
திரவநிலை நவீனத்துவம் (Liquid Modernity) அல்லது சமூகம் என்கிற கருத்து ஜிக்மண்ட் பவுமனிடம் இருந்து வருகிறது. இந்தக் கருத்துருவின் பல்வேறு உட்கிடைகளைப் புரிந்து கொள்ள விரும்புவோர், பவுமனும், கார்லோ போர்டொனியும் இணைந்து இந்தக் கருத்தையும் மற்ற தலைப்புகளையும் விவாதிக்கிற நெருக்கடி நிலை என்கிற நூலை வாசிப்பது உதவக் கூடும்.
கட்டடக்கலை, தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் எப்போதும் ஒத்திசைவற்ற முறையில் நிகழ்ந்த விதவிதமான நிகழ்வுகளை (Phenomena) ஒருங்கிணைத்து, ஒரே குடையின் கீழ் குறிப்பிடும் பின் நவீனத்துவம் என்ற இயக்கத்தோடு, திரவநிலை சமூகமும் வடிவம் பெறத் தொடங்குகிறது. வஞ்சப்புகழ்ச்சி அல்லது விளையாட்டுத்தனமாக கடந்த காலத்தை மறுஆய்வு செய்யும், சூன்யவாதப் போக்குகளோடு தன்னைப் பிணைத்திருக்கும் பின் நவீனத்துவம், ஒரே மாதிரியான ஒழுங்கை உலகின் மீது ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிவிட முடியுமென்று வாதிட்ட ‘பொருங்கதையாடல்களின்’ நெருக்கடியை முன்னறிவித்தது. போர்டொனியின் கூற்றுப்படி, பின் நவீனத்துவமும் வழியனுப்பப்படும் நிலையில் உள்ளது. தற்காலிகமாக நீடிக்கும் பண்பை உடைய, நாம் அதனைக் கடந்து செல்வதையே அறியாமல் கடந்து விட்ட பின் நவீனத்துவமும், கற்பனாவாதத்திற்கு முந்தைய காலத்தைப் போல ஆய்வு செய்யப்படும். நவீனத்துவத்திலிருந்து, இன்னும் பெயரிடப்படாத நிகழ்காலத்திற்கு இடையேயான படகுப் பயணத்தைக் குறிப்பதைப் போன்று நடந்தேறிய ஒரு நிகழ்வை பின் நவீனத்துவம் சுட்டியது.
வளரிளம் நிகழ்காலத்தின் பண்புகளில் ஒன்றாக, அரசு எதிர்கொள்ளும் இந்த நெருக்கடியையும் உள்ளடக்குகிறார் பவுமன்: பன்னாட்டு அமைப்புகளை எதிர்கொள்வதில் தேசிய-அரசுகள் எந்த அளவுக்கு சுதந்திரம் உடையவை?. நமது காலத்தின் பல்வேறு பிரச்சனைகளை, தனிநபர்கள் ஒருமித்த வகையில் தீர்ப்பதற்கானதாக இருந்த ஏதோவொன்று மறைந்து போவதையும் நாம் கண்கிறோம். சரியும் கருத்தியல்களின், அவற்றைப் பின்பற்றும் அரசியல் கட்சிகளின், தனிநபர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் ஏதோவொன்றில் அவர்களைப் பங்கேற்க அனுமதிக்கும், மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான பொதுவான அழைப்பு ஆகியவற்றின் நெருக்கடிக்கு இந்நிலை இட்டுச் செல்கிறது.
சமூக உணர்வு என்ற கருத்துருவிற்கு நேர்ந்த நெருக்கடி கட்டுப்பாடற்ற தனிநபர்வாதத்தை மேலெழச் செய்தது : மக்கள் அனைவரும் இனி ஒரே சமூகத்தின் குடிமக்களாக அல்ல மாறாக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய போட்டியாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். நவீனத்துவத்தின் அடிப்படைகளையே அச்சுறுத்தும் இந்த ‘அகநிலைவாதம்’ (Subjectivism), அதனைப் பலவீனப்படுத்தி, அனைத்தும் திரவநிலை போன்ற ஒன்றில் கரைந்து விடுகிற, நிலையான வழிகாட்டுதல்களும் இல்லாத சூழலை உருவாக்கியிருக்கிறது.
சட்டத்தின் மீதிருந்த நம்பகம் தொலைந்து, நீதித்துறை எதிரியாகக் கருதப்படுவதோடு, நிலையான வழிகாட்டுதலும் இல்லாத தனிநபர்கள், எந்த விலை கொடுத்தும் தங்களைக் கவனப்படுத்துவதும் (Conspicuous), அவ்வாறு கவனப்படுத்துவதையே ஒரே மதிப்பீடாகக் கொள்வதோடு, நுகர்வியத்தைப் பின் தொடர்வதுமே ஒரே தீர்வாகக் கருதுகிறார்கள். இருப்பினும் இந்த நுகர்வியம், திருப்தியை உருவாக்கும் நமது விருப்பத்திற்குரிய பொருட்களை அடைவதைக் குறிக்கோளாக உடையதல்ல, மாறாக அவ்வாறான பொருட்களை உடனடியாக காலாவதியாக்குகிறது. மக்கள் ஒரு நுகர்வுச் செயலில் இருந்து மற்றொன்றிற்கு, எவ்வித நோக்கமுமற்ற தீராப்பசி நோய் கொண்டவர்களைப் போல நகர்கிறார்கள் : புதிய செல்பேசி பழையதைக் காட்டிலும் எந்த விதத்திலும் மேம்பட்டதில்லை, ஆனால் இந்த வேட்கையின் கூட்டுக்கலவியில் பங்கேற்கும் அவாவை நிறைவேற்றும் பொருட்டு பழைய செல்பேசியைத் தூக்கி எறிகிறார்கள்.
கருத்தியல்களின், அரசியல் கட்சிகளின் வீழ்ச்சி:
வாக்குகளைக் கட்டுப்படுத்தும் கும்பல் தலைவர்கள் அல்லது மாஃபியா தலைவர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் பொறுத்து, அரசியல் கட்சியை ஒரு டாக்ஸியைப் போல வெகு இயல்பாகத் தேர்ந்தெடுப்பதை இந்நிலை முன்வைக்கிறது. இழிவுக்குரியதாக இல்லாமல் அரசியல்வாதிகள் தங்கள் கட்சிச் சார்பை மாற்றிக் கொள்ள முடிகிறது. மக்கள் மட்டுமல்ல, சமூகமே நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒரு நிலையற்ற சூழலில் வாழ்கிறது.
எது இந்த திரவமயமாக்கலை பதிலீடு செய்ய முடியும்? நாம் அதனை இன்னும் அறிந்திருக்கவில்லை. இடைப்பட்ட இந்தக் காலகட்டம் நீண்ட காலம் நீடிக்கும். மேலேயிருந்து வருகிற மீட்சியிடம், அரசிடம், புரட்சியிடம் நம்பிக்கை மறைந்த பின் எஞ்சியிருக்கும் சினமே இந்த இடைப்பட்ட காலத்தின் எடுத்துக்காட்டத்தக்க தனிச்சிறப்பாக இருக்கிறதென பவுமன் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட சினத்திற்கு, தனக்கு என்ன வேண்டாமென்று தெரியும், ஆனால் என்ன வேண்டுமென்று தெரியாது. அராஜகவாதிகள், ஃபாசிஸ்ட்டுகள் அல்லது செம்படையைப் போல கருப்பர் கூட்டணி (Black Bloc) எதிர்ப்பியக்கங்களை அடையாளப்படுவதில் எழும் சிக்கலை காவல்துறை எழுப்புவதை நான் குறிப்பிட விரும்புகிறேன். அப்படிப்பட்ட இயக்கங்கள் செயல்படும் என்றாலும் எப்போது செயல்படும், எந்தத் திசையில் செயல்படும் என்று யாருக்கும் தெரியாது. அது அவர்களுக்கே தெரியாது.
இந்தத் திரவநிலையோடு சமாதானம் அடைய ஏதேனும் வழி இருக்கிறதா? இருக்கிறது, நாம் ஒரு திரவநிலை சமூகத்தில் வாழ்கிறோம் எனவும், அதனைப் புரிந்து கொள்ளவும், ஒருவேளை அதனைக் கடந்து செல்லவும், புதிய சிந்தனைக்கருவிகள் தேவை என்கிற விழிப்புணர்வையே இந்நிலை கோருகிறது. ஆனால் சிக்கல் என்னவென்றால், அரசியல்வாதிகளும், பெரும்பகுதி அறிவுஜீவிகளும் இந்நிகழ்வின் விளைவுகளை இன்னும் புரிந்து கொண்டிருக்கவில்லை. தற்போதைக்கு, ’பாலைநிலத்தில் கூப்பாடு போடும் ஒருவனின்’ குரலாகவே பவுமன் இருக்கிறார்.
—
குறிப்பு: இச்சிறு கட்டுரையை, ஜிக்மண்ட் பவுமன் (Zygmunt Bauman) மற்றும் கார்லோ போட்டொனி (Carlo Bordoni) இணைந்து எழுதிய நெருக்கடி நிலை (State of Crisis) என்கிற நூல் மீதான அறிமுகக் கட்டுரையாக 2015இல் ஈக்கோ இந்த கட்டுரையை எழுதினார்.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பாலசுப்ரமணியன் பொன்ராஜ், புனைவாசிரியர். கட்டுரையாளர். “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை”, "சீமுர்க்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
