முந்தைய பகுதிகள்: 1 முதல் 19 வரை

விஜயகுமார்: 2022இல் தமிழ்நாடு அரசு ‘முதல்வரின் ஆராய்ச்சி உதவித் திட்ட’த்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் மூன்று வருடங்களில் முனைவர் பட்டம் என்பது சிரமமான காரியம்; அதுவும் அறிவியல் புலத்தில் மிகக்கடினம். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெருமாள்முருகன்: முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு எந்த வகையில் உதவித்தொகை கிடைத்தாலும் அதை வரவேற்க வேண்டும். 1980களில் அறிமுகமான பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வழங்கும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பேருதவியாக இன்று வரை விளங்குகிறது. பல்கலைக்கழகத்தில் பயின்றால் மட்டுமே உதவித்தொகை என்றிருந்த நிலையும் மாறிக் கல்லூரிகளுக்கும் வழங்குவதும் மகிழ்ச்சி. 1990களின் தொடக்கத்தில் அத்தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை, முதுநிலை என ஐந்தாண்டு முழுமையாக உதவித்தொகை பெற்றவன் நான். அப்போது ஆய்வேடு சமர்ப்பித்து விட்டாலும் வாய்மொழித் தேர்வு நடக்கும் வரை உதவித்தொகை கிடைக்கும்.
1991 ஆகஸ்ட் தொடங்கி 1996 ஆகஸ்ட் வரைக்கும் உதவித்தொகை பெற்றேன். அது என் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை உருவாக்கியது. சென்னையில் எம்.ஃபில். பயின்ற போது ஒருநாளுக்கு இருவேளை மட்டும் உண்பேன். என் அம்மா தான் பணம் அனுப்புவார். அவர் உழைப்பை உறிஞ்சக் கூடாது என்னும் உணர்வில் என் செலவுகளை எல்லாம் மட்டுப்படுத்திக் கொண்டேன். காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து ஒருவேளை உணவு. பிறகு இரவுணவு. இப்படித்தான் இரண்டாண்டுகள் சென்றன. உதவித்தொகை வந்த பிறகு மூவேளை உணவுக்குப் பழகினேன். விரும்பிய நூல்களை வாங்க முடிந்தது. அக்காலத்தில் திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகளிலும் முன்றில், திலீப்குமார் ஆகியோரிடம் வாங்கிய புதிய நூல்களும் என இப்போதும் என் சேகரிப்பில் தனியிடம் பெற்றிருக்கின்றன.
வேலைவாய்ப்புக்காகப் படிக்க முடிந்தது. நூலகங்களுக்குச் செல்லவும் வாய்த்தது. நம்பிக்கையோடு காதல் திருமணம் செய்துகொள்ள முடிந்தது. என் மனைவிக்குப் பல்கலைக்கழக உதவித்தொகை கிடைத்தது. இருவருக்கும் சேர்த்து மூவாயிரம் ரூபாய் மாத வருமானம். மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்தோம். உதவித்தொகைக் காலத்திலேயே இருகுழந்தைகள் பெற்றோம். உதவித்தொகை முடிந்துவிட்டால் இருகுழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள் என்று கேட்டவர்களுக்கு ’இரண்டு எருமை வைத்துப் பாலூற்றிப் பிழைத்துக் கொள்வோம்’ என்று பதில் சொன்னேன். என் அம்மா வைத்திருந்த எருமைகளும் என் அப்பா நடத்திய சோடாக்கடையும் எனக்கு நம்பிக்கை தந்த தொழில்கள். ஆனால் அவற்றை நாடிச் செல்லும் தேவை ஏற்படவில்லை.
1996 ஆகஸ்ட் 16இல் எனக்கான உதவித்தொகைக் காலம் முடிந்தது. அதே மாதம் 26 அன்று அரசு கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். உதவித்தொகை பெற்ற ஐந்தாண்டு என்பது என் வாழ்வில் பெருமாற்றங்கள் ஏற்பட்ட காலம். அவ்வுதவித்தொகை பெறும் ஆய்வாளர்களை இன்றும் காண்கிறேன். அதைக் கொண்டு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு குடும்பத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நூல்கள் வாங்குகிறார்கள். பயணம் செய்கிறார்கள். அது தரும் நம்பிக்கை சாதாரணமல்ல.
ஆனால் ஒன்றிய அரசு இப்போது உதவித்தொகை வழங்கும் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து வருகிறது. திறமான ஆய்வுகளை இன்றைய அரசு விரும்பவில்லை. அவை தங்கள் கொள்கைக்கு எதிரானவை எனக் கருதுகின்றது. எனவே அடிமடியில் கைவைக்க முனைகிறது. இந்நிலையில் பல்கலைக்கழகமோ மாநில அரசோ ஒருவகை உதவித்தொகை வழங்கினால் அது வரவேற்க வேண்டிய விஷயம். செம்மொழி நிறுவனம் வழங்கிய உதவித்தொகை என் மாணவர் ஒருவருக்குக் கிடைத்தது. கல்லூரிக் கல்வி இயக்ககம் வழங்கிய உதவித்தொகையை இருமாணவர் பெற்றனர். அவற்றில் தொகை குறைவு எனினும் மாணவருக்கு அவசியமானவை என்பதில் சந்தேகமில்லை. ஒரு உதவித்தொகை உருவானால் அதன் பிறகு உயர்த்தச் சொல்லிக் கோரிக்கை வைக்கலாம். காலத்தை நீட்டிக்கக் கேட்கலாம். அவ்வகையில் தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித்தொகை நல்லது. ஆசிரியர் சங்கம், மாணவர் அமைப்புகள் எல்லாம் தொகையை உயர்த்தச் சொல்லியும் ஐந்தாண்டு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்க வேண்டும். முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கெனத் தனி அமைப்பு ஏதுமில்லை என்று நினைக்கிறேன். அப்படி ஒருங்கிணைப்பு இருந்தால் போராடி இன்னும் பலவற்றைப் பெறலாம். கல்வி நிதியை அரசுகள் குறைக்க முயல்கின்றன. கல்வி பெறுவோர் எண்ணிக்கை கூடக் கூடக் கல்விக்கு நிதியை அதிகரிக்க வேண்டும். அதைக் கண்காணிக்கவும் கோரவும் நம்மிடம் அமைப்புகள் இல்லை என்பதுதான் பெருங்குறை.
வி: பணபலமும் அரசதிகாரத்தில் உள்ளவர்களும் பகுதிநேர முனைவர் பட்டப்படிப்பில் சேருகிறார்கள். முழுநேர முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் ஆய்வு முடிவுகளை சில பேராசிரியர்கள் இவர்களுக்குத் தாரைவார்த்து முழுநேர ஆய்வு மாணவர்களை அடிமையாக்குகிறார்கள். இதற்குக் கொள்கையளவிலேனும் நாம் ஏதேனும் பாதுகாப்பை ஏற்படுத்த முடியுமா?
பெமு: முனைவர் பட்ட ஆய்வுகளைக் கண்காணிக்கும் பொறுப்பை இன்றைய பல்கலைக்கழக விதிகள் துறைசார் வல்லுநர்களுக்கு வழங்கவில்லை. அலுவலர்களுக்கு வழங்கியுள்ளன. அவர்கள் தமக்கேற்ற வகையில் விதிகளுக்கு விளக்கம் சொல்லி ஆய்வாளர்கள் மேல் அதிகாரம் செலுத்துகின்றனர். முனைவர் பட்ட ஆய்வாளர் ஒருவர் தம் ஆய்வுக் காலத்தில் ஆய்விதழ்களில் சில கட்டுரைகளை வெளியிட்டிருக்க வேண்டும் என்னும் விதியை அமல்படுத்துவோர் யார்? அலுவலர்கள். எழுத்தர் நிலையில் இருக்கும் ஒருவர் நினைத்தால் முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பிப்பதையே நிறுத்தி வைக்க முடியும் என்னும் நிலை இருக்கிறது.
நாமக்கல் கல்லூரித் தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது. என் வழிகாட்டுதலில் பதினைந்து பேர் அங்குதான் சேர்ந்து முனைவர் பட்டம் பெற்றார்கள். கல்லூரிக் கல்வி இயக்ககம் அப்படிப்பை வழங்கியதற்கான அனுமதிக் கடித நகலை ஒருமுறை கேட்டது. துறைத்தலைவர்கள் மாறியதால் அக்கடித நகலைத் துறையில் கண்டுபிடிக்க முடியவில்லை. அலுவலகத்தில் கட்டாயம் இருந்திருக்கும். கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அனுமதி இல்லாமல் ஒருபடிப்பைத் தொடங்கி நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். சரி, கடிதம் கிடைக்கவில்லை என்றால் பின்னேற்புப் பெற்றுப் படிப்பைத் தொடர வழியிருக்கிறது. அப்படிப் பெறும் வரை அப்படிப்பை அனுமதிக்க மாட்டேன், கட்டணத் தொகை பெற மாட்டேன் என்று ஓர் எழுத்தர் வன்மையாக மறுத்தார். அவருக்கு உத்தரவு போடும் அதிகாரம் கொண்ட முதல்வர் தமக்கு ஏதாவது வந்துவிடுமோ என்று பயந்தார். படிப்பு நின்று போயிற்று. ஐம்பது பேருக்கு மேல் முனைவர் பட்டம் பெற்ற துறையில் இன்று அப்படிப்பு இல்லை. அதிகாரமே இல்லாத ஓர் எழுத்தர் அதிகாரம் இருப்பது போலப் பாவனை செய்து அதிகாரம் கொண்டோரை அச்சுறுத்தி ஒருபடிப்பையே நிறுத்திவிட்டார். இந்நிலைதான் பல்கலைக்கழக அலுவலகத்திலும் நடக்கிறது.
துறை வல்லுநர் கொண்ட குழு தீர்மானிக்கும் நிலையில் இருக்க வேண்டும். முனைவர் பட்ட மாணவர்களின் குறைகளை அக்குழு கேட்க வேண்டும். உரிய முறையில் விசாரிக்க நிவாரணம் வழங்க வேண்டும். வாய்மொழித் தேர்வுக்கு வரும் புறத்தேர்வாளர்களைக் கூட அக்குழு முடிவு செய்யலாம். ஒருவரின் புலமைத்திறனைச் சோதிக்க வாய்மொழித் தேர்வு முறையை இன்னும் கடினமாக்கலாம். மேலும் முனைவர் பட்ட மாணவர் அமைப்பு அவசியம் தேவை. பகுதி நேர ஆய்வாளர்களின் திறனைப் பரிசீலிக்க இன்னும் வலுவான அமைப்பு முறை வேண்டும். நம் சமூகத்தில் பல சாதிகள் இப்போதுதான் முதல் தலைமுறையாகப் படித்து வந்திருக்கிறார்கள். தம் பெயருக்குப் பின்னால் பட்டங்களைப் போட்டுக் கொள்வதில் தீராத ஆர்வம் இருக்கிறது. பிரமுகர்களுக்கு ’டாக்டர்’ பட்டத்தின் மீது அப்படியோர் மோகம். அதற்காக எதைச் செய்யவும் தயாராக இருக்கிறார்கள். பணம், அதிகாரம் என அனைத்தையும் பயன்படுத்த முனைகிறார்கள். ஆய்வில் முனையும் வலிமையும் நேரமும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. பிறரைச் சுரண்டுகிறோம் என்னும் உணர்வில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும்.
எல்லாவற்றையும் கடந்து ஆசிரியர்களுக்குக் கல்வி பற்றிய உணர்வு இருக்க வேண்டும் அல்லவா? அதிகாரத்தோடு நெருக்கமாக இருக்க இத்தகைய மோசடிகளுக்கு ஒத்துழைக்கிறார்கள். மோசடிகளைச் செய்து பணம் சம்பாதிக்க இது ஒருவழி எனக் கருதக் கூடாது. ஏனோ ஆசிரியர்கள் பணப்பித்துக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கல்வி சார்ந்த எல்லாப் பணிகளையும் பணவரவுக்கான வழிகளாகவே காண்கிறார்கள். அந்த மனோபாவம் மாற வேண்டும்.
வி: பள்ளி ஆசிரியர்களும் இத்தகைய பகுதி நேர ஆய்வு செய்து பட்டம் பெற விரும்புகிறார்கள் அல்லவா?
பெமு: பள்ளி ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் வேலை கிடைத்த பிறகு திருப்தி அடைந்து மேலும் படிப்பதைத் தொடர்வதில்லை. பணி உயர்வு வாய்ப்பு மேலும் படித்தால் தான் கிடைக்கும் என்னும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் படிப்பார்கள். தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருப்பவர் பட்டதாரி ஆசிரியர் ஆக வேண்டும் என்றால் படிப்பார்கள். பட்டதாரி ஆசிரியர் முதுநிலை ஆசிரியராகப் படிப்பார்கள். மேல் படிப்புக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என்றால் படிப்பார்கள். முதுநிலை ஆசிரியர் எம்.ஃபில். பட்டம் பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு உண்டு என்றொரு விதி இருந்தது. அதற்காகப் பகுதி நேரத்தில் எம்.ஃபில். படிக்கப் பல ஆசிரியர்கள் முனைந்தனர். இதைச் சந்தை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வியில் எம்.ஃபில். படிப்பைக் கொண்டு வந்தன. 2005 முதல் 2010 வரை இந்தத் தொலைதூர எம்.ஃபில். படிப்பில் கும்பல் கும்பலாகச் சேர்ந்த ஆசிரியர்கள் படுத்திய பாடும் பட்ட பாடும் சொல்லும் தரமல்ல.
கல்லூரி ஆசிரியர்கள் பலர் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் அனைத்திலும் ’நெறியாளர் அனுமதி’ பெற்றனர். ஒரு பல்கலைக்கழகத்தில் ஒருவர் பத்துப் பேருக்கு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஐந்து பல்கலைக்கழகத்தில் நெறியாளர் அனுமதி பெற்ற ஒருவர் ஒரே நேரத்தில் ஐம்பது பேருக்கு வழிகாட்டியாக இருப்பார். ஐம்பது பேருக்கு என்னென்ன தலைப்புகள் கொடுப்பார்? எழுதியவற்றை எப்படித் திருத்தித் தருவார்? அனைவரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியுமா? அப்போது எத்தனையோ மோசடிகள் நடைபெற்றன. ஆய்வேட்டுப் பொறுப்பு முழுவதும் நெறியாளருக்கே என்றால் இவ்வளவு பணம், யாரிடமாவது எழுதி வாங்கி வந்தால் கையொப்பம் மட்டும் போடுவதற்கு இவ்வளவு பணம், ஆய்வாளர் யாரென்றே தெரியாமல், முகமே பார்க்காமல் கையொப்பம் போட இவ்வளவு பணம் என்றெல்லாம் ஜோராக வியாபாரம் நடந்தது.
எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் தம் தன்விவரக் குறிப்பைப் புத்தக வடிவில் தயாரித்து வைத்திருந்தார். அதில் ஒருபகுதி அவர் மேற்பார்வையில் எம்.ஃபில். பட்டம் பெற்றோர் பட்டியல். பெயர், தலைப்பு, பட்டம் வாங்கிய ஆண்டு என முழுவிவரம் கொண்ட பட்டியல் அது. இருநூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அவர் நெறியாளராக இருந்துள்ளார். எல்லாம் இந்தத் தொலைதூரக் கல்வி எம்.ஃபில். படிப்பின் மகிமை. இன்னொரு ஆசிரியர் தாமே ஆய்வேடு தயாரித்துக் கொடுப்பதாகப் பணம் பெற்றுக்கொள்வார். ஒரே தலைப்பை வெவ்வேறு பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்குக் கொடுத்துவிடுவார். ஒரே ஆய்வேட்டைப் பெயர் மாற்றம் செய்து மூவருக்கு, நால்வருக்குக் கொடுத்துவிடுவார். ஒரே ஆய்வேட்டின் மூலம் நால்வரிடமிருந்து பண வரவு. என் மாணவர் ஒருவர் தாமே சுயமாக எழுதத் தெரிந்தவர். அவர் ஆய்வேட்டைக் கொண்டு அவருக்குத் தெரியாமலே மூவர் பட்டம் பெற்றுவிட்டனர். இப்படி எத்தனையோ மோசடிகள். இவையெல்லாம் உயர்கல்வியில் நேர்ந்த சீரழிவுகள். எங்கும் பதிவு செய்யாத வரலாறு. இந்த மோசடி எல்லையற்றுப் போனதால் தொலைதூரக் கல்வியிலிருந்து எம்.ஃபில். படிப்பை நீக்கிவிட்டார்கள். இன்று பல்கலைக்கழகங்களில் முழுநேரமாகக் கூட அப்படிப்பு இல்லாமல் போய்விட்டது.
வி: அப்போது உங்களைப் போன்றவர்களுக்கும் நிர்ப்பந்தம் வந்திருக்குமே?
பெமு: வராமல் எப்படியிருக்கும்? பெரும் தொந்தரவு. நான் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே நெறியாளர் அனுமதி பெற்றிருந்ததைத் தவிர வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் அனுமதி பெறவில்லை. வெவ்வேறு பரிந்துரைகள் மூலம் என்னைத் தேடி வரும் ஆசிரியர்களிடம் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தேன். அதிலேயே ’இவர் இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்’ என்று பெரும்பாலோர் ஓடிவிட்டனர். அந்நிபந்தனை ’நீங்களே சுயமாக எழுத வேண்டும்’ என்பதுதான். பல ஆசிரியர்களுக்கு விடுமுறை விண்ணப்பம் தவிர வேறு எதுவும் எழுத வராது. நம் கல்விமுறையில் ஆசிரியர் எதுவுமே எழுத வேண்டியதில்லை. மாணவர் எழுதுவதைத் திருத்திக் கொடுப்பதுதான் வேலை.
எதுவுமே எழுதாதவர், எழுதத் தெரியாதவர் பிறர் எழுதுவதைத் திருத்திக் கொடுக்கும் இடத்தில் இருக்கிறார். நான் கொஞ்சம்கூட மிகைப்படுத்திச் சொல்லவில்லை. பெரும்பாலான ஆசிரியர்களுக்குச் சுயமாகவும் எழுதத் தெரியாது; பிழையில்லாமலும் எழுத வராது. மொழிப்பாடம் தவிர்த்த ஆசிரியர்களால் தமிழிலும் எழுத முடியாது; ஆங்கிலத்திலும் எழுத இயலாது. அவர்களைச் சொல்லிக் குறையில்லை. ஆசிரியர்களுக்கு எழுத்துப் பயிற்சியே தேவையில்லை என்னும் நிலையில்தான் நம் கல்வி நடைமுறைகள் உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் முழுக்க முழுக்கக் கொள்குறி வகை வினாக்கள்தான். சுயமாக ஒருவரி எழுத வேண்டியதில்லை.
’சுயமாக எழுத வேண்டும்’ என்னும் நிபந்தனையை வைத்துப் பலரை விரட்டினேன். அதைச் சொன்னாலே ’இவர் பணம் வாங்க மாட்டார்’ என்பதையும் புரிந்து கொள்வார்கள் அதை மீறி என்னிடம் சேர்ந்தவர்கள் அரிது. ஐந்து பேருக்குள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு நல்லவிதமாக வழிகாட்டினேன். எப்படியாவது சுயமாக எழுத வைத்துவிடுவேன். சேர்ந்த பிறகு என்னிடம் சொல்லாமலே வேறு நெறியாளரிடம் மாற்றிக் கொண்டோர் உண்டு. ஒரு ஆசிரியை என்னிடம் சேர்ந்துவிட்டார். என்னைப் பார்க்க அவர் வர மாட்டார். அவருடைய கணவர்தான் வருவார். அவருக்கும் தமிழுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ’தமிழ்தானே’ என்னும் அசட்டை. அறிவு சார்ந்து பெண்ணை முன்னிறுத்தும் மனமின்மை. ஒரு சந்தர்ப்பத்தில் ’உங்களுக்கும் இந்தத் துறைக்கும் என்ன சம்பந்தம்? நீங்கள் வரக் கூடாது’ என்று விரட்டிவிட்டேன். இவற்றை எல்லாம் கடந்தும் சிறுசிறு சமரசங்களுக்கு ஆட்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் நேர்ந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அவற்றைத் தவிர்க்க முடியாது.
வி: ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் மாணவர்களின் உதவித்தொகை முறையே 8000 மற்றும் 10000 ரூபாய். ஒருவர் முனைவர் பட்ட ஆய்வில் நுழைவதற்கான குறைந்தபட்ச வயது 23 என வைத்துக் கொண்டால் அது பொருள் சேர்க்கும் வயது. முப்பதை நெருங்கும் ஒருவர் கையில் சேமிப்பு இருக்காது. சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் சேர்ந்து இருக்க மாட்டார்; திருமணம், வயது முதிர்ந்த பெற்றோர் என கடமைகளும் உண்டு. உதவித்தொகையை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை பல்கலைக்கழக நிர்வாகங்களில் பேசப்படுகின்றனவா?

பெமு: பல்கலைக்கழக நிர்வாகக் கூட்டங்களில் இதற்குக் குரல் எழுப்பும் தரப்பாக யார் இருக்கிறார்கள்? செனட், சிண்டிகேட் என்றெல்லாம் குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் இடம்பெறுவோர் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல. மாணவர் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் இப்பேச்சு எழும். ஆனால் எங்குமே மாணவர் பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை. மாணவர்களை அனுபவம் இல்லாதவர்கள் என்றும் வயதில் சிறியவர்கள் என்றும் கருதிக் கீழாக நடத்தும் மனோபாவம் தான் நிலவுகிறது.
பொறியியல் சார்ந்த தொழிற்படிப்புக்குச் செல்லும் மாணவர்களில் பலர் இருபத்தொரு வயதில் முடித்து வேலைக்குச் செல்கின்றனர். பலருக்கு லட்சத்தில் ஊதியமும் கிடைக்கிறது. ஆகவே அவ்வகைப் படிப்புகளையே தேர்வு செய்கின்றனர். கலை அறிவியல் படிப்புகளில் சேர்ந்தால் இளநிலை, முதுநிலை, கல்வியியல், முனைவர் எனப் பல்லாண்டுகளைக் கல்வியே தின்றுவிடும். அதை இப்போதைய தலைமுறை விரும்புவதில்லை. ஆகவே கலை அறிவியல் படிப்புகளின் காலத்தை மறுசீரமைப்பது பற்றிப் பரிசீலிக்க வேண்டும். கல்வியியல் படிப்பு ஓராண்டு இருந்ததை ஈராண்டாக நீட்டித்தார்கள். அது சுயநிதிக் கல்லூரிகள் வருமானம் பெறுவதற்காகச் செய்த செயல். அதையும் ஓராண்டாக அல்லது ஆறு மாதமாகக் குறைக்கலாம்.
முனைவர் பட்டத் தகுதி தேவைப்படும் பணிகளைக் குறைக்க வேண்டும். குறிப்பாகக் கல்லூரி ஆசிரியர் பணிக்கு முனைவர் பட்டத்தை நிபந்தனை ஆக்கத் தேவையில்லை. அதற்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கக் கூடாது. முனைவர் பட்ட ஆய்வு செய்வோர் எண்ணிக்கை அளவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல உதவித்தொகை வழங்க வேண்டும். தொகை கூடிய பலவகை ஆய்வுத் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆய்வாளர்களுக்கு உதவிப் பேராசிரியர் அளவுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அப்போது பல பிரச்சினைகள் தீரும். நடைமுறைகளைக் கருத்தில் கொண்டு மறுசீரமைப்புக்கு மனப்பூர்வமாக முயல வேண்டும். அதற்கு எந்த அரசு தயாராக இருக்குமோ தெரியவில்லை.
வி: அண்மையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பிக்க 25000 கட்டணம் என்கிற செய்தியைப் பார்த்தேன். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வேட்டை வெளிநாட்டுத் தேர்வருக்கு அனுப்ப 150 டாலர்கள் வரை கட்டணம் என்பதையும் சமூக வலைத்தளத்தில் பார்த்தேன் (உண்மையா என்று தெரியவில்லை). உதவித்தொகை பெறாத மாணவர்களிடம் இவ்வளவு கட்டணம் வசூலிப்பது அவசியமா? இதுமட்டுமில்லாமல் தேர்வரின் கருத்துக்களைப் பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களிலும், ஒன்றுபோல இதையெல்லாம் முறைப்படுத்தி மாநிலம் முழுமைக்கும் கால வரையறை, கட்டண வரையறை செய்ய முடியாதா?
பெமு: செய்ய முடியாமல் என்ன? செய்யும் மனமோ திட்டமோ இல்லை. உதவித்தொகை பெற்றாலும் இவ்வளவு கட்டணம் எதற்கு? பல்கலைக்கழகங்களில் எத்தனையோ தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கலாம். வெட்டிச் செலவுகளுக்காக மாணவர்களிடம் கட்டணம் என்னும் பெயரில் பிடுங்குகிறார்கள். இப்போது பல துறைகளுக்கு உள்நாட்டுத் தேர்வாளர்களே போதும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கட்டணம் குறைவதில்லை. எதற்கு வெளிநாட்டுத் தேர்வாளர்? வெளிமாநிலத் தேர்வாளர்? தமிழில் ஆய்வு செய்பவர்களுக்குப் புறத் தேர்வாளரிடம் இருந்து அறிக்கை பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். 1995ஆம் ஆண்டு அக்டோபரில் ஆய்வேடு சமர்ப்பித்த எனக்கு மூன்றாண்டு கழித்து 1998இல் தான் வாய்மொழித் தேர்வு நடந்தது. ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருவர் அறிக்கை அனுப்பிவிட்டார். கல்கத்தாவிலிருந்து இன்னொருவர் அறிக்கை அனுப்பவில்லை. அதற்காக எத்தனையோ கடிதங்கள் எழுதி ஒருவழியாக வந்து சேர்ந்தது.
வெளிமாநிலம், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பலர் தமிழ் கற்றுக் கொடுக்கும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் வேலையைத் தான் செய்கிறார்கள். ஆனால் முனைவர் பட்ட ஆய்வேட்டை மதிப்பீடு செய்யும் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள். பிற மாநிலங்களில் ஓரிருவரே பணியாற்றுவதால் அவர்களிடம் ஆய்வேடுகள் குவிகின்றன. அவர்களால் அறிக்கை அனுப்ப முடிவதில்லை. சிலர் அதை வைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள். ஒருவரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி விட்டு அந்த விவரத்தை அனுப்பி வைத்தால் ஒரே வாரத்தில் அறிக்கை வந்துவிடும். பணம் அனுப்பினாலும் சிலரால் அறிக்கை அனுப்ப முடியாது. அவர் பணியாற்றும் பல்கலைக்கழகத்தில் விடுமுறை வரும்போது தமிழ்நாட்டுக்கு வருவார். அறிக்கையை எழுதி எடுத்துக்கொண்டு நேரில் சென்றால் கையொப்பம் இட்டுக் கொடுத்துவிடுவார்.
இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சரியமாக இருக்கும். வெளிமாநிலத்தில் பணியாற்றிய ஓர் அம்மணி எனக்கு ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். ’என்ன சார், உங்க பல்கலைக்கழகத்துல இப்பிடி நடக்குது?’ என்று கேட்டார். என்னவென எனக்குத் தெரியவில்லை. அவரது முத்திரையைச் செய்து வைத்துக்கொண்டு இங்கிருந்தே அறிக்கை தயாரித்து அவர் கையொப்பத்தையும் போட்டுப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கும் வேலையைச் சிலர் செய்துள்ளனர். எப்படியோ அவர் பார்வைக்குச் சென்றுவிட்டது. படித்தவர்கள் செய்யும் சூதும் வாதும் அளவற்றவை.
சில பல்கலைக்கழகங்களில் கால வரையறை இருக்கிறது என்று நினைக்கிறேன். மூன்று மாதத்திற்குள் அறிக்கை வரவில்லை எனில் வேறொரு தேர்வாளருக்கு அனுப்ப நெறியாளர் பரிந்துரை செய்யலாம். வெளிநாடு, வெளிமாநிலத்தில் ஆள் பிடிப்பதே கடினமாக இருக்கும்போது மாற்றுவதற்கு யார் முயல்வார்கள்? உள்நாட்டிலேயே மதிப்பீடு செய்ய ஒருகுழுவை அமைக்கலாம். அதன் பரிந்துரையே போதுமானது. நெறியாளரிடம் இருந்து ஓர் அறிக்கை கேட்பார்கள். அது எதற்கு என்று எனக்குப் புரியவில்லை. நெறியாளர் என்ன எழுதுவார்? ஆய்வேட்டைப் பாராட்டித் தானே எழுத முடியும்? இது மாதிரியான அபத்தங்களும் நடக்கின்றன. கட்டணம், கால வரையறை பற்றியெல்லாம் விவாதித்து விதிகளை, நடைமுறைகளை எளிதாக்கலாம். அதற்கு மனம் வேண்டும்.
வி: தமிழ்நாட்டில் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடத்திய என் நண்பனுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவானது. வாய்மொழித்தேர்வு நடத்தும் பேராசிரியர் கல்லூரிக்கு வர, பயணக் கட்டணம் (சில நேரங்களில் அவர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து அதை சுற்றுலாப் பயணமாக்கிக் கொள்வதும் உண்டு), மதிப்புத் தொகை, அவருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உணவு என மேலும் சில செலவுகள். இதை ஒப்பிடும்போது ஒன்றிய அரசுக் கல்வி நிறுவனங்களில் வாய்மொழித் தேர்வுகள் இணைய வழியில் நடக்கின்றன; இத்தனை செலவுகளும் இல்லை. 30 வயதை நெருங்கும் ஒருவரிடம் இத்தகைய சுரண்டல்கள் அநியாயம் இல்லையா?
பெமு: வாய்மொழித் தேர்வு என்பது ஒருவகைத் தேர்வுதானே. அந்த உணர்வே யாரிடமும் இல்லை. அதைக் கொண்டாட்டமாக மாற்றுகிறார்கள். அதற்கு ஆய்வாளர் செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது. ஆய்வாளருக்குத் தம் ஆய்வின் மேல் நம்பிக்கை இருப்பதில்லை. வாய்மொழித் தேர்வை எதிர்கொள்ளும் துணிவு இருப்பதில்லை. கேள்விகள் வரக் கூடாது என்று நினைக்கிறார். ஆய்வுச் சுருக்கத்தைச் சொல்லி முடித்ததும் நொறுக்குகள் எல்லோர் கைக்கும் வரும். வாய்மொழித் தேர்வில் பார்வையாளர்களின் வாயை அடைக்கத் தான் இந்தத் தீனிப் பரிமாறல் என்று சொல்வோம்.
கேள்விகளுக்குப் பயந்து விடுமுறையில் வாய்மொழித் தேர்வை நடத்தியோர் உண்டு. வேலைநாளில் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று வைத்துக்கொண்டு இத்தனை பேர் பங்கேற்றார்கள் எனச் சமர்ப்பித்த நிகழ்வையும் அறிவேன். அப்படிப் பட்டம் பெற்றவர் இன்று பெருநிறுவனம் ஒன்றின் தலைவராக இருக்கிறார். முன்கூட்டியே வந்து ’ஐயா, கேள்வி எதுவும் கேட்க வேண்டாம்’ என்று நெறியாளரே வேண்டுகோள் வைப்பார். அசைவத்தோடு அன்னதானம் வழங்கி எல்லோரையும் மகிழ்வித்து விட்டால் கேள்வி எங்கிருந்து வரும்? பணம் இருப்போர், பதவியில் இருப்போர் விருந்து போடுகிறார்கள். அது சடங்கு போலாகி அனைவரும் செய்ய வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் வந்துவிடுகிறது.
தன்னிறைவு பெற்றுவிட்டாலும் நம் சமூகம் உணவுக்கு அலையும் மனநிலையிலேயே இருக்கிறது. ’ஒரு டீ கூட வாங்கித் தந்ததில்ல’ என்று பேசுவோரைக் கண்டிருக்கிறோம். ஒற்றைத் தேநீர் வாங்கிக் கொடுத்தால் மனம் நிறைந்துவிடுகிறது. ’உணவிட்டவரை உள்ள வரை நினை’ என்பது நம் சமூக மொழி. பேராசிரியர்களுக்குச் சுற்றுலா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் ஏன் மறுக்கப் போகிறார்கள்? ஒருமுறை அதை அனுபவித்தவர் எல்லா இடத்திலும் அதை எதிர்பார்ப்பது இயல்புதானே?
இப்போது இங்கும் இணைய வழி வாய்மொழித் தேர்வுகள் வந்துவிட்டன என நினைக்கிறேன். கொரானோ காலத்தில் அது தொடங்கியது. தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. வாய்மொழித் தேர்வுக்கு மட்டுமல்ல. ஆய்வுக்குழுக் கூட்டம், முன்வாய்மொழித் தேர்வு ஆகியவற்றுக்கே இன்று பத்துப் பதினைந்தாயிரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
தொடரும்…

விஜயகுமார்
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
