
இந்த அஞ்சலியை எழுதுவதற்குச் சற்று முன்பாகவும், WhatsApp செயலியில் நிஜந்தனுடைய இறுதிச் செய்தி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘ஓகே.. Sorry na’ என்ற வார்த்தைகள் 11.04.2026 தேதியிட்ட சனிக்கிழமைக்குக் கீழாக அந்தரத்தில் தொங்குவதைப்போலத் தோன்றுகின்றன. அப்போது அவனுக்கு மாலை 3.40 ஆக இருந்திருக்கும். அடுத்த நாள் அவன் உயிரோடு இல்லை.
நிஜந்தன் தோழன் என்ற பெயரையும் அந்த முகத்தையும் Facebook இல் நீண்டகாலமாகவே அங்கும் இங்குமாகக் கடந்து சென்றிருந்தாலும் இந்த வருடம், ஜனவரியில், சென்னைப் புத்தகக் கண்காட்சியில்தான் நாங்கள் நேரடியாகச் சந்தித்துக்கொண்டோம். ஒருநாள் அவன் தமிழினி அரங்குக்கு ஓரிரு நண்பர்களோடு வந்திருந்தான். நீண்டகாலமாகவே அறிமுகமான ஒருவனைப்போல கை கொடுத்தான். பேசினான். அஷேரா நாவலை அது வெளியான காலத்திலேயே படித்ததாகச் சொன்னான். ஒரு புகைப்படத்துக்காக அவனுடைய தோள்களை நான் அணைத்தபோது அவனது தேகம் ஒருவித நடுக்கத்தில் உதறிக்கொண்டே இருந்ததை பதைபதைப்போடு உணர்ந்தேன். அவனுடைய கைகளைப் பற்றிப் பிடித்திருந்தால், அது தணிந்துவிடுமென்ற எதிர்பார்ப்போடு பேசிப்பிரியும் வரை அவனைப் பற்றிக்கொண்டே நின்றிருந்தேன். எனக்கு அப்போது Schizophrenia வின் இருண்மையும் கொடுமையும் தெரிந்திருக்கவில்லை. இப்போதும் கூட.. வெளியிலிருக்கும் எவராலும் அதை உணர முடியாது. அன்றைக்கு இலக்கங்களைப் பரிமாறிக்கொண்டோம்.
அடுத்தநாள், எதிர் அரங்கில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அவனுடைய பிறழ் நாவலை வாங்கி, ஒரு ஒளிப்படம் எடுத்து அனுப்பி வைத்தேன். ஒரு நீல இதயத்தை பதிலுக்கு அனுப்பினான். இங்கே தான் நிற்கிறீகளா.. ஒரு கையெழுத்து வாங்கிக்கொள்கிறேன் என்று கேட்டபோது நான் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டேன், கொஞ்சம் பதட்டமாக இருந்தது என்றான்.
அன்றிலிருந்து நாங்கள் அடிக்கடி குறும்செய்திகளாகவும், குரல்செய்திகளாகவும் பேசத் தொடங்கினோம். ஒருவேளை உரையாடல்கள் அவனுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகின்றன என்றளவில் நான் புரிந்துகொண்டு அவன் எப்போது செய்தி அனுப்பினாலும், ஓர் உற்சாகமான பதிலை அனுப்பி வைப்பேன். உரையாடலை நீட்டிக்கும் கேள்விகளை கேட்பேன். அவன் நோய் பற்றிப் பகிர்ந்துகொண்ட போதெல்லாம் என்னுடைய ஆறுதல்வார்த்தைகள், உண்மையில் எனக்குத்தான் அமைதியைத் தந்திருக்கின்றன என்று இப்போது தோன்றுகிறது.
அவனுடைய பிறழ் நாவல் பரவலான கவனத்தைப் பெறத்தொடங்கியிருந்த காலம். நிறைய மகிழ்ச்சியாக இருந்தான். அது தீர்க்கமுடியாத நோய் என்பதை அக்காலங்களில் நான் அறியத்தொடங்கியிருந்தாலும் ஒருவேளை எழுத்து அவனை ஒரு புதிய பாதையில் கூட்டிச்சென்று மீட்கும் என்ற நம்பிக்கையும் வளர்ந்துகொண்டே இருந்தது. பிறழ் நாவல், அவனுடைய அவலமான கடந்தகாலத்தை எழுதிக் கடந்து, தாண்டிச் செல்ல வைக்கும் என்ற எதிர்பார்ப்பு அது.
நிஜந்தன் எழுத்து வாசிப்பு இலக்கியம் பற்றியே அதிகம் உரையாட விரும்பினான். போன வாரத்தில் ஒருநாள் ‘நீல கண்டப் பறவையைத் தேடி படிச்சுருக்கீங்களா’ என்று கேட்டான். ‘இல்லையே.. படிக்கணும்’ என்றபோது ‘படியுங்க, நல்லாயிருக்கும் என்று சொன்னான். அவ்வப்போது என்ன படிக்கிறீங்க என்று கேட்பான். சொல்வேன். WhatsApp Story இல் வைக்கும், படங்களைப் பற்றிக் கேட்பான். அவனுக்கு இன்னொரு புதிய நாவல் எழுதும் எண்ணம் இருந்தது. புத்தகங்களைப் பற்றிப் பேசுகிற ஒரு யூடியுப் ஆரம்பிக்கவும் விரும்பியிருந்தான். அவனுடைய எல்லாக் கேள்விகளுக்கும் எல்லா எண்ணங்களுக்கும் நீள நீளமாக குரல்செய்திகளை அனுப்புவேன். நோயின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளாத ஒரு குழந்தையைப் பராக்குக் காட்டுவதைப்போல என்னுடைய ‘குழந்தைத்தனமாக எத்தனங்கள்’ இருக்கின்றன என்று அவன் புரிந்துகொண்டிருக்கவும் கூடும்.
என்றாவது ‘காதில் வரும் குரல் மிகப் பயமுறுத்துகிறது’ என்று அவன் எழுதுவான். பதில் வார்த்தைகள் அற்ற அந்த உறைந்த மௌனத்தை ஒருவேளை அவனே புரிந்துகொண்டு ‘சீக்கிரம் சரியாகிவிடுவேன் என்று நம்புகிறேன்’ என்று சொல்வான். அப்போதெல்லாம் நான்தான் ஆறுதல் அடைந்திருக்கிறேன்.
சனிக்கிழமை, மதியம் நிஜந்தன் என்னை அழைத்தான். அப்போது வேலையில் இருந்தேன். நீண்டதொரு விடுமுறைக்கு பிறகான வேலை. பணி நெருக்கடி இருந்தது. அவனுடைய அழைப்பை ஏற்கவில்லை. அது ஓய்ந்ததும், ‘நிஜந்தன் கடுமையான வேலைப்பளு, நான் பிறகு கூப்பிடுகிறேன்’ என்று ஒரு குரல்செய்தியை அனுப்பினேன். ‘ஓகே.. Sorry na’ என்று பதில் வந்தது. அன்றைக்கு நான் திரும்ப அழைக்கவில்லை. அடுத்தநாள் அவன் இறந்துபோனான்..
இரவு அவனுடைய சாவுச் செய்தியை அறிந்தபோது, நான் பதில் அளிக்காத அவனுடைய இறுதி அழைப்பு, தாள முடியாத ஓர் அழுத்தத்தில் என்னை அலைவித்தது. நள்ளிரவு தாண்டி இரண்டு மூன்று மணியான பிறகும் விழித்திருந்தேன். எனக்கும் அவனுக்குமான உரையாடல்களைப் படித்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருந்தேன். மனம் கலங்கி நண்பர்களோடு பேசினேன். அவர்களில் ஒருவர், ‘இந்த மரணம், அவனுக்கான விடுதலை.. நீங்கள் அமைதியாகுங்கள்’ என்றார். காலையில் அவனுக்கான அஞ்சலிப் பதிவுகளில் அநேகர் இதைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அதை நம்புவதைவிட வேறு தெரிவுகள் இல்லை, இந்தத் துயரிலிருந்து நாம் விடுதலையடைய..
நிஜந்தன் என்றைக்குமே வாசிக்கமாட்டாத ஒரு செய்தியை நான் அவனுக்கு அனுப்பவேண்டும்.
‘நீங்க கடைசியாகப் படித்த ஏதாவது ஒரு புத்தகத்தைப் பற்றியோ, அல்லது வீரியமான மருந்துகள் மூளையின் இரசாயனச் செயற்பாட்டில் செலுத்தும் தாக்கம் பற்றியோ, நீங்கள் அனுப்பிவைத்த புதிய யூடியுப் தளத்தின் லோகோ பற்றியோ, காதில் கேட்கும் குரல்களைப் பற்றியோ, எதையோ சொல்ல அழைத்திருந்தீர்கள்.. அதை நான் ஒரு நிமிடமாவது காது கொடுத்துக் கேட்டிருக்க வேண்டும். குற்ற உணர்வாக இருக்கிறது. மன்னித்துக்கொள்ளுங்கள்..’

சயந்தன்
ஈழத்தமிழ் எழுத்தாளர். புலம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் வாழ்கிறார். ஈழப் போரிலக்கியத்தின் முக்கிய பிரதிகளான ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகிய நாவல்களின் ஊடாக வாசகர்கள் மத்தியில் பரந்த அறிமுகத்தைப் பெற்றார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















