
நிகழ்ச்சிக்கான இணையச் சுட்டி : https://meet.google.com/rzc-yfzz-isc

நண்பர்களுக்கு வணக்கம்.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக, “அகழ்” இணையதளம் கலை இலக்கியம் சார்ந்து தீவிரமான ஆக்கங்களை வெளியிட்டு வருகிறது. அதன் வழியே வாசகர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது. இந்த தளத்தின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று, கலை இலக்கிய உரையாடல்களுக்கான ஒரு பொது மேடையாக செயல்பட வேண்டும் என்பது. பலதரப்பட்ட எழுத்தாளர்களின் பங்களிப்பு வழியாகவும் வாசக ஆதரவு வழியாகவும், அதற்கான பாதையில் நிதானமாக முன்னேறி வருகிறோம். அதை மேலும் வெவ்வேறு விதங்களில் விரிவுப்படுத்தவும் எத்தனிக்கிறோம்.
பன்முகப்பட்ட சிந்தனைக் குரல்கள் எந்த தணிக்கையும் இல்லாமல் சுதந்திரமாக உரையாடுவதும் முரண்பட்டு விவாதிப்பதுமே ஆரோக்கியமான ஒரு அறிவுச் சூழலுக்கான சான்றுகள். உரையாடலே உயிர்த்தன்மை என்றும் சொல்லலாம். இதன் நீட்சியாக, சீரான இடைவெளியில் “அகழ்” சார்பில் இணையக் கூடுகைகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். அகழ் தளத்தில் வெளியான ஆக்கங்களை முன்வைத்து அவற்றின் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியாக இது நடைபெறும். நவீன தமிழ் இலக்கியம் ஒரு புறனடை இயக்கம். பொதுவோட்டத்துக்கு வெளியே ஒரு சிறிய பரப்பில் செயல்படுவது. எனவே இங்கே எழுத்துக்களை வெளியிடுவதுடன் வாசக எதிர்வினைகளுக்கான வழிமுறைகளை நெறிப்படுத்த முயற்சிப்பதும் அவசியமானதாக உள்ளது. அந்த அடிப்படையிலேயே இக்கூடுகைகளை திட்டமிடுகிறோம்.
முதல் நிகழ்வாக, வருகிற மே மாதம் 9ம் தேதி, கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனுடன் வாசகர் உரையாடல் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நவீனக் கவிஞர்களில் ஒருவரான ஷங்கர்ராமசுப்ரமணியன் அகழ் தளத்தில் தொடர்ந்து பங்களிப்பாற்றி வருகிறார். கவிதைகள் எழுதியிருக்கிறார். புனைவிலக்கியம், வாழ்க்கை வரலாறு, சமூகவியல் ஆய்வு முதலிய பலவகைப்பட்ட நூல்கள் சார்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்த இணையதளத்தின் மதிப்பு என்பது அதில் பங்களிப்பாற்றுகிற எழுத்தாளர்களின் மதிப்பே. அவ்வகையில் அகழின் மதிப்பைக் கூட்டியவர்களில் ஷங்கர்ராமசுப்ரமணியனும் ஒருவர்.
நெடுங்கவிதை எனும் கலை வடிவத்தை முன்வைத்து, அவர் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகளை மையப்படுத்தி “நவீனத் தமிழ் இலக்கியத்தில் நெடுங்கவிதை : தோற்றம், வளர்ச்சி மற்றும் போக்கு” எனும் தலைப்பில் முதல் கூடுகை அமைக்கப்படுகிறது. எழுத்தாளர் ஜனார்த்தனன் இளங்கோ, இக்கட்டுரைகள் குறித்து ஓர் அறிமுக உரை நிகழ்த்துகிறார். விக்கிரமாதித்யனின் “நவபாஷாணம்”, ஞானக்கூத்தனின் “அழிவுப் பாதை”, நிலாந்தனின் “மண்பட்டினங்கள்” ஆகிய நெடுங்கவிதைகளை மதிப்பிடுவதன் வழியே அக்கலை வடிவத்தின் சமகால பொருத்தப்பாட்டினை ஷங்கர்ராமசுப்ரமணியன் அடிக்கோடிட்டு காட்டினார். தொடர்ந்து அவரே “இகவடை பரவடை” எனும் தலைப்பில் ஒரு நெடுங்கவிதை நூலையும் வெளியிட்டார். இவைக் குறித்து வாசகர்கள் அவருடன் நிகழ்ச்சியில் உரையாடலாம்.
இந்நிகழ்ச்சிக்கு வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம். வாசகர்கள் தங்களை கேள்விகளை முன்கூட்டியே அளிக்க விரும்பினால் “akazhonline@gmail.com” எனும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். நிகழ்ச்சியில் பங்குகொள்ள இயலாதவர்களும் மின்னஞ்சலில் கேள்விகள் அனுப்பலாம்.
அகழ் ஆசிரியர் குழு
OOO
ஷங்கர்ராமசுப்ரமணியன் கட்டுரைகள்:
போதல போதல பத்தல பத்தல – நவபாஷாணம் என்னும் ’வெகுஜன’ நீள்கவிதை
எதுவும் அழியாதென்னும் ‘அழிவுப் பாதை’
கதிர்காமத்துக்குப் போகும் வண்ணத்துப்பூச்சிகள்
இகவடை பரவடை தொகுப்பு:
வெளிச்சத்தை அறிவிக்காத குயில்
“இகவடை பரவடை” – ஓர் உரையாடல்
“இகவடை பரவடை” – ஒரு விமர்சனப் பார்வை
இகவடை பரவடை நூல் வாங்க
OOO
அகழ் இணையக் கூடுகைகள் – 01
கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனுடன் வாசகர் கலந்துரையாடல்
தலைப்பு : “நவீனத் தமிழ் இலக்கியத்தில் – நெடுங்கவிதை : தோற்றம், வளர்ச்சி மற்றும் போக்கு”
நெடுங்கவிதைகள் சார்ந்து “அகழ்” இணையதளத்தில் வெளியான ஷங்கர்ராமசுப்ரமணியனின் கட்டுரைகளை மையப்படுத்திய உரையாடல்
கட்டுரைகள் பற்றிய அறிமுக உரை : எழுத்தாளர் ஜனார்த்தனன் இளங்கோ
நாள் : 09 மே 2026 நேரம் : மாலை 4:00 முதல் 5:30 வரை
நிகழ்ச்சிக்கான இணையச் சுட்டி : https://meet.google.com/rzc-yfzz-isc
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















