
விஜயகுமார்: எழுத்தாளர் சுந்தர ராமசாமி – கல்வியாளர் வசந்தி தேவி உரையாடலில் ஒரு மிதிவண்டிப் பயிற்சி மாணவிகளின் வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதைப் பகிர்ந்திருப்பார்கள். அது போன்ற ஏதேனும் ஒரு சிறு மாற்றம் கல்லூரி மாணவிகளை ஈர்த்து உயர்த்தியிருக்கிறதா?
பெருமாள்முருகன்: மிதிவண்டி கற்றுக் கொடுத்ததை வசந்திதேவி சொன்ன போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கொங்குப் பகுதியில் மிதிவண்டி ஓட்டத் தெரியாத பெண்களே கிடையாது என்னும் நிலை இருந்தது. பல வீடுகளில் ‘நம்ம ஊரு வண்டி’ என்னும் டிவிஎஸ்50 இருந்தது. அதைப் பெண்கள் ஓட்டுவார்கள். போர்வெல் என்னும் ரிக் வண்டி வேலைக்காக வட இந்தியாவுக்குப் போய்ச் சில மாதங்கள் வீட்டுக்கே வராமல் ஆண்கள் இருப்பார்கள். ஆண் இல்லாமல் குடும்பத்தை நடத்த மிதிவண்டியும் டிவிஎஸ்50யும் உதவின என்றால் மிகையல்ல. அது இந்தப் பகுதியில் கல்வி சார்ந்து அல்லாமல் தொழில் சார்ந்த முன்னேற்றம் காரணமாக இயல்பாகவே நடந்திருந்தது. அது இல்லாத இடத்தில் வசந்திதேவி செய்தது பெருமாற்றம்.
ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் அவர். ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் அப்பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் எல்லாம் அதைச் செயல்படுத்தும் அதிகாரம் துணைவேந்தருக்கு உண்டு. நான் அரசு கல்லூரி ஒன்றில் முதல்வராக இருந்தேன். எனக்கு மேலே இணை இயக்குநர், இயக்குநர் என அதிகாரம் பெற்றவர்கள் உண்டு. என் அதிகார எல்லை மிகக் குறுகியது. அதற்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும். பெண்களுக்கான வெளியை விரிவாக்கச் சிலவற்றைச் செய்ய முடிந்தது. பொதுநிகழ்வுகளில், விளையாட்டில், தேசிய மாணவர் படையில் அவர்கள் பங்கு பெற உதவ முடிந்தது. ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த தேசிய மாணவர் படையில் பெண்களுக்கான பிரிவையும் கோரிப் பெற்றேன். அதில் பெண்கள் சேர்ந்து சீருடையுடன் கம்பீரமாக அணிவகுப்பில் ஈடுபட்டது அதுவரை கல்லூரியில் காணாத காட்சி. அங்கு பயிலும் பெண்களுக்கு அது பெருநம்பிக்கை கொடுத்தது. சிலர் காவல்துறையில் வேலைக்குச் செல்ல வாய்ப்பாக அமைந்தது.
ஐம்பது ஆண்டுகளைக் கடந்தது நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி. ஆண்கள் கல்லூரியாக இருந்து 1995இல் இருபாலர் கல்லூரியாக மாற்றப்பட்டது. பெண்களுக்கு முப்பத்து மூன்று சத இடஒதுக்கீடு உண்டு. எனினும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. பத்து சதவீத அளவுக்குக்கூட இல்லை. நகரத்தில் பெண்கள் கல்லூரி ஒன்று இருப்பதால் இங்கே வரப் பெண்கள் விரும்புவதில்லை, நகரத்திற்கு வெளியில் கல்லூரி இருப்பதால் தூரம் என்று தயங்குகிறார்கள், பையன்களோடு சேர்த்துப் பெண்கள் படித்தால் காதலித்து ஓடிப் போய்விடுவார்கள் என்று பெற்றோர் பயப்படுகின்றனர் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள். இவற்றில் சிறிதளவு உண்மை இருக்கலாம். முழு உண்மையல்ல. கல்லூரியில் முதுகலைப் படிப்பு வந்த போது பெண்கள் பலர் வந்து சேர்ந்ததை நானே கண்டிருக்கிறேன். ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் கல்லூரியில் இடம் கிடைக்காமல், சேர வாய்ப்பு இல்லாததால் திரும்பிச் செல்வோர் எண்ணிக்கை கணிசம். அவர்கள் ஏன் எங்கள் கல்லூரிக்கு வருவதில்லை?
இரண்டு விஷயங்களை நான் செய்தேன். முதலாவது மிகச் சிறிய செயல். உச்சநேரத்தில் கல்லூரிக்கு வரும் பேருந்தில் பெண்களால் ஏற முடியாத அளவு கூட்ட நெரிசல். அதை எளிதாக்குவதற்காகப் போக்குவரத்து அலுவலரிடம் பேசி ‘மகளிர் மட்டும்’ பேருந்து ஒன்றை நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி வரைக்கும் விட ஏற்பாடு செய்தேன். சிறுவிஷயம் எனினும் இதைச் செயல்படுத்த மேலிடம் வரைக்கும் போக வேண்டியிருந்தது. கல்லூரியில் பணியாற்றும் பெண்களும் மாணவியரும் அப்பேருந்தில் மகிழ்ச்சியாகப் பயணம் செய்தனர்.
இரண்டாவது சற்றே பெரிய செயல். தூரத்தில் இருந்து தம் பெண்ணைச் சேர்க்க அழைத்து வரும் பெற்றோர் கேட்ட கேள்வி ‘ஹாஸ்டல் இருக்கிறதா?’ என்பதுதான். இல்லை என்பதால் தம் பெண்ணைச் சேர்க்காமல் சென்றோர் பலர். இன்று சமூக நீதி விடுதி எனப் பெயர் மாற்றம் செய்துள்ள நலத்துறை விடுதிகள் ஆண்களுக்கு மட்டுமே இருந்தன. பெரிதும் முயன்று மகளிர் விடுதி வருவதற்கு ஏற்பாடு செய்தேன். அதற்காகப் பட்ட பாடுகளை ஏற்கனவே எழுதியுள்ளேன். நான் ஓய்வு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகே விடுதி செயல்படத் தொடங்கியது. அதனால் இப்போது பெண்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கிறது என்பதை அறிகிறேன். அது எனக்குப் பெரிய மகிழ்ச்சி.

வி: இலவசப் பேருந்து, மாதாந்திர உதவித் தொகை எனப் பெண்களைக் கல்லூரிக்குள் வரவைக்கும் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு; உயர்கல்விக்கான சேர்க்கை அதிகரித்திருக்கும் நிலையில் பெண்களுக்கான வெளி என்பது எப்படி இருக்கிறது? பட்டப்படிப்பென்பது திருமணத்தகுதி எனச் சுருங்கிவிட்டதா?
பெமு: இப்போதுதானே இவையெல்லாம் வந்திருக்கின்றன, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துப் பார்ப்போம். எப்படி இருப்பினும் நல்ல விளைவுகளே ஏற்படும் என்று நம்புகிறேன். பத்தாம் வகுப்புப் படித்த பெண்களுக்குத் திருமண உதவித்தொகை ஐம்பதாயிரம் என்றிருந்தது. பெண்களைப் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்க வைத்தார்கள். பிறகு அது பன்னிரண்டாம் வகுப்பு என்றாயிற்று. பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் படிக்க வைத்தார்கள். இப்போது திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் என்னும் திட்டங்களை நிறுத்திவிட்டார்கள். அது மிக நல்லது. இப்போது படிப்புக்கு மட்டும்தான் உதவித்தொகை. திருமணத்தை அவரவர் பொறுப்பிலேயே அரசு விட்டுவிட்டது. இது காலத்திற்கேற்ற நல்ல முடிவு. இளநிலைப் படிப்புக்கு மட்டும் என்றல்ல, எதுவரைக்கும் படித்தாலும் உதவித்தொகை உண்டு. ஆகவே கணிசமான பெண்கள் தங்கள் வாழ்வைத் தாங்களே தீர்மானிக்கும் சுயமுடிவை எடுக்கும் நிலை ஏற்படும். பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை கூடும்.
பெண்களுக்கான வெளி எப்படியிருக்கிறது என்று கேட்டிருக்கிறீர்கள். பெண்களுக்கான வெளி கட்டாயம் கூடத்தான் செய்யும். அதிலென்ன சந்தேகம்? மகளிர் விடுதி ஏற்படுத்தினோம் என்று சொன்னேன் அல்லவா? அதற்குக் கல்லூரிக் கட்டிடம் ஒன்றில் ஆறு வகுப்பறைகளை ஒதுக்கிக் கொடுத்தோம். தனிக் கட்டிடம் கட்டும் வரைக்கும் இடம் வேண்டுமே. இப்போது இருநூறு பெண்கள் அதில் தங்கியுள்ளனர். சமீபத்தில் அங்கே நடந்த ஒருநிகழ்ச்சி. ஒரு பெண்ணுக்குப் பிறந்த நாள். ஐந்தாறு தோழியர் சேர்ந்து அதைக் கொண்டாட முடிவு செய்தனர். மது விருந்து நடத்த வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அதற்கு ஏற்பாடு செய்து மொட்டை மாடியில் விருந்து நடந்திருக்கிறது. உற்சாகக் கூச்சலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் காலியான பீர் பாட்டிலை ஒன்றைத் தூக்கி ஒருவர் வீச அது கட்டிடத்தை ஒட்டியிருந்த சாலையில் போய் விழுந்திருக்கிறது. அதன் பிறகு அது பெரிய விஷயமாகி ஊருக்கே பேசுபொருளாகி விட்டது.
இந்தச் சம்பவத்தை என் காதுக்குக் கொண்டு வந்தவர்கள் விடுதி வர ஏற்பாடு செய்த நான் தான் இப்பிரச்சினைக்குக் காரணம் என மறைமுகமாகக் குற்றம் சுமத்தும் தொனியில் சொன்னார்கள். அதைப் பற்றி எத்தனை விதமான ஆராய்ச்சிகள், விளக்கங்கள். அந்தப் பெண்களுக்கு எங்கிருந்து பீர் கிடைத்திருக்கும் என்றோர் ஆராய்ச்சி. பீர் கிடைக்காத பாலைவனத்தில் நாம் வாழ்கிறோமோ? ஏதோ ஒரு பெண்ணுக்குப் பழக்கமான பையன்தான் வாங்கி வந்து கொடுத்திருப்பான், செயலி மூலம் ஆர்டர் கொடுத்து வாங்கியிருப்பார்கள் என்றெல்லாம் விளக்கம். பெண் கையில் பீர் பாட்டில் வந்துவிட்டது என்பது சமூகப் பதற்றத்தை உருவாக்குகிறது. திருமணம் செய்யாமல் படிக்க அனுப்பினால் இப்படித்தான் செய்வார்கள், அரசு கல்லூரியில் படிப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள், அரசு இலவசமாக இருக்க இடம் வழங்கினால் எல்லாம் செய்வார்கள் – என்பது போல எத்தனை கருத்துக்கள்! சிலர் தம் தீர்ப்பாகத் தண்டனைகளையும் சொன்னார்கள். உடனே விடுதியை விட்டு அவர்களை அனுப்ப வேண்டும், கல்லூரியை விட்டே நீக்க வேண்டும், பெற்றோரை அழைத்துக் கண்டிக்க வேண்டும் என என்னென்னவோ.
இந்தச் சம்பவத்தை நான் இப்படிப் பார்க்கிறேன். குடிக்காமலும் குடித்துவிட்டும் ஆண்கள் செய்யும் அட்டூழியங்கள் எத்தனை எத்தனை! பொதுவிடத்தில் தூக்கிப் பிடித்து நின்றபடி மல்லுதல், வாந்தி எடுத்தல், கத்துதல், பேருந்துகளை உடைத்தல், சண்டையிட்டுப் புரளுதல் என ஆண்கள் செய்தவை, செய்பவை பல. கொலைகளும் நடந்திருக்கின்றன. கல்லூரியை ஒட்டியிருக்கும் இரண்டு ஆண்கள் விடுதியிலேயே எவ்வளவோ நடந்திருக்கின்றன. அவற்றை இயல்பாகக் கருதும் பொதுச்சமூகம் பெண் என்றதும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிட்டது. பெண்களுக்குத் தம் விஷயத்தைக் கொண்டாட ஒருவெளி கிடைத்திருப்பது நல்ல விஷயம்தான். கொஞ்சம் எல்லை மீறிவிட்டார்கள். பீர் பாட்டிலைச் சாலையில் வீசியிருக்கக் கூடாது. அது யாரேனும் பாதிக்கும் செயல். அந்தக் கட்டுப்பாடு மட்டும் இருந்திருந்தால் இதை வெளியுலகம் அறிந்திருக்காது. மொட்டை மாடியில் கத்திக் கூச்சலிட்டாலும் அது பெரிய விஷயமாகியிருக்காது. இதுவரை இல்லாத வகையில் அவர்களுக்கு ஒருவெளி கிடைக்கும்போது அதைக் கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதை இப்படிப் பார்த்துத்தான் நான் புரிந்துகொள்கிறேன்.
வி: ஒருகாலத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் கல்வி பயில அனுமதிக்கப்பட்டனர்; பிறகு ஆண்கள் சேரும் வகையில் மாறின. இன்று ஒருபாலர் மட்டும் பயிலும் கல்லூரிகள் உள்ளன. பாலடிப்படையில் கல்வி நிலையங்கள் தொடரவேண்டுமா?
பெமு: தொடர வேண்டியதில்லை. அரசின் கொள்கையும் அதுதான் என்று நினைக்கிறேன். பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு வந்த பிறகு ‘அரசு ஆண்கள் கல்லூரி’ என்றிருந்தவற்றை எல்லாம் இருபாலர் கல்லூரிகளாக அரசு மாற்றியது. அவற்றில் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு ஒதுக்கீட்டை வழங்கியது. அனேகமாக இது ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் 1993 அல்லது 1994ஆம் ஆண்டு வந்தது என்று நினைக்கிறேன். அவர் செய்த சில நல்ல செயல்களுள் இதுவும் ஒன்று. ஆனால் ‘மகளிர் கல்லூரி’ அனைத்தும் அப்படியே இருக்கின்றன. அவையும் மாற இன்னும் காலம் பிடிக்கும். புதிதாகத் தொடங்கும் அரசு கல்லூரிகள் அனைத்தும் இருபாலர் கல்லூரிகளாகவே இருக்கின்றன. சுயநிதிக் கல்லூரிகள் சில மகளிர் கல்லூரிகளாகத் தொடங்கப்பட்டன. ஆண்களும் பெண்களும் சேர்ந்து படித்தால் காதல் திருமணம் அதாவது கலப்புத் திருமணம் நடக்க வாய்ப்பிருக்கிறது எனப் பெற்றோர் நினைக்கின்றனர். அந்த மனநிலையைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் தந்திரமாக மகளிர் கல்லூரிகள் சுயநிதியில் தொடங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் மட்டும் பயிலும் சுயநிதிக் கல்வி நிறுவனம் ஒன்று இருக்கிறது. கலை அறிவியல் கல்லூரிகள் இரண்டு, கல்வியியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவம் சார்ந்த பல்வேறு படிப்புகளைக் கொண்ட கல்லூரிகள் எனப் பல கல்லூரிகளைக் கொண்ட அந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட முப்பதாயிரம் பெண்கள் பயில்கிறார்கள். இவ்வளவு பெண்கள் கல்விக்கு வந்திருக்கிறார்கள் என்பதும் இத்தனை பேரை ஒரே நிறுவனத்திற்குள் பார்க்க முடிகிறது என்பதும் மிகப் பெரிய விஷயம். ஒற்றைப் பெண்ணாகக் கல்வி கற்ற முத்துலட்சுமி ரெட்டி கதையை எல்லாம் அறிந்த நமக்கு நம் சமூகம் எத்தனை தூரம் முன்னேறி வந்திருக்கிறது என்பதற்கு இது பெரும்சான்று. ஆனால் பெற்றோர் தம் பெண்பிள்ளைகளை மகளிர் மட்டும் பயிலும் நிறுவனத்தில் ஏன் சேர்க்க விரும்புகின்றனர் என்பது முக்கியமான கேள்வி.

ஆண்கள் காதலிப்பது, வேறு சாதியில் திருமணம் செய்து கொள்வது ஆகியவற்றை ஓரளவு ஏற்றுக் கொள்கிறார்கள். பெண்கள் காதலிப்பதை முற்றாக ஏற்பதில்லை. ஒரு ஆண் காதலிக்கிறான் என்றால் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டுத் தானே இருக்க வேண்டும்? அந்தத் தர்க்கம் பிடிபடுவதில்லை. பொதுவாகத் தம் குடும்பக் கௌரவத்தை, சாதிக் கௌரவத்தைப் பெண் தான் காப்பாற்ற வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு வலுவாக இருக்கிறது. இந்த மனநிலையை உடைக்க வேண்டும் என்றால் ‘மகளிர் மட்டும்’ கல்லூரிகள் கூடாது. பெண்கள் கல்விக்குள் வர வேண்டும் என்பதற்காக ஒருகாலத்தில் பெண்கள் மட்டும் பயிலும் கல்வி நிறுவனங்களைத் தொடங்க அரசு அனுமதி கொடுத்தது. இனி அது தேவையில்லை. சுயநிதியில் மகளிர் கல்லூரி மட்டும் தொடங்க அரசு அனுமதி தரக் கூடாது. இருபாலர் கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும். மகளிர் கல்லூரிகளையும் இருபாலர் கல்லூரிகளாக மாற்றிக் கொள்ள விரும்பினால் அதற்கும் அனுமதி தர வேண்டும்.
ஆண்களும் பெண்களும் தம் இணையைத் தாமே தேடிக் கொள்ளும் மனோபாவம் கூடி வரும் காலம். பொதுவெளிகள் குறைவாக இருக்கும் நம் சமூகத்தில் ஒரு பெண்ணும் ஆணும் எங்கே சந்தித்துப் பழகிக் காதல் கொள்ள முடியும்? கல்வி கற்கும் இடம், பணியாற்றும் இடம் ஆகிய இரண்டுதான் வாய்ப்புள்ளவை. அங்கும் ஒருபாலரை மட்டும் அனுமதித்தால் எப்படி? இப்போது பிள்ளைகளே இருபாலர் கல்லூரியை விரும்பித் தேர்வு செய்யும் முன்னேற்றம் வந்து கொண்டிருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர்கல்விக்குச் செல்லும் பையன்கள் தம் பெற்றோரை மீறி இருபாலர் கல்லூரியைத் தேர்வு செய்வதைக் காண்கிறேன். அந்த வயதில் பெண்களால் தம் பெற்றோரை மீற முடிவதில்லை. ஆனால் பெண்களும் இருபாலர் கல்லூரியில் பயில்வதையே பெரிதும் விரும்புகின்றனர். அவர்கள் விருப்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இருபாலர் கல்லூரிகளே எங்கும் இருக்கும் நிலையை அரசு உருவாக்க வேண்டும். ஒருவகையில் இதுவும் சாதிக்கு எதிரான சமூக நீதிதான் என்று நினைக்கிறேன்.
வி: பால்மாற்றமடைந்தோர், பால் புதுமையினருக்கென நமது கல்வி நிறுவனங்கள் தம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கின்றனவா? அவர்களுக்கான இட ஒதுக்கீடு, சேர்க்கை குறித்து ஏதேனும் மாற்றங்கள் வந்தால் நன்றாக இருக்குமா?
பெமு: பால் மாற்றமடைந்தோருக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. தனியாக இட ஒதுக்கீடு இதுவரை இல்லை. ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீட்டை அவர்கள் பயன் கொள்ளலாம். அதாவது எஸ்ஸி, பிசி, எம்பிசி உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் எதற்குத் தகுதியானவர்களோ அதில் இடம் வழங்கப்படுகிறது. முன்னர் அவர்களுக்கான அங்கீகாரம் இல்லை. ஆண், பெண் என்னும் இரண்டில் ஏதாவது ஒன்றில் தான் ஒருவர் சேர முடியும் என்றிருந்தது. இப்போது Transgender என்னும் பிரிவையும் விண்ணப்பத்திலேயே கொடுக்கிறார்கள். ஆத்தூர் கல்லூரியிலும் நாமக்கல் கல்லூரியிலும் நான் முதல்வராக இருந்தபோது ‘மூன்றாம் பாலினம்’ என்று இருந்ததைத் ‘திருநர்’ என்று மாற்றம் செய்தேன். திருநங்கை, திருநம்பி ஆகிய சொற்களும் திருநர் என்பதும் புதிதாக வழக்குக்கு வந்திருப்பது கல்வித்துறையை எட்டவில்லை. எட்டினாலும் மாற்றம் செய்யத் தயங்குவார்கள். பழையதைப் பிரதி எடுப்பதுதானே அரசு அலுவலகத்தின் இயல்பு.
ஆனால் நான் பணியாற்றிய காலத்தில் திருநர் எவரும் கல்லூரிக்கு வந்து சேரவில்லை. பால்புதுமையர் பற்றிப் பேச்சே இல்லை. அதைப் பற்றிய குழப்பம் சூழலில் நிலவுகிறது என்று நினைக்கிறேன். அவர்கள் கல்விக்குள் வந்தால், தங்களை வெளிப்படையாக முன்வைக்கும் சூழல் அமைந்தால் அப்போது பொதுச்சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரியவரும். தொடக்கத்தில் அதிர்ச்சி அடைந்து பிறகு படிப்படியாக இயல்பாகும் என்று நினைக்கிறேன். திருநருக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடு வழங்குவது அவர்கள் விரைந்து பொதுசமூகத்தில் கலப்பதற்கு உதவும்.
வி: தமிழ்நாடு அரசு மாவட்டம்தோறும் புத்தகக்கண்காட்சிகளை நடத்தி எழுத்தாளர்களை அழைத்துப் பேச வைத்துக்கொண்டிருக்கிறது. நமது பள்ளி / கல்லூரிகளில், சமூக வலைத்தளப் பிரபலங்கள் / திரைக்கலைஞர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வரவேற்கப்படுகிறார்கள். மாணவர்களுக்கு இத்தகைய முன்னுதாரணங்கள் போதுமா?
பெமு: சுயநிதிக் கல்வி நிறுவனத்தினர் இத்தகைய பிரபலங்களை அழைக்கின்றனர். அவர்களைப் பொருத்தவரைக்கும் கல்வி நிறுவனம் நடத்துதல் ஒரு தொழில். அது சிறப்பாக நடைபெற வேண்டுமானால் விளம்பரம் வேண்டும், பொதுமக்களிடம் சென்று சேர வேண்டும். அதற்குத் திரைப் பிரபலங்கள், சமூக ஊடகப் புகழோர், பட்டிமன்றப் பேச்சாளர்களைப் பயன்படுத்துகின்றனர். தொழில் என்று வந்தால் அதை மேம்படுத்த ஏதேதோ செய்வார்கள்தானே? அரசு கல்வி நிறுவனங்களில் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. தம் மக்களுக்குக் கல்வியை இலவசமாக வழங்குவதுதான் நல்ல அரசாக இருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் கல்வி தனியார்வசம் போய்விட்டது. அதனால் எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு கிடைத்தாலும் ஏற்றதாழ்வின் அளவு மிகுதியாக இருக்கிறது.
வி: கழிமுகம் நாவலில் “எப்பிடியாவது யார் கால்ல விழுந்தாவது, எவ்வளவு பணம் கொடுத்தாவது பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட வேண்டும்” என்கிறார் ஒரு அரசுப்பணியாளர். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆற்றிய உரைத்தொடரில், “சென்னை உயர்நிதிமன்றத்தில் அரசு அலுவலர்களால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் கிட்டத்தட்ட சரிபாதி பணிமாற்றப் பிரச்சினைகள். அவற்றில், ‘என்னைத் தண்டிப்பதற்காகப் பணியிடமாறுதல் செய்துவிட்டார்கள்’ என்கிற குற்றச்சாட்டு வழக்குகளும் அடங்கும்” என்கிறார். நியாயமான பணிமாறுதல் கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றனவா? கையூட்டின்றி சாத்தியமாகிறதா?
பெமு: அரசு ஊழியர் பணியிட மாறுதல் பலகாலமாக அரசியல்வாதிகள் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளுள் ஒன்றாக இருக்கிறது. உள்ளூர் அளவில் இயங்கும் அரசியல்வாதிகளுக்கு பணியிட மாறுதல் பெற்றுக் கொடுப்பது முக்கியமான வேலை. அதன் மூலம் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, உள்ளூர் அளவில் ஒருமதிப்பையும் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆனால் கடந்த பத்திருபது ஆண்டுகளாக அப்படியில்லை. லஞ்சத்தையும் மையப்படுத்திக் கொண்டார்கள். அமைச்சர் சார்பாக முகவர் ஒருவர் இருப்பார். அவரை அணுகினால் தொகை பேசிப் பணியிட மாறுதல் வாங்கும் நிலை இருந்தது. பல லட்சம் கொடுத்து இடமாறுதல் பெறுவது தொடர்பாக அரசு ஊழியர்களிடம் அதிருப்தி நிலவியதால் கலந்தாய்வு முறைக்கு மாறியது. பின்னர் இணைய வழியிலேயே கலந்தாய்வு நடத்தும் நிலையும் வந்தது. அப்போதும் முழுமையான வெளிப்படைத் தன்மை என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட இடம் வேண்டுவோர் முன்கூட்டியே பணம் கொடுத்து விட்டால் அதைக் காலியிடமாகக் காட்டாமல் மறைத்துவிடுவார்கள்.
ஆசிரியர்களுக்குக் கல்வியாண்டுத் தொடக்கத்தில் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆனால் அப்படிச் செய்வதில்லை. சிலசமயம் தாமதமாக நடத்துவார்கள். சிலசமயம் நடத்துவதே இல்லை. கலந்தாய்வு பணியிட மாறுதலுக்குச் சிறந்த முறை. அதில் அரசியல்வாதிகளுக்கு வருமானம் வராது என்பதால் எப்படி எப்படியோ தவிர்க்கிறார்கள். லஞ்சம் வாங்கிக் கொண்டு ‘நிர்வாகக் காரணம்’ என்று சொல்லி மாறுதல் போடுகிறார்கள். ஒருவர் மீது குற்றச்சாட்டு என்றால் தண்டனையாகப் பணியிட மாறுதல் செய்வார்கள். அது எப்படித் தண்டனையாகும் என்று தெரியவில்லை. இப்படிப் பல குளறுபடிகள் இருக்கின்றன.
அரசு ஊழியர்கள் பணம் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஓரிடத்திற்குப் போட்டியில் பல லட்சம் ஏலம் போவதுண்டு. தென்தமிழகத்தில் அரசு கல்லூரிகள் மிகவும் குறைவு என்பதால் அங்கே இருக்கும் ஒன்றிரண்டு கல்லூரிகளுக்குச் செல்லப் பல லட்சம் பணம் தரத் தயங்குவதில்லை. நகரக் கல்லூரிகளுக்கும் போட்டியிருந்தது. இப்போது காலியிடங்கள் நிறைய இருப்பதால் அப்போட்டி குறைந்திருக்கிறது. ஆனால் நகரக் கல்லூரிகளில் மிகுதியான ஆசிரியர்கள் இருப்பதும் கிராமக் கல்லூரிகளில் குறைவானவர்களே இருப்பதும் தொடர்கிறது. மலைப்பகுதிகளில் இன்னும் மோசம்.
மாதொருபாகன் பிரச்சினையின் போது சென்னை மாநிலக் கல்லூரிக்கு இடமாறுதல் பெற்றுச் சென்றேன். ஒன்றரை ஆண்டு அங்கே பணியாற்றிய பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நூலுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்ததால் மீண்டும் ஊர்ப்பக்கம் வந்துவிடலாம் என்று பணியிட மாறுதல் கலந்தாய்வுக்குச் சென்றேன். மீண்டும் நாமக்கல்லுக்குக் கொடுக்க மறுத்துவிட்டனர். ஆகவே ஆத்தூரைக் கேட்டுப் பெற்றேன். என்னை உடனே பணி விடுவிப்புப் பெறுமாறு அவசரப்படுத்தினர். மாநிலக் கல்லூரிக்கு வந்த ஒருவர் தாமாக இடமாறுதல் பெற்றுச் சென்றதே இல்லையாம். நான் தான் முதல். என் இடத்திற்குப் பணம் கொடுத்து ஒருவர் காத்திருக்கிறார். அவருக்கு ஆணை வழங்க வேண்டும். அதனால் என்னை அவசரப்படுத்தினர். பிற்பகல் நான் விடுவிப்புப் பெற்றேன். அன்று இரவே அவருக்கு ஆணை கொடுத்துவிட்டார்கள். நான் ஆத்தூர் வந்து சேர்வதற்குள் அவர் மாநிலக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார். அரசு இயந்திரத்தையும் சுறுசுறுபாக்கிவிடும் வல்லமை படைத்தது பணம்.
என் பார்வையில் அரசு ஊழியர்களுக்குச் சொந்த மாவட்டத்திலும் அதைச் சுற்றியுள்ள நான்கைந்து மாவட்டத்திலும் பணியிடம் ஒதுக்கக் கூடாது, பணியிட மாறுதலும் வழங்கக் கூடாது என்று நினைக்கிறேன். அரசு ஊழியர் தம் சொந்தச் சாதியினர் வாழும் பகுதியை விட்டுத் தூரத்தில் இருபது முப்பது ஆண்டுகள் வாழ்ந்தால் அங்கேயே நிலை கொள்ளும் வாழ்க்கை அமையும். அடுத்த தலைமுறைக்கும் சொந்தச் சாதிக்கும் தொடர்பு குறையும். சாதி கடந்த நட்புகள் உருவாகும். இது ஒருவகையில் குறிப்பிட்ட சாதியினர் ஒரே பகுதியில் அடர்த்தியாக வாழ்வதைக் குறைக்கும். சாதி ஒழிப்புக்கு இதுவும்கூட சிறிய அளவில் பயன்படும்.
வி: மாணவர்களுக்கு கட்டண உதவி செய்பவர்கள், சிறப்பு வகுப்பு எடுப்பவர்கள், வீட்டிலிருந்து உணவு கொடுப்பவர்கள் என உதவும் அரசு கல்லூரி ஆசிரியர்களை எங்களுடைய வளாகத்தில் கண்டிருக்கிறேன். இத்தகைய ஆசிரியர்களில் நீங்கள் அதிகம் வியந்த ஆசிரியர்களின் செயல்பாடுகளைக் குறித்து எழுதும் திட்டங்களேதும் இருக்கிறதா?
பெமு: நல்லாசிரியர்கள் குறைவாக இருப்பினும் அவர்களை இனங்காட்ட வேண்டியது அவசியம். அவர்கள் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்துச் செயல்படுவதில்லை. அத்தகையோரை என் எழுத்தில் நிச்சயம் பதிவு செய்வேன். ஆத்தூர் கல்லூரியில் மதிய உணவுத் திட்டம் போல ஒன்றைத் தொடங்கிச் சில மாணவர்கள் கல்லூரி உணவகத்தில் உண்ண ஏற்பாடு செய்தேன். இன்றுவரை கிட்டத்தட்டப் பத்து மாணவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு உதவியோர், உதவுவோரைப் பற்றி எழுதியிருக்கிறேன். அப்படி ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தக் காரணமான பேராசிரியர் சி.நல்லதம்பி பற்றியும் அதை இன்று வரை செயல்படுத்தி வரும் கணினி நிரலர் ஜெயப்பிரகாஷ் பற்றியும் குறிப்பாகவும் எழுதியுள்ளேன். பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளராக இருந்து பல செயல்பாடுகளை முன்னெடுத்த வேதியியல் பேராசிரியர் தருமராஜ் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன். என் பணிக் காலத்தில் நான் கண்டோர், முதல்வர் பணியில் இருந்த போது பொறுப்புகளை எடுத்துச் செய்து உதவியோர் என நல்லாசிரியர்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுவேன். ஆசிரியர்களுக்கு எதிரி போல என்னைக் கருதுவோர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனதில் உள்ள நல்லாசிரியர்களை எடுத்துக்காட்டவேனும் கட்டாயம் எழுத வேண்டும் அல்லவா?
வி: அரசுக் கல்லூரி அனுபவம் குறித்த கட்டுரைகளில் விளையாட்டுத் துறை பற்றி (என் வாசிப்பில்) உங்கள் எழுத்துக்களில் அதிகம் தென்படவில்லை. அது உங்கள் அதிகார நிலைக்கு வெளியே இருந்ததா? இல்லை நீங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை என நினைக்கிறீர்களா?
பெமு: முதல்வர் பணியனுபவங்களில் இன்னும் எழுதாதவை, எழுத நினைத்திருப்பவை பல. இன்னும் இரண்டு நூல்கள் எழுதத் திட்டம் உண்டு. அதில் விளையாட்டுப் பகுதி வரும். விளையாட்டுத் திடல்களே அற்ற நாமக்கல் பள்ளிகள் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று ‘மயிர்தான் பிரச்சினையா?’ நூலில் உள்ளது. கல்லூரியில் தனி நிதிவசதி கொண்ட துறை விளையாட்டு. அதைச் சிறப்பாகக் கையாண்டாலே பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம். ஆகவே விளையாட்டுத் துறையில் பெரிதும் கவனம் செலுத்தினேன். அதனால் மாணவர்களின் பேரன்புக்கு ஆளானேன். அதைப் பற்றி விரிவாக எழுதுவேன்.

விஜயகுமார்
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















அற்புதமான நேர்காணல் அய்யா. இன்றைய சூழ்நிலையில் இது போன்ற சம்பவங்கள் நமக்குத் தெரிவிப்பதில்லை.
அற்புதமான நேர்காணல். கேள்வி கேட்டவரும் சிறப்பாகக் கேட்டுள்ளார். பதில் சொன்ன திரு. பெருமாள்முருகனும் இயல்பாகவும் நேர்த்தியாகவும் பதில் அளித்துள்ளார். நல்ல பணி. வாழ்த்துகள்.
மிகவும் சிறப்பு
பெ.மு.வின் சீர்திருத்தச் செயல்பாடுகள் மாணவர் உள்ளங்களை வளப்படுத்துவன. பிற பேராசிரியர்களிடம் இந்தப் பேட்டி போய்ச்சேர வேண்டும்.
இப்பொழுதுதான் “மாறாது என்று எதுவுமில்லை. பெஜவாடா வில்சன் நேர்காணல் புத்தகம் படித்து முடித்தேன். பேட்டி கண்டவர். ஐயா. பெருமாள் முருகன். அருமையான உரையாடல். பல்வேறு கேள்விகள் நேர்த்தியாக கேட்டுள்ளார். அதற்க்கு அவரிடம் கேட்ட பதில்களை பெ.மு. அவர்கள் எழுதியுள்ளார். எத்தனை விசயங்கள் சமூகத்திற்க்கு தேவையான அனைத்து விசயங்களும் பேசப்பட்டுள்ளது. உள்ளபடியே இந்த மம்மர் அறுக்கும் மருந்து. முனைவர். விஜயகுமார். நேர்காணல் உயர்கல்வி துறையில் ஒரு அறியவகை செய்திகளை கொண்டு சேர்க்கும் என நம்புகிறேன். சென்ற வாரம் நான் கமெண்டில் கல்லூரிகள் முதல்வர்கள் சாதிய அடிபடையில் இருக்க கூடாது என கூறியிருந்தேன். அதற்க்கு இந்த வாரம் பதில் கிடைத்து விட்டது. மகளிர் விடுதியை பற்றிய பதில் அருமை. முதல்வராக அவர் சொன்ன பதில் Super. நான் என் மனைவி பணி இடமாறுதலுக்காக மூன்று வருடம் காத்துள்ளேன். நன்றி
கல்வியில் உள்ள “உயர்” ஒரு தனிநபரையும், சமூகத்தையும் உயர்த்தவே என எண்ணியிருந்தேன். ஆனால் இந்த நேர்காணலின் மூலம் அமைப்புரீதியாகவே அதில் உள்ள அடிப்படை பிழைகளை காணமுடிகிறது. ஒரு எழுத்தாளராக இருப்பதால் திரு. பெருமாள் சார் அவர்களின் ஒவ்வொரு பதிலும் இந்த நிறுவனங்கள் சமூகத்துடன் கொண்டுள்ள வலுவான தொடர்பை காட்டுகிறது. வெறும் குறைகளாகவோ, குற்றாச்சாட்டுளாகவோ அல்லாமல் அப்பிரச்னைகளுக்கு ஞாயமான தீர்வுகளையும் முன்வைத்துள்ளது நிச்சயம் பாராட்டிற்குரியது. அரசு கல்லூரிகளில் இருந்து சுயநிதி கல்லூரிகள் இயங்கும் விதமும், அதில் உள்ள முரண்களை குறிப்பிடும் இடமும், கல்லூரி பணியிடம் நிரப்படும் விதம் பற்றி கூறியிருப்பது இந்நேர்காணலின் உச்சம். மனித வாழ்வில் இடமாற்றம் என்பது ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும், அதில் உள்ள “Trans” எனும் சொல்லில் உள்ள முன்நகர்வு எனும் படிமம் பொருளிழந்து வெறும் சொல்லாக எஞ்சி ஜடப்பொருளின் நகர்வாக மட்டும் இருப்பது எத்தனை முரண்! அதிலும் பிறந்த ஜாதி பெரும்பான்மை உள்ள ஊரில் சென்று ஒரு “உயர்” கல்வி ஆசிரியர் இணைவது – வளர்ந்த மனிதன் சிசுவின் பழக்கங்களை கடைபிடிப்பது போன்றது, வளர்ச்சி படிநிலையில் பின்னோக்க நிலையை காட்டுகிறது. அதற்கான தீர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு நிச்சயம் ஒரு ஆதார மாற்றத்திற்கானது. இத்தொடர் மூலமாக சிந்திக்கும் ஒரு சிறு குழுவில் இதற்கான உரையாடல் சாத்தியமாகும் பட்சத்தில், அது ஒரு மாற்றத்திற்கான விதை!