
பூமணியைத் தீவிர முற்போக்கு எழுத்தாளர் என்றே சொல்வேன்.
1980களில் அவருடைய சிறுகதைகளை மிகவும் விரும்பி வாசித்தேன். கொங்குப் பகுதியின் மேட்டாங்காடுகளோடு இணை வைத்துப் பேசத்தக்க வறண்ட கரிசல் நிலப்பரப்பை அவர் கதைகளில் கண்டேன். எம் பகுதி செம்மண்; அவருடையது கரிசல். எனினும் தமிழ் மரபுப்படி சொன்னால் இரண்டுமே முல்லை நிலம். நிலத்தாலும் அது சார்ந்த பண்பாடுகளாலும் வேறுபட்டிருந்தாலும் வாழ்க்கைக் கூறுகள் பொருந்திப் போயின. தொழில் வளம் காரணமாக இப்போது செழுமை பெற்றிருக்கும் கொங்குப் பகுதியின் 1980களுக்கு முந்தைய வாழ்க்கையும் பூமணி காட்டும் கரிசல் நில வாழ்வின் வெம்மை கொண்டதுதான். அவ்வகையில் அவர் கதைகள் நெருக்கமாயின.
அப்போது அவரது மூன்று நாவல்கள் பெரிதும் கவனம் பெற்றிருந்தன. பிறகு, வெக்கை, நைவேத்யம். அருந்ததியர் வாழ்வைப் பேசும் நாவல் ’பிறகு.’ வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட ஆதிக்க சாதி வாழ்வைப் பற்றியது ’வெக்கை.’ ஒருகாலத்தில் நிலவுடைமை பெற்றிருந்த பார்ப்பனர்கள் கிராமத்தை விட்டு வெளியேற நேர்ந்த அவலத்தைக் கூறுவது ’நைவேத்யம்.’ ஒடுக்கப்பட்ட மக்களில் தொடங்கி ஆதிக்க சாதியில் ஊடாடிப் பார்ப்பனர்களிடம் வந்து நிற்கிறார் என்று அப்போது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம் நினைவிருக்கிறது. அதே போலப் ’பிறகு’ நாவலை ஒடுக்கப்பட்ட சாதிக்கும் ஆதிக்க சாதிக்கும் இணக்கம் காணும் முயற்சி என்பதான விமர்சனமும் இருந்தது. அவற்றை எல்லாம் கடந்து முந்நாவல்களும் இன்றும் வாசிப்புத்தன்மை உடையவையாக இருப்பதற்குக் காரணம் அவர் அப்பட்டமாகக் காட்டிய வாழ்க்கைதான் என்று கருதுகிறேன்.
இடதுசாரி எழுத்தாளர்களில் சோசலிச எதார்த்தவாதத்தைக் கைக்கொண்டு எழுதிய பிரச்சார எழுத்தாளர்களாக அக்காலத்தில் பலரைச் சொல்வர். கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ், பொன்னீலன் ஆகியோர் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள். இடதுசாரிப் பார்வை கொண்டிருப்பினும் கலைத்தன்மை குறையாமல் எழுதுவோர் என்றொரு பட்டியலும் உண்டு. இராசேந்திரசோழன், கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன் ஆகியோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். பா.செயப்பிரகாசத்தின் எழுத்துக்களை ஒருபகுதி வாழ்வனுபவம் சார்ந்தது என்றும் இன்னொரு பகுதி சோசலிச எதார்த்தவாதம் சார்ந்தது என்றும் பிரிப்பதுண்டு. இப்பிரிப்பில் பூமணியை எதில் அடக்குவது என்று பலருக்கும் குழப்பம்.
என்னைப் பொருத்தவரை அவரைச் சோசலிச எதார்த்தவாதப் பார்வை கொண்ட தீவிர இடதுசாரி எழுத்தாளர் என்பேன். ’வெக்கை’ நாவல் பற்றி ’முதல்பதிப்பாக வெக்கை நாவல் வெளிவந்த காலத்தில் (1982) அரசாங்கத்திற்கு எதிரான நூலாகக் கருதப்பட்டு அதன் பிரதிகளைப் பறிமுதல் செய்வதற்கான சூழல் நிலவியதாகக் கூறப்பட்டது. எனவே அதனை வெளியிட்ட நண்பர் அந்தப் பிரதிகளில் பலவற்றை தஞ்சையில் இருந்த என்னிடம் மூட்டையாகக் கட்டிக் கொடுத்துவிட்டார். பலகாலம் எங்கள் வீட்டில் இருந்த அந்தப் பிரதிகளை நண்பர்கள் பலருக்கும் நான் இலவசமாகவே வழங்கிவிட்டேன்’ என்று தம் முகநூல் அஞ்சலிக் குறிப்பில் (13-07-26) பொ.வேல்சாமி எழுதியுள்ளார்.
அன்று நக்சலைட்டுகள் என்று அழைக்கப்பட்ட மார்க்சிய லெனினியக் கட்சியின் அழித்தொழிப்புக் கொள்கையை மையப்படுத்தி எழுதிய நாவல் ’வெக்கை.’ அழித்தொழிப்பைக் கட்சி சார்ந்த நடவடிக்கையாக அல்லாமல் பதின்வயதுப் பையன் ஒருவன் மேல் வைத்து எழுதியிருந்தார். அழித்தொழிப்புக் கொள்கையை அவர் ஆதரிக்கிறாரா இல்லையா என்பது நேரடியாக அதில் வெளிப்படுவதில்லை. அழித்தொழிப்புக்குப் பின்னான அலைக்கழிதலும் அதன் வழியாக வாழ்வைக் கற்றலும் ’வெக்கை’யின் மையம் என்று சொல்லலாம். அழித்தொழிப்பு நடைமுறைக்கு உதவாது என்றும் கொள்ளலாம். அழித்தொழிப்பால் சிரமப்பட்டாலும் அதுதான் சமூக மாற்றத்தை உருவாக்கும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். நாவல் தடை செய்யப்படவில்லை எனினும் அஞ்சத்தக்க சூழல் நிலவியிருக்கிறது என்று பொ.வேல்சாமியின் குறிப்பு மூலம் தெரிகிறது.
இடையில் ’வாய்க்கால்’ போன்ற குறுநாவல்கள் சிலவற்றை எழுதினார். ’கருவேலம்பூக்கள்’ படத்தை இயக்கினார். அதன் திரைக்கதை வடிவம் புத்தகமாக வந்தது. ஆனால் அவரது சாதனைப் படைப்பாக ’அஞ்ஞாடி’ விளங்குகிறது. அதற்காகப் பல்லாண்டு உழைத்து ஆவணக் காப்பகம் மூலம் தகவல்களைத் தொகுத்தார். வாழ்நாளில் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளை அதற்குச் செலவழித்திருப்பார். தகவல்களை அளவாகப் பயன்படுத்திக் கொண்டு புனைவம்சத்தைக் கூட்டி வாசிப்புத்தன்மை கூட எழுதிய நாவல் அது. நிதானமாக வாசித்தால் பல தலைமுறை வாழ்வுக்குள் பயணம் செய்த அனுபவத்தைப் பெறலாம். உரையாடல்களைக் குறைத்துச் சில பகுதிகளைச் சுருக்கிச் செம்மை செய்திருந்தால் இன்னும் வலுவான நாவலாக அமைந்திருக்கும். க்ரியா ராமகிருஷ்ணன் கைக்குச் சென்ற போதும் பூமணி இயல்பின் காரணமாகச் செம்மையாக்கம் நடைபெறவில்லை போல. எழுதியதில் எங்கும் கைவைக்கக் கூடாது என்பது பூமணியின் நிபந்தனை. அதை ஏற்றுக்கொண்டு க்ரியா வெளியிட்ட ஒரே நூலாக இதுதான் இருக்கக் கூடும். தம் எழுத்தின் மீது அத்தகைய நம்பிக்கை கொண்டவர் பூமணி.
கரிசல் எழுத்தின் முன்னத்தி ஏர் எனப் போற்றும் கி.ரா.வின் எழுத்துக்களில் இருந்து பெரிதும் வேறுபட்டவை பூமணியின் படைப்புகள். சுவாரசியமான சம்பவங்களால் அம்மண்ணைக் கி.ரா. வளப்படுத்தியிருப்பார். பூமணியின் எழுத்தில் அம்மண்ணின் வறட்சி அப்படியே படிந்திருக்கும். கி.ரா. காட்டும் கிராமத்தில் ஒற்றைச் சாதியினர் மட்டுமே வசிப்பதான தோற்றம் இருக்கும். வெவ்வேறு சாதிகள் ஊடாடும் கிராமத்தைப் பூமணி எழுதினார். கி.ரா.வின் எழுத்துக்களை 1980 வரை ஒருகாலகட்டம் என்றும் 1980க்குப் பிறகான காலகட்டம் என்றும் இருவகையாகப் பிரித்துக் காணலாம். பூமணிக்கு ஒரே காலகட்டம்தான். ’அஞ்ஞாடி’யை வேண்டுமானால் தனித்துக் காண முடியும். இப்படி இருவர் எழுத்துக்களையும் ஒப்பிட்டால் இன்னும் பல வேறுபாட்டுக் கூறுகளைத் தொகுக்க முடியும்.
பூமணியின் சிறுகதைகள் அனைத்தையும் மொத்தமாக வாசித்தால் தீவிர இடதுசாரிப் பார்வையும் சோசலிச எதார்த்தவாதமும் அவருக்குள் ஊறியிருந்தது என்பது தெளிவாகும். ’அம்பாரம்’ என்னும் தலைப்பில் வெளியான அவரது ஒட்டுமொத்தச் சிறுகதைகள் தொகுப்பில் ஐம்பத்தொரு கதைகள் உள்ளன. பெருந்தேவி நடத்திய ’பூமணியை வாசித்தல்’ என்னும் கருத்தரங்கில் கட்டுரை வாசிப்பதற்காக அவற்றை வாசித்த போது வாழ்நாள் முழுவதும் ’இவ்வளவுதான் கதைகள் எழுதியிருக்கிறாரா’ என்று திகைத்துப் போனேன். ரீதி, வயிறுகள், நொறுங்கல் என்று ஒற்றைத் தலைப்புடைய அவர் தொகுப்புகளை வாசித்திருந்த எனக்கு ஏராளம் எழுதியிருப்பார் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வாழ்நாள் அமைந்த போதும் குறைவாகத்தான் எழுதியிருக்கிறார்கள். வெளியீட்டு வாய்ப்புகள் அரிது என்பதாலும் அன்றாடத்தின் சுமை மிகுதியாலும் இக்குறைவு நேர்ந்திருக்கலாம்.
அக்கருத்தரங்கிற்குப் பூமணியும் வந்திருந்தார். அவர் கதைகளின் முடிவு ’தொடங்கினான்’, ’ஆரம்பித்தான்’ என்றுதான் பெரும்பாலும் அமையும். அச்சொற்கள் இல்லை எனினும் அப்பொருள் தருவதாக அர்த்தப்படுத்தும் வகையிலேயே இருக்கும். இதைக் குறிப்பிட்டுப் பேசினேன். உரை முடிந்த பிறகு ’அக்காலத்திலேயே யாராவது இதைக் கவனப்படுத்தியிருந்தால் மாற்றி எழுதியிருப்பேன்’ என்று வருத்தத்தோடு சொன்னார். விமர்சனம், திறனாய்வு ஆகியவை எழுத்தாளர்களுக்கு எவ்வாறு பயன்படக் கூடும் என்பதை அப்போது உணர்ந்தேன். அவர் கதை முடிவுகளில் வரும் தொடக்கம், ஆரம்பம் என்பன புரட்சியின் தொடக்கத்தைக் குறிப்பன. சோசலிச எதார்த்தவாதத்தின் முக்கிய அம்சம் இது.
1960களின் இறுதியில் இந்தியா முழுவதும் கால்கொண்ட மார்க்சிய லெனினிய இயக்கத்தின் தாக்கம் பெற்றவர் அவர். அவ்வமைப்பு உருவாகிப் பின்னர் பல சிறுசிறு குழுக்களாகச் சிதறுண்டது. பூமணி எந்தக் குழுவிலும் இயங்கியவர் அல்ல. எதன் ஆதரவாளராகவும் இருந்தவர் அல்ல. எனினும் அக்குழுக்களில் செயல்பட்ட பலரோடு நட்பு இருந்திருக்கிறது. பா.செயப்பிரகாசம் போன்று அக்குழுக்களில் இணைந்து செயல்பாட்டாளராக மாறிய எழுத்தாளர்களோடும் தொடர்பு கொண்டிருந்தார். எப்படியோ அவ்வரசியல் நிலைப்பாடுகளில் அவருக்கு ஈடுபாடு இருந்ததையே சிறுகதைகளின் உரிப்பொருளும் முடிவுகளும் காட்டுகின்றன. 1980களில் அவ்வமைப்புகளின் செயல்பாட்டில் அவருக்கு விமர்சனமும் விலகலும் நேர்ந்துவிட்டன. அதையும் அவர் சிறுகதைகள் காட்டுகின்றன.
பூமணி அபூர்வமாகவே சிறுகதை எழுதுவார். ஒருகதை எழுதியதும் அதை எவ்விதழுக்குக் கொடுப்பது என்பதையும் யோசித்தே தீர்மானிப்பார். இலக்கிய இதழ்கள் அதாவது அக்காலத்தில் வெளியான சிறுபத்திரிகைகளில் தான் அவர் கதைகள் வெளியாகியுள்ளன என நினைவு. வெகுஜன இதழ்களில் அவர் கதை எதுவும் வந்ததாக நினைவில்லை. அவராக எழுதினால் தான். யாரும் கேட்டு எழுதித் தரும் வழக்கம் இல்லை. நூலில் வெளியீட்டு விவரம் கொடுக்காத காரணத்தால் அவர் முதல் கதை எப்போது வெளியாயிற்று, எந்தெந்த இதழ்களில் எழுதியிருக்கிறார் என்னும் விவரங்களை அறிவது கடினம். கவிதையில் தான் அவர் எழுத்து வாழ்க்கை தொடங்கியிருக்கிறது என்பது என் ஊகம். ’எழுத்து’ இதழில் பூ.மாணிக்கவாசகம் என்னும் பெயரில் பத்துக் கவிதைகள் வந்துள்ளன. டி.எஸ்.இலியட்டின் கவிதை ஒன்றை மொழிபெயர்த்திருக்கிறார். ஜூலை 1966 ’எழுத்து’ இதழ் தொடங்கி அக்டோபர் – டிசம்பர் 1968 வரைக்கும் இக்கவிதைகள் வந்துள்ளன. எல்லாவற்றுக்கும் ’பூ.மாணிக்கவாசகம்’ என்றே தம் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு கவிதைகள் ’புதுக்குரல்கள்’ (1984) தொகுப்பில் உள்ளன. அவற்றில் ஒன்று:
மழைக்கொடை
ஓடு ஓடு
இதற்குள்
ஓலை வீட்டின்
மூலை முடுக்கெல்லாம்
வானச் சீசா
வடித்த திரவம்
சுவரின் தாகம் தணித்து
வயிறு பொருமியிருக்கும்
முகட்டு ஓட்டையை யாவது
கம்மந்தட்டையால் மூடு
உச்சந்தலையைக் காப்பாற்ற
கொட்டாரத்தில்
ஆயிரக்கண் தாழ்வாரம்
அவிழ்த்துவிட்ட கிடாரி
சுவரின் வயிற்றைச்
சுண்டிவிட்டுவிடப் போகிறது
ஓடு ஓடு
தார்ப்பாய்ச்சல் அவிழ்க்காதே
தலவிதி விழுந்துவிடும்
மண்வெட்டி இறக்காதே
மண்டைக்(குக்) கனம் வந்துவிடும்
ஓடு ஓடு
ஏதாவது கைப்பக்குவம் செய்.
மழைக்கு ஒழுகும் வீட்டைப் பற்றிய கவிதை போல மேலோட்டமான வாசிப்பில் தோன்றுகிறது. அதற்குள் இன்னொரு பொருளும் பொதிந்திருப்பதை ’மண்டைக்குக் கனம் வந்துவிடும்’ என்னும் வரியும் இன்னும் சில சொற்களும் உணர்த்துகின்றன. பிற கவிதைகளையும் வாசித்தால் அவரின் தொடக்ககாலப் பார்வையைப் புரிந்துகொள்ள முடியும். வேறு இதழ்களிலும் கவிதைகள் எழுதியுள்ளாரா என்று தெரியவில்லை. அக்காலத் ’தாமரை’ இதழைத் தேடிப் பார்க்க வேண்டும். இக்கவிதைகள் எழுதிய அதே காலத்தில் சிறுகதைகளும் எழுதியிருக்கலாம். பூமணி என்னும் பெயரை எப்போது முதல் பயன்படுத்தினார் என்றும் தெரியவில்லை. கவிதை, சிறுகதை, நாவல், திரைக்கதை என்பன அவர் எழுதிய வகைமைகள். கட்டுரை ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. அவர் நூல்களுக்கு முன்னுரை எழுதும் வழக்கமில்லை. கட்டுரையோ முன்னுரையோ எழுதியிருந்தால் அது அபூர்வமானதாக அமையும்.
பா.செயப்பிரகாசத்தின் பொறுப்பில் வெளிவந்த ’மனஓசை’ இதழுக்குப் பூமணி ஒருசிறுகதை கொடுத்தார். அது 1989 அல்லது 1990ஆக இருக்கலாம். கதையை எழுதி முடித்த பிறகு பா.செயப்பிரகாசத்திற்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து ’மனஓசைக்குக் கொடுக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். மனஓசைக்குக் கதை கொடுத்த போது அதன் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். அவர் பணியாற்றிக் கொண்டிருந்த கூட்டுறவுத் துறை அலுவலகத்திற்குச் சென்று (அப்போது எழும்பூர் பகுதியில் அது இருந்தது) நான்தான் கதையை வாங்கி வந்தேன். வழக்கமான அரசு அலுவலக மேஜையில் சில கோப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க உட்கார்ந்திருந்தார். அவரை நேரில் பார்த்ததில்லை. அப்போது நூல்களின் அட்டைகளில் புகைப்படம் வெளியாவதை எழுத்தாளர்கள் விரும்பியதில்லை. ஆகவே அவர் படம் எதையும் நான் பார்த்ததில்லை. மாணிக்கவாசகம் என்னும் அவர் இயற்பெயரைச் சொல்லி விசாரித்துத்தான் அம்மேஜையை அடைந்தேன்.
பா.செ. அனுப்பிய தோழர் என்றதும் அலுவலகக் கட்டிடத்தில் இயங்கிய தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்றார். என்னைப் பற்றிய விவரங்களை விசாரித்தார். கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவரை நேரில் சந்தித்துப் பேசும் பரவசத்தில் இருந்த என்னை அமைதிப்படுத்தி என் வாசிப்பையும் எழுத்தையும் பற்றிக் கேட்டார். சந்தா செலுத்தாமலே தொடர்ந்து சிலருக்கு அனுப்பும் பட்டியலில் பூமணியின் பெயரும் இருந்தது. அதனால் இதழை அவர் வாசித்துக் கொண்டிருந்தார். என் கதைகள் அப்போது மனஓசையில் தொடர்ந்து வெளியாயின. அவர் படித்திருக்கவில்லை. ’பெயரைப் பார்த்திருக்கிறேன்’ என்றார். பிறகு மீண்டும் அவர் மேஜைக்கு அழைத்துச் சென்று அலுவலக உறைக்குள் போட்டு வைத்திருந்த சிறுகதைப் படியை எடுத்துக் கொடுத்தார். ’மனஓசைக்குக் கொடுக்கறன். வெளியிடுவீங்களான்னு தெரீல. வெளியிடலீன்னா ஒன்னும் பிரச்சின இல்ல. ஜேபிகிட்டச் (செயப்பிரகாசம்) சொல்லியிருக்கறன்’ என்று சிரித்தார். ’பாதை’ என்னும் தலைப்பிலான பீக்கதை அது. கிராமத்துச் சிறுவர்கள் சிலர் மலம் கழிக்க மந்தைக்குச் செல்லும் சிறுபயணம் பற்றியது. அதன் உரையாடல்களைக் கட்டுடைத்துப் பார்த்தால் மார்க்சிய இயக்கங்களின் மீதான கடும் விமர்சனம் என்பது தெரியும்.
கழிப்பறை இல்லாத கிராமங்களே இல்லை, வீடுகளே இல்லை என்னும் நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. எனினும் வெளியில் கழிக்கும் பழக்கம் இன்னும் முற்றிலுமாக மாறவில்லை. ஒருகாலத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் மலம் கழிக்கவென்றே தனி மந்தை இருந்தது என்பதும் அதில் ஆண்களுக்குத் தனிப்பகுதி, பெண்களுக்குத் தனிப்பகுதி எனப் பிரிவு இருந்தது என்பதும் இன்று ஆவண மதிப்புப் பெற்றுவிட்ட விஷயங்கள். அதற்குப் பூமணியின் இக்கதை நல்ல ஆதாரமாக விளங்கும். அதேசமயம் சமூக அசைவியக்கத்தில் முக்கியப் பங்காற்றிய அரசியல் இயக்கம் ஒன்றைப் பற்றிய கடும் விமர்சனத்தை உள்ளடக்கியது என்பதும் வரலாற்றுக்கு முக்கியம்தான். கதைகளில் உரையாடல்களைச் செறிவாகவும் அர்த்தப்பூர்வமாகவும் பயன்படுத்துபவர் பூமணி. கிராமத்துப் பாத்திரம் என்பதால் வழவழவென்று பேசும்படி அமைக்க மாட்டார். உளி கொண்டு செதுக்கி எடுத்த சிற்பம் போல உரையாடலை வடிவமைப்பவர் அவர். அக்கதையில் வரும் உரையாடல் பகுதி ஒன்று:
‘நீங்க இதுவரைக்கும் வந்த பாத ரெம்பச் சுத்தமோ.’
‘வந்த பாதையிலேயே வீட்டுக்குத் திரும்பீறப் போறீகளா என்ன?’
‘தாத்தாவுக்கு இந்தப் பாத சரியில்ல.’
‘அப்படின்னா வெலகி நடங்க புதுப்பாதையில.’
‘வெலகி நடந்து எங்க போயிரப் போறீக. ஓடைக்குத்தான.’
‘அங்க போனா ஒங்களுக்கு முந்தியே ஒருத்தரு உகாந்துட்ருப்பாரு.‘
‘அதெதுக்கு வம்பு. பேசாம இந்தப் பாதையிலேயே பேண்டுட்டுப் போங்க.‘ (அம்பாரம், ப.364)
இப்பகுதிக்கு எத்தனையோ வகையில் விளக்கம் தரலாம். ’மனஓசை’ தீவிர இடதுசாரிப் பத்திரிகை. அதன் பொறுப்பாளர்களுக்கு இக்கதை பேசும் விஷயம் புரியாதா என்ன? ஆசிரியர் குழுவில் காரசாரமான விவாதம் நடந்தது. பூமணி ’புதுப்பாதை’ ஒன்றைப் பற்றிச் சொல்கிறார். எதைப் புதுப்பாதை என்கிறார்? அது எப்படி இருக்கும்? எல்லாப் பாதைகளும் ஓடைக்குத்தான் செல்கின்றன என்றால் எல்லோரும் புரட்சியை நோக்கித்தான் போகிறார்கள் என்று அர்த்தம் வருகிறது. எப்படி எல்லாப் பாதைகளும் புரட்சியை நோக்கிச் செல்லும்? அப்படியானால் இத்தனை கருத்து வேறுபாடுகள் ஏன்? இப்படியெல்லாம் விவாதம் நடைபெற்றது. புரட்சியை, புரட்சிகர இயக்கங்களை விமர்சித்திருப்பது ஒரு பிரச்சினை என்றால் அதற்காகப் பீக்காடு நோக்கிச் செல்லும் பாதைகளை உருவகித்திருப்பது யாருக்கும் உவப்பாக இல்லை. பூமணி எதிர்பார்த்ததைப் போலவே கதையை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டோம். அத்தகவலைப் பா.செயப்பிரகாசமே பூமணியிடம் சொல்லிவிடுவது என்று தீர்மானித்தோம். அவர் எப்படிச் சொன்னாரோ தெரியவில்லை. பின்னர் அக்கதை அப்போது வந்து கொண்டிருந்த ’பாலம்’ இதழில் வெளியானதாக நினைவு.
அவர் சென்னையில் இருந்த காலத்தில் ஓரிரு முறை சந்திக்கவே வாய்ப்பு அமைந்தது. அரசு குடியிருப்பு ஒன்றில் வசித்தார். அங்கும் சென்ற நினைவு இருக்கிறது. சந்தித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ’அஞ்ஞாடி’ நாவல் பற்றிப் பேசியிருக்கிறார். தலைப்பிடவில்லை எனினும் அதைப் பேசுவது அவருக்குப் பிடித்திருந்தது. 2007ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ’கலைகளுக்கான இந்திய அறக்கட்டளை (India Foundation for the Arts)’ என்னும் அமைப்பு வழங்கிய ’ஆய்வின் அடிப்படையில் நாவல் எழுதும்’ திட்டத்திற்கு விண்ணப்பித்துப் பூமணியும் நானும் நிதியுதவி பெற்றோம். ’அஞ்ஞாடி’ நாவலை எழுத அவருக்கு ஆறு லட்சம் ரூபாய் கிடைத்தது. ஆய்வை எல்லாம் முடித்து நாவலில் பாதியை எழுதியிருந்த நிலையில் அதன் வெளியீட்டுக்கு உதவும் என்னும் நிலையில் பூமணி விண்ணப்பித்துப் பெற்றிருந்தார். அதற்கு க்ரியா ராமகிருஷ்ணனின் வழிகாட்டுதல் இருந்தது.
காலச்சுவடு கண்ணனின் வழிகாட்டுதலில் விண்ணப்பித்திருந்த நான் அப்போது என்ன நாவல் எழுதப் போகிறேன் எனத் தெளிவில்லாமல் இருந்தேன். எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் கிடைத்திருந்தது. என் ஊரைப் பற்றிய கள ஆய்வில் என்னைத் தூண்டும் ஏதேனும் ஒருவிஷயத்தை மையப்படுத்தி நாவல் எழுதலாம் எனத் திட்டம். பின்னர் ’மாதொருபாகன்’ எழுதினேன். ’அஞ்ஞாடி’ நாவலுக்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. அதற்கு அவர் பெற்ற நிதியுதவி பற்றி நூலின் இறுதியில் நன்றி தெரிவித்திருக்கிறார். எனினும் நாவலையும் நிதியுதவியையும் இணைத்து யாரும் விமர்சித்ததில்லை. மாதொருபாகனுக்கு என்ன நேர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரே செய்தி எனினும் சூழல் சார்ந்து எத்தகைய இடையீடுகள் நேர்கின்றன என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
அந்த அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நானும் பூமணியும் ஒருமுறை கல்கத்தா சென்றிருந்தோம். க்ரியா ராமகிருஷ்ணன் ஆலோசனை கூறும் வல்லுநராக வந்திருந்தார். சென்னையில் ஓரிரவு தங்கிவிட்டு விமானம் மூலமாகக் கல்கத்தா சென்றோம். கல்கத்தாவைச் சேர்ந்த முதிய எழுத்தாளர் ஒருவர் அங்கே இருந்தார். அவரும் நிதியுதவி பெற்றிருந்தார். அவரால் பயணம் செய்ய முடியாது என்பதால் நாங்கள் அனைவரும் கல்கத்தா சென்று அங்கே சந்தித்தோம். நாவலுக்கான ஆய்வு குறித்து ஒவ்வொருவரும் தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டோம். அதுதான் எனக்கு முதல் விமானப் பயணம். இருநாட்கள் பூமணியுடன் தங்கியிருந்தேன்.
தலித் இலக்கியம் என்னும் பிரிவைப் பூமணி ஏற்றுக்கொள்ளவில்லை. தம்மைத் தலித் எழுத்தாளர் என்று சொல்வதையும் விரும்பவில்லை. அதைப் பற்றியெல்லாம் அச்சந்திப்பில் பேசினோம். ’தலித் இலக்கியம் என்னும் பெயரால் தலித்துகளைப் புனிதப்படுத்துகிறார்கள். தலித்துன்னா தப்பே செய்ய மாட்டானா? அவன் செய்யற தப்பையும் அப்படியே எழுத வேண்டாமா? இப்படி வகை பிரிக்கறது எல்லாம் புனிதப்படுத்திப் பாக்கறதுக்குத்தான். வட்டார எழுத்துன்னு சொன்னாங்க. அது கிராமத்தப் புனிதம்னு சொல்லுச்சு. இப்ப தலித் இலக்கியம்னு சொல்றாங்க. இது தலித்துகளப் புனிதப்படுத்துது. புனிதமெல்லாம் எனக்கு ஒத்துவராது’ என்றார்.
சென்னையில் முப்பதாண்டுகள் வாழ்ந்தாலும் அவரால் இங்கே நிலைகொள்ள இயலவில்லை. சென்னை தன் மனதிலும் உடலிலும் படியவே இல்லை என்று சொன்னார். பணி ஓய்வுக்குப் பிறகு கோவில்பட்டியில் வசித்தார். முழுமையாகத் தம்மை 1950, 60களைச் சேர்ந்த கிராமத்துச் சிறுவனாகவே கருதியிருந்தார். அவரது பால்யத்து விஷயங்களே படைப்புகளாகவும் உருவாயின. ’அஞ்ஞாடி’ கூடப் பழைய காலம் பற்றிய நினைவேக்கத் தேடல்தான். சோசலிச எதார்த்தவாதம், இடதுசாரிப் பார்வை எல்லாம் இருப்பினும் நினைவேக்கம் என்னும் கிராமத்து மனம் அவரிடம் நிலைபெற்றிருந்த முரணை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை.
பூமணிக்கு அஞ்சலி.
000
குறிப்பு: ’எழுத்து’ இதழில் வெளியான கவிதைகள் பற்றிய விவரத்தைக் கொடுத்துதவிய நண்பர் அழிசி ஸ்ரீநிவாசகோபாலனுக்கு நன்றி.

பெருமாள்முருகன்
பெருமாள்முருகன், பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், ஆய்வறிஞர், கவிஞர். ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்நிலையை, குறிப்பாக பதின்பருவத்தினரின் உலகை 'ஏறுவெயில்', 'கூளமாதாரி' போன்ற புனைவுகளில் சித்தரித்தார். படைப்புகளில் கொங்கு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்து, அதிகம் அறியப்படாதிருந்த கொங்கு வேளாண் வாழ்க்கையைப் பதிவு செய்தவராகவும் மதிப்பிடப்படுகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
