
1
வேளை கெட்ட வேளையில்
கூவும்
குயில்
மலர்களின்
அலமாரிகளில்
அடுக்கப்பட்ட
வாசனைத் தைலப்புட்டிகளை
கவிழ்த்துவிடுகிறது
தாங்க முடியாத
நறுமணம்.
000
2
400 ஆண்டுகளுக்கு முன்னர்
கிழக்குக் கடற்கரையில்
கரையொதுங்கியது
ஒரு மகானின் சவப்பேழை.
தற்போது அந்த பேழையைச்
சுற்றி சுவர்கள் எழுப்பி
பிரார்த்தனை இடமாக்கியுள்ளனர்.
தர்காவுக்கு வெளியே
கருத்த ஒற்றைப் பனைகளினூடாக
பின்மதிய வேளையில்
பேருந்திறங்கி
வழிபட வரும் பெண்கள்
பெருமூச்சுகள்
விசும்பல்களோடு
மறுகி முனங்கும் ஸலாவத்.
சமாதி மாட முகட்டில் பரப்பப்பட்டதில்
தலா ஒரு மலர்
அவர்களது ஒவ்வொரு இறைஞ்சலுக்குமென
தன்
நுண் வாசனைப்புட்டியை
உடைத்து
அங்கே பரப்புவது
தனித்தனி சுகந்தம்.
000
3
ரோஜாக்களில்
சடலங்களின் வீச்சத்தையும்
சடலங்களில்
ரோஜாக்களின் சுகந்தத்தையும்
கண்டுவிட்டாள்
ஜஹன்னாரா…
மொகலாயர் பரம்பரையில்
பூரண ஞானத்தை எட்டியவள்
தன் கல்லறையை
பச்சைப்புல்லே
போர்த்தட்டுமென விட்டுவிட்டாள்.
எதுவும்
நிரப்பிக்கொள்ளலாமென
ஒரு கூடு
ஒரு பேழை
இன்மையில்
வாய் திறந்திருக்கிறது
இன்றும்.
000
4
துங்கபத்திரை ஆறு
வளமாய் செல்லும்போது
பரிசல்கள்
ஆற்றிடை சிறு தீவான
நவபிருந்தாவனத்துக்கு
பயணம் கிளம்பும் படித்துறை
அமைந்திருக்கும் இடத்தின் பெயர்
ஆனேகுந்தி…
சிறிதும் பெரிதுமாய் நெடுக
பாறைகள் பரவியிருக்கும்
ஆனேகுந்தியில்
முதலைகள் இருக்குமென்று
செய்தி.
நான்
முதலைகளைப் பார்த்ததில்லை.
துங்கபத்திரை
கடக்கும்
அப்படித்துறையில்தான்
அந்தி கருக்கும் மஞ்சள்
ஆற்றையும் வெளியையும்
இழைத்துச் சுடரவிட
யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே
என்ற
அந்த அழியாப் பாடலுக்கு
ஷோபனா
தம்புராவை மீட்டியபடி நடித்திருக்கிறாள்.
000
5
திருமலைக்கோயிலின்
கிழக்கு பார்த்த
கம்பிகளே அற்ற கல் ஜன்னலில்
அமர்ந்து
ஒலிக்கும் நாதஸ்வரம்
தன் கைகளை நீ…ட்….டி
மலையடியில் பச்சையாய்
பரந்திருக்கும் நெற்பயிர்கள்
அடிவார மண்டபத்தில்
படுத்திருக்கும் ஆடுகள்
தலைகளைக் கோதும்
ஒரு முன் அந்தி எழுதிய
அழியாச் சித்திரம்.
000
ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

