
மலைகளும், நதிகளும் பூமியின் இயற்கை அங்கங்கள். அசையாதிருப்பதை அசலம் என்பார்கள். அசைவதை சலம் என்பார்கள். அசலம் சலமாகையில் (சலனமுறுகையிலும்) மலைவெடிப்புகள், சலம் அசையாத அசலமாகையில் நதிகளின் உறைவு. மனிதனால் இவற்றை எதிர்கொள்ள முடிவதில்லை. அது இயற்கையின் தன்னிச்சை. இங்கே மனிதன் வாழ்வுக்காக போராட முடிகிறது; மரணத்துக்கெதிராக முடிவதில்லை.
பிரதேசங்களுக்கு தகுந்தபடி தாவரங்கள், பிராணிகள், மனிதர்கள் தகவமைகின்றனர். மலைப்பகுதியில் முகட்களும், பள்ளத்தாக்கும், வெயிலும், பனியும், மழையும், பனிப்பொழிவும், அங்கங்களாக இருக்கும்போது, மரணம் கூட ஒரு தோட்டத்தாவரமாகத்தான் இருக்கிறது அவர்களுக்கு. அவர்களுடைய உடலும் மனமும் அவற்றையொட்டியே அமைகின்றன. மலைவாழ் மக்களுக்கு, உடலுக்கு நிகரான உறுதியானது மனம்.
மலையின் முன்பு நின்று வேடிக்கை பார்ப்பவனை, சுற்றுலா செல்லும் கேளிக்கையாளர்களை மலையும் நதியும் பொருட்படுத்துவதில்லை. மலையின் முன்பு தன்னுடையை இருப்பின் சிறுமையை உணர்பவனுக்கு, தனக்கு முன்பு மலையின் வியாபகத்தை உணர்பவனுக்கு அது வெறும் மலையல்ல. அது தன்னை உரையாடலுக்குத் திறந்துவைக்கும் பிரும்மாண்டமான கல் யானை. நம்முடைய அன்றாடங்களால் ஒருபோதும் இயற்கையுடன் உரையாட இயலுவதில்லை.
‘அப்பன் திருவடி’யில் கனமான, நீண்டதொரு உரையாடல் நாவலுருப் பெற்றிருக்கிறது. வாழ்க்கையின் சாதாரணங்களை, அல்லலின் சராசரிகளை மரணத்துக்கான தத்துவப் பின்னணியில் வைத்து, வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களைப் புனைபவை. சாஸ்வதங்களை நம்பினாலொழிய லௌகீக வாழ்க்கையில் வெற்றி பெறமுடியாது. அவ்வகை வாழ்க்கைப் பயணத்தில் நிச்சயமின்மையையும், அநித்தியத்தையும் மனிதனுக்கு மெல்லச் சுட்டிக்காட்ட இயற்கையால் மட்டுமே இயலுகிறது. ஒரு பேரழிவுக்கு முகம்கொடுக்கும் இடத்திலுள்ள மனித மனங்களின் தொகையுரு, அதுவரையில் இருந்தது போலிருப்பதில்லை. இருக்க முடிவதில்லை.
கேதார்நாத்தில் வெள்ளம் வந்துவிடும் என்ற எச்சரிக்கையில் இராணுவவீரன் சுருளிச்சாமி தனது மனைவி மாளவிகாவையைம், சிறுமகள் சாதாரியையும் குதிரையோட்டி மாதேவிடம் ஒப்படைத்துவிட்டு, மந்திரியின் குடும்பத்தை ஹெலிகாப்டரில் காப்பாற்றி அனுப்பும் பணியில் சென்றுவிட, கடும் சவால்கள் நடுவே அவர்களைக் காப்பாற்ற மாதேவ் படும் பாடுகளும், மனச்சுமைகளும், தப்பிப்புச் சவால்களும், அதில் பெறும் அனுபவங்களும், உயிரிழப்புகளும்தான் நாவல். மலையின் பெருவெள்ளத்தில் என்னவெல்லாம் செய்யவேண்டும், செய்திருக்கவேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்புகளுக்கும், திகில்களுக்கும் சற்று தள்ளிய பாதையில் திட்டமிட்டேதான் நாவல் பயணிக்கிறது.
சற்றும் எதிர்பாராத ஒரு சமயத்தில், தனது குடும்பத்தை இழந்த அதே கேதார் மலையில் பித்தேறிய சுருளிச்சாமியும், காப்பாற்ற முடியாமல் போன மாதேவும் சந்தித்துக் கொள்ளும்போது, தனது குடும்பம் எப்படி மறைந்து போனது என்று கேட்டறியும் சுருளிச்சாமியின் ஆவலுக்கு, மாதேவ் சொல்லும் பதிலும், சில உரையாடல்களாகவுமான கறாரான விளிம்புகளுடன் கூடிய சட்டகத்துக்குள் நாவல் சொல்லப்பட்டிருக்கிறது.
நாவலின் மையமாக சுருளிச்சாமிக்கும் மாதேவுக்குமான உரையாடல், மாதேவுக்கும் பத்ரபாஹு மஹராஜுக்குமான உரையாடல் என்றமைந்திருக்கிறது. முன்னது இருப்புக்கான பரிதவிப்பிலும், பின்னது நிலையாமையின் ஆச்சரியத்திலுமாக இருக்கிறது. அதுதான் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனநிலையை சாத்தியமாக்குகிறது.
முடிந்தவரை நூலாசிரியர் தனது குரலை பாத்திரங்கள் மூலமாகவே வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் என்பதால் கதைசொல்லலை, அபிப்ராயக் குரலை எதிர்ப்பார்ப்பதற்கில்லை.
கேதார்மலையேற்றத்தில், அடிவாரப்பகுதியில் முன்பே வெள்ளம் புகுந்து பாழடித்துவிட, உச்சியில் எப்போது வேண்டுமானாலும் பெருவெள்ளம் பாய்ந்து வரலாம் என்ற ஆபத்து இருக்க, இதுவரை அழிக்கப்படாதிருக்கும் இடைப்பட்டபகுதியும், அங்கிருக்கும் பயணிகளும் பத்திரமாக இருந்தாலும், எந்த அளவுக்கு பத்திரமாக இருக்கிறார்கள் என்பதை எவராலும் கணிக்க முடியாத சூழலில் இந்நாவல் உருவாகிறது. வெள்ளம் மற்றும் அழிவுகள் குறித்த தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி தெரியாமல், எல்லாத் தகவலுக்கும் எதிர்வினையாற்றும் தத்தளிப்பில், மரணத்தை வெள்ள ரூபத்தில் மனதில் சுமந்து அலையும் பாத்திரங்களைக் கொண்டிருக்கும் நாவல். அசாதாரணமான சூழ்நிலைகளில் மனித மனம் சாதாரணமாக இயங்குவதில்லை.
ஒரு மலையை பெரும் கற்குவியல் என்றோ, இயற்கையான பூமியின் மடிப்பு என்றோ, வானத்தையும் நதியையும் தொட்டுநிற்கும் பிரம்மாண்டத்தையோ ரசிக்கவும் வியக்கவும் முடியும். அது புலன்களுக்குட்பட்ட அனுபவத்தை மட்டுமே தரவல்லது. அவை நினைவுகளாகவோ, புகைப்படங்களாகவும், சலனப்படங்களாகவோ, பயணக்குறிப்பாகவோ மட்டுமே விரிய வாய்ப்புள்ளவை. அவை எப்போதும் வெளியுலகை நோக்கித்திரும்பிப் பேசிக்கொண்டே இருப்பவை. அவற்றை மீட்டெடுத்து மீண்டும் ரசிக்க முடியும். அவ்வனுபவத்தை மீள்பார்வை கொள்ளமுடியும்.
ஆனால் மலைப்பயணத்தில் வேறொரு பரிமாணம் இருக்கிறது. அது கலையுணர்வுக்குப் பக்கத்தில், ஆனால் அன்றாடத்திலிருந்து வெகுதூரமான இடத்தில் தியானப் புலமாக இருக்கிறது. இங்கே அது மனிதத் திரளைத் தவிர்க்கிறது. புலன்களைத் தாண்டுகிறது. புலன்களின் சுயபதிவுகளை கேலிசெய்துவிட்டுப் பாலில் மிதக்கும் வெண்ணைய் போல, உடலில் இருந்துகொண்டே உடலைத் தள்ளிவைக்கிறது. புலன்களால் நகர்ந்துகொண்டே புலன்களைத் தள்ளிவைக்கிறது. அத்தகு மிதவைப்பண்பைத் தருவது ஒருவகை ஆன்மீக மனம். மனம் அனுபவங்களை அசைபோடும் தன்மை கொண்டது. ஆன்மீகமனம் மனமிழந்துபோன வெறுமையை அசைபோடுவது. புகைப்படக் கருவிகள் தவிர்க்கப்பட்ட இடத்தில், தன்னையே கருவியாக்கிக் கொண்டு நிற்பது. ஒரு கருவி, அதற்குத் தெரியும் காட்சியைத் தாண்டிய இடத்துக்குச் செல்லுவதில்லை. அத்தகைய நிலைகளில் பொதுப் புத்திகள் எதிர்பார்க்கும் ஆகிருதிகளை நம்மால் காண முடிவதில்லை. அதனால்தான் பல காலமாக இமயத்தில் திருந்துவருபவரும், குகையில் நாம் காணும் பத்ரபாஹு மஹராஜ், தனது ஆரம்பகாலத்தில் ஒரு மருத்துவராக இருந்ததை நாம் வெற்று செய்தியாக மட்டுமே அறியமுடிகிறது. மருத்துவர் என்ற அடையாளம் அழிந்து இமயவாசியாகிய அவர் செய்யும் மருத்துவங்கள் மலைகளிலும் புதர்களிலும் கிடைக்கும் மூலிகைகள் சார்ந்தவையாகவே உள்ளன.
இப்படியானதொரு பரிமாணத்தை உணரவோ, யூகிக்கவோ, ஏற்கவோ முடிந்தால் மட்டுமே நம்மால் அந்த அனுபவத்தைச் சிலாகிக்கும் சாத்தியமுண்டு; அல்லது பிறருடைய அவ்வகை அனுபவத்தை அதனுடைய இடத்தில் வைத்து கௌரவிக்க முடியும். அன்றாடப் புலன்களின் அளவைகளால் அவற்றை அங்கீகரிப்பது கூட சாத்தியமாவதில்லை. இந்நாவல் முழுதுமே இவ்வகையான தளத்தில்தான் பயணப்படுகிறது.
மனிதனுக்கு பெரும் அகநெருக்கடி உண்டாகும்போதுதான் அவன் தர்க்கங்களைத் தாண்டிய இடங்களுக்கு செவிகொடுக்கும் சாத்தியம் எழும். இருப்பின் தாங்கொணா வலி, இறப்பின் அச்சம் இவையிரண்டு மட்டுமே விவரிக்க இயலாத பெரும் நெருக்கடியை, பேரழுத்தத்தைச் செலுத்த வல்லன. அந்த நெருக்கடியை சொல்லாகக்கூட வெளிப்படுத்த இயலாத தவிப்பைக் கொண்டிருப்பவை. அத்தகு கையறுநிலையில் பலிகிடாவாகவும், அதற்கு சாட்சியாகவும் நிற்கவேண்டிய ஒரு நிலை கூடும். அவ்விதமான தன்மாற்றத்தை ஏற்க இயலும் ஒருவரால், ஏற்க நிர்பந்திக்கப்பட்ட ஒருவரால், மலையின் ஒரு பகுதியாக, நதியின் ஒரு பகுதியாக தன்னை உணர்ந்துவிட முடியும்போது, தன்னை பெருவியாபகத்தின் சிறுதுளியாக முழுதாகிக் கரைத்துக் கொண்டுவிட இயலுகிறது.
இந்நாவலில் ஒருவித தற்போதம் கனிந்த ஆன்மீக நிலை, மூன்று பேருக்கு கைகூடுகிறது. ஒன்று- பத்ரபாகு மஹராஜ், அடுத்தவர் குதிரையோட்டி மாதேவ், இன்னொருவர் மாதேவின் இறந்துபோன மனைவி சௌகந்திகனகா. படித்த மருத்துவரான மஹராஜ் பத்ரபாகு, இமயத்தில் அலையும்போது இமயம் அவ்வித மனோலயத்தை அவருக்கு உருவாக்கிவிடுகிறது. பேசாத வழிகாட்டியாக அவரது குரு தர்மானந்த பாபா இருக்கிறார். மாதேவ் ஒரு மலைவாசியாக குதிரையோட்டியாக மரணங்களைக் கண்முன் கண்டு பழகியவனாக இருப்பினும், அது தன்னைச் சார்ந்தவர்களைத் தொட்டு, தன்னையே சீண்டிய கணத்தில் உணர்கிறான்; ஆனால் எவ்வித அனுபவமும் இல்லாமல் இயல்பிலேயே அத்தகு மனநிலையை பெற்றிருந்தவள் அவன் மனைவி சௌகந்திகனகா . இல்லறத்தை ருசிக்காமலிருந்த அவள் காளி கோயிலுக்கு வழக்கம் போல் சென்றிருக்க, சிவப்பு சேலை மட்டுமே தேவதாரு மரத்தில் சிக்கி, அவளது அடையாளமாக மிஞ்சுகிறது.
மாதேவின் மனம், உடல் இரண்டின் பரிமாணங்களையும், வேறு இரு பாத்திரங்களுடன் ஒப்பீட்டுப் புரிந்துகொள்ள முடியும். உடற்திறன் சார்ந்து இராணுவ வீரன் சுருளிச்சாமியுடனும், மனத்திட்பம் சார்ந்து மஹராஜ் பத்ரபாகுவுடனும் ஒப்பிட்டு அறியலாம். ஒரு இராணுவ வீரனுக்கு பனியும் மழையும் வெள்ளமும் கண்டு சமாளிக்கும் திறனும் அவனது வலுவான உடற்கட்டுக்குள் புகட்டப்பட்டிருக்கும். குதிரை ஓட்டும் மாதேவுக்கு அதற்கு இணையாக அல்லது சற்று கூடுதலாகவே அமையப்பெறுவது அவன் வாழ்க்கை தந்த வலிமை. அதேபோல, பத்ரபாகுவின் தெளிவான சிந்தனையும், தத்துவப் பார்வையை உணரும் திறனும் அந்தக் குதிரையோட்டிக்கு அமையப்பெறுவதும், அவனது மலைவாழ்க்கை தந்த திட்பம். அவனுக்கு மரணம் வேறெங்கோ இல்லை, துளை விழுந்த ஷூவை அணிந்திருக்கும் அந்த காலுக்கு அடியிலேயே எங்கோ இருக்கிறது என்றொரு வரி இதைப் புரிந்துகொள்ள உதவும். வாழ்வின் மூலம் அடையப்பெற்ற தத்துவச் சாயல்களுக்கு வார்த்தைகள் இல்லை. செயல்களாகவே அவை இருக்கின்றன.
நமது கவனத்தைக் கவரும் ஒரு அம்சம், நாவலில் விவரிக்கப்படும் வெவ்வேறு விதமான ஓசைகள், பனிச்சிகரங்கள் கொண்ட இமயப்பரப்பை, திருக்கேதாரத்தின் சூழலை காட்சிப்படுத்துவது மட்டுமின்றி ஒலிப்படுத்துகிறது. சிள்வண்டுகள் ஓசை, பனிக்காற்றின் ஊதல் ஓசை, மழை விழும் ஓசை, மழை வலுக்கும் ஓசை, பனிமழையின் ஓசை, அருவி விழும் ஓசை, ஆறு சுழித்தோடும் ஓசை, வெள்ளம் பெருகும் ஓசை, மந்தாகினி நதியின் ஓசை, கோவில் கோஷங்களின் ஓசை, பனிக்குவியல் பாதையில் பாதம் புதையும் ஓசை, காதுக்குள்ளேயே ரீங்கரிக்கும் ஆற்று வெள்ளத்தின் ஓசை. மழை பெய்கிறதா இல்லையா என்பதை காட்டும் சோன்பிரயாகில் நதிகள் கலக்கும் ஓசை என விதவிதமான ஓசைகளை விவரித்திருப்பது நாவலுக்கு அமைதியின் பரிமாணத்தையும், அதைக்குலைக்கும் வெள்ளத்தின் பரிமாணத்தையும் மேலெழுப்பிக் காட்டுகிறது.
மரணத்தின் பிடியிலிருந்து நழுவித்தப்பியவர்கள் குறிப்பாக இருவர். மஹராஜ் பத்ரபாகுவும், மாதேவும். அவர்களுக்கு வாழ்வது என்பதும் மரணிப்பது என்பதும் ஏறக்குறைய சமம் என்றாகி இருக்கிறது. மரணத்தைக் கண்ணால் கண்டு உயிர்தப்பியவர்கள், மாதேவின் அண்ணன் ஹரண்னா உட்பட அனைவருமே புத்திபேதலித்து திரிகிறார்கள். மரணத்தின் வாயிலிலிருந்து தப்பி வாழ்க்கையின் வாயிலுக்கு திரும்பியவர்களின் நிலை மனச்சிதைவாகவே இருக்கிறது. மஹராஜ் பத்ரபாகுவுக்கு வாழ்வும் சாவும் இரண்டு திரியில் இணைந்து எரியும் ஒரே சுடர். மாதேவுக்கு அவை இரண்டும், இருபுறமும் எரியும் மெழுகுவர்த்தி.
ஒரு சாதாரண குதிரையோட்டியின் உன்னதமான மலைவாழ் மனம் வெளிப்படும் இடமொன்று நாவலின் அழகானதொரு புள்ளி. கேதார்நாத்தை வெள்ளம் சூழும் அபாய முன்னெச்செரிக்கை அறிந்து, அவசரமாக அங்கிருந்த தனது மனைவி மாளவியையும், சின்னஞ்சிறு மகள் சாதாரியையும் குதிரைக்காரன் மாதேவிடம் பத்திரமாக கீழே கொண்டுசேர்க்கும் பொறுப்பை நம்பித் தந்துவிட்டு, இராணுவவீரன் சுருளிச்சாமி அமைச்சரின் குடும்பத்தை ஹெலிகாப்டர் மூலம் அனுப்பிவைக்கும் பணிக்குச் செல்கிறான். தனது குடும்பத்தை இரண்டாம் பட்சமாக்கி, அமைச்சரின் குடும்பத்துக்கு முன்னுரிமை தரும் இராணுவப்பணி. ஆனால் உயிராபத்தான மிகப்பெரும் சவால்களை சந்தித்து அந்த இருவரையும் தனது சகோதரனுடன் பனிப்பொழிவிலும், இருளிலும் தப்பித்து, பாதையே இல்லாத பனிப்பிரதேசத்தில், அக் குழந்தையைத் தோளில் சுமந்துகொண்டு நீண்ட தூரம் நடந்து, பத்ரபாஹு மஹராஜ் குகையில் அடைக்கலம் பெற்று, குழந்தைக்கு மருத்துவ ஏற்பாடுகள் செய்து, உதவிக்கு கிராமத்திலிருந்து ஆட்களை அழைத்துவருவதற்காக திசைதெரியாத பனிப்பொழிவில் தன்னையே பணயம் வைத்துச் செல்லும் மாதேவ், வெள்ளத்தில் விழுந்து பாறையிடுக்கில் சிக்கி உயிர்தப்ப, குகையிலிருந்த அனைவரும் வெள்ளத்தில் கரைந்துபோக, தோற்று அழும் மாதேவ் மிஞ்சுகிறான். ஆனால் நாவல் இந்தக் கதையல்ல.
‘இராணுவவீரனுக்கு எல்லா நிமிடத்திலும் கட்டளைக்கு கீழ்ப்படியும் உடம்பும் மனமும். ஆனால் போர் நெருக்கடிகளில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சுதந்திரம் அவனுக்கு உண்டு. நீயோ சாதாரண குதிரையோட்டி. உன்னிடம் என் மனைவியையும் மகளையும் நான் ஒப்படைத்ததால், உன் உயிரையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு துன்பப்பட்டிருக்கிறாயே ஏன்? இவ்வித கஷ்டம் இல்லாமல் நீ மட்டும் கோவிலிலேயே தங்கியிருக்கலாமே’ என்று கேட்கும்போது, ஏனென்ற காரணம் தனக்கு தெரியவில்லை. ஆனால் இருவரையும் உயிரோடு கொண்டு சேர்ப்பது மட்டுமே என்னுள் இருந்த ஒரே எண்ணம் என்கிறான். இது கேதாரின் மலைவாழ்க்கை அவனுக்குள் ஊட்டியிருக்கும் நெறி. இதே நெறியால்தான் புரண்டோடும் வெள்ளத்தில் குதித்து பாறை மேல் தனியாக நிற்கும் சாதுவைக் காப்பாற்றிவிட்டு, தான் வெள்ளத்தில் மறைந்துபோகிறான், மாதேவின் தம்பி அமர்நாத். ஹரண்ணாவும் அப்படி தன்னுயிரைச் துச்சமாக நினைத்து, அமர்நாத்தை தேடி ஓடியவன்தான். சற்று ஊன்றி யோசித்தால், இது ஆபத்தில், தனது எஜமானனை எவ்விதத்திலாவது காப்பாற்றிவிட்டு, தன்னை இழக்கத் தயாராக இருக்கும் குதிரையின் பண்பு அல்லவா என்பது நமக்குப் புரிய ஆரம்பிக்கிறது. கேதார்நாத்தின் குதிரையோட்டிகளும் மற்றொருவகைக் குதிரைகள்தான். இருவருமே இமயத்தின் பிள்ளைகள். தனது குதிரைக்கு தன் தம்பி அமர்நாத்தின் பெயரைத்தன் வைத்திருக்கிறான் மாதேவ்.
நாவலாசிரியர் மஞ்சுநாத், சூழலியல் சார்ந்தும், தீர்த்தயாத்திரை குறித்தும் இரண்டு காத்திரமான விமர்சனங்களை வைக்கிறார். பாதைகள் அமைப்பது, பாலங்கள் கட்டுவது, அணைகள் கட்டுவது என்று இயற்கையைச் சிதைக்கும் மனித சுயநலத்தை, அரசுகளின் தடித்தனத்தை, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் அதிகாரத்துக்கு எதிரான இடைவிடாத போராட்டமும், அதன் தோல்வியும், அதனால் ஏற்படும் சீரழிவையும் கூர்மையாகப் பதிவு செய்கிறார். தில்லியில் இருந்து உட்கார்ந்துகொண்டு பார்த்தால் எல்லாம் சாதாரணமாகவே தெரியும். உயிரிழப்பு எண்ணிக்கை 30,000 என்றால் ஒரு பூஜ்ஜியத்தை மட்டும் குறைத்து 3000 என்று சொல்லும் எனும் நக்கலடிப்பு நாவலில் உண்டு. மின்சாரம், சாலை எல்லாம் உங்கள் வசதிக்குத்தன் என்று மக்களிடம் சொல்லி ஆனால் அது அவர்களையே அழிக்கும் செயல்பாடுகளாவது குறிக்கப்பெற்றுள்ளது. ஆட்சிகள் வேறுபட்டாலும் அரசாங்கம் ஒன்றுதான் என்றொரு வரி வருகிறது.
மற்றொன்று தீர்த்தயாத்திரையின் அர்த்தமறியாத பக்தர்கள் கூட்டம். இது வலுவாக பேசப்பட்டிருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வந்து ஏன் கடவுளிடம் அதைக்கொடு இதைக்கொடு என்று பிச்சை எடுக்கவேண்டும்? அதற்காகவா தீர்த்தயாத்திரை? இதைச் சமவெளிகளில் உள்ள கடவுளரிடம் சுகமாக சென்று கேட்கலாமே? அருள் வேண்டி, கடவுளைக் காண வந்திருந்தாலும் மரணம் வந்தால் கடவுளைப்பற்றி யாருமே நினைப்பதில்லையே போன்ற கூர்மையாகவே கேள்விகள் இருக்கின்றன. யோகிகளும், முனிகளும் வந்து ஆன்மத்தெளிவு பெறுவதற்கான இடம் திருக்கேதாரம். தீர்த்தயாத்திரையின் தத்துவம் தெரிந்தால் கோவிலுக்குள் செல்லாமல் பிரும்மாண்டமான வெளியையும், கோவிலின் கோபுரத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு ஒருவன் இருப்பான் என்று ஆன்மத்தேடலின் கனிவான உச்சப்புள்ளிக்கு அருகில் உள்ள ஒரு வரியை எழுதுகிறார்.
இங்கு நெருக்கமாக நம்மோடு பயணிக்கும் பயணி மரணம்தான் என்ற ஒரு வரி நிறையச் சொல்கிறது. மிகக் குறைந்தவர்களே அறிந்த, செல்லுதற்கு தீரம் தேவைப்படும் இடமான மஹா பிரயாகைக்கு சென்று தன்னையே கரைத்துக் கொள்பவர்களுக்கான இடம் ஒன்றுண்டு. ஆனால் அது தற்கொலைக்கான இடமில்லை என்பதை மிகத்தெளிவாக தத்துவார்த்தமாக ஒரு குதிரைக்காரன் குரலில் விளக்கியிருக்கிறது நாவல்.
நாவலில் ஒரு அருமையான, பக்குவப்பட்ட இடமொன்று இருக்கிறது. மாதேவ் பயணி ஒருவரை தன் குதிரை அமர்தேவ் ஏற்றி வருகையில் எப்போதும் இல்லாதபடிக்கு அவரை ஓரிருமுறை கீழே தள்ளி விடுகிறது. கோபமுற்று குச்சி சிதறும்வரை அடிக்கிறான். அந்த பயணி ‘குதிரையை அடிக்காதே. அது எதையோ சொல்ல முயல்கிறது. நீ புரிந்துகொள்ளவில்லை. நான் இப்போது கேதாருக்கு வரவில்லை என்று இறங்கிக்கொண்டு, குப்தகாசியில் சிவனை வழிபட்டதே கேதார் சென்ற திருப்தி. வாய்ப்பிருந்தால் மறுமுறை வருவேன்’ என்று திரும்பி விடுகிறார். அதைக் குறிப்பிடுகையில் ‘குதிரையின் செய்தியை நீ தவறவிட்டுவிட்டாய்’ என்று மஹராஜ் சொல்லும்போது மாதேவ் அதை உணர்கிறான். சிள்வண்டுகளின் பெருத்த கிறீச்சிடல். கூட்டம் கூட்டமாக குகையின் முன் வந்து விழும் ஸ்னோகாக் பறவைகள் என்று ஜீவராசிகள் நிறைய எச்சரிக்கை பேசுகின்றன.
மலை அனுமதித்தால்தான் நாம் நடக்கமுடியும்; ஒரு முறை சென்ற பாதையில் மீண்டும் திரும்புதல் அரிது. மலைப்பாதை ஒருவழிப்பாதையே; இமயம் வருபவர்களுக்கு ஆபத்து பொதுவானது; அது எங்குமிருக்கிறது; மலையேற்ற அயர்ச்சியின் முதல் அறிகுறி தோற்றப்பிழை இமயத்தில் ஒரு சிறுகல் புரண்டாலும் அது மந்தாகினியில் வந்தே விழும்; இங்கு எல்லாமே மந்தாகினியோடு சம்மந்தப்பட்டதாகவே உள்ளன போன்ற வரிகள் வெறும் கற்பனைகளாக இருக்க முடியாதவை.
நாவலில், பாண்டவர்கள் இறுதி நாட்களில் இருந்த இடம் என்பதைச் சுட்டும் இடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆதிசங்கரரின் சமாதிக்கு என்னவானது என்பதை மறைமுகமாக சொல்லிப் போயிருக்கிறது என்றாலும் கேதாரத்தை புனரமைத்த அவருடைய பங்கையும் போஜராஜனின் பங்களிப்பாக நம்பப்படுவதையும் பேச நழுவவிட்டிருக்கிறது.
சோரபரியிலிருந்து மழை வெள்ளத்தில் மலைப்பகுதிகள் பெயர்ந்து உருண்டு எல்லாவற்றையும் அழித்துக் கொண்டு பேரழிவுடன் ஓடி வந்து கொண்டிருக்க, ஒரு பெரும் பாறை கேதார் சந்நிதிக்கு பின்னால் அப்படியே அரண்போல நின்றுவிட, பாய்ந்துவரும் வெள்ளம் அதனால் தடைபட்டு விலகி கோவிலைக் காப்பாற்றியிருக்கும் பேராச்சரியகரமான நிகழ்வை (பீம் ஷிலா என்று பெயர் எழுந்துவிட்டது), மேலோட்டமாகக் கடந்து போயிருக்கிறது. வெள்ளப் பேரழிவின் தடயமாக இன்று நமக்கு காணக்கிடைப்பதும், அதன் சாட்சியாய் நிற்பதும் அந்த பெரும்பாறையும் அதன் மீது படிந்திருக்கும் ஆன்மீக நம்பிக்கையும்தான்.
தப்பிப் பிழைக்க சுருளிச்சாமி பெற்றிருக்கக்கூடிய சவால்கள், தடயமற்றுப் போன ராம்பூர் மக்கள் குறித்த விவரங்கள்,போன்றவற்றைப் பற்றிப் பேச இடமிருந்தும், வெள்ளச் சேதத்தையும் உடனிருப்பவர்களைப் பற்றிமட்டுமே ஒரே குரலில், விடாது பெய்யும் மழைபோல பேசிப்போவதால் நாவலில் ஒற்றைத்தன்மை மட்டுமே வெளிப்பட்டிருக்கிறது. வரலாறு, தொன்மம் என்ற கேதாரத்தின் இரு அம்சங்களும் மேலும் கூர்மைப்பட்டிருக்கலாம்.
ஆக்கியானம் என்பது முன் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்வதோடு கேட்டதும், பார்த்ததுமான அனைத்தையும் வேறொருவரிடம் விவரித்தல் என்று ஒரு விளக்கம் நாவலில் வருகிறது. நாவல் செய்திருப்பதும் அதைத்தான்.
மிகவும் அரிதான கேதார் வெள்ளத்தை, அதன் ஆன்ம மற்றும் இயற்கைச் சூழலின் பின்னணியாக வைத்து தத்துவார்த்தமாக செல்லும் நாவலில், மொழி, சாதாரணமாக தகவல்களின் மொழியாக, நினைவுகூறலின் ஊடகமாக மட்டுமே செயல்பட்டிருக்கிறது. ஆனாலும் அருமையாக அமைந்துவிட்டிருக்கும் பல வரிகளும், உரையாடலின் பகுதியாகவே இருக்கின்றன. ஆசிரியர் தனது குரலை ஒடுக்கிக்கொண்டிருக்க முனைந்திருக்கிறார் அதனால் (பெருமளவும்) இந்த அளவே சாத்தியப்பட்டிருக்கிறது என்றே கருதலாம்.
வெள்ளத்தின் நடுவே பாறை மேல் ஒற்றையாக அமைதியாக மரணம் வந்து தழுவட்டும் என எதிர்பார்த்துக்கொண்டு ஒரு உருவம் நிற்கிறது. எல்லோரும் பார்த்திருக்க, அவரைக் காப்பாற்றி அழைத்துவர வேண்டும் என்று அமர்நாத் வெள்ளத்தில் குதித்து மீட்கும் போராட்டத்தில், அவர் பிழைக்கிறார். அவன் வெள்ளத்தில் கரைந்துபோகிறான். ஒரு மூங்கில் கழியைத் தந்துதான் அவரைக் காப்பாற்றுகிறான். அது அவன் கையில் இருந்தால் தப்பித்திருப்பான். தன்னைக் காப்பற்ற அவன் தந்த அந்தக் குச்சியை தன்னுடனேயே எடுத்துக்கொண்டு திரிகிறார் மஹராஜ். அநித்தியத்தின் உச்சியிலும் தனக்கு மரணமா, வாழ்வா என்பதை மனிதனால் கேட்டுப் பெற்றுவிட இயலுவதில்லை.
அபாயமான மலையேற்றத்தில் குதிரைமேல் அமர்ந்திருக்கும் பயணி, அடிக்கடி கைப்பைகளை நழுவவிட ஒவ்வொரு முறையும் குனிந்து எடுத்துத் தந்துகொண்டு வரும் குதிரையோட்டியின் பொறுமையும், தேநீர் அருந்த வழியோரக் கடையில் நின்றால் கூட அவசரப்படுத்தும் பயணியும், இடம் வந்து இறங்கியவுடன் பேரம் பேசும் பயணிகளின் மனிதச்சிறுமையும், கூட்ட நெரிசலில் ஒருவரை வீழ்த்தி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் மனிதச் சுயநலமும், மிதக்கும் பிணங்களின் மேல் கால் வைத்து தப்பித்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் மனிதச் சாமானியமும் என பல நிறங்கள் காணக்கிடைக்கின்றன.
இந் நாவலில், தப்பிப்பிழைத்து வாழ்வைத் தொடரும் திசையை நோக்கி சுருளிச்சாமியும், பிழைத்தும் அதைத் தொடருவதில் அர்த்தமில்லை என்று மாதேவும் எதிரெதிராக பிரிந்து செல்கிறார்கள். அதுவரை கூடவே பேசிக்கொண்டு வந்த மாதேவ் ‘ஜெய் கேதார்’ என்று முழங்கும்போது, இப்போதே என்ன அவசரம், கிராமத்தை அடைய தூரம் இருக்கிறதே என்று சந்தேகப்பட்டு திரும்பி மாதேவைத் தேடும்போது அவன் தென்படாமல் போவதும், பனிச்சரிவு உண்டாகி இருப்பதை பூடகமாகச் சொல்வதில், அவன் கேதாரத்தின் பகுதியாக விட்டதை குறிப்பாக உணரமுடிகிறது.
இமயப்பனியையும், கேதார்நாத்தையும் காணச் செல்பவர்கள் அதுவரை கண்டிராத தம்மைத், தாமே கண்டுகொள்ளச் சாத்தியங்கள் நிறைந்த மலைப்பிரதேசம் நாவலில் தென்படும். நதியையும் மலையையும் நாம் எவ்வளவு மாற்றியமைத்தாலும் அது தனக்கான வழியை எளிதாக ஏற்படுத்திக் கொண்டுவிடும்; அதற்கான விலை மனித அழிவுகள். மனிதன் ஏற்படுத்திய காயத்தை இயற்கை தானாக சரிசெய்து கொள்ளும். மனிதன் இயற்கையை அழிக்கும்போது அது வேறொரு அழிவால் தன்னை சரி செய்துகொண்டுவிடும்’ என்று நாவலில் வரும் வரிகள் கேதார்நாத்தில் உண்டான வெள்ளத்துக்கான பின்னணி என்றால், வாழ்வுக்கும் மரணத்துக்குமான சாமானிய வாழ்வின் போராட்டத்தை, இருப்புக்கும் இன்மைக்குமான, அநித்தியத்துக்கும், முழுமைக்குமான நீண்ட கனமான தத்துவார்த்த உரையாடலாகச் சமைத்திருப்பது நாவலின் நல்ல முயற்சி.
000
அப்பன் திருவடி – நாவல், எதிர் வெளியீடு.

ரமேஷ் கல்யாண்
எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். இவரது படைப்புகள், இலக்கியக் கட்டுரைகள் தமிழ் இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளியாகியுள்ளன. ‘திசையறியாப் புள்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
