
காட்டுயிர்
மாமலையின்
ஒவ்வொரு திருப்பங்களின் போதும்
வீழ்ந்த மரங்களின் கொப்புகளில்
விநோத உறுப்புகளுடன்
எண்ணிறந்த பல்லுயிர்கள்
சர்ப்பக் கொடிகளால் கைவிலங்கிட்ட
குற்றவாளியானேன்.
0
காட்டிலாகா அதிகாரிகளுக்கு
அரசு
அரசனாக முடியாது
உயரங்களில் தாவும்
சிங்கவால் குரங்குகளின்
பயிற்சிக்கும்
கம்பீர ஆசனத்துக்கும்
எம்மாத்திரம்
பயணிகள் பார்வைக்கென்று
எழுதி வைத்திருக்கிறான்
‘காட்டு வாழ்வு
உங்களைக் கண்காணிக்கிறது.’
0
எதையும் ஏற்பதற்கு
பழகியவற்றுக்குத் தெரியும்
அதன் வேர்கள்
மனிதப் பேராசைக்
கட்டுமானங்களுக்கு கீழே
வேறாய் உறைந்திருப்பது
வெளியை வணங்கும்
காடுகள் தம்மை
மீட்டுக் கொள்ளும்
0
ஆழ்ந்த அமைதியில்
அசைந்து முருகி
எழுப்பும் குரலில்
பெருங்காட்டு உயிர்களனைத்தின்
அன்றாட வாழ்வின் கதைகளைச்
சொல்லி விடுகிறது
ஆம்…..மரங்களுக்கு
நடக்கத் தெரியும்
0
காட்டின் ஈர்ப்பு
நிர்வாணத்தில்
உடையுடுத்தி
நாகரிகம் பழகியவன்தான்
வெட்கப்பட்டுப் போனேன்
0
காட்டெருமைகள்
நகரும் அரண்மனைகள்
வேட்டையாடி
அதன் கொம்பை வெட்டி
முகப்பில் மாட்டிய உன்
அரண்மனைகள் அணிகலன்கள்
பிச்சை வாங்கவேண்டும்
0
ஒழுங்கற்ற ஒழுங்கின்
மலையிலிருந்து
சமவெளிக்கு இறங்கும்
மனிதன் தன்
ஒழுங்கீன ஒழுங்கிற்காக
கழிவிரக்கம் கொள்கிறான்
0

ஆகாசமுத்து
நவீனத் தமிழ்க் கவிஞரும் எழுத்தாளருமான ஆகாசமுத்து, 'தினவு' கலை இலக்கிய அரையாண்டு இதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார். 'வெருகு' இவரது குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்பாகும்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
