக்க வேண்டும் எனத் தோன்றிற்று. இந்த ஊகத்தை முன்வைத்து திரட்டிய குறிப்புகள்தான் ‘அகழ்’ மின்னிதழில் வெளியான கட்டுரை. அந்தக் கட்டுரை வெளியான சில மாதங்களில் அந்த ஊகம் உறுதிப்பட்டது.
‘திரு. தாஸன் என்பவர் சென்னை ‘மூர் அங்காடி’யில் பழைய புத்தகக்கடை வைத்திருந்தவர். இவர் வழியாகத் தமிழ்ப் புலவர்களுக்குச் சென்ற நூற்றாண்டின் அரிய வெளியீடுகள் கிடைத்து வந்தன. தமிழ்ப் புலவர்களுக்கு அறிமுகமான இவர் ‘தாஸன் தமிழ் நூல் நிலையம்’ என்பதனை 1911-ல் வேப்பேரியிலுள்ள தன் இல்லத்தில் அமைத்திருந்தார். இதில் உள்ள நூல்களுக்கான ஒரு தமிழ் நூற்பட்டியும் இவரால் 1937-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இவர் தம் நூல் நிலையத்தைப் ‘புராதன நவீன புத்தகக் களஞ்சியம்’ என்று குறிப்பிடுவது கொண்டே இங்கிருந்த நூல்களின் தன்மையை ஒருவாறு ஊகித்துணரலாம். இவருடைய தமிழ் நூற்பட்டியில் 4000 தமிழ் நூல்களின் விவரங்கள் உள. முற்றும் நூற்பெயர்களே. ஒவ்வொரு நூலும் என்ன பொருள் பற்றியது என்பதைச் சுருக்கக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். ‘பன்னூற்பகுதி விளக்கக் குறிப்பு’ என்னும் பகுதியில் ‘அகராதி’ முதலாக ‘ஜீவ சரித்திரம்’ ஈறாக 72 பொருள்களின் பாகுபாட்டைக் குறிப்பிட்டுள்ளார்.’
இது தமிழறிஞர் மு. சண்முகம் பிள்ளையின் கட்டுரையொன்றில் கிடைத்த குறிப்பு. பெ. மாதையன் வெளியிட்ட ‘தமிழியல் நோக்குநூல் அடைவு’ தாஸன் தமிழ் நூல் நிலையத்தின் நூற்பட்டியும் 162 பக்கங்களைக் கொண்டது எனக் கூறுகிறது.
‘தாஸன் தமிழ் நூல்நிலையம் என்னும் புராதன நவீன புத்தகக் களஞ்சியம் – தமிழ் நூற்பட்டி, 1937, வேப்பேரி, சென்னை, ப. 162’
தனது நோக்குநூல் அடைவைத் தயாரிக்க எந்தெந்த நூலகங்கள் பயன்பட்டன என்பதை பெ. மாதையன் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்றில் தாஸன் நூற்பட்டி இருக்கலாம்.
அந்த நூற்பட்டி பார்வைக்குக் கிடைக்கவில்லை. ஆனால், வேறு வழிகளில் இந்த தாஸனைப் பற்றியும் அவரது நூல்நிலையம் பற்றியும் சில துணுக்குச் செய்திகள் கிடைத்தன. பழைய புத்தகக் கடையில் பார்த்த பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சபாபதி’ (1944) என்ற நாடக நூலில் தாஸன் தமிழ் நூல் நிலையத்தின் முகவரியுடன் ஒரு துண்டுதாள் ஒட்டப்பட்டிருந்தது.
ESTD. 1911
DASAN’S LIBRARY,
VEPERY, MADRAS.
தாஸன்தமிழ் நூல் நிலையம்,
வேப்பேரி, சென்னை
மூர் மார்க்கெட்டில் பழைய புத்தகக் கடை வைத்திருந்த தாஸன், 1911-ல் தாஸன் தமிழ் நூல் நிலையத்தை தன் இல்லத்தில் தொடங்கினார் என்பது மு. சண்முகம் பிள்ளை தரும் செய்தி. அந்த நூல் நிலையம், புத்தகக் கடையாகவும் நூலகமாகவும் செயல்பட்டிருக்கிறது என்பது இந்தக் குறிப்பிலிருந்து தெரிகிறது.
தமிழ் டிஜிட்டல் லைப்ரரி (https://tamildigitallibrary.in/) பதிவேற்றியுள்ள திரு.வி.க.வின் ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’ நூலின் மூன்றாவது பதிப்பில் (1934) தாஸனின் இன்னொரு முத்திரை இருக்கிறது.
C. J. DASAN
Librarian,
Publisher and
Book-Seller.
PARK TOWN
MADRAS
இந்தக் குறிப்பு பெயரை முன்னெழுத்துகளுடன் முழுமையாகத் தருகிறது. தாஸன் நூலகராகவும் பதிப்பாளராகவும் விற்பனையாளராகவும் இயங்கியவர் என்றும் பூங்கா நகர் பகுதியில் வசித்திருக்கிறார் எனவும் அறிகிறோம்.
முப்பதுகளில் வெளியான மெட்ராஸ் மாகாணக் கையேடுகள் தாஸனின் நூலகம் புரசைவாக்கத்திலுள்ள சுந்தரம் பிள்ளைத் தெருவில் இயங்கிவந்ததைப் பதிவுசெய்துள்ளன. இந்தக் கையேடுகளில் மதராஸ் நகரில் உள்ள முக்கிய நூலகங்களின் பட்டியலில் தாஸனின் நூலக முகவரியும் உள்ளது.
Dasan’s Library
6, Sundaram Pillai St, Purasawalkam.
Librarian — C. J. Dasan.
இந்த முகவரிக் குறிப்பு 1934ஆம் ஆண்டின் கையேட்டில் இருப்பது. 1938ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு பயணியர் கையேடும் இதே முகவரியைத் தருகிறது.
மேலே குறிப்பிட்ட ‘ஏழுபேர்’, ‘பெண்ணின் பெருமை’, ‘சபாபதி’ ஆகிய நூல்களைத் தவிர தாஸனின் முத்திரைகளைத் தாங்கிய இன்னும் சில புத்தகங்களும் பார்வைக்குக் கிடைத்தன. இரண்டு நூல்களில் தாஸனின் முத்திரையுடன் அவற்றை வாங்கியவரின் முத்திரையும் உள்ளது.
C. CHOKALINGAM,
TAMIL PANDIT
C.S.M. HIGH SCHOOL,
ARKONAM.
அரக்கோணத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்ற தமிழாசிரியர் தாஸனிடமிருந்து இவ்விரு நூல்களையும் வாங்கியிருக்கிறார். அந்த இருநூல்கள்: ‘சாது நிச்சலதாஸர் அவர்கள் இயற்றியருளிய ஶ்ரீவிருத்திப்பிரபாகரம்’ (1901), ‘சகலாகமபண்டிதரென்னும் திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியார் திருவாய்மலர்ந்தருளிய சிவஞானசித்தியார் பரபக்ஷம்’ (1910). புதுமைப்பித்தன் முதலான மணிக்கொடி எழுத்தாளர்கள் மட்டுமின்றி தமிழ்ப் பண்டிதரான திருவாளர் சொக்கலிங்கமும் தாஸனின் வாடிக்கையாளரில் ஒருவராக இருந்திருக்கிறார்.
பழைய புத்தகக் கடை நடத்தி, நூலகம் அமைத்து, மதராஸ் நகரில் வேப்பேரி, புரசைவாக்கம், பூங்கா நகர் பகுதிகளில் வசித்திருக்கும் C. J. தாஸன் பின்னாளில் தனது புராதன நவீன புத்தகக் களஞ்சியத்தைப் பேணமுடியாமல் கைவிடும் நிலை வந்திருக்கிறது. அப்போது தாஸனின் புத்தகச் சேகரம் இன்னொருவருக்குக் கைமாறியுள்ளது. இந்தச் செய்தியைத் தருபவர் ஜெமினி ஸ்டூடியோ உணவகத்தில் பணிபுரிந்த ஏ.என்.எஸ். மணியன்.
