
1. அந்த கோடை நாள்
யார் உருவாக்கியது இந்த உலகை ?
அன்னத்தையும் கருங்கரடியையும் யார் படைத்தது ?
யார் படைத்தது இந்த வெட்டுக்கிளியை?
இந்த வெட்டுக்கிளியைத்தான் சொல்கிறேன் ,
புல்வெளியிலிருந்து தானே தாவிக் குதித்து
வெளியேறி இருக்கும் இதை .
என் கையிலிருக்கும்
சர்க்கரையைத் தின்றுகொண்டிருக்கும் இதை .
மேல்கீழாக அல்லாமல் முன்னும் பின்னுமாக
தன் தாடைகளை அசைத்துக்கொண்டிருப்பதை
தன் பெரிய புரிந்துகொள்ள முடியாத கண்களால்
சுற்றிலும் கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பதை .
இப்போது அது தன் வெளிறிய முன்கால்களை உயர்த்தி
முகத்தை முழுமையாகக் கழுவிக்கொள்கிறது.
இப்போது தன் இறக்கைகளை சட்டென விரித்து
மிதந்து பறந்து செல்கிறது .
பிரார்த்தனை என்றால் என்னவென்று எனக்குச் சரியாகத் தெரியாது.
ஆனால் உற்று கவனிப்பது எப்படி என்று எனக்குத் தெரியும்.
புல்வெளியில் விழுந்து கிடப்பது எப்படி என்றும்,
அதே புல்வெளியில் முழங்காலிட்டு அமர்வது எப்படி என்றும்,
வெறுமே இருப்பவளாகவும்
ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் உணர்வது எப்படி என்றும்,
வயல்வெளிகளில் நிதானமாக உலாவுவது எப்படி என்றும்
எனக்குத் தெரியும்.
இன்றைய நாள் முழுவதும் நான் செய்ததும் அதைத்தான்.
சொல்லுங்கள், நான் வேறு என்ன செய்திருக்க வேண்டும்?
இறுதியில்,எல்லாமே மறைந்து போவதுதான் இல்லையா ,
அதுவும் மிக விரைவாக?
சொல்லுங்கள் , உங்களுக்கு கிடைத்திருக்கும்
கட்டற்றதும் விலைமதிப்பற்றதுமான
இந்த ஒரேயொரு வாழ்க்கையை
நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
2. தனிமை
நானும் அறிந்திருக்கிறேன் தனிமையை.
புரிந்துகொள்ளப்படாமல் இருப்பது என்னவென்றும்,
நிராகரிக்கப்படுவது என்னவென்றும்,
திடீரென்று அழகற்றவளாக உணர்வது என்னவென்றும்
நானும் அறிந்திருக்கிறேன்.
ஓ, நிலமெனும் தாயே
நீ தரும் ஆறுதல் மகத்தானது,
உன் கரங்கள் ஒருபோதும் அணைப்பை மறுப்பதில்லை.
இந்த அறிதலே என்னை காப்பாற்றியது
ஓடிக்கொண்டிருக்கும் உனது ஆறுகள்,
காலையில் மலரும் உனது ரோஜாக்கள்…
ஒ, அத்தனையும் கனிவின் சமிக்கைகள்.
3. நான் மரங்களின் நடுவில் இருக்கும்போது
நான் மரங்களின் நடுவில் இருக்கும்போது—
குறிப்பாக
வில்லோ மரங்களுக்கும் தேன் முள்ளிமரங்களுக்கும் இடையே
அதேபோல பீச், ஓக், பைன் மரங்களும்
அவை உவகையின் துளிகளை
வாரி இறைக்கின்றன
அவை ஏறக்குறைய என்னைக் காப்பாற்றுகின்றன
என்றே நான் சொல்வேன் , ஒவ்வொரு நாளும்
என்னைப் பற்றிய என் எதிர்பார்ப்புகளிலிருந்து
நான் மிகுந்த தொலைவில் இருக்கிறேன்
அதில் நான் நல்லவளாகவும், தெளிவுடனும்
இந்த உலகை அவசரமாகக் கடந்து செல்லாமல்,
நிதானமாக நடப்பவளாகவும்
அடிக்கடி தலைவணங்குபவளாகவும் இருக்கிறேன்.
என்னைச் சுற்றியுள்ள மரங்கள்
தங்கள் இலைகளை அசைத்து சொல்கின்றன:
‘சற்றே இருந்து செல் ‘
அவற்றின் கிளைகளினூடே ஒளி வழிகிறது
அவை மீண்டும் அழைக்கின்றன:
“இப்படி இருப்பது எளிது,” என்கின்றன.
“நீ இந்த உலகிற்கு வந்ததும் இதற்காகத்தான்,
இலகுவாக வாழவும்
ஒளியால் நிரம்பவும் , ஒளிரவும் “
4. அமைதியாயிரு, என் ஆன்மாவே
அமைதியாயிரு, என் ஆன்மாவே, உறுதியாய் நில்!
பூமியும் வானமும் இன்னமும் உன்னை பார்த்தபடி இருக்கின்றன
கடிகாரத்திலிருந்து காலம் மெதுவாக வடிந்தபடி இருந்தாலும்,
ஒருகாலத்தில் தைரியமாகவும் விரைவாகவும்
இருந்த உனது நடையின் வேகம் ,
இப்போது குறைந்து விட்டிருந்தாலும்..
மெதுவாவே நடை போடு
ஆனால் உனது இதயம் அதன் பணியை தொடர்ந்து ஆற்றட்டும்
ஒருகாலத்தில் நேசித்ததைப்போலவே, இன்னமும் நேசி
ஆழமாக, பொறுமையற்ற தீவிரத்தோடு.
கடவுளும் இந்த உலகமும் அறியட்டும்
நீ நன்றியோடு இருப்பதை
இந்த பரிசு உனக்கு அளிக்கப்பட்டு விட்டதை .
5. நான் முயற்சி செய்வேன்
நான் முயற்சி செய்வேன்.
நான் வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைப்பேன்
காண வேண்டியவற்றை காணவும் ,
கேட்க வேண்டியவற்றை கேட்கவும்.
அவற்றைப் போற்றவும் செய்வேன் .
நான் ஆறுதல் பெறுவதற்காக மட்டும்
இந்த உலகத்திற்கு வரவில்லை.
நான் ஒரு சிவப்பு பறவையைப் போல
பாடுவதற்காகவே வந்துள்ளேன்.
ஆனால், நான் செந்தழலென கொண்டையும்
நாவாலும் சீழ்க்கை ஓலியாலும் நிறைந்த
சிவந்த முக்கோணமென வாயும் கொண்ட
ஒரு சிவப்புப் பறவை அல்ல.
மாறாக, தன் காதலை இழந்த
இப்போது வேர்களைப் பற்றியே
அதிகம் சிந்திக்கும் ஒரு பெண்.
000

பா.ரேவதி
சிங்கப்பூரில் வசித்துவரும் பா.ரேவதி, கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், மங்கையர் மலர் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் வெளிவரும் 'தி சிராங்கூன் டைம்ஸ்' மாதாந்திர இதழிலும் , நுட்பம் , நீலி ஆகிய மின்னிதழ்களிலும் இவரின் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தற்சமயம் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
