அம்பேத்கரை சிறாருக்காக பிரித்தெழுதுதல் : வயலட்

ந்திய மொழிகளில் முதன்முதலாக அச்சிடப்பட்ட புத்தகமான தம்பிரான் வணக்கத்தில், அதன் ஆசிரியர் ஹெண்ட்ரிக் ஹெண்ட்ரிகேஸைக் (Henrique Henriques) குறிப்பிட ‘அண்டிரிக்கிப் பாதிரியாரால் தமிழிலே பிரித்தெழுதப்பட்டது’ என்றிருப்பார்கள். மொழிபெயர்ப்புச் செயல்பாட்டைக் குறிப்பிடும் இந்தப் பிரித்தெழுதுதல் என்ற சொல் நல்ல கற்பனைகளை வழங்கக்கூடியது. பாபாசாகேப் அம்பேத்கரின் ‘விசாவுக்காக காத்திருத்தல்’ நூலிலிருந்து அந்தோனி குரூஸ் உருவாக்கியிருக்கும் இந்தக் குழந்தைகள் படப்புத்தகத்தை ஒரு பிரித்தெழுதுதல் செயல்பாடு என்றே சொல்லலாம். அம்பேத்கரின் அனுபவ எழுத்தில் ஒரு இழையை மிகத்திறமையாக தமிழிலும், ஓவியத்திலும் குரூஸ் பிரித்தெழுதியிருக்கிறார்.

ஓவியரான குரூஸின் படைப்புகளில் எப்போதும் ஒரு கதைசொல்லும் காட்சித்தன்மை மேலோங்கியிருக்கும். அவரது ஓவியங்கள் நமக்குள் ஒரு கதையாகவே பதியும். அந்தத் தன்மையே ஒரு சிறார் புத்தக ஓவியராக அவருக்கு உதவியிருக்கிறது. அவரது புதிய சிறார் புத்தகமான இதில் அந்தக் கதைத்திறன் புதிய வடிவங்களை எடுத்திருக்கிறது. அக்ரிலிக் (Acrylic) வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியங்களின் கான்வாஸ்கள் புத்தக வெளியீட்டு விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எழுத்துகளின் இடையூன்றி, ஓவியங்களின் நேரடிக் காட்சி அனுபவத்தோடு அவை புத்தகத்தைக் கடந்த, என்னளவில் புத்தகத்திலும் ஆழமான ஒரு அனுபவத்தை வழங்கின.

தமிழில் சிறார் இலக்கியத்தின் வரலாறு நீண்டது, அதேநேரம் துண்டுதுண்டானது. 1930களில் எம்.சி.ராஜாவும், ரங்கநாயகி அம்மாளும் எழுதிய “கிண்டர்கார்டன் ரூம்” என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடிவா போன்ற பாடல்களை நாம் இன்னமும் பயன்படுத்துகிறோம். அதேநேரம் சிறார் இலக்கியம் ஒவ்வொரு காலகட்டத்துகுமேற்ப இவ்வாறிவ்வாறாக வளர்ந்து வந்திருக்கிறது என்று குறிப்பிடுமளவு படைப்புகளோ, ஆய்வுகளோ நம்மிடமில்லை.

“(தலித் இலக்கியத்தின்) கோளாறு முன் தீர்மானங்களில் இருந்து ஆரம்பிக்கிறது. தலித் இலக்கியம், அப்படியொன்று எழுதப்படுவதற்கு முன்பே இரண்டு பிரதான கதாபாத்திரங்களைக் கொண்டிருந்தது. தலித் – தலித் அல்லாதவர். இவ்விருவருக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட குணநலன்களும் இருந்தன; உடல் பாவனைகள் இருந்தன; எண்ணவோட்டங்கள் இருந்தன; வகைமாதிரிச் சிந்தனைகள் இருந்தன. ஒரு தலித் இலக்கியவாதி செய்ய வேண்டியதெல்லாம் தனக்கு நேர்ந்த அல்லது தான் பார்த்த சம்பவங்களை இக்கதாபாத்திரங்களைக் கொண்டு விவரிப்பது மட்டுமே.” என்கிறார் டி.தருமராஜ். சிறார் இலக்கியத்தின் தற்காலச் சூழலை யோசிக்கும்போது இந்த ஒப்பீடு பிரயோஜனமாகப் பட்டது.

தலித் இலக்கியத்தின் கோளாறு எழுத்தாளர் மீதான எதிர்பார்ப்பு என்றால், சிறார் இலக்கியத்தின் கோளாறு வாசகர் மீதான முன்முடிவுகள். ‘பிற’ இலக்கியங்களைப் போலன்றி சிறார் இலக்கியத்தில் செயல்படும் எல்லோரிடமும் யார் வாசகர் என்பதற்கான வரையறை தாக்கத்தை செலுத்துகிறது.

சிறார் இலக்கிய மொழிபெயர்ப்புப் பட்டறைகள் நடத்தும்போது ஒரு பயிற்சியைச் செய்வது வழக்கம், நான்கைந்து வரிகளைக் கொடுத்து இவற்றை முதலில் பெரியவர்களுக்கு ஏற்பவும், பின்னர் குழந்தைக்கு ஏற்பவும் மொழிபெயருங்கள் என்று சொல்வோம். இதில் உன் அம்மாவை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது போன்ற ‘அதிர்ச்சியூட்டும்’ வரிகளும் இருக்கும். மொழிபெயர்ப்பாளர்களிடம் குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது, எதையெல்லாம் பேசுவது என்பன போன்ற கருத்துகள் இருக்கும். அரிதாகவே மொழிபெயர்ப்பாளர்கள் எத்தனை வயதுக் குழந்தை என்ற கேள்வியையாவது கேட்பார்கள். குழந்தை என்று சொன்னதுமே நம் மனதில் ஒரு சித்திரம் உண்டாகிறது, அதை நோக்கியே நாம் குழந்தைகள் இலக்கியம் உண்டாக்குகிறோம். இந்த ‘சைல்ட் இமேஜ்’ நமது அனுபவங்களாலும், முன்முடிவுகளாலும், சமூகச் சூழலாலும் உருவானது என்பதை உணர்ந்துகொள்வது ஒவ்வொரு சிறார் படைப்பாளிக்கும் அவசியம்.

அந்தோணி குருசு

சமீபகாலங்களில் சிறார் இலக்கியம் வழி சமூகப் பிரச்சினைகளைப் பேசும் முயற்சிகள் பல நடந்திருக்கின்றன. ஆதிவானி, தாரா புக்ஸ், அன்வேஷி, ப்ரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்கள் வெவ்வேறு வழிகளில் பழங்குடிக் கலையை, வாழ்க்கையை சிறார் அணுகக்கூடிய கதைப்புத்தகங்கள் ஆக்கியிருக்கின்றன. இதல்லாமல் கதைப் படைப்புகளில் சிறாரிடம் சாதி குறித்துப் பேசுவதற்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் சிறாரிடம் சாதியைப் பேசும் புத்தகங்கள் சில எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றை ப்ரண்ட்லைனில் வெளியான கட்டுரை ஒன்றும் கொண்டாடியிருந்தது. ஆனால், இவை யாருக்கானவை?

சிறாரிடம் சாதி குறித்துப் பேசுவதென்றால், எல்லா சிறாரும் ஒரேயளவு சாதி குறித்த அறிதல்/அறிதலின்மை கொண்டிருக்கிறார்களா என்பது ஒரு கேள்வியாக விவாதிக்கப்படவில்லை. சமீபத்தில் சாதி எதிர்ப்பை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறார் படைப்புகள் பலவற்றையும் எடுத்துக்கொண்டால், அவற்றை சில வகைப்பாடுகளில் அடக்கலாம். சாதி இந்துக் குழந்தைகளிடம் சாதி தவறு என்று சொல்பவை. சாதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய முன்னேற்றக் கதைகள், இவையும் சாதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோக்கி எழுதப்படுபவை என்று சொல்லிவிட முடியாது. எத்தனை படைப்புகள் வெறுமனே கருணையைப் பேசுகின்றன, எத்தனை ஒரு சகமனித ‘மைத்ரி’ உணர்வை உண்டாக்குகின்றன என்ற கேள்வியை நாம் முழுமனதாக எதிர்கொள்ளவேண்டும். சிறார் இலக்கியத்தையும் கடந்து இந்தக் கேள்வியை இவ்வாறு விரித்துக் கொள்ளலாம், ‘தமிழ் பொது’ என்ற ஒன்றை தலித் அடையாளங்களை, அனுபவங்களை மையப்படுத்தி கற்பனை செய்ய நம்மால் முடியாமலிருப்பது ஏன்?

அம்பேத்கரின் எழுத்துகளில் “விசாவுக்கு காத்திருத்தல்” மட்டுமே சொந்த அனுபவங்களை விவரிக்கும் படைப்பு எனலாம். அதைவைத்து பல புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தூலிகா பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட, சௌம்யா ராஜேந்திரன் எழுதிய ‘ஏன் என்று கேட் டசிறுவன் அவற்றில் ஒன்று. இந்தப் புத்தகம் அம்பேத்கர் காட்சிப்படுத்தப்பட்ட விதம், அம்பேத்கருக்கு அவரது பிராமண ஆசிரியர் பெயரிட்டார் என்ற தவறான தகவல் இடம்பெற்றமை போன்ற காரணங்களுக்காக விமர்சிக்கலாம். ஆனால், பீமின் பயணத்தோடு ஒப்பிட்டு வாசிக்க ஒரு முக்கியமான வித்தியாசம் தோன்றியது.

சௌம்யா ராஜேந்திரன் புத்தகத்தின் தொடக்கத்தில் ஒரு பக்கத்தில், சாதியமைப்பு ஒரு ஏணி போன்றது, அதில் தனது இடம் கீழிருக்கிறது என்பதை சிறுவன் பீம் அறிந்திருந்தான் என்றிருக்கும். தொடர்ந்து அம்பேத்கர் அனுபவித்த சாதிக் கொடுமைகள், அவரது படிப்பு என வாழ்க்கை விவரிக்கப்பட்டிருக்கும். சாதி அமைப்பு தனிமனித அனுபவங்களைவிடப் பெரியது என்றாலும், சாதி ஒவ்வொரு நாளும் தனிநபர் செயல்களால் மீட்டுருவாக்கப்படும் ஒன்று என்ற அனுபவம் இதில் தவிர்க்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. இந்த ஒப்பீட்டுக்கு காரணமும் அதுதான், ஒரு குழந்தையின் சுய உருவாக்கத்தில் தினசரி சாதி நடவடிக்கைகள் ஏற்படுத்தும் தாக்கம் வழி, சாதி ஒரு அமைப்பு என்பதைக் கடந்து, தினசரி மனிதர்கள் மீண்டும் மீண்டும் உருவாக்கும் ஒரு செயல்பாடாக குரூஸின் கதையாடலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பீமின் பயணம் குறித்துச் சொல்வதற்கு முன் இன்னொரு கேள்வி நல்ல சிறார் புத்தகம் என்றால் என்ன? நல்ல சிறார் கதைகளில் தொடர்ந்து விலக்கப்படுதலும், பயணமும் பேசப்பட்டிருக்கின்றன. தேவதைக் கதைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டாலும் அவை சிலரை விலக்கி, சிலரைக் கெட்டவர்களாக்கி, பூதங்களுக்கும் பேய்களுக்கும் பயந்து, அதேநேரம் அவற்றைக் கடந்து செல்லும் பயணங்களைச் சித்தரித்திருக்கின்றன. நவீன சிறார் இலக்கியம் எப்படி அதிலிருந்து முன்னகர்ந்தது என்பதற்கு மௌரீஸ் செண்டாக்கின் ‘வேர் த வைல்ட் திங்ஸ் ஆர்’ என்ற புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். மிகவும் எளிமையான ஒரு சித்திரப் புத்தகம் அது; அதை அவரே எழுதி, ஓவியங்களையும் அவரே வரைந்திருக்கிறார். மேக்ஸ் என்ற சிறுவன் நிறைய குறும்புகள் செய்கிறான் என்பதற்காக, அவனது அம்மா அவனிடம் “உனக்கு இன்று உணவு கிடையாது” என்று கூறி, இரவு அவனை அறைக்குள் வைத்துப் பூட்டிவிடுகிறார்கள்.

அதன் பிறகு அவன் ஒரு பயணத்தைத் தொடங்குகிறான். அதை ஒரு கனவு என்றோ, கற்பனை என்றோ அவர்கள் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். அவன் ஒரு படகில் ஏறி வேறொரு இடத்திற்குப் போகிறான். அங்கு நிறைய பூதங்கள் இருக்கின்றன. அந்தப் பூதங்கள் அவனை மிரட்டுகின்றன; பதிலுக்கு அவனும் அவற்றை மிரட்டுகிறான். உடனே அவை, “சரி, நீயே இனி இங்கிருக்கும் பூதங்களுக்கு ராஜா” என்று கூறிவிடுகின்றன. அவன் அங்கு அந்தப் பூதங்களின் ராஜாவாக மகிழ்ச்சியாக இருக்கிறான். சிறிது காலம் கழித்து, சலிப்புத் தட்டியவுடன் மீண்டும் வீட்டிற்கு வருகிறான்; அங்கு அவனுக்காக உணவு காத்திருக்கிறது, அதைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிடுகிறான்.

இதுதான் அந்தப் புத்தகத்தின் மிக எளிமையான கதை. ஒரு நவீன சிறார் இலக்கியம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள, இந்தப் புத்தகத்திலிருந்து இரண்டு விஷயங்களை நாம் எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஒன்று, இந்த விலக்கப்படுதல் என்பது. “நீ பூதத்தைப் போல முரட்டுத்தனமாக நடக்கிறாய், நீ சரியாக நடந்துகொள்ளவில்லை” என்று கூறி வெறும் சீர்திருத்தம் மட்டும் செய்யாமல், அந்தத் தவறான நடத்தை என்றால் என்ன, பூதம் என்றால் என்ன என்பதை ஒரு வகையில் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வது முதன்மையானது. இரண்டாவது, அந்த சாகசப் பயணம். அவன் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணம் செய்கிறான்; அந்தப் பயணத்தில் சில அனுபவங்கள் கிடைக்கின்றன. அதில் “பூதம்” என்பது பயப்பட வேண்டிய ஒரு விஷயமாக இல்லாமல், அவன் ஏற்றுக்கொள்கிற அல்லது கையாளுகிற ஒரு விஷயமாக மாறுகிறது.

புத்தகத்திலிருந்து

சிறார் இலக்கியத்தில் இந்த ‘வகைமை’ என்பது மிக முக்கியமான ஒன்று. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை நான் கவனித்த வரையில், இந்த ‘ஜானர்’ என்பதை நாம் ஒரு கட்டுப்பாடாகவே பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட சாகசக் கதையை எழுதச் சொன்னால், “கதை ஏன் சாகசமாகத்தான் இருக்க வேண்டுமா? கதை இந்த வடிவத்திற்குள்தான் இருக்க வேண்டுமா?” என்று யோசிக்கிறோம். ஆனால், இந்த வடிவம் அல்லது இந்த ஜானர் என்பதை நாம் ஒரு சுதந்திரமாக மாற்றலாம். ஒரு குறிப்பிட்ட வார்ப்பிற்குள் ஒரு கதையைப் பொருத்தும்போது, அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் சுதந்திரம் என்ன என்பதே முக்கியமானது.

இந்த ஒப்பீடுகள், கருத்துகளை மனதில் வைத்துக்கொண்டு, அம்பேத்கரின் எழுத்துடைய படப்புத்தக வடிவம் என்ற பாரம், மதிப்பு இரண்டையுமே நீக்கிவிட்டே குரூஸின் புத்தகத்தை மதிப்பிடலாம். குரூஸின் புத்தகத்தில் நமக்கு ஒரு சாகசக் கதை கிடைக்கிறது, ஒரு பயணக் கதை, ஒரு சிறுவனின் சுயம் உருவாகிவருவதை உணரும் அனுபவமும் வழங்கப்படுகிறது. சாதியின் அதீத பயங்கரங்களில் முக்கியமான ஒன்று நம்மைச் சுற்றியுள்ள எவரையுமே நம்பமுடியாத சூழலில் விழுவது. நான்கு சிறுவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சாதிக் கொடுமை அனுபவங்களைக் கடந்து, இந்தப் பயணம் ஒரு நபரின் ஆளுமை உருவாக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தும் அளவு பலமானதாக எவ்வாறு ஆனது என்பதை குரூஸ் அந்தப் பயணத்தின் இருள் வழியே உணரவைக்கிறார். பெரியவர்கள் துணையின்றி பயணம் செல்லும் பீம் வழியில் செல்லும் யாரையும் நம்பமுடியாமல், தன்னைப் பற்றிய உண்மைகளும் பொய்களும் கூட பலனளிக்காமல் ஆகும்போது தோன்றும் உணர்வை ஒரு பூதத்தைக் கொண்டு குரூஸ் காட்சிப்படுத்தியிருக்கிறார் குரூஸ். காட்சியாக, குறியீடாக எல்லா நிலைகளிலுமே அற்புதமான பக்கம் அது. அதேபோல தான் தீண்டப்படாதவன் என்ற இயல்புநிலை ஏற்பிலிருந்து, நாம் ஏன் தீண்டப்படாதவர்களாக ஆனோம் என்ற தத்துவக் கேள்வியை ஒரு சிறுவனின் சுயம் அடையும் விதம் இப்புத்தகத்தின் பயணத்தில் நம்மை உணரவைக்கிறது.

ஒரு ஓவியராக குரூஸின் பலம், பலவீனம் இரண்டுமே அவர் மிகச்சிறந்த கதைசொல்லி என்பதே. இந்தப் புத்தகத்தின் ஓவியங்களில், குறிப்பாக ரயில் பயணத்தில், இரவுக் காட்சிகளில் அந்தக் கதைசொல்லும் திறம் சிறப்பாக பயனாகியிருக்கிறது. தமிழில் சிறார் புத்தகங்களுக்கான ஓவிய மொழி பெரிதாக அடையாளம் பெறவில்லை. சில பத்தாண்டுகள் பழைய சிறார் வார இதழ் பாணியிலேயே நாம் இன்னும் சிறுவர்களை வரைந்துகொண்டிருக்கிறோம். தமிழ் நிலத்திலிருந்து வந்து ஆங்கில புத்தகங்களுக்கு வரைபவர்களிடமும் தனித்தன்மையான ஒரு சிறார் ஓவிய மொழி உருவாகிவரவில்லை. தமிழ் ஓவியமரபோடு தொடர்புடையவரான குரூஸின் இப்புத்தகம், அவரது முந்தைய இரு புத்தகங்களை காட்டிலும் முதிர்ச்சி அடைந்ததாக விளங்குகிறது. தமிழ் பதிப்புத்துறை சிறார் புத்தக வடிவாக்கம் போன்றவற்றில் நீண்ட தூரம் போகவேண்டும் என்பதையும் ஒரு சுட்டுதலாகச் சொல்லிக் கொள்கிறேன்.

குழந்தைகளுக்கான மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வில் ரீட்டா ஓய்தினென் சொல்லியதுபோல குழந்தைகள் நம்மைவிட முட்டாள்கள் அல்ல, அதேநேரம் அவர்கள் நம்மளவு வாழ்வனுபவம் கொண்டவர்களும் அல்ல. கலைப்படைப்புகள் வாழ்வனுபவத்தை உருவாக்கவல்லவை, அதை நம் குழந்தைகள் அனுபவித்துணர வல்லவர்கள் என்ற நம்பிக்கையோடு நாம் தொடர்ந்து சிறார் இலக்கியம் படைக்கவேண்டும்.

பீமின் பயணம் – அ.அந்தோணி குருசு, நீலம் பதிப்பகம்

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss