அடி மண்டி : ஜே.கே

தகரக்கூரையின் கறல் விரிசல்களுடாக பீடி, சுருட்டுப் புகைகளைப் பிடித்து வெயில் கீழிறங்கிக்கொண்டிருந்தது. 

தெய்வு தன் சட்டையின் பொத்தான்கள் சிலதைக் கழட்டி, கொப்பி மட்டையால் நெஞ்சை விசிறிவிட்டார். காலையிலேயே இறக்கிய தென்னங்கள்ளு நெகிழி வாளிக்குள்ளிருந்து புளித்துவிட்டேன் என மெதுவாக நாற்றமடித்தது. தோட்டத்தில் இரண்டு வாழை இலைகளை அறுத்து அவர் அவற்றின்மீது போர்த்தி மூடினார். உள் சுவற்றில் தொங்கிய பிழா சரையில் பல்லி ஒன்று பாய்ந்தது. அதனைத் தட்டிவிட்டு, புதிதாகச் சில ஊறுகாய், கச்சான், பருப்பு பக்கெற்றுகளை எடுத்து சுவற்றில் கொழுவிவிட்டார். பன்னிரண்டு மணிக்கு வரவேண்டிய இராசன் இன்னமும் வந்து சேராதது எரிச்சல் வந்தது. அழைப்பெடுத்தார்.

எங்கடா நிக்கிற? இஞ்ச வாளி அடி மண்டிக்குப் போயிட்டுது.

இறக்கீட்டன், இந்தா ஓடியாறன் என்று இராசன் வழமையான பாட்டைப் பாட, தெய்வு சலிப்போடு அவனைத் திட்டியபடி, ஆங்காங்கே வாடிக்கையாளர்கள் குடித்துவிட்டுப் போட்ட ஜொக்குகளைப் பொறுக்க ஆரம்பித்தார். தவறணையின் குந்தில் ஐந்தாறு பேர் உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தார்கள். சிலர் வாழைத் தோட்டத்துக்குள் சென்று சிகரெட்டு பற்றவைத்துப் புகைத்தார்கள். தனியாக ஜொக்கும் கையுமாய் நின்று ஏகாந்தமாய்க் குடிப்பவர்களும் உண்டு. தாமே கையோடு வெற்றுப் போத்தல்களைக் கொண்டுவந்து அதில் வார்த்துக் குடிப்பவர்களும் உண்டு. ஒரு சிலர் கள்ளை வாங்கிச்சென்று வெளியே தம்முடைய மகிழுந்துகளுக்குள் உட்கார்ந்து குடிப்பார்கள். வேறு சிலர் உந்துருளியில் தலைக்கவசத்தைக் கழட்டாமலேயே குடித்து முடித்துவிட்டு ஜொக்கை வேலியில் கொழுவிவிட்டுப் போவார்கள். தெய்வு எச்சில் ஜொக்குகளைச் சேகரித்து வந்து தண்ணீர்த்தொட்டிக்குள் போட்டுக் கழுவி எடுத்தார். 

குந்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மறுபடியும் தெய்வுவிடம் வந்து கள்ளு வார்த்துச் சென்றார்கள்.

அவர்களுக்கு வயது இருபது, இருபத்தைந்துக்குள்தான் இருக்கும். அனைவரும் அருகில் எழுந்துகொண்டிருந்த நான்கு மாடி வீட்டில் கட்டட வேலை செய்பவர்கள். தினமும் மதியம் இதே நேரமானால் உள்ளே நுழைவார்கள். மூன்று ஜொக்குகள்வரை வாங்கிக்குடித்து, வெறி ஏறுவதற்கு முன்னரே அருகிலிருக்கும் சந்திக் கடைக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு மறுபடியும் வேலைக்குப் போவார்கள். பக்கத்து மாடி வீட்டை ஒரு நோர்வேகாரர் கட்டிக்கொண்டிருந்தார். வீடு முழுமையடைந்து, குடி பூரல் செய்யும்போது அருகிலிருக்கும் தெய்வுவின் தவறணை நோர்வேயின் கண்ணில் உறுத்த ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் அவருக்குள் பல நாள்களாகக் குதம்பிக்கொண்டிருக்கிறது. எப்படியும் பெட்டிசன் போட்டு, கச்சேரியில் தெரிந்தவர்களைக்கொண்டு தெய்வுவின் உரிமத்துக்கு வீட்டுக்காரர் உலை வைக்கக்கூடும். எதிர்த்துப் பிரயோசனமில்லை. பிறகு அவர் தவறணைக்குச் சற்றுத்தள்ளி வேறு எங்கேனும் காணிகளைத் தேடவேண்டும். இந்த ஊரில் தவறணைக்குக் குத்தகைக் காணி இலகுவில் கிடைக்கவும் போவதில்லை. 

எது எப்படியோ, இப்போதைக்கு அந்த இளைஞர்களால் தெய்வுக்கு கொஞ்சம் வருமானம் வந்துகொண்டிருக்கிறது. அவர்களில் பலரும் தண்ணியூற்று, அலம்பில் பக்கத்தைச் சேர்ந்தவர்கள்.  சில தென்னிலங்கைச் சிங்கள இளைஞர்களும் உடன் சேர்ந்து வேலை செய்கிறார்கள். எல்லோருக்கும் அந்த நோர்வேகாரர் தன் காணிக்குள்ளேயே தற்காலிகமாக ஒரு கொட்டிலை அமைத்துக்கொடுத்திருக்கிறார். வீட்டின் திட்ட வரைபு, பொறியியல் பணிகளை எல்லாம் நோர்வேகாரரே செய்துகொள்வாராம். தினமும் காணொளி அழைப்பெடுத்து அவர்களுக்கு அன்றன்றைக்கான பணிகளை நோர்வேயிலிருந்தே அவர் நெறிப்படுத்துவார். காணியைச் சுற்றிக் கண்காணிப்புக் கருவிகளும் பூட்டப்பட்டிருக்கின்றன. பணியாளர்கள் அங்கேயே தங்கி, ஆறு மாதங்களுக்குள் வேலையை முடிக்கவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. அதனால் சில சமயம் அவர்கள் இரவிலும் வேலை செய்கிறார்கள். குடிக்கும்போது அவ்விளைஞர்கள் தமக்குள் அதிகமாகப் பேசிக்கொள்வதில்லை. வெறி ஏறி சச்சரவும் செய்வதில்லை. எப்போதும் தென்னங்கள்ளைத்தான் வாங்குவார்கள். கையோடு பீடிக்கட்டு இருக்கும். செல்பேசியில் ரீல்களை உருட்டியபடி தம்பாட்டுக்குக் குடிப்பார்கள். அரிதாக எப்போதாவது எவரோடேனும் பேசுவார்கள். அதுவும் டிக்டொக் குழும உரையாடல்கள் என்பது தெய்வுக்குப் பின்னரே தெரியவந்தது.

ஆனால், வாழ்நாள் பேராசிரியர் சீவரத்தினம் அப்படியல்ல. அவர் தனியாளாகத்தான் வருவார். பனங்கள்ளு மட்டுமே குடிப்பார். அதுவும் புதுப் பிழாவில். பேராசிரியருக்கு இரண்டாவது மிடறு கள்ளு உள்ளே இறங்குவதற்குள் வாய் பேருரை ஆற்றத்தொடங்கிவிடும். 

இது கள்ளாடா? புளிச்ச மோர்மாதிரி இருக்கு. பன்னாடையளே. கள்ளிறக்கிறது எண்டிறது ஒரு கலை. அப்பேக்க அதுக்கு நிறைய வீரவாங்கள் இருந்தாங்கள். தனிப் பனைல கள்ளை இறக்கி நேரே வீட்டுக்கே தேடி வந்து குடுப்பாங்கள். புரபஸர் சீவரத்தினம் குடிச்ச மிச்சக் கள்ளுதான் மத்தவனுக்கு போகும். இப்ப என்னடாண்டா கண்டவனெல்லாம் கள்ளிறக்கிறான். ஏறுறவனுக்கு மரம் பனையா பப்பா எண்டே தெரியுதில்ல. சவத்தைக் கள்ளு. 

அவர் பிதற்றியபடியே பிழாவைக் கவிழ்த்து மண்டியை வாயில் வடியவிட்டார். தெய்வு இராசனுக்கு மறுபடியும் அழைப்பெடுத்து கெதியாக வந்து சேரடா என்று திட்டினார். பேராசிரியருக்கு இனிக் கள்ளுக்கொடுக்காமல் தவிர்க்கவேண்டும். கத்துவார்தான். ஆயினும் அப்பாவுக்கு ஏகப்பட்ட நோய்கள், அதிகம் குடிக்கக் கொடுக்கவேண்டாம் என்று நியூசிலாந்திலிருக்கும் அவருடைய மகள் ஊருக்கு விடுமுறையில் வந்தபோது தெய்வுவிடம் தேடி வந்து வேண்டுகோள் விடுத்திருந்தாள். போதாதென்று அவரது கையில் ஐயாயிரம் ரூபாய்த் தாள் ஒன்றையும் திணித்துவிட்டுப் போனாள். வெறும் நாற்றத்துக்கே வெறியேற்றிக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்குக் கலந்து கொடுப்பதற்காக என்றே தெய்வு பதநீருக்கும் இராசனிடம் சொல்லிவைத்திருக்கிறார். குடிபோதை ஏறிய பின்னர் பேராசிரியர் போன்றவர்களுக்குத் தண்ணீரும் கள்ளுதான். கள்ளும் தண்ணீர்தான்.

டொல்பின் வாகனம் ஒன்று படலையடியில் வந்து நின்றது.

வழமைபோல சுற்றுலாப்பயணிகளாக இருக்கவேண்டும் என்று தெய்வு வெளியே எட்டிப்பார்த்தார். ஆனால், வாகனத்தின் கதவு திறந்து, பாடசாலைச் சீருடைகள் பல உள்ளிருந்து கிடுகிடுவென இறங்கியதைப் பார்த்ததும் அவருக்கு கணம் திடுக்கென்றது. கொஞ்சத்தூரம் தள்ளிக் காவல் நிலையம் இருக்கிறது. பாடசாலை மாணவர்கள் தவறணையில் நிற்கிறார்கள் என்று யாரேனும் தகவல் கொடுத்துவிட்டால் தொலைந்தது. உடனேயே வந்து சீல் வைத்துவிடுவார்கள். அவர் மாணவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக வேகமாக வாசலை நோக்கி ஓடினார். நெருங்கியதும்தான் தெரிந்தது. 

அனைவரும் பிரபலப் பாடசாலை ஒன்றினது பழைய மாணவர்கள்.

திபு திபு என்று ஒரு வகுப்பே குதித்தது. எல்லோரும் நீல நிறக் காற்சட்டையும் வெள்ளைச்சட்டையும் எனப் பாடசாலைச் சீருடை அணிந்து, அவர்களது பாடசாலையின் டையையும் கட்டியிருந்தார்கள். கறுப்புச் சப்பாத்து போட்டிருந்தார்கள். பலருக்குச் சட்டைப் பொத்தான்போல அவர்களது தொந்தி நடு தொப்புள் எட்டிப்பார்த்தது. காற்சட்டை கீழிறங்கியது. பாடசாலைத் தொப்பி அணியாதவர்களின் தலைகள் வழுக்கை கண்டிருந்தன. ஒரு சிலர் முதுகுப்பை, டிரிங்க்ஸ் போத்தல் எல்லாம் கொழுவியிருந்தார்கள். அத்தனை பேருக்கும் எப்படியும் ஐம்பத்தைந்து வயதாவது ஆகியிருக்கலாம். பலரும் வெளி நாட்டவர் என்பது அவர்களுடைய சீரான தாடிகளிலும் குளிர் கண்ணாடிகளிலும் தெரிந்தது. அவற்றுள் கொஞ்சம் உடற்பயிற்சி செய்து இறுக்கமாக நின்ற ஒருத்தன் தெய்வுவிடம் வந்தான்.

இப்ப இறக்கின உடன் கள்ளு வச்சிருக்கிறியா?

கேட்டவனுக்கு தெய்வுவைவிட வயது குறைவாக இருக்கலாம். ஆனால் மரியாதை என்பது இந்த ஊரில் எல்லாச் சமயங்களிலும் வயது பார்த்துக் கொடுக்கும் சமாசாரம் இல்லையே.

ஓமண்ணை. உங்கட ராசிக்கு, இந்தா இப்ப இறக்கின கள்ளு கையோட வருது.

இராசனும் ஒருவாறாக வந்து சேர்ந்திருந்தான். தெய்வு மாணவர்கள் அனைவரையும் உள்ளே வந்து உட்காருமாறு அழைத்தார். புதிய கள்ளை வாளிக்குள் ஊற்றி கொஞ்சம் ஆற்றிவிட்டார். இராசனிடம் எச்சில் ஜொக்குகளை உடனடியாகக் கழுவி அடுக்குமாறு சொன்னார்.

எப்பிடி இதக் குடுக்கிறனீ?

ஜொக்கில வார்த்துத் தருவமண்ணை. தென்னங்கள்ளு எண்டால் ஜொக்கு முந்நூறுவா. பனங்கள்ளு நானூறுவா. இல்லாட்டி, இந்தா, பிழா இருக்கு. ஒரு பிழா முந்நூறுவா.

தெய்வு இரண்டு பிழாக்களைக் கழட்டி எடுத்து அவனிடம் நீட்டினார்.

என்னடா, கள்ளுக்கு மேலால பிழாண்ட விலை சொல்லுறாய். ஏறேக்கில்ல ரெண்டு குருத்தை அறுத்துப்போட்டா, இறங்கிறதுக்குள்ள பின்னிற சாமான்.

அவன் சொல்லிவிட்டு, திரும்பித் தன் நண்பர்களைப் பார்த்துச் சிரித்தான். பின்னர் அனைவரும் ஒன்றுகூடி ஏதோ குசுகுசுவென்று பேசினார்கள். ஆரம்பத்தில் பேசினவனே மறுபடியும் வந்தான்.

எங்களுக்கு இருபத்தஞ்சு பிழா எடுத்து வைக்கிறியா? பிரஷ்ஷா பனங்கள்ளு.

தவறணையில் பத்துப் பிழாக்கள்தான் கிடந்தன. தெய்வு இராசனிடம் சொல்லி ஒரு பிழாக்கட்டை உடனடியாகச் சந்தையடியில் வாங்கி வருமாறு ஏவினார். இருந்த பிழாக்களுள் கள்ளை வார்த்துக்கொடுத்துவிட்டு சில கச்சான் பக்கெற்றுகளையும் முன்னே எடுத்துப்போட்டார். 

அண்ணை, மிச்சப் பிழா அஞ்சு நிமிசத்தில வந்திடும். இப்போதைக்கு நீங்க ஜொக்கில குடிக்கிறீங்களா?

ஐயய்யோ. அதெல்லாம் வேண்டாம். எங்கட தண்ணிப் போத்திலில நிரப்பித்தா.

வாகனத்துள் இருந்த நெகிழிப் போத்தல்களை, தண்ணீரைக் கீழே கொட்டிவிட்டு அவர்கள் நீட்டினார்கள். தெய்வு ஒவ்வொன்றாக அவற்றுள் கள்ளினை வார்த்து நீட்டினார். எல்லோரும் பிழாக்களையும் போத்தல்களையும் வாங்கியபடி குந்துக்கட்டில் சென்று உட்கார்ந்தார்கள். அங்குப் புகைப்படங்களும் செல்பியும் எடுத்தார்கள். ஒருத்தன் ரீல்ஸ் வீடியோ பிடித்தபடி எதையோ பேச, சிலர் அங்கிருந்து நழுவினார்கள். இவர்களது அமளிக்கிடையில் அந்தக் கட்டட வேலை செய்யும் இளைஞர்கள் எழுந்து சென்று ஒரு ஓரமாக ஒதுங்கவேண்டியிருந்தது. 

ஒரு பழைய மாணவன் தெய்வுவிடம் ஓடி வந்தான்.

பிரதர், ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு?

தெய்வுக்கு அவன் சொன்னது புரியவில்லை.

சொறி… இந்த பாத்ரூம். டொய்லட்.

தெய்வு அவனுக்கு வாழைத்தோட்டத்தைக் காட்டி அங்கே ஒதுங்கச் சொன்னார். இதற்கிடையில் பேராசிரியர் அந்த மாணவர்களுள் ஒருத்தனோடு பேச்சுக்கொடுத்தார். அவன் பேச்சுக்கிடையில் தான் பிடித்துக்கொண்டிருந்த சுருட்டை அவருக்கு நீட்ட, அவரும் அதை வாங்கி இழுத்தபடியே கேட்டார்.

கியூபன் சுருட்டா தம்பி?

ஓம் சேர். எப்பிடிக் கண்டுபிடிச்சீங்கள்?

தம்பி. உலகம் முழுக்க எனக்கு ஸ்டுடண்ட்ஸ் இருக்கிறாங்கள். அவங்கள் வரேக்க இப்பிடித்தான் குவாலிட்டியா, கியூபன் சுருட்டு, புளூ லேபிள், மக்கலான் எண்டு சேருக்குக் கொண்டு வருவினம். எல்லாம் சாமான் சங்குகளாதான் இருக்கும். ஏனண்டால் எண்ட படிப்பிப்பு அப்பிடி தம்பி. ஒரு ஸ்டுடண்டுக்கு அமெரிக்கா ஜனாதிபதி மெடலும் குடுத்தவர். இன்னொருத்தன் லண்டனில இராணிட்ட சேர் பட்டம் வாங்கினவன். அவனைக் கேட்டியெண்டா எல்லாத்துக்கும் இந்த சேர்தான் காரணம் எண்டுவான். ஆனா இஞ்ச இருக்கிற கழுசறைகளுக்கு எண்ட அருமை தெரியேல்ல. இரண்டு பிழா கள்ளுக்குக் கெஞ்ச வேண்டிக்கிடக்கு. 

சீவரத்தினம் சுருட்டை இழுத்து முடித்துவிட்டு வேறொரு சுருட்டு கிடைக்குமா என்று அந்த மாணவனிடம் கேட்டார். இதற்கிடையில் மாணவர்கள் தவறணை வளவுக்குள்ளே கிரிக்கட் விளையாடத் தயாரானார்கள். அவர்கள் கையோடு துடுப்பு, பந்து, விக்கெட்டுகள் எல்லாம் தயாராகவே எடுத்து வந்திருந்தார்கள். விளையாடும்போது  துடுப்பாட்டக்காரனைத் தவிர மீதி எல்லோருடைய கைகளிலும் பிழாவோ, நெகிழிப் போத்தலோ இருந்தது. பந்து வீசுபவன் ஒரு மிடறு குடித்துவிட்டுத் தன் பிழாவை நடுவரிடம் கொடுத்த பின்னாடி ஓடி வந்தான். பந்தைப் பிடிப்பவனும் குடித்தபடியே பிடித்தான். நடுவரும் குடித்தபடியே அவுட் கொடுத்தான். 

தெய்வு அவர்களது ஆட்டத்தைக் கவனித்துக்கொண்டே இராசன் வாங்கி வந்திருந்த பிழாக்களை வரிசையாக அடுக்கிக் கள்ளை வார்த்தார். அவர் சாதாரணத் தரப் பரீட்சைக்கு முன்னமே பாடசாலையிலிருந்து நிற்கவேண்டிய நிலைமை வந்துவிட்டது. அவரது ஊர் அடிக்கடி இடம்பெயர்ந்துகொண்டிருந்த காலம் அது. அதனால் பாடசாலையில் கூடப்படித்த நண்பர்களோடும் பெரிதாக அவர் தொடர்பில் இருக்கவில்லை. அவர்களது பெயர்கள்கூட அவருக்கு நினைவில் இல்லை. அவர் படித்தது மொத்தமாகவே முந்நூறு மாணவர்களைக்கொண்ட ஒரு சிறிய பாடசாலையில். அதில் சாதாரணத்தரம்வரை தாக்குப்பிடித்தவர்கள் ஒரு சிலரே. அவர்களிலும் ஓரிருவர் இறந்துவிட்டார்கள். மற்றவர்களின் வாழ்க்கையும் மிக இறுக்கமாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. பாடசாலைக் காலத்தை மீட்டிப்பார்க்கும் சௌகரியமோ அல்லது தருணங்களோ தெய்வுக்குப் பெரிதாக வாய்த்ததில்லை. ஆனால் அந்த வசதி வாய்க்கப்பெற்றவர்களின் செயல்களை அவர் வியப்புடன் பார்த்து இரசிப்பதுண்டு. ஒரே பிரிவுக்கு நான்கைந்து வகுப்புகள். நூறுக்கும் அதிகமான மாணவர்கள். அதில் எண்பது பேராவது இப்போது வெளிநாட்டிலிருப்பார்கள். இன்று ஐம்பதுகளைக் கடந்தபின்னரும் ஒன்றாகக் கூடி, சீருடை அணிந்து துள்ளித்திரிகிறார்கள். துணி மூட்டையின் சுமை இறக்கப்பட்ட கழுதையின் துள்ளல்போல.

பிரதர், இங்க ஒரு கக்கூஸ் கட்டினாய் என்றால் வாற கஸ்டமர்சுக்கு வசதியாக இருக்கும்.

வாழைத்தோட்டத்துக்குள் மூத்திரம் அடிக்கச்சென்றவன் மறுபடியும் வந்து தெய்வுவிடம் பேசினான். தெய்வு அவனுக்குப் புதிய பிழாவில் கள்ளு வார்த்தபடியே பதில் சொன்னார்.

எங்கையண்ணை. கள்ளு இறக்கிறதுக்கே இஞ்ச ஆக்கள் இல்லை. ஊராக்களும் பெரிசா இப்ப கள்ளு குடிக்கிறதில்ல. எல்லாரும் சாராயத்துக்கு மாறீட்டாங்கள்.

நீ ஏன் ஊராக்களை நம்பி பிசினஸ் செய்யிறாய்? யாழ்ப்பாணம் இப்ப ஒரு டூரிஸ்ட் ஸ்பொட் பிரதர். இந்தத் தவறணையை டெவலப் பண்ணு. புடுங்கி எறிஞ்சிட்டு, இரண்டு வடலியைக் கொண்டு வந்து நடு. பனைதான் எங்கட அடையாளம். குட்டி குட்டியாக கொட்டில் போட்டு உள்ள மேசை குந்துகளை சரிக்கட்டு. வெளிய ஒரு குசினியைப்போட்டு கொத்துரொட்டி, டெவில்ட் சிக்கின் என்று செய்து குடு. அப்பதான் வெளிநாட்டாக்கள் வருவினம். வெளிநாட்டாக்கள் வந்தா, ஊரவனும் சேர்ந்து வருவான். விளங்குதா?

அவன் சொல்வதிலும் உண்மை இருந்ததுபோலவே தெய்வுக்குத் தோன்றியது. சொந்த ஊரிலிருந்து வேற்றூருக்குச் சுற்றுலா செல்லும் உலகத்தில் வேற்றூர்களிலிருந்து சொந்த ஊருக்குச் சுற்றுலா வருகின்ற மனிதர்களைக்கொண்ட விந்தை நிறைந்த நிலம் இது. 

எல்லாத்துக்கும் முதல் வேணுமே அண்ணை. இதுவே தெந்தெட்டாதான் ஓடிக்கொண்டிருக்கு.

ஒருவன் அடித்த பந்து கொட்டிலுக்குள் வந்து விழுந்தது. உள்ளே தம் பாட்டுக்குக் குடித்துக்கொண்டிருந்த இளைஞர்களுள் ஒருவன் பந்தைப் பொறுக்கித் திருப்பி எறிந்தான். அவர்கள் இப்போது அந்தக் கிரிக்கட் ஆட்டத்தை வீடியோ எடுக்க ஆரம்பித்தார்கள்.

முதல் ஒரு பிரச்சினை இல்ல. அதை எப்பிடியும் சமாளிக்கலாம். நான் எங்கட சங்கத்திடம் கேட்டுப்பார்க்கிறன். நலிவுற்ற உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கிறது எங்கட கடமை. நீ முழுசா ஒரு பிளான் போட்டு எனக்குத் தா. பொம்பிளையளும் வரக்கூடிய மாதிரி பிளான் போடு. அப்பிடியான இன்குளூசிவ் திட்டங்கள்தான் இப்ப கொமிட்டியில எடுபடுது. வெளிநாட்டுப் பொம்பிளையளும் குடிக்கிறமாதிரி வெறி குறைஞ்ச கள்ளை சரிக்கட்டு.  ஏலுமெண்டா டொடி டூர் எண்டு ஒண்டை அரேஞ்ச் பண்ணுவம். ஒரு வாகனத்தில ஆக்களை பனங்காட்டுக்க கூட்டிக்கொண்டுபோறமாதிரி. நிறைய இருக்குடா. ஒவ்வொரு நாளும் ரீல்ஸ் போடோணும். திறப்பு விழாவுக்கு திரிஷாமாதிரி இந்தியாலயிருந்து ஆக்களை இறக்கோணும். விளங்குதா? 

அவன் தெய்வுவின் வாட்ஸப் இலக்கத்தை வாங்கிப் பதிவு செய்து உடனேயே வணக்கம் அனுப்பினான். இதற்கிடையில் மறுபடியும் பந்து கொட்டிலுக்குள் வேகமாக வந்து அந்த இளைஞர்களின் உடலில் பட்டு விழுந்தோடியது. பந்தை விரட்டி மாணவன் கொட்டிலுக்குள் அதனைத் தேடிக் காணாது, இளைஞர்களிடம் பந்து எங்கே என்று கேட்டான். அவர்கள் தமக்குத் தெரியாது என்று சொன்னார்கள். கேட்டவனுக்குக் கொஞ்சம் வெறி ஏறியிருந்தது.

என்னடா. இஞ்சாலதானே வந்துது. விளையாடுறீயளா?

நீங்கதாண்டா விளையாடுறிங்க. நம்மயில்ல.

இளைஞர்களுள் ஒருவன் சடக்கென்று சொல்ல, மற்றவர்கள் சிரித்தார்கள். அந்தப் பழைய மாணவனுக்கு இப்போது கோபமும் சேர்ந்து ஏறிவிட்டது.

என்னடா, மரியாதை குறையுது. தமிழும் வேறயா கேக்குது. நீ எவ்விடம்?

அவன் கேட்கவும், இளைஞர்களில் ஒருவன் அவர்களது பேச்சுவார்த்தையை வீடியோ எடுக்க ஆரம்பித்தான். இவன் அவனது செல்பேசியைப் பறிக்கப்போக, மற்ற இளைஞர்கள் அவனை மறிக்கப்போக, விளையாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இப்போது கொட்டிலை நோக்கி ஓடி வந்தார்கள். தெய்வு அவர்களை விலத்திவிட விரைந்தார். சீவரத்தினமும் தன் பங்குக்குப் பேசினார்.

தம்பியவை. கள்ளுக்குடிக்க வந்தனியள். குடிச்சமா, முடிச்சமா எண்டு வெளிக்கிடோணும். தவறணைக்குள்ள சில்லெடுக்கிறது மரியாதையில்ல. உந்தா, சிங்களப்பெடியன் பார்த்துச் சிரிக்கிறான்.

இப்போது பழைய மாணவர்களுள் ஒருவனும் அவர்களைப் பிடித்து அப்பாலே தள்ளிக்கொண்டுபோனான்.

டேய் விடுங்கடா. பள்ளிக்கூட யூனிபோர்மில நிக்கிறம் எண்டத மறந்திடாதியள். எங்களுக்கெண்டு ஒரு மரியாதை இருக்கு. கண்டவங்களோட எதுக்குக் கதைபடுறியள்.

ஆருடா கண்டவன்?

நீதாண்டா. 

வெள்ளைக்காரனுக்கு கக்கூஸ் கழுவுறவங்க பேசக்கூடாது.

மறுபடியும் அவர்கள் மல்லுக்கட்ட ஆரம்பிக்க, ஒருவன் ஆங்கிலத்தில் எதையோ சொல்லி பழைய மாணவர்களை அடக்கினான். தெய்வு அந்த இளைஞர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி வெளியே போகச்சொன்னார். பின்னர் பழைய மாணவர்களையும் பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறச்சொன்னார். குடித்த கள்ளுக்கும் வாங்கிய பிழாவுக்கும் அவர்கள் அவரிடம் ரசீது கேட்டார்கள். அவர் அவசரமாக ஒரு கொப்பி ஒற்றையில் கணக்கு எழுதி அவர்களிடம் நீட்டினார்.

ஒழுங்கான ரிசீப்ட் இல்லை. நாங்கள் பதினைஞ்சு பிழாதான் பாவிச்சிருக்கிறம். நீ இருபதுக்குக் கணக்கு காட்டியிருக்கிறாய்.

அஞ்சு பிழா இஞ்ச அடுக்கியிருக்கு அண்ணை. கள்ளோட. நீங்க கேட்டுதான் வார்த்தனான்.

அதுக்கு? குடிக்காத கள்ளுக்குக் காசு குடுக்கேலாது. 

அவர்கள் காசைக் கணக்காக எண்ணி தெய்வுவிடம் கொடுத்தார்கள். அவரோடு வியாபாரத் திட்டம் போட்டவன் மாத்திரம் அருகில் வந்து ஐயாயிரம் ரூபாய் தாள் ஒன்றினை அவரின் கைகளுக்குள் செருகினான்.

நான் சொன்னனே. இதையே பெரிய ரிசோர்ட்டா மாத்தியிருந்தா இவ்வளவு சண்டை வந்திருக்காது. எங்கட ஆக்கள் பெரிய ஓட்டல் எண்டால் அம்மிக்கொண்டு கிடப்பினம்.

அவர்கள் அனைவரும் தவறணைக்கு வெளியே மாட்டியிருந்த பெயர்ப்பலகை முன்னே நின்று கூட்டு செல்பி எடுத்தார்கள். அப்புறம் ஒவ்வொருவராக வாகனத்துக்குத் திரும்பினார்கள். ஓட்டுநர் வாகனத்தின் எஞ்சினை இயக்கி, அது இரைய ஆரம்பிக்கத்தான், தவறணையில் மறுபடியும் அமைதி திரும்பியது. ஏனைய வாடிக்கையாளர்களும் வெளியேறியிருந்தார்கள். பேராசிரியர் குந்தருகேயே சாய்ந்து தூங்க ஆரம்பித்திருந்தார். தெய்வு வளவு முழுதும் வீசப்பட்டுக்கிடந்த எச்சில் பிழாக்களையும் நெகிழிப்போத்தல்களையும் பொறுக்கிக் குப்பைக்குள் போட்டார். பாடசாலைத் தொப்பிகள் இரண்டு புழுதிக்குள் கிடந்தன. வாழைத்தோட்டத்துக்கருகே துப்புரவாக்கியபோது தூரத்தில் அந்தப் பந்து கிடந்தது தெரிந்தது. தெய்வு வாழைத் தடல்களுக்குள் குனிந்து அதை எடுக்கப்போகும்போது மூத்திர நெடி கப்பென்று அடித்தது. முழு வகுப்புமே வாழைத்தோட்டத்தினுள் பெய்துவிட்டிருந்தது. நாசமறுந்த சீவியம் இது. பேசாமல் அந்தப் பழைய மாணவன் சொன்னதுபோலவே பனங்காட்டுக்குள் தவறணையைக் கொண்டுபோய் ஒரு நட்சத்திர மதுபானசாலை ஆக்கிவிட்டால் இந்த சீரழிந்த வாழ்வு இருக்காது. ஒரு வளவைக் குத்தகைக்கு எடுத்து, உள்ளேயே கொட்டில், கக்கூஸ் எனக் கட்டிச் சின்னதாக ஆரம்பிக்கலாம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விருத்தி செய்யலாம். ஆனால் எதைத் தொட்டாலும் எப்படியும் இருபது இலட்சங்களாவது தேவைப்படும். எங்கே போவது?

தெய்வு மீதமாகிப்போன மண்டிக் கள்ளைக் கொட்டி, வாளிகளையும் ஜொக்குகளையும் கழுவித் தலைகீழாகக் கவிழ்த்தார். தவறணையைக் கூட்டி ஒதுக்கினார். அந்தத் தொப்பிகளை எடுத்து நன்றாக உதறி, பந்தோடு சேர்த்து மேசையில் கவனமாக வைத்தார். வெயில் புழுங்கித் தள்ள, வியர்வை எங்கும் அந்த மூத்திர நெடி ஒட்டிக்கிடந்தாற்போலத் தோன்றியது. அவர் கை, கால், முகத்தை நன்றாக அலம்பி, சாறத்தால் துடைத்துவிட்டு, ஆயாசமாக நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். பின்னர், கணம் படலையை எட்டிப்பார்த்துவிட்டு, ஒரு தொப்பியை எடுத்து அணிந்தபடி, அன்றைய தினத்துக்கான கணக்குகளைச் சரிபார்க்க ஆரம்பித்தார்.

000

ஜே.கே

அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss