ஏ. கே. ராமானுஜன் நேர்காணல் – பகுதி 1

அமெரிக்காவில், இந்தியா குறித்த ஆய்வுகளில் தமிழ் பண்பாட்டை தீவிரமான ஆய்வுப்பொருளாக ஆக்கியவர்களில் முதன்மையானவர் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நாட்டுப்புறவியல் அறிஞர் என பலமுகங்களைக் கொண்ட ஏ. கே. ராமானுஜன். சங்கத் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்ததன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தினார். கன்னட வசனகவிதைகளையும் உலகளவில் கொண்டு சேர்த்தவர். கல்லூரி ஆசிரியராக அவர் மதுரையிலும் தன் இளமைக் காலத்தில் பணியாற்றிய ராமானுஜனின் கவிதைகளிலும் நாட்குறிப்புகளிலும் மதுரை வாழ்க்கை சில காட்சித் துண்டுகளாக இடம்பெறுகிறது. தமிழ் பெற்றோருக்குப் பிறந்த ஏ. கே. ராமானுஜனின் குடும்பம் மைசூரில் குடியேறி நிலைகொண்டது. மைசூரில் தான் வாழ்ந்த வீட்டின் கீழ்தட்டில் தமிழ் புழங்கியதாகவும், அப்பா அதிக நேரத்தை செலவழித்த மாடியில் ஆங்கிலம் புழங்கியதாகவும், பொதுவெளியில் கன்னடம் இணைப்பு மொழியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். வேதங்கள், காப்பியங்கள் மூலமாகவன்றி குழந்தைகள், பெண்களின் வாய்மொழிக் கதைகள் வாயிலாக இந்திய சிந்தனை முறையை ஆராய வழிவகுத்தவர் ஏ. கே. ராமானுஜன். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஏ.எல்.பெக்கெர், கீத் டெய்லர் இருவரும் சேர்ந்து எடுத்த ஏ. கே. ராமானுஜனின் நேர்காணல் இது. 1989 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. அப்போது அங்கே அவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார். மிச்சிகனில் பெக்கெர், மொழியியல் பேராசிரியராக இருந்தார். கீத் டெய்லர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். கல்வித்துறை சார்ந்த புத்தகக் கடை ஒன்றையும் நிர்வகித்துவந்தவர். ஏ. கே. ராமானுஜன் அளித்த நேர்காணலின் இரண்டாம் பகுதி இது…
ஏ.எல்.பெக்கெர்: சில இந்திய அரசியல்வாதிகள் இந்தியாவுக்கென்று பொதுமொழி வேண்டுமென்று கோருகிறார்களே?
ஏ கே ராமானுஜன்: ஒற்றுமைக்காக. அதை அவர்கள் வெகுகாலமாக கோருகின்றனர். அந்த மொழி இந்தியாக இருக்கவேண்டுமென்பதாக உள்ளது. ஏனெனில் அதிக மக்கள் அந்த மொழியைப் பேசுகின்றனர். 13 அல்லது 14 கோடி மக்கள் அதைப் பேசலாம்.
கீத் டெய்லர்: கன்னடமோ இரண்டு கோடி பேரே பேசும் மொழியாக உள்ளது.
ஏ கே ராமானுஜன்: தமிழை ஐந்து கோடி மக்கள் பேசுகின்றனர். வங்கமொழியை 8 கோடி பேர் பேசுகின்றனர். இதுவும் சிறியளவு இல்லையே.
கீத் டெய்லர்: நவீன கிரேக்க மொழியைப் பேசும் மக்களின் எண்ணிக்கையைவிட ரொம்ப அதிகம் இந்த எண்ணிக்கை.
ஏ கே ராமானுஜன்: கிரேக்கம். அல்லது பின்னிஷ். அல்லது ஹீப்ரூ என எதை வேண்டுமானுல் சொல்லலாம். இந்தியாவின் பிராந்திய மொழிகளில் பன்முகத்தன்மை நிரம்பியுள்ளது. கன்னடம் பேசும் தென்னிந்தியப் பகுதியையே எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே டஜன் கணக்கில் பிறமொழிகளைப் பேசும் சிறுபான்மையினர் உள்ளனர். இந்தியாவில் எந்தப் பெரிய நகரத்தை எடுத்துக்கொண்டாலும் ஒரு மொழி நிறைய பேர் பேசுவதாகவும் டஜன் கணக்கான மொழிகள் பிறரால் பேசப்படுவதாகவும் இருக்கும். எல்லா மொழி வெளிப்பாடுகளையும் நுண்ணுணர்வுடன் அனுமதிக்கவேண்டும். அரசியல்ரீதியாக இது சிக்கலானதுதான். இந்தியா போன்ற ஒரு அமைப்பில் மொழி வித்தியாசம் முரண்பாட்டுக்கான இடமாக ஆக்கப்படவே கூடாது. ஆனால், எதார்த்தம் அப்படிப்பட்டதாக இல்லை.
ஏ.எல்.பெக்கெர்: உங்களது பணிகள் முழுவதும் பிராந்திய மொழிகளின் வளத்தை வெளிப்படுத்துவதாகவும், மொழிகளின் பன்முகத்தன்மைதான் அந்த சக்தியைத் தருகிறதாகவும் நாம் உரையாட வேண்டிய அவசியத்தைத் தெரியப்படுத்துவதாகவும் உள்ளது…ஒரு சிறிய எண்ணிக்கை கொண்ட கவிஞர்களால் எழுதப்பட்ட சங்கக் கவிதை, தனது தூய்மை கெடாமல் எப்படி பல நூறாண்டுகளைத் தாண்டி வந்துள்ளது என்பதும் மிகவும் சுவாரசியமானது. சங்கக் கவிதைகளை மொழிபெயர்த்தவராக அதுபற்றி சொல்லுங்கள்.
ஏ கே ராமானுஜன்: தூய்மை என்ற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை. அந்த வார்த்தை சங்கக் கவிதைகளில் எங்குமே பயன்படுத்தப்படவில்லை.
ஏ.எல்.பெக்கெர்: சங்க கவிதைகள் குறித்து ஒரு நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் உங்கள் அறிமுகத்தில் சொல்லியுள்ளீர்கள். பல நூறு வருடகாலத்தில் அவை எழுதப்பட்டிருந்தாலும் ஒரே நபர் எழுதியது போல உள்ளதென்று.
ஏ கே ராமானுஜன்: அல்லது…கூடிப்பேசிக் கொண்ட ஒரு குழுவினரால் எழுதப்பட்டது போல.
ஏ.எல்.பெக்கெர்: அவ்வளவு நீண்ட காலகட்டத்தில் இப்படியான இசைவு எப்படி சாத்தியமானது…
ஏ கே ராமானுஜன்: அவற்றில் புழங்கியது மிக குறைவான எண்ணிக்கை கொண்ட நபர்கள். அப்போது ராஜ்ஜியங்கள் கூட இல்லை. 200 மைல்கள் கூட சுற்றளவு இல்லாத சிற்றரசுகளே இருந்தன. ரொம்பச் சிறிய சிற்றரசுகள்.
ஏ.எல்.பெக்கெர்: ஆனாலும், அவை மிகுந்த சக்திவாய்ந்த கவிதைகளாக இன்னும் திகழ்கின்றன. அமெரிக்காவைப் பொருத்தவரை, படைப்பாளியாக உங்கள் குரல்(The Interior Landscape) சங்கக் கவிதைகள் மொழிபெயர்ப்பு வாயிலாகவே அறிமுகமானது.சங்கக் கவிதைகளுக்குப் பின்னாலிருந்த ஒன்றிணைந்த சமூகத்தைத் தெரிந்துகொண்ட பேருணர்வு அது. சங்கக் கவிதைகள் நிகழ்ந்த மொத்த காலகட்டத்திலும், குறிப்பிட்ட பாத்திரங்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பிட்ட இடங்களும்.
ஏ கே ராமானுஜன்: நீங்கள் சொல்வது சரிதான்.
ஏ.எல்.பெக்கெர்: நிறுவப்பட்ட குறிப்பிட்ட மனநிலைகளின் தொகுப்பு என்று சொல்லலாமா?
ஏ கே ராமானுஜன்: புறத்தில் சமூகத்தில் அப்படி இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சங்கத்தில் அந்தக் குறிப்பிட்ட மனநிலைகள் உள்ளன.
ஏ.எல்.பெக்கெர்: ராமானுஜனின் கவிதையில் இயங்கும் பொதுவானது/தனிப்பட்டது கருவைப் பற்றி விவாதிக்க விருப்பத்தோடு உள்ளேன். ஒருவகையில் இரண்டு விதமான கவிதைகள் உள்ளன. அகம் மற்றும் புறம். அது, பழைய தமிழ் கவிதைகளில் பிரதிபலிக்கிறது. ஒரு வெளிநபராக எனக்கு, இரண்டையும் பிரித்துப்பார்ப்பது கடினுமானது. தமிழ் சங்கக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகளை நான் வாசிக்கும்போது, ராமானுஜனின் கவித்துவ ஆற்றல்தான் அவற்றுக்கு உயிர்த்தன்மையை அளித்திருக்கிறதஎன்று கருதுகிறேன். அடுத்தவாரம் திரும்பப் போய் சங்கக் கவிதைகளை வாசிக்கும்போதும் இதைச் சொல்வேன். இவற்றைப் படைத்த ஒரு சமூகம் மிக வித்தியாசமானது. புராணிக சங்கக் கவிதைகள், நாம் எல்லோரும் கனவுகாண்பது போல, அறிஞர்களின் உயர்குமுகமாக இருந்திருக்கலாம். அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பண்பாட்டை உருவாக்கும் சமூகம் அது. இந்த எண்ணம் ஏற்படுவதற்கு நீங்கள் அவற்றை ஆக்கி அளித்ததே காரணமாகவும் இருக்கலாம். அல்லது அசல் பிரதிகளே அப்படிப்பட்டதாகவும் இருக்கலாம்.
ஏ கே ராமானுஜன்: எனக்கு இரண்டுமே தெரியாது. நான் முதலில் சங்கக் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டபோது, சமஸ்கிருத கவிதை மரபில் வந்த இந்தியக் கவிதைகளை நன்கு அறிந்திருந்த இந்திய நண்பர்கள், இது இந்தியக் கவிதைகளாக இருக்கவே முடியாது என்று வாதிட்டனர். அவர்கள் பார்த்ததிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட அனுபவத்தை தமிழ்க் கவிதைகள் தந்தது. சங்கக் கவிதைகளில் பகட்டு இல்லை. பெண்களை சம்பிரதாயமான கட்டுப்பாடுகளுடனோ, மிகைப்படுத்தியோ காண்பிக்கும் அம்சம் இல்லை. நான் அவர்களுக்கு மூலப்பிரதிகளைக் காண்பித்து வார்த்தைக்கு வார்த்தை ஒப்பிட்டுக் காட்டியபிறகே அவர்கள் அப்படியொன்று இருப்பதையே ஏற்றுக்கொண்டனர். எனது மொழியின் வழியாக நான் என்ன செய்ய இயலுமோ, எதைப் பார்க்க முடிந்ததோ அதை இடையீடு செய்திருக்கிறேன்தான். இந்தப் பிரதிகளை நானே தேடிக் கண்டுபிடித்த பரவசமும் வாசகர்கள் உணர்வதற்கு ஒருபகுதி காரணமாக இருக்கலாம்.
கீத் டெய்லர்: ஒரு நூலகத்தில் இந்த நூல்களைப் பார்த்த விவரத்தையும் கொடுத்திருக்கிறீர்கள்…
ஏ கே ராமானுஜன்: ஆம். நான் சிகாகோவுக்கு ஒரு மொழியியலாளராக தமிழ் சொல்லித் தருவதற்காக வந்தேன். பின்னர், என்னால் இதை எப்படிச் செய்யமுடியுமென்று நினைத்தேன்? எனக்கு பழைய தமிழ் தெரியவேண்டும். எனக்கு பழந்தமிழ் தெரியாது. இந்தியாவில் தமிழ் பேசும் இடங்களில் எனக்கு கல்வி நடைபெறவில்லை. அதனால் செவ்வியல் மொழியைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லை. அது தெரியாமலேயே தான் எனக்கு இந்த நூல்களின் பரிச்சயம் ஏற்பட்டது. நான் அந்த அறியாமையை பெரிய சொத்தாக கருதினேன். நான் பண்டிதர்களிடம் பாடம் கேட்கவில்லை. பண்டிதர்களிடம் பாடம் படிக்காததால் நான் நிறைய இழந்திருக்கிறேன். நான் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால், பின்னர் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். சங்கக் கவிதைகளைப் பொறுத்தவரை நான் கவிதையை அறிய நினைத்தேன். எனக்கு மரபில் ஈடுபாடு இருக்கவில்லை. நான் ஒற்றைக் கவிதைகளில் ஈடுபாடுடையவனாக இருந்தேன். இப்போதும். அதுதான் சங்கக் கவிதைகளில் முன்பு காணாததைக் காரணச் செய்தது. எங்கேயும் கண்டிருக்காதது அது. மரபு குறித்த அறிவில்லாமல்தான் எனது மொழிபெயர்ப்புகள் வந்தன. மற்றவர்கள் அதற்கு முன்னர் காணாத விஷயங்களை இந்தவகையான களங்கமின்மை அல்லது புத்துணர்வுடன் பார்க்கவைத்ததற்கும் காரணமாக அது இருக்கலாமென்று கருதுகிறேன். இதன்மூலம் எனக்கு இரண்டு நிறைவுகள் ஏற்பட்டன – இரண்டுமே அரிதானவை. முதல் நிறைவு, இந்தியாவைப் பற்றி ஒன்றுமே அறியாதவர்களும் சங்கக் கவிதைகளை வாசிக்க முடிந்தது. அத்துடன் அந்தக் கவிதைகள் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளில் பயன்படுத்தவும் பட்டன. இன்னொரு நிறைவு என்னவென்றால், கவிதையைத் தெரிந்த சிறுவயதிலிருந்தே படித்துக்கொண்டிருக்கும் ஒரு இந்தியருக்கு சங்கக் கவிதை, இப்படியொரு கவிதையை முன்னர் படித்திருக்காத அனுபவத்தையும் தருகிறது. இது நாள்தோறும் நடக்கிறதென்று சொல்லமாட்டேன். அப்படி நடக்கும்போது, நான் மொழிபெயர்த்தது வீண்போகவில்லை என்ற நிறைவு வருகிறது.
ஏ.எல்.பெக்கெர்: உங்கள் லட்சியம் கவிதைகளை மொழிபெயர்ப்பதல்ல, வாசகனை மொழிபெயர்ப்பது என்று எழுதியிருக்கிறீர்கள். Poems of Love and War நூல் வாயிலாக வாசகனை நீங்கள் வேறு இடத்துக்கு மொழிபெயர்த்துவிட்டீர்கள். அற்புதமான நயம் கொண்ட கவிதைகளின் ஒருபகுதியை மொழிபெயர்த்ததன் வாயிலாக அது சாத்தியமாகிவிட்டது.
ஏ கே ராமானுஜன்: தன்னை நிஜமாகவே வெளிப்படுத்தும் கவிதைகள் அவை.
ஏ.எல்.பெக்கெர்: ஆனால் நீங்கள் எழுதிய பின்னுரை அந்தப் புத்தகத்தில் பெரியளவில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கவிதையைப் படிப்பதற்கு அவ்வளவு பெரிய பின்னுரை அவசியமென்று எண்ணுகிறீர்கள்.
ஏ கே ராமானுஜன்: நிச்சயமாக. The Interior Landscape நூல் வாயிலாக, அப்படி அப்படியே மொழிபெயர்ப்புகளை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்று கண்டுபிடித்தேன். இதுபோன்ற புத்தகங்களில் மூன்று பகுதிகள் இடம்பெற வேண்டும். முதல்பகுதி கவிதைகள். இன்னொன்று குறிப்புகள். அடுத்தது ஒரு பின்னுரை. பின்னுரையும் குறிப்புகளும் மொழிபெயர்ப்பாளன் அடைந்த தோல்வியின் வாக்குமூலங்கள்தான். நான் முழுமையான மொழிபெயர்ப்பாளனாக இருந்தால், அவை எனக்குத் தேவையே இல்லை. ஆனால், இந்த மூன்று அம்சங்களும் சேர்ந்துதான், இக்கவிதைகளை மொழிபெயர்க்கின்றன.
ஏ.எல்.பெக்கெர்: ஒரு முழுமையான மொழிபெயர்ப்பாளருக்கு குறிப்புகள் அளிக்கவேண்டிய தேவையில்லை என்று நீங்கள் சொல்வதை தீவிரமாக எடுத்துக்கொள்ள இயலுமா? மொழிகளுக்கிடையிலான வித்தியாசத்தைப் பார்க்கும்போது அது சாத்தியமாகும் உலகத்தை என்னால் கற்பனை செய்தே பார்க்கமுடியவில்லை.
ஏ கே ராமானுஜன்: உங்களுடைய வாதம் சரியாக இருக்கலாம். நான் ஒவ்வொரு அடிக்குறிப்பை எழுதும்போதும் ஒரு தோல்வியின் வாக்குமூலத்தைத்தான் எழுதுவதாக உணர்கிறேன். ஆனால், அப்படிச் செய்யாமல் விடவே கூடாது என்பதை அறிவேன். கவிதைக்குள் விளக்கம் தருகிற விஷயங்களை வைத்தால் அது நல்ல மொழிபெயர்ப்பாக இருக்காது. அது கவிதையை சந்தடி ஆக்கிவிடும். எல்லா மொழிபெயர்ப்புகளுமே சமரசங்கள்தான். அது முழுமையற்றதின் கலை. இலக்கியங்கள். அவை எழுதப்படும் மொழிசார்ந்த பண்பாடுகளோடு, அவை சுமக்கும் பண்பாடோடும் வேரூன்றியிருப்பவை. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பெயர்க்கப்படும்பவதே முழுமையற்ற விவகாரம்தான். மொழிபெயர்ப்பதில் அதிக சேதாரம் உள்ளது. அந்த சேதாரத்தைச் சுட்டிக்காடுதல் அவசியம். அதன்மூலம் அந்த சேதாரத்தைக் குறைக்க முடியலாம். இவ்வளவுதான் செய்ய இயலும் என்பதைக் காண்பிப்பதன் மூலம் வாசகனை தேவையான எட்டுகள் எடுத்துவைக்கச் செய்யலாம்.
ஏ.எல்.பெக்கெர்: இது மொழிபெயர்ப்புக்கேயுரிய பிரச்சனை மட்டுமல்ல என்று புரிகிறது. அன்றாட உரையாடலிலேயே இந்தப் பிரச்சனை இருக்கிறது. இந்த நேர்காணல் போன்றவற்றிலும் கூட. முழுமையின்மை என்ற வார்த்தை, முழுமையான ஒன்று இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது…
ஏ கே ராமானுஜன்: சில சமயங்களில் தடையேதுமற்ற தொடர்பாடல் என்ற ஒரு கனவு இருக்கிறது. இரண்டு நபர்கள் சேரந்து அமர்ந்திருக்கும்போது முழுமையான புரிதல் அங்கு நிலவுவதாக. பழைய இந்தியக் கவிதை ஒன்றில் குரு அமைதியாக அமர்ந்திருக்கிறார். சீடனும் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அப்படியும் எல்லாம் சொல்லப்பட்டு விட்டது. அது ஒரு கனவுதான். நாம் வாயைத் திறந்தவுடன் அந்தக் கனவு நாராசமாகிவிடுகிறது.
ஏ.எல்.பெக்கெர்: இந்த முழுமையற்ற நிலையை நீங்கள் புழங்கும் இந்திய, ஆங்கில மொழிபேசும் சூழலில் எப்படிக் கையாள்கிறீர்கள்?
ஏ கே ராமானுஜன்: எனது கவிதை குறித்து புதிதாக ஒரு பார்வை சமீபத்தில் வெளியாகியுள்ளது. எனது ஆங்கிலக் கவிதைகளில் நிறைய குறிப்பீடுகள் உள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.
கீத் டெய்லர்: இந்தியா சார்ந்த குறிப்பீடுகளா?
ஏ கே ராமானுஜன்: இந்தியப் பொருள்கள். எல்லாவிதமான பொருள்களும். இந்தியப் பொருள்கள் மற்றும் மேற்கத்திய பொருள்களும். நான் எனக்கு என்ன தெரிகிறதோ அதை எழுதுகிறேன்.
கீத் டெய்லர்: இலக்கியக் குறிப்பீடுகளும் உங்கள் கவிதைகளில் உள்ளன…
ஏ கே ராமானுஜன்: நான் அவற்றை அடைப்புக்குறிகளுக்குள்தான் தருகிறேன். அதை சில நபர்களே கவனிக்கின்றனர். நான் எஸ்ரா பவுண்டையும் தாந்தேவையும், இந்திய இலக்கியங்களையும் படித்திருக்கிறேன். அவர்களோடு சேரந்து சிந்திக்கிறேன். என்னிடம் இருப்பதை நான் எப்படி பயன்படுத்தாமல் இருக்கமுடியும்?
ஏ.எல்.பெக்கெர்: உங்கள் கவிதைகளையும், உங்கள் மொழிபெயர்ப்புகளையும் தனித்தனியாக பார்க்கவைப்பதற்கு நீங்கள் மிகவும் சிரமப்படுவதாகச் சொல்லியிருக்கிறீர்கள்?
ஏ கே ராமானுஜன்: நான் மொழிபெயர்த்த கவிதைகள் குறித்து எனக்கு மிகுந்த பெருமிதம் உண்டென்று உங்களுக்குத் தெரியும். அவை எல்லா காலத்துக்குமான மகத்தான கவிதைகள். அவற்றை என் கவிதைகளோடு சேர்த்து ஒரே நிகழ்ச்சியில் படிப்பது எனக்கு சங்கடத்தை உணர்கிறேன். இரண்டின் தொனிகளும் வேறு. மொழிபெயர்ப்புகளுக்கு கொஞ்சம் விளக்கம் தேவை. எனது கவிதைகளுக்கோ அது தேவையற்றது.
ஏ.எல்.பெக்கெர்: உங்கள் கவிதைகளிலேயே நீங்கள் அந்தரங்க கவிதை, வீட்டுக்கு வெளியே உள்ள உலகத்தைப் பற்றிய புறப்பொருள் கவிதை என்று பிரித்துப் பார்க்கிறீர்களே?
ஏ கே ராமானுஜன்: மாட்டேன். கவிதை வாசிப்புகளில் பிரித்து வைத்திருப்பேன். அவற்றுக்கிடையே ஒன்றையொன்று ஊடுருவும் தன்மை உண்டு. எனது கவிதைகளை மற்றவர்கள் எழுதியதோடு ஒப்பிடுவார்கள் என்ற அச்சமும் எனக்கு கொஞ்சம் உண்டு. நான் போட்டியை விரும்புவதில்லை.
ஏ.எல்.பெக்கெர்: உலகில் பெரும்பாலான இடங்களுக்கு சங்கக் கவிதைகள் உங்கள் குரலின் வாயிலாகத்தான் சென்று சேர்ந்திருக்கின்றன…
ஏ கே ராமானுஜன்: அது உண்மை. அவற்றை மொழிபெயர்ப்பதற்கு நான் என் சுய குரலைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. நான், தொல்கவிஞனின் குரலாக தன் குரலை ஆக்கும் மாயக்குரல் திறன் கொண்ட மொழிபெயர்ப்பாளர் அல்ல. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நீங்கள் மொழிபெயர்க்கும் மொழி உங்களிடமிருந்தே வருகிறது. எத்தனை முயன்றாலும், அதிலிருந்து தப்பித்தல் சாத்தியமேயில்லாதது. உங்களது வெளிப்பாட்டுத் தேவைகளிலிருந்துதான் அது வரவும் வேண்டும்.
ஏ.எல்.பெக்கெர்: தனிப்பட்ட குரலைப் பற்றிய விவகாரத்தைப் பொறுத்தவரை, சங்கத் தமிழ் கவிஞர் யாருடனாவது நீங்கள் உட்கார்ந்து மொழிபெயர்க்கும் வாய்ப்பு ஏற்படுமானால், அவர்களால் உங்கள் பிரச்சனையை புரிந்துகொள்வதற்கு இயலுமா?
ஏ கே ராமானுஜன்: அவர்களுக்கு மொழிபெயர்ப்பு இருந்ததில்லை. ஒரே மொழி தெரிந்த ஒரு சமூகத்துக்கு எழுதிய கவிஞர்கள். அவர்கள் மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றி சிந்தித்திருக்க வாய்ப்பே கிடையாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒருவர் இந்தக் கவிதைகளை மொழிபெயர்ப்பார் என்றும் யோசித்திருக்கவே மாட்டார்கள். இங்கிலாந்திலோ, ஆஸ்திரேலியாவிலோ அல்லது ஆன் ஆர்பரோ வாசிப்பார்கள் என்றும். சிறியதாக இருக்கும் ஒரு தமிழ் மூலையில் எழுதியவர்கள் அவர்கள். இன்னும் பிறந்திராத, இன்னும் தெரியவராத மொழிவழக்குகளைப் பேசுபவர்கள் என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுவர்களுக்கும் சங்கக் கவிஞர்களுக்கும் நான் சிறியளவிலான இணைப்பாக ஆகியிருக்கிறேன் என்பதில் நான் மனம் நெகிழ்ந்து போனேன். நான் எனக்காகச் செய்தேன். ஆனால், அது எல்லாவகையான மக்களுக்குமானதாக திறந்துகொண்டது. அவர்கள் அதற்காக எழுதவே இல்லை. அவர்கள் எழுதிய கவிதை ஒரு சிறிய சபையினருக்காக. ஒரு குலத்தலைவனுக்காக எழுதியது.
ஏ.எல்.பெக்கெர்: எனது சுய குரலை கண்டுபிடிக்கப் போகிறேன் என்ற கருத்திலிருந்து சங்கக் கவிதைகளில் காணக்கிடைக்கும் திறனும் அழகும் வரவில்லை. நாம் இயங்கும் இந்த வகைமையில் உருப்படியாக ஒரு படைப்பை எழுதமுடியுமா என்ற கருத்திலேயே எழுதப்பட்டதென்று எனக்குத் தோன்றுகிறது. ஒரு நெடுங்கவிதையின் அங்கமாக கிட்டத்தட்ட ஒரு குரலாக ஆகும் முயற்சியிலேயே எழுதப்பட்டது போல சங்கக் கவிதைகள் தெரிகின்றன.
ஏ கே ராமானுஜன்: ஹெரால்ட் ப்ளூம் கருத்தோட்டமான‘தாக்கம் குறித்த படபடப்பு’ அவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் தாக்கத்துக்குள்ளாக விரும்புபவர்கள். அவர்கள் எல்லாருமே குருவிடம் பயிற்சி பெற்றவர்கள். அந்தவழியில்தான், இந்திய மரபிசைக் கலைஞர்கள் கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பாடகருக்குப் பின்னால் அமர்ந்துகொண்டு, அவர்களோடு பாடித்தான் பயிற்சிபெறுகின்றனர். குருவோடு சேர்ந்து பல ஆண்டுகள் பாடி, குருவைவிட்டு விலகி தனியாகப் பாடலைப் பாடத் தொடங்குகிறார்கள். அவரைப் போலப் பாடியே அவர்கள் கற்கிறார்கள். குரு வரைந்த கோட்டுக்குள் நின்று பழகும் முறை அது. அதுவே அன்றைய கவிஞர்களுக்கும் மற்ற எல்லாக் கலைஞர்களுக்கும் பொருந்தக்கூடியது. மொழியை மீறுவதுதான் கவித்துவம் போன்ற ப்ரேக் கருத்தியல் கண்ணோட்டமெல்லாம் இங்கே சரிப்பட்டு வராது. மொழியிலிருந்து பரிச்சயமில்லாமல் ஆவது அல்ல, பழைய பார்வையிலிருந்து விடுபடுவதே இங்கு நடைபெறுகிறது. மொழியை மீறாமல், மரபுக்கு ஒப்புக்கொடுத்து அதை திருப்திசெய்வதே இங்கே கவிஞனின் வேலை. மரபால் செய்யக்கூடிய இன்னொரு விஷயத்தை நான் காண்பிக்கிறேன் என்று சங்ககால கவிஞன் சொல்கிறான்.
ஏ.எல்.பெக்கெர்: சங்கக் கவிதை தொடர்பான பேச்சுகளில் தொல்காப்பியரைத் தொடர்ந்து மேற்கோள் காட்டுகிறீர்கள்.
ஏ கே ராமானுஜன்: ஆமாம். அவர் கவிதையியலை எழுதியவர். இலக்கணத்தை எழுதியவர். அணி, யாப்பு மற்றும் கவிதையியல் என எல்லாவற்றிலும் மேதை அவர். மொழியியலாளரின் உச்சபட்ச குரு எனலாம். சாதாரண மொழியிலிருந்து மிகுந்த கவித்துவமான மொழிவரை அவர் எடுத்துப் பேசியிருக்கிறார்.
ஏ.எல்.பெக்கெர்: தொல்காப்பியர் நமது நூலகங்களில் சிலையாக கண்டிப்பாக வைக்கப்பட வேண்டிய ஒருவர் என்று சொல்கிறீர்கள்…
என்னைப் பொறுத்தவரை, ஒரு மொழியை அறியும்போது, ஆங்கிலம் பேசுபவனாக, ஒரு தமிழ் கவிதையை உள்ளேயிருந்து அறிந்துகொள்வதற்கு என்னென்ன மாற்றங்களை அவசியம்? இதைத்தான் எனது ஆசிரியர், பண்பாட்டுக்கு உள்ளே இருப்பவரின் பார்வை(emicity) என்ற பொருளில் கூறுகிறார். ஒரு பண்பாட்டுக்குள்ளிருந்து இன்னொரு பண்பாட்டுக்கு நகரும் முறைப்பாட்டின் ஒரு பகுதி அது. மொழிக்கும் கலாசாரத்துக்கும் எது பொதுவோ அதுவே மொழியியலுக்கும் என்று நான் கருதுகிறேன். அது ஊடகத்தைச் சார்ந்தது; அது நினைவைப் பற்றியது; எழுதும் முறைமையையே குறிப்பது. உதாரணத்துக்கு, தமிழ்க் கவிதையை மொழிபெயர்க்கும் செயல்பாட்டில், தமிழ் லிபியிலிருந்து ரோமன் லிபிக்கு மாறும்போது என்ன மாறுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது எனக்கு மிகவும் அவசியமாக உள்ளது. எழுதும் முறைமைகளை மாற்றும்போது உலகம் எப்படி மாறிவிடுகிறது.
ஏ கே ராமானுஜன்: பண்பாட்டையும் மொழியையும் பிரித்துப் பார்க்கலாம். ஆனால், ஒன்றை விட்டு இன்னொன்றைப் புரிந்துகொள்ள இயலாது. ஒரு அமைப்பாக மொழியை பிரித்துப் பார்க்க இயலும். ஆனால் முழுமையாகப் பிரித்தால், நாம் பற்றாக்குறையான மொழியியல்தான் கிடைக்கும். மொழிக்குள் முழுமையாக நுழைய பண்பாடு தேவையாக உள்ளது. மொழியை அதன் அனைத்து வடிவங்களோடும் அறிவதற்கானதாக மொழியியல் இருத்தல் வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்றாடத் தன்மையிலான மொழியைப் பற்றி அறிவதே மொழியியல். எது உருவகமாக இருக்கக்கூடும் அல்லது எது ஒரு சொல்லணி என்பது போன்ற கேள்விகளைக் கையாள்வதில் மொழியியலாளர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதற்கென அவர்கள் ஒரு சூத்திரத்தை எழுதமுடியாது. அல்லது ஒரு உருமாற்றத்தையும் செய்யமுடியாது. அப்படிச் செய்வது வேலையைக் கடினமாக்கிவிடும். அதற்கான எந்திரவியலும் பிரமாண்டமானது. பன்ச் இதழில் வந்த கார்டூனைத்தான் எனக்கு ஞாபகப்படுத்துகிறது. ஒரு அறைமுழுக்க எந்திர இணைப்புகள் பற்சக்கரங்களோடு இருக்கும். ஒரு மனிதன் வந்து பொத்தானை அழுத்த, எல்லாம் இயங்கத் தொடங்கி, பெரும் சத்தம் கேட்கும். பொத்தானை அழுத்திய மனிதன், இத்தனை பெரிய எந்திரம் தரும் சிறிய பொறியிலிருந்து, தனது சிகரெட்டைப் பொருத்துவான். சில சமயங்களில் மொழியியல் அப்படிப்பட்டது. சம்பிரதாய மொழியியலில் சமீப வருடங்களில் பெரும் வெற்றி நடந்திருக்கிறது.
கீத் டெய்லர்: தமிழ் இலக்கணவியலாளரான தொல்காப்பியருக்கு மீண்டும் சொல்வோம்.
ஏ.எல்.பெக்கெர்: மேற்குலகில் ப்ளேட்டோவுக்கும் அரிஸ்டாட்டிலுக்கும் இணையாக பெரும் சிந்தனை மற்றும் கற்பனையுடன் தமிழ் உலகத்தைத் திறந்தவர் தொல்காப்பியர். இலக்கண விதிகளை எழுதியதோடு விளக்கியவரும் கூட. அவர் எந்தக் காலகட்டத்தில் இயங்கியவர். சங்கத்துக்குப் பின்னால் வந்தவரா?
ஏ கே ராமானுஜன்: இருக்கலாம். சங்க காலத்துக்கு மத்தியில் வந்திருக்கலாம். ஐந்தாம் நூற்றாண்டிலேயே பெரிய மாற்றம் வந்துவிடுகிறது. பக்தி கவிதைகள் வந்துவிட்டன. சங்கக் கவிதைகள் பக்திக் கவிதைகள் எழுதுவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டன. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டிலேயே சங்கக் கவிதைகளை பகடி செய்யும் கவிதைகள் எழுதப்பட்டன. எனது மொழிபெயர்ப்பான Poems of Love and War நூலில், அந்தக் கவிதைகளையும் நான் தந்திருக்கிறேன். அவை முழுக்க முழுக்க நகைச்சுவைக் கவிதைகள். சமூகம் மாறத்தொடங்கிவிடுகிறது. அது உயர்குடியினர் மட்டும் புழங்கியதாக இல்லை. மரபை கேலிக்குள்ளாக்கும் கவிதைகள் நிறைய நாட்டார் கவிதைகளில் உண்டு.
ஏ.எல்.பெக்கெர்: மானுடவியலாளர் கிளிஃபோர்ட் கீர்ட்ஸ்-இன் மேற்கொள்களில் ஒன்று எனக்கு விருப்பமானது. கலையும், கலையை உள்வாங்குவதற்கான உபகரணமும் ஒரே பட்டறையில்தான் தயாரிக்கப்படுகிறது என்ற மேற்கோள்தான். தொல்காப்பியர் அதனால்தான் முக்கியமானவராகப் படுகிறார். கலையைப் புரிந்துகொள்வதற்கான கருவிகள் அவரிடம் உள்ளன. பொது வாசகர்களால் அலட்சியப்படுத்தப்படும் விவரங்களையும் முறைமைகளையும் அவர் விவரிக்கிறார். அதனாலேயே உங்கள் புத்தகங்கள் வாயிலாக தமிழ் கவிதை அனுபவத்தோடு கூடுதலாக அவற்றைப் புரிந்துகொள்வதற்கான கருவிகளும் எங்களுக்குக் கிடைக்கிறது.
ஏ கே ராமானுஜன்: அதற்குத்தான் பின்னுரையும் குறிப்புகளும் நமக்குத் தேவையாக உள்ளன. புலமைகொண்ட தமிழ் வாசகனுக்கு இதன் அவசியம் கிடையாது. ஒரு அயல்மொழி வாசகர்களை தமிழ் வாசகனுக்கு ஓரளவு பக்கத்தில் அழைத்துவருவதற்கு அவனுக்கு ஒரு பின்னணி தேவையாக உள்ளது. ஆனால், கவிதைகள் வாசகனுக்கு அறிவூட்ட வேண்டும். நான் குறைந்த எண்ணிக்கையிலான கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிடவே மாட்டேன். மொத்த மொத்தமாகவே மொழிபெயர்த்துத் தருவதை விரும்புகிறேன். இந்தக் கவிதைகள் ஒரு உலகத்தைக் கட்டுகின்றன. அவர்கள் கட்டும் உலகம் இந்தக் கவிதைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இது ஒரு வட்டம். ஒட்டுமொத்த உலகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் காரியம் அது. இரண்டாயிரம் கவிதைகளிலிருந்து நான் வெறும் இருநூறு கவிதைகளையே மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால் இந்த இருநூறும் அசலான மாதிரியாக இருக்குமளவு தேர்ந்தெடுக்கப்பட்டது. கவிதைகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு உலகின், குட்டி நகலை உருவாக்க முயற்சிக்கிறேன். நீங்கள் ஒற்றைக் கவிதையைப் படிப்பதன் மூலம் அந்த உலகம் தரும் அனுபவத்தைப் பெறவே முடியாது. ஒற்றைக்கவிதை தன்னளவில் நின்று பொருள்தராது. மற்ற கவிதைகளின் பின்னணி கொடுக்கும் சூழமைவில்தான் அது பொருள்படுகிறது.
கீத் டெய்லர்: Speaking of S’ iva நூலின் அறிமுகத்தில் ஒரு கவிதையைக் கொடுத்திருப்பீர்கள். அது தனியாகப் படிப்பதற்கு மிகவும் எளிய கவிதை அது. எந்த தொகுப்பிலும் அதைச் சேர்க்கலாம்…
ஏ கே ராமானுஜன்: இருப்பினும் அந்த ஒற்றைக் கவிதைக்கு நான் மூன்று பக்கங்கள் எழுதியிருக்கிறேன்.
கீத் டெய்லர்: ஆமாம். அதுதான் உதவுகிறது.
ஏ.எல்.பெக்கெர்: அந்தக் குறிப்பு பலவற்றையும் தெரிந்துகொள்ள உதவியாக உள்ளது.
ஏ கே ராமானுஜன்: நல்ல புலமைகொண்ட தாய்மொழியில் படிக்கும் வாசகன் அந்தக் குறிப்பிட்ட கலைச்சொல்லை அறிந்திருக்கவேண்டும்.
ஏ.எல்.பெக்கெர்: இவ்வளவு வளங்கள் கொண்ட கவிதைகள் இன்னும் நிறைய மொழிபெயர்க்கப்படாமல் இருக்க, நீங்கள் நாட்டார் கதைகளுக்கு சமீபத்தில் திரும்பியது எதற்காக?
ஏ கே ராமானுஜன்: முதல் விஷயம். அவை மிகுந்த சுவாரசியம் கொண்ட கதைகள். நாட்டார் கதைகள் குழந்தைகளின் உலகத்தை நோக்கிப் பேசுபவை. குழந்தைப்பருவ உலகத்திலிருந்து வருபவை. கவிதைகளோ பெரும்பாலும் பெரியவர்கள் உலகத்திலிருந்து வருபவை. எந்தப் பெரியவரும் நாட்டார் கதைகளிலிருந்து துண்டிக்கப்பட்டவர் அல்ல. ஐந்து வயதோ 50 வயதோ எல்லாரும் நாட்டார் கதைகளால் கவரப்படுபவர்கள்தான். அடுத்தது, நாட்டார் கதையுலகம், காவியங்கள் மற்றும் புராணங்கள் உருவாக்கிய அதிகாரபூர்வ உலகுக்கு எதிர்புள்ளியில் இயங்குவது. நாட்டார் கதைகள் காப்பியங்களின் கருத்தியல் முறைமைக்கு எதிரான அமைப்பு கொண்டவையும் கூட.
ஏ.எல்.பெக்கெர்: தந்தை மொழியிலிருந்து தாய்மொழிக்கு நகர்வது போல அல்லவா?
ஏ கே ராமானுஜன்: ஆமாம். ஆனாலும் தாய் மொழியிலும் முறையாக எழுதப்பட்ட பிரதிகள் உள்ளன. ஆனால் நாட்டார் கதைகளுக்கு எழுத்துப் பிரதிகள் இல்லை. அவை அநித்யத்தன்மை கொண்டவை. ஆனாலும், இப்பிரதிகள் நீண்டகாலம் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அப்படி வாழ்வதற்குக் காரணம் அவை தொடர்ந்து வாய்மொழியாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருப்பவை. அத்துடன் தொடர்ந்து மாறியும் வந்துள்ளன. நான் பல்வேறு மனோவியல்களில் விருப்பம் கொண்டவன். இந்த நாட்டார் கதைகளில் ஒரு பூர்விக உளவியல் உள்ளது. நாட்டார் கதைகளில் விதிகள் தொடர்ந்து நொறுக்கப்படுகின்றன. நாட்டார் கதைகளில் முறைதவறிய உறவு மிகச்சாதாரணமாக வருகிறது.
ஏ.எல்.பெக்கெர்: நீங்கள் மொழிபெயர்த்த கவிதைகளுக்கு கூடுதல் அம்சத்தைச் சேர்ப்பதைப் போல இந்தச் செயலை நீங்கள் நினைக்கிறீர்களா.
ஏ கே ராமானுஜன்: ஆமாம். சங்கத் தமிழ் கவிதைகளில், அக உலகமும் புற உலகமும் பிரிக்கப்பட்டுள்ளது. போர் புற உலகத்துக்குரியதாக உள்ளது. குடும்பம், உறவுகள் சார்ந்த கவிதைகள் காதலின் அந்தரங்க உறவுகளின் மொழியைப் பேசுகின்றன. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் பிரச்சனைகள் எல்லாம் அகப்பாடல்களாக உள்ளன. இந்த அக உலகத்தின் மொழியில் தான் நாட்டார் கதைகள் ஜீவிக்கின்றன. புராணிகங்கள் வெளியுலகத்தின் பகுதியாக உள்ளன. அவை போர்களைக் கையாள்கின்றன. எல்லாக் கடவுள்களும் பெரும் யுத்தங்களை நடத்துபவர்கள். அவர்கள் பிரபஞ்சவியல்களைக் கட்டமைத்து சமூகப் பிரச்சனைகளைக் கையாள்கிறார்கள். நாட்டார் கதைகளிலோ அவை அகவயப்படுத்தப்படுகின்றன. அந்தரங்க உறவுகள் குறித்த விவரங்களைத் தவிர பெரிய சமூக விவகாரங்களை அதில் பார்க்கமுடிவதில்லை.
ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

