பிச்சை : க.கலாமோகன்  

நான்  பிச்சை வாங்குபவன். இது என் தொழில். இந்தத் தொழிலால் எனக்கு நட்டங்களே இல்லை. இலாபங்களே உள்ளன.  எனக்குக் காசுகளையும் பொருள்களையும் தருவோருக்கு இது எனது   தொழில் எனத் தெரியாது. தெரிந்தால் நான் எப்படி ஈசியாக வாழமுடியும்? 

தொடக்கத்தில் நான் நல்ல பிரஜையாக இருந்தேன். எனக்கு நிறையத் தொழில்கள் கிடைத்தன. ஆனால், சம்பளம் கம்மி (குறைவு).  களவாக ஒருபோதுமே  தொழில்களைச்   செய்யவில்லை. உண்மையான தொழில்களையே  செய்தவன்.  

எனக்கு ஒவ்வொரு மாதமும் வேலை செய்யும் இடத்தில் சம்பளத் தாள்கள்  கிடைக்கும். இந்தத் தாள்கள் வருமானவரி இலாகாவுக்குப் போகும் என்பது எனக்குப் பிந்தியே தெரிந்தது. வருடா வருடம் இலாகாவுக்கு நிறையக் கட்டினேன். இந்தக் கட்டல் தொகை இல்லாதிருந்தால்  நிச்சயமாகக் ஹோட்டல் ஒன்றை அல்ல  கோட்டை ஒன்றையே  நான்  வாங்கியிருக்கலாம்.  

உண்மையான தொழில் செய்வதை நண்பர்கள் அறிந்தால் எனக்குக்  கிடைப்பது அதிக சிக்கல்களே.   அவர்கள்  ஒவ்வொரு நாளும் வந்து “உதவி” கேட்பர். ஆம்! காசுதான். இவர்கள் சில வேளைகளில் தமது செலவில் மது வாங்கி வந்ததால் அவர்களுக்குக்கான  உதவியை  எப்படி மறுக்கமுடியும்? 

இப்போதும் நான் திருமணமாகாதவனாகவே  அசைகின்றேன்.  உழைப்பும், வருமான வரி கட்டுதலும், நட்பு  சார்பாக மதுப்போத்தல்களைக் காலியாக்குவதும்  எனது கடமைகளாக  உள்ளன. இந்தக் கடமைகளுக்குள்  எனது ஊரையும், வீட்டையும் மறத்தல்  சின்ன விசயமா? ஆம்! தேசத்தையும்தான்  நான் மறந்துபோனேன். 

திடுதிப்பென நான் தொழில்செய்த உணவக முதலாளியிடம், “நான் இந்த மாதத்துடன் வேலை செய்வதை நிறுத்துவேன்.” என்று சொன்னபோது அவர் நடுங்கினார், பதைபதைத்தார், இதய வருத்தம் வந்ததுபோலவும் காட்டிக்கொண்டார். 

இவரே ஒவ்வொரு நாளும் என் வேலையில் பிழை பிடிப்பவர், எனக்குத் தக்காளி வெட்டுவது   தெரியாது என்று நக்கலடிப்பவர், சேவகிகளைச்  சுழட்டுதல் (கவருதல்)  தடை என்பவர்,  வேலை செய்யும்போது பியர் குடிக்கக் கூடாது என்பவர்… ஆம்,  இவர்தான் எனது முதலாளி.  

இவரைக் காட்டிலும் இவரது மனைவி வெண்தலைக்  கூந்தலுடன் செழிப்பான முகத்தைக் கொண்டவள் மட்டுமல்ல,  நான் தக்காளி வெட்டும்போது சில வேளைகளில்  எனக்கு உதவியும்  செய்பவள். அவளது முகம் சோபியா லோறேனின் (Sophia Loren)  முகத்தைப்போல. அவள் ஓர் பழைய நடிகைதான். ஆனால் அவள் மீது எனக்கு இப்போதும் விருப்பு. 

முதலாளியின் மனைவியினது  முகம் தேவதையின் முகம்போல. அவள் மீது பல வாடிக்கையாளர்களிற்கு  விருப்பு வந்தது என்பது எனக்குத் தெரியும்.   சரி, எனக்கும்தான்.  

ஆனால், அவள் மீதான எனது காதல்கள் ஒவ்வொரு தினமும் கருகிப் போகின. காரணம் முதலாளிதான்.  ஆம்!  பாரிஸ் எனும் கலைநகர், காதல் நகர்  எனக்குச்  சிலவேளைகளில்  கொலைநகர் போலவும் பட்டது.  

உண்மையிலேயே நான் உணவகத்துக்குப் போனது தொழில் செய்வதற்காகத்தான்.  காதல் செய்யவல்ல. வேலை இல்லாமல் எதுவும் கிடைக்குமா? முதலில் வாழ்வு… பின் காதல்… அதன் பின் இன்னும் பல. ஆனால் காதல் என்பது இனிமைகளை, சில வேளைகளில் துன்பங்களைக்  காவும் கொடிய நோய்தான்.     

தக்காளி வெட்டுவதில் இல்லாத இன்பம் காதல் செய்வதில்  இருந்தது. அவள் என்னைக் காதலித்தாளா? நான் அவளைக் காதலிப்பது அவளுக்குத் தெரியுமா? எனது காதல் கனவுக் காதலாகவே இருந்ததால்,  வேலையை விடுவதைப் போல காதலையும் விடுவது என நினைத்துக்கொண்டேன். 

“நான் உங்களைச்  சில நேரம் விமர்சித்தது தொழிலில் நீங்கள் நல்ல ஆர்வம் எடுக்கவேண்டும், நீங்கள் பிரான்சின் மிகப்பெரிய சமையல்காரனாக வரவேண்டும் என்பதற்காகவே. சில வாரங்களாக நீங்கள் தக்காளிகளை மிகவும் சிறப்பாக வெட்டுகின்றீர்கள், எனது மனைவியும் உங்களது தக்காளி வெட்டுகள் யூ டியூப்பில்  போடப்படவேண்டும் எனச் சொன்னார்.  நீங்கள்  வெங்காயங்களை உரிப்பதுவும்  மிகச்  சிறப்பானது…. நீங்கள் வேலையை விடவேண்டாம். உங்களுக்கு 100 ஈரோ கூட்டித் தருவேன். வேலையில் நீங்கள் விலகாததை  நானும் விரும்புகின்றேன், எனது மனைவியும் விரும்புகின்றாள்.”  என விளக்கம் தந்தபோது என்  மனம் ஒரு வித சந்தேகத்தில்  நெகிழ்ந்தது.   

நிச்சயமாக அவரது உரையாடலால் அல்ல, அவரது மனைவி எனது தக்காளி வெட்டுகளை மேவிச் சொன்னதை அவர் வாயில் இருந்து கேட்டதே. 

முதலாவது தடவையாக எனது முதலாளி தனது மனைவி என் புகழ் பாடியது எனச் சொல்கின்றார். சிரிப்புத்தான் வந்தது.  அவர் கடையைக் கவனிப்பதைக் காட்டிலும் தனது மனைவியைக் கவனிப்பதை எனது கள்ள விழிகள் அறியும். தனது மனைவியைக் “காட்டி” மேலும் தனது உணவகத்திற்குள்  என்னைப் பூட்டுவதா அவரது நோக்கு? 

நிச்சயமாக எனக்கு இந்த வேலையில் துண்டாகவே விருப்பம் இல்லை. அவரது மனைவியில் நிறைய விருப்பம் உள்ளது. அவள்  ஓர் கவர்ச்சிக் குடம். அதற்குள் விழுவதற்கு எனக்குள்  விருப்பம். ஆனால்  எனக்கு  உண்மை தெரியும். அவள் அவனைப் பிரியமாட்டாள். இந்த உண்மையைத்  தெரிந்தும் அங்கே நிற்பது மொக்குத்தனம் அல்லவா? 

அங்கே நின்றால், என்னை அவள் காதல் செய்வாளா? அது எனக்குத் தெரியாது.  என்னை வருமானவரி இலாகாதான்  காதல் செய்யும். எனது நண்பர்களும் என்னைக் காதல் செய்வார்கள். சிறிய வியாபாரக் கடைகளில் நிறைய மதுப் போத்தல்களும் அழியும்.   

இதனால்தான் நான் பிச்சை எடுப்பது என முடிவெடுத்தேன். இந்த முடிவு மிகவும் ஆரோக்கியமானதாகப் பட்டது. பிச்சை எடுப்பதால் கிடைக்கும்  நலன்களை நான் மிகவும் ரகசியமாகவே அறிந்திருந்தேன். இவைகளை  நான் எனது  குடி நண்பர்களிடமும் சொல்லவில்லை. சொன்னால் எனக்கும் கேடு, எனக்குத் தருபவர்களுக்கும் கேடு. 

முதலாளியின் முதலாளியாக என்னை நினைத்து  நான் இந்த வேலையை விட்டு விலகுவதில் துணிச்சலாக   இருந்தேன்.  

இப்போது நான் எங்கும் போகலாம், எங்கும் கையை நீட்டலாம். ஆனால்   இது  ஓர் தொழில்,  ஓர் கலையும் கூட.  இந்தக் கலையை நாம் எந்த இடத்திலும் நிறுத்தலாம், எமக்குள் உள்ள பாத்திரங்களை, குரல்களை மாற்றலாம், பாடலாம், ஆடலாம், மயங்கி விழலாம்.   

இதுதான் சுதந்திரம் இல்லையா?   

பிச்சை. ஓர் வெட்கத்துக்குரிய காரியமில்லை. எங்கும் இது ஓர் தொழில் எனச் சொல்லப்படாமல் உயிர் வாழ்கின்றது.  ஒரு வகையில் பிச்சை எடுப்பது என்பது ஓர் நடிப்பே. 

முதலில் நான் மெத்ரோக்களில் பாட நினைத்தேன்.   

ஆனால், எனது குரலை நான் கேட்டாலே அது எனக்கு வெறுக்கும்.   பாடும் குரலே  இல்லாதவன். சிலர் ரெக்கோட்டில் பாடலைப் போட்டு வாயை மட்டும் ஆசைப்பர்.  ஆனால், என்னிடம் ரெக்கோட் இல்லாததால்   எனது மோசமான குரலில் பாடவே நினைத்தேன். 

சில கணங்களின் பின் எனது உதடுகள் திறப்பட்டன. நான் சில நிமிடங்களில்  பாடகன் ஆனேன்.  

ஓர் வெள்ளைக் கிழவி எனக்கு  முன் வந்து  ஓர் தாளை  என் பிளாஸ்ட்டிக் கோப்பைக்குள் நுழைத்து  மறைந்தாள். 

தாள். சிறிய தாள் அல்ல. 50 ஈரோ.  இது அதிசயம்தான். தவறுதலாக இந்தத் தாளைப் போட்டாளோ?  

அடுத்த நாள் நிறையச் சில்லறைகள் கிடைத்தன. அது தாளினது நாளாக இல்லாதிருந்தது. 

மூன்றாவது நாள் வேறு ஓர் கிழவி. அவள் ஓர் மணிபேர்சை என்முன் வைத்து மறைந்தாள். திறந்தேன். நிறையத் தாள்களும் சில்லறைகளும்.   

நான் கிழவியைத் தேடி உடனடியாக வெளியே சென்றபோது, அவளைக் காணவில்லை. முதலாளியின் மனைவியைத்தான் கண்டேன். நான் அவளைப் பார்த்தபோது, என்னை அவள் வித்தியாசமாகப் பார்த்தாள். எனது முகத்தில் வளர்ந்த தாடியை வைத்து, என் அடையாளம் அவளுக்கு மறந்துவிட்டதோ? 

சில கணங்களில்…    

“நீயா?” 

“ஆம், நான் தான்.” 

“சந்தோசம், இப்போதும் உனது குரல் இனிமையாக இருக்கிறது. நீ என்ன  செய்கின்றாய்?” என்று இனிய குரலில் கேட்டாள். 

“நான் பிச்சை எடுக்கின்றேன்.” எனச் சொன்னபோது “பிச்சையா?” எனக் கேட்ட அவளது குரலில் கலக்கம் கலந்துள்ளதை அறிந்தேன். 

“நீ பிச்சை எடுக்கவேண்டாம். நான் உனக்கு நிறைய நிதி உதவி செய்வேன். மீண்டும் நீ எமது உணவகத்திற்கு வா, சுதந்திரமாக வேலை செய். எனது கணவனிற்குத் தக்காளி வெட்டுவது எப்படி   என்பது தெரியாது. நீதான் அழகாக வெட்டுவாய்” எனச் சொன்னபோது அவளது இதழ்களே    தக்காளி நிறத்தில் மாறின. 

“மேடம் கத்தரின், பிச்சை எடுப்பது இலகுவானது. அதில் நிறைய இலாபம். தொழில் இல்லாமல் அதிக பணங்கள்  எடுக்கலாம்.  ஆனால், நடிப்புகள் தேவை.” 

“நீ ஓர் நடிகனா?” 

“நடிப்பு இல்லாமல் எந்த உடல்களும் இல்லை.” 

“நீ தத்துவம் படித்தவரா?” 

“அனைத்து உடல்களிற்குள்ளும் தத்துவங்கள் உள்ளன. 

ஏன் நான் சில ஆண்டுகளாக உங்களது உணவகத்தில் இருந்தேன் என்பது உங்களிற்குத் தெரியுமா?” 

“தெரியும்.” 

“தெரியுமென்றால்?” 

“எனக்காகவே.”     

“உண்மைதான்.” 

“ஏன் பிச்சை எடுப்பதில் அதிக இலாபம் உள்ளது?” 

“மெத்ரோவிற்குள்  வா. காரணம் தெரியும்.” 

நாம் அங்கு சென்றோம்.  எனது பாய்கிற்குள்  உள்ள ஊத்தைச் சாரத்தை எடுத்து மெத்ரோ நிலத்தில் விரித்தேன். எனது வேண்டுகோளின்படி  அவளும் என் அருகில் அமர்ந்தாள். 

உதடுகளை  நான் திறந்தேன். 

“நாங்கள் அகதிகள். நாம் உக்ரேனியாவில்  இருந்து தப்பி வந்தோம். எனது மனைவி 3 நாள்கள் சாப்பிடவில்லை. உதவி செய்யுங்கள்.” 

“நீங்கள் சொல்வது பொய்தான். பொய்கள் இல்லாமல் வாழ்வுகள் உள்ளனவா? நிச்சயமாக நான் உங்களிடம் மெய்களைக் கேட்கமாட்டேன்.” எனச் சொன்ன வயோதிபர் கத்தரினிற்குச்  சில தாள்களைக்  கொடுத்தபின் மெத்ரோவில் உள்ள ஓர் விளம்பரத்தைப் பார்த்தார். 

“எண்ணு!” எனச் சொன்னேன். 

“60 ஈரோ. அதிசயம்.” அவளது முகத்தில் ஆச்சரியம் குவிந்தது.  

கிழவன் மீண்டும் எம்முன் வந்தார்.  

“எனக்கு 83 வயது. நான் ஓர் வங்கியில் மிகப் பெரிய தொழிலில்  இருந்தவன். எனது மனைவி இறந்துவிட்டாள். ஆம், 20 வருடங்கள் ஆகுகின்றன.  நீங்கள் விரும்பினால் எங்கள்  வீட்டில் வாழலாம். இலவசமாக.” 

“நான் இவருடன் வாழ்வதில்லை” எனச் சொன்னாள் கத்தரின். 

“ஏன் நீங்கள் இவருடன்?”. 

“எனக்கு ஓர் பெரிய உணவகம் உள்ளது. இவர் அங்கு  தொழில் செய்தவர் என்று சொன்னாலும் அது தொழில் அல்ல. என்னைத் தியானிப்பதே இவரது தொழிலாக இருந்தது.” 

“ஆம், அதற்கு உங்களது அழகு காரணமாக இருக்கலாம். சரி,  நீங்கள் எனது வீட்டில் வாழமுடியுமா? இருவரும் அங்கு  சுகமாக வாழலாம். கிராமம் ஒன்றில் எனக்கு ஓர் வீடு உள்ளது. நான் அங்கு அடிக்கடி  செல்வேன்.” 

“கத்தரின் சம்மதமா?” 

“நான் எனது கணவனைப் பிரிய முடியாது. ஆனால்?” 

“ஏன் ஆனால்?” 

“உங்களோடு களவாக உறவு செய்ய விருப்பம்.” 

கிழவர் நாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். 

“உங்கள் வீடு எமக்குத் தேவை.”  என நான் கிழவரிடம் சொன்னேன். 

அவர் திறப்பைத் தந்தார்.  

அவர் தந்தது திறப்பு அல்ல,  ஓர் பெரிய பிச்சை என்று கத்தரினிற்கு ரகசியமாகச் சொன்னேன்.  

000

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss