சோ.விஜயகுமார் கவிதைகள்

உன் வேலைநாளின் நண்பகலில்
உனக்காக காத்திருப்பதாய்
பாவனை செய்கிறது
உனது பிச்சைப் பாத்திரம்

உன் பாத்திரத்தில் விழுவதற்குக்
காத்திருப்பதாய் ஏமாற்றுகிறது
உனது உணவு

உனக்காகவே காத்திருப்பதாய்
மயங்குகிறது இந்தப் பொழுது

உன் பாத்திரத்திலிருந்து உணவை
எடுக்கத் தயங்கி நிற்பதாய்
சிறகை அடித்துக்கொள்கிறது அப்பறவை

நீ நம்புகிறாய்
உன் பாத்திரத்தில் விழும் சோற்றை
நீ வைக்கும்போதெல்லாம்
அந்தப் பறவை சாப்பிடுவதாய்
நீ வைத்தால் மட்டுமே சாப்பிடுவதாய்

யாரும் இடும் பிச்சையில்
எது இட்டாலும் நிரம்பும் பாத்திரத்தில்
யாரிட்டாலும் உண்ணும் பசியில்
மாறுவதாய் மயக்கும் பொழுதில்

எப்படியேறும் நீதான் பெறவேண்டும்
உனக்கான ஒரு பிடி ஒளிச்சேர்கையை
ஒரு சிட்டிகை கடலை

000

யாரும் சட்டை செய்யாதவர்களுக்கும்
யாரையும் சட்டையே செய்யாதவர்களுக்கும்

உன்ன நம்பிதானே காதலிச்சேன்
எனக்கெப்படி நீ துரோகம் செய்யலாம்
என் வயித்துலயும் கருப்பை இருந்திருந்தா
ஒரு பிள்ளைய நானும் பெத்துருப்பேனே
புள்ளைதான் வேணும்னு முன்னாடியே சொல்லிருந்தா
விலகியிருப்பேனே
உனக்காகத்தான மாறுனேன்
உனக்காத்தான
ஊரெல்லாம்போய் படுத்தேன்
நீ அனுபவிப்ப
நீ அனுபவிப்ப
கேவிக் கேவி அழுகிறாள் அவள்

ஆடைகுறைவாய் அணிந்த ஒருத்தி
ஆபரணம் அணிந்த ஒருத்தி
ஆண் குரலோடு ஒருத்தி
மூவரும் அந்த முச்சந்தியில்
சண்டையிட்டார்கள்

மறுத்துப்போன வாடிக்கையாளருக்காகத்தான்
அம்மூவருமே சண்டையிட்டார்கள

கேளாதுபோன காதுகளின் அருகில்தான்
இது பேசப்பட்டது
வாகனங்கள் நில்லாதுபோன
அதே சாலையில்தான் இது நடந்தது

ஊர் உறங்கியதென நம்பி
நிம்மதியாய் புணர்ச்சிகள் மலரும்
அதே இரவில்தான்
இது அரங்கேறியது

காணாதுபோகும் கண்களைத் தாண்டி
வாழாது போனவர்களுக்கும்
ஒரு வாழ்வுண்டு
அவ்வாழ்வுக்கே உண்டான
வாதைகளும் உண்டு

000

ஊன்றுகோலோடு வந்தவளின் உள்ளங்கையை
ஆகாயம் பார்த்துக்கொண்டிருந்தது
கம்பியில் சரம் சரமாய்த் தொங்கும்
பொட்டலத் தாரில்
ஒரு பொட்டலம்தான்
அவள் வேண்டுவது

வறுத்த கடலைதான்
வேண்டுமென வாய்விட்டு
சொல்லத்தெரியாதவள்
அந்தரத்தில் இருக்கும் ஒரு காலுக்குத் துணையாக
மற்றொரு காலைக் கொடுத்து
தன் ஊன்றுகோலால் அந்தப் பொட்டலத்தை
எக்கித் தொட்டாள்
அவனும் அதை வாங்கித் தந்தான்

உண்மையில் அந்த
ஒரு கணம் அவள் பறந்தாள்
அவளது கழி மந்திரகோலானது
பறக்கும்போது மந்திரக்கோலால் தொட்டால்
தொட்டது கிடைக்கும்தான்
ஆனாலும் அரைநூற்றாண்டு ஏந்திய கையை மூடியபடி
ஒரு நொடிதான் பறக்க முடியும்
ஒரு நொடிக்குள் அவ்வளவுதான் தொட முடியும்

000

அப்பா குறித்து சொல்ல
ஏதும் இல்லை
பேசாத அப்பா
அடிக்கும் அப்பா
குடிக்கும் அப்பா
வீட்டிற்கும் அலுவலகத்தை
தூக்கி வரும் அப்பா
எப்போதும் தான் தூங்கிப்போனபின்
வீட்டிற்கு வரும் அப்பா
அம்மா இறந்தபிறகு
நிறையவே சிகரெட் புகைத்த அப்பா
சீக்கிரமே செத்துப்போன அப்பா

ஆனாலும்
சட்டையின் கழுத்துப் பட்டையில்
கைக்குட்டையை
சுற்றிவைத்திருப்பவனைக் கண்டால்
நடக்கும் கால்கள்
ஒரு கணம் நின்று கவனிப்பது எதனால்?

அப்பாவைப் போலவே
திருநீறை வைத்துக்கொண்டிருப்பவனை
அண்ணா என நா தழுதழுக்க அழைத்தது எதனால்?

என்னை ஏன் தனியேவிட்டாயென
வசைசொல்லால் மனதுக்குள் திட்டிக்கொண்டது எதனால்?

000

சோ.விஜயகுமார்

சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss