
மறுபடியும் சயந்தனிடமிருந்து ஒரு meta fiction நாவல்.
இளங்கோ தன் இருபதாவது வயதில், யாழ்ப்பாணத்திலிருந்து சுவிற்சலாந்து நோக்கிய தனது புலம்பெயர்வை ஆரம்பிக்கிறான். இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு ஆரம்பிக்கும் இப்பயணம் சுவிற்சலாந்தை சென்றடைவதற்குள் மொத்தமாகப் பதினான்கு வருடங்கள் உருண்டோடிவிடுகின்றன. இந்த இடைப்பட்ட காலம் அவனைப் போட்டு ஆட்டும் சிப்பிலி கொஞ்ச நஞ்சமல்ல. முதலில் அது தாய்லாந்திலிருந்து சுவிற்சலாந்துக்கு ஒரே விமானப் பயணத்தில் சென்று சேர்ந்துவிடலாம் என்ற கனவை விதைக்கிறது. அவனை விமானத்திலும் ஏற்றுகிறது. பின்னர் உடனேயே அவனை இறக்கி, சிறையில் தள்ளி, அங்கிருந்து ரஷ்யா, போலந்து, உக்ரெய்ன் என்று கடும் பனியும் இரவும் சூழ்ந்த நாடுகளின் மிக மோசமான தடுப்புச் சிறைகளிலும் பாதாள அறைகளிலும் போட்டுப் பந்தாடி, ஒரு கட்டத்தில் உக்ரெய்னின் நகரொன்றில் வாழும் வாழ்வுதான் நிரந்தரம் என்று ஒளி காட்டி, பின்னர் அதற்கும் உலை வைத்து, ஈற்றில் அவனை அது சுவிற்சலாந்துக்கு தள்ளிச்சென்று துப்பிவிடுகிறது. யாழ்ப்பாணத்து ‘வெறும்’ இளங்கோ ‘சுவிஸ்’ இளங்கோவாக மாறுவதற்கிடையில் அவனது இளமை இடைத்தங்கல்களிலே கழிந்துவிடுகிறது. அந்தக் கொடிய புலம்பெயர்வு பயணம் அவனுடைய பகடிகள், எகத்தாளங்கள், கோட்பாடுகள், உறவு, காதல் என அத்தனையையும் உறிஞ்சி எடுத்துவிட்டு, ஈற்றில் கொடும் பனியையும் இரவையும் வெறுமையும் மாத்திரமே அவனுள் இட்டு நிரப்பிவிடுகிறது.
நாவலில் இப்படி ஒரு பத்தி எழுதப்பட்டிருக்கும்.
காலத்தில் நீளம் என்பது நாட்களில் அல்ல, அது நிகழ்வுகளால் ஆனது. ஒரு குறுகிய காலத்தில் நிறைய நிகழ்வுகளுக்குச் சாட்சி ஆகிறபோது அக்காலம் நீண்ட நெடியதாக நினைவில் பதிகிறது. இதுவே நீளமான கால இடைவெளியில் வெறுமனே துயில் கலைவது, கடுமையாக வேலையைச் செய்வது, தூங்குவதென்று வாழ்வு ஒடுங்கினால் அது குறுங்காலமாகவே நெஞ்சில் தங்கிவிடுகிறது.
திசை ஒன்பது நாவலும் அத்தகைய அனுபவத்தையே பதிகிறது. அந்தப் பதினான்கு ஆண்டுகளில் ஏறத்தாழப் பத்து ஆண்டுகளை இளங்கோ உக்ரெய்னின் கீவ் நகரத்தில்தான் கழிக்கிறான். அங்கே அவனுடைய வாழ்வு ஒன்றும் பெருங் கொடுமை நிறைந்த தடுப்பு முகாம் வாழ்வும் அல்ல. நகரத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஹன்னாவோடு அவன் எளிமையான வாழ்வினையே வாழ்கிறான். ஒரு மூலைக்கடையைக் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறான். ஆனால் நாவலில் இப்பகுதி ஒரு தற்செயல்போல வந்துபோகிறது. இந்நாவல் ஒரு நதி எனில், இக்காலம் ஒரு சம தரையில் சலனங்கள் ஏதுமின்றி, எங்கோ எதிர்கொள்ளப்போகும் நீர்வீழ்ச்சியை ஆழ்மனதில் எதிர்பார்த்தபடியே மெதுவாக நகர்கிறது. மற்றபடி நாவலின் முனைப்பெல்லாம் புலம்பெயர் பயணங்களின் அவதிகளிலும் அந்த மனிதர்களின் எண்ணங்களிலும்தான் மூழ்கியிருக்கிறது. அதுவே நாவலது காலத்தின் நீளத்தை மொத்தமாக ஆக்கிரமிக்கிறது.
ஊரிலிருந்த காலத்தில் இளங்கோவுக்கு அவனது பதினேழு வயதிலே அமுதியோடு காதல் மலர்கிறது. அதனூடு நாவலின் கதை ஊருக்கும் அடிக்கடி சென்று திரும்புகிறது. இளங்கோ ஒரு எழுத்தாளன் வேறு. சுவிஸ் தெருக்களில் சாலையோரம் ஒரு தமிழ்ப் பெண்ணின் முகத்தைப் பார்த்தால் போதும். உடனே இளங்கோவுக்கு ஊரில் அவனுக்குத் தெரிந்த ரூபி அக்காவின் ஞாபகம் வந்து, அவரது கதையைச் சொல்லத் தொடங்குவான். இமையா என்னும் இன்னொரு புலம்பெயர் பயணியின் அறிமுகம் அவனுக்குக் கிடைக்க, தெரிந்த தகவல்களை வைத்துக்கொண்டு இமையாவின் வாழ்வினையும் இளங்கோ எழுத முயல்கிறான். உக்ரெய்னைச் சேர்ந்த ஹன்னா என்ற பாத்திரத்தினூடாக போரும் குண்டுச்சத்தங்களும் இடப்பெயர்வுகளும் இன்னொரு நிலத்திலும் உணரப்படுகிறது. அருந்தவம் என்ற, காலம் மென்று தின்ற இன்னொரு பாத்திரத்தை அவன் உக்ரேய்னிய சிறையில் எதிர்கொள்கிறான். கூடவே துருபரன் என்பவன். அமுதியின் அப்பா. அவ்வப்போது தோன்றி மறையும் குணசேகரன். தோன்றாமலேயே மறைந்துபோகும் தேவாரம் அண்ணை. இப்படிப் பல பாத்திரங்கள் நாவலில் வருகின்றன. சில காலம் அவை இளங்கோவோடு பயணம் செய்கின்றன. பின்னர் அவை இயல்பாக அவனோடு தொடர்புகளை இழக்கின்றன. நாவலில் அருந்தவம் சொல்வதைப்போலவே அவை யாவும் காலமும் தூரமும் முடித்துவைத்த உறவுகள். ஈற்றில் இமையாவின் கதையை எழுதியதுபோலவே, கூட எவரும் இல்லாது ‘சுவிஸ்’ இளங்கோ தனியாகத் தன் கதையையும் எழுதி முடிக்கிறான்.
போரும் புலம்பெயர்வும் கொடிய பயணங்களும் எப்படி இவர்கள் அனைவருடைய வாழ்வுகளையும் பிய்த்துப்போடுகிறதோ அதுபோலவே நாவலிலும் காலமும் பயணமும் பிய்த்துப்போடப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் சயந்தனுடைய முன்னைய நாவல்களான ஆறாவடுக்கும் அஷேராவுக்குமிடையில் திசை ஒன்பது விரிந்து கிடக்கிறது. ஆறாவடுவில் அமுதன் தஞ்சம் தேடி படகில் பயணித்தால் எனில் திசை ஒன்பதில் நிலம் வழியே பயணம் இடம்பெறுகிறது. ஆறாவடுவில் அமுதனுக்கு அகிலா என்றொருத்தி இருந்தாள் எனில் இங்கே இளங்கோவுக்கு அமுதி இருக்கிறாள். அஷேராவில் அருள்குமரனையோ அல்லது ஆறாவடுவின் அமுதனையோ தீர வாசித்தால் அவர்களில் திசை ஒன்பது இளங்கோவை எளிதாகக் கண்டுகொள்ளமுடியும். அஷேரா நாவலில் வருகின்ற அபர்ணாவின் புலம்பெயர்வுப் பயணம் இங்கே இமையாவின் கதையாக உரு மாறுகிறது. அஷேராவின் அற்புதம் பாத்திரம் புதிய வடிவெடுத்து இங்கே அருந்தவம் ஆகிறது. குணசேகரன் சேருடன் இளங்கோ செய்யும் உரையாடல்கள் ஆறாவடுவின் நேரு ஐயாவுடனான உரையாடல்களை நினைவூட்டுகின்றன. இரண்டாம் உலக யுத்த காலத்தைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த இவான் என்பவனின் விரிவான கதை ஆறாவடுவிலும் வருகிறது. அதே பெயருடன் திசை ஒன்பதிலும் பிறிதொரு வடிவெடுத்து வருகிறது. போர்களால் பாதிக்கப்பட்ட, உலகமெங்கும் ஏதிலிகளாக அலையும் மக்களின் வாழ்வு எல்லாமே இப்படித்தான், அவர்கள் தமது கதைகளைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பது என்னவோ உண்மைதான். ஆயினும் அம்மக்களின் வாழ்வுச்சிக்கல்களின் ஆதாரம்தான் ஒன்றே ஒழிய அவர்களில் வாழ்வுகள் எல்லாமே வேறு வேறானவை. அவர்களின் எண்ணங்கள் வேறானவை. சிந்தனைப்போக்குகள் வேறானவை. ஒவ்வொருவரும் தனித்துவமான சிந்தனைகள் கொண்ட மனிதர்கள். ஆனால் சயந்தனின் இந்த மூன்று நாவல்களின் அனேகமான பாத்திரங்கள் ஒரே மாதிரியாகவே சிந்திக்கின்றன. அவர் நாவல்களில் ஒரே மனிதர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு நிலங்களில் ஏதிலிகளாக அலைகிறார்கள். எல்லோரும் ஒரே பகடிகளை விடுகிறார்கள். எல்லோருடைய பதின்மக் காதல்களும் ஒரே வகைக்குள் அடங்குகின்றன. எல்லோரின் மன உளைச்சல்களும் ஒன்றாகவே அமைகின்றன. சயந்தனின் கதை சொல்லிகளும் ஒரே மாதிரியாகவே சிந்திக்கிறார்கள்.
வெறுமனே சயந்தனின் இந்நாவல்களுடைய கதை சொல்லிகளை மாத்திரம் தனியாக அலசிப்பார்க்கலாம்.
ஆறாவடுவின் அமுதனும் அஷேராவின் அருள்குமரனும் திசை ஒன்பதின் இளங்கோவும் ஒரே மனதின் வெவ்வேறு உடல்கள்தாம். அந்த மனது எப்போதுமே எதையுமே எள்ளி நகையாடுகிறது. எல்லாவற்றின்மீதும் அபிப்பிராயங்களைத் தெளித்துவிட்டுப் பின்னர் அடுத்த வரியிலேயே அவற்றைப் புறம்தள்ளி நக்கலும் அடிக்கிறது. பெண்களை நேரில் காண்கையில் அது நாணித் தலை குனிகிறது. தனியே அவர்களை நினைத்து கற்பனைகளை வளர்த்துக்கொள்கிறது. பெண்களை அணுகும்போதெல்லாம் அதற்குக் காமம் மேலோங்கிவிடுகிறது. தம் பதின்மத்தின் காமத்தை நினைவுகூராமல் இப்பாத்திரங்கள் நகர்வதேயில்லை. ஆறாவடுவில் கடல் நடுவே பயணம் செய்கையில் அமுதனுக்கு அகிலாமீது அப்படி ஒரு நினைப்பு வருகிறது. அருள்குமரனுக்கு அமலி அக்காமீது வருகிறது. இந்நாவலில் இளங்கோவுக்கு அமுதியை நினைத்தால் வருகிறது. காமம் தவறல்ல. ஆனால் அதனோடு சேர்ந்து உருவாகும் ஒரு வன்மம் கலந்த குரூரக் குதூகலம் ஒன்றிருக்கிறது. எப்படியோ இடையிடையே இக்குரூரத்தைப் பாத்திரங்கள் கக்கிவிடுகின்றன. இந்த உள்ளக்கிடக்கையைப் புரிந்ததுபோலவே நாவலின் பெண்களும் அதற்குப் பதில் வினைகளை ஆற்றுகிறார்கள். இது ஈழத்தின் போரையும் புலம்பெயர்வையும் எழுதும் பெரும்பாலான நாவல்களில் ஏன் வருகின்றன என்பது ஆராயப்படவேண்டியது. இது நம் சமூகத்தின் பொதுவான ஆண்களின் மன நிலையா, அல்லது ஒருவிதத் தாழ்வுணர்ச்சி நிறைந்த குறிப்பிட்ட யாழ்ப்பாணத்துத் தலைமுறையின் manosphere மனதா, இல்லை பல ஈழத்து இலக்கியங்கள் கூட்டாகக் கட்டமைத்துவிட்டிருக்கும் ஆண் பாத்திரமா என்பது ஆராயப்படவேண்டியது. இந்த ஆழ்மனது சிந்தையைத் தொடர்ந்து எழுதுவதே தீவிர இலக்கியம் என்கின்ற பிம்பம், குறிப்பாக இதுதான் தீவிர ஈழ இலக்கியம் என்கின்ற பிம்பத்தைக் கேள்விக்குட்படுத்துவதும் முக்கியமாகிறது. இதைக் குறிப்பிடுவது ஏதோ காமத்தையும் இவ்வகை குரூர வன்மத்தையும் எழுதுவதே தவறு என்ற அபத்தமான உத்தம இலட்சிய நிலைப்பாட்டை முன்மொழிவதற்காக அல்ல. அவை எழுதப்படுவதே தவறு என்று சொல்வது என்பது ஒருவித இலக்கிய வன்முறை என்பதையும் அறியாமலில்லை. ஆனால் ஒரே எழுத்தாளரின் பல நாவல்களது பிரதானக் கதை சொல்லியின் மனம் ஒரே வகையில் அமைவதால் வருகின்ற வாசிப்பு எரிச்சலும் சலிப்பும்தான் இக்கேள்வியை எழ வைக்கிறது.
சயந்தனின் நாவல்களில் அவதானிக்கக்கூடிய இன்னொரு அம்சம் முரண் புள்ளிகளை அலசும் பாத்திரங்கள். திசை ஒன்பதிலும் இந்த உத்தி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அரசியல் சமூகக் கருத்துகளின் பல்வேறு தரப்புகளைச் சமரசம் செய்யாது கொடுப்பதற்கென்றே அவருடைய நாவலின் பாத்திரங்கள் உரையாடும். கதைசொல்லி மாத்திரம் அவற்றிலிருந்து சற்று வெளியே நின்று, சமயம் கிடைக்கும்போது அவர்களை ஏளனம் செய்து எள்ளி நகையாடிக்கொள்வார். இந்நாவலிலும் இளங்கோவின் காதலியான அமுதியின் அப்பா ஒரு கம்யூனிஸ்ட்டாக அறிமுகமாகிறார். தன் காதலியின் தகப்பனோடு கம்யூனிச நையாண்டியைச் செய்யும் ஆற்றல் பதினேழு வயது இளங்கோவுக்கு வசப்பட்டிருக்கும். உக்ரெய்ன்மீதான ரஷ்யாவின் படையெடுப்பைப் பேசுகையில் உக்ரெய்ன் விமானங்கள் ஈழத்தில் குண்டுகள் போட்டதும் பேசப்படும். அப்போது அந்த விமானிகளுக்கென்று ஒரு தரப்பு வாதமும் இடம்பெறும். அகதியாவதும் தப்பியோடுவதும் ஒருவரது உரிமை என்று இளங்கோ சொல்லும்போது அதற்கு மாற்றாக, இல்லை ஒடுக்கப்படும்போது நின்று எதிர்ப்பதுதான் தகும் என்ற ஒரு பக்கத்தை முன் வைக்க ஹன்னா பாத்திரம் அமைகிறது. ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட யூதர்கள் இன்று எப்படி பாலத்தீனர்களை ஒடுக்கி ஆளலாம் என்ற கேள்வி எழுவதற்குள்ளேயே யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் முரண் புள்ளியாக வைக்கப்படுகிறது. ஈற்றில் கதைசொல்லி இளங்கோவே இம்மாதிரி விவாதங்களுக்கு முடிவே இல்லை என்று தீர்ப்பும் சொல்கிறான். குணசேகரன், அற்புதம் என நாவல் முழுதும் முரண் புள்ளிகளை வைத்து எழுத்தாளர் வாதாடும்போது இளங்கோவிற்கு ஏற்படும் சலிப்பு வாசகரையும் மூழ்கடித்துவிடுகிறது.
திசை ஒன்பது நாவலின் மிகப்பெரிய தடை, இதன் கதை சொல்லியான இளங்கோ எழுத்தாளராகவும் இருப்பதுதான். இது ஒருவித authorial self indulgence வகைக் கதை சொல்லலை நோக்கி நாவலைத் தள்ளிவிடுகிறது. வாசிப்பவர் இந்நாவலை இயல்பாக உள்வாங்கி, அதன் மனிதருள் இணைந்து போவதைப் பெரிதும் தடுக்கிறது. வாசகரையும் எழுத்தாளரது இடத்தில் நின்று கதை அலசும் சூழலை அது உருவாக்குகிறது. கதையை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்று கதை சொல்லி வாசகரோடு சேர்ந்து தீர்மானிக்கும்போது, தன் சிந்தனைப் போக்குகளை வாசகரோடும் பகிரும்போது, அவரை விடுத்து அவர் சொல்லும் கதைக்குள் நுழைந்து அதன் ஆழத்தை வாசகர் உணர்வது சிரமமாகிறது. இது பொதுவான meta fiction வகை எழுத்துகளின் இயல்புதான். ஆயினும் திசை ஒன்பது நாவலின் கதைக்களத்திற்கும் மாந்தர்களுக்குமிடையில் இவ்வுத்தி பொருந்திப்போகாதது மாத்திரமின்றி, வாசகர்களையும் நாவலுக்குள் நெருங்கவிடாமல் தடுத்துவிடுகிறது.
அதைவிட நாவலின் மிகப்பெரிய எரிச்சல் என்பது அவ்வப்போது இளங்கோ கோடி காட்டும் எழுத்தாளர்களும் அவர்களது எழுத்திலிருந்து சுட்டிக்காட்டும் எடுகோள்களும்தான். இரண்டாயிரத்து எட்டிலிருந்து பதினான்கு வருடங்களாகத் தாய்லாந்து, ரசியா, போலந்து, உக்ரெயின் எனத் திரியும் இருபதுகளின் இளைஞன் அக்காலங்களில் மைய நீரோட்டத்தினுள் புகுந்த பிரபல இலக்கியவாதிகளின் எழுத்துகளை வாசித்தான் என்பதும் அவர்கள் எழுதியவற்றின் வரிகளை நினைவுபடுத்திக் குறிப்பிடுகிறான் என்பதும் நம்பும்வண்ணம் சொல்லப்படவில்லை. காலித் ஹூசெய்னி, முத்துலிங்கம் முதல் ஜெயமோகன் வரையிலான பிரபல எழுத்தாளர்களின் கூற்றுகள் நாவலில் வந்துபோகின்றன. ஓரிடத்தில் சயந்தனின் கூற்றும் வந்துபோகிறது. ஒரு எழுத்தாளருக்கான அறம் என்ன என்பதைக் கதை சொல்லி இளங்கோவும், இளங்கோ பாத்திரத்தினூடாக சயந்தனும் கேள்விக்குட்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். ஆயிரம் பேரொளிச் சூரியன் நாவலை வாசித்து முடிக்கும் இளங்கோ, காலித் ஹூசெய்னியை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கீழிருந்து எழுதும் நக்குண்டார் நாவிழந்தார் எழுத்தாளர் என்கிறான். தலிபான்களின் அதிகாரத்தில் ஆப்கானில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைக் குறிப்பிடும் கணத்தில், ஐயையோ, அப்படி எழுதினால் அது மேற்குலத்துக்குச் சார்பான பார்வையாகப் போய்விடுமோ என்கின்ற எழுத்தாள மனதின் தயக்கம் அது. ஈற்றில் அது காலித்துடைய நாவலின் மூலக் கிடக்கையைப் பேசுவதைவிட அவரைத்தான் அதிகம் விமர்சனம் செய்கிறது. அஷேரா நாவலில் ஷர்மினா என்ற இரண்டு குழந்தைகளின் தாயைத் தலிபான்கள் சுட்டுக்கொல்லும் சம்பவம் ஒன்று விரிவாக இடம்பெறுகிறது. ஆனால் அஷேராவை வாசித்த இளங்கோவுக்கு அதன் எழுத்தாளரான சயந்தன் ஐரோப்பிய மேலாதிக்கச் சூழலிலிருந்து தலிபான்களை விமர்சித்திருக்கிறார் என்ற யோசனை ஏனோ எழவேயில்லை. திசை ஒன்பது என்ற ஒரு நாவலை ஒட்டிய கட்டுரையில் ஏன் ஆயிரம் பேரொளிச் சூரியனையும் அஷேராவையும் ஒப்பிட்டு ஒரு குறிப்பு இடம்பெறுகிறது என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதுதான் திசை ஒன்பதின் பிரச்சனையே. நாவலின் கதை எட்டுத் திக்குகளில் non linear ஆகப் பயணம் செய்கிறது என்றால் இந்த வகையாக நாவலுக்குள்ளேயே அமைந்திருக்கும் எழுத்தாளருடைய meta narrative வாசகரை ஒன்பதாவது திசையில் தள்ளி விடுகிறது. வாசகர் இந்நாவலின் மூலக்கதையை உள்வாங்குவது என்பது இளங்கோவினுடைய பயணத்தைவிடக் கடினமானதொன்றாகிவிடுகிறது.
இவ்வகையான நேர்கோட்டில் பயணிக்காத, எழுத்தாளரையும் கூட்டித்திரிகின்ற நாவல்கள் கொடுக்கக்கூடிய அதிர்ச்சிகளுக்கும் அலசல்களுக்கும் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு மதிப்பு இருந்தது. இப்போதைய வாசக மனத்துக்கு இளங்கோவின் எழுத்தாள மனது அவ்வளவு அவசியமானதல்ல. அத்தனை எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனங்களையும் அரசியல் பார்வைகளையும் வேண்டுமானால் வாசகர் அபுனைவுக் கட்டுரைகளினூடு அறிந்துகொள்ளமுடியும். திசை ஒன்பதை வாசிப்பவருக்கு இளங்கோ என்ற மனிதனின், இமையா, ஹன்னா, அருந்தவம் போன்ற மனிதர்களின் வாழ்வுதான் அவசியம். அவர்களினூடாக இவ்வாழ்வின் முரண்களையும் அபத்தங்களையும் அர்த்தங்களையும் புரிந்துகொள்ளும் பக்குவம் வாசகருக்கு உண்டு. அப்படிப்பட்ட வாசகரை இடை நிறுத்தி, கேளடா மானிடா என்று இளங்கோவோ, அவருக்கூடாக சயந்தனோ எதையேனும் சொல்லவரும்போது, பக்கங்களை வேகமாகப் புரட்டத்தான் மனம் விளைகிறது.
மேற்சொன்ன புள்ளிகள் அத்தனையையும் தாண்டி திசை ஒன்பது நாவலுக்கென்றே ஒரு தனித்த இருப்பு உண்டு. அது உக்ரெய்னின் கீவ் நகரில் இளங்கோ வாழும் வாழ்க்கையில் குடிகொண்டிருக்கிறது. ஆறாவடு, அஷேரா நாவல்கள் பேசாத பரப்பு அது. சலனமற்ற நீரோட்டமான ஆனால் இது நிலையற்றது என்று எந்நேரமும் உறுத்திக்கொண்டிருக்கக்கூடிய இக்காலம்தான் நாவலின் சாரமும்கூட. நீட்ஷேயின் நிகிலிசம் முன்வைக்கின்ற, பிழைத்தலே இருத்தலின் காரண காரியமன்றி வேறொன்றுமில்லை என்ற சிந்தனைச் சாரம் அது. இந்த வாழ்வில் சரி தவறு ஒன்றில்லை. எதற்காகப் போராடுவதிலும் பலனில்லை. பிழைத்தலுக்காகப் போராடுதல் ஒரு தரப்பின் உரிமை எனில் தப்பி ஓடி ஒளிவதும்கூட அதற்கீடான இன்னொரு உரிமைதான். இந்த நிகிலிச சிந்தனையூடாக நிலம் பற்றிய, உறவுகள் பற்றிய உணர்ச்சிமயமான கட்டமைப்புகள் கேள்விக்குள்ளாகின்றன. பற்றுகள் மீதும் பற்றுகள் அறுந்து போகையில் வாழ்க்கையே தொலைந்துவிடுமோ என்ற பேரச்சத்தின்மீதும் அது திராவகத்தை ஊற்றிக் கழுவிவிடுகிறது. அறுபட்ட பின்னரும் பற்றுகள் வாழையடிபோலப் புதிதாகக் கிளர்ந்து வரக்கூடியவை. ஒரு நிலம் அறுந்தால் புது நிலம் ஒன்று நம் காலடி பட்டுப் பூப்பதற்குக் காத்திருக்கிறது. பின்னர் அந்த நிலமும் துரத்துகையில் ஓடி ஒளிய உலகில் இன்னொரு நிலம் மனிதருக்கு இருக்கத்தான் செய்கிறது. சிறை எனிலும் நரகமும் ஒரு நாள் பழகிப்போகும் என்று அருந்தவத்தால் வாழ முடிகிறது. உறவுகளும் அப்படியே. ஒரு உறவின்போது இது இன்றி உலகில் பிறிதொரு வாழ்வில்லை என்ற உணர்வு தோன்றுவது என்னவோ இயல்புதான். ஆனால் வாழ்தல் என்பது அனிச்சையானது. அந்த உணர்ச்சி பெரும்பாலான மனிதர்களை எப்பற்றுகள் அறுபடினும் இயக்கிக்கொண்டே இருக்கிறது.
கடவுள் இறந்துவிட்டார், இனி மனிதர்கள் தம் அர்த்தத்தையும் மதிப்புகளையும் தாமே உருவாக்கவேண்டும் என்ற நீட்ஷேயின் குறிப்புக்கமையவே திசை ஒன்பதின் மாந்தர்கள் இயங்குகிறார்கள். புனிதங்கள் ஏதுமில்லாத, இருத்தலுக்கான மதிப்புகள் அவை. அத்தோடு, தமக்கிருப்பதைப்போல மற்றவருக்கும் இருக்கும் இந்த உரிமையை அம்மனிதர்கள் மதிக்கவும் செய்கிறார்கள். நாமும் நம்முடைய மதிப்புகளைச் சமூக அழுத்தங்கள் ஏதுமின்றி உருவாக்குவதற்கும், மற்றவர் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் இம்மாந்தர்கள் எங்கோ ஒரு புள்ளியில் தூண்டுதலைச் செய்கிறார்கள்.
அதுவே திசை ஒன்பது நாவலின் ஆதாரச் சீவனாகத் திகழ்ந்து நிற்கிறது.
000

ஜே.கே
அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















