
கொந்தளிப்பை அளித்த ஓர் உறவின் சமயத்தில், பால் மெக்கார்ட்டினி, “ஒரேயிரவில் காணாமல் போய்விடக் கூடிய விரும்பத்தகாத இயல்பு காதலுக்கு உண்டென” தனது பாடல் ஒன்றில் எழுதினார்.
எனினும், ஒவ்வொரு முறையும், ஒரு புதிய காதல் தோன்றும்போது, அக்காதல் அளிக்கும் மலர்ச்சியை, கட்டுப்படுத்த முடியாத களிப்புணர்வை நாம் முன்னர் எப்போதும் அனுபவித்திராததைப் போல, தவிர்ப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்குமான தடுமாற்றங்களுடனும், ஒரு புதிய துயர் அளிக்கும் வலியை, வேதனையை அவை நமக்கு அறிமுகம் அற்றவைப் போலவும் கையாள்கிறோம்.
நமக்கு உதவ முடியாது என்று சொல்லக் கூடிய நமது அன்றாட மொழியை தயக்கமேயின்றிக் கைவிட்டு, நாம் சொல்ல விழைபவற்றின் அண்மைப்புள்ளிக்கு (Perigee) அருகேனும் செல்லக் கூடிய, தனிச்சிறப்பான மொழிகளான கவிதையை, கண்ணீரை, காதலையும், துயரையும் வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறோம். இவையிரண்டும் தாளவியலாமையின் உச்ச வடிவங்கள். புதிய படிமங்கள், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள், அன்பளிப்புகள், வித்தியாசமாகச் சேர்க்கப்படும் எமொஜிகள், ஓயாத அழைப்புகள், வலியுணர்த்தும் செய்திகள், வீங்கிய கண்களின் புகைப்படங்கள் வழியாகவும், நடைமுறை எதார்த்தம் முகங் கொடுத்தும் பார்க்காத செயல்களாலும் நமது தயக்கங்களை உடைத்து நாம் வெளிப்படுத்துவது காதல் மற்றும் துயரில் நம்மை அழுத்தும் நிறையற்ற எடையை.
இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும் நாம் வெளிப்படுத்தியவற்றில் நிறைவின்மையை உணர்ந்தால், இன்னும் சொல்லப்படாத உணர்ச்சிகளும் தணிந்து விடாத வலியும் எஞ்சியிருந்தால், நமது தொடர்புறுத்தலில் (Communication) அது ஓர் இயலாமையைச் சேர்த்து விடுகிறது. இது காதல் மற்றும் துயரில் மற்றொரு தவிப்பு. முதலில் நம்மால் வெளிப்படுத்தி விட முடியாத உணர்ச்சிகளின் தொகுப்பு. இரண்டாவது நமது இயலாமையினால் அடையக் கூடிய தளர்வும், பின்வாங்கலும். இறுதியில் இவை நம்மை நாம் விரும்பாத ஓர் அமைதியைப் பேணச் செய்கின்றன. நம்மால் கையாள முடிகின்றவற்றின் வரம்புகளை இதன் மூலம் அறிய வருகிறோம்.
எப்போதாவது, நமது ஆற்றலின் வரம்புகளை அல்லது எல்லைகளை நன்கு அறிந்த பிறகும், நம்மால் கையாள முடியாதவற்றோடு, அறிந்தும், அறியாமலும் நம்மை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறோம் (பெரும்பாலும் தோல்வியைத் தழுவுவோம்). இடர்களைக் கடந்து விடுகிற துணிவைப் பெற்றிருப்பதாக நம்பும் பொழுது, மீண்டும் ஒருமுறை காதலை ஏற்கவும், ஏற்கனவே துயரமளித்த ஒன்றைச் செய்யவும் முற்படுகிறோம்.
நம்மைத் தோல்வியுறச் செய்யும் ஒவ்வொன்றும் பெருஞ்சிறப்பான (momentus), ஏமாற்றமடையச் செய்கிற, இரகசியமாகப் பரிகசிக்கும் புன்னகை புரியக் கூடிய, அதே சமயம் பேரமைதியைத் தரக் கூடிய (சில வேளைகளில் நம்மை மெளனமாக்குகிற), தூரத்து நீலம் போல நடந்து கொள்கின்றன. நம்மோடு தொடர்புடைய ஆனால் நம்மால் அணுக முடியாத ஒரு பெரும் நினைவுச்சின்னத்தைக் கடப்பதைப் போல அவற்றைக் கடக்கிறோம். நமது தோல்விகள் நம்மை எல்லைகளுக்குள் இயங்கச் செய்கின்றன. அந்த தூர நீலத்தின் பரிகசிக்கக் கூடிய புன்னகையின் வசீகரம் காதலை நிரப்புகிறது.
போரில் தோல்வியுற்ற பிறகு, நீர் சுமக்கப் பணிக்கப்படும் தனது மகளை, கொல்லப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படும் தனது மகனைக் கண்டு எவ்வித சலனத்தையும் காட்டாத எகிப்து அரசர் சம்மெனிடஸ், கைதிகளின் நடுவே நடத்திச் செல்லப்படும் தனது நண்பரைக் கண்டு தாளாத துயரில் தலையில் அடித்துக் கொள்கிறார். வியப்படையும் பாரசீக அரசர் காம்பைஸஸின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
”கடைசித் துயர் மட்டுமே கண்ணீரால் வெளிப்படுத்த முடிவது, முதலிரண்டும் எவ்விதத்திலும் வெளிப்படுத்தும் ஆற்றலைக் கடந்தவை”
இவ்வாறு வெளிப்படுத்த முடியாமல் இருப்பதை நம்மால் பொருத்தமான எதிர்வினை ஆற்றவியலாமை எனக் கருதுகிறோம். அதிகம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லாத, எளிதில் தீர்த்துவிடக் கூடிய ஒரு துயருக்கு ஏன் அதிகமாக வேதனையுறுகிறோம்?, தவிர்த்திருக்க வேண்டிய, பொருத்தமில்லாத காதலில் அதீதமான ஈடுபாட்டையும், மதிக்கத்தக்க மற்றொரு காதலை ஏன் அசட்டையாகக் கையாண்டிருக்கிறோம்?
நம்மையும் அறியாமல், நாம் விசயங்களுக்கும், நபர்களுக்கும் அளிக்கும் மதிப்பின் பொருத்தமின்மை (கூடுதலாகவும், குறைவாகவும்) அல்லது வெளிப்பட்டு விடக் கூடிய நமது எதிர்வினையின் பொருத்தமின்மைக்குப் பின்னணியில் என்ன நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள சம்மெனிடஸின் கதை நமக்கு உதவுகிறது.

இன்மையைக் குறிப்பதைக் காட்டிலும், இருப்பவற்றை முழுமையாகக் கடத்தி விட முடியாத நெருக்கடி நம்மை அமைதியுறச் செய்கிறது என்பதை முன்பே பார்த்தோம். நாம் எப்போதும் நம்மை வெளிப்படுத்துவதில் துல்லியத்தை அடைந்ததில்லை. உயிர்ப்பு மிக்க மீதம் எப்போதும் நம்மில் எஞ்சியிருக்கிறது. இப்படி சேகாரம் ஆகும் உயிர்ப்பு மிக்க மீதம், ஏதோ ஒரு வகையில் புதிய காதலை உச்சமாகவும், நாம் எதிர்பார்த்திருந்த விடுவிப்பை நமக்கு அளிப்பதாகவும் கருதச் செய்கிறது. ஒரு புதிய துயரை வலிமை மிக்கதாகவும், அதனை கடப்பதில் நம்மைப் பொறுமையற்றவர்களாகவும் மாற்றுகிறது. எல்லா சமயங்களிலும் சரியாக நடந்தவர் என்று சொல்லத்தக்க வரலாற்றை உடைய ஒருவரும் இதுவரை பூமியில் பிறந்ததில்லை. நாம், நமது நிறைவுறாநிலைகளின் (imperfection) குழந்தைகள் என்பதால் வாழ்வின் எந்த இடத்திலும் நம்மால் நடனமாடாமல் நிற்க முடிந்ததில்லை.
“தம்மைச் சுவைக்கவும், செரிக்கவும் அனுமதிக்கக் கூடிய அனைத்துப் பேரார்வங்களும், நடுத்தரமானவை மட்டுமே” (All passions that allow themselves to be savoured and digested are only mediocre) – மிஷெல் து மான்டெய்ன். இந்தக் காதலும், துயரமும் என்னைக் கொல்கிறது என்கிற பதத்தை ஏன் நாம் பயன்படுத்துகிறோம்?. நம்மில் முரசொலித்து எழும் பூசலின் கூற்று இது. மரணித்தல் எனும் உச்சத்தை நமது நிலையைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்துவது ஏறக்குறைய ஓர் இறுதி வெளிப்பாடு. அதன் பிறகு நாம் பயன்படுத்தும் எந்தவொரு படிமமும் பொருட்படுத்தத்தக்க இடத்திலிருந்து நழுவிவிடுகிறது.
எங்கும் பகிரப்படும் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்றான, எது நம்மைக் கொல்வதில்லையோ அது நம்மை பலமடையச் செய்கிறது என்கிற நீட்ஷேவின் கூற்றையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம். எனது பேரார்வம், காதல் மற்றும் துயரால் நான் கொல்லப்படவில்லை என்றால், ஒருவரது நிலை, நலன், நற்பெயர் இவற்றைப் பணயம் வைக்கவும், உச்சமாக உயிரைக் கொடுக்கும் எல்லை வரை (literal and metaphorical), செல்லவில்லை என்றால் அந்தக் காதல் நடுத்தரமானது என்ற முடிவுக்கே என்னால் வர முடிகிறது. அழிவுக்கு ஓர் காவிய மேன்மையை காதலைத் தவிர வேறு எதுவும் தர முடியாது. ஏறக்குறைய தொண்ணூற்றி ஒன்பது சதவீத காதல்களும், துயரங்களும் நடுத்தரமானவை மட்டுமே, அவை வரம்புகளுக்குள் இயங்குவதோடு, காதலும், துயரங்களும், கடந்து செல்லத் தேவையில்லாத எல்லைகளுக்குள் தீர்த்துவிடக் கூடிய பண்பையும் கொண்டிருப்பதால், உச்சம் என்பதை எல்லாக் காதலர்களும் தங்களது நல்வாழ்வின் பொருட்டு நிரந்தரமாக இரத்து செய்து விடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு காதலரும், துயரை அனுபவிப்பவரும், தங்கள் காதலும் துயரும் அந்த மீதமுள்ள ஒரு சதவீதத்தில் அடங்கக் கூடியவை என எண்ணுவதையும் தவிர்க்க முடிந்ததில்லை.
ஒரேயிரவில் காணாமல் போய்விடக் கூடிய வாடிக்கை உடையது காதல் மட்டுமல்ல துயரும் கூடத்தான். துயரம், ஜீன்ஸ் காலணியைப் போல வெளுப்பதற்கு சற்று அதிக காலம் எடுக்க, காதல், ஞாயிற்றுக்கிழமை மாலைகளின் வேகத்தில் வெளுத்துவிடுகிறது.
ஆனால் நமது துயரமும், காதலும் நடுத்தரமானவை என்பதை நாம் நம்ப மறுக்கிறோம். அவற்றை மேன்மைப்படுத்தவும், அடர்த்தியைப் பெருக்கிக் காட்டவும் தவறுவதில்லை. வெகு சாதாரணமான ஒன்றையும் மேன்மைப்படுத்த விழையும் காதலின் செய்கை, உண்மையில் நமது உணர்வுகளுக்கு நாம் அளிக்கும் அங்கீகாரம். நாம் பிரதிபலிப்பவற்றைக் குறித்த கவலை அல்ல, மாறாக பிரிதிபலிப்புகளில் தோன்றக் கூடிய நம்மைக் குறித்த கவனமே ஒவ்வொரு முறையும் காதலை ஒரு வாய்ப்பாகப் பெற்று நம்மை புதுப்பிக்கச் செய்கிறது. ஆகவே தான் எல்லையற்ற அன்பையும், அக்கறையையும் அதிகமாக அள்ளித் தருகிறோம். நம்மைப் புதுப்பிக்கும் ஒரு காதலுக்கு, அதன் தன்மை, ஈடுபடும் நபர்களின் பொருத்தப்பாடு, சமநிலை, எதார்த்தம், இவற்றைக் கடந்த மதிப்பை நாம் அளிக்கிறோம். அது நாம் தவறவிட்டவற்றின், சொல்லாலும், செயலாலும் கடத்த முடியாமல் போனவற்றை வெளிப்படுத்த நமக்குக் கிடைத்த ஓர் இறுதிவாய்ப்பாகவும் பயன்படுத்துகிறோம் (நம்மையும் அறியாமல்). போலவே நமது புதிய துயரை இதுவரையிலும் நாம் அனுபவித்த வேதனைகளின் மொத்தத் தொகுப்பாகக் கருதுவதும்.
நாம் மற்றவருக்கு வழங்கும் அனைத்தும் நமக்கே வழங்கப்படுபவை. நாம் நம்மைத்தான் இன்னும் அதிகமாக, நுட்பமாக, அழகாக, வலிமிக்கவர்களாக நாம் புதிய காதலிலும், துயரிலும் வெளிப்படுத்துகிறோம். நான் என்னையே உன்னிடம் காண்கிறேன் எனச் சொல்ல முடிகிற வாய்ப்பை வழங்குகிற காதல், கூடுதல் மதிப்பைப் பெறுகிற தகுதியைப் பெற்று விடுகிறது.
எந்த சமயத்திலும் வெளிப்பட்டு விடக் கூடிய நமது உணர்வுகளின் தோற்றங்களை நாம் முன்பே வரைந்து விட முடியாதென்பதால் காதலிலும், துயரிலும் நீங்காத தடுமாற்றம் என்றென்றும் நிலவுகிறது. மவுத் வாஷ் பயன்படுத்தும் காதலின் மேன்மைப்படுத்தலிலும், தூக்க மாத்திரைகள் தேவைப்படாத துயரின் பலவீனத்திலும் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பின் ஒவ்வொரு முறையும் மான்டெய்னின் கூற்றை நினைவில் கொண்டு புதிய காதலையும், துயரையும் கடந்து விடலாம்.
ஒரு வகையில் தூர நீலத்தைப் போலவே நிறைவேறாத காதலும், கடக்கவியலாத துயரும் நடந்து கொள்வதால் அவற்றின் மதிப்பு குன்றுவதேயில்லை. அவற்றோடு ஒப்பிடும் போது அடைந்த காதல்களை, கடந்த துயர்களை அவை ஒருபோதும் நமது வரம்புகளுக்கு வெளியே இயங்காமல் இருப்பவை என்பதால் ஒரு பழகிய பூனையின் சீற்றத்தைத் தணிப்பதைப் போலத் தணிக்கிறோம்.
திறக்கப்படாத மின்னஞ்சல்களைத் திறக்கவும், செல்பேசியில் குவிந்த புகைப்படக் குவியலை, முன்பு கிளர்ச்சியூட்டிய செய்திகளை (messages) நிதானமாக அழிப்பதற்காக ஓர் இருக்கையில் அமரும் போது, ஆடைகளை மீண்டுமொரு கலைத்து அடுக்கி வைக்கும் போது, மறந்து விட்ட காப்பீட்டை புதுப்பிக்கும் போது, காதலும், துயரும் கடந்து விட்டிருப்பதை அறிவது சற்று ஏமாற்றமடையவும் செய்கிறது.
இவை அனைத்தையும் கடந்து நிற்கிற காதலும், துயரும் மிக அரிதானவை, பெரிய விலைகளைக் கேட்பவை. மீதமிருக்கும் ஒரு சதவீதத்தின் விலை, தொண்ணுற்றி ஒன்பது சதவீதத்தின் மொத்த விலையை விட அதிகம். அதுவே காதலின், துயரின் பொருளாதாரமும்.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பாலசுப்ரமணியன் பொன்ராஜ், புனைவாசிரியர். கட்டுரையாளர். “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை”, "சீமுர்க்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிற விட்கன்ஸ்டைனின் கூற்றும், முழு மகிழ்ச்சியை நம்மால் அனுபவிக்க இயலாது, இறந்துபோய்விடுவோம் என்ற பூக்கோவின் கூற்றும்தான் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கட்டுரையைப் படிக்கும்போது நினைவுக்கு வருகிறது. காதலும் அது கொடுக்கும் ஒளியும் பிரிவும் அது தரும் இருட்டும் பல்வேறு நிலைகளில் இதில் பதிவாகியுள்ளது. பாலா ஒரு கவிதையை செறிவாக எழுதியிருக்கிறீர்கள்…ஆனால், பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கட்டுரைகளில் அவர் ஆங்கிலத்தில் சிந்தித்து உள்ளே தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறாரோ என்று தோன்றுகிறது…பாலாவின் சிறுகதைகளில் அந்த தன்மை இல்லை…நல்ல உரைநடையாளரான பாலசுப்ரமணியன் பொன்ராஜ் அதைப் பொருட்படுத்த வேண்டும்…தமிழில் நமக்கு நம்புவதற்கு அதிகம் நபர்கள் இல்லை என்ற சுந்தர ராமசாமியின் கூற்றை துணைக்கழைத்துக்கொள்கிறேன் பாலா…கொஞ்சம் பரிசீலிக்கவும்…
உண்மைக் காதல் அல்லது உன்னதத் காதல் அந்த ஒரு சதவீதத்தில் தான் ஒளிந்திருக்கிறது…அதைக் கண்டுபிடிப்பவன் காதலின் கடவுளாகிவிடுவான்… அந்தக் காதலை மனிதன் உணர்ந்துகொள்ள அது மனிதகாதல் அல்ல…கட்டுரை காதலை அலசி காயப்போடுகிறது.