காலத்தின் ஒழுங்கும் நினைவுகளின் அடர்த்தியும் : செந்தூரன் ஈஸ்வரநாதன்

எழுத்தாளர் அரவிந்தன் (1964 - 2026)

நல்ல எழுத்தாளுமைகள்  சிறந்த படைப்புகளைத் தருவதோடு கடமை முடிந்தது என ஒதுங்கிவிடுவதில்லை; தங்களுக்குப் பின்னால் ஒரு தலைமுறையை உருவாக்கிவிட்டுச் செல்கிறார்கள். அந்த வகையில், தமிழ்ப் படைப்புலகிலும் என் தனிப்பட்ட வாழ்விலும் நினைவுகளின் வழியாக தொடரும் நிழலாக மாறிவிட்டிருக்கிறார் அரவிந்தன். 

தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் அரவிந்தனின் பங்களிப்பு செறிவானது. 35 ஆண்டுக் காலம் இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணி செய்தவர். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். சுமார் 40 சிறுகதைகள் ‘பயணம்’, ‘பொன்னகரம்’ ஆகிய இரண்டு நாவல்கள் மூலம் தமிழ்ச் தமிழ்ச் சூழலில் நன்கு அறியப்பட்டவர். குறிப்பாக, ‘குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது’ என்ற சிறுகதைத் தொகுப்பு, என் வாசிப்பில் என்றும் நிலைத்திருக்கக்கூடிய படைப்பு. மனித மனங்களின் அசைவுகளையும், அன்றாட வாழ்வின் தருணங்களையும் மிக இயல்பும் நேர்த்தியான சொற்கட்டிலும் அந்நூல் கடத்தியது. 

அரவிந்தனின்  படைப்பாற்றல் புனைவோடு நிற்கவில்லை; உலக இலக்கியங்களை அதன் ஆன்மா கெடாமல் தமிழுக்குக் கொண்டு சேர்த்ததில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு. ‘ராணியுடன் ஒரு தேநீர் விருந்து’, ‘உன் கதை என் கதை’, ‘மரணத்தின் கதை’, ‘செபஸ்டியானின் குடும்பக் கதை’, ‘பால சரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ போன்ற நூல்கள் அவரின் மொழிபெயர்ப்புத் திறனுக்கும், அயராத உழைப்பிற்கும் சான்றுகள். மூலப்படைப்பின் நடையையும் தீவிரத்தையும் தமிழ் வாசகர்களுக்கு அணுக்கமாகக் கொண்டுசேர்த்ததில்  தேர்ந்த கலைஞராகத் தன்னை மாற்றிக்கொண்டவர். 

அரவிந்தனுடனான உறவு ஏறத்தாழ 2012இல் தொடங்கியது. அப்போது எஸ்.பொவின் ‘மித்ர’ பதிப்பகத்தில் பகுதிநேரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அரவிந்தன் ‘சென்னை நம்ம சென்னை’ இதழ் சார்பாக அவர் நடத்திய செம்மையாக்கப் பயிற்சிப் பட்டறைதான் அவரோடான தொடர்பின் முதல் புள்ளி. தொலைபேசியில் அழைத்து, ‘நானும் கலந்துகொள்ளலாமா’ எனக் கேட்டபோது, எவ்விதத் தயக்கமுமின்றி ‘தாராளமாகக் கலந்து கொள்ளலாம்’ என்று அவர் தந்த வரவேற்பு மாறாத நினைவாகிவிட்டிருக்கிறது.  

பதிப்புத்துறையில் மொழியை எப்படிக் கையாள வேண்டும், வாக்கியத்தை எப்படிக் கச்சிதமாக்க வேண்டும் என்கிற எழுத்து ஒழுங்கை அவரிடமிருந்து கற்கத் தொடங்கினேன். வார்த்தைகளைச் சீரமைப்பதில் அவருக்குத் தீர்க்கமான பார்வை இருந்தது. தேவையற்ற சொற்களைக் களைந்து, மூலப் படைப்பாளியின் தனித்துவமான மொழியை முடிந்தவரை சிதைக்காமல் அனுமதிக்கும் கலை  கைவந்திருந்தது. “வாக்கியத்தைச் சுருக்குவது என்பது அதன் கருத்தைச் சிதைப்பதல்ல; மாறாக, அந்தக் கருத்தைச் சிதறாமல் வாசகரிடம் கொண்டுசேர்ப்பது” என்பதில் உறுதியாக இருந்தவர். 

செம்மையாக்குநர் எந்த விதத்திலும் எந்தப் படைப்புக்கும் உரிமை கோரக் கூடாது; நம் வேலை எழுத்தாளருக்கு வாசகருக்குமான பாலமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர். மொழியின் இலக்கணச் செறிவையும், நவீன தேவையையும் இணைக்கும் புள்ளியாகவும் திகழ்ந்தவர். இதற்கு ஆதாரமாக அவர் எழுதிய ‘ஒரு சொல் கேளீர்’ என்ற நூல் இன்றும் பல இளம் இதழாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பாடப்புத்தகமாகவே விளங்கக்கூடியது. வாக்கியத்தின் கனத்தையும், சொல்லின் தேர்வையும் அவர் கையாண்ட விதம் முக்கியமானது. 

2014இல் நான் காலச்சுவடு இதழில் சேர்ந்தபோது, அவருடனான தொடர்பு இன்னும் அதிகமானது. இதழில் அவர் வெவ்வேறு புனைபெயர்களில் எழுதிய கூர்மையான கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் வெளிவந்துகொண்டிருந்தன. அவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்த சி.எஸ்.ஐ (CSI), ஈ.பி.டபிள்யூ (EPW) இதழ்க் கட்டுரைகள் சார்ந்த விஷயங்கள் என அவரிடம் கேட்பதற்கும் பேசுவதற்கும் காரணங்கள் இருந்துகொண்டே இருந்தன. காலச்சுவடின் ஆரம்ப காலங்களிலிருந்தே – ஏறத்தாழ நான் பிறந்தபோது அவர் பணிக்குச் சேர்ந்திருப்பார் என நினைக்கிறேன், எனது வயது அவருடைய பணி அனுபமாக இருந்திருக்கும் – இருந்தே இதழோடும் பதிப்பகத்தோடும் இணைந்து பயணித்தவர். 

அரவிந்தன் பாராட்டுக்களைப் போலவே விமர்சனங்களையும் முதிர்ச்சியுடன் கையாண்டவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதிய ‘புதைமணல்’, ‘மில்லேனியம்’ ஆகிய தொகுப்புகள் வெளிவந்தபோது, என்னால் அவற்றை முழுமையாக ரசிக்க முடியவில்லை.  இதைப் பற்றி அவரிடம்  பேசியபோது “அண்ண, உங்கள் உள்ளடக்கம் முக்கியமானதுதான், மொழியும் இன்னும் எளிமையாகியிருக்கிறது. ஆனால், அதில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் அந்தப் பழைய அடர்த்தியின்றி மேம்போக்காக இருப்பதாகத் தோன்றுகிறது” என்றேன். விமர்சனத்தைக் கேட்டவர், கண்களை இறுக மூடித் திறந்துவிட்டுக் குறுநகையுடன் சொன்னார்: “நீ அந்த எளிமையையும் அடர்த்தியற்ற தன்மையையும் குழப்பிக்கொள்கிறாய்.” அச்சமயம் அவரது பதில் சரியெனத் தோன்றினாலும் மீண்டும் அதுபற்றி யோசித்தபோது அந்தப் பதில் திருப்தியாக இல்லை. படைப்பாளியிடமே நேரடியாக இப்படிச் சொல்லிவிட்டோமே, இதனால் அலுவலக உறவிலோ அல்லது தனிப்பட்ட நட்பிலோ விரிசல் விழுந்துவிடுமோ என அச்சப்பட்டேன். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அவர் அதைப் பொருட்டாகவே கொள்ளவில்லை என்று தோன்றியது. ஏதும் சொல்லாதது போன்றே மிக இயல்பாக இருந்துகொண்டிருந்தார். அலுவலகத்தில் பாதுகாப்பான, ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதிலும் கவனமாக இருந்தவர். அரவிந்தன் எங்கள் எடிட்டோரியல் அறைக்குள் நுழையும்போதெல்லாம் வழக்கமான ஒரு கேள்வியோடுதான் வருவார். ‘ஸ்கோர் என்ன?’ என்பதுதான் அது. விளையாட்டு மைதானத்தின் உற்சாகத்தோடு அவர் கேட்கும் அந்த ஒற்றைச் சொல்லுக்குப் பின்னால் தீர்க்கமான நிர்வாக ஒழுங்கு ஒளிந்திருந்தது. இன்று எத்தனை பக்கங்கள் எடிட் செய்யப்பட்டன அல்லது எத்தனை பக்கங்கள் மெய்ப்புப் பார்க்கப்பட்டிருக்கின்றன என்பதையே  அப்படி விசாரிப்பார். வேலையைச் சுமையாகப் பார்க்காமல், இலக்குகளை நோக்கி நகரும் சுவாரசியமான ஆட்டமாக மாற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.  

கடுஞ்சொல் பேசுபவர் அல்லர்; எதையும் பகுத்துப் பேசிப் புரிய வைக்க முயசித்தவர். மற்றொரு தருணத்தில், அவரது கட்டுரை ஒன்றை வாசித்துவிட்டு, “நீங்கள் மிகச்சிறந்த கட்டுரையாசிரியர் அண்ண” என்றேன். உடனே அவர் வெடிப்புச் சிரிப்புடன், “அப்படியென்றால் எனக்குக் கதை எழுத வரவில்லை என்கிறாயா” என்றார். எதையும் மிக நேர்மறையாகவே அணுகும் குணம் அவரிடம் இருந்தது. 

கோவிட் லாக்டவுன் காலங்களுக்குப் பிறகு அவரோடான தொடர்பு இன்னும் நெருக்கமானது. அவர் நாகர்கோவிலுக்கு வந்து காலச்சுவடில் இணைந்தபோது, அந்தப் பிணைப்பு எழுத்தையும் தாண்டிக் குடும்பம், தனிப்பட்ட நலம் விசாரிக்கும் அளவிற்கு ஆழமானதாக மாறியது. அப்போதுதான் தேர்ந்த எழுத்தாளரையும் தாண்டி, அவரிடம் இருந்த சக மனிதர்கள் மீதான, எளிய மனிதர்கள் மீதான கரிசனத்தை உணர முடிந்தது. 

அவரது மரணத்துக்குப் பிறகு காலச்சுவடின் சக ஊழியர்களோடும் பேசும்போது  அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தனிநபருடனும் ஏதோ ஒருவகையில் பணி சார்ந்தும் சாராமலும் அக்கறை எடுத்துக்கொண்டிருந்திருக்கிறார். எங்கள் ஒவ்வொருவரிடமும் அவர் குறித்துச் சொல்ல ஏதோவொரு கதை இருந்துகொண்டிருக்கிறது.   

அரவிந்தன் வெறும் சக ஊழியராக மட்டும் இருக்கவில்லை. எழுதுவதற்கான பெரிய சட்டகத்தை எனக்குள் உருவாக்க உதவியவர். எதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன் என்ற திசையை அடையாளம் காட்டுபவராகவும் இருந்தார். ஒழுங்குபடுத்திக்கொள்ள எப்போதும் ஆலோசனைகள் வழங்கக்கூடியவராக இருந்தவர். அவரது வேலை, நிர்வாகப் பணி என எல்லாவற்றிலும் நேர்த்தியும் ஒழுங்கும் இருக்கும். நேரத்தைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவதில் கச்சிதமானவர். தான் சொன்ன நேரத்திற்கு வினாடிகூடத் தவறாமல் வந்து நிற்கும் கச்சிதம் எப்போதும் உண்டு. அண்மைக் காலங்களில் சமையற் கலைஞராக உருவெடுப்பதற்கும்  தீவிரமாக முயன்றுகொண்டிருந்தார். சமையலிலும் அதே நேர்த்தியையும் நுணுக்கத்தையும் கொண்டுவர ஆர்வம் காட்டினார். 

நான் அவருக்கு நேர்மாறு. அலுவலகத்தில் என்மேல் நேரக் குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்துவருவது. ஒருவிதத்தில் இப்போது முன்பை விடக் கொஞ்சம் குறைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. எனது ‘நேரந்தவறுதல்’ குறித்து  இறுதிவரை அன்போடு இடித்துரைத்துக் கொண்டே இருந்தார்.

அரவிந்தன் காலச்சுவடு அலுவலகப்  பணியில் இணைந்தது 2022ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி. சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து,  இறுதியாக அலுவலகத்திற்கு வந்து சென்றதும் அதே ஏப்ரல் இரண்டாம் தேதிதான். வாழ்வின் கணக்குகள் சில நேரங்களில் இப்படியான மாயஜாலங்களால் நிறைந்துவிடுகின்றன. அந்த நான்கு ஆண்டுகாலப் பயணம், முழுமையான சுழற்சியைப் போலத் தொடங்கிய இடத்திலேயே வந்து நின்றிருக்கிறது.  

வழக்கம்போல அந்த விடியலும் அவருக்கு நேர்த்தியான தொடக்கமாகவே அமைந்தது. காலையில் எழுந்து காபி குடித்துவிட்டு, தன் அன்றாட ஒழுங்கின் ஒரு பகுதியான யோகப் பயிற்சிகளைச் செய்பவர், அன்று ஏனோ உடல் சற்றே சோர்வாக இருப்பதாகச் சொல்லி, “கொஞ்சம் டயர்டாக இருக்கிறது, தூங்கி எழுகிறேன்” என்று படுத்திருக்கிறார். அந்தத் தூக்கம், தீர்க்கமான அமைதியோடு அவரைத் தன்னுள் இருத்திக்கொண்டது. மீண்டும் அவர் பௌதிக உலகிற்கு எழுந்து வரவேயில்லை. காலத்தையும் நிர்வாகத்தையும் தன் வசப்படுத்தி வாழ்ந்த ஆளுமையாளர், தன் இறுதி விடைபெறலையும் அத்தனை அமைதியாகவும் எவருக்கும் சிரமம் தராமலும் நிகழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார். 

அவர் இன்று பௌதிகமாக இல்லை என்றாலும், “என்னை அழிக்க யாருண்டு எழுத்தில் வாழ்பவன் அன்றோ நான்” என்ற அவருக்கு அணுக்கமான சு.ரா.வின் வார்த்தைகளையே மீண்டும் சொல்லத் தோன்றுகிறது. 

அஞ்சலி அரவிந்தண்ண! 

செந்தூரன் ஈஸ்வரநாதன்

இயற்பெயர் சுதர்சன் ஈஸ்வரநாதன்; செந்தூரன் ஈஸ்வரநாதன் எனும் புனைபெயரில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். கருத்துரிமை, மனித உரிமைகள், இலக்கியம் தொடர்பில் எழுதிக்கொண்டிருப்பவர். தற்சமயம் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். 13 வருடங்களாக இதழியல், பதிப்பகத் துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss