
“பன்முகப்பட்ட சிந்தனைக் குரல்கள் எந்த தணிக்கையும் இல்லாமல் சுதந்திரமாக உரையாடுவதும் முரண்பட்டு விவாதிப்பதுமே ஆரோக்கியமான ஒரு அறிவுச் சூழலுக்கான சான்றுகள். உரையாடலே உயிர்த்தன்மை என்றும் சொல்லலாம்.”
கடந்த முறை அகழ் சார்பில் முன்னெடுக்கப்பட்ட “படிமம் காணும் வழிகள்” இணையக் கூடுகை சிறப்பான முறையில் நடைபெற்றது. ஏ.வி.மணிகண்டனுடனான உரையாடல் கலை அழகியல் சார்ந்த பொது வரையறைகளை பரிசீலிக்கும்விதமாக அமைந்தது.
அகழின் அடுத்த இணையக் கூடுகை, செப்டம்பர் 12, 2026 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை கவிஞர் இசை கலந்துக் கொள்கிறார். அகழ் இணையதளத்தில் கபிலரின் சங்கப் பாடல்களை மையப்படுத்தி “மலை என மாரி என” எனும் தலைப்பில் இசை ஒரு தொடர் எழுதி வருகிறார். அத்தொடர் கட்டுரைகள் மீதான வாசிப்பாக இந்நிகழ்வு நடைபெறும்.
பழந்தமிழ் இலக்கியம் சார்ந்து இசை தொடர்ந்து எழுதி வருகிறார். ஒரு நவீன கவிஞர் இவ்வளவு ஈடுபாட்டுடன் மரபிலக்கியம் குறித்து எழுதுவது அரிதாகவே நிகழ்கிறது. “சங்க இலக்கியத்தின் நுட்பமும், பக்தி இலக்கியத்தின் கண்ணீரும் நாம் அவசியம் காணவேண்டியவை” என்று இசை ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். தொடர்ந்து சமகால வாசகனுக்கு பழந்தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தும்விதமாக பல முன்னெடுப்புகளை மேற்கொள்கிறார்.
வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழ் இலக்கியத்தில் “நகைச்சுவை” எப்படி கையாளப்பட்டுள்ளது என்பதை வகைப்படுத்தும்விதமாக “பழைய யானைக் கடை” எனும் நூலை எழுதியவர், திருக்குறளின் காமத்துப் பாலுக்கு ஒரு நவீன உரையாக “மாலை மலரும் நோய்” எனும் நூலையும் இயற்றியுள்ளார். ஒளவையாரின் பாடல்களை முன்வைத்து “களிநெல்லிக்கனி – ஔவையார் கவித்துவத் திரட்டு” என்ற நூல் வெளிவந்துள்ளது. கம்பராமாயணத்தின் காதல் கவிதைகளை தனித்து அடையாளம் காட்டும்விதமாக வெளிவந்த “நறுமணத் துயரே! நறுமணத் துயரே!” நூல் சென்ற வருடம் பரவலான கவனத்தை ஈட்டியது. அதை தொடர்ந்து கபிலரின் பாடல்களை பற்றிய இக்கட்டுரைகளும் வாசகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.
“மலை என மாரி என” – கட்டுரைகள்
இந்த நிகழ்ச்சிக்கு அனைவரின் பங்கேற்பையும் ஆதரவையும் கோருகிறோம். முன்கூட்டியே கேள்விகள் அனுப்ப விரும்புவோர் akazhonline@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பலாம். நிகழ்வில் பங்கேற்க இயலாதவர்களும், விரும்பினால் கேள்விகளை மட்டும் அனுப்பி வைக்கலாம்.
நாள் : 12 செப்டம்பர் 2026
நேரம் : மாலை 4:00 – 6:00
கூகிள் மீட் விவரங்கள் விரைவில் தளத்தில் பகிரப்படும்.
அகழ் ஆசிரியர் குழு

அகழ்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
