
மொழியும் வரலாற்றின் முரணியக்கமும்:
“[நெல்லையப்பர்] பிரகாரத் தூண் ஒன்றில் கையில் குறுங்கத்தியுடன் குரங்கு ஒன்று வாயில் இளிப்புடன் தனிச்சிற்பமாக இருக்கிறது. நான் பள்ளியில் படித்தபோது, என் அப்பாவைக் குத்திக் கொல்வதற்காக இந்தக் குரங்கைப் போல வெவ்வேறு இடங்களில் கற்பனைகளில் ஒளிந்து காத்திருந்தேன். கையில் கத்தியை வைத்திருக்கும் குரங்கு ஏன் அப்படி இளிக்கிறது.”
ஷங்கர்ராமசுப்ரமணியனின்ன் கவிதையில் சிரிக்கும் குரங்குகள் எதையும் கேலி செய்கின்றனவா? இல்லை பிறப்பின் அடிப்படையில் நமது அவசரத்திற்கும் அதன் தாமதத்திற்குமான இடைவெளியை நிரப்புகின்றனவா?
பரிணாம வளர்ச்சிக்கும் இருப்பின் நெடுங்காலத் தனிமைக்கும் இடையே செயல்படுகிறது வரலாற்றின் முரணியக்கம். மனிதனை மையமாக்கிச் சுற்றி வளர்ந்து, அந்த மையத்தை தகர்த்து, பின்னர் அதையே மறு உருவாக்கம் செய்து வரலாறு இயங்குகிறது. எப்படியோ காலத்தையும் இடத்தையும் நிர்ணயக்கவும் செய்கிறது.
சமகாலத்தில் தன்னிலையை மனிதன் மெய்மைகளிடம் ஒப்படைத்துவிட்டாலும், மொழி மற்றமைகளுடன் உரையாடவே விரும்புகிறது. அல்லது தத்துவங்களையும் மெய்மைகளையும் உதறிச் சென்று அன்றாடத்தில் மனிதத் தன்னிலையை இனம் காண அது வேட்கையுறுகிறது. மனமும் மொழியும் ஓயாது இயங்கும் இந்த வாழ்வின் பரப்பில் எத்தனைத் தடங்கள்! தடங்கல்!! தரையில் கண்ட நாணயத்தை ஓட்டைப் பையில் சேகரித்தவன் வழி எங்கும் தவறி விழுந்து விடும் அதே நாணயத்தை மீண்டும் மீண்டும் பொறுக்கிக் கொண்டே ஆவலாதியில் நடந்து கொண்டிருக்கிறானா?
இப்படிப் கேள்விகளும் பதில்களும் இல்லாத நிலை என ஒன்று இருக்கத்தான் வேண்டும்.
நாம் சிறுவர்களாக இருக்கும் பொழுது மிருகங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறோம். நாம் சிறுவர்களாக இருக்கும் பொழுது பாதைகளைத் தவற விட்டுத் தொலைந்து போயிருக்கிறோம். நாம் சிறுவர்களாக இருக்கும் போது பலரின் பலதின் கைப்பிடித்து நடந்திருக்கிறோம். நாம் சிறுவர்களாக இருக்கும் போது தான் அனைத்தும் அறிமுகமானது. சிலது மொழிவழியே என்றாலும் சிலது வலி வழியே மீந்திருக்கக் காண்கிறோம். நன்மை தீமை கருப்பு வெள்ளை உண்மை பொய் குளிர்ச்சி உஷ்ணம் அம்மா அப்பா நண்பன் பகைவன் காதலன் காதலி கணவன் மனைவி ஒழுங்கு ஒழுங்கின்மை போன்றவை ஏற்கனவே சூழ்ந்து விட்ட அமைப்பில் தான் அவதரிக்கிறோம்.
இகவடை பரவடை – வழிநடைச் செலவுகளின் கிளிச்சீட்டுகள்:
இந்த மண்ணுலக வாழ்க்கைக்கும் மரித்தபின் விண்ணுலக வாழ்க்கைக்கும் இம்மை மறுமை காண்பது அதன் மூலப் பொருளான பரம்பொருள் பற்றிய ஒப்புதலே. அதுவே மீமெய்மையாக இங்கு கூறப்படுகிறது. ஆனால் சின்னஞ் சிறு இன்பங்களை இந்த இக வாழ்க்கையில் நிகழ்த்துவதற்கான மூலப்பொருளை நாம் இங்கேயே இக்கணத்தில் தேடிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது! அதற்குரிய வினைகளையும் சேர்த்ததே தான் இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை என அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம்.
அப்படியும் கூட இந்த வந்தடைதல் முடிந்து விட்டதா? பௌத்தம் கூறியது போல அத்தனை சூனியங்களிலும் வெறுமைகளிலும் இருந்து அலைச்சல் உற்ற வழிநடைச் செலவுகள் தான் மிச்சம். அத்தகைய வழிநடைச்செலவுகள் தான் “இகவடை பரவடை” எனும் ஷங்கர் ராமசுப்பிரமணியனின் இந்தக் நீள் கவிதைத் தொகுப்பில் கிளிச்சீட்டுகள் போல அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
“உன் தோளில் இருக்கும்
கிளி
அழகு.
அதை மட்டுமே
நான் சொன்னால்
பொய்தானே அது
மீனாட்சி.”
30 வருடங்கள் தமிழில் கவிதைகள் கட்டுரைகள் மொழிபெயர்ப்புகள் எனப் பலதையும் எழுதி வந்திருக்கும் ஒரு படைப்பாளியை அவ்வளவு சுருக்கமாக அவதானித்து விட முடியாது என்றாலும் அவருடன் அதிகம் அருகிருந்த வகையில், உரையாடிய வகையில் அவரது கூடுதல் பரிமாணங்கள் ஓரளவு தெரியும் என்கிற அளவில் இதை எழுத முற்படுகிறேன். எதிலும் நிலைகொள்ளாது தன்னிலை காணும் பகடியும் அபத்தமும் உணர்ந்து அனைத்தையும் விளையாட்டை போல் ஆடிவிட்டு அதன் விளைவுகளால் சற்றே பதறி நின்று அவ்வாறு பதறிய பிறகு நிதானித்து சிரித்துக் கொள்ளும் அங்கதங்கள் நிறைந்தவை ஷங்கரின் பிற்காலக் கவிதைகள். அவை எப்போதும் தம் மற்றமையோடு உரையாடும் தொனியையே கொண்டு இருக்கின்றன.
இருத்தலியல் பகடியும் கவித்துவப் பிரபஞ்சமும்:
“நுழைய முடியாது
யாரும் இறங்கி
நிசப்தத்திற்குள்
கொட்டி வழியும்
அருவியையும்
போய்த் தொட முடியாதென்று வருபவரிடம் உணர்த்தி
கல்யாணத் தீர்த்தத்தைக்
காவல் காக்கிறது
ஒரு பாழ்.”
தான் பார்க்கும் பிரபஞ்சத்தைவிட தன் நாய் பிரவுனி பார்ப்பது தனக்கு புரிந்து விடுகிறது என்கிறார் ஷங்கர். எந்தவிதக் கருத்துமற்ற நிலையில் அனைத்தும் இயக்கத்தில் ஆற்றலில் இருக்கும் போது தவிப்பது எங்கு? தப்பிப்பது எங்கு? இதுவே கணந்தோறும் நிகழ்வாகிறது போலும்.
“வீடு அழகு
கதவு அழகு
பூட்டு அழகு”
இந்த ஜடப்பொருட்கள்கள் மனிதமையில் எவ்வாறு கலந்துள்ளன.. இந்த பொருட்களை எது வரிசைப்படுத்துகிறது ஒழுங்குபடுத்துகிறது.?
“அந்த காக்காய் தூக்கிச் செல்வது இகவடையா பரவடையா?
ஒரு மரத்துக்கு கீழே பாட்டி வடை சுடும் அந்தக் கானகம் எதற்கு”
ஷங்கரின் இந்த டாரட் கார்டுகளை நாம் வாசித்துக் கொண்டிருக்கிறோம். சீரற்ற முறையில் அதன் அடுக்கு முறையை கலைத்தபடியே வாசிப்பில் ஈடுபடுகிறோம். நமது தேர்ந்தெடுத்த கார்டுகளின் விளக்கத்திற்கான மனிதர், நம்முடன் நம் அருகே தான் இருக்கிறார். லௌகீக வாழ்வின் மரபுகள் நீர்த்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில் ஷங்கரின் கவிதைகள் முன் சொன்ன கருத்துகளின் ஒழுங்கு சார்ந்த அனுபவவாதத்தைக் கேலி செய்தபடியே நகர்ந்து விடுகின்றன.

முப்பதாண்டுகால அலைச்சலும் சமகாலத்தின் சாட்சியமும்:
கடந்த 30 ஆண்டுகளில் பல இலக்கிய சந்திப்புகளிலும் சென்னையின் மேன்ஷன்களிலும் ஷங்கரை சந்தித்திருக்கிறேன். அவர் வீட்டை விட்டு பிரிந்து வந்து தங்கி இருந்த காலம் முதல் அறிந்திருக்கிறேன். அத்தனை சிறிய வயதில் அவர் வீட்டை விட்டு வருவதற்கான காரணங்களை இதுவரை நான் தேடிப் பார்த்து அயர்ந்து விட்டேன். தனது வாழ்வின் சம்பவங்கள் எதையும் “எனக்கு இப்படித்தான் நேர்ந்தது” என்று சொல்வதற்கு அச்சப்படாதவர். வெளிப்படையானவர். ரகசியத்தில் வாழ்வது மாபெரும் சூதாட்டக் கலை தான்.
தமிழில் இதற்கு முன்பான நீள்கவிதைகளை சங்க காலம், புராணக் காலம் என தொடங்கி கம்பன், இளங்கோ, பாரதி முதலான தொடர்ச்சியில் அணுகி, நவீனத்தின் வாழ்வியல் சித்திரங்களை எழுதிய கலாப்ரியா, இயற்கையின் மெய்யியல் பற்றி எழுதிய தேவதேவன், வாழ்வின் எதார்த்த கணங்களை அபூர்வமாகக் காட்சிப்படுத்திய தேவதச்சன் போன்றவர்களின் வகைப்பாட்டில் வைக்கும் போது, இருத்தலையே இருப்பின்மையாகக் காட்டி இன்றைய இகம்பர அபத்தத்தின் பிரதிநிதியாக தன்னை முன் வைக்கும் ஷங்கரின் பயணத்தை நவீனம் கடந்த ஒன்றாக முன் வைக்கலாம்.
“உடம்பைப் பார்த்துக்கோப்பா” என்கிற அவரது குரல் கேட்கும் தொலைவில் இருந்து அவர் மேலும் எழுத வேண்டும் என்று வாழ்த்துகிறேன்!

யவனிகா ஸ்ரீராம்
கவிஞர். விமர்சகர்."இரவு என்பது உறங்க அல்ல","திருடர்களின் சந்தை","காலத்தில் வராதவன்" முதலிய நூல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஒரு தனித்துவமான கவிதைக் குரலாக கருதப்படுகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
