நாணத்தை நடிக்க முடியுமா? இசை

என் சங்க இலக்கியக்  கல்வியின் குறிப்பிடத்தக்க ஒரு நூல் ‘கலித்தொகை’. நான் முதலில் சங்க இலக்கியத்தை அங்கேயே துவங்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. காரணம் அதன் அடிவரையறை. 50 அடிகள் வரை நீள்கிற பாடல்கள் அதில் இருந்தன. பார்க்கவே மலைப்பாய் இருந்தது. அதன் நாடகத் தன்மையையும் அப்போது என்னால் விளங்கிக் கொள்ள இயலவில்லை என்று நினைக்கிறேன். ஆகவே சின்னப் பாடல்களாக கற்றுவிட்டு பிறகு கலித்தொகைக்கு வந்தேன். இப்போது அதை வாசிக்க முடிந்தது. பரவசம் கொண்டு   வாசித்தேன் என்று சொல்லாம்.

என்னிடம் இருக்கிற கலித்தொகை பதிப்பும்  சிறந்த ஒன்று. சுப.அண்ணாமலை உரையுடன் கோவிலூர் மடாலயம் வெளியிட்டிருக்கிற மக்கள் பதிப்பு அது. பெரிய எழுத்துருவில் நிறைய விளக்கங்களுடன்  கூடியது . ஆகவே கற்க ஏதுவாய் இருப்பது. கம்பங் கூழ் குடித்து இலக்கியம் வளர்த்து வந்த காலத்தில் இளங்கோ இந்தப் புத்தகத்தை களவாடிக் கொண்டு வந்து தந்தான். அவர்  இப்போது புகழ் பெற்ற கவிஞர் என்பதால் எங்கிருந்தென்று  சொல்ல இயலாது. பிறகு அந்த நூலை அவனுக்குத் திருப்பித் தரவேயில்லை  நான். ஒரு  பருவத்தின் நினைவாக அதைப்  பாதுகாத்து வருகிறேன்.

கலித்தொகை 150 அகப் பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு கவிஞர் எனும்படிக்கு  அமைந்துள்ள நூல். இதில் குறிஞ்சிக் கலியில் உள்ள 29 பாடல்களையும்  பாடியிருப்பவர் கபிலர். கட்டுரை போல் நீண்டு செல்லும்  நெடிய பாடல்கள் இவை. இருவர்  மாறி மாறி உரையாடிக்  கொள்ளும் நாடகத் தன்மை கொண்டது. ஆயினும் கவிச்சுவை குன்றாதது.என் தனிப்பட்ட ரசனையில் குறிஞ்சிப் பாட்டினும் சிறந்தது. வரிக்கு வரி அடிக்கோடிட வைக்கும் பல பாடல்கள் கலித்தொகையில் உண்டு.

சங்க இலக்கியத்தை மேய்ந்துவிட்டு குறுக்கு விசாரணை செய்பவர்கள் “ தலைவிக்கு மட்டும்தான் காதல் வருமா? தோழிகளுக்கு காதலே வாராதா? “ என்கிற கேள்வியை மேடையில் கேட்பதுண்டு. மேடை என்றால் அதில் புரட்சிகரம் வேண்டும் என்பதற்காக கேட்கப்படும் கேள்வி இது. சங்க இலக்கியம் நாடக பாணியில் கட்டப்பட்டுள்ள ஒரு அமைப்பு. குறிஞ்சி, முல்லை போல தலைவி,  தோழி , செவிலி,  நற்றாய் என்கிற அமைப்பையும் ஒரு இலக்கண முறை போன்றே  கொள்ள வேண்டும். உ.வே.சா எழுதுகிறார்..

“ முதல், கரு, உரி என்னும் மூவகைப் பொருள் வரையறையும் கவிச்சுவையை மிகுதிப்படுத்தவே போந்ததென்று தோற்றுகிறது. உலகத்தில் குறிஞ்சி நிலத்துள்ளாரே அளவளாவுவது, பாலை நிலத்துள்ளாரே பிரிவது, முல்லை நிலத்துப் பெண்டிரே தலைவரைப் பிரிந்து ஆற்றியிருப்பது, மருத நிலத்தினரே ஊடுவது, நெய்தல் நிலத்தினரே இரங்குவது என்ற வரையறை இல்லை. ஆனால் கவிஞன் அமைக்கும் உலகத்திலோ இவ்வரையறைகள் காணப்படுகின்றன. இது நாடக வழக்காகும்”.

தோழி தலைவியின் காதலில் குறுக்கிடும் பாடலை நான் வாசித்த நினைவில்லை. ஆனால் கலித்தொகையின் ஒரு பாடலில் அது கொஞ்சமாக நிகழ்கிறது. தோழி பொய் தான் சொல்கிறாள் என்றாலும் தலைவனின் மார்பில்  மயங்கியவளைப் போல்  தான் நெடு நேரம் கிடந்தேன் என்கிறாள்.

தலைவிக்கு காதல் வந்துவிட்டது. காதல் வந்தால் என்னென்ன வருமோ அவையெல்லாம் கூடவே வந்துவிட்டன. ஆகவே தோழி அக்காதலை அறிந்துவிடுகிறாள். ஆனால் தலைவியே அதை அவள் வாயால் சொல்ல வேண்டும் என்பதற்காக பொய்யாக ஒரு கதை சொல்கிறாள்.

ஒருவன்,  அவன் யாரென்று தெரியவில்லை? தப்ப விட்ட விலங்கின் காலடித்தடம் தேடி வருவது போல் அடிக்கடி நம் இருப்பிடம் வருகிறான். அவன் வாயால் எதுவும் சொல்லவில்லை. ஆனால் காதல் நோயால்  துன்பத்தில் உழல்பவன் போல் காணப்பட்டான்.  எனக்கும் அவன் மேல் இரக்கம் பிறந்தது. இப்படியே விட்டால் அவன் இறந்துவிடுவான் என்பதால் நானே நாணத்தை துறந்து காதல் செய்தேன் என்பது போல் இப்பாடலின் துவக்கத்தில் சொல்கிறாள் தோழி. சொல்லிவிட்டு தான் ஊசலாடிய  கதையைச் சொல்கிறாள்.

” ………………….

 நாண் இன்மை  செய்தேன் நறுநுதால்! ஏனல்

இனக்கிளி யாம்  கடிந்து ஓம்பும் புனத்து அயல்

ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை

“ ஐய! சிறிது என்னை ஊக்கி” எனக் கூறத்

“ தையால் , நன்று” என்று அவன் ஊக்கக், கைநெகிழ்பு

பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பின்;வாயாச்செத்து

ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல்

மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்,; ஆயிடை

மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென

“ ஒண்குழாய் செல்க” எனக் கூறி விடும் பண்பின்

அங்கண் உடையன் அவன்.

( ஊக்குதல்- ஆட்டுதல், வாயாச் செத்து- உண்மை என்று நம்பி, அங்கண்- நற்பண்பு)

( கலித்தொகை; 37)

ஒரு நாள் நாம் கிளி கடிந்து காக்கும் தினைப்புனத்திற்கு அருகே ஊசலாடிக் கொண்டிருந்தேன்.  அப்போது அங்கு வந்த அவனிடம் ஊஞ்சலை கொஞ்சம் ஆட்டி விடச் சொன்னேன். அவனும் அப்படியே செய்தான். அப்போது நான் கைதவறியவள் போலே அவன் மீது  விழுந்தேன். அவனும் பதறிப் போய் என்னை இறுக அணைத்துக் காத்தான்.  மயக்கம் கண்டவளைப் போல் நடித்துக் கொண்டு  நான் நெடுநேரம் அவன் மார்பில் கிடந்தேன். அப்படி நடிக்கவில்லையெனில் அவன் அவ்வளவு நேரம் தாங்கிக் கொண்டிருக்க மாட்டான்.” விரைந்து வீடு செல்க” என்று உடனே என்னை அனுப்பி வைத்து விடும் பண்பாளன் அவன்

இந்தப் பாடலில்  இரண்டு இடங்களில் வருகிற ‘ ஒய்’ என்கிற ஒலிக்குறிப்பு  என் கவனத்தை ஈர்த்தது. விழபவளை தலைவன்  பற்றும் இடத்திலும், தலைவியை “உடனே வீடு செல்க” என்று அனுப்பும் இடத்திலும். விரைவு கருதி சொல்லப்பட்ட ஓசை இது. இரண்டாவது முறை மேலும் அழகாக ஒலிக்கிறது. தன் மேல் விழுந்து புரண்ட அழகியை ஒரு நொடி கூட தாமதிக்காமல் விரைந்து வீட்டிற்கு அனுப்பி விடும் பண்பினன் என்பதைச் சொல்ல அந்த ‘ ஒய்” பெரிதும் உதவியுள்ளது. சமயங்களில் ஓசை சொல்லை வென்று விடுகிறது. அப்போது இசை,  இயலைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது.

இதில்  தன் காதல்கதையை  தலைவியிடம் சொல்லி அவள் காதல் கதையை  அறிய முயல்கிறாள் தோழி என்கிறது இன்னொரு  உரை. அந்த உரைப்படி இது தோழிக்கும் தலைவனுக்கும் நிகழ்ந்ததல்ல. தோழிக்கும் வேறொரு ஆணுக்கும் நிகழ்ந்தது. அதுவும் பொய்யாக நிகழ்ந்தது.

இரவுக்குறியின் ஆபத்துகளை சங்கத்தின் பல பாடல்கள் பேசுகின்றன. ஆபத்தான இரவுப் பொழுதில்  தலைவன் தன்னை வந்து சந்தித்துச் செல்வதைக் குறித்து  தலைவியர் வருந்திக் கண்ணீர் வடிக்கிறார்கள். தோழியும் இரவிக்குறியின் ஆபத்துகளைச் சுட்டியே தலைவனை திருமணத்திற்கு வற்புறுத்துகிறாள்.

இந்தப் பாடலில் இரவின்  எல்லா விபரீதங்களையும் கடந்து  தலைவன் தலைவியை சந்திக்கும் போது அவள் அடையும் மகிழ்ச்சி பேசப்படுகிறது. அந்த சந்திப்பு மகிழ்ச்சியே ஆனாலும் நெடுநாள் நீடிக்க இயலாதது. ஆகவே தோழி தலைவனை திருமணத்திற்கு வற்புறுத்த, அவனும் அவ்வாறே மணம் முடிக்க வருகிறான். இதைத் தோழி தலைவியிடம் சொல்கிறாள்..

தலைவனைக் காணாத போது தலைவி எப்படியிருந்தாள் என்றும் இரவில் அவன்   வந்த சென்ற பின்  எப்படிப் பொலிந்தாள் என்றும் சொல்கிறாள்..

 ஆரிடை என்னாய் நீ, அரவஞ்சாய் வந்தக்கால்,

நீரற்ற புலமேபோல் புல்லென்றாள் வைகறை

கார்பெற்ற புலமேபோல் கவின் பெறும்

 ( ஆரிடை- அரிய கடிய வழி)

ஆபத்தான வழி என்று நீ பின் வாங்கவில்லை. அரவங்களுக்கும் அஞ்சவில்லை. நீரற்ற பயிர்  போல் வாடியிருந்தவள், நீ வந்து சென்ற பின்  கார் பெற்ற நிலம் போல கவின் பெற்றாள்.

இருளிடை என்னாய் நீ, இரவு அஞ்சாய் வந்தக்கால்

பொருளில்லான் இளமைபோல் புல்லென்றாள் வைகறை

அருள்வல்லான் ஆக்கம் போல்  அணிபெறும்

( ஆக்கம்- செல்வம்)

அச்சமூட்டும் இருளென்று பாராமல் இரவு நீ வந்து விட்டாய்.  உன்னைக் காணாது  வறுமையில் துவளும் இளமைக்காலம் போல் வாடியிருந்த அவள் வைகறையிலோ அருளாளனின்    செல்வம் போல் பொலிந்துவிட்டாள்.

மறம் திருந்தார் என்னாய் நீ, மலையிடை வந்தக்கால்

அறஞ்சாரான் மூப்பேபோல் அழிதக்காள் வைகறை

திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்

( கலி; 38)

உன் வழியில் கொலை கொள்ளைகள் புரியும் கள்வர் கூட்டம் உண்டு.  ஆனால் அதையெல்லாம்  நீ பொருட்படுத்தவில்லை . ஆகவே அற வழிப்படாதான்  மூப்பைப் போல் துன்பத்தில் அழிந்திருந்தவள்,விடியற் பொழுதிலோ திறம்  மிக்க ஒருவனிடம்  சேர்ந்துவிட்ட  செல்வம் எப்படிச்  சீர் பெறுமோ   அப்படி ஆகிவிடாள்.

அளிப்பவர் குறைவதில்லை மாறாகப்  பெறுகிறார். வழங்கி வழங்கிப் பொலிவதே வளம்.  அவ்வளவு வளம் பெறுகிறாள் தலைவி!

செல்வம் , திறன் மிக்க ஒருவனுடன்  சேரும் போது எப்படிச் சீர் பெறுமோ அவ்வளவு சீர் பெற்றாள் தலைவி!

“அறஞ்சாரன் மூப்பு”  என்பது சற்றே அஞ்சத்தக்க , சாபம் போன்ற ஒரு வரி.

 “ அதனினும் கொடிது இளமையில்  வறுமை” என்கிற ஒளவையாரின் வரியை நான் வியந்து வியந்து பல முறை எழுதியுள்ளேன்.  ஒளவைக்கு முன்பே கபிலர் அதை எழுதி வைத்திருப்பதை  இங்கு காண முடிகிறது

இந்தப் பாடலில் காதலைவிட அறக்கருத்துக்கள் அதிகம் மின்னக் காணலாம். நான் முன்பே எழுதியது போல் சங்கப் பாடல்களை அறம், புறம் என்று அவ்வளவு துல்லியமாகப் பிரித்து  விட முடியாது. ஒரு காதல் கவிதைக்குள் வரிக்கு வரி எவ்வளவு  அறவுரைகள். பொதுவாக அகக்கவிதைக்குள் புறத்தை அமர வைப்பது ஆபத்தான ஒன்று. அது ஒழுங்காக அமராமல் துருத்திக் கொண்டு விடும்  ஆபத்துண்டு. ஆனால் இந்தக் கவிதைக்குள்  இரண்டும் சரிவரப் புணர்ந்துள்ளதாகவே  தோன்றுகிறது அல்லது நான்தான் அறவுரைகளுக்குச் செவி சாய்க்கும் வயதை தொட்டு விட்டேனோ என்னவோ?

பொதுவாகவே எனக்கு அறநூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வமுண்டு. நான் அறவாணன் இல்லை என்ற போதிலும். ஏனோ அவற்றை வாசிக்கையில்  புல்லரிக்கவே செய்கிறது. வாசிக்கும் அந்தத் தருணத்திலாவது நான் நிஜமாகவே ‘ சத்தியமூர்த்தி’ ஆகிவிடுகிறேன். கண்கள் சுரந்து ததும்புவதைத்  தடுக்க முடிவதில்லை. நம் கண் முன்னே எத்தனை முறைகள் அறம் பிசகக் காண்கிறோம். நாமும் எத்தனை முறைகள்தான் அறம் பிசகுகிறோம் ஆனாலும் நாம் பற்றிக் கொள்ள அதனினும் வேறில்லை.

ஒரு சராசரி மனிதனால்,  தானே தவறென்று உணரும் ஒன்றை ஒரு போதும் செய்துவிட முடியாதென்றே  நினைக்கிறேன். முதலில் அதை எப்பாடு பட்டேனும் ‘ சரி ‘ ஆக்கி விட வேண்டிய  இக்கட்டில் அவன் இருக்கிறான். யோசித்துப் பார்த்தால் நாம் நம்முடைய அறப்பிசகுகளைக் கூட ஏதேனும் ஒரு வகையில் அறமாக்கித்தான் அணிந்து கொள்கிறோம் என்று தோன்றுகிறது.

‘  உள்ளுறை’  சங்கப் பாடல்களின் அழகியல்களில் ஒன்று. கபிலரிடமும் அது கட்டாயம் இருக்கும். இந்தப்  பாடலில் ஒரு’ உள்ளுறை’ சொல்லப்படுகிறது. அது ஏற்கும் படிதான் உள்ளது. ஆனால் சமயங்களில் உரையாசிரியர்கள் வரிக்கு வரி ‘உள்ளுறை’ கண்டுபிடிக்க முயல்கிறார்கள். எல்லாவற்றையும் முழு மனதோடு ஏற்கமுடிவதில்லை. இந்தப் பாடலின் உள்ளுறை..

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப் பொலி தடக்கையின் கீழ் புகுத்து, அம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல

உறுபுலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்

கறுவு கொண்டு அதன்முதல் குத்திய மதயானை

நீடு இரு விடரகம் சிலம்பக் கூஉயத்தன் 

கோடு புய்க்கல்லாது  உழக்கும் நாட!

                                ( கலி; 38)

( கறுவுதல்- சினத்தல், கூஉய்- அழைத்தல் , இங்கு அலறல்)

இமயத்தை  வில்லாக்கிய , கங்கையை சடையில் ஏந்திய சிவ பெருமான் உமையோடு அமர்ந்திருந்த கயிலைமலையை தூக்க முயன்று அதன் அடியில் தன் வலிய கைகளை செருகிய இராவணன்,  அம்மலையை எடுக்க முடியாமல், தன் கைகளையும் உருவ முடியாமல்  வருந்தியது போல , புலி போல பூத்து நிற்கும் வேங்கை மரத்தின் அடியைத்  தன் தந்தத்தால் குத்திய சினம்முற்றிய யானை,  அதை எடுக்க முடியாமல் அலறித் துடிக்கும் நாட்டைச் சேர்ந்த தலைவனே! என்று விளிக்கப்படுகிறான் தலைவன்.

‘ தலைவியை மணம் முடித்து இல்லற இன்பத்தை நிம்மதியாக அனுபவித்து மகிழாமல்,  எண்ணற்ற ஆபத்துகளுக்கிடையே இரவுக்குறியில் தலைவியைச்  சந்தித்து துன்பம் கொள்ளும் தலைவனே!’ ’ என்பதே மேற்சொன்ன வரிகளில் உள்ள உள்ளுறை.

 ‘ அநாதி  பழம்பொருள்’ இந்தப் பாடலில் ‘அந்தணன்’  என்று விளிக்கப்படக் காணலாம். அந்தணன் என்கிற சொல்லுக்கு “பார்ப்பான், பார்ப்பனன், வியாழன், பிரமன், சிவன்”  என்று பொருள் சொல்கிறது சங்க இலக்கிய அகராதி.

தலைவியின் உறவினர் அவளைப் பெண் கேட்டு வருகிறார்கள். இனி தாமதிக்க இயலாது, அப்போது தோழி செவிலிக்கு தலைவியின் காதலை வெளிப்படுத்துகிறாள். செவிலி நற்றாய்க்கும், நற்றாய் அவ்வீட்டு ஆண்களுக்கும் வெளிப்படுத்துகிறாள்.

சினந்து எழும் அண்ணன்கள் கடைசியில்  ஒரு வழியாக  காதலுக்குச்  சம்மதம் தெரிவிக்கிறார்கள்.  தோழியும் தலைவியும்  குரவையாடி கடவுளை வழிபட்டு மகிழ்கின்றனர். நிகழ்ந்த  எல்லாவற்றையும் ஒரு கதை போல் சொல்கிறாள் தோழி.

தலைவி எங்களோடு நீராடிக் கொண்டிருந்தாள். திடீரென தளர்ந்து விட்ட  அவளை வெள்ளம் அடித்துப் போனது. அங்கு வந்த ஒருவன் அவளைக்  காப்பாற்றி கரை சேர்த்தான்.அப்போது அவன் அகன்ற மார்பு , அவள் முலைகளைத் தழுவியது.

அப்படித் தழுவியதுமே அவள் அவனை காதலித்துவிட்டாளாம். ஏனெனில் தழுவியவனைத் தவிர இன்னொருவனை அவள் மணக்க முடியாது.

“………………அகன் அகலம்

வருமுலை புணர்ந்தன என்பதால் என் தோழி

அருமழை தரல் வேண்டில் தருகிற்கும் பெருமையளே “

         ( கலி; 39)

‘பெய்யெனப் பெய்யும் மழை’ எனும் படிக்கு  பெரும் பெருமையள் அவள். கற்புக்கரசிகளால் மழை பொழிகிறதோ இல்லையோ, ஒரு  மேஜிக்கல் ரியலிசம்  போல அந்த மேட்டர் நன்றாகத்தான் இருக்கிறது.

மேற்சொன்ன வரிகளில் ‘காதல் கொண்டாள் ‘ என்கிற வரியே இல்லை’ என்பதைக் கவனிக்கலாம். அங்கு ஒரு தாவல் உள்ளது. ஒருத்தன் ஒருத்தியைத் தழுவுகிறான் தழுவப்பட்டவளோ கற்பின் கனலி. அவ்வளவுதான் உள்ளது.

‘பெய்யெனப் பெய்யும் மழை ‘ மட்டுமல்ல,  காமக் கடும் புனல் என்கிற வள்ளுவரின் வாக்கும் இப்பாடலில் அய்யனுக்கு முன்பே  இடம் பெற்றுள்ளது.

தலைவியின் காதலை ஏற்காது வீட்டார் அறம் பிசகினால் அம்மலையூரில் என்னென்ன நிகழும் என்று சொல்கிறாள் தோழி.

“ சிறுகுடியீரே! சிறுகுடியீரே!

வள்ளி கீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்

அல்ல புரிந்து அழுகலான்”

           ( கலி; 39)

வள்ளி , கிழங்கு விடா. மலையுச்சி  தேன் சேரா. கொல்லையில் தினை  எழா.

“ …. மென்தோட் குறவர் மடமகளிர்

தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும்

தாம்  பிழையார் தாம் தொடுத்த கோல்”

                 ( கலி; 39)

எந்த வீட்டில்  கணவனைத் தொழுதெழும் படிக்கு பெண் கற்போடு இருக்கிறாளோ, அந்த வீட்டின் ஆண்களுக்கு வேட்டையில் ஒரு போதும் குறி தப்புவதில்லை.

கவிஞரே!  ஆண்களின் வீரத்திற்கும் அவன் காரணமில்லையெனில், இவ்வளவு பரந்த உலகில் ஆண் கூட்டம் மொத்தமும் என்னதான் செய்து கொண்டிருக்கிறது? என்னதான் செய்ய வேண்டும்?

தலைவி பாடுகிறாள்….திருமணம் நிகழப் போகிறது. இனி புணர்ச்சி நனவில் நடக்கப் போகிறது. ஆக  கனவில் இனி அது நிகழாதல்லவா?

 நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?

நனவில் புணர்ச்சி நடக்கலும்  ஆங்கே

கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?

                             ( கலி; 39)

இந்த வரிக்கு” இனி கனவிற்கு வேலையில்லையல்லவா? “ என்பதாக  உரை சொல்கிறார்கள். ஆனால் தலைவியின் கூற்றில் கொஞ்சம் ஏக்கமும் தொனிப்பதாக நான் அதை நீட்ட விரும்புகிறேன். கனவிற் புணர்ச்சி,  நனவிற் புணர்ச்சியை விடவும்  நனிசிறந்தது என்று காதலர் சொல்லக் கேட்டுள்ளேன்.” திருட்டு மாங்காய்” என்கிற பதம் நம் முன்னோர் ஆண்டு அனுபவித்து உருவாக்கி வைத்த ஒன்றல்லவா?

மலை என்கிற சொல்லை வரைந்து வைத்ததைப் போல் ஒரு விளி சொல்கிறார் கபிலர்…”விண்தோய்கல்”. கவிதை வாசிக்கும் பரவசத்துடன் அகராதிகளை வாசிப்பவன் நான். யானையை ‘ நடைமலை’ என்கிறது பழைய அகராதி ஒன்று. மலையை ‘நீலம்’ என்கிறது அபிதான சிந்தாமணி. மலை எனில் ‘இறும்பூது ‘ என்கிறது எதுகை அகராதி.

தோழி பாடுகிறாள்..

“ விண்தோய்கல் நாடனும் நீயும் வதுவையுள்

பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர் மற்கொலோ?

பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங்கேண்மை

கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன்  கொலோ?

       ( கலி; 39)

நீயும் தலைவனும் திருமணத்தின் போது ஒன்றுமே அறியாதவர்கள் போல் நடிப்பீர்கள் அல்லவா?

நானும் உங்கள் பழைய கதையெல்லாம் அறியாதவள் போன்றே ஒளிப்பேன் அல்லவா?

இவ்வளவு பாடுபட்டு, இவ்வளவு கண்ணீர் சிந்தி கடைசியில் உன் திருமணம் நிகழ்கிறது. தலைவன் மணக்கோலத்தில்  ஜொலி ஜொலிப்பான். அப்போது அவன் மணக்கோலம்

காணாமல் நாணத்தால் மூடிக்கொள்ளும் உன் கண்களும் என்னதான்  கண்களோ? என்று கேட்கிறாள் தோழி

இதற்குத்  தலைவி ஒரு பதில் சொல்கிறாள். கலித்தொகையை துவக்கிய போதிருந்தே கபிலர் என்னிடம் ‘கெட்ட வார்த்தைகளால்’ வசை வாங்கிக் கொண்டேதான் இருக்கிறார். இருப்பினும் இந்தப் பதிலின் போது புத்தகத்தை மூடி தூர  வீசி விட்டேன். நான் சற்றும் எதிர்பாராத பதில் இது. சங்க இலக்கியப் பரப்பு முழுக்க,   தான் வேறு தலைவி வேறு அல்ல எனும்  படிக்கு,  அவளோடே சேர்ந்து அழுது, அவளோடே சேர்ந்து மகிழும்  அத்தனை தோழிகளுக்கும் சேர்த்து அணி செய்யும் பதில் இது. ஒரு அணைப்பு போன்ற,  ஒரு முத்தம் போன்ற, நன்றி போன்ற,  ததும்பும் கண்ணீர் போன்ற ஒரு பதில்..

தலைவி சொல்கிறாள்..

“ நின் கண்ணாற் காண்பென்மன் யான்”

“ மைதவழ் வெற்பன் மண அணி காணாமல்

கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ?

என்னைமன், நின் கண்ணாற் காண்பென்மன் யான்”

                          ( கலி; 39)

( என்னைமன்- என் தலைவனின் மணக்கோலம்)

இந்தப் பாடலில் நாணத்தைச்  சிறப்பிக்கும்  வரி ஒன்று வருகிறது: “ தம்நாண் தாம்தாங்குவார் என்னோற்றனர் கொல்?”

நாணத்தை அனுபவிக்கும் தலைவி தானே சொல்லும் வரி இது.

நாணத்தை நடிக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். எவ்வளவு முயன்றாலும் நாணத்தை போலி செய்வது கடினம் என்றே நினைக்கிறேன். திரையில் கூட சிறந்த நாணக்காட்சிகள் குறைவே. நமது நாயகிகள் எவ்வளவு முயன்றாலும்,   நாணத்திற்கு முன்னே, அங்கு பொய் வந்து நிற்கக் காணலாம்.

நாணம் கிழ்ச்சியைக் காட்டிலும் உயர்ந்தது. மகிழ்ச்சியைக் காட்டிலும் தூயது.” என்னோற்றனர் கொல்” என்கிறாள்.  தாளவே முடியாததை தாங்கி நிற்கும் ஒரு கதி அது. ஆம், நாணம் நம்மை வந்தடைய தவம்தான் செய்திருக்க வேண்டும் .

 நீங்கள் கடைசியாக எப்போது நாணப் பட்டீர்கள்?

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss