வேப்பங்குளம் நாவல் இந்த ஆண்டு மதுரைப் புத்தகக் கண்காட்சி நடைபெறும் காலத்தில் எதிர் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. நாவல் முன்பின்னாக மாறி மாறி அமைந்துள்ளது. நடப்புக் கதையின் முன் காலத்திய கதை நாவலின் முன் பகுதியில் வருகிறது. நாவலின் முதல் இரண்டு அத்தியாயங்கள் இவை.
சுரேஷ்குமார இந்திரஜித்
1

ராஜா வரும் தகவல் நேற்றே ரஞ்சிதாவிற்குச் சொல்லப்பட்டுவிட்டது. அடுத்த நாள் மாலை சிறு தூக்கத்திற்குப்பின் நெஞ்சில் கனன்று எரியும் காமத்துடன் ரஞ்சிதா எழுந்தாள். நேற்று பிடித்து வைத்த சில்லென்றிருந்த தண்ணீரில் பன்னீர் கலந்தாள். கூந்தல் மணத்திற்காக வெட்டிவேர், மகிழம்பூ, சீயக்காய் ஆகியவற்றைக் காய வைத்துப் பொடியாக்கி வைத்திருந்த மூடிய பாத்திரத்தை எடுத்தாள். அரிசி கழுவிய நீரில் அந்தப் பொடியைக் கலந்து அந்தக் கலவையை தலைமுடியிலும் வேர்க்கால்களிலும் தடவினாள்.
பூலாங்கிழங்கு, செம்பருத்தி, மரிக்கொழுந்து, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், சந்தனம், பாசிப்பயறு, கடலைப் பருப்பு, ரோஜா இதழ்கள் ஆகியவற்றைத் தனித்தனியே காயவைத்து அரைத்த பொடியைப் பால் கலந்து பசை போல ஆக்கி உடலின் அனைத்துப் பாகங்களிலும் தடவி ஊற வைத்துப் பின் குளித்தாள். அந்தரங்கப் பாகங்களைக் குளிக்க வருவதற்கு முன்பே சுத்தப்படுத்தியிருந்தாள்.
பிருஷ்டம் வரை நீண்ட அடர்த்தியான கூந்தலுடன், காலில் கொலுசு ஒலிக்க ரஞ்சிதா குளியலறையிலிருந்து வெளியேறி அறைக்குள் நுழைந்தாள். வீடே மணந்தது.
ரஞ்சிதா கண்களுக்கு மை தீட்டினாள். அகிலா அவளுக்கு உதவி செய்தாள். ரஞ்சிதா பட்டுப் பாவடையை அணிந்தாள். வலப்பக்கம் பாவாடை முடிச்சு சிறியதாக அமைந்திருந்தது. உடலின் மேல்பகுதியில் தோள்பட்டியுள்ள பின்புறம் கொக்கியிருந்த வேலைப்பாடுகள் இருந்த கச்சையை அணிந்தாள். வேறு ஆடை ஏதுமில்லை. கழுத்தில் சிறிய ஆரம், இரண்டு கைகளிலும் தங்க வளையல்கள் மினுங்கின. இடுப்பில் மேகலையை அணிந்தாள். நடந்து சென்று பூட்டியிருந்த அலமாரியைத் திறந்தாள். அதிலிருந்து சிறு பெட்டியை எடுத்தாள். அந்தச் சிறு பெட்டியிலிருந்த நீளமான, கனமான திருமாங்கல்யச் சங்கிலியை எடுத்தாள். அதைக் கழுத்தில் அணிந்துகொண்டாள். திருமாங்கல்யம் தொப்புளுக்குக் கீழ்ப்பகுதியை எட்டியிருந்தது. மார்புக் கச்சையும் பாவாடையும் மட்டுமே ஆடைகள்.
அகிலாவிற்கு ரஞ்சிதாவின் தோற்றமும் அவளிடமிருந்து வரும் மணமும் மயக்கத்தைத் தருவது போல இருந்தது. ரஞ்சிதாவை நெருங்கினால், ராஜா மயக்கமடைந்துவிடுவார் என்று அகிலா கற்பனை செய்தாள்.
ரஞ்சிதா மூக்குத்தியைக் கழற்றித் தட்டில் வைத்து நீர் விட்டு சுத்தம் செய்து மீண்டும் அணிந்துகொண்டாள். போர்த்திக்கொள்ள மஞ்சள் பட்டு, பொற்கரையுள்ள பீதாம்பரத்தை எடுத்து அகிலா கொடுத்தாள். ரஞ்சிதா தயாராகிவிட்டாள்.
இரவு உணவிற்கு அகிலா சுவையான உணவு தயார் செய்தாள். படுக்கையறையை மலர்களால் அலங்கரித்தாள். மல்லிகைச் சரங்களை ரஞ்சிதாவின் தலையில், அவர் வந்தபின் சூடுவதற்காகத் தனியே எடுத்து வைத்தாள்.
ராஜா பரிவாரத்துடன் வரும் ஓசை கேட்டது. அறிவிப்பாளன் வீட்டின் வாசலருகே வந்து ராஜா வருவதைத் தெரிவித்தான். ராஜா சாரட்டிலிருந்து இறங்கினார். அகிலா அவரை வரவேற்றாள். வரவேற்பறையில் அமர வைத்தாள். வாசல் கதவைச் சாத்தினாள்.
உள்ளறையிலிருந்து ரஞ்சிதாவை அழைத்து வந்தாள் அகிலா. பீதாம்பரம் போர்த்திய நிலையில் தலையைக் குனிந்து ரஞ்சிதா வந்தாள். ராஜா எழுந்தார். தட்டில் வைக்கப்பட்டிருந்த மல்லிகைப்பூச் சரங்களை எடுத்து ரஞ்சிதாவிடம் கொடுக்கச் சொன்னார். அவள் போர்த்தியிருந்த பீதாம்பரத்தை அகிலா உருவினாள். ரஞ்சிதா நிமிர்ந்து ராஜாவைப் பார்த்தாள். அவள் தோற்றத்தின் பிரகாசத்தில் அவள் விழிகளின் கூர்மையில், அவள் மார்பு மேட்டில் இறங்கி, தொப்புள் வரை தொங்கியிருந்த கனமான, நீளமான தாலியைப் பார்த்ததில் மார்புத்துடிப்பு ராஜாவுக்குக் கூடியது. நிலைகுலைந்தார். தடுமாறுவதாக உணர்ந்தார். அவளின் வாசனை அவருள் நுழைந்து மயக்கியது. மயக்கமடைவது போல உணர்ந்தார்.
ரஞ்சிதா அவரின் கைவிரல்களைப் பற்றினாள். நரம்புகளில் இன்பம் பரவிச் சுண்டுவதாக ராஜா உணர்ந்தார். அவள் அவரை உள்ளறைக்குக் கூட்டிச் சென்றாள். தாழ்ப்பாள் இடும் சத்தம் அகிலாவுக்குக் கேட்டது.
தர்மதுரை இந்தப் பகுதிக்கு ராஜா. அடுத்த பகுதிக்கு வேறு ஒருவர் ராஜா. அதற்கடுத்த பகுதிக்கு இன்னொருவர் ராஜா. செல்வமும் சேனையும் நில ஆதிக்கமும் உடையவர்கள் ராஜா.
அகிலா சும்மா இருக்க முடியாமல் அவர்கள் இருந்த அறைப் பக்கம் சென்றாள். ரஞ்சிதாவின் குரல் ‘மெதுவா’ என்று சொல்லியதை அகிலா கேட்டாள்.
2
ரஞ்சிதாவைப் பற்றி நிறையக் கற்பனைக் கதைகள் பரவின. ரஞ்சிதாவின் விருப்பத்திற்குரிய தர்மதுரை ராஜா ஆளும் நிலப்பரப்பிற்கு அடுத்துள்ள நிலப்பரப்பை ஆள்பவன் குலசேகர ராஜா. தர்மதுரையைக் காட்டிலும் படைபலம் கொண்டவன். அவன் ரஞ்சிதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவள் மீது ஆசை கொண்டான். அவன் தனது ஆசையை மந்திரியிடம் கூறினான்.
மந்திரி “நம் அந்தப்புரப் பெண் மாளவிகாவை அனுப்பி மன்னரின் விருப்பத்தை ரஞ்சிதாவிடம் தெரிவிப்போம். அவள் ஏற்றுக்கொண்டால் அவளைக் கொண்டு வந்து விடலாம்” என்றார்.
“நான் ரஞ்சிதாவைப் பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுதான். பேரழகி என்றும் களியாட்டங்களில் தேர்ந்தவள் என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவளிடம் தூது அனுப்பும் முன்னர் அவளைக் காண விரும்புகிறேன். என் கற்பனைப்படி அவள் இருக்க வேண்டுமே. நான் அவளை எப்படிப் பார்ப்பது என்று சொல்லுங்கள்.”
“நமது எல்லைக்கும் தர்மதுரை ராஜா எல்லைக்கும் அருகில் உள்ள சொக்கநாதர் கோயிலுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அவள் வந்து சன்னிதி முன் சிறிது நேரம் நடனமாடிச் செல்வது வழக்கம். மன்னர் மந்திரியோடு மாறுவேடத்தில் சென்று அவளைப் பார்க்கலாம். பிறகு தங்கள் சித்தம் போல் செயல்படலாம்” என்றார் மந்திரி.
“அவள் ஆடுவதைக் காண மக்கள் கூட்டம் இருக்குமா; தர்மதுரை அதைக் காண வருவாரா; அவள் வந்து ஆடிச் செல்லும் உத்தேச நேரம்; அவளுடைய பரிவாரங்கள் கூட வருவார்களா; அவள் மட்டும் வந்து ஆடிச் செல்வாளா; ஆகிய விஷயங்கள் தெரிய வேண்டும்.”
“தெரிந்து சொல்கிறேன் மன்னரே” என்றார் மந்திரி.
சில மணிநேரங்களிலேயே மந்திரி தகவல்களைத் திரட்டி விட்டு ராஜாவைச் சந்தித்தார்.
“விசாரித்துவிட்டேன் மன்னரே, அவள் அதிகாலையில் வருவாள். தர்மதுரை ராஜா வரமாட்டார். ஒவ்வொரு வாரமும் அவள் வருவதால் கோயிலுக்கு சாமி கும்பிட வருபவர்கள் மட்டும் இருப்பார்கள். நாட்டிய உடையில் சாரட்டில் வருவாள். நட்டுவனார் வாத்தியங்கள் கூட வராது. அவளே வாய்விட்டுப் பாடி ஆடுவாள். சிவனை வழிபட்டுச் சென்று விடுவாள். அதிக நேரம் கோயிலில் தங்க மாட்டாள். நாம் வரும் வெள்ளிக்கிழமை சென்று பார்க்கலாம்.”
வெள்ளிக்கிழமை வருவதற்கு முந்திய நாள் குலசேகரனுக்குத் தூக்கமும் சரியாக வரவில்லை. ரஞ்சிதாவைப் பற்றிய கற்பனையே அவன் மனதில் வந்து சென்று கொண்டிருந்தது.
வெள்ளிக்கிழமை விடிகாலையில் குலசேகரனும் மந்திரியும் சில மெய்க்காப்பாளர்களுடன் கோயிலுக்கு வந்துவிட்டார்கள். குலசேகர ராஜா தலைப்பாகை கட்டியிருந்தான். ஒட்டு மீசையும் ஒட்டுத் தாடியும் வைத்திருந்தான். மந்திரியும் அவருக்கு ஏற்ற ஒப்பனைகள் செய்து தன்னை மறைத்திருந்தார்.
இன்னும் ரஞ்சிதா வரவில்லை. குலசேகர ராஜா ஆர்வத்துடன் இருந்தான். சாரட் கோயில் வாசலில் வந்து நின்றது. சாரட்டிலிருந்து ரஞ்சிதா இறங்கினாள். நாட்டிய உடையில் இருந்தாள். தோளிலிருந்து இடுப்பு வரை போர்த்தியிருந்தாள்.
குலசேகரனின் பார்வையில் சாரட்டிலிருந்து இறங்கும் அவள் பாதங்கள்தான் முதலில் கண்களுக்குத் தெரிந்தன. பளிச்சென்றிருந்த வெள்ளை நிறப் பாதங்களில் மருதாணிச் சாறின் சிகப்பு அலங்கரித்திருந்தது. பாதத்தைத் தூக்கி மடியில் வைத்துக்கொள்ளலாம் போலிருந்தது. நிமிர்ந்து அவளைப் பார்த்தான். சிற்பம் போன்ற வடிவு. குறுகிய இடை. சற்றே விரிந்த இடுப்பு. முகத்தைக் கண்டான். உதடுகளின் சிவப்பைக் கண்டான். மை தீட்டியிருந்த கண்களைக் கண்டான். மூக்குத்தி ஜொலிக்கும் முகத்தைக் கண்டான். நீண்ட கூந்தலைக் கண்டான். இப்படியொரு வசீகர முகத்தை அவன் கண்டதில்லை.
அவள் நடக்க, சிறு கூட்டம் அவளைத் தொடர்ந்தது. குலசேகரனும் உடன் சென்றான். “போதும் மன்னா சென்று விடலாம்” என்றார் மந்திரி. “நாட்டியம் பார்ப்போம்” என்றான் குலசேகரன்.
ரஞ்சிதா கருவறையைச் சுற்றி வந்தாள். சன்னிதி முன் நின்றாள். போர்த்தியிருந்த மேலாடையை அகற்றி அருகிலிருந்த அகிலாவிடம் கொடுத்தாள். இப்போதுதான் முழுத் தோற்றத்தையும் குலசேகரன் பார்த்தான். அவள் நாட்டிய உடையில் இருந்தது அவளைக் கூடுதல் கவர்ச்சிகரமாக்கிக் காட்டியது. அவள் கழுத்து, தோள், மார்பு மேடுகள், வயிறு, இடை, இடுப்பு, இடுப்பிலிருந்து இறங்கிய கால்கள், பாதங்களின் வசீகர அழகு, எல்லாமே கவர்ச்சிகரமாக இருந்தன.
மந்திரியிடம் குலசேகரன் சொன்னான். “நான் மூர்ச்சையடையாமல் இருப்பது என் அதிர்ஷ்டம். அவளை இப்போதே கடத்திச் சொல்லலாம் என்று எனக்குத் தோன்றுகிறது”
“வேண்டாம் மன்னா. இது கோயில். அவள் தெய்வம் தொழ வந்தவள். சிவ பக்தர்களும் இருக்கிறார்கள். இது தகாது” என்றார்.
அவள் சற்று நேரம் சிவனைத் தொழுதாள். பின் சற்று நேரம் பாட்டு இல்லாமல் அபிநயம் பிடித்தாள். பின் அவளே பாடினாள்.
“தோடுடைய செவியன்
விடை யேறியோர்
தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி
என் உள்ளங்கவர் கள்வன்”
இந்தப் பாடலைப் பாடி அபிநயம் பிடித்தாள்.
ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவான உச்சரிப்புடன் பாடி அபிநயம் பிடித்தாள். தோடுடைய செவியன் – என்ற வார்த்தைகளைக் கையைக் காதருகே சென்று அபிநயித்தாள். விடையேறியோர் – என்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது காளை மாட்டை அபிநயித்து அதன்மேல் ஏறுவதுபோல் பாவித்தாள். தூவெண்மதி சூடி – என்ற வார்த்தைகளுக்கு தலையில் மதி சூடுவதை அபிநயித்தாள். வெண்மை என்பதற்குத் தன்னுடைய கைகளை விரித்துக் காண்பித்தாள். காடுடைய சுடலைப் பொடி பூசி – என்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது சுடுகாடு, சாம்பல், பூசுவது என்று அபிநயித்தாள். என் உள்ளங்கவர் கள்வன் – என்ற வார்த்தைகளுக்கு கண்களை மயக்கி, நெஞ்சைத் தொட்டு கற்பனை செய்த உருவத்தைக் கட்டிப்பிடித்து அபிநயம் செய்தாள்.
குலசேகரன் தன் நிலையில் இல்லை. சொக்கியிருந்தான். அவள் சிவனை வணங்கி ஆட்டத்தை முடித்து மேலாடையைப் போர்த்தி நடந்து சென்றாள். பிரமித்து நின்ற பக்தர்களும் உடன் சென்றார்கள். கோயிலுக்கு வெளியே சென்று சாரட்டில் ஏறினாள்.
குலசேகரன் அவளை அடைந்தே தீருவது என்று மனதிற்குள் சபதம் செய்தான். ஒதுக்குப்புறமாகக் கட்டியிருந்த குதிரைகளில் ஏறிச் செல்லும்போது மந்திரி குலசேகரனிடம் கூறினார். “இஷ்டப்பட்டு வரும் பெண்கள் இனிமையாக இருப்பார்கள். நம் அந்தப்புரப் பெண் மாளவிகாவை மன்னர் சொல்லியபடி ரஞ்சிதாவிடம் அனுப்பி அவளாகவே நம்மிடம் வருவதற்கு ஏற்பாடு செய்வோம்.”
“அப்படியே ஆகட்டும்” என்றான் குலசேகரன்.
000

சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
