மம்மர் அறுக்கும் மருந்து (19) : வரலாற்றின் மூலையில் ஓரிடம் : பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்1 முதல் 18 வரை

லண்டன் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் பெருமாள் முருகன் (புகைப்படம் : ஆதவன் பழனி, 2025)

விஜயகுமார்:  இந்த வருடம் நீட் தேர்வு முறைகேடுகள் வெளிவந்த பிறகு தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்கள் இறப்பிற்கு நியாயம் கேட்டும், தவறுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் மாணவர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள் பலரும் போராடுகிறார்கள். காவல்துறை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது, மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மாணவர் கிளர்ச்சியும் உணர்வும் நியாயமானது. கைது நடவடிக்கைகள் சரியா? அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பு உண்டா?

பெருமாள்முருகன்: நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ போராட்டங்கள் நடந்துவிட்டன. எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்துவிட்டோம். வினாத்தாள் கசிவு உட்பட அத்தேர்வில் நடைபெற்ற பல்வேறு மோசடிகள் வெளியே வந்துவிட்டன. தேர்வு நடைமுறைகளில் மாணவர்கள் எவ்வாறு இழிவாக நடத்தப்படுகின்றனர் என்பது தொடர்பாக எவ்வளவோ பேசிவிட்டோம். நீட் தேர்வே இன்று ’கரப்பான் பூச்சிக் கட்சியை’ தோன்றக் காரணம். ஒன்றியக் கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரி சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இவ்வளவு நடந்தும் ஒன்றிய அரசு அசைந்து கொடுக்க மாட்டேன் என்கிறது. மக்கள் மனநிலையைப் பயன்படுத்தி அதிகாரம் பெறும் அரசுகள் பிறகு தம் அதிகாரத்தை மக்கள் மீது வன்மையாக ஏவுகின்றன. அதிகாரத்தைத் தக்க வைக்கப் பாசிச முகம் கொள்கின்றன. நீட் தேர்வுப் பிரச்சினையிலும் அதையே காண்கிறேன். அனேகமாக நீட் தேர்வு பிரச்சினை அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரும் நிலைக்கும் செல்லக் கூடும் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்புகள், அரசின் முயற்சிகள் தொய்வடைந்து போய் இப்போது இந்திய அளவில் எழுச்ச்சி பெற்றிருக்கிறது. மக்கள் நலனை விடவும் நுழைவுத் தேர்வில் முதலீடு செய்யும் நிறுவன நலன்களே முக்கியம் என்று கருதும் அரசுகள் நம் நாட்டின் சாபக்கேடு. எப்போது சாப விமோசனம் பெறுவோம் என்று தெரியவில்லை.

போராட்டத்தை எந்த அரசும் ஆதரிப்பதில்லை. கோரிக்கை எத்தனை நியாயமானது எனினும் போராட்டத்தை ஒடுக்குவதற்கே அரசுகள் முயல்கின்றன. ஒருகோரிக்கை வலுவடைந்து பல தரப்பிலிருந்தும் அதன் நியாயம் பேசப்பட்டு அதிகாரத்திற்குச் சவாலாக மாறும்போதுதான் அது நிறைவேறுகிறது. அதற்கு முன் கைது, அடக்குமுறை, வழக்கு என்று அலைக்கழிக்கும் நடைமுறைகளை அரசுகள் கையாள்கின்றன. இந்த அலைக்கழிப்பும் போராட்டத்தை ஒடுக்கும் வழிமுறைகளில் ஒன்று. ஒருமுறை காவல் நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ சென்றவர் இன்னொரு முறை செல்ல விரும்பவே மாட்டார். இன்னொரு முறை போராட்டத்திற்குச் செல்லக் கூடாது என்பதை உளவியல் ரீதியாக உருவாக்குபவையாகவே இத்தகைய அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

ஆகவே மாணவர்களைக் கைது செய்யலாமா, மாணவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்று கேட்க முடியாது. மாணவர்கள் என்பதால் அரசு சற்றே நிதானிக்கும். அதாவது மாணவர்கள் வயதின் காரணமாக உணர்ச்சிவசப் படுபவர்கள். போராட்டம் சட்டென்று தீவிரமாகப் பரவிவிடக் கூடும். அரசு எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமே தவிர பரிவோ கருணையோ காட்டாது. மாணவர்களுக்கெனத் தனியாக எந்தச் சட்டப் பாதுகாப்பும் கிடையாது. சலுகையும் இல்லை. போராடும் மற்றவர்களுக்கு எத்தகைய சட்ட வாய்ப்புகள் உண்டோ மாணவர்களுக்கும் அவைதான். தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் நிலையை அறிவோம் தானே. மாணவர் என்பதற்காக அரசு ஏதாவது கருணை காட்டியதா? தேச விரோதச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் இருக்கிறாரே?

வி: இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் போலவே, அவசர நிலைக்கு எதிரான போராட்டம், பிற்படுத்தப்பட்டோர்  இட ஒதுக்கீடுக்கான போராட்டம் போன்றவற்றிலும் மாணவர் அரசியலின் பங்களிப்புகள் குறித்த ஒரு சித்திரத்தை அளிக்க முடியுமா? அதைக் குறித்து அப்போது பரவாலான ஆவணப்படுத்தப்பட்ட நூல்களையும் சுட்ட முடியுமா?

பெமு: எதையும் ஆவணப்படுத்தும் இயல்பு தமிழர்களிடம் இல்லை. உலக இலக்கியங்களிலேயே உச்சம் என்று சொல்லத்தக்க திருக்குறள் நம்மிடம் இருக்கிறது. அதைப் பற்றிய  ஆதாரப்பூர்வமான பின்னணித் தகவல்கள் ஒன்றேனும் நம்மிடம் உண்டா? திருவள்ளுவர் யார், அவர் இயற்பெயர் என்ன, எங்கே வாழ்ந்தார், எந்தச் சமயத்தைக் கடைப்பிடித்தார், எப்போது எழுதினார், எங்கே அரங்கேற்றினார் என வரிசை கட்டும் கேள்விகளில் ஒன்றுக்காவது நம்மால் பதில் சொல்ல முடியுமா? வள்ளுவர் அழைத்ததும் கிணற்றில் சேந்திக் கொண்டிருந்த தண்ணீர்க் குடத்தை அப்படியே விட்டுவிட்டு அவர் மனைவி வாசுகி ஓடி வந்தார். திரும்பிச் சென்ற போது குடம் அப்படியே விட்ட இடத்திலேயே நின்றது. அத்தகைய கற்புக்கரசி அவர் என்பது போன்ற அறிவை மழுங்கச் செய்யும் கதைகளைத் தவிர நம்மிடம் என்ன இருக்கிறது? எல்லா நிலைகளிலும் இப்படித்தான் இருக்கிறது.

1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் மாணவர்கள் முன்னின்று நடத்தியது. திமுக ஆட்சியைப் பிடிக்க அது முக்கியமான காரணம். அதில் ஈடுபட்டவர்களுக்குத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் அப்போராட்டம் பற்றிய முழுமையான தகவல்களைக் கொண்ட வரலாறு ஏதுமில்லை. திராவிட இயக்க ஆய்வாளர்கள் சிலர் எழுதியுள்ளனர்.  ’இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு’ எனப் பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய நூல் ஒன்று இருக்கிறது.  ’இந்தி எதிர்ப்பு வரலாறு’ என்னும் தலைப்பில் புலவர் ஒருவர் எழுதிய வரலாறு இருக்கிறது. கோ.கேசவன் ஒருநூல் எழுதினார் என நினைவு. எல்லாம் சிறுசிறு முயற்சிகள். முழுமையானவை அல்ல. விடுதலைக்கு முன் நடந்த போராட்ட வரலாறுகளும் போதுமான அளவு பதிவு பெறவில்லை. 1938இல் நடந்த போராட்டத்தில் உயிர் விட்டவர்களின் பெயர்களைத் ’தாளமுத்து – நடராஜன்’ என்னும் வரிசையில் வைப்பது தவறு; ’நடராஜன் – தாளமுத்து’ என்றுதான் அமைய வேண்டும் எனத் தலித்திய ஆய்வாளர்களிடம் இருந்து குரல் எழுந்த போதுதான் அதற்கும் கவனம் கிடைத்தது. 

வரலாற்றுத் துறையில் இத்தகைய சமகால வரலாற்றை எல்லாம் தவிர்த்துவிட்டு என்ன ஆய்வு செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்தன. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றிப் பெரும் ஆவணத் தொகுப்பை உருவாக்கியிருக்கலாம். அவற்றை ஆதாரமாகக் கொண்டு பல நூல்களை எழுதியிருக்கலாம். அத்தகைய முயற்சிகளில் அரசுகள் ஈடுபடவில்லை. வெற்றுப்பெருமை பேசுவோமே தவிர ஆதாரப்பூர்வ வரலாற்றில் ஆர்வம் காட்ட மாட்டோம். இது தமிழர்களின் பொதுமனநிலை என்பது என் எண்ணம். மாணவர்கள் ஈடுபட்ட ஒவ்வொரு போராட்டம் பற்றியும் இதுதான் நிலை. 1980களில் நான் கல்லூரி மாணவனாக இருந்தேன். அப்போது ஈழவிடுதலையை ஆதரித்த மாணவர் போராட்டம் சில ஆண்டுகள் எழுச்சி கொண்டிருந்தது. சிங்கள அரசின் படுகொலைகளுக்கு எதிராக மாணவர்கள் வேலைநிறுத்தம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் போராடினர். அவை பற்றிய பதிவுகளும் இல்லை. ஆதாரமான பதிவுகள் இல்லாமல், வரலாற்று நூல்கள் இல்லாமல் இப்போராட்டங்களைப் பற்றி என்ன சித்திரத்தைக் கொடுப்பது?

1965இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத் துப்பாக்கிச் சூட்டில் தன் கால் ஒன்றை இழந்த இளைஞர் ஒருவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அதனால் அவர் சொந்த வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயிற்று. திருமணம் செய்துகொள்ள முடியவில்லை. வேலை அமையவில்லை. அரசியலிலும் உள்ளே நுழைந்து மேலேறும் திறன் வாய்க்கவில்லை. தியாகி ஓய்வூதியம் வாங்கிக்கொண்டு இன்றுவரை தொண்டராகவே இருக்கிறார். என்னுடன் பள்ளியில் பயின்ற நண்பனின் அண்ணன் திருச்செங்கோட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் குண்டடி பட்டு உயிர்விட்டார். அவன் தந்தைக்குக் கட்சியில் ஒன்றியச் செயலாளர் பதவியோ என்னவோ கிடைத்தது. அத்தோடு சரி. இன்னும் பலர் என் ஊரிலேயே உயிரை விட்டோர் உண்டு. உறுப்புகள் பாதிக்கப்பட்டு வாழ்வை இழந்தோர் உண்டு. அப்போது மாணவர் தலைவர்களாக இருந்தவர்களுக்கு நல்வாழ்வு கிடைத்தது. பிறருக்கு மாத ஓய்வூதியம் தவிர ஏதுமில்லை. திருச்செங்கோட்டுப் போராட்டம் பற்றிய சித்திரம் ஒன்றை என் ’ஏறுவெயில்’ நாவலில் கொடுத்திருக்கிறேன். அப்போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பிந்தைய நிலை பற்றியும் எழுதியிருக்கிறேன். இவர்கள் எல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் எங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்? உயிரை விட்டவருக்கு, காலை இழந்தவருக்கு வரலாற்றின் மூலையில் பெயரளவிலேனும் ஓரிடம் வேண்டாமா?

வி: அரசுக்கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியல் என்கிற பட்டப்படிப்பும் ஆராய்ச்சித்துறையுமே உண்டு. அது தொடர்பாகவேனும் ஏதும் அரசியல் நிகழ்வுகள்/கருத்தரங்குகள்  முன்னெடுக்கப்படுகின்றனவா?

பெமு: மிகக் குறைவான கல்லூரிகளிலேயே அரசியல் அறிவியல் படிப்பு இருக்கிறது. அனேகமாக ஒற்றைப்படை எண்ணிக்கை என்றே நினைக்கிறேன். அரசியல் சார்ந்த நிகழ்வுகளோ கருத்தரங்குகளோ அத்துறைகளில் நடப்பது போலத் தெரியவில்லை. நடந்தாலும் அவை சுதந்திரத் தன்மையுடன் நடைபெற வாய்ப்பில்லை. சமகால அரசியலைப் பற்றி அத்துறையில் விவாதிக்கும் வாய்ப்பு ஏதுமில்லை. அரசு, அரசியல்வாதிகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்னும் நிர்ப்பந்தம் இருக்கும் போது எப்படிச் சுதந்திரமாகச் செயல்பட முடியும்? பொருளியல் படிக்கும் மாணவரிடம் அல்லது அத்துறை சார்ந்த ஆசிரியரிடம் மாநில அரசு அல்லது ஒன்றிய அரசு வெளியிடும் நிதிநிலை அறிக்கை பற்றிக் கருத்துக் கேட்டுப் பாருங்கள். சொல்வதற்கு ஏதாவது இருப்போர் அரிது. ஒன்றிரண்டு கட்டுரைகள்கூட அத்துறை சார்ந்தவர்களிடம் இருந்து வராது. அதே போலத்தான் அரசியல் அறிவியல் துறையும். சமகால அரசியலோடு நெருங்கிய தொடர்பும் ஆய்வும் கருத்து வெளிப்பாடும் இருக்க வேண்டிய முக்கியமான துறை அது. ஆனால் பாடத்திட்டத்திற்குள் முடங்கியிருக்கிறது. அதற்கு நம் சூழலும் ஒருகாரணம்.

வி: கேரளாவில் பள்ளி மாணவர்களே பங்கெடுக்கும் “மாணவர் நாடாளுமன்றம்” என்கிற நிகழ்வு வருடாவருடம் நடக்கிறது. வெளிமாநிலங்களிலும் இந்நிகழ்வுகள் நடப்பது இணையத்திலுள்ள ஒளிப்பதிவுகள் வழி அறியமுடிகிறது. தமிழ்நாட்டில் இதுபோல் ஒன்றில்லை போலிருக்கிறதே?

நன்றி : தி இந்து (ஜூலை 10, 2026)

பெமு: நானறியத் தமிழ்நாட்டு அரசு கல்வி நிறுவனங்களில் நடப்பதில்லை. ஏதேனும் தனியார் கல்வி நிறுவனங்களில் இத்தகைய ஏற்பாடுகள் இருக்கலாம். மாணவர்கள் போராட்டத்தை அரசியல் அதிகாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்ட திராவிட இயக்க ஆட்சிகள் பிறகு அவர்களால் தமது அதிகாரத்திற்கு ஆபத்து வரக் கூடும் என அஞ்சி ’படிக்கும் காலத்தில் படிப்பை மட்டும் பார்த்தால் போதும். அரசியல் கூடாது’ என்னும் கருத்து பரப்பப்பட்டு இன்று நிலைபெற்றுவிட்டது. கற்கும் காலத்திலேயே அரசியலையும் கற்றுப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கருதுவதில்லை. அரசியலைக் கல்வியாகவே நினைப்பதில்லை. அரசியலைச் சாக்கடை என்கிறோம். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்கிறோம். இப்படியெல்லாம் சொன்ன பிறகு அதைக் கல்வியாகக் கற்பதோ கற்கும் காலத்தில் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபவதையோ பொதுமனம் அனுமதிக்காது அல்லவா?

நான் முதல்வராகப் பணியாற்றிய காலத்தில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுடன் இணக்கமாக இருந்தேன். நியாயமான கோரிக்கைகளைக் கவனத்துக்குக் கொண்டு வருவார்கள் என்னும் நம்பிக்கை. அப்படி வந்ததைக் காது கொடுத்துக் கேட்டு நிவர்த்தி செய்திருக்கிறேன். பொதுப்பிரச்சினை ஒன்றிற்காக அவர்கள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் அறிவித்தார்கள். எங்கள் கல்லூரி நுழைவாயிலை மூடிவிட்டு அனைவரையும் வெளியே நிற்க வைத்தார்கள். தற்காலிகக் கேட்கீப்பராக ஒருமாணவர் நின்றுகொண்டார். அப்போதுதான் கல்லூரிக்குள் இருசக்கர வாகனத்தில் நுழைந்தேன். என்னையும் ஆசிரியர்களையும் மட்டும் உள்ளே விட்டார்கள். கேட் அருகிலேயே வண்டியை நிறுத்திவிட்டுச் சொன்னேன்,

’கேட் மூடும் வேலை உங்களுக்கில்லை. நீங்கள் பேசி உங்களுக்கு ஆதரவான மாணவர்களை நிறுத்திக் கொள்ளுங்கள். கேட் திறந்துதான் இருக்கும்.’

பெரும்பான்மையான மாணவர்கள் உள்ளே சென்றனர். இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாட்டைப் பொருத்தவரை மிகச் சிறிய அமைப்புத்தான். அதில் இயங்கும் மாணவர் எண்ணிக்கை குறைவு. அவர்களால் ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தை வலுவாக நடத்த இயலாது. அத்தகைய வலுப் பெற்ற மாணவர் அமைப்பு ஏதும் தமிழ்நாட்டில் இல்லை. அப்படி உருவாகி வராமைக்குக் காரணம் கல்வியிலும் கல்வி நிறுவனத்திலும் அரசியல் பேசக் கூடாது, அரசியல் அமைப்புகள் செயல்படக் கூடாது என்னும் தடை பொதுவில் நிலவுவதுதான். பிறகு மாதிரி நாடாளுமன்றத்தை எல்லாம் எங்கே யோசிப்பது?

வி: மாணவர் இயக்கங்கள் மாணவர்களின் ஆளுமைத் திறன் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிக்கின்றன என்று தோன்றுகின்றது. திரைப்பட விழா, ஆவணப்பட விழா, நாடக விழா, இதழ்கள் போன்றவை அனைத்து மாணவர்களின் பங்களிப்பையும் ஏதேனும் ஒரு வகையில் கோருகின்றன. மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வை ஊட்டும் விழாக்களின்றி தற்போது ஆண்டுமலர்கூட வழக்கொழிந்து போனதுபோல் தோன்றுகிறதே?

பெமு: மாணவர் திறன்களைக் கண்டறிந்து மலர்ச்சி பெற வைப்பதுதான் கல்வி. அத்தகைய பார்வை நம் அரசிடம் இல்லை; ஆசிரியர்களிடம் இல்லை; கல்வித் தந்தைகளுக்கு இல்லை. படி படி என்று படித்துப் பட்டச் சான்றிதழ் பெற வைத்துவிட்டால் கல்விக் கடமை முடிந்தது என்னும் நினைப்புத்தான் பொதுச்சமூகத்தில் நீக்கமற நிலவுகிறது. நாமக்கல் தொழில்கள் சிறக்கும் மாவட்டம். அவற்றில் கல்வியும் ஒன்று. என்னென்ன வகையான பள்ளி கல்லூரிகள் இருக்கின்றன என்று தெரியுமா? ’படிப்பு வராத பிள்ளைகளைச் சேர்த்து நல்ல மதிப்பெண் பெற வைக்கிறோம்’ என்று விளம்பரம் செய்து மாணவர் எண்ணிக்கையைக் கூட்டி நடக்கும் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவரைப் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வைப்பதாக உறுதி தருவார்கள். பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்துவிட்டால் சேர்ப்பதற்கு என்றே சில பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவையெல்லாம் மதிலுயர்ந்த சிறைகள். அங்கே படித்து வந்த மாணவர்களைக் கேட்டுப் பாருங்கள். கதை கதையாகச் சொல்வார்கள். அடியும் உதையும் சகஜம். வெளியில் போகவே முடியாது. எப்படியாவது தேர்ச்சி பெற வைத்துப் பட்டச் சான்றிதழை வாங்கிக் கையில் கொடுத்துப் பெற்றோரைத் திருப்திபடுத்தி விடுவார்கள்.

கல்வி கற்பதில் மாணவர்களுக்கு இடையே தனிப்பட்ட பண்பு சார்ந்து வேறுபாடுகள் இருக்கும். அதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அதற்கேற்ப அம்மாணவருக்கு வழிகாட்ட வேண்டும். பெற்றோருக்குக் கல்வி பற்றிய புரிதல் சுத்தமாக இல்லை. பிறரை ஒப்பிட்டுத் தாழ்வுணர்ச்சி கொள்வதே அவர்களின் குணமாக இருக்கிறது. கணிதத்தில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவருக்குப் பிற பாடங்களில் ஆர்வமே இருக்காது. தமிழ் இலக்கியத்திலேயே அப்படிப்பட்ட மாணவர்களைக் கண்டிருக்கிறேன். ஒரு மாணவருக்கு ’இதழியல்’ பாடத்தில் அத்தனை ஆர்வம் இருந்தது. ஒருமாணவருக்கு யாப்பிலக்கணத்தில் விவரிக்க முடியாத அளவு ஈடுபாடு. நாவல் வாசிப்பை மட்டுமே தனக்கான அடையாளமாகக் கொண்ட மாணவரும் உண்டு. அதே போலப் பாடம் அல்லாமல் வேறு திறன்களில் ஆர்வம் உடையோரும் இருப்பர். விளையாட்டு, நடிப்பு, கவிதை என்றெல்லாம் எத்தனையோ ஆர்வம். எல்லா வகைத் திறனையும் அங்கீகரிக்கும் பொதுமனம் நம் சமூகத்தில் உருவாகவில்லை. தம் பிள்ளைகளில் ஒருவரை மருத்துவராக்கிவிட்டால் அப்பெற்றோர் வாழ்வில் சாதனை புரிந்தவர்கள் ஆகிறார்கள். இருபிள்ளைகளை மருத்துவர்களாக்கினால் பெருஞ்சாதனை. அவர்களுக்குச் சொர்க்கமே கிடைத்தாலும் அதற்கு ஈடாகாது.

இந்த மனோபாவம் கொண்ட சமூகத்தில் கல்வி இப்படித்தானே இருக்க முடியும்? தம் உயர்கல்வியை முடித்த பிறகே பிள்ளைகள் தம் சுயதிறன் சார்ந்து முடிவெடுக்க முடிகிறது. ஊடகத் துறையிலும் திரைத்துறையிலும் ஆர்வம் கொண்ட பல இளைஞர்களைக் காண்கிறேன். அவர்களில் பெரும்பான்மையோர் பொறியியல் படித்தவர்கள். பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் அப்படிப்பில் சேர்ந்தவர்கள். அதை முடித்த பிறகு பெற்றோரை மீறித் தமக்கு விருப்பமான துறைகளுக்கு வருகிறார்கள். உயர்கல்வி கற்ற காலம் முழுதும் வீணாகிப் போகிறது. பெற்றோரை எதிர்கொள்வதில் நேரும் மனச்சிக்கல்கள் எத்தனையோ. சம்பாத்தியம் ஒன்றையே குறியாகக் கொண்டிருக்கும் பெற்றோரை எதிர்கொள்ள முடியாமல் வீட்டுக்கே செல்லாமல் சென்னை போன்ற பெருநகர வாழ்வில் கலந்திருக்கும் இளைஞர்களை அறிவேன். தமக்கு விருப்பமான துறையில் குறைந்தபட்சம் சம்பாதித்துக் கொண்டு இன்னும் செய்வோம் என்னும் நம்பிக்கையுடன் உழல்வோர் பலர்.

கல்வி நிறுவனங்களில் எல்லா வகைத் திறன்களும் வெளிப்பட வாய்ப்புகள் வழங்க வேண்டும். சிலவற்றைக் கட்டாயமாக்கினாலும் நல்லது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் வாசிப்புக் குழுக்கள், திரைக் குழுக்கள், நாடகக் குழுக்கள், ஊடகக் குழுக்கள் என்று எத்தனை எத்தனையோ உருவாக்க வேண்டும். ஒருமாணவர் வகுப்பறை அல்லாமல் வேறு ஏதாவது ஒன்றில் பங்கேற்பது அவசியம் என்றாக வேண்டும். அவற்றில் எல்லாம் ஆர்வமுடைய ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு மாணவர்களே நிர்வகிக்கும் வகையில் பொறுப்புகள் வழங்க வேண்டும். இளமையின் செயல்திறனை அறியாத மொன்னைச் சமூகமாக நாம் இருக்கிறோம். வயது கூடக்கூட அனுபவம் கூடலாம். செயல்திறன் சரியும். வழிகாட்டிவிட்டு இளைஞர்கள் செயல்படுவதைக் கண்டுவக்கும் மனநிலை ஆசிரியர்களுக்கு வேண்டும்.

பணியாற்றிய கல்லூரிகளில் சில விஷயங்களை முன்னெடுக்க முயன்றிருக்கிறேன். அவற்றைப் பற்றி எழுதியும் இருக்கிறேன். ஒருபைசா செலவில்லாமல்  வாரந்தோறும் ’தமிழ் இலக்கிய மன்றம்’ சார்ந்து நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோம். அதில் மாணவர்கள் பேசலாம், பாடலாம், கவிதை வாசிக்கலாம், நடிக்கலாம், நூல் மதிப்புரை செய்யலாம், பலகுரலில் பேசலாம் என்றெல்லாம் வைத்திருந்தோம். பலவகைப் பறவைகள் பறக்கும் வானம் போல அந்நிகழ்ச்சி அமையும். ஒருவார நிகழ்ச்சி முடிந்ததும் அதைப் பற்றிய பேச்சுகளும் அடுத்த வாரம் என்ன செய்யப் போகிறோம் என்னும் ஆக்கமும் போட்டியும் கொண்ட உரையாடல்களும் மாணவர்களிடையே நடக்கும். ஒரு சின்னத் திறப்பு. அதில் எத்தனை வெளிச்சம்!

ஆனால் இவற்றுக்கெல்லாம் ஆசிரியர்களிடம் இருந்தும் நிர்வாகத்திடம் இருந்தும் ஆதரவு இல்லை. ஆதரவு இல்லை என்றாலும் பரவாயில்லை. எதிர்ப்பும் தடுக்கும் முயற்சிகளும் நடக்கும். அவற்றை எதிர்கொண்டு தொடர்ந்து செல்வது சாதாரணம் அல்ல. என் பணிக்காலத்தில் கிடைத்த சிறுசிறு இடைவெளிகளில் தான் இத்தகைய முயற்சிகளைச் செய்ய முடிந்திருக்கிறது. பலவற்றைத் தொடர முடியவில்லை. முதல்வராக இருந்த போது கல்லூரியில் நிகழ்வு இல்லாத நாளே இல்லை என்னும் நிலையை ஏற்படுத்தினேன். செயல்படாமல் கிடந்த எல்லாவகை அமைப்புகளையும் செயல்படுத்தினேன். உள்ள நிதிகளைப் பெறும் வழிமுறைகளை எளிதாக்கினேன். ஏதாவது வகையில் நிதி வசதியை உருவாக்கவும் முயன்றேன். மாவட்ட நிர்வாகத்திலிருந்து ஏதாவது நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று  கோரிக்கை வைத்தால் உடனே ஒப்புதல் கொடுத்தேன். எல்லாம் மாணவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் பயன் தரும். கல்லூரி நுழைவாயில் தினமும் ஏதாவது பதாகை நிற்கும். ஒரே நாளில் இரண்டு மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிலையும் முதல்வருக்கு அமைந்தது. என்னைப் போல ஆர்வம் உடைய ஆசிரியர்களைக் கண்டறிந்து பொறுப்புகளைக் கொடுத்தேன். ஒருதுறைத் தலைவர் சொன்னார், ’எந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டாலும் உடனே கொடுத்து விடும் முதல்வர் நீங்கள்.’

இத்தகைய செயல்பாடுகள் கல்லூரிச் சூழலையே மாற்றின. தனியார் கல்வி நிறுவனச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் பத்திரிகைகள், ஊடகங்களுக்குத் தவிர்க்க இயலாமல் எங்கள் செய்திகளையும் வெளியிடும் நிர்ப்பந்தம் உருவாயிற்று. மாவட்ட நிர்வாகம் வந்து ஒருநிகழ்ச்சியை நடத்தினால் அதைப் பற்றிய செய்தி போட்டுத்தானே ஆக வேண்டும்? எங்கள் கல்லூரிச் செய்தி இல்லாத நாளில்லை என்றாயிற்று. கல்லூரியைப் பற்றிச் சுற்று வட்டார மக்களுக்கு இருந்த அதிருப்தியில் சிறுசலனம் உருவாயிற்று. மாணவர் சேர்க்கையைக் கூட்டவும் அச்செய்திகள் பயன்பட்டன. மாணவர்களுக்கான வாய்ப்புகள் கூடிற்று. கல்லூரி வளாகத்தில் பேசுபொருள் மாறிற்று. புறம் பேசும் ஆசிரியர்களுக்கு இடையிலும் இத்தகைய பேச்சு ஓடிற்று. ’முதல்வர் விளம்பர விரும்பி’ என்றார்கள்.  ’தமிழாசிரியருக்கு எப்போதும் மேடைதான் வேண்டும்’ என்றும் சொன்னார்கள்.  ’வகுப்புகள் பாதிக்கப்படுவது பற்றி முதல்வருக்குக் கவலையே இல்லை’ என்றார்கள். ஆனால் சூழல் மாறியது. அதை எல்லோருமே உணர்ந்தார்கள்.  பேசாத மாணவர்கள் பேசினார்கள். கேள்வி கேட்டார்கள். எதை எதையோ வாசித்துவிட்டு வந்தார்கள். தமக்குரிய வாய்ப்புகளை அறிந்தார்கள்.

மாணவர் அமைப்புகள் இருந்து மாணவப் பொறுப்பாளர்கள் முன்னின்று நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தால் எப்படியிருக்கும் என்று என்னால் கற்பனைதான் செய்ய முடிந்தது. பல தளைகளால் கட்டப்பட்ட என் கைகளைச் சற்றே நெகிழ்த்திக் கொண்டதும் இவற்றை எல்லாம் செய்ய முடிந்தது. மாணவர்களைச் சுயமாகச் செயல்பட அனுமதி தந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்! புதிய புதிய கதவுகளைத் திறப்பதற்குப் பதிலாக ஒவ்வொன்றாக மூடிக்கொண்டு வருகிறோம். ஆண்டுமலர் கதையும் அதுதான். அதற்குரிய நிதிவசதி பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறேன். அதன் பொருள் சார்ந்து ஒருமுறை பிரச்சினை ஏற்பட்டது. சேலம் அரசு கல்லூரி ஆண்டுமலரில் பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் ஒருகட்டுரை வெளியாகிவிட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் எழுதிக் கொடுத்ததை வாசிக்காமல் அப்படியே போட்டுவிட்டார்கள். அது மாநில அளவில் பிரச்சினை ஆயிற்று. ஓரிடத்தில் பிரச்சினையானால் அதைச் சரிசெய்ய முயலாமல் ஒட்டுமொத்தத்தையும் நிறுத்திவிடுவதுதான் நம் ஆட்சியாளர்கள் எடுக்கும் முடிவு. ஒவ்வொரு கல்லூரியின் ஆண்டுமலரும் மாதிரிப் படியாகப் பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே ஒருவர் பார்த்துச் சொல்லும் திருத்தங்களை எல்லாம் செய்துதான் மலரை அச்சுக்கு அனுப்ப வேண்டும் என்னும் ஆணை வந்தது. அது நடைமுறையில் சாத்தியப்படவில்லை. பிறகு அப்படியே நின்று போயிற்று. இப்போதும் சில கல்லூரிகள் சடங்குத்தனமாக ஆண்டுமலர் வெளியிடுகிறார்கள். அவ்வளவுதான். கல்வி நிறுவனங்களைப் பெருக்கியிருக்கிறோம். கல்வி மலர்ச்சியை உருவாக்கவில்லை.

வி: கேரளாவில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மாணவர் தேர்தல் முறையாக நடக்கிறது. உறுப்புக்கல்லூரிகள், பல்கலைக்கழகம் எனத் தனித்தனியே வாக்குப்பதிவுகள் நடந்து, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு காலம் அவர்கள் செயல்படத் தனி அறைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கென காவல், தேர்தல் செலவுகள் இவற்றையெல்லாம் பல்கலைக்கழகமும் அரசும் இணைந்து நடத்திக் கொடுக்கின்றன. இது இங்கே ஏன் சாத்தியப்படவில்லை?

பெமு: ஏற்கனவே சொன்னது போல ஐம்பது ஆண்டுக்கு மேல் ஆட்சி செய்த திராவிட இயக்கங்களே காரணம். மாணவர்களில் இருந்து அடுத்தகட்ட அரசியல்வாதிகள் வரும் அவசியம் அவர்களுக்கு இல்லாமல் போயிற்று. வாரிசுகளே போதும் என்னும் நிலை ஏற்பட்டது. தேர்தல் என்பது கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து அதை முதலீடாகக் கொண்டு கோடிக்கணக்கில் லாபம் எடுக்கும் ஒருதொழில் என்னும் நிலை உருவானது. இவையெல்லாம் காரணம். தனியார் கல்வி நிறுவனப் பெருக்கமும் முக்கியமான காரணம். தனியார் நிறுவனங்கள் எதேச்சாதிகாரம் கொண்டவையாக விளங்க மாணவர் தரப்பிலிருந்து சிறுஎதிர்ப்பும் இருக்கக் கூடாது அல்லவா? எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த பல அரசியல்வாதிகள் கல்வித் தந்தைகளாகவும் இருக்கிறார்கள். அல்லது அவர்களது பினாமிகள் கல்வி நிறுவனம் நடத்துகிறார்கள். இந்த அமைப்பு முறை மாணவர் தேர்தலை அனுமதிக்காது. மாணவர் பிரதிநிதிகளைத் தொல்லையாகவே காணும். அடுத்த தலைமுறை அரசியல் கல்வியும் பயிற்சியும் பெற்று உருவாகி வர வேண்டும் என்னும் விரிந்த பார்வை நம் கல்வி முதலாளிகளுக்கு இல்லை. அம்முதலாளிகள் அரசியல் கட்சிகளுக்குக் கோடிக்கணக்கில் தேர்தல் நிதி கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டக் கல்வி நிறுவனங்களை விமர்சித்து எழுதினேன் என்பதால் மாதொருபாகன் பிரச்சினையின் போது அம்முதலாளிகள் எல்லாம் எனக்கு எதிரான கும்பல் திரட்சிக்கு நிதியுதவி செய்தார்கள். இத்தகைய கூட்டு, கல்வித் தொழில் என்னும் பார்வை ஆகியவற்றால் நம் சமூகத்தில் மாணவர் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இருந்ததை இழந்துவிட்டோம். திரும்பப் பெறுவது சாத்தியமா அதற்கான சூழல் கனியுமா என்று தெரியவில்லை.

              தொடரும்

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop