
விஜயகுமார்: நீங்கள் கல்லூரி முதல்வராக இருந்தபோது, மாற்றுச்சான்றிதழ்களில் மாணவர் நடத்தை குறித்த கேள்விக்கு, மாணவரே தம்முடைய சான்றிதழ்களில் “நன்று” எனச் சான்றளித்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டு வந்தீர்கள் என நினைக்கிறேன். தற்போது உதவிப்பேராசிரியர் தேர்விற்கான விண்ணப்பத்தின்போதே நடத்தைச் சான்றிதழ் கேட்கிறார்கள். இந்த நடத்தைச் சான்றிதழெல்லாம் தேர்வான பிறகு கொடுத்தால் போதாதா? வெளிநாட்டில்/வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள், பணியிடத்தில் முரண்பட்டவர்கள் என பலருக்கும் இச்சான்றிதழ் கிடைப்பதில் பிரச்சனை உள்ளது.
பெருமாள்முருகன்: நம் சமூகத்தில் படிப்புக்கு இடம்பெறவும் படித்து முடிக்கவும் கூட பெருஞ்சிரமப்பட வேண்டியதில்லை. சான்றிதழ்களைப் பெறுவது கடினம். அதற்குக் கஜினி முகமது போல விடாமுயற்சியுடன் பலமுறை படையெடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் எல்லாம் பெற்றாலும் அச்சிட்டு உரிய காலத்தில் வழங்குவதில்லை. நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகச் சான்றிதழ் வழங்குவதைப் பல்கலைக்கழகம் தள்ளிப் போடும் நிலையைப் பற்றி அடிக்கடி செய்திகள் வருவதைக் கண்டிருப்போம். ஒரு சான்றிதழில் பிழை நேர்ந்துவிட்டால் அதைச் சரிசெய்து தர வேண்டியது பல்கலைக்கழகத்தின் கடமை. ஆனால் அதற்கும் மாணவரிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள். பட்டச் சான்றிதழ்களை வழங்கப் பல்கலைக்கழகம் செய்யும் தாமதத்தையும் மாணவர் மேல் சுமத்துகிறார்கள். தட்கல் முறையில் சான்றிதழ் பெறக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
நான் 1983 முதல் 1986 வரை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலை படித்தேன். பாரதியார் பல்கலைக்கழகம் தொடங்கியதும் சேர்ந்த முதலாண்டு மாணவர்கள் நாங்கள். பட்டம் முடித்துச் சில மாதங்கள் வரை மதிப்பெண் சான்றிதழ், தற்காலிகப் பட்டச் சான்றிதழ் எதுவும் கிடைக்கவில்லை. நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்க விருப்பம் கொண்டிருந்தேன். ஆனால் விண்ணப்பிக்கவும் இயலவில்லை. மூன்று மாதம் கழித்துச் சான்றிதழ்கள் கிடைத்தன. அப்போது போனால் பல்கலைக்கழகத்தில் இடம் இருந்தது, ஆனால் மாணவர் சேர்க்கையை முடித்துவிட்டார்கள். அதன் பிறகு சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். சென்னையில் படிக்கும் என் கனவு முடிந்து போயிற்று. இந்தப் பாதிப்புக்குப் பல்கலைக்கழகம் தானே பொறுப்பு?
என் மாணவர்கள் பலர் சான்றிதழுக்காகப் பட்ட பாடுகளை அறிவேன். பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமானால் பேருந்துச் செலவு, உணவுச் செலவு எல்லாம் ஆகும். ஒருநாளும் போகும். அப்போதும் சரியான பதில் சொல்ல மாட்டார்கள். காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போன மாணவர்கள் உண்டு. சிலர் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் மேல்படிப்புக்குச் செல்லாமல் வேலைக்குச் சென்றதும் உண்டு. தேர்வு முடிந்து இத்தனை நாட்களில் சான்றிதழ் வழங்க வேண்டும், வழங்கா விட்டால் மாணவருக்கு ஏற்படும் பாதிப்புக்குப் பல்கலைக்கழகமே நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்னும் சட்டம் வர வேண்டும். நான் 1986 – 1988இல் கோவை, பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றேன். இறுதிப் பருவத்தின் கடைசித் தேர்வு நாளன்று நம் இருக்கைக்கே வந்து கையொப்பம் பெற்றுக்கொண்டு மாற்றுச் சான்றிதழைக் கொடுத்துவிடுவார்கள். மதிப்பெண் சான்றிதழ்களை அனுப்ப ஸ்டாம் ஒட்டி, முகவரி எழுதிய அஞ்சல் உறையை நம்மிடம் வாங்கி வைத்திருப்பார்கள். தேர்வு முடிவு வெளியான குறிப்பிட்ட நாளுக்குள் சான்றிதழ்கள் நம்மைத் தேடி நம் கைக்கே வந்துவிடும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒருகல்லூரி இதைச் செய்ய முடிந்தது. இப்போது இன்னும் எத்தனையோ தொடர்பு வாய்ப்புகள் பெருகிவிட்டன. சான்றிதழ் பெறுவதைச் சிரமம் இல்லாமல் ஆக்க முடியாதா?
கல்லூரி ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிப்போர் தம் பணி அனுபவச் சான்றிதழ் பெறச் சிக்கலான நடைமுறைகளே உள்ளன. ஒவ்வொரு முறையும் புதிதாகச் சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. அச்சமயத்தில் கல்லூரி அலுவலகம் திணறிப் போகும். பல நூறு பக்கங்களை நகலெடுக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவரும் தலையணை போல ஆவணங்களைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் குவிந்து கிடப்போர் கூட்டம் தேர்க்கூட்டம் போலிருக்கும். மிகச் சில ஊழியர்களையே கொண்ட அவ்வலுவலகம் திணறிப் போகும். அரசு கல்லூரியிலோ தனியார் கல்லூரியிலோ பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டு இறுதியிலும் இயல்பாகவே பணிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வந்துவிட்டால் என்ன? அதுவும் இணைய வழியிலேயே செய்துவிடலாம்.
என் மனைவி திருச்செங்கோடு சுயநிதிக் கல்லூரி ஒன்றில் நான்காண்டுகள் பணியாற்றினார். அதற்கான பணிச் சான்றிதழுக்குரிய ஆவணங்களைத் தயார் செய்து தர ஓராண்டுக்கு இருநூறு ரூபாய் என அக்கல்லூரி கட்டணம் வசூலித்தது. இது 2007ஆம் ஆண்டில் நடந்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கிட்டத்தட்ட இருநூறு பேர் அக்கல்லூரியில் மட்டும் இருந்தனர். பத்தாண்டு, பதினைந்து ஆண்டு பணி அனுபவம் கொண்டோரும் உண்டு. சராசரியாக ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என்று கொண்டால் இரண்டு லட்சம் ரூபாய் அக்கல்லூரிக்கு வருமானம். 2007இல் இரண்டு லட்சம் ரூபாய். இப்போது எவ்வளவு வாங்குகிறார்களோ தெரியவில்லை. அதன் பின் அந்த ஆவணங்களை எல்லாம் இணை இயக்குநர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அங்கே போய் இரவு பகலாகக் காத்துக் கிடக்க வேண்டும். ஒருசான்றிதழுக்கு இப்படியா அலைய வைப்பது?
முதலீட்டிய காலகட்டத்தில் ஒருவரை நுகர்வோராகக் கருதினால் கூடப் போதும். மரியாதையோடும் மதிப்போடும் நடத்த முடியும். அவர்களுக்கு உரியதைத் தாமதம் இல்லாமல் உடனடியாகக் கொடுக்க முடியும். ஆனால் அனைவரையும் உயர்கல்வித் துறை மிக இழிவாக நடத்துகிறது. நம் அலுவலக நடைமுறைகள் மிக மோசமானவை. அதிகாரத்தை மையப்படுத்தியவை நம் அலுவலகங்கள்; மக்களை மையப்படுத்தியவை அல்ல. அதிகாரத்தின் சிற்றலகான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஆசிரியர்களையும் அதிகாரிகளையும் மையப்படுத்தியவை; மாணவர்களை மையப்படுத்தியவை அல்ல.
சில சான்றிதழ்கள் தேவையே அற்றவை. நடத்தைச் சான்றிதழ் அப்படிப்பட்ட ஒன்று. கல்லூரி முதல்வராக இருக்கும் போது நான் ஆயிரக் கணக்கானோருக்கு நடத்தைச் சான்றிதழ் கொடுத்துள்ளேன். முகம் தெரியாதவர்கள், எப்போதோ படித்துச் சென்றவர்களுக்கு எல்லாம் கொடுத்திருக்கிறேன். அதில் என்ன தர்க்கம் இருக்கிறது? எல்லோரின் நடத்தைக்கும் சான்று கொடுக்க நான் என்ன கடவுளா? அந்தச் சான்றிதழ் பெற்ற ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவராக இருப்பின் அதற்கு நான் பொறுப்பேற்க முடியுமா? இத்தகைய சான்றிதழ்களை எல்லாம் நீக்கிவிட வேண்டும். கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் மட்டும் போதும். தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் இரண்டு மட்டும் மாணவர்களுக்கு வழங்கினால் போதும். ஒவ்வொரு பருவத்திற்கும் மதிப்பெண் சான்றிதழ், தற்காலிகப் பட்டச் சான்றிதழ்கள் தேவையில்லை. காலத்திற்கு ஏற்ப ஆவணங்களைக் குறைக்க முயல வேண்டும்.
வி: கௌரவ விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம் (பிரண்ட்லைன் கட்டுரை: Caste, contract, and the permanent wait, V. Sethuraman, A.P. Arunkannan, Frontline, 21.02.2026). நிரந்தர வேலையில் இருப்பவர்கள் பெரும்பாலான பொறுப்புகளை அவர்கள் மீது சுமத்துவதால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாவதும் அவர்களே; கேரளத்திலும் இதே கதைதான். இந்தச் சுரண்டலுக்கு எதிராக அவர்களின் வேலை முறைப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் முதல்வராக இருந்தபோது இது குறித்த பிரச்சினைகள் எழுந்துள்ளனவா?
பெமு: கௌரவ விரிவுரையாளர்களில் பட்டியல் இனத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என எல்லோரும் உள்ளனர். தொடக்கத்தில் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றாமல் அந்தந்தக் கல்லூரி முதல்வர்களே கிடைத்தவர்களையோ வேண்டியவர்களையோ பணியில் அமர்த்தியதால் சில பிரிவுகளில் குறிப்பாகப் பட்டியல் இனத்தவரில் இடஒதுக்கீட்டு விழுக்காட்டை விட அதிகமானோர் பணியில் இருக்க வாய்ப்புண்டு. எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருப்பினும் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நலிந்தோர்தான் இப்பணிக்கு வருகின்றனர். பொருளாதாரத்தில் வலுவாக இருப்போரில் சிலர் பகுதி நேரமாக இப்பணியைக் கருதிச் சேர்ந்துள்ளனர். அவர்கள் வேறு தொழில்களும் செய்து கொண்டிருப்பர். விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டே இப்பணிக்கு வருவோர் உண்டு. விடுமுறை நாளில் விவசாயக் கூலியாக வேலைக்குச் செல்வோர் உண்டு. பூ கட்டும் வேலை செய்யும் ஒருவரை அறிவேன். கீற்று முடையும் வேலைக்குச் செல்லும் ஒருவரையும் எனக்குத் தெரியும். ஒருவர் பகுதி நேரமாக டாக்சி ஓட்டுகிறார். சுகியில் உணவு கொண்டு சென்று கொடுப்பவர் இருக்கிறார். கௌரவ விரிவுரையாளர் பணிக்குக் கிடைக்கும் ஊதியம் குடும்பம் நடத்த எப்படிப் போதும்?
கல்லூரியில் நிரந்தர ஆசிரியர்களை விடக் கூடுதலாக வேலை செய்யும் கௌரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். வகுப்பு நடத்துதல் தவிர்த்த பல பணிகளை அவர்கள் செய்கின்றனர். சில துறைகளில் கௌரவ விரிவுரையாளர்களே மிகுந்திருப்பர். அங்கெல்லாம் அவர்கள்தான் செய்தாக வேண்டும். சில துறைகளில் நிரந்தர ஆசிரியர் அதிகமாக இருப்பினும் கௌரவ விரிவுரையாளர்களிடம் வேலையை ஒப்படைப்பார்கள். ஒரேவகை என்று சொல்ல முடியாது. கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வரத் தாமதமானால் அதுவரைக்கும் செலவுக்குப் பணம் கொடுத்து உதவும் நிரந்தர ஆசிரியர்கள் உண்டு. கூடுதலாக வருமானம் வரும் பணிக்கு அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பும் துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் உண்டு. உழைப்பைச் சுரண்டுவோரும் உண்டு; உதவுவோரும் உண்டு. எல்லா வேலைகளும் ஐந்து மணி நேரத்திற்குள் தானே, அதனால் அதைப் பெரிய பிரச்சினை என்று நான் கருதவில்லை. ஆனால் ஒரே வேலைக்கு நிரந்தர ஆசிரியர்கள் பெறும் ஊதியம் லட்சக்கணக்கில் இருக்கிறது; கௌரவ விரிவுரையாளர்கள் பெறும் ஊதியம் சில ஆயிரம் மட்டும்தான். இந்த வேறுபாடுதான் உறுத்தலான விஷயம்.
நான் முதல்வராக இருந்தபோது நிரந்தர ஆசிரியர்களுக்கும் கௌரவ விரிவுரையாளர்களுக்கும் பிரச்சினை என்று எதுவும் என்னிடம் வந்ததில்லை. பெரும்பாலும் அவர்களுக்குள் இணக்கம் பேணி வேலையைச் செய்கிறார்கள். ஊதிய முரண் காரணமாக வெளியில் கொஞ்சம் புலம்பினாலும் உள்ளே சமாதானமாக வேலைகளைச் செய்துவிடுவார்கள். நிரந்தர ஆசிரியர்களில் வேலை செய்யாமல் ஏமாற்றுவோர் இருப்பது போலக் கௌரவ விரிவுரையாளர்களிலும் உண்டு. வகுப்புக்குச் செல்லாமல் ஏமாற்றுவோர், எந்தத் தயாரிப்பும் இல்லாமல் வகுப்புக்குச் சென்று ஒப்பேற்றுவோர் இருபிரிவிலும் உண்டு. கௌரவ விரிவுரையாளர் தொடர்பாக வேறு சில பிரச்சினைகள் என்னிடம் வந்ததுண்டு.
வி: 2004 ஆம் வருடம் கௌரவ விரிவுரையாளராகச் சேர்ந்த ஒருவரின் மாதச்சம்பளம் 4000 ரூபாய். கிட்டத்தட்ட 20 வருடம் இதே வேலை பார்க்கும் ஒருவரின் சம்பளம் தற்போது 30,000 ரூபாய்; இத்தொகை கேரளம், கர்நாடகத்தை விடக் குறைவு. கூடவே, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், பேறுகால விடுப்பு, மாதாந்திர கூட்டு சேமிப்பு உள்ளிட்ட எந்தப் பணிப்பலன்களும் இல்லை. தவிர, இவ்வளவு காலமும் ஒரு வருடத்தில் 11 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் தரப்படுகிறது. கர்நாடகாவில் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கும் ஐந்து லட்சம் ரூபாய் மருத்துவக்காப்பீடு, பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ஓய்வின்போது ஐந்து லட்சம் ரூபாய் பணிக்கொடை போன்ற நலத்திட்டங்கள் உண்டு. இதை தமிழ்நாடும் செய்தால் என்ன?
பெமு: கௌரவ விரிவுரையாளர்களைத் தற்காலிகப் பணியாளர்களாகக் கூடக் கருதுவதில்லை. ஒருமணி நேரத்திற்கு நூறு ரூபாய் ஊதியம், அதிகபட்சம் நாற்பது மணி நேரம் வகுப்பு கொடுக்கலாம் என்றுதான் முதலில் நியமனம் செய்தார்கள். அதன் பிறகு பல போராட்டங்களை நடத்தித் தொகுப்பூதியம் பெற்றார்கள். விடைத்தாள் திருத்த மாற்றுப்பணி வாய்ப்பைப் பெற்றார்கள். தற்செயல் விடுப்பு கிடைத்தது. சில ஆண்டுகளுக்கு முன் வரை பத்து மாத ஊதியம் தான். ஏப்ரல், மே ஆகிய இருமாதங்களுக்கும் ஊதியமில்லை. ஆனால் ஏப்ரல் மாதத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் கல்லூரி நடக்கும். ஊதியம் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும். ஏப்ரல் மாதம் வேலை செய்தோம், அதற்கு ஊதியம் கொடுங்கள் என்று சான்றுகளை எல்லாம் வைத்து இயக்குநருக்கு அனுப்ப வேண்டும். தொழிற்சங்க முயற்சிகள் மூலம் அடுத்த நிதியாண்டில் ஏப்ரல் மாத ஊதியம் கிடைக்க வழி பிறந்தது. ஏப்ரல் மாதம் வேலை செய்தமைக்குச் சான்று கொடுக்க மறுத்த முதல்வர்கள் உண்டு.
ஆத்தூர் கல்லூரியில் இருந்த முதல்வர் ஒருவர் ஏப்ரல் மாதத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வருகைப் பதிவேடே வைக்கவில்லை. மார்ச்சோடு முடிந்துவிட்டது, நீங்கள் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கௌரவ விரிவுரையாளர் இல்லை என்றால் ஆத்தூர் கல்லூரியில் வேலையே நடக்காது. நிரந்தர ஆசிரியர்கள் இருபது பேர் என்றால், கௌரவ விரிவுரையாளர்கள் எண்பது பேர் இருப்பர். கௌரவ விரிவுரையாளர்களில் பாதிக்கு மேல் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். அம்முதல்வரும் பட்டியல் இனம்தான். ஆனால் முதல்வர் அசைந்து கொடுக்கவில்லை. அவருக்கு எதிராகப் போராடும் வழியும் தெரியவில்லை. அவர் இருந்த இரண்டு கல்வியாண்டிலும் ஏப்ரல் மாத ஊதியத்திற்கு விண்ணப்பிக்கவே வழியில்லை.
அடுத்த கல்வியாண்டில் நான் முதல்வர் பொறுப்புக்கு வந்தேன். என்னிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்தார்கள். கல்லூரி ஆட்சிக்குழுக் கூட்டத்தில் இப்பிரச்சினையை விவாதித்தோம். ஏப்ரல் மாதத்தில் வேலை செய்தார்கள் என்பதை எல்லாத் துறைத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சான்று தருவதற்கு மட்டும் சிலர் தயங்கினர். நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிச் சம்மதிக்க வைத்துச் சான்றளித்து விண்ணப்பித்தோம். அப்போது மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் ஊதியம். இரண்டு ஏப்ரல் மாதத்திற்கும் சேர்த்து முப்பதாயிரம் ரூபாய். எழுபது எழுபத்தைந்து பேருக்கு முப்பதாயிரம் வீதம் பெற்றுக் கொடுக்க முடிந்தது. இப்போது அந்த நிலை இல்லை. ஏப்ரல் மாதத்திற்கும் சேர்த்துப் பதினொரு மாதம் ஊதியம் கிடைக்கிறது.
அதே போல ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்கியதும் அவர்களுக்கான ஊதியம் உடனே கிடைத்துவிடாது. ஜூன் மாதம் பணியில் சேர்ந்தால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத ஊதியமும் சேர்ந்து செப்டம்பர் மாதம் தான் கிடைக்கும். வரவு செலவு அறிக்கையில் நிதி ஒதுக்கி விட்டாலும் கோப்பு பல மேசைகளைக் கடந்து கல்லூரிக்கு வந்து கருவூலம் வரைக்கும் போய்ச் சேர அத்தனை மாதம் ஆகும். சிலசமயம் அக்டோபர் மாதம்கூட ஆகிவிடும். நான் பொறுப்பில் இருந்த போது அப்படியாயிற்று. நான்கைந்து மாதம் ஊதியம் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள்? குடும்பம் எப்படி நடக்கும்? கடன் வாங்க வேண்டும். வேறு ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். வீட்டில் வேறு யாராவது வேலைக்குச் செல்ல வேண்டும். அப்படியிருக்கும் நிலையில் அவர்கள் எப்படி மனம் ஒன்றிப் பணியாற்றுவார்கள்? ஊதியம் வரும் வரைக்கும் தற்காலிக நிவாரணமாகப் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து ஆளுக்கு ஐந்தாயிரம் வழங்கலாம் என்று சொன்னேன். அதற்குப் பல எதிர்ப்புகள். இதுவே வழக்கமாகிவிடும் என்று ஒரு தரப்பு. பெற்றோர் ஆசிரியர் நிதியை இப்படிப் பயன்படுத்தக் கூடாது என்று ஒருசிலர். வாங்கிக் கொண்டு ஒருவர் பணியிலிருந்து நின்றுவிட்டால் எப்படி அவரிடமிருந்து வசூலிக்க முடியும் என்றார் ஒருவர். ஊதியம் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். வாங்கிய எல்லோரும் சரியாகத் திரும்பச் செலுத்துவார்கள் என்று நம்ப முடியுமா என்றொரு கேள்வி. எல்லாவற்றையும் சமாளித்துக் கொடுக்கலாம் என்று தீர்மானம் போடும் நிலையில் ஒருவழியாக ஊதிய ஆணை வந்துவிட்டது. அதன்படி விரைவில் ஊதியம் பெற்றுக் கொடுத்தோம்.
பணியாளர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அரசின் கடமை. தனியார்களுக்கும் அந்தக் கடமை உண்டு. அவர்கள் மீறினாலும் மக்கள் நல அரசு எப்படி மீற முடியும்? ஊதியத்திற்கே போராடிக் கொண்டிருந்தால் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியுமா? பணியிடம் காலியாக ஆக உடனே நிரந்தர ஆசிரியர்களை நியமித்துவிட வேண்டும். இல்லை, தாமதமாகும், கௌரவ விரிவுரையாளர்கள் தான் தொடர்வார்கள் என்றால் அவர்களுக்கு மனிதத் தன்மையுடன் கூடிய பல உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டும். பேறுகால விடுப்பு, பணிக்கொடை, காப்பீடு போன்ற பலவற்றை வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள அடிப்படை ஊதியத்திற்குச் சிறிதும் குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். அதுதான் மக்கள் நல அரசின் கடமை.
வி: கௌரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு வரையறுத்துள்ள சம்பளத் தொகையை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கௌரவ விரிவுரையாளர்கள் தேர்தல் சமயங்களில் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்; சம்பள உயர்வு பெறுகிறார்கள். இதற்கு நிரந்தரத் தீர்வாக வருடம் ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இவ்வளவு சதவீதம் ஊதிய உயர்வு என வைத்து விட்டால் என்ன?
பெமு: ஒவ்வொரு ஆட்சி முடியும் தருணத்திலும் போராடினால் ஐயாயிரம் உயர்த்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் போராடுகிறார்கள். ஐயாயிரம் கொடுத்தால் போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்று அரசுக்கும் தெரிந்திருக்கிறது. 2020இல் அதிமுக ஆட்சி முடியும் போது பதினைந்தாயிரமாக இருந்த ஊதியத்தை இருபதாயிரமாக உயர்த்தினர். 2021 – 2026 திமுக ஆட்சியில் இருமுறை ஐயாயிரம் உயர்த்தினார்கள். ஆகவே இப்போது முப்பதாயிரத்திற்கு வந்திருக்கிறது. முனைவர் பட்டம் வரைக்கும் சிரமப்பட்டுப் படித்து வந்தவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள், அவர்களுக்கு மாதம் முப்பதாயிரம் எப்படிப் போதும்? குறைந்தபட்சம் பல்கலைக்கழக மானியக் குழுப் பரிந்துரைப்படியான ஊதியம் ஐம்பத்தைந்தாயிரம் வழங்க வேண்டும். அத்துடன் நிரந்தர ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வும் அகவிலைப்படியும் வழங்குவது போலக் கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்திலும் சில ஆயிரம் உயர்த்த வேண்டும். இவற்றைச் செய்தால் போராட்டம் ஏதுமின்றி நிம்மதியுடன் கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுவர். கல்லூரிகளில் நல்ல கல்விச்சூழல் நிலவும்.
வி: அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை அந்தந்த நிறுவனங்களே நேர்காணல் வழி நிரப்புகின்றன. இதன்வழி உறவினர்கள், கையூட்டுக் கொடுத்து உள்ளே வருபவர்கள் பெருகிவிட்டனர் என்பது கண்கூடு. கேரளாவில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான கையூட்டு 50 லட்சத்திற்கும் மேல். கேரள சட்ட அமைச்சராக இருந்த ஏ. கே. பாலன், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வையும் அரசே நடத்த வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்தார்; அது கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானது. இப்போதும் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வை அந்நிறுவனங்களே செய்கின்றன. அரசு உதவி பெறும் நிறுவன ஆசிரியர்களுக்கு அரசே சம்பளம் வழங்குகையில், ஆசிரியர் தேர்வையும் அரசே நடத்தக்கூடாதா? இதன் நடைமுறைச் சிக்கல்கள் என்னென்ன?
பெமு: தாராளமாக அரசே நடத்தலாம். என்ன சிக்கல்? நிர்வாகமே நியமனம் செய்தால் வாங்கும் பணத்தில் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கணிசமான பங்கு கிடைக்கும். ஒரு மண்டலத்திற்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநராக வருவதற்குப் பல லட்சம், சில சமயம் கோடிகள்கூடக் கொடுக்க வேண்டும். அந்த மண்டலத்தில் எத்தனை அரசு உதவி பெறும் கல்லூரிகள் இருக்கின்றன என்பதைப் பொறுத்து தொகை ஏலத்தில் போகும். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டமும் சேர்ந்து ஒரு மண்டலம். இதற்கு இணை இயக்குநராக வந்த ஒருவர் ‘என்ன சார் இங்க கொண்டுக்கிட்டு வந்து போட்டுட்டாங்க’ என்று புலம்பினார். காரணம் இந்தப் பகுதியில் மூன்றே மூன்று அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் தான் உள்ளன. லஞ்ச வருமானம் குறைவு. அரசு உதவி பெறும் கல்லூரியில் பணிநியமனம் நடைபெற்றால் அதில் இணை இயக்குநருக்கும் பங்கு கிடைக்கும். அது போகிறதே. அவர் சொன்னார், ‘திருப்பத்தூர் மாவட்டத்தையும் இந்த மண்டலத்தோடு இணைத்து விட்டால் நன்றாக இருக்கும்.’ பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளை முறையான வகையில் ஆசிரியர் நியமனம் செய்தது. அதை எதிர்த்து வழக்காடியது அரசுதான். ஊழலில் பங்கு என்பதுதான் இங்கு ஒருநடைமுறை நிலவுவதற்கான காரணம். ஊழலை ஒழிக்க வேண்டும் என்னும் மனநிலை வந்தால்தான் நடைமுறை மாறும்.
வி: தனியார் கல்லூரிகளைச் சட்டத்தால் முறைப்படுத்தி இருக்கிறது கேரள அரசு. முறையான சம்பளம், விடுப்பு குறித்த தகவல்கள், ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் மற்றும் பணியில் இருந்து சுலபமாக விடுவித்துக் கொள்வது போன்றவையெல்லாம் இதில் அடங்கும். தமிழ்நாட்டில் அப்படி ஒன்றும் இல்லை எனத் தெரிகிறது. இதை சாத்தியமாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்னென்னவென்று நினைக்கிறீர்கள்?
பெமு: கல்விச் சேவையாற்றிக் கோடிகோடி சேர்க்கும், மாளிகை கட்டிச் சொகுசாக வாழும் கல்வித் தந்தைகள் சுரண்டுவது பெற்றோரை மட்டுமல்ல, ஆசிரியர்களையும் தான். கல்வித் தந்தைகள் தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவார்கள். பல அரசியல்வாதிகள், எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான் கல்வித் தந்தைகளாக உள்ளார்கள். பிறகு எப்படிச் சுரண்டலுக்கு எதிராக ஆசிரியர் நலன் சார்ந்து சட்டம் கொண்டு வருவார்கள்? தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாகத் தான் வைத்திருக்கிறார்கள். குறைந்த ஊதியம், கடும் உழைப்பு, விடுப்பு எடுக்க முடியாமை எனப் பலவகையிலும் சுரண்டல் நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணிக்குக் கூடப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப மாட்டோம் என்று மறுத்த சுயநிதிக் கல்லூரிகள் உண்டு. நாங்கள் சம்பளம் தருகிறோமே, இங்கும் வாங்கிக் கொண்டு விடைத்தாள் திருத்தவும் உங்களுக்குப் பணம் வேண்டுமா என்று கேட்ட சுயநிதிக் கல்லூரி நிர்வாகத்தினர் பலர். ஒருபருவம் முழுக்கப் பாடம் நடத்தினாலும் அதற்குரிய விடைத்தாள்களைத் திருத்த அவர்களுக்கு வாய்ப்பில்லை. அதாவது ஆசிரியர்களுக்குப் பணப்பயன் எவ்வழியிலும் கிடைத்துவிடக் கூடாது என்பதே அவர்கள் எண்ணம். உயிர் வாழச் சாப்பிட வேண்டும் அல்லவா? அதற்குத் தேவையான குறைந்தபட்ச ஊதியம் கொடுத்தால் போதும் என்னும் நிலக்கிழாரிய மனோபாவம். கல்லூரிகளை நடத்துபவர்கள் நிலவுடைமை கொண்ட சூத்திர சாதியினர் தானே. ஊதியம் இல்லாமலே ஆசிரியர்கள் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் போல. ‘மாணவர்கள் மூலம் வரவு. உங்களால் செலவு. ஒருமாணவரை இழந்தால் வருமானம் குறையும். ஓர் ஆசிரியர் போனால் இன்னும் குறைந்த ஊதியத்தில் இன்னொருவர் கிடைப்பார்’ என்று ஆசிரியர்களை நோக்கிச் சொன்ன கல்லூரித் தாளாளரைக் கண்டிருக்கிறேன். ஒருபாடவேளைக்கும் இன்னொரு பாடவேளைக்கும் இடையில் ஓய்வு எதற்கு என்று அந்த நேரத்தில் அலுவலகப் பணிகளை ஒதுக்கிய நிர்வாகம் உண்டு. இன்றும் மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தில் ஆசிரியரைப் பணியமர்த்தும் கல்லூரிகள் இருக்கின்றன. தனியார் கல்வி நிறுவனச் சுரண்டல்களைப் பட்டியலிட்டால் அதற்கு முடிவில்லை. தொழிற்சங்கப் போராட்டம் பெருமளவில் வெடித்து எழுந்தால் ஒழிய இங்கே வழி பிறக்காது. போராட்டத்தில் பங்கெடுக்கத் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் வர மாட்டார்கள். அவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் வகையில் கட்சிகளும் இங்கில்லை. எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
தொடரும்…

விஜயகுமார்
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















சிறப்பான கேள்விகள். அதைவிடச் சிறப்பான பதில்கள். குறிப்பாகக் கௌரவ விரிவுரையாளர்கள் குறித்த பல தகவல்களை அறிய முடிந்தது.