இவர் [ஜி. சதாசிவம் என்ற ஜாம்பவான்], நான் ஜெமினி ஸ்டுடியோ கேன்டீனில் வேலை செய்துகொண்டிருந்த சமயம் லைப்ரரி (நூலகம்) பொறுப்பாளராக இருந்தார். ஜெமினி ஸ்டூடியோவில் நூலகம் இருந்தது. அதில் வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஆரணி குப்புசாமி முதலியார் ஜே. ஆர். ரங்கராஜு வை. மு. கோதை நாயகி அம்மாள் இன்னும் பல பழைய நூலாசிரியர்கள் எழுதி இருந்த நூல்களே அதிகமாக இருக்கும். அக்காலத்தில் புரசைவாக்கம் பகுதியில் தாசன் நூலகம் என்று ஒரு தனியார் நடத்தி வந்த நூலகத்தை அவரால் நடத்த முடியாமல் அப்படியே அதை எஸ். எஸ். வாசன் அவர்களுக்கு விலைக்கு விற்று விட்டாராம். அதை வாங்கி ஸ்டூடியோவிற்கு எடுத்துக்கொண்டார். அது எங்கள் மெஸ்சுக்குப் பக்கத்தில் இருந்தது. கோஹினூர் பில்டிங் என்று பெயர்.
… இந்த பில்டிங் (கோஹினூர் பில்டிங்) மாடியில் ஒரு பகுதியில் நூலகமும் மற்றும் நான்கு அறைகளும் இருந்தன. ஒன்றில் திரு. கொத்தமங்கலம் சுப்பு அவர்களுக்கும் திரு. புதுமைப்பித்தன் அவர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றொரு அறையில் டைரக்டரும் கேமராமேனுமாகிய புரடக்ஷன் செகரட்டரியுமான திரு. கே. ராம்னாத் அவர்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது.
தாஸன் தனது புத்தகக் களஞ்சியத்தை எஸ். எஸ். வாசனுக்கு விற்பனை செய்துவிட்ட செய்தி இந்தக் குறிப்பின் மூலம்தான் தெரியவருகிறது. நமக்குக் கிடைத்துள்ள க.நா.சு.வின் ‘ஏழுபேர்’ நாவல் பிரதியும் தாஸனின் புத்தகச் சேகரம் கைமாறியதைக் காட்டுகிறது. அந்தப் பிரதியில் தாசன் நூல்நிலைய முத்திரையுடன் ஜெமினி ஸ்டூடியோ, ஆனந்தவிகடன் நூலகப் பதிவுத்தாள்களும் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் பிரதி தாசனின் நூல்களை எஸ். எஸ். வாசன் வாங்கிக்கொண்டுவிட்டதை உறுதிப்படுத்துகிறது. இதேபோல இன்னும் பல நூல்கள் நெல்லையைச் சேர்ந்த பழைய புத்தக விற்பனையாளர் சரவணனுக்குக் கிடைத்துள்ளன. அவற்றில் தாசன் தமிழ் நூல் நிலைய முத்திரையும் ஆனந்தவிகடன் நூலக முத்திரையும் பதிந்துள்ளன.
தாசனிடமிருந்து வாசனிடம் சென்ற நூல்கள் பின்னாளில் ஜெமினி ஸ்டூடியோ / ஆனந்தவிகடன் நூலகத்திலிருந்தும் அகற்றபட்டுள்ளன. அவை நெல்லையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறிதுகாலம் தங்கி, பின் அங்கிருந்தும் கழித்துக் கட்டப்பட்டு, அவற்றில் ஒரு பகுதி நூல்கள் சரவணனின் கைக்கு வந்துள்ளன. சரவணனுக்குக் கிடைத்த நூல்களில் தாசன், விகடன் முத்திரைகளுடன் மூன்றாவதாக அந்தப் பள்ளியின் முத்திரையும் இருக்கிறது.
மணிக்கொடி எழுத்தாளர்களுடன் பழகிவந்த தாசனைப்பற்றி, ஓரளவுக்கு அறிமுகம் கிடைப்பதற்கு இப்படிப் பல சிதறலான குறிப்புகளைத் திரட்டிப் பார்க்கவேண்டிய நிலை இருக்கிறது. தாஸனின் புத்தகக் கடையும் நூலகமும் எவ்வளவு காலம் இயங்கியது, எப்போது புத்தகங்கள் எஸ். எஸ். வாசனுக்கு விற்கப்பட்டன என்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை. ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தாசன் புத்தகக் கட்டை என்று ஒரு புத்தகக் கடை இருந்ததென்றும் அவர்கள் பழைய புத்தகக் கடைக்கு நூற்பட்டியல் வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிச் செல்கிறார் ஓர் ஆய்வாளர். அவரிடமிருந்து தாஸன் குறித்து வேறெதுவும் அறியமுடியவில்லை.
தாசனைப் போலவே மூர் மார்க்கெட்டில் புத்தகக் கடை நடத்தி, புதுமைப்பித்தன், க. நா. சுப்ரமண்யம் போன்ற எழுத்தாளர்களுடன் உறவாடிய மற்றொருவர் வி. ஸி. வெங்கடேசன். தாஸனைப் பற்றித் தெரியும் அளவுக்குக்கூட வி. ஸி. வெங்கடேசன் பற்றித் தெரியவில்லை. க.நா.சு.வின் இரண்டு குறிப்புகள் மட்டுமே அவரைப்பற்றிக் கூறுகின்றன. தமிழில் நவீன இலக்கிய மலர்ச்சிக்கு வித்திட்ட மணிக்கொடி எழுத்தாளர்களுடன், அவர்களின் நூல்தேட்டத்திற்குப் துணையிருந்த தாசனையும் வெங்கடேசனையும் சேர்த்து நினைவில் இருத்துவது அவசியம்.
உதவிய நூல்கள்:
1.மு. சண்முகம் பிள்ளை, ‘தமிழ் நூல்விவர அட்டவணை’, இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும், ந. சஞ்சீவி (ப-ர்.), சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, ஜனவரி 1974, பக். 355
2. பெ. மாதையன், தமிழியல் நோக்குநூல் அடைவு, சகுந்தலை வெளியீடு, 1978, பக். 33
3. The Asylum Press Almanack and Directory of Madras and Southern India 1934, pp. 639
4. Travel in South India: A Road Map of South India, The Business Syndicate Press, Bangalore, 1938, pp. 25
5. ஏ.என்.எஸ். மணியன், ‘ஜி. சதாசிவம் (எ) ஜாம்பவான்’, நான் கண்ட எழுத்தாளர்கள், நிவேதிதா புத்தகப் பூங்கா, 2006, பக். 47-48

ஸ்ரீநிவாச கோபாலன்
ஶ்ரீநிவாச கோபாலன் பதிப்பாளர். ‘அழிசி’ (Azhisi eBooks) என்ற மின்னூல் பதிப்பகத்தை தொடங்கி நடத்திவருகிறார். நாட்டுடைமையான நூல்களையும் அச்சில் இல்லாத முக்கியமான நூல்களையும் தேடிக் கண்டடைந்து மின்புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















ஸ்ரீநிவாச கோபாலன் உடைய பணி பாராட்டிற்கு உரியது. இவருடைய இப்பணி உ வே சா அய்யாவின் பணியை நினைவு படுத்துகிறது . நன்றி திரு கோபாலன்.
அரிய முயற்சி
வாழ்த்துக்கள்.