
சட்டக் கல்லூரியில் குற்ற விதிகளின் வரலாறு தொடர்பான பாடத்தில் ஒரு பகுதி உண்டு. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய அறிஞரும் நவீன குற்றவியலின் தந்தை என்று அறியப்பட்டவருமான சிசேர் லோம்ப்ரோசோ (Cesare Lombroso) முன்வைத்த “பிறவி குற்றவாளி கோட்பாடு” பற்றிய பகுதி அது. அக்கோட்பாட்டின்படி, சில மனிதர்கள் பிறவியிலே குற்றப் பண்புகளுடன் பிறக்கிறார்கள். அவர்களின் உடல் அமைப்பில் குற்றவாளிக்குரிய அம்சங்கள் இருக்கும். பெரிய தாடை, நீண்ட கை, விலகிய காதுகள், சற்று முனைந்த நெற்றி, கூர்மையான கண்கள், கருத்த தேகம் போன்றவை அப்படியான குற்ற அம்சங்களாக வகைப்படுத்தப்பட்டன.
இவ்வகை உடல் அமைப்புகள் “பழமையான மனித இனத்தின் மீதமுள்ள அடையாளங்கள்” (atavistic traits) என லோம்ப்ரோசோ கூறினார். அவர்கள் உறுதியாக குற்றம் செய்பவர்கள் என்பது அவருடைய கருதுகோள். அப்போது மாணவர்களாக இருந்த நாங்கள், அதை வைத்து விளையாட்டாக பேசிக் கொள்வதுண்டு. எங்களுக்குள் யார் குற்றத்தில் ஈடுபடுகிறவர்கள் அல்லது ஈடுபட வாய்ப்புள்ளவர்கள் என்பதை அவரவரின் உடல் அமைப்பை கொண்டு முடிவுசெய்து அதன் அடிப்படையில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு குற்ற பிரிவோடு இணைத்து அந்த பெயர் சொல்லி கிண்டலாக அழைப்போம். அறிவியல் ரீதியாக மறுக்கப்பட்டுவிட்டாலும் சர்ச்சைமிக்க, அக்கோட்பாட்டின் மேல் ஒரு கவர்ச்சி இருந்தது. விளையாட்டாக ஆரம்பித்த இந்த அடையாளப்படுத்தல் சிலர் மேல் அப்படியே நிரந்தரமாக தங்கிவிட்டது. அந்த சிலர் எவ்வித ஆதரவும், செல்வாக்கும் இல்லாத எளிய மாணவர்கள் என்பதை பின்னால் தான் உணர்ந்துகொள்ள முடிந்தது. உடனே குற்றவுணர்ச்சியும் வருத்தமும் மேலிட்டன.
சிசேர் லோம்ப்ரோசோ ஒரு மாபெரும் அறிஞர். குற்றவியல் எனும் துறை வளர்ந்ததில் அவர் பங்களிப்பு அதிகம். ஆனால் பேரறிஞர்கள் என போற்றப்பட்ட மகத்தான ஆளுமைகள் கூட அவர்கள் காலகட்டத்தின் ஆதிக்க மனநிலை கருத்திலிருந்து விலகி, சமநிலை தன்மையுடன் செயல்பட முடியாமல் இருப்பது, வரலாற்று மர்மங்களுள் ஒன்று. மானுட சமத்துவத்தை முன்வைத்த கார்ல் மார்க்ஸ் இந்தியா பற்றிக் கொண்டிருந்த எண்ணம், ஜனநாயகம் மற்றும் தனிநபர் உரிமை ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டு அமெரிக்க அரசியல் சாசனத்தை உருவாக்கிய தாமஸ் ஜெபர்சன், கருப்பு அடிமைகள் மேல் கொண்ட கருத்துக்கள் இவை எல்லாம் சில உதாரணங்கள்.
லோம்ப்ரோசோவின் பிறவி குற்றவாளி கோட்பாடு, பழங்குடியினருக்கும், கறுப்பினத்தவருக்கும் எதிராகவே பெரும்பாலும் கையாளப்பட்டது. அவர்கள் உடலமைப்பே இதனுடன் ஒத்துப்போனது. ஏனென்றால் அவர்களை மற்றமைமையாக வைத்தே இது உருவாக்கப்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்தி வைப்பது அல்லது அழிப்பது மட்டுமே குற்றத்தை குறைப்பதற்கான தீர்வு என்றும் நம்பப்பட்டது. யூஜெனிக்ஸ் (Eugenics) சமூக அறிவியல் கொள்கையை பின்பற்றி மனிதர்களில் சிறந்தவர்கள் மட்டும்தான் சமூகத்திற்கு தேவை என்ற அடிப்படையில், உடல் அமைப்பால் பிறவிக் குற்றவாளிகள் என வகைப்படுத்தப்பட்டவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; மணமானவர்கள் கட்டாய கருத்தடை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். முக்கியமாக பெண்களும், ஊனமுற்றவர்களும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

1876ல் லோம்ப்ரோசோவின் “குற்றவாளி மனிதன்” (Criminal Man) வெளியாகிறது. உடனடியாக அது ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கப்படுகிறது. அறிவியல் வழிமுறையாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. பெரும் புகழடைகிறது. அமெரிக்காவில் 1907ல், முதல்முறையாக குற்றத்தை தடுக்கும் முகமாக, கருத்தடை சட்டம் கொண்டு வரப்படுகிறது. அடுத்த கால் நூற்றாண்டில் அமெரிக்காவில் மட்டும் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கருத்தடை செய்யப்படுகிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு தெரியாமலேயே அனுமதியின்றியே இது நிகழ்த்தப்படுகிறது. பெண்களே மிகுதியாக பாதிப்படைகிறார்கள். பிற்பாடு ஹிட்லரும் பிற நாஜிக்களும் தங்களுடைய இனத் தூய்மை கொள்கைக்கு இக்கோட்பாட்டினையே துணைக் கொண்டனர். அமெரிக்கச் சட்டத்தை அவர்கள் மாதிரியாகக் கொண்டனர். உலகப் போருக்கு பிறகுதான் அக்கோட்பாடு கடும் எதிர்ப்பை சம்பாதித்தது.
இந்தியாவிலும் இத்தகைய பாரபட்சமான சட்டங்களுக்கு உதாரணம் உண்டு. ஆங்கிலேய காலனிய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “குற்ற பரம்பரை சட்டம்” (Criminal Tribes Act) ஓர் எடுத்துக்காட்டு. அதன்படி, 213 சாதிகள் குற்றத்தில் ஈடுபடும் அல்லது குற்றத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ள சாதிகள் என வகைப்படுத்தப்பட்டு, அந்த குறிப்பிட்ட சாதியில் உள்ள அனைவரும் கடுமையாக கண்காணிக்கப்பட்டனர். அந்த சாதிகளில், 15 வயதிலிருந்து 60 வயித்துக்குட்பட்ட அனைத்து ஆண்களும் அவர்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் சென்று கையெழுத்து இடவேண்டும். எங்கு வெளியூர் சென்றாலும் காவல்துறையின் அனுமதி பெறவேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் 89 சாதிகள் இதில் இணைக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறப்பதனாலேயே அந்த நபர் குற்றவாளியாகத்தான் இருக்கமுடியும் என்ற ஆங்கில மேட்டிமை எண்ணம் எத்தனை சிறுமைக்குரியது. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் அச்சாதிகளில் பிறந்த ஒரே காரணத்திற்காக பல லட்சம் பேர் இந்த சட்டத்தின் பாதிப்பை அனுபவித்தார்கள். இதில் மிக அதிர்ச்சியளிக்கக்கூடியது, இந்த சட்டத்திற்குள் பட்டியலிடப்பட்ட சாதிகள் அனைத்தும் சமூகத்தில் கல்வி, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய விளிம்பு நிலையில் இருக்கும் சாதிகள் என்பது.
உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்ட், குற்றவாளி பிறப்பிலேயே உருவாகிவிடுகிறான் என்ற லோம்ப்ரோசோவின் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மனதின் உள்கட்டமைப்பில் ஏற்படும் மோதல்கள், அடக்கப்பட்ட ஆசைகள் இவைதான் ஒருவன் குற்றம் புரிவதற்கான அடிப்படை காரணங்கள் என்பது பிராய்டின் வாதம். பிராய்ட் நேரடியாக லோம்ப்ரோசோவின் கோட்பாட்டினை விமர்சிக்கவில்லை என்றாலும், அவருடைய கருத்துச் சட்டம் உயிரியல் நிர்ணயவாதத்திலிருந்து ஒரு வலுவான திருப்பத்தை முன்னெடுத்தது. ஆனால் அதுவும் குற்றநடவடிக்கை என்பது தனிநபர் சார்ந்தது எனும் கருத்தையே வழிமொழிகிறது. ஒருவகையில் குற்றத்தை உயிரியல் சிக்கலாக அணுகுவதைத் தாண்டி உளவியல் சிக்கலாக அணுகும்போக்கு நவீன உளவியலால் உருவானது எனலாம். இப்போதும், தொடர் கொலையில் (serial killer) ஈடுபடும் குற்றவாளி மனநோயினால் பாதிக்கப்பட்டு அதன் உந்துதலில் குற்றத்தில் ஈடுபடுவதாகவே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நவீன மேற்கத்திய சிந்தனைகள் பெரும்பாலும் தனிநபர்வாதத்தை மையப்படுத்தியவை. நீதித்துறையிலும் அதுவே ஆதாரமாக உள்ளது. குற்றம் என்பது தனிநபர் செயல் எனும் அடிப்படையில் குற்றத்தின் தண்டனைகளும் தனிநபர் நோக்கிலேயே அமைக்கப்பட்டன. அதாவது குற்றம் செய்தவரை கடுமையாக தண்டிப்பதின் மூலம் குற்ற செயல்கள் தடுக்கப்படும் என்று நம்பப்பட்டது. எனவே தண்டனை என்பது பழிவாங்குதல் அல்லது பதிலடி கொடுத்தல் (Revenge or Retaliation) கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மேலும் பயன்பாட்டுவாதத்தின் (Utilitarianism) கோட்பாட்டை முன்வைத்த இங்கிலாந்தை சேர்ந்த சட்ட அறிஞர் ஜெரமி பெந்தம் (Jeremy Bentham) கருத்தின்படி, குற்றம் புரிவதனால் ஏற்படும் மகிழ்ச்சி அல்லது நன்மையை விட அதற்கான தண்டனையினால் உருவாகும் தீங்கு அல்லது பாதிப்பு அதிகமாக இருந்தால் தனிமனிதன் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டான். இந்த எண்ணத்திலேயே குற்றத்திற்கான தண்டனைகளும் வகுக்கப்பட்டன.
நீதித்துறையின் எந்த அமைப்பும் ஒரு குற்ற வழக்கை கையாளும்போதும், தீர்ப்பு அளிக்கும்போதும் அக்குற்றத்தில் ஈடுபட்ட தனிநபரின் நடத்தைகளை மட்டுமே கருத்தில் கொள்ளும். அதன் பின்னணியில் உள்ள சமூகக்காரணிகள் நீதித்துறைக்கு பொருட்டல்ல. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற போற்றத்தக்க கோட்பாடு இதன் அடிப்படையாக செயல்பட்டாலும் பல தருணங்களில் நீதித்துறையின் தவிர்க்க இயலாத எல்லையாகவும் இது உள்ளது.

தாராசங்கர் பந்த்யோபாத்யாயவின் “ஆரோக்கிய நிகேதனம்” நாவலில் ஆயுர்வேத மருத்துவத்தின் தேவை சிறிது சிறிதாக மங்கி, ஆங்கில மருத்துவம் அந்த இடத்தை எப்படி கைக்கொள்கிறது என்பது விவரிக்கப்பட்டிருக்கும். ஆயுர்வேதம் என்பது நோயுற்ற ஒருவரின் ஒட்டுமொத்த உடலையும், சூழலையும் கருத்தில்கொண்டு அதற்கேற்றாற்போல் சிகிச்சை அளிக்கும் முறையாகும். ஆனால் ஆங்கில மருத்துவம் நோயுற்றவரின் குறிப்பிட்ட நோயை மட்டும் கவனத்தில்கொண்டு அதற்கான மருந்துகளை அளிக்கும் சிகிச்சை முறை. இதை வெறும் ஆங்கில, ஆயுர்வேத மருத்துவ முறைக்கான வேறுபாடாக மட்டுமல்லாமல் மேற்கு, கிழக்கிற்குமான வாழ்க்கை பற்றிய பார்வை வேறுபாட்டை குறிக்கும் குறியீடாகவே பந்த்யோபாத்யா நாவலில் கையாண்டிருப்பார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற மேற்கத்திய கருத்து ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த கோட்பாடுகளில் ஒன்றாக இருந்தாலும், சமூக காரணிகளை கருத்தில் கொள்ளாமல், குற்றத்தை மட்டும் நோக்கி தண்டனை கொடுக்கும் முறை குற்றவாளியை தனிமைப் படுத்துகிறது. குற்றத்துக்கான காரணத்தை ஆராய நீதித்துறைக்கு அதன் வடிவமைப்பிலேயே வழியில்லாமல் ஆகிறது. கல்வி, மருத்துவம், கலை, இலக்கியம் போன்றவற்றில் கிழக்கு மற்றும் மேற்கின் சிந்தனை முறைகள் சார்ந்து நிகழும் உரையாடல்கள் சட்டத் துறைக்குள் நடக்க வேண்டும் என கருதுகிறேன்.
குற்றங்களை தனித்தனியாக ஆராய்கையில் நாமும் மேற்சொன்ன கருத்துக்களை ஏற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு நிலப்பரப்பில் நடைபெறும் குற்றங்களை பட்டியலிட்டால் ஒரு பெரும் உண்மை புலப்படும். உதாரணமாக தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை கணக்கிட்டால் ஒவ்வொரு பகுதியிலும் பெரும்பான்மை குற்றம் உறுதியாக மாறுபடும். நான் இதுவரை என் வழக்கறிஞர் தொழிலில் பார்த்ததில் மேற்கு தமிழகத்தில் இருந்து தாதா என்று சொல்லக்கூடிய, ஒரு குழுவை கொண்டு தொடர் கொலைகளில் ஈடுபடும் பெரிய ரவுடி உருவாக்கி வந்ததேயில்லை. மேற்கு தமிழகத்தில் விதவிதமான முதலீடுகளாக அறிமுகப்படுத்தப்பட்டு பல கோடி பணத்தை ஏமாற்றும் பொருளாதார குற்றங்கள், தென் தமிழகத்தில் பெரும்பாலும் இல்லை. இங்கு ஒவ்வொரு மாவட்டத்துக்குமான குற்றங்கள் என்று சிலவற்றை அடையாளப்படுத்தி விட முடியும். அவ்வாறெனில் குற்றச் செயல்களுகளுக்கும் அங்குள்ள சமூகத்திற்குமான தொடர்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. குற்றத்தை தனியாக மதிப்பிடாமல் அதன் சூழலைக் கொண்டு மதிப்பிட வேண்டிய அவசியம் எழுகிறது.
பிரெஞ்சு சமூகவியல் அறிஞரான எமிலி துர்க்ஹெய்ம் (Emile Durkheim) , சமூக ஒழுங்கின் சிதைவு (Anomie) தான் குற்றச் செயல்களுக்கான அடிப்படை என்ற வாதத்தை முன்வைத்தார். குற்றவியலில் இது இன்னொரு முக்கிய கோட்பாடாக உள்ளது. சமூக நெறிகளின் சிதைவும், சமூக அமைப்புகளின் கோளாறுகளும் குற்ற சூழலுக்கான முதன்மை காரணிகள் என்பது இவரின் கூற்று. தனிமனிதச் சிதைவாக மட்டும் குற்றத்தை கருதாமல் சமூகத்தை ஆராயும் வழியாக இது அமைகிறது. குற்றவியல் துறையின் பேரறிஞர் என போற்றப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த எட்வின் சதர்லேண்ட் (Edwin H.Sutherland) முன்வைத்த “வகைத் தொடர்பு கோட்பாடு” (Differential Association Theory), குற்ற நடத்தை பற்றிய புரிதலுக்கான மிக முக்கியமான ஒன்று. “மனிதன் பிறவி குற்றவாளி அல்ல மாறாக அவன் சமூகத்தில் உள்ள மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது குற்றத்தை கற்றுக்கொள்கிறான்”. இதன்படி குற்றம் என்பது கற்றுக் கொள்ளப்படும் நடத்தை எனில் கற்றுக் கொடுக்கும் சமூகம் தான் குற்றத்திற்கான முதன்மை காரணமாக உள்ளது.
காந்தியும் குற்றம் மற்றும் தண்டனை தொடர்பாக இக்கருத்தையே வலியுறுத்துகிறார். குற்றத்தை ஒரு சமூக நோய் என்றுதான் அவர் குறிப்பிடுகிறார். ஆகவே அதற்கான தண்டனை பழிவாங்கும் நோக்கில் இல்லாமல் சீர்திருத்தும் வகையில் அமைய வேண்டும் என்பதை காந்தி சுட்டிக் காட்டுகிறாற். கல்வியை பொருத்தவரையில் இந்திய பூர்வீக கல்வி வழிகளை வலியுறுத்தும் காந்தி, நீதித்துறையிலோ மேற்கத்திய சட்ட முறைகளையே முன்மொழிகிறார். அவரே ஒரு பாரிஸ்டர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதைவிட, இந்திய கிராம நிர்வாகத்தில் நீதிமுறைகளில் இயல்பாகவே பாரபட்சங்கள் மிகுதி என்பதும் மறுக்கமுடியாத உண்மை. சாதி சார்ந்த பாகுபாடுகள் இன்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் நிறைந்துள்ளன.
குற்றங்களில் சமூகத்திற்கும் பங்குண்டு என சொல்வது, குற்றவாளிக்கு எந்த பங்குமே இல்லை என்று சொல்வதாகாது. ஒவ்வொரு மனிதருக்கும் தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது. விருப்புறுதி (free will) இருக்கிறது. அதை நிராகரிப்பது மனிதன் எனும் நிலையையே கேள்விக்குள்ளாக்குவதுடன் எல்லா சமூக மதிப்பீடுகளையும் மறுதலிப்பதாகிவிடும். கலை இலக்கியங்கள் மனித மனதின் விசித்திரங்களை ஆழங்களை காட்சிப்படுத்துகின்றன. குற்றம் எல்லா தர்க்கங்களையும் உடைத்துவிடும் தருணங்களை கலையாக்கங்களில் காண முடிகிறது.

வைக்கம் முகமது பஷீரின் “போலீஸ்காரனின் மகன்” கதையில், காவல் நிலையத்தில் இரவு வேளையில் இரு போலீஸ்காரர்கள் ஒரு குற்றத்தை விசாரிக்கும் பொருட்டு இளைஞன் ஒருவனை கடுமையாக தாக்கி கொண்டிருப்பார்கள். அதை கண்டு அங்கு லாக்கப்பில் இருக்கும் ஒரு அரசியல் கைதி போலீஸ்காரர்களின் நடத்தைப்பற்றி மிகக்கீழ்தரமாக விமர்சிப்பார். அடிபட்டு ரத்தம் சிந்தி அமர்ந்திருக்கும் அந்த இளைஞனை கண்டு கண்ணீர் சிந்தி அமர்ந்திருக்கும் அரசியல் கைதியிடம், போலீஸ்காரர் அந்த இளைஞன் செய்த கொடூர குற்றங்களை விவரித்துவிட்டு பின்பு கூறுவார், “திருட்டும் விபச்சாரமும் கொலையும் நடப்பது வறுமையால்தான் என்று தலையில் வைத்து ஆடுபவர்கள் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம் இது. இவன் செய்தது வெறும் வறுமையில் அல்ல. இவனுடைய தந்தைக்கு வேலை இருக்கிறது. ஒரு போலீஸ்காரர். எங்களுடைய தோழரின் மகன்….”.
இங்கேயும் சிதைவு இருப்பது நமக்கு தெரிகிறது. ஆனால் அது மனிதனின் சிதைவா அல்லது சமூகத்தின் சிதைவா என்று கேட்டால் பதில் சொல்லவே முடிவதில்லை. குற்றத்திற்கான சமூக காரணிகளை பட்டியலிட்டாலும் சில தருணங்களில் சூழலிற்கும், சமூகத்திற்கும் பொருத்தமில்லாமல் சில தனிநபரின் நடத்தைகள் பல குற்றச்செயல்களுக்கு காரணமாக உள்ளன.
சட்டமும் நீதியும் சமூகக் காரணிகளை கணக்கில் எடுக்க வேண்டும் என்று சொல்லும்போது அதன் இன்னொரு பொருள், ஒரு சமூகமாக நாம் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் பொறுப்பேற்க வேண்டும் என்பதே. அதை “குற்றவாளி” எனும் தனி இனத்தின் சிக்கலாக கருதுவதை நிறுத்த வேண்டும். குற்ற செயல்களை இயல்பாக்குவது தான் (Normalise) குற்றம் பெருகுவதற்கான முதன்மை காரணம் என நான் கருதுகிறேன்.
ஒருமுறை புகழ்பெற்ற பவேரியா கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்த ஒருவரோடு தொழில்ரீதியாக உரையாடினேன். தங்கள் மொத்த கிராமமும் கொள்ளை தொழில் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார். கொள்ளைக்கு முன்பும் பின்பும் மேற்கொள்ள அவர்களுக்கு சில சடங்குகள் கூட உண்டு. ஒரு ஊரே கொள்ளையடிப்பதை தொழிலாக பார்க்கையில் அங்கிருந்து வரும் ஒரு நபரை தனிப்பட்ட குற்றவாளியாக எப்படி தீர்மானிப்பது? தென் தமிழகத்தில் சமூக மனநிலையிலேயே சாதி பெருமிதம் புரையோடிருக்கிறது. அந்த போலி பெருமிதத்தை காக்க எதையும் செய்யலாம் என்பது மனவோட்டமாக உள்ளது. அதே போல, மேற்கு தமிழகத்தில் செல்வம் மட்டுமே மதிப்பை ஈட்டக்கூடியது, எவ்வாறெனினும் பணம் சேர்க்கவேண்டும் என்ற முனைப்பும் இருக்கின்றன. இவை எல்லாம் அதனதன் நிலைகளுக்கு ஏற்ப குற்றங்களில் ஈடுபட வழிவகுக்கிறது.
தற்கொலை பற்றிய செய்தி மேலும் தற்கொலை எண்ணத்தை தூண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. ஆகவேதான் தற்கொலைகள் பற்றி செய்தி போடுகையில் ஹிந்து போன்ற சில பத்திரிகைகள் (மட்டும்) கீழே தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்கான உதவி எண்களையும் கொடுக்கிறார்கள். இது குற்ற செய்திகள் பற்றிய பதிவிற்கும் பொருந்தும் என நினைக்கிறன். அதாவது குற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையாமல் குற்றங்களை இயல்பாக்கும் நிலை இங்கு தொடர்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான மற்றும் சாதிய ஒடுக்குமுறை தொடர்பான குற்றங்கள் மேலும் மேலும் அதிகரிப்பதற்கு குற்றங்களை இயல்பாக்கும் தன்மை முக்கிய காரணி ஆகும்.
இன்று தமிழகம் மற்றுமின்றி மொத்த இந்திய தேசத்திலும் ஊழல் என்பது அமைப்பு முறையாக்காப்பட்டுவிட்டது (Institutionalization). எனவே அதுசார்ந்த குற்றங்கள் மிக இயல்பானதாகே நம் சமூகம் பார்க்கிறது. இது மேலும் இக்குற்றங்கள் பெருக வழிவகுக்கும். தற்போது உள்ள சூழலில் எந்த சட்டமும், தண்டனையும் ஊழலை கட்டுப்படுத்த இயலாது.
பேசிப் பேசியே குற்றச்செயல்களை இயல்பாக்கும் முறை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு உள்ளது. சமீபத்திய மிக சிறந்த உதாரணம் எபிஸ்டீன் பைல் வழக்கு. தொடர்ந்து பேசுபொருளாக்கி அதை ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போக செய்துவிட்டார்கள். இயல்பாக்கம் என்பது பொது சமூகத்தின் ஏற்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை. எபிஸ்டீன் வழக்கையே எடுத்துக் கொண்டால் யாருமே அதை ஆதரித்து பேசவில்லை. ஆனால் தொடர்ந்து பேசப்படுவதனாலேயே அது இயல்பாக மாறிவிட்டது. இந்த எதிர்மறை இயல்பாக்கம் (Negative Normalisation) பற்றியும் கவனம் தேவைப்படுகிறது.

முறையற்ற செல்வத்தை சேர்ப்பதற்கும் பின்பு அதை பாதுகாப்பதற்கும் இங்குள்ள அதிகார வர்க்கங்கள் தொடர்ச்சியாக குற்றவாளிகளை பேணும் நிழல் அமைப்பாக செயல்படுகின்றன. குழு குற்றங்கள் (Syndicate offences) எனப்படும் ஆள் கடத்தல், கொள்ளை, லாப நோக்குடன் செய்யப்படும் கொலைகள், நிலம் பணம் தொடர்பான கட்ட பஞ்சாயத்துகள், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விநியோகம் என பல பெரும் குற்றங்கள் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரத்தில் உள்ளவர்களின் துணை இல்லாமல் ஒருபோதும் செயல்பட முடியாது. குற்றங்களை அனுமதிப்பதன் மூலம் அதில் கிடைக்கும் லாபங்களை தானும் பங்கிட்டு கொள்ளவும், அந்த குற்றவாளிகளை கொண்டு தனக்கு தேவையான பல்வேறு குற்றச்செயல்களை நிறைவேற்றுவதற்கும், குற்றக்குழுக்களை இந்த நிழல் அமைப்புகள் எப்போதும் பாதுகாத்து வருகின்றன. ஒரு மொத்த அமைப்பும் ஊழலில் மூழ்கியிருக்கையில் அந்த அமைப்பில் உள்ள அரசு அதிகாரி மேலும் தைரியத்துடன் ஊழலில் ஈடுபடுகிறான். இத்தகைய சூழல்களில் குற்றத்தை வெறுமனே தனிநபர் செயலாக பார்ப்பதில் போதாமை இருக்கிறது.
சமூகத்தின் ஒட்டுமொத்த மேம்பாடு குற்றங்களை குறைக்கும் என்பதற்கு ஸ்வீடன், நார்வே பின்லாந்து போன்ற ஸ்கேண்டிநேவியன் தேசங்கள் மிகச் சிறந்த உதாரணங்களாக உள்ளன. குற்றத்தை குறைக்கும் காரணிகள் பொருத்தமான சட்டங்களும் கடுமையான தண்டனைகளும் மட்டும் அல்ல. சமூக இயல்புகள் குற்ற இயல்புகளைவிட வலுவானவை.

வீ.செ.செந்தில்குமார்
சென்னையை சேர்ந்த வழக்கறிஞரான செந்தில்குமார் கட்டுரையாசிரியர். வரலாறு, குற்றவியல் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளவர். பயணங்களில் தீரா விருப்பம் கொண்டவர், பயணக் கட்டுரைகளும் எழுதுகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

மிகநன்று நீங்கள் விவாதம் செய்வதில் வல்லவர் ஆனால் இவ்வளவு எழுத்தாற்றல் உள்ளதை கண்டு பெருமையாக உள்ளது. இன்னும் பல கட்டுரைகள் எழுத எனது வாழ்த்துக்கள்.
மிகச் சிறந்த கட்டுரை. தமிழில் குற்றவியல் சார்ந்து நான் படிக்கும் முதல் கட்டுரை. இன்னும் அந்த துறை சார்ந்து செந்தில் அவர்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.
மிக ஆழமான பதிவு. மிக்க நன்றி.
சார் யோசிக்க வைக்கும் அருமையான கட்டுரை.”இங்குள்ள அதிகார வர்க்கங்கள் தொடர்ச்சியாக குற்றவாளிகளை பேணும் நிழல் அமைப்பாக செயல்படுகின்றன”இதில் வழக்கறிஞர்கள்,காவல்துறை,நீதித்துறையும் சேர்ந்துதானே.இங்கு சாமானியனின் நிலை என்ன ? தங்கள் தொடர்பு எண்ணும் பகிர்ந்தால் நன்றாய் இருக்கும்.