மம்மர் அறுக்கும் மருந்து (21) : சமத்துவத்தைத் தடுக்கும் உள்ளரசியல் : பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்1 முதல் 20 வரை

விஜயகுமார்: சில இடங்களில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் (குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள்) ஒரு அடிமை வாழ்வு வாழ வேண்டியிருக்கிறது. மாணவர்களைச் சொந்த வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல், அதாவது தோட்ட வேலைகள், கட்டிட வேலைகள், வங்கி/அரசு அலுவலகம் சென்று வருதல் உள்ளிட்ட பல வகைகளில் அவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். விதிகளால் இதைக் கட்டுப்படுத்தவே முடியாதா?

பெருமாள்முருகன்: நம் பாரம்பரியக் கல்விமுறை குரு சிஷ்ய மரபு சார்ந்தது. அதன் மிச்ச சொச்சம் இன்று வரை தொடர்கிறது போலும். இதில் இணக்கத்தோடு பரஸ்பர உதவியாக நடப்பதும் உண்டு. அதிகாரத்தால் நடப்பதும் உண்டு. எப்படியாயினும் நவீனக் கல்விமுறைக்கு இது பொருத்தமானதல்ல. உ.வே.சாமிநாதையரும் அவர் உடன் பயின்ற மாணாக்கர் சிலரும் தம் ஆசிரியராக மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுடனேயே எந்நேரமும் இருந்தனர். உ.வே.சா. பார்ப்பனர் ஆதலால் சூத்திரராகிய குருவின் வீட்டில் தங்கவில்லை. பிற மாணாக்கர்கள் அவருடனேயே தங்கியிருந்தனர். குருவுக்கு எல்லாப் பணிவிடைகளையும் மாணாக்கர்களே செய்வர். அது அந்தக் காலத்து நடைமுறை. குருவுக்கு ஊதியம் இல்லை. மாணாக்கர் ஏதாவது தந்தால் உண்டு. புரவலர்களையும் மடங்களின் ஆதரவையும் நாடிப் பிழைக்க வேண்டியிருந்தது. இன்று அப்படியல்ல. நவீனக் கல்விமுறையில் ஆசிரியருக்கு மாத ஊதியம் வருகிறது. ஊதியத்தையும் பெற்றுக் கொண்டு மாணாக்கரிடம் தனிப்பட்ட வேலை வாங்குவது சரியானதல்ல.

இருபக்கமும் பிரச்சினை இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆசிரியர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார். மாணாக்கர் தம் இயலாமை காரணமாகச் சுயமரியாதையை இழந்து அடிமை வேலை செய்யத் தயாராகின்றனர். ஓரிருவர் செய்து பழக்கப்படுத்தி விட்ட பிறகு அடுத்து வருபவரிடமும் அதையே எதிர்பார்க்கின்றனர். பின்னர் அதுவே வழக்கமாகிவிடுகிறது. பிரச்சினை ஏதுமில்லாமல் ஆய்வை முடித்துப் பட்டம் பெற வேண்டும் என்றால் நெறியாளருக்குப் பணிவிடை செய்தாக வேண்டும் என்னும் நிலை இயல்பாக்கம் செய்யப்பட்டு விட்டது. இதில் அறிவுச் சுரண்டல், பொருளாதாரச் சுரண்டல்,  உடல் உழைப்புச் சுரண்டல் மூன்றும் நடக்கின்றன. ஆய்வாளர் எழுதும் கட்டுரைகளை நெறியாளர் தம் பெயரில் வெளியிட்டுக் கொள்வது பொதுவாக அனைவரும் அறிந்த விஷயம். நூல்களையே அப்படிக் களவாடியவர்கள் உண்டு. ஆய்வாளர் பெறும் உதவித்தொகையில் இத்தனை சதவீதம் கொடுப்பதாக இருந்தால் சேர்த்துக் கொள்வதாகப் பேரம் பேசி இடம் கொடுத்த நெறியாளர்களையும் அறிவேன். தனிப்பட்ட வேலைகளுக்கு ஆய்வாளர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் அனைவருக்கும் தெரிந்ததே.

இருதரப்புமே சுயமரியாதை உணர்வு கொண்டிருந்தால் தவிர விதிகளால் இவற்றைத் தடுக்க முடியுமா என்று தெரியவில்லை. சேர்ந்தது முதல் முடித்து வெளியே வரும்வரை மட்டுமல்ல, வந்த பின்னும் ஆய்வாளருக்கும் நெறியாளருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்கே சென்றாலும் ’நெறியாளர் யார்?’ என்னும் கேள்வி வாழ்க்கை முழுக்கத் துரத்துகிறது. பெற்றோர் பெயர்கூட ஒருகட்டத்தில் நம்மை விட்டு நீங்கிவிடுகிறது. நெறியாளர் பெயர் நீங்காத பிசாசு போல இடைவிடாமல் பிடித்துக்கொள்கிறது. ஆகவே ஆய்வாளர்களுக்கு என்று அமைப்பு இருந்தால் ஓரளவு உதவக் கூடும். அமைப்புச் செயல்பாடுகளுக்கு அஞ்சுவார்கள். கற்றோர் இத்தகைய அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்வது கௌரவக் குறைச்சல் என்று நினைக்கின்றனர். அமைப்பில் செயல்பட்டால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் கருதுகின்றனர். அவையெல்லாம் உண்மைதான். ’தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை’ என்னும் அமைப்பு ஒன்றைத் தொடங்கி வழிநடத்திய என் மூத்தோர் ஒருவருக்கு அதன் காரணமாக வேலைவாய்ப்பு பறி போயிற்று. பின்னர் சில ஆண்டுகள் காத்திருந்து ’இப்போது அப்படியெல்லாம் செயல்படவில்லை’ என்று உறுதி கொடுத்துப் பணிவாய்ப்பு பெற்றார். ஆகவே தொழிற்சங்கம் போல வெளியாட்கள் பொறுப்பில் இருந்து இயக்கலாம். ஏதேனும் ஒருவகை அமைப்பு தேவை என்பது என் எண்ணம்.

வி: குருசிஷ்ய மரபின் தாக்கமே முக்கியமான காரணம் என்று கருதுகிறீர்களா? நவீனக் கல்விமுறை வந்து இருநூற்றாண்டு கடந்தும் குருசிஷ்ய முறை நம் மனதை விட்டு அகலவில்லையா?

பெமு: எழுத்தறிவித்தவன் இறைவன், மாதா பிதா குரு தெய்வம் என்னும் விழுமியக் கருத்துக்கள் இன்றுவரை நிலவிக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர் குறைகளைப் பொதுவெளியில் பேசினாலே ’ஆசிரியர்களைப் பற்றி அபவாதம் சொல்லாதீங்க’ என்று எனக்கு அறிவுரை சொல்வோர் பலருண்டு. ஆசிரியர் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது நம் சமூகத்தில் விழுமியமாகவே நிலைபெற்றுள்ளது. இன்று சமூக ஊடகப் பெருக்கம் காரணமாகச் சுரண்டல் ஓரளவேனும் குறைந்திருக்கிறது என்று கருதுகிறேன். உலகம் முழுக்க நிலை எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. நம் சமூகத்தில் இச்சுரண்டலை வெவ்வேறு கோணத்தில் பார்க்க வேண்டியுள்ளது.

குரு சிஷ்ய முறையின் எச்சம் என்று சொன்னேன். அது மட்டுமல்ல. சாதியக் கோணத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. இங்கு பதவியும் அதனால் கிடைக்கும் அதிகாரமும் சாதிய மேலாதிக்க மனநிலையைப் பலருக்கும் கொடுத்துவிடுகிறது. வெளிப்படையாகச் சாதி பார்த்து மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது, தம் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் சொல்லவில்லை. அவை எல்லோருக்கும் தெரிந்தவை. அகம் சார்ந்து செயல்படும் சாதியப் படிவைச் சொல்கிறேன். எந்தப் பிரிவில் இருந்து வந்தவராக இருப்பினும் அதிகாரம் கிடைத்துவிட்டால் சாதிய மேலாதிக்கத்தை அறிந்தோ அறியாமலோ கையாள்கிறார்கள். எதிராக அதிகாரத்திற்கு ஆளாவோர் ஒடுக்கப்பட்ட சாதிய மனநிலையைப் பெறுகிறார்கள். ஆகவே அதிகாரம் என்பதே சாதியப் படிநிலையைப் புனரமைப்பதாக மாறிவிடுகிறது. கடந்த நூற்றாண்டில் இத்தகைய நடைமுறையை மிக வெளிப்படையாகக் காண முடிந்தது. இன்று நிறைய நெகிழ்வுகள் நேர்ந்திருக்கின்றன. விதிகளை விட மனநிலை மாற்ற நிர்ப்பந்தமே இவற்றைச் சரிசெய்யும் என்று தோன்றுகிறது.

எனக்கு அரசுப்பணி கிடைத்து 1996இல் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதைய முதல்வருக்கு முன்னால் காலி நாற்காலிகள் பல  இருந்தாலும்  உட்காரச் சொல்லவில்லை. மூத்த ஆசிரியர்கள் மட்டுமே முதல்வருக்கு முன் உட்கார முடியும். துறைத்தலைவர் வரும்போது நாங்கள் எழுந்து நின்று பதில் சொல்ல வேண்டும். அலுவலகத்தில் ஒருமணி நேரமாவது காத்திருந்தால் தான் வேலை நடக்கும். இன்றும் அலுவலக உதவியாளருக்கு எந்த அலுவலகத்திலும் இருக்கை கிடையாது. அதிகாரியின் அறைக்கு முன்னால் ஒரு முட்டான் வேண்டுமானால் போடுவார்கள். அதிலும் உட்கார  முடியாது. இதை அதிகாரத்திற்கும் சாதிய மனநிலைக்கும் உள்ள உறவின் வெளிப்பாடாகவே காண்கிறேன். நெறியாளருக்கும் ஆய்வாளருக்கும் இடையிலான ஆண்டான் – அடிமை மனப்பான்மைக்கும் சாதிய மனநிலை உள்ளார்ந்து செயல்படுகிறதோ என்னும் ஐயம் எனக்குண்டு. 

மோசடி செய்தாலும் பரவாயில்லை, எளிதாகப் பட்டம் பெற வேண்டும் என்னும் வேட்கையும் சோம்பலும் கூடக் காரணமாகத் தோன்றுகிறது. ஆய்வாளர்கள் பலர் எளிமையாக ஆய்வை முடிக்க வேண்டும் என்பதற்காகப் பணிவிடையை விரும்பும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து மனப்பூர்வமாக அவர்களுக்கு ஒத்துழைக்கிறார்கள் என்றும் எனக்குத் தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த நெறியாளர் ஒருவர் மாணவர்களை எல்லா வேலைக்கும் பயன்படுத்திக் கொள்வார். அதேசமயம் எழுதிக் கொடுக்க ஆள் ஏற்பாடு செய்து, எத்தகைய குப்பை ஆய்வேடாக இருப்பினும் ’மிகுசீர்த்தியது’ (Highly commended)  என்று எழுதி அறிக்கை தரும் புறத்தேர்வாளர்களிடம் மதிப்பீட்டுக்கு அனுப்பி, வாய்மொழித் தேர்வுக்கு தமக்கு உவப்பான ஆளை வரவழைத்துப் பட்டம் வாங்கிக் கொடுத்துவிடுவார். அவரிடம் சேரப் போட்டியிருக்கும். என்னைப் போன்றவர்களிடம் சேர விரும்ப மாட்டார்கள். வாசிக்க வேண்டும், சுயமாக எழுத வேண்டும் என்றால் பலர் அஞ்சுவார்கள். மேலும் என்னிடம் சேர்ந்தால் சீக்கிரம் முடிக்க முடியாது என்றும் பெயர் உருவாகிவிட்டது. ஆகவே நெறியாளர் – ஆய்வாளர் உறவில் ஆசிரியர் – மாணவர் என்பதைத் தாண்டி இவையெல்லாம் செயல்படுகின்றன என்றே நினைக்கிறேன்.

வி: நீங்களும் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்துள்ளீர்கள். நெறியாளரும் கூட. உங்கள் அனுபவம் எப்படி?

பெமு: கிட்டத்தட்ட எட்டாண்டுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக இருந்தேன். எம்.ஃபில்., பிஎச்.டி. பட்டங்களைப் பெற்றேன். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வழங்கும் இளநிலை, முதுநிலை ஆய்வு உதவித்தொகையை ஐந்தாண்டு முழுமையாகப் பெற்றேன். அக்காலத்தில் இந்தச் சீரழிவுகள் மிகுதியாக இல்லை. அப்போதுதான் தொடங்கின என்று சொல்லலாம். நான் பணிவிடைகள் ஏதும் செய்ய நேரவில்லை. ஆனால் எங்கள் துறைத்தலைவராக இருந்தவரும் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றியவருமான பேராசிரியருக்கு ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொடுத்திருக்கிறேன். அணிந்துரை கேட்டு அவருக்கு வரும் நூல்கள் பலவற்றுக்கு எழுதியிருக்கிறேன். அவருக்கு மதிப்பீட்டுக்கு வரும் முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கு அறிக்கை எழுதியுள்ளேன். பிழையில்லாமலும் சுயமான பார்வையோடும் எழுதுபவன் என்பதால் எனக்கு அவ்வேலையைக் கொடுத்திருக்கலாம். கல்விப்புலம் சார்ந்தவற்றை எழுதுவதற்குப் பெரிய உழைப்பு ஏதும் தேவைப்படவில்லை. அவை சூத்திர வகைப்பட்டவை. விளக்கமுறையில் ஆனவை. ஆகவே நான் இடக்கையால் எழுதி வீசியவை என்றே அவற்றைக் கருதுகிறேன். இன்னொரு வகையில் சொன்னால் கல்விப்புலம் சார்ந்த அறிவுச் செயல்பாடுகளை எல்லாம் அப்போதே கற்றுக்கொள்வதற்கு வழியாக அவை இருந்தன என்று கருதுகிறேன். வேறென்ன சொல்ல? இப்படிச்  சிலவற்றை அனுபவித்திருக்கிறேன்.

மற்றபடி மார்க்சிய இயக்கம் ஒன்றில் தீவிரச் செயல்பாட்டாளனாக இருந்த காரணத்தாலும் என் இயல்பு காரணமாகவும் பெருமளவு தப்பித்துக் கொண்டேன். என் நெறியாளர் என்னிடம் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்வார். என்னை எங்காவது உடழைத்துச் சென்றால் அவர்தான் செலவு செய்வார். என் வாய்மொழித் தேர்வு நடக்கும் போது கல்லூரி ஆசிரியராகிவிட்டேன். அப்போது தம்மிடம் எம்.ஃபில். பயிலும் மாணவர்களிடம் அரைப்பவுன், முனைவர் பட்ட ஆய்வாளர்களிடம் ஒருபவுன் எனத் தங்கக்காசு அல்லது மோதிரம் பெறுபவராக மாறியிருந்தார். ஆய்வேடு சமர்ப்பித்து மூன்றாண்டு கடந்தும் வாய்மொழித் தேர்வு நடக்கவில்லை. வேலைக்கும் போய்விட்டேன். முனைவர் பட்டம் இல்லை என்றாலும் பிரச்சினை இல்லை என்னும் மனநிலைக்கு வந்துவிட்டேன். அப்போது வாய்மொழித் தேர்வு வந்தது.

என் நெறியாளர் வேறொரு மாணவர் மூலமாகப் பவுன் கேட்டு அனுப்பினார்.  ’மோதிரம் வேணுமா? வெரலுக்குக் கேக்கறாரா சுண்ணிக்குக் கேக்கறாரா? தைரியமிருந்தா எங்கிட்ட நேராக் கேக்கச் சொல்லு’ என்று கோபமாகச் சொல்லியனுப்பினேன்.  அம்மாணவர் போய் அப்படியே சொல்லிவிட்டார். மூச்சுக் காட்டவில்லை. என் வாய்மொழித் தேர்வுக்கு விருந்து ஏதும் தரவில்லை. சிறுசெலவாயிற்று. அதையும் அவரே பார்த்துக்கொண்டார். ஒருபைசா செலவில்லாமல் வாய்மொழித் தேர்வு முடித்தவன் நானாகத்தான் இருப்பேன். என் அரசியல் பின்னணிதான் என்னைக் காப்பாற்றியது. ஆம், ஒவ்வொரு மனிதருக்கும் குறிப்பாக மாணவர்களுக்கு அரசியல் அவசியம்.

என் வழிகாட்டுதலில் பதினெட்டுப் பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டோர் எம்.ஃபில். பட்டம் பெற்றிருப்பர். பெரும்பாலும் என்னிடம் இளங்கலை படித்த மாணவர்களையே சேர்த்துக் கொண்டேன். சுயமான ஆய்வுப் பார்வையும் உழைப்பும் எழுதும் திறனும் உள்ளவர்களையே சேர்த்தேன். பகுதி நேரமாக ஆய்வு செய்தோர் கணிசமான பேர். குற்றமும் தண்டனையும் தொடர்பாக நாட்டுப்புறவியல் சார்ந்து ஆய்வு செய்த சி.சந்திரன், நேமிநாத இலக்கண உருவாக்கம் பற்றி ஆய்ந்த நா.அருள்முருகன், தொட்டிய நாயக்கர் குலதெய்வ வழிபாடு குறித்து ஆய்வு செய்த மு.நடராஜன், வாணர்கள் பற்றி ஆய்வு செய்த அய்.அம்பேத்கார், கொங்கு நாட்டு ஆவணங்களில் பெண்களைக் குறித்து எழுதிய த.சாவித்ரி ஆகியோர் ஆய்வேடுகள் முக்கியமானவை.

ஊர்ப்பெயர்கள், தொழிற்சொற்கள் ஆகியவற்றைத் தொகுத்துத் தரவுகளாக்கிய பெ.முத்துசாமி, ப.நல்லுசாமி, பெ.குணசேகரன், கோ.சீனிவாசன் ஆகியோர் ஆய்வேடுகளும் குறிப்பிடத்தக்கவை. அகராதியியல் சார்ந்து கு.சீனிவாசன், இரா.பிரபாகர் ஆகியோர் எனக்குப் பிடித்த வகையில் ஆய்வு செய்தனர். பிற ஆய்வேடுகளும் மோசமில்லை. குறிப்பாக எவரும் எழுதி வாங்கி வரவில்லை, தாமே எழுதினர் என்பதே முக்கியமான தகுதி. அவர்களில் பலர் பணிக்குச் செல்லவும் சென்ற பின்னும் ஆய்வுப் பட்டம் பயன்பட்டது எனக்கு நிறைவுதான். கல்விப்பணியை நிறைவாகச் செய்திருக்கிறேன் என்னும் மகிழ்ச்சி இருக்கிறது.

என் மாணவர்களுக்கும் எனக்குமான உறவைப் பரஸ்பர உதவி என்னும் நிலையில்  கையாண்டேன். நண்பர்கள் எப்படி ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வார்களோ அவ்வகையில் என்று சொல்லலாம். என் வீடு அக்காலத்தில் சத்திரம் போலிருந்தது. யாரும் வரலாம்; அவரவர்களே சமைத்துச் சாப்பிடலாம். எங்களுக்கும் கொடுக்கலாம். வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம். அவரவர் வேலையை அவரவர் செய்துகொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் என் குடும்ப ஒத்துழைப்பும் இருந்தது. என் பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்குத் தனிப்பட்ட சுதந்திரம் தேவைப்பட்ட போது கொஞ்சம் மாற்றிக்கொண்டேன். கல்லூரிச்   சூழல் சார்ந்து வாய்மொழித் தேர்வு விருந்துகளைத் தவிர்க்க முடிந்ததில்லை. பெருஞ்செலவாக இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பொருளாதார பலம் இல்லாதவருக்குச் செலவு வைக்கவில்லை. ’எங்கள் ஐயா’ தொகுப்பில் என் ஆய்வு மாணவர்கள் சிலர் எழுதிய கட்டுரைகள் இருக்கின்றன. நெறியாளராக என் நடத்தை எப்படியிருந்தது என்பதை அறிய அவை உதவும். இன்றும் மாணவர் தொடர்பு விட்டுப் போகவில்லை. பரஸ்பர உதவி தொடரத்தான் செய்கிறது.

பல்கலைக்கழக ஆசிரியர் போலக் கல்லூரிப் பணியில் நெறியாளராக இருந்து இத்தனை பேருக்கு வழிகாட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏதுமில்லை.  நெறியாளர் வேலைக்கு ஒதுக்கிய நேரத்தைப் படைப்புக்குச் செலவிட்டிருந்தால் எழுத நினைத்திருந்த சில நாவல்களை எழுதியிருக்கலாம், இன்னும் ஐம்பது சிறுகதைகள் எழுதியிருக்கலாம் என்று அவ்வப்போது தோன்றுவதுண்டு. அப்போதெல்லாம் இரண்டு செயல்களைச் செய்வேன்.  ’எங்கள் ஐயா’ நூலை எடுத்துச் சில கட்டுரைகளை வாசிப்பேன். மாதொருபாகன் பிரச்சினை எழுந்த போது என் வீட்டைச் சூழ்ந்திருந்த மாணவர் படையை எண்ணிப் பார்ப்பேன். அவர்களின் அன்புக்கு இன்னும் பத்து நாவல் எழுதியிருந்தாலும் ஈடாகாது என்று தோன்றும். ஓய்வு பெற்றுவிட்ட போதும் மாணவர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் குறைவில்லை.

வி: பரிந்துரைக் கடிதம் என்னும் வழக்கம் அடிமைத்தளையை இறுக்குகிறது. ஒரு மாணவர் படிக்கும்போது மட்டுமல்ல, படித்த பிறகும் அவர் எதிர்காலத்தை தீர்மானிப்பவராக முனைவர் பட்ட வழிகாட்டி இருக்கிறார். இந்த நிலையில், ஆண்கள் உழைப்புச் சுரண்டலுக்கும் பெண்கள் உழைப்புச் சுரண்டலோடு பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். குடும்பம், சமூகம் என்பதைக் கருத்தில் கொண்டு வாழ்நாள் முழுதும் குற்றவாளிகளை அடையாளம் காட்டாமல் மௌனம் காக்கிறார்கள். காலத்துக்கு ஏற்ப நாம் இந்த பரிந்துரைக் கடித வழக்கத்தை மாற்றினால் என்ன?

பெமு: நெறியாளர் – ஆய்வாளர் பிரச்சினையில் முக்கியமாகப் பாலியல் சுரண்டலையும் சேர்க்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் மட்டும் முனைவர் பட்ட ஆய்வு இருந்த 1980, 1990களிலேயே இத்தகைய சுரண்டல் பற்றி நானறிந்த துறைகளிலேயே நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களை உயர்கல்விக்கு அனுப்புவதே அரிதாக இருக்கும் சமூகத்தில் பாலியல் சுரண்டல் பெண்கல்விக்குப் பெரும்பாதகமாக இருக்கிறது. நெறியாளரால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகித் திருமண வாழ்வையே துறந்து தனித்து வாழ்ந்த பெண்கள் உண்டு. ஆண்கள் இத்தகைய சுரண்டலுக்கு ஆளான கதைகளும் உண்டு. பாலியல் சீண்டல் செய்தார் என்று புகார் தருவேன் என்று நெறியாளரை மிரட்டிய கதைகளும் இருக்கின்றன.  இவற்றைப் பொதுவெளியில் பேசுவதற்கு இருக்கும் தயக்கம், பேசினாலும் நடவடிக்கை எடுக்கச் சரியான அமைப்பு முறை இல்லாமை ஆகியவையும் இச்சுரண்டல் தொடர்வதற்குக் காரணம்.

நெறியாளர் கொடுக்கும் பரிந்துரைக் கடிதம் பற்றி எனக்குத் தெரியவில்லை. கலைப் படிப்புகளில் அத்தகைய பரிந்துரைக் கடிதங்களால் எந்தப் பயனும் இல்லை என்றே நினைக்கிறேன். அறிவியல் படிப்புகளில் இருக்கலாம். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில், ஆராய்ச்சி நிறுவனங்களில் பணி வாய்ப்புப் பெறுவதற்கு அத்தகைய நடைமுறைகள் இருக்கலாம். அப்படி இருப்பின் அது அவசியமில்லை என்றே நினைக்கிறேன். ஒருவரின் ஆய்வேட்டை விடவா நெறியாளரின் பரிந்துரைக் கடிதம் பெரிது? நன்னடத்தைச் சான்றிதழ், சான்றொப்பம் ஆகியவை இன்று அவசியம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அவற்றைப் போலப் பரிந்துரைக் கடிதமும் அவசியம் இல்லை. யாரேனும் கொடுத்தாலும் அதைப் பொருட்படுத்தாத நிலை உருவாக வேண்டும். முனைவர் பட்ட ஆய்வை முடித்த பிறகு எவ்வகையிலும் நெறியாளரைச் சார்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆய்வாளருக்குக் கூடாது.

வி: ஒரு ஆசிரியர் மீது புகார் சுமத்தும்போது அந்த நிறுவனமே மாணவருக்கு எதிராக ஒன்று திரண்டு ஒரு பெரும் உளவியல் எதிர்த் தாக்குதலை நிகழ்த்துவதைக் கண்டிருக்கிறேன். புகாரளித்த மாணவரைத் தனிமைப்படுத்துதல், மதிப்பற்றவராக, இது உன் இடம் அல்ல என உணர வைத்தல், அவரின் வழக்கமான ஆய்வுச்செயல்பாடுகளுக்கு பல்வேறு வகைகளில் முட்டுக்கட்டை போடுதல் போன்றவை. இதை செய்பவர்கள் ஆசிரியர்கள். நிலைமை இப்படி இருக்கையில் எதிர்காலம் பாழாகும் என்பதாலேயே ஆசிரிய வன்முறைகள் வெளித்தெரிவதில்லை. மாணவர்களுக்கு எப்படி சட்டப்பாதுகாப்பை வழங்க முடியும்?

பெமு: நிறுவனம் தம் பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவே முயலும். அதனால் இத்தகைய பிரச்சினைகள் நடந்தாலும் வெளியே தெரியாமல் மறைத்துக்கொள்ள முயலும். விசாரணைக் குழு அமைக்கும் முதல் கட்ட நடவடிக்கையைக் கூட எடுக்காமல் தள்ளிப் போடும் நிலைதான் பெரும்பாலும் இருக்கிறது. பாதிக்கப்படுபவர் பக்கம் நிற்கும் தார்மீக அறம் நம்மிடம் இல்லை. அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை. அதை விடவும் ’நற்பெயர்’  முக்கியமானதாக இருக்கிறது.  அது தவறு. தனிநபர் பிரச்சினையையும் நிறுவனத்தின் நற்பெயரையும் தொடர்புபடுத்தாமல் கையாள வேண்டும். ஒரு பிரச்சினை நடந்தால் பொதுவெளிக்குத் தெரியும்படி உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலமாகத்தான் நற்பெயரைத் தக்க வைத்துக்கொள்ள முயல வேண்டும். அதை மறைப்பதன் வழியாக நற்பெயரைத் தக்க வைக்க முடியாது. மாணவர் அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும் என்பதையும் இவ்விடத்தில் கருத்தில் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்படும் மாணவருக்கு எதிராக நிறுவனத் தாக்குதல் நிகழ்வதைப் போலவே ஆசிரியருக்கு எதிராக உருவாக்கப்படும் பொய்ப்புகார், அதற்குச் சாதகமாக மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நேர்மையாகவும் கடமையுணர்வோடும் இருக்கும் ஆசிரியருக்கு எதிராகச் சக ஆசிரியர்களோ நிறுவனமோ மாணவர்களைத் தூண்டி விடுவதும் உண்டு. ஆசிரியர்களுக்குள் இருக்கும் பிரச்சினையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதும் உண்டு. பல்கலைக்கழகத்திலும் சரி, கல்லூரியிலும் சரி ஒரு நெறியாளரிடம் ஆய்வு செய்பவர் அந்நெறியாளருக்கு ஆகாத இன்னொரு ஆசிரியரிடம் பேசினாலே வம்பு வந்துவிடும்.

இப்படிக் கல்விப் புலத்தில் எத்தனையோ பிரச்சினைகள். யோசித்தால் தலை குழம்பிவிடும். பலவற்றை முறைப்படி எதிர்கொள்ள ஏற்கனவே இருக்கும் சட்டங்கள், விதிகள் போதுமானவை. ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கிறது. சட்டங்கள் இருப்பினும் சாதி, அரசியல், பாலினம், உள்ளூர் எனப் பல தலையீடுகள் வந்து நடவடிக்கைகளைச் சீர்குலைத்துவிடும். அதற்கு என்ன செய்வது? ஆசிரியர் பயிற்சி, தேர்வுமுறை ஆகியவற்றில் கடும் கட்டுப்பாடுகள் தேவை. யார் வேண்டுமானாலும் ஆசிரியராகி விட முடியாது. ஆசிரியருக்கென இருக்க வேண்டிய தகுதிகளைப் பரிசோதிக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் வேண்டும். அந்த அடிப்படை பலமாக இருப்பின் பிற பிரச்சினைகள் வாரா. வரினும் எளிதில் தீர்க்கலாம்.

வி: ஆசிரிய வன்முறையால் உயிரிழந்த ரோகித் வெமுலாவுக்கு உங்கள் நூல் ஒன்றைச் சமர்ப்பணம் செய்திருக்கிறீர்கள். அந்த நாளின் அதிர்ச்சியில் நீங்கள் எழுதிய கவிதையையும் வாசித்திருக்கிறேன். அவர் இறப்பிற்கான காரணங்களில் இருந்து மேலும் சிலவற்றை பேசுவோம் என நினைக்கிறேன். இது குறித்து ஆனந்த் பட்டவர்த்தனின் “ரீசன் (Reason – 2018)” என்கிற ஆவணப்படத்தைப் பார்த்தேன். இந்துத்துவ – அம்பேத்கரிய மாணவர்களின் மோதலைச் சுட்டி ரோகித் மற்றும் அவரின் நண்பர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்; அவர்கள் கல்லூரி வளாகத்திலேயே தங்கிப் போராடுகிறார்கள். ஒருநாள் கழிவறை சென்று வருகிறேன் என்று சொல்லிச் சென்ற ரோகித் உயிரை மாய்த்துக்கொள்கிறார். மாணவர்கள் உடலை வைத்துப் போராடலாம் என்பதால் காவல்துறை வலுக்கட்டாயமாக இறுதிச் சடங்குகளைச் செய்து முடிக்கிறது.

பெமு: அரசியல் அதிகாரமும் சாதியமும் இங்கே பிரிக்க இயலாத வகையில் பிணைந்து செயல்படுகின்றன. அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு எந்த வகையிலெல்லாம் சாதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று சிந்திப்பதும் அதனடிப்படையில் செயல்படுவதுமே அரசியலாக இருக்கிறது. ஒவ்வொரு ஆட்சியையும் இது இந்தப் பிரிவினர் நலன் சார்ந்து செயல்படும் அரசு என்று இனம் காட்ட முடிகிறது. சாதிகளைப் பயன்படுத்தும் தந்திரமே வெற்றிச் சூத்திரம். இந்த அரசியலின் தாக்கம், வெளிப்பாடு எல்லாத் தளத்திலும் எதிரொலிக்கிறது. பள்ளிக் கல்வியை விடவும் உயர்கல்வியில் இதன் தாக்கம் அதிகம். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டைப் புரிந்து கொண்டவர்கள்; அதன் பயன்களைப் பெறுபவர்கள். மேலும் தாம் பயிலும் நிறுவன வளாகத்தில் அதிகார நிலையிலும் சக மாணவர்கள் மத்தியிலும் சாதியம் செயல்படும் நுட்பங்களை அறிந்தவர்கள். ஆகவே சாதியத்தால் நேரடியாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

பிற்பட்டவர்களாயினும் பட்டியலினத்தவராயினும் இன்னும் கல்விக்காகப் போராடிக் கொண்டேதான் இருக்கிறோம். போராடப் போராட ஆதிக்க சாதிக்குழு தமக்கான, தமக்கு மட்டுமேயான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் தந்திர நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். ஐஐடி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் அப்படிப்பட்டவை. கல்வியைத் தனியார்மயமாக்குவதன் பின்னணியிலும் இத்தகைய சாதியப் பார்வையே இயங்குகிறது. பணம் இருப்போர் கல்வியைப் பெறுவது என்றால் எந்தெந்தப் பிரிவினர் அதற்குள் வர முடியும்? கிராமப்புறங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழும் பட்டியலினத்தவர் பலர் அரசின் உதவித் திட்டங்களை நம்பியே இருக்கிறார்கள். அவர்கள் எப்படித் தனியார் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய முடியும்? அரசு வழங்கும் சாதி அடிப்படையிலான உதவித்தொகையை ஒருபருவக் கட்டணத்திற்கு எடுத்துக்கொள்ளும் சாதாரண சுயநிதிக் கல்லூரி ஒன்றில் கூடச் சேர இயலாத நிலையே அவர்களுடையது.

மதிப்பு, சுயமரியாதை, வாய்ப்புகள் என எல்லாவற்றிலும் சமத்துவத்தை நோக்கி நாம் நகர்வதை முடிந்தவரை தடுப்பதே இங்கே அரசியலாக இருக்கிறது. காலத்தின் நிர்ப்பந்தத்தால் சில சலுகைகளை, உரிமைகளைக் கொடுப்பதாகப் பாவனை செய்வதை வெளிப்படை அரசியலாகக் காட்டிக்கொள்வார்கள். ஆனால் சமத்துவத்தைத் தடுத்து முடிந்த வரைக்கும் தள்ளிப் போடுவதையே உள்ளரசியலாகக் கொள்வார்கள். அதற்கான அணிதிரட்டல் சகல தரப்பிலும் நடக்கும். இந்தத் தந்திரமான அரசியலை எதிர்கொள்வதே இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டோர் போராட்டமாக இருக்கும் என்று கருதுகிறேன். உயர்கல்வி நிறுவனங்களில் இப்போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அதன் ஒருவெளிப்பாடுதான் ரோகித் வெமுலா பிரச்சினை. ரோகித் வெமுலாக்களைப் பாதுகாத்துப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.

வி: சில வாரங்களுக்கு முன்பு, பட்டியலினத்தவரைப்போல, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள்,  பணியாளர்கள் என எவரும் சாதிப்பாகுபாடு குறித்த புகார் தெரிவிக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரை பொதுப்பிரிவினரின் எதிர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத் தலையிட்டால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நமது பல்கலைக்கழக வளாகங்கள் யாரைத்தான் பாதுகாக்க முயல்கின்றன?

பெமு: ஆசிரியர்கள் எந்தச் சாதிப் பிரிவிலிருந்து வந்திருந்தாலும் சரி. அவர்கள் இந்த அரசின் அங்கமாகிவிடுகிறார்கள். அரசின் அங்கம் ஒவ்வொன்றும் அரசைப் பாதுகாக்கவே முயலும். அது வெளிப்படையாகவும் நடக்கும்; மறைமுகமாகவும் நடக்கும். அரசும் தன் அங்கங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே முயலும். அவை எத்தனை அழுகிப் போனாலும் ஒன்றும் ஆகவில்லை என்று சாதிக்கும். நாற்றம் அடித்தாலும் மூக்கைப் பிடித்துக்கொள்ள ஆலோசனை வழங்குமே தவிர சிகிச்சைக்கு ஒத்துக்கொள்ளாது. மாணவர்கள் அரசின் அங்கமல்ல. அரசு தனக்குக் கீழே வைத்து அடக்கியாளும் பொதுமக்களில் ஒருபிரிவினர்தான் மாணவர்கள். அவர்கள் எந்த நேரத்திலும் அரசுக்கு எதிராக மாறிவிடும் தன்மை கொண்டவர்கள். அவர்களை எச்சரிக்கையாகவே அரசு கையாளும். இப்போதே கரப்பான் கட்சி எடுத்த போராட்டத்திற்கு எங்கெங்கிருந்தோ மாணவர்கள் கூடினார்களே அப்படிக் கூடிவிட்டால் அரசு தன் நிலையிலிருந்து அசைந்து கொடுக்க நேரும். அதுவரைக்கும் போக விடாமல் தன்னை அரசு பாதுகாத்துக்கொள்ள முயலும். அதற்குத் தன் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாவற்றையும் பயன்படுத்தும். உயர்கல்வியைப் பொருத்தவரைக்கும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்பது என் அனுமானம்.

நிறைவுற்றது

000

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop