மம்மர் அறுக்கும் மருந்து (3) – “தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களே மோசடிகளுக்குத் துணை போகின்றனர்!” : பெருமாள்முருகன்

பெருமாள் முருகன். புகைப்படம் நியுயார்க்கரிலிருந்து

விஜயகுமார்:    இருபது வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு உதவிப்பேராசிரியர் பணிக்குத் தேர்வை நடத்தியுள்ளது. பிற மாநிலங்களில், குறிப்பாக கேரளாவில் உதவிப்பேராசிரியர் தேர்வு நடக்கிறது; ஆனால் நேர்காணல் இல்லை. சான்றிதழ் சரிபார்ப்பு, வெளியிட்ட ஆய்விதழ்கள், கற்பித்தல் அனுபவம் போன்றவற்றிற்கு மதிப்பெண்கள் உண்டு. தமிழ்நாடு அதை விடுத்து நேர்காணல் நடத்தி மதிப்பெண்கள் வழங்கும் முறையைப் பின்பற்றப்போகிறது. ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசத்திலேயே வேலை பறிபோகும் நிலையில், நேர்காணலுக்கான மதிப்பெண்களைத் தேர்வுக்குழுவின் கையில் ஒப்படைப்பது பாரபட்சமான முடிவுகளுக்கு / முறைகேடுகளுக்கு வழிவகுக்காதா?

பெமு: 1996, 1998, 2000 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்னும் முறையில் அரசு கல்லூரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினர். அது சிறந்ததாகவும் நல்ல ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பாகவும் அமைந்த முறைதான். நான் 1996இல் பணிக்குத் தேர்வாகி வந்தேன். என்னுடன் தேர்வானவர்களும் நல்ல திறமையானவர்களே. இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்கு உரிய முறைகள் அதில் இருந்தன. அதில் ஊழல் நடப்பதற்குப் பெரிதும் வாய்ப்பில்லை. 1995இல் நாங்கள் தேர்வெழுதி எல்லா நடைமுறைகளும் முடிந்து பணியிடம் மட்டும் போட வேண்டியிருந்தது. அப்போது ஆட்சி மாற்றம் நடந்து திமுக ஆட்சிக்கு வந்தது. ’ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் இல்லாமல் நடந்த ஒரே விஷயம் அரசு கல்லூரி ஆசிரியர் தேர்வு. அதில் தேர்வான ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணியிடம் வழங்க வேண்டும்’ என்று துக்ளக் பத்திரிகை எழுதியது.  1998, 2000 ஆகிய ஆண்டுகளிலும் அதே முறையைத்தான் திமுகவும் பின்பற்றியது.

ஆனால் 2006 முதல் 2011 வரை நடைபெற்ற ஆட்சியில் அந்த முறையை நீக்கிவிட்டனர். அதற்குக் காரணம் அப்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி. கல்லூரி ஆசிரியப் பணியில் இருந்து அரசியலுக்கு வந்தவர் பொன்முடி. ஆனால் அவரைப் போல மோசமான உயர்கல்வித் துறை அமைச்சர் வேறு யாருமில்லை. அவர் வழியைப் பின்பற்றியவர்கள் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர்களாக இருந்த பெ.பழனியப்பன் (இப்போது இவர் திமுகவில் உள்ளார்), கே.பி.அன்பழகன் ஆகியோர். புதிய புதிய கல்லூரிகளைத் தொடங்கினர், மாணவர் எண்ணிக்கை கூடுவதற்கு வழி ஏற்பட்டது எனினும் உயர்கல்வித் துறையை ஊழல் மயமாக்கிச் சீரழித்ததில் இவர்கள் அனைவருக்கும் பங்கிருக்கிறது. முன்னர் நடைமுறையில் இருந்த தேர்வு முறையை நீக்கி 2007 முதல் வேறு ஒருமுறையை அரசு கல்லூரி ஆசிரியர் தேர்வில் பின்பற்றினர். அப்படி ஒரு மோசமான முறையை எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை.

2007இல் தொடங்கி 2008, 2009, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் எழுத்துத் தேர்வு முறையைக் கைவிட்டு கல்வித் தகுதி, பணி அனுபவம், நூல் வெளியீடு முதலியவற்றுக்கு மதிப்பெண் கொடுக்கும் முறையைப் பின்பற்றிப் பணியிடங்களை நிரப்பினர். 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரந்தர ஆசிரியர் நியமனமே இல்லை. கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கல்லூரிகளை அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. எழுத்துத் தேர்வு அல்லாத முறையில் பல குளறுபடிகள் நடந்தன. ஒருநூல் வெளியிட்டிருந்தால் இத்தனை மதிப்பெண் என்று இருந்ததால் எப்படியாவது புத்தகம் வெளியிட்டுவிட வேண்டும் என்று எல்லோரும் முயன்றனர். அவரவர் எம்.ஃபில்., முனைவர் பட்ட ஆய்வேடுகளை நூலாக்கினர்.

நூலாக்கம் செய்து கொடுப்பதற்கே சில பதிப்பகங்கள் உருவாகிப் பணம் சம்பாதிக்கும் தொழில் ஜோராக நடந்தது. புத்தகம் எழுதிக் கொடுத்துச் சம்பாதித்தோரும் உண்டு. ஏற்கனவே யாரோ எழுதி வெளிவந்த நூலை எடுத்து முன்பகுதியில் தம் பெயரைப் போட்டு அச்சடித்து, அதாவது அட்டையை மட்டும் மாற்றிக் கொண்டு வந்து மதிப்பெண் பெற்றோரும் உண்டு. தமிழ்நாட்டில் காகிதக் குப்பை குவிந்தது.  அந்தப் புத்தகங்களின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு என்ன அளவுகோல்? செய்வது யார்? ஐஎஸ்பிஎன் எண் இருந்தால் போதும், சான்றிதழ் சரிபார்க்கும் ஆசிரியர்களே மதிப்பெண் கொடுப்பர். கல்லூரியில் மூத்த ஆசிரியர்களைக் கொண்ட குழுதான் அதைத் தீர்மானிக்கும்.

குழு ஆசிரியர்களுக்கு எல்லாத் துறை அறிவும் உண்டா என்ன? அறிவியல் துறைகளில் எல்லாம் எதைப் புத்தகம் என்று காட்டினாலும் மதிப்பெண் கிடைத்துவிடும். அறிவியல் பாடம் என்றாலே அதைப் படிப்போர் எல்லாம் அறிவாளிகள், தலையில் கொம்பு முளைத்தவர்கள்,  எதை எழுதினாலும் மதிப்புக்கு உரியது என்னும் எண்ணம் பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. கலைத் துறைகளில் யாரும்  தலையிடலாம் என்று நினைக்கிறார்கள்.  நாமக்கல் மாவட்டத்தில்  சான்றிதழ் சரிபார்க்கும் பணி எங்கள் கல்லூரியில் நடந்தது. தமிழ் பயின்றவர் ஒருவர் நாமக்கல் மாவட்டக் கூத்து பற்றி நூல் எழுதியிருந்தார். சரிபார்ப்புக் குழுவில் இருந்தவர்கள் புள்ளியியல் துறை ஆசிரியர் ஒருவரும் தாவரவியல் ஆசிரியர் ஒருவரும். ‘கூத்துப் புத்தகத்துக்கு எல்லாம் மார்க் குடுக்க முடியாது’ என்று சொல்லிவிட்டார்கள். அவர் வாதாடியதோடு என் பெயரைச் சொல்லி அவரை அழைத்துக் கேளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார். நான் அப்போது துறைத்தலைவர் அல்ல. என்னை அழைப்பதா வேண்டாமா என்று யோசித்து ஒருவழியாக அழைத்தனர். நாட்டுப்புறவியல் துறை குறித்து எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு மதிப்பெண் கொடுத்தார்கள்.

இந்த முறையில் பணிக்கு வந்த பெரும்பாலோர் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். பலர் ஐம்பதையும் கடந்தவர்கள். அவர்களில் நிறையப் பேருக்குக் கற்பித்தலில் ஆர்வமில்லை. மாணவர்களோடு பழகுவதில் விருப்பமில்லை. சுயநிதிக் கல்லூரிகளில் பல்லாண்டு கடுமையாக உழைத்துவிட்டு இங்கே வந்து ஓய்வெடுக்கும் மனநிலையில் இருந்தார்கள். தேர்வு முறை என்றால் வயதில் இளையோர் பலர் தேர்ச்சி பெறுவார்கள். கல்லூரியில் அவர்கள் பல்லாண்டு பணியாற்றுவார்கள். பல பொறுப்புகளையும் எடுத்துச் செய்வார்கள். நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, வேலைவாய்ப்பு மையம், நுண்கலை மன்றம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், தேசியத் தர நிர்ணயத் தயாரிப்புக் குழுக்கள் எனப் பல அமைப்புகள் கல்லூரிகளில் உள்ளன. அவற்றை எடுத்து முறையாகச் செயல்படுத்தப் பொறுப்பாசிரியர்கள் கிடைப்பதில்லை. நாற்காலி தேய்ப்பவர்கள் வேண்டா வெறுப்பாக, நிர்ப்பந்தம் காரணமாகப் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் காலம் கழிப்பார்கள். இப்படி ஆட்களைத் தேர்வு செய்து என்ன பயன்? 

பணியாளர்களைத் தேர்வு செய்யும் முறையில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலையீடு இருக்கும், லஞ்சம் வாங்குவார்கள் என்பதை மட்டுமே நாம் முதன்மைப்படுத்திப் பேசுகிறோம். பணிக்குப் போட்டியிடுவோர் செய்யும் அநியாயங்களை மறந்துவிடுகிறோம். கல்வித் தகுதிக்குப் பொய்ச் சான்றிதழ் பெறுவது, பணி அனுபவம் இல்லாமலே பணம் கொடுத்துச் சான்றிதழ் பெற்று வருவது, தகுதித் தேர்வுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துத் தேர்ச்சி பெறுவது, போலிப் புத்தகம் தயார் செய்வது, கடன் வாங்கியோ சொத்தை விற்றோ அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கத் தயாராக இருப்பது என எந்த நிலைக்கும் செல்வார்கள். சுயமாகத் தம் தகுதியை உருவாக்கிக் கொள்ளுதல், வளர்த்துக் கொள்ளுதல் என்பதில் கவனம் செலுத்துவதில்லை.

முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர் அதே சமயம் ஏதேனும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து பி.எட். படிப்பார். முழுநேர ஆய்வாளர் ஏதேனும் சுயநிதிக் கல்லூரியில் வேலை செய்வார். ஒரே நேரத்தில் இரண்டையும் செய்யக் கூடாது. நம் கல்வி முறையில் அதற்கு அனுமதி இல்லை.  முனைவர் பட்ட ஆய்வு செய்த அதே காலத்தில்  கல்லூரியிலும் பணியாற்றிய ஒருவர் கல்வித் தகுதி, பணி அனுபவம் இரண்டையும் கொண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டார். சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். என் மாணவர்களுக்கு ‘ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் செய்யுங்கள். ஆசைப்பட்டு வழிமாற வேண்டாம்’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்வேன். நம் சமூகத்தில் எப்படியாவது அரசு வேலைக்குப் போய்விட்டால் வாழ்வில் முன்னேறி விடலாம் என்று கருதுகிறார்கள். பலகாலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் அப்படி நினைக்கத்தான் செய்வார்கள். ஆனால் வெறும் பட்டம் மட்டும் போதாது, துறை சார்ந்த அறிவும் வேண்டும் எனக் கருதி அதில் கவனம் செலுத்துவதே நல்லது. குறுக்கு வழியில் செல்வோர் காலம் முழுக்க பயந்துகொண்டே இருக்க வேண்டும். ஆனால் குறுக்கு வழியில் முயல்வோர் எண்ணிக்கை தான் மிகுதி.

அதனால் தான் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க இப்போது எழுத்துத் தேர்வு முறையும் நேர்காணலும் வந்ததும் அஞ்சுகிறோம். இது நல்ல முறை என்றே நினைக்கிறேன். பொதுவாக கல்வித் தகுதி உடையோர் மிகுந்தும் பணி வாய்ப்பு குறைந்தும் இருக்கும் சூழலில் அறிவையும் செயல்திறனையும் சோதித்தறியும் போட்டித் தேர்வு மூலமே பணி நியமனம் நடைபெறும்.  இந்திய ஆட்சிப் பணி, தமிழ்நாட்டு தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 2 முதலியவற்றுக்கு எல்லாம் எழுத்துத் தேர்வு மட்டுமல்லாமல் நேர்காணலும் உண்டு. கல்லூரி ஆசிரியர் பணி கிட்டத்தட்ட ஆட்சிப்பணி போன்றதுதான். ஊதியம், பணிநிலையில் இரண்டாம் இடத்தில் இதை வைத்திருக்கிறார்கள். ஆகவே கடுமையான தேர்வு முறை வேண்டும். முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலை கொண்டதாகவே ஆக்கலாம்.  நேர்காணல் என்றாலே ஊழல் நடக்க வாய்ப்பு இருக்கும் என்று கருதுகிறோம். அதை மாற்ற வேண்டும். ஆசிரியர் தேர்வை இன்னும் தரமாக நடத்த வேண்டும்.

இப்போது 2025இல் நடந்த தேர்வு முறையில் எனக்கு உடன்பாடில்லை. எல்லாருக்கும் ஒரே வகை வினாத்தாள் என்பது ஆசிரியருக்குப் பொருந்துமா? எதிர்காலத்தில் பல மாணவர்களைத் துறை வல்லுநர்களாக உருவாக்கப் போகும் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய அவர்களின் துறை சார்ந்த அறிவைச் சோதிக்க வேண்டாமா?  அதற்கேற்ற வினாத்தாள் வேண்டாமா? அரசு நலத்திட்டங்கள் பற்றியும் இந்திய வரலாறு பற்றியும் சட்ட உரிமைகள் பற்றியும் கேள்வி கேட்டு அதற்கு எழுதும் பதில்களைக் கொண்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்வது முட்டாள்தனம் அல்லவா? அவை வினாத்தாளில் சிறுபகுதியாக அமையலாம். அதுவே முழுமையாக இருக்குமானால் எழுத்துத் தேர்வே தேவையில்லையே. இப்படி ஒரு வினாத்தாள் முறையைப் பரிந்துரைத்தவர் அதிகாரியோ அரசியல்வாதியோ எவராக இருந்தாலும் சரி, ஆசிரியர் பணி பற்றிய புரிதலற்றவர் என்பது என் எண்ணம்.

நேர்காணலில் துறை சார் அறிவு, கற்பித்தல் திறன், ஆர்வம் ஆகியவற்றைப் பரிசோதிக்க வேண்டும். இன்று தமிழிலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர் பலருக்கும் ஒருசெய்யுளைச் சந்தி பிரித்துச் சந்தத்தோடு வாசிக்கத் தெரியவில்லை. உரைநடையை வாசிப்பதற்கும் செய்யுளை வாசிப்பதற்கும் வேறுபாடு உண்டு என்பதுகூடத் தெரியவில்லை. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட, நெடும் செவ்விலக்கிய மரபு கொண்ட தமிழிலக்கியத்தைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு ஒரு செய்யுளை வாசிக்கத் தெரியவில்லை என்றால் எப்படி? நேர்காணல் குழுவில் நானிருந்தால் ஒருசெய்யுளை வாசித்துக் காட்டும்படி ஒவ்வொருவரையும் கேட்பேன். அதை அடிப்படைத் தகுதியாக வைத்துக்கொள்வேன். அதே போல நம் இலக்கண மரபும் நெடியது. எல்லோரும் இலக்கணத்தில் புலமை பெற்றிருக்க முடியாது எனினும் சில அடிப்படைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லவா? குற்றியலுகர இலக்கணம் தெரிந்தால் போதாது. செய்யுளில் அதைக்  கண்டுபிடித்து விளக்கத் தெரிய வேண்டும். நவீன இலக்கியத்தோடு குறைந்தபட்ச அறிமுகமேனும் இருக்க வேண்டும். பாடத்தில் வைக்காத ஒரு நாவலையாவது ஒருவர் சுயமாக வாசித்திருக்க வேண்டும். இவற்றை நேர்காணல் மூலம்தான் அறிய முடியும்.  இப்படி ஒவ்வொரு துறையிலும்  கற்பித்தல் சார்ந்து சில திறன்களை அறிய நேர்காணல் அவசியம். அவற்றைப் பரிசோதிக்கும் வகையில் சிறப்பாக நேர்காணலை நடத்த வேண்டும். வலுவான வல்லுநர் குழு நேர்காணலை நடத்த வேண்டும்.  பெயரளவுக்கு நடத்தினால் பயனில்லை. 

முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவை கொண்ட தேர்வுமுறை தேவை. தெளிவும் ஆழமும் கொண்ட வினாத்தாள் தயாரித்து சிறந்த வல்லுநர் குழு மூலம் நேர்காணல் நடத்தித் தகுதியும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்களைத் தேர்வு செய்தால் தான் நம் உயர்கல்வி சிறக்கும். 

வி:    1996, 1998, 2000 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எத்தகைய தேர்வு முறை இருந்தது என்பதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

பெமு: எழுத்துத் தேர்வுக்கு 400 மதிப்பெண். நேர்காணலுக்கு 50 மதிப்பெண். மொத்தம் 450 மதிப்பெண். எழுத்துத் தேர்வில் இருதாள். ஒவ்வொரு தாளிலும் இருபிரிவுகள். முதல் பிரிவில் ஐம்பது கொள்குறி வகை வினா. ஒவ்வொன்றுக்கும் இரண்டு மதிப்பெண். மொத்தம் 100 மதிப்பெண். இரண்டாம் பிரிவு விவரித்து எழுதும் வகையில் எட்டு வினாக்கள் கொடுத்து ஐந்துக்கு பதில் அளிக்கும் வகையிலானது. ஒவ்வொன்றுக்கும் 20 மதிப்பெண். மொத்தம் 100. ஆக ஒருதாளுக்கு 200 மதிப்பெண். இருதாளுக்கும் சேர்த்து 400 மதிப்பெண். கொள்குறி வகைக்கு ஒருமணி நேரம்; விவரித்து எழுதுதலுக்கு இரண்டு மணி நேரம். இருதாளுக்கும் சேர்த்து ஆறு மணி நேரம். முற்பகல் 10 மணி முதல் 1 மணி வரை முதல்தாள். பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இரண்டாம் தாள். முழுநாள் தேர்வு நடந்தது. ஒவ்வொரு துறைக்குமான பாடத்திட்டம் அரசிதழில் விரிவாக வெளியிடப்பட்டது. முதல் தாளுக்கு அத்துறை சார்ந்த பொதுப்பாடம். இரண்டாம் தாளுக்குக் குறிப்பான பாடநூல்களைக் கொண்ட சிறப்புப் பாடம். அந்தப் பாடத் திட்டமே விரிவாகவும் நன்றாகவும் இருந்தது. ஆழ்ந்து கற்றவரே தேர்ச்சி பெற முடியும் வகையில் வினாக்களும் அமைந்தன.

நேர்காணலுக்கு 50 மதிப்பெண். அதில் கல்வித் தகுதிக்கு மதிப்பெண் கிடையாது. பணி அனுபவத்திற்கும் மதிப்பெண் கிடையாது. நேர்காணல் குழுவில் ஐவர் இருந்தனர். ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். பாட வல்லுநர் இருவர். மற்ற இருவரும் கல்வித்துறைச் செயலரும் இயக்குநருமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஐஏஎஸ் அதிகாரியும் பாட வல்லுநர்களுமே கேள்வி கேட்டனர். அவர்களில் ஒருவர்கூட எனக்குத் தெரிந்தவர் கிடையாது. குழு உறுப்பினர்கள் அன்றாடம் மாறினர். குழுவினருக்கே யாரை நேர்காணல் செய்யப் போகிறோம் என்பது தெரியாது என நினைக்கிறேன். அப்படிக் கமுக்கம் பேணப்பட்டது. நேர்காணலில் பொதுஅறிவு சார்ந்த கேள்விகளைக் கேட்டார்கள். அவரவர் ஆராய்ச்சி சார்ந்தும் பாடம் சார்ந்தும் கேட்டார்கள். ஏதாவது ஒருபகுதியை எடுத்து ஐந்து நிமிடம் பாடம் நடத்தச் சொன்னார்கள்.  50 மதிப்பெண்ணை எப்படிப் பிரித்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. ‘கடவுள் வாழ்த்து இல்லாத காப்பியம் எது?’ என்றும் ‘நாமக்கல்லில் ஏன் கோழிப்பண்ணைகள் அதிகம் இருக்கின்றன?’ என்றும் என்னிடம் கேட்ட நினைவு இருக்கிறது. என் முனைவர் பட்ட ஆராய்ச்சி பற்றிச் சில கேள்விகள் இருந்தன. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இருந்து ‘மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி’ என்னும் பெரியாழ்வார் பாடலைக் கொடுத்து நடத்தச் சொன்னார்கள். அது சிரமம் என்றால் நீங்களே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது ஒன்றை நடத்தலாம் என்றும் சொன்னார்கள். நான் ‘மாணிக்கம் கட்டி’ பாடலையே நடத்தினேன். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி அப்பாடல் என்று சொன்னதால் அதைப் பற்றியும் சில கேள்விகள் இருந்தன.

எழுத்துத் தேர்வு மதிப்பெண் மூலம் ஓரிடத்திற்கு இருவரைத் தேர்வு செய்து அறிவித்தார்கள். பின் நேர்காணல் மதிப்பெண்ணைச் சேர்த்துத் தேர்வுப் பட்டியல் வந்தது. எனக்கு நிறைவைத் தந்த தேர்வு முறை அது. இப்போதும் அந்தப் பாடத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். சிறப்புப் பாடப்பிரிவில் மட்டும் மாற்றம் செய்ய வேண்டியிருக்கலாம்.

வி: நேர்காணலில் நீங்கள் சுட்டிக் காட்டும் நன்மைகள் இருப்பது உண்மைதான். குடிமைப்பணித்தேர்வுகளில் நேர்காணலில் பெயரில் உள்ள சாதியைப் பொறுத்து மதிப்பெண்களில் பாரபட்சம் இருப்பதாக ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கே. அசோக் வர்தன் ஷெட்டி சுட்டிக்காட்டுகிறார்; தரவுகளை நோக்குகையில் அது உண்மையெனவும் தோன்றுகிறது. தவிர நமது பல்கலைக்கழகங்களில் நேர்முகத் தேர்வில்தான்  ஊழல்கள் நடக்கின்றன. நேர்முகத் தேர்வுமுறை சரியாக நடக்க வேண்டும் என்றால் நேர்காணல் செய்பவர்கள்  நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமே? அதை எப்படி உறுதி செய்ய முடியும்?

பெமு: பொதுவாகப் பணிநியமனங்களில் ஊழல் நடப்பதால் நமக்கு எதன் மீதும் நம்பிக்கை வருவதில்லை. ஒப்பீட்டளவில் எது நல்லது என்றுதான் பார்க்கிறேன். குடிமைப் பணியிலும் எழுத்துத் தேர்வுகளில் பிரச்சினை வருவதில்லை. நேர்காணல் தொடர்பாகத்தான் விமர்சனம் வருகிறது. சாதியச் சமூகத்தில் இப்படியெல்லாம் பிரச்சினை வர வாய்ப்பிருக்கிறது. வடக்கு – தெற்கு பிரவினையும் இருக்கும். அண்ணாதுரை என்னும் பெயர் காரணமாக நண்பர் ஒருவருக்கு மதிப்பெண் குறைந்து வாய்ப்பு பறிபோனதை அறிவேன்.  ஆனால் இரண்டு விஷயங்களைக் கருதிப் பார்க்க வேண்டும். ஒன்று, எழுத்துத் தேர்வில் மதிப்பெண்ணைக் குறைக்க வாய்ப்பில்லை. இரண்டாவது, நேர்காணலுக்கு ஓரிடத்திற்கு இருவர் அல்லது மூவர் என்னும் விகிதத்தில் அழைக்கப்படுகின்றனர், இடஒதுக்கீடு இருப்பதால் குறிப்பிட்ட பிரிவில் அவர்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும். ஆகவே நேர்காணல் மட்டும் அல்லாமல் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என்னும் இரண்டு எழுத்துத் தேர்வுகளும் ஆசிரியர்  பணிக்கு வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இருப்பதில் அது நல்லது என்பது என் பார்வை.

குடிமைப் பணி உள்ளிட்ட நிர்வாகப் பணிகளில் உயரதிகாரம் பெற்ற பதவிகளுக்கு நிகராக ஆசிரியர் பணியை அரசு கருதுவதில்லை. எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் பொறுப்புடைய ஆசிரியர் பணிதான் எல்லாவற்றையும் விட மேலானது. அதற்குரிய முக்கியத்துவத்தை நாம் தருவதில்லை. அதனால் ஆசிரியர் பணியிடங்களை ஊழல் செய்வதற்கான வாய்ப்பு என்று நினைக்கிறார்கள். பல்கலைக்கழக ஆசிரியர் பணியிடங்கள் கடந்த நூற்றாண்டில் பெரும்பாலும் பரிந்துரை அளவில் நிரப்பப்பட்டன. பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தம் மாணவர்களை, தமக்கு வேண்டியவர்களைப் பரிந்துரைத்துத் தேர்வு செய்யும் நிலை இருந்ததை நானே கண்டிருக்கிறேன். அதில் திறமையை விட விசுவாசம் முன்னால் நின்றது. 

இந்நூற்றாண்டில் முழுக்க முழுக்கப் பணம் பெற்றுக்கொண்டு நியமிக்கும் நடைமுறை வந்துவிட்டது. பேராசிரியர்களின் அதிகாரமும் பறி போய்விட்டது. அவர்கள் அரசியல்வாதிகளின் முகவர்களாக மாறிவிட்டனர். நேர்காணல் எல்லாம் பெயரளவுக்குத்தான் என்றாகிவிட்டது. நேர்காணலுக்கு உள்ளே செல்லும் முன்னரே இவரைத் தேர்வு செய்யுங்கள் என்று பெயரைக் கொடுத்துத்தான் அனுப்புகிறார்கள். அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனப் பணிகளுக்கு வெறும் நேர்காணல் மட்டும் போதாது. முறையான இரண்டடுக்கு எழுத்துத் தேர்வு அவசியம். நேர்காணலை இன்னும் முறைப்படுத்தலாம். மதிப்பெண்ணின் அளவைக் குறைக்கலாம். இன்னின்ன திறன்களுக்கு இத்தனை மதிப்பெண் என்று வகை பிரிக்கலாம். நேர்காணல் குழுவைத் தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். வேண்டுமானால் தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்துகூட வல்லுநர்களை அழைக்கலாம். எல்லாவற்றையும் விட கல்வித்துறை சிறப்பாக இயங்க வேண்டும் என்னும் எண்ணம் அரசுக்குத் தேவை. அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் தலையீடு பணி நியமனம் நேர்மையாக நடப்பதற்கு உதவ வேண்டும். யார் வந்தால் என்ன, எங்களுக்குப் பணம் வந்தால் போதும் என்று கருதும் நிலையை அரசுதான் மாற்ற வேண்டும். உயர்கல்வித் துறை தொடர்பாக அரசின் பார்வை மாறுவது எதிர்காலச் சமூகத்திற்கு நல்லது.

கே. அசோக் வர்தன் ஷெட்டி

வி: கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனப் போராட்டங்கள் நடக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உண்டு என் நினைக்கிறேன். இந்தியாவில் எங்கும் இப்படியொரு வழக்கம் இல்லை. முன்னர் தமிழ்நாட்டில் இருந்திருந்தாலும் தற்போது அதிகரித்து வரும் வேலையின்மைச் சூழலில் இது சாத்தியமா? இல்லை அவர்களை நிரந்தரம் செய்வதுதான் நியாயமா?

பெமு: 1980, 90களில் முதலில் தற்காலிகமாகப் பேராசிரியர்களை நியமித்துப் பின் நிரந்தரமாக்கும் முறை இருந்தது. அதற்காக அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் போராட்டங்களை நடத்தியதுண்டு.  அதில் வெற்றியும் பெற்றார்கள். பின் நிரந்தரம் செய்யக் கோர முடியாத விதிகளைக் கொண்டு வந்து கௌரவ விரிவுரையாளர்களை நியமித்தார்கள். இவர்கள் நியமனத்திலும் பல குழப்பங்கள் உள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயம் செய்திருக்கும் ஆசிரியர்களுக்கான முழுத் தகுதியைப் பணியில் சேரும்போதே  பெற்றோர், பணியில் சேர்ந்த பிறகு அத்தகுதியைப் பெற்றோர், அத்தகுதியே பெறாமலே பணியில் சேர்ந்தோர், பணியில் சேர்ந்த பிறகும் தகுதி பெறாதோர் என்றெல்லாம் நிறைய வகைமைகள் உள்ளன. ஒருகட்டம் வரைக்கும் கல்லூரி முதல்வரே கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றிருந்தது. இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றவில்லை. அதிலும் லஞ்சம், சாதி போன்றவை இருந்தன. பின்னர் கல்லூரிக் கல்வி இயக்குநரே நியமனம் செய்யும் மையப்படுத்திய முறை வந்தது. அதற்குக் காரணம் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சப் பணம் செல்ல வேண்டும் என்பதுதான். சமீப காலமாக நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது.

இப்படிப் பல குழப்பங்கள் கொண்ட நியமனமாக இருப்பதால் இவர்களை நிரந்தரமாக்குவது இயலாத காரியமாக இருக்கிறது. அரசு நியமன விதிமுறைகள் நிரந்தரம் ஆக்குவதற்குச் சாதகமாக இல்லை. எந்த முறையைப் பின்பற்றினாலும் நீதிமன்றம் செல்ல வழியிருக்கிறது. இதுவரைக்கும் நிரந்தரமாக்கும் வழி பிறக்கவில்லை. இனியும் வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். நிரந்தரம் ஆக்குவது நியாயமா என்றால் நியாயம்தான்.  அரசுப் பணியில் தற்காலிகமாகச் சேரும் எவரும் ஏதோ ஒருகட்டத்தில் தம்மை நிரந்தரம் செய்துவிடுவார்கள் என்று நம்பித்தான் சேர்கிறார்கள். பணியாணையில் ‘நிரந்தரம் அல்ல’ என்று சொல்லியிருந்தாலும் எதிர்பார்ப்பைத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் கௌரவ விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்யச் சட்டரீதியாக, விதிமுறைகளின் அடிப்படையில் சாத்தியம் இல்லை என்பதே என் பார்வை. இருந்தால் முப்பது ஆண்டுகளாக முடியவில்லையே. அரசியல்வாதிகள் தம் தேர்தல் வாக்குறுதியில் ‘கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் ஆக்குவோம்’ என்று நிரந்தரமாக ஒரு வாக்குறுதியை வைத்திருப்பார்கள். எந்தச் சிக்கலும் வராமல் நிரந்தரம் ஆக்குவதற்கு என்ன வழிமுறை? இதன்படி நிரந்தரம் ஆக்குவோம் என்று யாரும் இதுவரை சொல்லவில்லை. கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் ஆக்குவதில் இருக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய ஒருகுழுவே போடலாம். அந்த அளவுக்குப் பிரச்சினைகள் உள்ளன.

அல்லாமல் நிரந்தரம் ஆக்குவோம் என்று பொய் வாக்குறுதி கொடுப்போர் தாம் பணம் சம்பாதிக்க வழி செய்து கொள்கிறார்கள் என்று அர்த்தம். 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிகிற தருணத்தில் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் ஆக்குகிறோம் என்று சொல்லிப் பரபரப்பாகச் செயல்கள் நடந்தன. உரிய தகுதியுள்ளோரை நிரந்தரம் ஆக்குகிறோம், பத்து ஆண்டு பணி அனுபவம் உள்ளோரை நிரந்தரம் ஆக்குகிறோம், தனித்தேர்வு நடத்தி நிரந்தரம் ஆக்குகிறோம் என்றெல்லாம் என்னென்னவோ சொன்னார்கள். ஒன்றும் நடக்கவில்லை. பணி அனுபவத்தைக் கணக்கில் கொண்டு கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் ஆக்குவதை எதிர்த்துச் சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள்.  ‘நாங்களும் பணி அனுபவம் கொண்டவர்கள் தானே’ என்று கேட்கிறார்கள். நீதிமன்றம் அதைச் சரியெனக் கருதுகிறது.

ஒரு பழைய ஆர்.கே.லட்சுமணன் கேலிச் சித்திரம்.
துணை வேந்தர் : இந்த கல்வி நிறுவனத்தை நல்லபடியாக நடத்துவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. அதிர்ஷ்டவசமாக, எந்த மாணவனும் இந்த பல்கலைகழகத்தில் சேரவில்லை”

கௌரவ விரிவுரையாளர்களுக்குப் பத்துக்கும் மேற்பட்ட சங்கம் இருப்பதாக நான் அறிகிறேன். அவை என்னென்ன வகைப் பிரிவுக்கான சங்கங்கள் என்று நினைவில் வைத்துக் கொள்வதே கஷ்டம். ஒரு பிரிவுக்கான சங்கம் இன்னொரு பிரிவுக்கான வாய்ப்பை எதிர்க்கிறது. ஒன்றையொன்று இழுத்துக் கீழே தள்ளும் நண்டுக் கதைதான். 2016 – 2021 அதிமுக ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் பெற்றுத் தரும் முகவர்களாகச் செயல்பட்டார்கள். கௌரவ விரிவுரையாளராக ஒருவரைப் பணியமர்த்த இரண்டு, இரண்டரை லட்சம் வாங்கிக் கொடுத்தார்கள். அதில் ஒருபகுதி கமிஷனாக அவர்களுக்குக் கிடைத்தது. பணி நிரந்தரம் செய்வதற்கு என்று பலரிடம் லட்சக் கணக்கில் வாங்கினார்கள். கௌரவ விரிவுரையாளர் சங்கப் பொறுப்பாளர்கள் சிலர் இதனால் பயனடைந்து கோடீஸ்வர்ரகள் ஆகிவிட்டதாகப் பேச்சு உலவுகிறது. கடன் வாங்கிக் கொடுத்தவர்கள், சொத்தை விற்றுக் கொடுத்தவர்கள் எனக் கொடுத்ததில் கொஞ்சத்தைத் திரும்ப வாங்கியும் கொஞ்சம்கூட வாங்கவே முடியாமலும் பலர்   ஏமாந்து போனார்கள்.

இப்போது  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படாமல்  இருக்கிறதே, இதிலும் வேலை வாங்கித் தருகிறோம் என்று கௌரவ விரிவுரையாளர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் இப்போதே வசூலிக்கத் தொடங்கி விட்டதாகத் தகவல் வருகிறது. ஒருவருக்கு நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து லட்சம் தேவை, முன்பணமாக ஐந்து லட்சம் கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்கிறார்களாம். 2020இல் நிரந்தரம் ஆக்குகிறோம் என்று பணம் வசூலித்த போது என்னிடம் ஆலோசனை கேட்டவர்களுக்கு ‘கொடுத்து ஏமாற வேண்டாம். நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை’ என்று சொன்னேன். என் பேச்சைக் கேட்டுத் தப்பித்தோர் உண்டு. கேட்காமல் கொடுத்து ஏமாந்தோரும் உண்டு. இப்போதும் சிலர் என்னிடம் ‘கொடுக்கலாமா?’ என்று கேட்கிறார்கள். கொடுக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

எழுத்துத் தேர்வு முறையாக நடத்தியிருக்கிறார்கள். வினாத்தாளில் கேட்டுள்ள கேள்விகளுக்கு விடைகளையும் வெளியிட்டுள்ளார்கள். இதில் தவறு நடக்க வாய்ப்பு குறைவு என்பதைவிட இல்லை என்றே சொல்வேன். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்ந்து தேர்வுகளை நடத்திக் கொண்டுள்ளது. எந்தத் தவறும் நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது பணம் கேட்பதாகப் பொய் பரப்பி வசூல் வேட்டை நடத்துகிறார்கள். தொழிற்சங்கம் தம் உறுப்பினர்களின் நலன் சார்ந்து செயல்படுவதைக் கண்டிருக்கிறோம்; கேட்டிருக்கிறோம். இங்கே தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களே மோசடிகளுக்குத் துணை போகின்றனர். மோசடிகளைச் செய்கின்றனர். இந்த அவலத்தை என்னவென்று சொல்வது? எப்படிப் புரிந்துகொள்வது? 

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. அருமை ஐயா. அப்படியே பெண்கள் செய்யும் அக்கிரமங்களையும் படம் பிடித்துக் காட்டுங்களேன். நன்றி.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss