மம்மர் அறுக்கும் மருந்து (6) : “சொற்கள் அம்பின் வலிமை பெறும்” : பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்:
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5

விஜயகுமார்: ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஆசிரியரின் சொல் பேச்சுக் கேட்பதில்லை. சிலர் இடையூறாகவும் இருக்கிறார்கள். பருவத்தில் ஏற்படுகிற கவன ஈர்ப்புக் கோளாறாகவும் இருக்கலாம்; தவிர அது பருவத்திற்கே உள்ள கோளாறு இல்லை எனும்போது இந்த மாதிரி நேரங்களில் மாணவர்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? ஆசிரியர் மாணவர் முரண் அங்கிருந்தே தொடங்குகிறது என்று தோன்றுகிறது.

பெருமாள்முருகன்: ஆசிரியர் சொல்பேச்சை ஏன் மாணவர் கேட்க வேண்டும்? ஆசிரியர் என்ன சொன்னாலும் மாணவர் கேட்டுக்கொள்ள வேண்டுமா? வகுப்பறையில் ஆசிரியர் சொல்பவராகவும் மாணவர் கேட்பவராகவும் இருக்க வேண்டும் என்னும் அமைப்பு முறை நிலவுவது சரிதானா? வகுப்பறை என்பது மாணவர்களைச் சமாளிக்கும் இடமா? ஆசிரியர் – மாணவர் என்றாலே அது முரண் உறவுதானா? மாணவருக்குப் பருவக் கோளாறு இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும் அது வெளிப்படும் இடம் ஏன் வகுப்பறையாக இருக்க வேண்டும்? அதைச் சமாளிக்க வேண்டியவர் ஆசிரியர்தானா? மனிதருக்குப் பல பருவங்கள் உண்டு. ஒவ்வொரு பருவத்திற்குமான கோளாறுகளும் இருக்கும்தானே? ‘நாற்பதில் நாய்க்குணம்’ என்கிறது தமிழ்ப் பழமொழி. நாற்பதுகளில் இருக்கும் ஆசிரியர் அப்படித்தான் இருப்பாரா? ஆசிரியர் எந்தப் பருவத்தில் இருக்கிறாரோ அந்தப் பருவத்திற்கான கோளாறு அவருக்கும் இருக்கலாம் அல்லவா?

வகுப்பறை குறித்தும் மாணவர் பற்றியும் பொதுப்புத்தியில் நிலவும் அபிப்ராயங்கள் அல்லது நம் சமூக விழுமியங்களைக் கொண்டு மோசமான ஆசிரியர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கருத்துக்கள் இவை என்றே நினைக்கிறேன். எனக்கு வகுப்பறை ஒருபோதும் கசந்தது கிடையாது. அது மகிழ்ச்சியான இடம். உற்சாகமான முகங்களைக் காணும் இடம். அறிவுப் பரிமாற்றம் நடக்கும் இடம். ஆற்றலைக் கூட்டும் இடம். உடன்பாடாக இன்னும் எத்தனையோ சொல்லலாம். ஆனால் வகுப்பறையைப் பற்றி இத்தனை எதிர்மறையான முன்னனுமானங்கள் எப்படி உருவாயின என்பது புரியவில்லை. வகுப்பறையில் கேள்வி கேட்கும் ஒருமாணவரைப் பற்றிய நம் எண்ணம் என்ன? அதிகப்பிரசங்கி, அடங்காதவர், துடுக்கு, தொந்தரவு என்று அவருக்கு எத்தனை பெயர்கள்! ‘பெரீய அறிவாளியா நீ?’ என்று கேட்கிறோம். ஏன் அறிவாளியாக இருக்கக் கூடாதா? வகுப்பறையில் கேள்வி கேட்கக் கூடாது என்றால் அதற்கான இடம்தான் எது?

நான் நாமக்கல் கல்லூரிக்கு இடமாறுதல் பெற்று 2001ஆம் ஆண்டு சேர்ந்தேன். இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமாண்டு வகுப்பில் கோபி என்றொரு மாணவன் இருக்கிறான், ரவுடி அவன், ரொம்பத் தொந்தரவு செய்வான், எச்சரிக்கையாக இருங்கள் என்று சக ஆசிரியர்கள் சொன்னார்கள். வருகைப் பதிவு எடுத்ததும் ‘கோபி, வெளியில போ’ என்று ஓர் ஆசிரியர் அனுப்பிவிடுவாராம். இன்னொரு ஆசிரியர் வகுப்புக்குள் நுழைந்ததும் ஒருபார்வை பார்ப்பாராம். கோபி உட்கார்ந்திருந்தால் ‘எந்திரிச்சுப் போ, அட்டண்டன்ஸ் குடுத்திர்றன்’ என்று சொல்வாராம். ‘அவனப் பாத்தாலே எனக்கு டென்சன் ஏறிரும்’ என்றார் ஓர் ஆசிரியர். இத்தனைக்கும் அவர் நன்றாகப் பாடம் நடத்துபவர், நவீன இலக்கிய வாசிப்பு உள்ளவர், எனக்கு நல்ல நண்பர், அவரால்தான் நாமக்கல்லுக்கே வந்தேன் நான். அவரே இப்படிச் சொல்கிறாரே என்றிருந்தது.

அந்த வகுப்புக்கு முதல்நாள் போனேன். அது முதற்பருவம் முடியப் போகிற தருணம். பருவத் தொடக்கமாக இருந்தால் ஒவ்வொரு மாணவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டுதான் பாடத்திற்குள் செல்வேன். பருவ இறுதி என்பதால் நேரத்தை வீணாக்க வேண்டாம் எனப் பாடத்திற்குள் சென்றுவிட்டேன். ஐந்து நிமிடம் நடத்தியிருப்பேன். கடைசிப் பெஞ்சில் இருந்து ‘ஐயா’ என்று குரல். ஒருகேள்வி. எப்போதும் கேள்வி கேட்பவர்கள் கடைசிப் பெஞ்சில்தான் இருப்பார்கள். அப்படித்தான் வைத்திருக்கிறோம். அவர் கேள்வி கேட்டதும் வகுப்பறையே சிரித்தது. அவர் தான் பிரபலமான ‘கோபி’ என்று அறிந்துகொண்டேன். நான் பெயரைக் கேட்கவில்லை. வித்தியாசமான முகபாவம் எதையும் காட்டவில்லை. ‘எதுக்குச் சிரிக்கறீங்க? அவரு நல்ல கேள்விதான கேட்டிருக்கறாரு’ என்று சொல்லிவிட்டு அவர் கேட்ட கேள்விக்கான விடையை விளக்கத் தொடங்கினேன்.

உண்மையில் என் ஐந்து நிமிட உரையை உற்றுக் கவனித்து உள்வாங்கி இருந்தால்தான் அந்தக் கேள்வி கேட்டிருக்க முடியும். நான் விளக்கத் தொடங்கியதும் வகுப்பறையே அமைதியாகிவிட்டது. ‘நல்ல கேள்விதான கேட்டிருக்கறாரு’ என்று நான் சொன்னதுதான் ஓர் ஆசிரியரிடமிருந்து அவருக்குக் கிடைத்த முதல் பாராட்டுப் போல. அடுத்தும் சில கேள்விகள் கேட்டார். நான் எதற்கும் அசரவில்லை. ஒவ்வொரு கேள்வியையும் பொருட்படுத்தி விளக்கம் சொன்னேன். வகுப்பறையில் சிரிப்பு மட்டுப்பட்டது. பாடத்தை ஆர்வமாக நடத்தவும் மேற்கொண்டு சங்கிலித் தொடர் போலக் கொண்டு செல்லவும் அவர் கேள்விகள் எனக்கு உதவின.

ஒருமாணவர் இடைவிடாமல் கேள்வி கேட்கிறார் என்றால், சேட்டை செய்துகொண்டே இருக்கிறார் என்றால் தம் மீது கூடுதல் கவனம் செலுத்தும்படி கோருகிறார் என்று அர்த்தம். அது பருவத்தில் வரும் கவன ஈர்ப்புப் பிரச்சினையாகவும் இருக்கலாம். கொஞ்சம் அதீதத்தன்மை (hyperactivity) கொண்டவராகவும் இருக்கலாம். ஆசிரியருக்கு வாய் மட்டும் இருந்தால் போதாது; காதுகள் வேண்டும். அவையும் முழுமையாகத் திறந்திருக்க வேண்டும். மாணவரைப் பொருட்படுத்துதல் அவசியம். அப்படிப்பட்ட மாணவருக்குக் கூடுதல் வேலைகளும் பொறுப்புகளும் கொடுக்க வேண்டும். வகுப்பறையை விட்டு வெளியே போ என்று கோபியை ஒருபோதும் நான் அனுப்பவில்லை. கல்லூரிக்கு வந்துவிட்டு என் வகுப்புக்கு வராமல் அவர் தவிர்த்ததும் இல்லை. ‘எங்கள் ஐயா’ நூலில் ‘என்றும் ஆசான்’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் இப்படிச் சொல்கிறார்: ‘…நான் கேட்கும் ஒவ்வொரு கேள்வியையும் பொருட்படுத்தி ஆழங்கால்பட்டுப் பல புதிய செய்திகளைக் கூறுவதால் அவர் என் வாழ்வில் மதிக்கத்தக்க நபராக நான் அறியாமலே மாறி இருந்தார்’ (எங்கள் ஐயா, ப.143).

பிறகு எனக்கு நெருக்கமான மாணவராகக் கோபி ஆனார். படித்து முடித்துச் சுயநிதிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்குப் போனார். அது புதிதாகத் தொடங்கிய கல்லூரி. ‘கலைக்கல்லூரிக்கு வரும் மாணவர்கள் எல்லாம் நிறையச் சேட்டை செய்வார்கள். அவர்களை எப்படி நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள்?’ என்பது நேர்காணல் கேள்வி. கோபி சொன்ன பதில் என்னவாக இருக்கும்?

‘நான் அரசு கலைக்கல்லூரியில் பயின்றவன். அரசு கல்லூரி மாணவர்களைப் பற்றிப் பொதுவெளியில் எத்தகைய அபிப்ராயம் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். எல்லா மாணவர்களும் அப்படி இல்லை என்றாலும் நான் அப்படித்தான் இருந்தேன். என் வகுப்புக்கு இரண்டாமாண்டில் ஓர் ஆசிரியர் வந்தார். அவர் காட்டிய அணுகுமுறையால் தான் நான் இப்போது இங்கே வந்து நிற்கிறேன். அந்த அணுகுமுறையையே நானும் கடைபிடிப்பேன்.’

கோபிக்கு அக்கல்லூரியில் வேலை கிடைத்தது. பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வெழுதி முதுகலைத் தமிழாசிரியரானார். இப்போது மகன், மகள் எனக் குடும்பத்துடன் அருமையாக வாழ்கிறார். இன்றும் ‘டேய் கோபி’ என்றுதான் அழைக்கிறேன். எதற்காகவாவது ‘வா’ என்று அழைத்தால் உடனே வந்து நிற்பார். ரவுடி என்று பட்டம் கட்டிப் பிற ஆசிரியர்கள் ஒதுக்கிய மாணவர் அவர். என்னிடம் ஏன் இத்தனை பாசம்? அவரை நான் அங்கீகரித்தேன். அவர் திறமையை அவருக்குக் காட்டித் தந்தேன். அவ்வளவுதான்.

என்னைப் பற்றிப் பீற்றிக்கொள்ள இதைச் சொல்லவில்லை. பொதுவாக ஆசிரியர்களின் அணுகுமுறை பொதுப்புத்தி சார்ந்ததாகவும் அதிகாரம் மிக்கதாவும் இருக்கிறது. அது மாற வேண்டும். ஆசிரியர் பணி என்பது பதவி அல்ல. நீங்கள் மாயப்பீடத்தை உருவாக்கிக் கொண்டு அதிலே வீற்றிருந்தால் மாணவர்களை நெருங்க முடியாது. மாணவர்களை அணுகுவதற்கு அன்பும் அக்கறையும் இருந்தால் போதும்.

வி: சொல்பேச்சு கேட்காத, உத்தரவுக்கு கீழ்படியாத, வகுப்பிற்கு தொந்தரவாக இருக்கும் மாணவர்கள் மீது ஒரு பழிவாங்கல் உணர்ச்சி தோன்றுகிறது. ஆசிரியர்கள் இதை எப்படி வெல்வது? இங்கு பன்னிரண்டாம் வகுப்பிலேயே, செய்முறைத் தேர்வில் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆசிரியர் பழிவாங்கலைக் குறித்துப் பேச வேண்டி இருக்கிறதே?

பெமு: நான் முன்சொன்னதன் நீட்சியாகவே இதற்கும் பதில் சொல்ல முயல்கிறேன். ஆசிரியர் அதிகாரம் செய்தால் மாணவர்கள் அதற்கு எதிராகத்தான் இருப்பார்கள். நாம் எதைச் செய்ய வேண்டாம் என்கிறோமோ அதைக் குழந்தைகள் செய்வார்கள். ஒழுக்கக் கோடுகளைப் போட்டு வைத்து அவற்றை மீறக் கூடாது என்று பதின்வயதுப் பிள்ளைகளுக்குச் சொன்னால் மீறிப் பார்க்கலாமே என்று நினைப்பார்கள். விதிகள், கண்காணிப்பு, தண்டனை எல்லாம் அரசதிகாரப் படிநிலைகள். அவற்றையே ஆசிரியரும் பின்பற்றினால் எப்படி? கற்பித்தலும் வழிப்படுத்தலுமே ஆசிரியப் பணியின் கூறுகள் என்று கருதுகிறேன். நெடுங்காலம் கல்வி வாசனையே இல்லாத சாதிப் பிரிவுகளில் இருந்து முதல் தலைமுறையாக மாணவர்கள் உயர்கல்வி நிறுவனப் படியேறி வரும் நம் சமூகத்தில் கற்பித்தலை விடவும் வழிப்படுத்துதலில் ஆசிரியர் பெருங்கவனம் செலுத்த வேண்டும். அதட்டி மிரட்டி அச்சுறுத்தி அதிகாரம் செய்து வழிப்படுத்துதல் அல்ல. அது வழிப்படுத்தும் முறையே அல்ல. அதற்கு எதிரானது.

கொஞ்சம் அன்பு காட்டுங்கள். அவர்கள் மீது சிறிதேனும் கருணை வையுங்கள். அப்போது அவர்களைப் புரிந்துகொள்ளலாம். ஒருமாணவர் வகுப்பறையில் தூங்குகிறார் என்றால் உடனே ‘கொழுப்பு’ என்று ஆசிரியர் நினைக்கிறார். தன் கற்பித்தலுக்கு மாணவர் புரியும் எதிர்வினை என்று நினைத்துக் கோபம் கொள்கிறார். அப்படியே இருந்தாலும் மாணவர் மேல் ஏன் கோபிக்க வேண்டும்? தம் கற்பித்தல் முறை மீதுதானே சந்தேகம் வர வேண்டும்?

அப்படி யாராவது தூங்கினால் இரண்டாம் ஆட்டம் திரைப்படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் என்று என் காலத்து ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். இக்காலத்தில் இரவெல்லாம் விழித்து ரீல்ஸ் பார்த்துவிட்டு வகுப்பறையில் வந்து தூங்குகிறார் என்று முடிவு செய்கிறார்கள். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதுதான் என்று எப்படி முடிவு செய்வது? இரவில் ஒருவேலைக்குப் போய்விட்டு வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது அல்லவா? ஆத்தூர் அரசு கல்லூரி மாணவர் பலர் இரவில் சேகோ பேக்டரி (ஜவ்வரிசி ஆலை) வேலைக்குச் சென்றுவிட்டு விடிகாலை வந்து கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து தூக்கம் கலையாத முகத்துடன் அவசர அவசரமாகக் கல்லூரிக்கு வருவார்கள். வெயில் காலத்தில் மும்முனை மின்சாரம் கிராமத்தில் சரியாக வராது. இரவில் தான் வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். அப்படி நீர் பாய்ச்சும் வேலை பார்த்துவிட்டு வகுப்புக்கு வரும் மாணவர்கள் இருப்பார்கள். முகூர்த்த நாட்களில் பந்தி பரிமாறும் வேலைக்குச் சென்று விட்டு வகுப்புக்கு வருவார்கள்.

சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஒன்றரை ஆண்டு வேலை செய்தேன். அங்கு பயிலும் மாணவர் பலர் இரவில் ஆட்டோ ஓட்டவோ உணவுப்பொருட்களைக் கொண்டு சென்று கொடுக்கவோ இரவு நேர உணவகத்தில் பரிசாரகராகவோ வேலை செய்வார்கள். காய்கறி வியாபாரம் செய்யும் பெற்றோருக்கு விடிகாலை எழுந்து போய் உதவி செய்துவிட்டு வருவோர் உண்டு. அப்படியானவர்கள் தம்மையும் அறியாமல் அசதியில் தூங்கி விடலாம். அப்படி யாராவது தூங்கினால் எழுப்ப வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். திட்டமிட்டு இதைச் செய்வதில்லை. அனிச்சையாக நடக்கும் செயல். அதற்கு ஏன் கோபப்பட வேண்டும்?

மாணவர்களின் பின்னணியைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், பிரச்சினையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் ஆசிரியரின் அணுகுமுறை தவறாகிவிடும். பள்ளியில் ‘செய்முறைத் தேர்வில் பார்த்துக் கொள்கிறேன்’ என்று மிரட்டுவது போல உயர்கல்வியில் இப்போதெல்லாம் ‘அகமதிப்பீட்டுத் தேர்வில் பார்த்துக் கொள்கிறேன்’ என்றோ ‘வருகைப்பதிவுக்கு என்னிடம்தானே வர வேண்டும்’ என்றோ மிரட்டுகிறார்கள். அவற்றை எல்லாம் பழிவாங்கும் ஒருவழிமுறையாக ஆசிரியர் வைத்துக்கொள்வது பெருந்தவறு. ஆசிரியருக்குப் பழிவாங்கும் எண்ணமே கூடாது. நம் முன் இருப்பவர்கள் பதின்வயதுப் பிள்ளைகள். இனிமேல்தான் வாழ்வில் கால் பதிக்கப் போகிறவர்கள். அவர்கள் மனமலர்ச்சி பெற்று வாழ்வுக்குள் நுழைய ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்; உதவ வேண்டும்.

ஆசிரியர் தம் அதிகாரம், கோபம், அகங்காரம் ஆகியவற்றைப் புரிதலோடு கடக்க வேண்டும். நான் மீண்டும் மீண்டும் சொல்வது போல நம் சமூக அதிகாரம் என்பது சாதிப் படிநிலையிலிருந்து வருவது. சக மனிதரை வேறொருவராக, தமக்குக் கீழானவராகக் காணும் மனோபாவம் எல்லோருக்குள்ளும் இயங்குகிறது. பிறரைக் கீழே வைத்துப் பார்ப்பதற்கு எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ எப்போதெல்லாம் சந்தர்ப்பம் அமைகிறதோ அங்கெல்லாம், அப்போதெல்லாம் அந்த அதிகாரத்தைக் கையிலெடுக்கிறோம். ஆசிரியருக்கு அதிகாரம் பற்றி, சாதி பற்றியெல்லாம் அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளை நம் கல்விமுறையிலும் பயிற்சிகளிலும் ஏற்படுத்த வேண்டும். சாதியையும் அதிகாரத்தையும் கடப்பதற்கு அவற்றைப் பேசாமல் தவிர்ப்பது வழியல்ல. அவற்றைப் பொருட்படுத்திப் பேச வேண்டும். விவாதிக்க வேண்டும்.

ஆசிரியருக்குக் கோபமே வரக் கூடாதா, மாணவர் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டுமா, பழிவாங்கும் உணர்ச்சியே வரக் கூடாதா, ஆசிரியரும் மனிதர் தானே என்றெல்லாம் கேட்கலாம். அவையெல்லாம் வரக் கூடாது, இருக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. வரும், இருக்கும். அவற்றை நம் கல்வியாலும் சமூகம் பற்றிய புரிதலாலும் கடக்க வேண்டும்.

வி: மாணவர் செய்யும் சேட்டைகளால் உங்களுக்குக் கோபமே வந்ததில்லையா? கோபம் வந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?

பெமு: கோபம் வராமல் எப்படி இருக்கும்? மனிதர்களுக்குப் பொதுவான உணர்ச்சிதானே கோபம்? என் கோபம் மாணவர்களிடம் பிரசித்தம். என்னைக் கோபப்படுத்தும் செயல்கள் எவை என்பதை அறிவார்கள். அவற்றைத் தவிர்ப்பார்கள். அப்படியேதும் செய்துவிட்டால் என் காதுக்கு வந்துவிடாமல் தடுக்கப் பார்ப்பார்கள். எனக்குத் தெரிந்துவிட்டால் வந்து மன்னிப்பு கேட்பார்கள். என்னைப் பார்க்கவே வரக் கூடாது என்று கோபத்தால் சிலரை விரட்டியிருக்கிறேன். சிலரது கைப்பேசி எண்ணைத் தடை செய்ததும் உண்டு. சிலரிடம் பேச்சை நிறுத்தியும் இருக்கிறேன். ஆனால் தாயைத் தேடும் கன்று போல மீண்டும் மீண்டும் என்னைத் தேடி வரும்போது என்ன செய்ய முடியும்?

நான் ஆத்தூரில் பணியாற்றிய போது மணிகண்டன் என்னும் மாணவன் என்னுடன் தங்கியிருந்தான். என் மகனைப் போல அவனைப் பாவித்தேன். அவன் செயல்கள் சில எனக்கு உவப்பில்லாத போது அருகிலேயே வரக் கூடாது என்று விரட்டிவிட்டேன். நாமக்கல்லுக்கு வந்து பொ.வேல்சாமியைப் பார்த்து அழுது அவர் பரிந்துரை செய்தும்கூட என் மனம் இரங்கவில்லை. காலம் எல்லாவற்றையும் ஆற்றுகின்றதே. பிறகு அவனிடம் பேசினேன். திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்து என்னைப் பார்க்க அஞ்சிக் குழப்பத்தில் எங்கள் வீதி முனையிலேயே ஒருமணி நேரத்துக்கும் மேலாக நின்ற மாணவர் உண்டு. தகவல் அறிந்து வீட்டுக்கு அழைத்தேன். பெற்றோரின் கோபம்கூட வாழ்நாள் முழுக்க மாறாமல் இருக்கக் கூடும். ஆசிரியரின் கோபத்திற்கு ஆயுள் குறைவு.

எப்போதோ என்னிடம் பயின்று சென்றவர்கள் இப்போதும் நான் கோபித்துக் கொள்வேன் என்று பயப்படுவார்கள். அதற்குக் காரணம் என் கோபம் நியாயமானதாக இருக்கும். என் வழிகாட்டலைத் தொடர்ந்து புறக்கணித்துக் கஷ்டப்படுபவர்கள் மேல் கோபப்படாமல் இருக்க முடியுமா? தகாத செயல்களில் ஈடுபட்டால் கோபம் வரத்தானே செய்யும்?

வி: வகுப்பு நடத்தும் போது மாணவர் செய்யும் சேட்டைகளைக் கண்டு கோபம் வந்தால் என்ன செய்வீர்கள்? அதை எப்படிக் கடப்பீர்கள்?

பெமு: பலமுறைகள் உள்ளன. ஒன்றைச் சொல்கிறேன். ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ என்று புத்தகம் எழுதியிருந்தாலும் நான் அதிகம் கெட்ட வார்த்தை பேசுபவன் அல்ல. சில சந்தர்ப்பங்களில் என்னை அறியாமல் வார்த்தைகள் வரும். குறிப்பிட்ட சிலவற்றையே திரும்பத் திரும்பச் சொல்வேன். பெரும்பாலான கெட்ட வார்த்தைகள் பெண்களை இழிவுபடுத்துவதாக இருப்பதால் உணர்வுப்பூர்வமாக அவற்றைத் தவிர்ப்பதுண்டு. கோபத்தில் மாணவர்களிடம் அரிதாகப் பேசிய சொற்கள் நல்விளைவை ஏற்படுத்தியதும் நடந்திருக்கிறது.

நாமக்கல் கல்லூரிக்கு 2001ஆம் ஆண்டு இடமாறுதலில் வந்து பணியில் சேர்ந்தபோது முதலாண்டு வகுப்புக்குச் சென்றேன். தமிழ்ப் படிக்கச் சேர்ந்திருந்தாலும் சிலருக்கு இந்தப் பாடம் பற்றியும் இதை நடத்தும் ஆசிரியர் பற்றியும் ஏளனமான பார்வை மாறுவதில்லை. தமிழாசிரியர் கேலிக்குரியவர் என்று கருதும் பொதுப்புத்தியில் இருப்பார்கள். அவ்வகுப்பில் ஒருமாணவர் சேட்டை செய்பவராக இருந்தார். இன்னது என்றில்லை. பிறருடன் பேசுவது, இடையில் தொடர்பில்லாமல் சிரித்துக் கத்துவது, ஏளனப் பார்வையுடன் எதையாவது கேட்பது என்று அவர் செய்யும் தொந்தரவு தொடர்ந்தது. மாணவர் கவனம் நான் நடத்தும் பாடத்தில் இருக்கும்போது இப்படி ஏதாவது சேட்டை செய்து தம் பக்கம் ஈர்த்துவிடுவார். வகுப்பின் ஒருமை கலைந்து போகும். சில நாட்கள் சமாளித்துப் பார்த்தேன். வழிக்கு வருவார் என்று நினைத்தது நடக்கவில்லை.

ஒருமுறை வகுப்பு முடியும் நேரத்தில் அப்படிச் சேட்டை செய்தபோது என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. வழக்கமாக மாணவர்களை ‘வாப்பா, போப்பா’ என்று அழைக்கும் நான் ஒருமையில் ‘உம் பேரென்ன?’ என்று கோபமாகக் கேட்டேன். ஆசிரியர் நினைவில் தம் பெயர் பதியக் கூடாது என்றுதான் மாணவர்கள் நினைப்பர். பதிந்தால் ஏதாவது பழிவாங்கும் செயலில் ஈடுபடுவார் என்று பயம். ஆகவே பெயர் கேட்பதும் அச்சுறுத்தும் ஒரு உத்தி. நான் பெயர் கேட்டதும் அம்மாணவரின் தொனி இறங்கிவிட்டது. மெல்லிய குரலில் பெயரைச் சொன்னார். ‘ஓ… அதான் சேட்ட அதிகமா இருக்குது. உம்பேருக்கு அர்த்தம் தெரீமா?’ என்றேன். அவர் குழப்பமாக என்னைப் பார்த்தார். ‘ம்’ என்று எச்சரிக்கும் வகையில் தலையை அசைத்துவிட்டு வெளியேறினேன்.

அடுத்த மணி நேரம் எனக்கு வகுப்பில்லை. அம்மாணவரின் நடத்தையால் ஏற்பட்ட கோபத்தையும் வருத்தத்தையும் போக்கிக்கொள்ள உணவகம் சென்று தேநீர் அருந்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டு என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். ஆசிரியர் அறையில் என்னைத் தவிர யாருமில்லை. தயங்கியபடி அந்த மாணவர் வந்தார். பார்த்ததும் கோபம் மிகுந்தது. ‘வாடா… பெரிய சுண்ணி’ என்றேன். அவர் திடுக்கிட்டு என்னைப் பார்த்தார். ‘ஆமா… அதுதான் உம்பேருக்கு அர்த்தம்’ என்றேன். அன்றைக்கு அடங்கிய அம்மாணவர் பிறகு ஒருபோதும் வகுப்பில் தொந்தரவு தரவில்லை. என் வீட்டுக்கும் வந்தார். அன்போடு பழகினார். மேற்படிப்புக்குச் சென்றார். முனைவர் பட்டம் முடித்து இப்போது சுயநிதிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

அதே போல ஆத்தூர் கல்லூரியில் ஒருமாணவர். எல்லா ஆசிரியர்களும் அவர் மேல் புகார் தெரிவித்தனர். வகுப்பில் விதவிதமாகத் தொந்தரவு தந்து கொண்டிருந்தார். மாணவர் ஆடை பற்றி நான் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அவர்கள் விருப்பம், புதிய போக்கு ஆகியவை ஆடையில் பிரதிபலிக்கும். அரசு கல்லூரிகளில் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என்னும் விதி ஏதும் இல்லை. பொதுவாக ‘நாகரிகமான ஆடை அணிந்து வர வேண்டும்’ என அவ்வப்போது அறிவுறுத்தல் வரும். எங்கள் மாணவர்கள் பெரும்பாலும் சலவை செய்த ஆடைகளை அணிந்து வர மாட்டார்கள். சாதாரண ஆடைகள்தான். அம்மாணவர் சட்டையின் முதலிரு பொத்தான்களைப் போடுவதேயில்லை. ஒருபொத்தான் போடாமல் இருப்போர் பலர். இவரோ இருபொத்தான். பனியன் போடுவதும் இல்லை. நெஞ்சு முழுக்கத் தெரியும். வயிற்றுக்குத்தான் சட்டை மறைப்பு. திறந்த மார்போடு பெஞ்சில் ஒருமாதிரி சாய்ந்து கொண்டு சம்பந்தம் இல்லாமல் பேசுவது, ஆசிரியருக்குக் கேட்காத வகையில் கமெண்ட் அடித்துச் சக மாணவர்களைச் சிரிக்க வைப்பது என்று எதையாவது செய்வார். தெனாவெட்டு, திமிர், கொழுப்பு என்றெல்லாம் ஆசிரியர்கள் சொன்னார்கள். அந்த வகுப்புக்கு நான் செல்லவில்லை. ஆகவே அவர் சேட்டைகள் பற்றித் தெரியவில்லை. சென்றிருந்தால் அவரை வழிக்குக் கொண்டு வருவது பெரிய காரியமில்லை. அப்போது துறைத்தலைவராக இருந்தேன். ஆகவே ஆசிரியர்களின் புகாருக்குக் கவனம் கொடுக்க வேண்டியிருந்தது.

அன்று முதல்மணி நேரம் முடிந்து இரண்டாம் பாடவேளை தொடங்கிக் கொஞ்ச நேரம் கழித்து அருகிலிருந்த உணவகத்திற்குச் சென்றேன். அப்போதுதான் அம்மாணவர் வந்து கொண்டிருந்தார். எனக்கு வணக்கம் சொன்னார். ஆசிரியர்களிடம் பேசுவதற்குத் தயங்குபவர் அல்ல. ‘ஐயா, எனக்கு டீ இல்லையா?’ என்றார் ஒருமாதிரி சிரித்துக்கொண்டு. நான் வாங்கித் தர மாட்டேன் என்று நினைத்திருக்கலாம். ‘வா, குடிக்கலாம்’ என்று அழைத்துப் போனேன். என் பொறியில் மாட்டிக் கொண்டதை அறியாமல் ஆவலாக வந்தார். பணம் கொடுத்துவிட்டு வெளியிலிருந்த மரத்தடியில் நின்றேன். ஆளுக்கொரு வடை வாங்கி வந்து தந்தார். என்னிடம் கேட்காமல் வடை வாங்கிய பெருமை முகத்தில் மிளிர்ந்தது. பிறகு போய்த் தேநீர் வாங்கி வந்தார்.

அருந்திக் கொண்டே இருபொத்தான் திறந்திருந்த மார்பைப் பார்த்து ‘மார்பழகனா நீ?’ என்றேன்.

‘ஆமாங்கையா’ என்று சிரித்தார்.

‘ஓ…பனியன் போடற பழக்கம் இல்லையா?’ என்றேன்.

‘இல்லீங்கையா’ என்றார் தலையசைத்துக் கொண்டு.

தேநீரைப் பாதி குடித்திருந்தார்.

‘ஜட்டி போடுவியா? அதும் இல்லியா?’ என்றேன்.

அவர் அசரவில்லை. சேட்டைக்கார மாணவர்களின் இயல்பு அது. அவர்களைப் பற்றி நாம் என்ன சொன்னாலும் மறுப்பதில்லை. அது சரிதான் என்று ஏற்றுக்கொண்டு பேசுவார்கள். என் கேள்விக்கு அசட்டையாகப் ‘ப்ச்’ என்று சப்புக் கொட்டிவிட்டு மரத்தை அண்ணாந்து பார்த்து ‘அந்தப் பழக்கமேஎ கெடையாதுங்கையா’ என்றார் தலையை நிமிர்த்தியபடி.

‘அப்பிடியா? பனியன் இல்லீனாப் பரவால்ல. ஜட்டி போடலீனா எப்பிடீடா?’ என்றேன்.

‘ஏங்கையா?’ என்றார்.

‘வாலிப வயசு உனக்கு. காலேஜ்க்கு வர்ற வழியில மனசுல என்னமோ ஒரு நெனப்பு வந்து டபக்குன்னு சுண்ணி எந்திரிச்சு நின்னுக்கிடுச்சுன்னு வெச்சுக்க. என்னடா பண்ணுவ?’ என்றேன்.

நான் சிரிக்கவில்லை. அவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘போங்கையா’ என்று வெட்கத்தோடு தலையைக் குனிந்துகொண்டே ஓடித் தேநீர் டம்ளரை வைத்தார். என் பக்கம் திரும்பாமலே வகுப்பை நோக்கி ஓடிப் போனார். அடுத்த மணி நேரம் என்னைப் பார்க்க வந்து தலைகுனிந்தபடி நின்றார். ‘என்ன?’ என்றேன். ‘இத யாருகிட்டயும் சொல்லாதீங்கையா. கேவலப்படுத்திருவாங்க’ என்றார். ‘செரி, இப்பச் சொல்ல மாட்டன் போ’ என்றேன்.

அதன் பிறகு எப்போது என்னைப் பார்த்தாலும் அவருக்கு வெட்கம் தாளாது. சிரிப்புடன் வேறுபுறம் திரும்பிக் கொண்டு ஓடியே போவார். சட்டைப் பொத்தானில் ஒன்று ஏறிற்று. வகுப்பில் சேட்டையில்லை. ஆசிரியர்கள் எல்லாம் ‘என்னங்கையா செஞ்சீங்க?’ என்றார்கள். ‘ஒரு மந்திரம் போட்டன்’ என்று மட்டும் சொன்னேன்.

சொற்களைத் தேர்ந்து பயன்படுத்தினால் அவை அம்பின் வலிமை பெறும். சந்தர்ப்பம் சார்ந்து பயன்படுத்தினால் இலக்கைச் சரியாகச் சென்று தைக்கும்.

தொடரும்…

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss