
1.
நானொரு பணக்கர வீட்டுப்பிள்ளையின்
அல்லக்கை
அவனொரு அரசியல்வாதியின் அல்லக்கை
2.
அரசாங்க உத்தியோகம்
கைநிறைய சம்பளம்
நிறைந்த மரியாதை
கொஞ்சம் சந்தோஷம்.
செலவில்லாமல் இரண்டு
எடுபிடிகள் கிடைத்தால்
கூடுதல் சந்தோஷம்.
3.
தேர்தல் பாதை
திருடர்களின் பாதை
என்றான்.
ராஜபாட்டையில்தான்
ராஜா நடப்பார்
என்றேன்.
ராஜா நடந்தாலே
அது ராஜபாட்டைத்தான்
என்றார் அந்த வழியாகப்போனவர்.
4.
ராஜா ராணி
திருடன் போலீஸ்
ஆட்டம்
எப்போதும் நான்தான் திருடன்.
எப்போதும் அவள்தான் ராணி.
ராஜாவும் போலீசும்
மட்டும் அவ்வப்போது
மாறிக்கொள்வார்கள்.
5.
அவினாசியில் ஒரு வாழ்க்கை
அமிர்தசரசில் ஒரு வாழ்க்கை
உலன்பத்தாரில் ஒரு வாழ்க்கை
6.
முப்பது வருடங்களாக
உறவில் இருந்தவள்
முந்தானை முடிச்சு
படத்திற்கு போகப்போறேன்
என்பதுபோல
முறித்துக்கொண்டுபோனாள்.
ச்சீ போகட்டும் என்று
விட்டுவிட முடியவில்லை
திரும்பினால் என்ன
செய்வது என்று நினைக்காமலும்
இருக்க முடியவில்லை
சாகாவரம் படைத்தவனுக்கு
ஜோடி கிடையாது என்கிறது
ஸ்கிரிப்ட்.
7.
இவ்வளவு
வயதிற்குப் பின்
இறைச்சி மீது
இவ்வளவு ஆவல்
வந்திருக்கக் கூடாது.
8.
இறைச்சியில்லாமல்
ஒரு வாழ்க்கையா
என்றபோது
ஜோடி நாயும்
ஜோடி ஆணும் பெண்ணும்
ஒரே நேரத்தில்
திரும்பிப்பார்த்தார்கள்.
9.
இறைச்சி என்றாலே
உடல்தானே
என்றவாறு
ஊளையிட்டுக்கொண்டோடியது
மற்றொரு நாய்.
10.
இங்கு
ஒவ்வொரு
அரசுத்துறை
ஊழியருக்கும்
தனித்தனி குணக்கேடு
உண்டு
கேரளாவிலும் உண்டா
மாஸ்டர்.
11.
கடன் பிரச்சனையில்
கூட இருந்தவனை
மருத்துவ சிகிச்சையில்
உதவியாக இருந்தவனை
கஷ்ட நஷ்டங்களில்
அனுசரனையாக இருந்தவனை
தன்வீட்டுக் கல்யாணத்தில்
கழற்றிவிடும் மரபு
புதியதாக உள்ளது மாஸ்டர்.
இல்லை கண்டர் பழசுதான்.
12.
பல்வேறு துறைகளிலும்
நக்கிப்பிழைப்பதே நாகரிகமானதால்
யார் நாகரிமானவர்கள் என்ற
போட்டி வந்தது
எழுத்தைத் தவிர
வேறு லட்சியமில்லை
என்று சிலர் நாகரிகமாக
ஒதுங்கிக்கொண்டனர்.
13.
நண்பனின் மனைவி
என்ற மரியாதையும்
லஜ்ஜையுமில்லாமல்
உற்றுப்
பார்க்கிறான் என்றார்.
நண்பரிடம் சொல்லட்டுமா
என்றேன்.
வேண்டாம் வேண்டாம்
அவர் மனைவியின்
லஜ்ஜையின்மையை நீங்கள்
கெடுக்க வேண்டாம்.
14.
விரும்புவது
சின்ஜியாங் மாகாண வாழ்க்கை
காரகோர நெடுஞ்சாலைப் பயணம்
கனவு
கிர்கிஸ் மற்றும் தஜிக் வாழ்வு
வாய்த்தது
திராவிடப் பந்தலில்
தோரணம் கட்டும்
தொண்டர் பணி.
15.
வட இந்தியர்களே
வட இந்தியர்களே
நாங்கள் ஜாதி பார்ப்பதில்லை.
16.
தீவிர லட்சியவாதம் கூட
ஒருவித நோய்மைதான் சுதா
சின்னச் சின்ன சமரசங்களே
வாழ்க்கையை அர்த்தப்படுத்தும்
மணி 11 ஆகுது
உளறாம தூங்குங்க
காலையில
தலைக்குமேல
வேலை இருக்கு
17.
இஷ்ட தெய்வம்
யாரெனக் கேட்டால்
உள்ளூரிலேயே
மூன்று பெண்களின்
முகம் நினைவிலாடுகிறது.
குலதெய்வம்
பச்சையம்மன்
கோபிக்கக் கூடாது
18.
எதிரே வரும்
வாகனத்தில்
அமர்ந்து
போகும் பெண்கள்
அனைவருமே
அழகாக இருக்கிறார்கள்
கவர்மெண்ட் உத்தியோகக்
கணவன் என்றால்
பெண்ணிற்கு
கூடுதல் தேஜஸ்.
19.
அதுவொரு இலக்கிய விருது
வரிசையாய் இலக்கியத்திற்கு
கொடுத்தாலே
நாற்பதாண்டுகளாகும்
நமக்கு கிடைக்க
கிடைக்கும் வரை
நல்வாழ்த்துகள் என்று
சொல்லிக்கொண்டிருக்கச்
சொல்கிறது இந்தப்பிழைப்பு
20.
காஷ்மீர் வரையிலான
ரயில் பயணமே
குறுவட்டத்தில்
உழலும்
சின்னப்பயலே
எனத் தலையிலொரு
தட்டு தட்டுகிறது.
21.
அவருக்குத் தெரியாது
தான்
தனியாக இருக்கும்போது
அன்பாகவும் எளிமையாகவும்
இருக்கும் தன் முகம்
அமைப்பினருடனும் கட்சியினருடனும்
இருக்கும்போது
அதிகாரமும் அகந்தையும்
குடிகொண்டதாக மாறிவிடுவது.
22.
அமைப்பென்றாலே
தனித் தெம்புதான்
தனி அதப்புதான்.
23.
கேரளத்தின்
மரங்களடர்ந்த
ஆளில்லாத
ரயில்வே ஸ்டேஷன்களைக்
கடக்கும்போது
இனம்புரியாத உணர்வொன்று
வந்துவிடுகிறது மாஸ்டர்.
ஆமாம் அந்த காலியான
இருக்கைகள்
ஒரு காவியத்தை
எழுதிக்கொண்டிருப்பதை
நானும் கண்டிருக்கிறேன்.
24.
நமஸ்காரம் குஞ்சுண்ணி மாஷ்.
நமஸ்காரம் கண்டராதித்தன்.
000
கே.என்.செந்திலுக்கு

கண்டராதித்தன்
நவீன தமிழ் கவிஞர்களில் மரபோடு சார்ந்த கவிதைளை எழுதும் கவிஞர். இவருடைய கவிதைகள் பெரும்பாலும் பக்தி மரபுகளையும் தொன்மங்களையும் சார்ந்து எழுதப்பட்டுள்ளன. தமிழ் மரபின் பண்பாட்டுச் சித்திரங்கள் ஊடுருவும் கவிதை வெளி இவருடையது என்று கவிதைச்சூழலில் கருதப்படுகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















கண்டராதித்தனின் மொழி உருமாற்றத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். திருச்சாழலில் இருந்து ஒரு நிதானம் கூடி வந்திருக்கிறது. எத்தனை பெரிய நெடும்பயணம் என்று நமக்கே ஒரு பெருமூச்சு எழும். புனைவெழுத்துக்கான கனம் எழுத்துகளில் தெரிகிறது. அதுவே வாசிப்பவரை இன்னும் ஏதாவது சொல் என்று தொடர்ந்து அவரது எழுத்துகளை வாசிக்கச் செய்கிறது. நன்றி கண்டர்.
ஒரு தொடர்கதை போல் அடுத்தடுத்த கவிதைகள் பின் தொடரும் கவிதைகளுக்கு கட்டியம் கூறி நம்மை அழைத்துச் செல்கின்றன.
கவிதைகள் வாசிக்கும் போது அர்த்தங்கள் அறுபடாமல் அர்த்தமாகிறது வாசகர்களின் வாழ்வில் ஏதோ ஒன்று நினைவுக்கு வந்து போகிறது சில கவிதை இலைமரை காய் போல உணர முடிகிறது ஆக மொத்தத்தில் அண்ணனுக்கு நமஸ்காரம் இது மேலும் எழுத தங்களை கும்பிடுகிறேன்.