நண்பர் அரவிந்தன் : சுகுமாரன்

1990 களின் முற்பகுதியில் அரவிந்தனுடன் அறிமுகம் ஏற்பட்டது. இலக்கியமே அதற்கு நிமித்தமாக இருந்தது. இந்தியா டுடே இதழில் அரவிந்த பாரதி என்ற பெயரில் அவருடைய சிறுகதை  வெளிவந்திருந்தது.  பாத்திரங்களின் உரையாடலில் என்னுடைய கவிதையொன்றின் சில வரிகள் இடம் பெற்றிருந்தன.  தொலைபேசியில் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன் . எங்கள் நட்பின் தொடக்கம் அது. பின்னர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்தும் தொலைபேசியில் உரையாடியும் நட்பு வளர்ந்தது.

இந்தியா டுடே , காலச்சுவடு, இந்து தமிழ் திசை, மின்னம்பலம் உள்ளிட்ட அச்சு, மின்னிதழ்களில் ஆசிரியப் பகுதி பொறுப்பாளராக அரவிந்தன்  பணியாற்றினார். நம்ம சென்னை என்ற வட்டார இதழையும் நடத்தினார். இந்த ஊடகங்களில்  அவர் பணியாற்றிய நாட்களில் எங்கள் நட்பு வலுவடைந்தது. இவற்றிலெல்லாம் எழுத்தாளன் என்ற நிலையில் நானும் பங்கேற்ற வாய்ப்புகள் அனைத்தும் அவரது நட்பின் காரணமாகவே  கிடைத்தன. அவர் பொறுப்பேற்று  வெளியிட்ட இந்தியா டுடே இலக்கிய மலர்களில் பெரும்பான்மையானவற்றில் பங்களித்திருக்கிறேன். அந்த இதழில் வெளியான நூல் மதிப்புரைப் பகுதியில் கணிசமாக எழுதியிருக்கிறேன். ‘உலகத் தமிழ்’ இணைய இதழின் ஆசிரியராகப்  பணியாற்றியபோதும் குறிப்பிடத் தகுந்த பங்களிப்புக்கு முகாந்திரமாக இருந்தார். ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியர் என்ற நிலையிலும்  பின்னர் ‘இந்து தமிழ் திசை’யின் இணைப்பிதழ்களின் ஆசிரியர் பொறுப்பிலிருந்தபோதும்   அதிக அளவில் எழுத உந்துவிசையாகவும் இருந்திருக்கிறார். இந்த செயலுக்கு நட்பு மட்டும் காரணமல்ல. இதனை இதனால் இவர் முடிப்பார் என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும் தேர்ந்த  இதழாளரின் நுண் நோக்கும் காரணம். இந்த நோக்கமே  இதழியலிலும் இலக்கியத்திலும் அவருக்குப் பல நண்பர்களைப் பெற்றுத் தந்தது. எழுத்துச் சார்ந்து உருவான நட்புகளை அவர் பேணினார். அந்த நண்பர்களின் தனி வாழ்க்கையிலும் நலத்திலும் அக்கறை காட்டினார். இன்று அவரை நினைவு கூரும் எவரும்  அவரால் துளியளவாவது பயன் பெற்றவர்களே.  

காலச்சுவடு நிறுவனத்தின் பதிப்பாசிரியராக 2022 இல் அரவிந்தன் பொறுப்பேற்றார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடந்த எங்கள் நட்பு மிக நெருக்கமடைந்த காலம் இது. அவரது பணிக்களம் நாகர்கோவிலாக இருந்தது. காலச்சுவடு இதழ் உருவாக்கத்தை முன்னிட்டு நாகர்கோவில் செல்வது வழக்கம். அதன் விளைவாக மாதா மாதம் மூன்று நான்கு நாட்கள்  ஒரே வீட்டில் அவருடன் வசிக்கும் வாய்ப்பும்  ஏற்பட்டது. அதனால்  ஒருவரை ஒருவர் மேலும் புரிந்துகொள்ளவும் கருத்துக்களையும் கனவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது. இருவருக்குமான பொது உலகத்தின் இயல்புகளைத் தெரிந்து கொள்ளும் தருணங்களும் வாய்த்தன.

வயதில் ஏற்றக் குறைவு இருந்தாலும் அரவிந்தனுக்கும் எனக்கும் சில பொதுப் புள்ளிகள் இருக்கின்றன. இருவரும் அனேகமாக ஒரே காலத்தில் ஒரே இலக்கியப் பள்ளியின் மாணவர்களாக இருந்தவர்கள். சுந்தர ராமசாமியின் சிந்தனையாலும் ஆளுமையாலும் தாக்கம் பெற்றவர்கள் நாங்கள். எங்கள் நெருக்கத்துக்கு ஒருவேளை இதுவும் காரணமாக இருக்கலாம். இருவரும் வாழ்க்கையின் பொருட்டு இதழியல் பணியில் உழன்றவர்கள். இவை பொதுவான விருப்பங்களுக்கும் பகிர்ந்துகொள்ளலுக்கும் துணையாக இருந்திருக்கின்றன. அண்மைக் கால உடன் வசிப்பு நாட்களில்  இந்த விருப்பப் பகிர்வு  எங்கள் உரையாடல் பொழுதுகளில் மேலோங்கி இருந்தது.  பெரும்பாலும் நள்ளிரவைத் தாண்டி நீளும் உரையாடல்களில் இலக்கியம். சினிமா, இசை, சமூகம், அரசியல்,  சமையல் , விளையாட்டு, குறிப்பாகக் கிரிக்கெட் என எல்லா விஷயங்களும் இடம் பெறும். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் திட்பமான கருத்துக்களும் மதிப்பீடுகளும் அரவிந்தனுக்கு இருந்தன. இலக்கியத்தில் கூர்மையான விமர்சனப் பார்வை இருந்தது. தனது கருத்துக்களை அழுத்தமாகச் சொல்லுவார். மதிப்பீடுகளைத் தயக்கமில்லாமல் எடுத்துவைப்பார். ஆனால் எதையும் மறுதரப்பு ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்ற பிடிவாதம்  அவரிடம் ஒருபோதும் இருந்ததில்லை. எனவே உரையாடல்கள் மோதல்  இல்லாமல் தொடரும். அவருடன் பகிர்ந்து கொண்டதை விட  அவரிடமிருந்து தெரிந்து கொண்டவை அதிகம். முக்கியமாக சினிமா, கிரிக்கெட் ஆகியவை தொடர்பாக. சினிமாவைப் பற்றி நுட்பமான பார்வையும் கிரிக்கெட் தொடர்பாகப் பரந்த அறிவும் அவருக்கு இருந்தன. எங்கள் உரையாடலில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுக்கள் மிக அரிதாகவே இடம் பெற்றிருந்தன. ஆனால் அந்தத் தருணங்கள் பரஸ்பர மரியாதைக்குரியவை. ஒருபோதும் மறக்க முடியாதவை. அவரில் என்னையும் என்னில் அவரையும் பார்த்த கண்ணாடித் தருணங்கள் அவை. அந்த உணர்வுதான் அரவிந்தனின் மறைவைப் பற்றிக் கேட்டதும் சில நொடிகள் மூச்சுத் திணறலுக்குள்  என்னை ஆழ்த்தின.

இலக்கியம், இதழியல் இரு துறைகளிலும் அரவிந்தன் செயல்பட்டார். இரண்டிலும் காத்திரமான  பங்களிப்பையும் செய்திருக்கிறார். வாழ்க்கை நிமித்தம் மேற்கொண்ட இதழியல் செயல்பாடுகளின் விரிவில் வாழ்வின் பொருட்டுச் செய்த இலக்கியப் பங்களிப்பு நிறம் குன்றித் தோற்றமளித்ததோ என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. இதழியலின் எல்லாப் பிரிவுகளிலும் அவர் திறம்படப் பணியாற்றியிருக்கிறார். அவரால் இதழியலுக்கு வந்தவர்கள் பலர். ஆனால் இதழியல் மூலம் அடையக் கூடிய மெல்லிய அதிகாரத்தையும் செல்வாக்கையும் அவர் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. அப்படிப் பயன்படுத்தியிருந்தால் அவரது சமகாலத்து இதழாளர்கள் போல லௌகீக சவுக்கியங்களை அடைந்திருக்கலாம். அவர் கைக்கொண்டிருந்த விழுமியம் அப்படி வீழ்ச்சியடைய அவரை அனுமதிக்கவில்லை. ஓர் உரையாடலின் போது இதைச் சுட்டிக் காட்டியபோது புன்னகை புரிந்தார். அந்தப் புன்னகை இன்னும் கண்முன் மின்னுகிறது – மேலான லட்சியத்தின் வெற்றிபோல.

இதழியல் இலக்கியம் இரண்டிலும்  பங்களித்திருந்தபோதிலும் அவரது உட்கிடக்கை இலக்கியம் சார்ந்தது  என்பது என் அனுமானம். எங்கள் உரையாடலில் பெரும்பகுதி இலக்கியம் சார்ந்தது என்பது இந்த அவதானிப்புக்கு ஆதாரம். அவர் இதழியலாளராவே அறியப்பட்டார் என்பது என் ஆதங்கம். உண்மையில் படைப்பெழுத்துக் குறித்துப் பெரும் கனவுகள் கொண்டவராகவே இருந்தார். அதற்கேற்பச் செயல்பட்டுமிருக்கிறார். இன்றைய இலக்கியச் சூழலில் அவர் படைப்புகளுக்குத் தகுந்த கவனம் அளிக்கப் படவில்லை. சிறுகதைகள் பற்றிய உரையாடகளிலோ நாவல் விவாதங்களிலோ அரவிந்தனின் ஆக்கங்கள் பேசப்படவில்லை. இந்தப் புறக்கணிப்பை அவரும் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து படைப்பெழுத்தில் ஈடுபட்டிருந்தார். ஏறத்தாழ ஐம்பது சிறுகதைகளும் இரண்டு நாவல்களும் எழுதியிருக்கிறார். அவை மகத்தானவையா இல்லையா என்ற கேள்விக்குக் காலம் பதில் சொல்லக் கூடும். ஆனால் அவை ஒரு தேர்ந்த எழுத்தாளனின் ஆக்கங்கள். எழுத்துக் கலையின் நுட்பங்களை உள்வாங்கிய படைப்பூக்கம் ததும்பும்  வெளிப்பாடுகள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். பயணம், பொன்னகரம் ஆகிய இரண்டு நாவல்களும் குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது, விருது, சத்திய சோதனை, புதைமணல், முதலான கதைகளும் அவரது படைப்பாற்றலின் அடையாளங்கள். கச்சிதமும் செய் நேர்த்தியும்ுளவியல் ஆய்வும் துலங்கும் எழுத்துக்கள்  அவருடையவை. ஒருவேளை மரணத்துக்குப் பின்னர் அந்தத் துலக்கம் அறியப்படலாம்.

அர்ப்பணம்  சிறுகதையில் இடம் பெறும் மையப் பாத்திரத்தின் உரையாடல் நினைவுக்கு வருகிறது. சினிமாவை வாழ்க்கையாகக் காணும்  பாத்திரம் அது. ‘’ வாழ்ந்தாலும் செத்தாலும் சினிமாதான். அதுதான் என் கனவு, நனவு, வாழ்க்கை எல்லாமே . என் வாழ்க்கைக்கு ஒருநாள் அது அர்த்தம் கொடுக்கும்’’ என்பது உரையாடலின் முத்தாய்ப்பு.  கைப்பிரதியில் கதையைப் படித்து முடித்ததும் தொலைபேசியில் அவரை அழைத்து ‘’ இதில் சினிமாவுக்குப் பதில் இலக்கியம் என்று போட்டால் உங்கள் பிரகடனம் போலத் தெரிகிறதே ? ‘’ என்றேன். ‘’ அப்படி உங்களுக்குத் தோன்றினால் சரியாகத்தான் இருக்கும்’’ என்று சிரித்தார். இன்று உங்கள் எழுத்துத்தான் உங்களை அர்த்தப் படுத்துகிறது அரவிந்தன்.

சென்ற மாதம்,  வழக்கப்படி இதழ் உருவாக்கப் பணிக்காக நாகர்கோவில் சென்றேன். அரவிந்தனும்  ஓரிரு நாட்கள் முன்புதான் சென்னையிலிருந்து திரும்பியிருந்தார். அவருடைய நீண்ட கால ஆசையான சொந்த வீடு என்ற கனவு ஈடேறிய நிறைவில்  இருந்தார். அதையொட்டி வளர்ந்த பேச்சின் இடையே ‘’நீங்கள் என் வீட்டுக்கு வந்ததில்லை. கட்டாயம்  புது வீட்டுக்கு வாங்க’’ என்றார். கடந்த புனித வெள்ளிக்கு மறுநாள் அவருடைய புது வீட்டுக்குப் போனேன். நண்பர் அரவிந்தனால் என்னை வரவேற்க முடியவில்லை.

சுகுமாரன்

தமிழில் எழுதி வரும் கவிஞர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர். இதழாசிரியராகவும் தொலைக்காட்சி செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். சுகுமாரன் தமிழ்ப்புதுக்கவிதையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

தமிழ்விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments உரையாடலுக்கு

  1. கட்டுரையின் இறுதி வரிகள் மனதை நெருடுகிறது… இலக்கியமும் இதழியலும் என்ற உங்கள் பார்வை திரு அரவிந்தன் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வியல் செய்தியாக அறியத் தருகிறது.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop