மம்மர் அறுக்கும் மருந்து(5) “எத்தனை வீடுகளில் கழிப்பறையை ஆண்கள் சுத்தம் செய்கிறார்கள்?”: பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்:
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4

விஜயகுமார்: அண்மையில் நான் பயின்ற கல்லூரிக்குச் சென்றிருந்தேன். புதிய கட்டிடங்கள் பலவும் கண்டு மகிழ்ந்தேன். ஆனால் கழிப்பறைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகும் அப்படியே இருக்கின்றன. அரசுக் கல்லூரிகளில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவற்றைப் பராமரிப்பதற்கான நிதியில் குறைவு உண்டா? இவையெல்லாம் அன்றாடச் செலவுகள் என்பதால் கேட்கிறேன். 

பெருமாள்முருகன்: பெருக்குநர், நீர் வழங்குநர், தோட்டக்காரர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் என்றெல்லாம் பணியிடங்கள் இருந்தன. கல்லூரி மாணவர் எண்ணிக்கை பெருக்கத்திற்கு ஏற்ப அவற்றைக் கூட்டவில்லை. இருந்த பணியிடங்களையும் நிரப்புவதில்லை. அடிப்படைப் பணிகளுக்கு நிரந்தரப் பணியாளர் நியமனம் செய்வதில்லை என்று அரசு முடிவெடுத்துக் கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஏன் அப்படி முடிவெடுத்தார்கள் என்று எனக்குப் புரியவேயில்லை. அடிப்படைப் பணிகளுக்குக் கல்வித் தகுதி பெரிதல்ல. ஆனால் அப்பணிகளுக்கு நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதில் சமூக நீதி அடங்கியிருக்கிறது. குறைந்த கல்வித் தகுதியில் இப்பணிகளுக்கு வருவோர் தம் அடுத்த தலைமுறையைக் கல்வி பயில வைத்து முன்னேற்றும் உத்வேகமும் அதற்கேற்ற பொருளாதார வசதியும் பெறுகின்றனர். மேலும் இவற்றுக்கும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதால் அரசுப்பணி கிடைத்தால் போதும் என்னும் எண்ணமும் நிலவுவதால் எல்லாப் பிரிவிலிருந்தும் இப்பணிகளுக்கு வரத் தயாராக உள்ளனர்.  இந்நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டில் சில நியமனங்களை அப்படிக் கண்டிருக்கிறேன். அடிப்படைப் பணிகள் சில சாதியினருக்கு மட்டும்தான் என்னும் பிரிவினை நெகிழ்கிறது. 

ஆனால் அடிப்படைப் பணிகளுக்கு நிரந்தரப் பணியாளர் தேவையில்லை என்பது சமூக அநீதி.  அப்பணிகளைத் தனியார் நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டுவிட்டார்கள். தனியாரிடம் இவ்வேலைகளை நாடிச் செல்வோர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான். நாட்கூலி என்பதால், அரசுப் பணியாளர்களுக்கு உரிய சலுகைகளும் இல்லை என்பதால் பிற சாதியினர் செல்வதில்லை. தனியாரிடம் ஒப்படைத்ததால் ‘சாதிக்குரிய வேலை’ என்பது உடைவதில்லை. மேலும் தனியார் வழங்கும் நாட்கூலி மிகக் குறைவு. நாமக்கல் போன்ற தொழில் நகரத்தில் ஒருநாளுக்குக் குறைந்தபட்சம் ஐந்நூறு ரூபாய் சம்பாதிக்க முடியும் என்றால் இருநூறு ரூபாய்க் கூலிக்கு யார் வேலைக்கு வருவார்கள்? அது தோல்வியடைந்த திட்டம் எனினும் இன்று வரைக்கும் அதுதான் நடைமுறையில் இருக்கிறது. 

கல்லூரி முதல்வருக்குத் தேவையை ஒட்டிப் பணியிடம் உருவாக்க அதிகாரம் இல்லை. ஆட்களை நியமிக்கவோ ஊதியம் வழங்கவோ ஏற்பாடுகள் இல்லை. உள்ளதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யலாம். அவ்வளவுதான். கட்டிடங்கள் கூடியிருக்கின்றன. மாணவர் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. அவற்றுக்கு ஏற்பப் பணியாளர் எண்ணிக்கை கூடவில்லை. குறிப்பாக அடிப்படைப் பணியாளர்கள் என்று யாருமே இல்லை. ஆகவே முன்னாள் மாணவர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றின்  நிதியைப் பெருக்கி அதன் மூலமாகக் குறைந்த ஊதியத்தில் நியமனம் செய்துகொள்ள வேண்டிய நிலை. அது அத்தனை சாத்தியமாக இல்லை. போதுமான அளவிலும் நியமிக்க முடியாது. பெருமுயற்சி எடுத்தால் கல்லூரி முதல்வரால் தூய்மைப் பிரச்சினையை ஓரளவு சரிசெய்ய முடியும். அவ்வளவு முயற்சி எடுப்பது தமக்கு ஆபத்தாக முடியலாம் என்பதால் பலரும் எதுவும் செய்யாமல் காலத்தைக் கழித்துச் செல்கிறார்கள். சில கல்லூரிகளில் ஆசிரியர்கள் தங்களுக்குள் சிறுதொகை திரட்டி மாதம் ஒருமுறையோ இருமுறையோ ஆட்களை வரவைத்துத் தம் கழிப்பறைகளைச் சுத்தம் செய்துகொள்கிறார்கள். மாணவர் கழிப்பறைகள் பல கல்லூரிகளிலும் நாறித்தான் கிடக்கின்றன. 

வி: ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தனிக் கழிப்பறைகள் இன்னும் தொடர வேண்டுமா? ஒன்றாக்கினால் நன்றாகப் பராமரிக்கப்படும் என நினைக்கிறேன். 

பெமு: தனிக்கழிப்பறைகள் தேவையில்லை. பெங்களூரு, டெல்லி முதலிய பெருநகரக் கல்லூரிகள் பலவற்றில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் ஒரே கழிப்பறை இருப்பதைக் கண்டிருக்கிறேன். வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் நான் கண்ட வரைக்கும் அப்படித்தான். இங்கேதான் ஆசிரியர்களுக்கு எல்லாம் பொன்னால் செய்த உறுப்புகள் இருப்பது போலவும் மாணவர்களுக்குத் தோலால் செய்தவை இருப்பது போலவும் நினைக்கிறார்கள். இருவருக்கும் ஒரே கழிப்பறை இருப்பதை அதிகாரப் படிநிலை சார்ந்து ஒத்துக்கொள்ள மாட்டார்கள். மாணவர்களைக் கீழிருத்தியே பார்ப்பார்கள். அவர்கள் தமக்குச் சமமல்ல என்று கருதுகையில் கழிப்பறை உட்பட எதையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வர மாட்டார்கள். நம்மிடம் சிறுவயதிலிருந்து மனதில் பதியும் சாதி மனோபாவம் பிறரைச் சமமாகப் பாவிக்க விடுவதில்லை. எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருப்பினும் இன்னொருவர் தனக்குக் கீழே தான் என்று கருதும் இயல்பு வந்துவிடுகிறது. மேல்  – கீழ் என்னும் பார்வை நம் சமூகத்தைப் பொருத்தவரைக்கும் சாதியத்திலிருந்து உருவாகிறது. சுத்தமாக இருக்கும் என்பதற்காக ஆசிரியருக்கும் மாணவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. கழிப்பறையிலும் சமத்துவம் வேண்டும் என்பதற்காக அதை ஆதரிக்கிறேன். ஆதிக்க சாதியினர் எல்லாம் சுத்தமாக இருப்பார்கள் என்று சொல்லும் பொதுப்புத்தி சார்ந்த கருத்தைப் போலத்தான் ஆசிரியர்கள் கழிப்பறையைச் சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று கருதுவதும். 

ஆசிரியர்கள் கழிப்பறைக்குள் நுழைந்து பாருங்கள், நாறிக் கிடக்கும். சிறுநீர் கழித்த பிறகு எப்படித் தண்ணீர் ஊற்ற வேண்டும், எவ்வளவு ஊற்ற வேண்டும் என்பதெல்லாம் பெரும்பாலானோருக்குத் தெரியாது. சிலருக்குக் குனிவதற்குச் சோம்பல். குழாயைத் திறக்காமலே திரும்புவார்கள். தண்ணீர் பிடிப்பதற்கு வாளி இருக்காது. மாணவர்களுக்குப் பயந்து கழிப்பறைக்குள் போய்ப் புகை பிடிப்பார்கள். ஆசிரியர் கழிப்பறைகளில் புகை நாற்றம் இல்லாதவை அரிது. ஆசிரியர்களும் இந்தக் கல்விமுறையில் இருந்து வருபவர்கள் தானே? அன்றாட நடவடிக்கைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்று நம் கல்வி முறையில் எங்குமே சொல்லித் தருவதில்லை. சோற்றை இரைக்காமல் சாப்பிடச் சொல்லித் தருகிறோமா? இரைந்த சோற்றை எடுக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறோமா? குப்பையைக் கூடையில் போட வேண்டும் என்று சொல்லித் தருகிறோமா? இவற்றை எல்லாம் சொல்லித் தராதது போலவே  கழிப்பறைப் பராமரிப்பையும் சொல்லித் தருவதில்லை. 

ஒருவர் ஆசிரியர் ஆனதும் எல்லாம் இயல்பாக வந்துவிடுமா? சிலர் தம் அறிவைப் பயன்படுத்திச் சுயமாகக் கற்றுக் கொள்கிறார்கள். பலர் தம் அறிவைப் பயன்படுத்துவதே இல்லை. குறிப்பாக ஆண்கள். வீட்டில் அவற்றை எல்லாம் செய்வதற்கு அம்மாவோ மனைவியோ இருக்கின்றனர். வீட்டில் எந்த வேலையும் செய்ய ஆணைப் பழக்குவதில்லை. வேலையே செய்யாமல் வளர்ந்து வருவதால் பொது இடத்திலும் தாம் செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அது ஆணுக்குரியதல்ல என்றும் கருதுகிறார்கள். எத்தனை வீடுகளில் கழிப்பறையை ஆண்கள் சுத்தம் செய்கிறார்கள்? அதுவும் பெண்களின் வேலையாகவே இருக்கிறது. ஆகவே ஆசிரியர்கள் சுத்தமாக வைத்திருப்பார்கள், மாணவர்கள் சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள் என்பதல்ல. பொதுவாகவே ஆண்கள் சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள் என்று சொல்லிவிடலாம். 

சாப்பிட்ட பிறகு வட்டில் அல்லது உணவுப் பாத்திரத்தில் இருக்கும் கழிவுகளை எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டுக் கழுவ வேண்டும் என்பது பல ஆசிரியர்களுக்குத் தெரியாது. அவற்றை  அப்படியே பேசினுக்குள் கொட்டியபடிதான் கழுவுவார்கள். கழிவுகள் அடைத்துத் தண்ணீர் தேங்கி நிற்கும். அருகில் ஒரு குச்சி வைத்திருப்பார்கள். அதைக் கொண்டு குத்தி விடுவார்கள். நான் கொஞ்சம் கூட மிகையாகச் சொல்லவில்லை. இன்றைக்கும் ஏதாவது ஒரு ஆசிரியர் அறைக்குப் போய் அங்கிருக்கும் வாஷ்பேசினைப் பாருங்கள். மிளகாயோ கறிவேப்பிலையோ உள்ளே மிதக்கும். சோற்றுப் பருக்கைகள் நாறிக் கிடக்கும்.  அடைத்துக் கொள்ளாத வாஷ்பேசினையே பார்க்க முடியாது. தண்ணீர் தேங்கி நின்றாலும் அதைப் பற்றிய உணர்வேயின்றிப் பயன்படுத்தி கொண்டேயிருப்பார்கள். 

ஒப்பீட்டளவில் பெண்கள் கழிப்பறை சுத்தமாக இருக்கும். எதையும் சுத்தமாக வைத்திருக்க அவர்கள் பழகி வருகிறார்கள். ஆனால் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்குப் போதுமான அளவு கழிப்பறை இருப்பதில்லை. இருந்தாலும் அவற்றில் போதுமான சாதனங்கள் இல்லை என்பதுதான். பொதுவாகப் பெண்கள் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படும். வாளியும் கோப்பைகளும் அவசியம். மாத விலக்கு நாட்களில் பயன்படுத்தும் சாதனங்களைப் போடக் கூடைகள் வேண்டும். எல்லாக் கழிப்பறைகளிலும் இவை இருக்கின்றனவா? பெண்களுக்கு நாம் இன்னும் போதுமான வசதிகளைச் செய்து தரவில்லை. ஆண்கள் அதிகம் புழங்கும் கல்வி நிறுவனம் போன்ற பொதுவிடங்களில் பெண்களுக்கான கழிப்பறைகள் மிகக் குறைவாகவும் வெகுதொலைவிலும் இருக்கும். அவர்களும் தங்கள் தேவைகளைக் கோரிப் பெறுவதில்லை.  

கழிப்பறை தொடர்பாக  நிறையப் பேசலாம். பேசினால் இதில் இவ்வளவு இருக்கிறதா என்று தோன்றும். ஏற்கனவே சில விஷயங்களை எழுதியிருக்கிறேன்.  எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டு சம்பவங்களைச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.   

ஆசிரியர்களுக்குள்ளேயே கழிப்பறை விஷயத்திலும் மூத்தோர் இளையோர் பாகுபாட்டைக் கண்டிருக்கிறேன்.  1996 – 2001 காலகட்டத்தில் ஆத்தூர், அரசு கல்லூரியில் பணியாற்றினேன். கல்லூரிக்குப் புதிய கட்டிடம் வந்தது. ஒரு கட்டிடம் வந்தால் அதையொட்டி வெளியே கழிப்பறை கட்டுவது வழக்கம். அப்படிக் கட்டிய கழிப்பறையை இயற்பியல் துறை சார்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கு என்று எடுத்துக் கொண்டார்கள். அத்துறையில் பதினொரு ஆசிரியர்கள் இருந்தனர். அனைவரும் ஆண்கள். எல்லோரும் வயதிலும் பணி அனுபவத்திலும் மூத்தவர்கள். கழிப்பறைக்கு அருகிலேயே பழைய கட்டிடத்தின் வெளிப்புறம் தமிழ்த்துறை ஆசிரியர் அறை இருந்தது. ஆனால் புதிய கட்டிடக் கழிப்பறைக்குப் போக எங்களுக்கு அனுமதி இல்லை. 

நாங்கள் பணியில் சேர்ந்து சில ஆண்டுகளே ஆகியிருந்தன. மூத்த பேராசிரியர் யாரும் இல்லாததால் நான் துறைத்தலைவராக இருந்தேன். நிரந்தர ஆசிரியர்களும் கௌரவ விரிவுரையாளர்களும் என ஏழெட்டுப் பேர் நாங்கள். பழைய கட்டிடத்தில் ஒரு மூலையில் இருந்த கழிப்பறையைத் தேடித்தான் நாங்கள் செல்ல வேண்டும். புதிய கழிப்பறைக்குப் போட்டிருந்த பூட்டின் ஒருசாவியை எங்களுக்குக் கொடுங்கள், நாங்களும் பயன்படுத்துகிறோம் என்று இயற்பியல் துறையினரிடம் கேட்டோம். புதிய கட்டித்தில் இருப்பவர்கள் மட்டும்தான்  அதைப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் ஆசிரியர் சொன்னார். எல்லோரும் பயன்படுத்தினால் அசிங்கமாகிவிடும் என்றார் ஒருவர். நாங்கள் பணிநிலையில் இளையர்கள். மூத்தோர் பயன்படுத்தும் அதே கழிப்பறையை இளையர்களுக்கும் கொடுக்க முடியுமா? சீனியர் – ஜூனியர் பாகுபாடு இருக்கிறதே.

தமிழ்த்துறை ஆசிரியர்கள் சார்பாக முதல்வரிடம் நான்தான் பேச வேண்டியானது. அப்போது முதல்வராக இருந்தவரும் இயற்பியல் துறையைச் சேர்ந்தவர். அவர் தம் துறையின் மூத்த ஆசிரியர்களைப் பகைத்துக் கொள்ள  விரும்பவில்லை. ஏதேதோ சமாதானம் சொன்னார். ‘நீங்க இளைஞர்கள் தானே, கொஞ்ச தூரம் நடந்து போகலாமே?’ என்றார்.  ‘வயதானவர்களுக்குத் தான்  நடைபயிற்சி அவசியம் சார்’ என்று சொல்லிவிட்டேன். அப்போது இளமையின் துடுக்குத்தனமும் வேகமும் எனக்குள் இருந்தன. என் பேச்சு அவருக்குப் பிடிக்கவில்லை. கோபமாக ஏதோ சொல்லி அனுப்பிவிட்டார். ஒரு கழிப்பறையைப் பெறுவதற்கு முடியவில்லை என்பது எங்களுக்கு அவமானமாக இருந்தது. கோபத்தில் ஒரு நண்பர் ‘இந்தக் கெழடுங்க எந்திரிக்காத குஞ்ச எடுத்து நீட்டறதுக்குத் தனியாப் பூட்டுப் போட்ட ரூம் வேணுமா?’ என்றார். அதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தோம்.  

இரண்டு நாள் யோசித்து என் கோரிக்கையை மாற்றினேன்.  தமிழ்த்துறை ஆசிரியர் அறையில் துறை நூலகமும் இருந்ததால் எங்களுக்கு இடம் போதவில்லை என்றும் அவ்வறையில் நூலகமாக மட்டும் வைத்துக் கொள்கிறோம், புதிய கட்டிடத்தில் எங்களுக்கு ஆசிரியர் அறை ஒன்று வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். முதல்வரால் முடியவில்லை என்றால் கோரிக்கையை வலியுறுத்தி இயக்குநருக்குக் கடிதம் கொடுப்பதாகவும் சொன்னேன். என் நோக்கம் புரிந்த முதல்வர் இயற்பியல் துறை ஆசிரியர்களிடம் பேசி ஒரு ஏற்பாட்டுக்கு முன்வந்தார். இயற்பியல் துறை ஆசிரியர் அறையின் ஓரிடத்தில் கழிப்பறைச் சாவி மாட்டியிருக்கும். அங்கே போய் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு பூட்டிச் சாவியை மீண்டும் அங்கேயே கொண்டு வந்து வைத்துவிட வேண்டும். 

முதல்வரிடம் நான் கேட்டேன், ‘சாவி இருக்கற எடத்துல ஒரு பதிவேடும் வெப்பீங்களா சார்? யாரு எடுக்கறாங்க, எடுத்தவங்க வெக்கறாங்களா இல்லையான்னு தெரியனுமில்லயா?’

‘இல்ல… இல்ல… அதெல்லாம் வேண்டாம்’ என்றார் முதல்வர். என் கேலி அவருக்குப் புரியவில்லை. 

‘இல்ல சார். ஒரு பதிவேடு போட்டு அதுக்குப் பொறுப்பாசிரியர் ஒருத்தரயும் போட்டுருங்க சார். யார் யாரு எந்நேரம் போறாங்கன்னு ரெக்கார்ட் இருக்கட்டுமே’ என்று  தீவிரமாகச் சொல்லிவிட்டு எழுந்து வந்துவிட்டேன். 

அதற்குப் பின் ஆய்வக உதவியாளர் மூலம் எங்களுக்கு ஒருசாவி வந்து சேர்ந்தது. 

‘பசங்களுக்குச் சாவியக் குடுத்தர வேண்டாமுன்னு சார் சொல்லச் சொன்னாரு’ என்றார் ஆய்வக உதவியாளர். 

‘எந்த சாரு?’ என்று கேட்டேன். 

இயற்பியல் துறை ஆசிரியர் ஒருவர் பெயரைச் சொன்னார். அந்த ஆசிரியர் பெருநிலக்கிழார். கல்லூரி வேலையைப் பகுதி நேரமாகக் கருதி வந்துபோய்க் கொண்டிருந்தார்.  விவசாயிகளுக்கே இருக்கும் உடைமை மனோபாவம், பிறரை அடிமைகளாகக் கருதுதல் என எல்லா அற்பக் குணங்களும் கொண்டவர். 

‘பசங்களுக்காகத்தான் சாவியே வாங்கியிருக்கறாங்கன்னு போயிச் சொல்லுங்க’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே போய்விட்டார். தமிழ்த்துறை ஆசிரியர்கள் இளைஞர்களாக இருந்தோம். மாணவர்களுடன் நெருங்கியும் பழகினோம். அது மூத்த ஆசிரியர்களுக்குப் பிடிக்கவில்லை. அதன் வெளிப்பாடுதான் எங்களுக்கு அறிவுரையாக வந்தது. 

பத்துக்கு மேற்பட்ட சிறுநீர் கழிப்பிடமும் கதவு போட்ட ஐந்து அறைகளும் கொண்ட அந்தக் கழிப்பிடத் தொகுதி இருதுறை ஆசிரியர்களுக்கு மட்டுமே பயன்பட்டது. அது இரண்டு மாடிக் கட்டிடம். தரைத்தளத்தில் ஆய்வகம். முதல் மாடியில் இயற்பியல் துறை மாணவர்களின் வகுப்பறைகள். இரண்டாம் மாடியில் வேறு சில துறைகளுக்கான வகுப்பறைகள். சரி, அந்த மாணவர்களுக்குக் கழிப்பறை? பெருநிலப்பரப்பில் அமைந்த கல்லூரி. மரங்களுக்கு இடையிலும் வெட்ட வெளியிலும் அவர்கள் போய்க்கொள்ள வேண்டியதுதான். ஆசிரியர்கள் நாங்களே ஒரு கழிப்பறையைப் பெற இப்படிப் போராட வேண்டியிருந்தது. 

மாதொருபாகன் பிரச்சினையின் போது நானும் என் மனைவியும் நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு இடமாறுதல் பெற்றுச் சென்றோம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு, மாதொருபாகன் வழக்கில் தீர்ப்பு வெளியான அதே மாதம் சென்னையிலிருந்து ஆத்தூர் கல்லூரிக்கு இடமாறுதலில் வந்தோம். ஆசிரியர் அறைக்குள்ளேயே கழிப்பறை ஒன்றிருந்தது. அதை ஆண்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஆண் ஆசிரியர்கள் பத்துக்கு மேற்பட்டோர். பெண் ஆசிரியர்கள் என் மனைவியையும் சேர்த்து மூன்று பேர். மூவரும் வேறொரு துறையில் இருந்த கழிப்பறைக்குத்தான் செல்ல வேண்டும். அதற்கும் சாவி உண்டு. அங்கே போய் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். தூரமும் அதிகம். இரண்டு வகுப்புகள் தொடர்ந்து இருந்தால் கழிப்பறைக்குப் போய் வருவது சிரமம். 

அதைப் பற்றி நாங்கள் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது தமிழ்த்துறையில் இருக்கும் கழிப்பறையையே பெண்களும் பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது. என் மனைவி தயங்கினார். கதவு இருக்கிறது, ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் வகையிலான கழிப்பறைதான், வீட்டில் அப்படித்தானே பயன்படுத்துகிறோம் என்று சொன்னேன். அவர் ஒப்புக் கொண்டார். தமிழ்த்துறை கழிப்பறையை என் மனைவி பயன்படுத்தத் தொடங்கியதும்  மற்ற இரு பெண்களும் பயன்படுத்தினர். அக்கழிப்பறை இருபாலருக்கும் ஆயிற்று. பெண்கள் பயன்படுத்தத் தொடங்கிய  பிறகு ஆசிரியர் அறைக்குள் சுழன்று கொண்டிருந்த கழிப்பறை நாற்றமும் விலகியது. 

வி: ஆசிரியர்களே கழிவறைகளில் புகைக்கிறார்கள் என்கிறீர்கள். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசாலும் காவல்துறையாலும் நடத்தப்பட்டு வருகின்றன; காவல்துறையினர் திடீர் சோதனைகளையும் மேற்கொள்கின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துவரும் இதற்கு எதிரான நடவடிக்கைகள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை திருப்திகரமாக இருக்கின்றனவா? 

பெமு: போதை நம் ஆண்களையும் இளைஞர்களையும் சீரழிக்கும் சமகாலப் பேரிடர் என்றே சொல்வேன். டாஸ்மாக் மட்டுமல்ல, பலவிதப் போதைப் பொருட்கள் நம் ஆண்களைச் சீரழிக்கின்றன. அது இப்போது தொடங்கியதல்ல. பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. ‘மதம் மக்களுக்கு அபின்’ என்பது பிரபலமான வாசகம். மதவாதத்திற்கும் போதைப் பொருட்களுக்கும் தொடர்பு இருக்கிறதோ என்று நினைக்கிறேன். இரண்டுமே போதைகள். அரசியல்வாதிகள் திட்டமிட்டே இதைச் செய்கிறார்களோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருப்போர் இப்பிரச்சினையை எடுத்துப் பேச முடியும். அப்படி நிரந்தரமானதாகப் போதைப்பொருள் பிரச்சினை நிலவுகிறது.  அனைத்துக் கட்சியினருக்கும் இதில் சம்பந்தம் இருப்பதாகவே நான் சந்தேகப்படுகிறேன். மதுவிலக்குக் கொண்டு வருவோம் என்று எந்தக் கட்சியும் இன்று வாக்குறுதி தருவதில்லை. தந்தால் போதைக்கு அடிமையாகியிருக்கும் ஆண்களின் வாக்கு கிடைக்காது. 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக நூலிழையில் தோற்றமைக்கு இந்த வாக்குறுதியும் ஒருகாரணம் என்கிறார்கள். அதன் பிறகு மதுவிலக்குப் பிரச்சினையைப் பேசுவதில்லை. 

2020ஆம் ஆண்டு ஜனவரியில் நாமக்கல் கல்லூரிக்கு முதல்வராக வந்தேன். போதைப் பொருள் பிரச்சினை பெரிய அளவில் இருப்பதாக அறிந்தேன். குறிப்பாக மாணவர் விடுதிகளில் தாராளமாகப் புழங்குவதாகவும் செய்தி கிடைத்தது. போதைப் பொருள் விற்கும் இடங்கள், ஆட்கள் சிலவற்றையும் மாணவர்கள் தெரிவித்தனர். நான் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பார்வைக்கு இதைக் கொண்டு சென்றேன். அவர் எனக்கு அறிமுகமானவர் தான். சரி, மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துவிடலாம் என்று சொன்னார். விடுதி மாணவர்களை வைத்து ஒரு கூட்டம் போடுங்கள், நானே வந்து பேசுகிறேன் அல்லது எனக்கு அடுத்துள்ள அதிகாரியை அனுப்பி வைக்கிறேன் என்றார். அப்படி ஒருகூட்டம் போட்டோம். வந்து பேசினார்கள். அவ்வளவுதான் காவல்துறை எடுத்த நடவடிக்கை. போதைப் பொருள் விற்போர், விற்கும் இடங்கள் எல்லாம் மாணவருக்குத் தெரிந்திருக்கின்றன, ஆனால் காவல்துறைக்குத் தெரியாதாம். போதைப் பொருள் விற்பனையில் அரசியல்வாதிகளுக்குத் தொடர்பிருக்கிறது, அதனால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொண்டேன். எங்களால் முடிந்த வரையில் பல்வேறு கூட்டங்களிலும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை உள்ளிட்டவை நடத்தும் நிகழ்வுகளில் போதைக்கு எதிராகப் பேசினோம். ஆசிரியர்கள் அதற்கு நன்றாகவே ஒத்துழைத்தனர். எங்களால் பரப்புரை செய்வதைத் தவிர ஒன்றும் செய்ய இயலவில்லை.

வி: அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் கையூட்டு வாங்குவதை விரிவாக எழுதியிருக்கிறீர்கள். கல்லூரியில் வேலை பகுதி நேரமே என்பதால் இவர்கள் எந்தெந்த மாதிரியான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்? அது பணிநேரத்தை எவ்வாறு பாதிக்கிறது?  தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கும் துறை சார்ந்த வேலைகளுக்கும் முன்வருகிறார்களா? உதாரணமாக, பேருந்துப் பயண அட்டை விவகாரம் இங்கே நினைவுக்கு வருகிறது.

பெமு: இப்போது நிரந்தர ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் என்பதாலும் சமூக மதிப்பு இருப்பதாலும் பிற வேலைகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைவு. ஈரோடு, சேலம் முதலிய ஊர்களில் இருந்து நாமக்கல்லுக்குத் தினமும் வந்து செல்வோர் எண்ணிக்கை கணிசம். அவர்களுக்குப் பயணத்தில் நேரம் கழியும். நிலம் இருப்போர் விவசாய வேலையைப் பிரதானமாகவும் கல்லூரி வேலையைப் பகுதி நேரமாகவும் கருதுவர். நிதி நிறுவனங்களில் கூட்டாளிகளாகச் சிலர் இருப்பார்கள். அரசு தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்குப் பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள் கொஞ்சம். அவர்களுக்கு அந்த வகுப்புகளே முதன்மை.  

பலருக்கு நேரம் இருப்பினும் கல்லூரியில் ஒருபொறுப்பை எடுத்துச் செய்ய முன்வர மாட்டார்கள். பொறுப்பு எடுத்துக் கொண்டால் மேலே இருப்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பது ஒரு காரணம். பொறுப்பு எடுப்பவர்களை மேலே இருப்பவர்களும் நல்லவிதமாக நடத்துவதில்லை. நம் இரத்தத்திலேயே சாதி உணர்வு கலந்திருக்கிறது போலும். அது நமக்குக் கீழே இருப்போரை அடிமைகளாக நடத்த விரும்புகிறது. பொறுப்பு எடுப்போருக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பதில்லை. அரசு விதிகளும் கெடுபிடி கொண்டவை. கெடுபிடி என்பதைவிடப் பிசுக்குப் பிடித்தவை என்று சொல்லலாம். ஒரு பொறுப்பில் இருக்கும் ஆசிரியர் பல்கலைக்கழகம் வரை சென்று வர வேண்டும் என்றால் மாற்றுப்பணி கொடுப்பதற்கு பல நொட்டை சொல்வார்கள். இதைக் கொடு, இப்படி எழுதிக் கொடு, அப்படி எழுதிக் கொடு என்று படுத்துவார்கள். போய் வந்த பிறகும் சும்மா விடமாட்டார்கள். ஏதேனும் ஒரு விதியை நீட்டுவார்கள். ஆகவே முகமே காட்டாமல் கல்லூரிக்கு வந்து செல்லும் ஆசிரியர்கள் பலருண்டு. ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்றுச் செய்ய வேண்டும் என்னும் நிர்ப்பந்தமும் இல்லை. 

நாம் வளர்ந்த சமூகம் அல்ல. சாதியும் மதமும் பின்னிழுக்கப் பின்னிழுக்க அவற்றை மீறி மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கும் சமூகம். இங்கே கல்வி நிறுவனத்தில் ஆசிரியர்கள் வகுப்பு மட்டும்தான் எடுப்பேன் என்று சொல்ல முடியாது; சொல்லக் கூடாது. அரசு நலத் திட்டங்களை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் சுணங்கக் கூடாது. மாணவர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளுக்குப் பொறுப்பெடுத்துச் செய்யத் தயங்கக் கூடாது. அவற்றை ஊழல் இல்லாமலும் மாணவர் திறன்கள் வெளிப்பாடு கொள்ளும் வகையிலும் செயல்படுத்த வேண்டும். கூடுதல் பொறுப்புகளை எடுத்துச் செய்யும் ஆசிரியர்களுக்கு நல்ல அங்கீகாரமும் நிர்வாக ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும். அவர்கள் துறை கடந்து ஒட்டுமொத்த மாணவர்களோடும் தொடர்புடையவர்கள். பெற்றோரோடும் மாவட்ட நிர்வாகத்தோடும் தொடர்பு கொள்பவர்கள். ஒருவகையில் கல்வி நிறுவனத்திற்கும் பொதுச்சமூகத்திற்கும் இணைப்பை ஏற்படுத்துபவர்கள். கல்லூரி நேரம் போகக் கூடுதலான நேரம் பணியாற்றுபவர்கள். அவர்களுக்கு எல்லா வகையிலும் உரிய மதிப்பு கிடைக்க வேண்டும். நிதி, நிர்வாகம் ஆகியவை எளிமைப்பட வேண்டும். இதில்  அரசு, அதிகாரப் படிநிலை, ஆசிரிய மனோபாவம் என எல்லாத் தரப்பிலும் மாற்றம் வர வேண்டியது அவசியம்.

தொடரும்…

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments உரையாடலுக்கு

  1. இது பற்றிய ஒரு தகவல்.
    மகாத்மா காந்தி அவர்கள் தன் டால்ஸ்டாய் பண்ணையில் கழிவுகள் அனைத்தையும் ஒவ்வொருவரும் சுத்தம் செய்ய வேண்டும்.‌
    இன்று காந்தி கிராமத்தில் தூய்மை பேணப்பட்டு வருகிறது.. தூய்மைப் பணியாளர்கள் இல்லை. மேலும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேரும் மாணவர்கள் தங்கள் கழிப்பறைகளைத் தாங்களே சுத்தம் செய்ய வேண்டும்.

  2. “கல்வி நிறுவனத்தில் ஆசிரியர்கள் வகுப்பு மட்டும்தான் எடுப்பேன் என்று சொல்ல முடியாது; சொல்லக் கூடாது. அரசு நலத் திட்டங்களை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் சுணங்கக் கூடாது. மாணவர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளுக்குப் பொறுப்பெடுத்துச் செய்யத் தயங்கக் கூடாது. அவற்றை ஊழல் இல்லாமலும் மாணவர் திறன்கள் வெளிப்பாடு கொள்ளும் வகையிலும் செயல்படுத்த வேண்டும். கூடுதல் பொறுப்புகளை எடுத்துச் செய்யும் ஆசிரியர்களுக்கு நல்ல அங்கீகாரமும் நிர்வாக ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளது ஆசிரியர்களுக்கும் அரசுக்கும் நல்ல அறிவுரை.. அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், செயலைச் செய்துமுடிக்க இடைஞ்சல்கள் இல்லாமல் இருப்பதே பெரும் ஆசுவாசம்.
    ‘பசங்களுக்காகத்தான் சாவியே வாங்கியிருக்கறாங்கன்னு போயிச் சொல்லுங்க’ இதுதான் எங்கள் ஐயா…

  3. நேர்காணலை தொடர்ந்து வாசித்து வருகிறேன். மிகப்பெரிய திறப்பாக இது இருக்கிறது. கேள்விகளும் அதற்கான பதில்களும் அருமையாக இருக்கிறது. மனமார்ந்த நன்றிகள் இருவருக்கும். அகழின் மகத்தான பணி இது. வணங்குகிறேன்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss