
Caspar David Friedrich (1808-10)
சென்ற கோடை விடுமுறையில் நான் மலேசியாவில் உள்ள தியோமான் தீவுக்குச் சென்றிருந்தேன். அடர்ந்த மழைக்காடுகள் நிறைந்த நிலப்பரப்பைக் கொண்ட தியோமான் பல குட்டித் தீவுகளை உள்ளடக்கியது . அந்தத் தீவுகளில் கடலடியில் பவளப் பாறைகள் பரவி கிடக்கும். வருடம் முழுவதும் நீர் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங் போன்றவற்றில் ஈடுபட அங்கு செல்வார்கள்.
நீர் மீது அச்சங் கொண்ட நான் அங்கு ஸ்நோர்க்கெலிங் என்னும் கடலடி நீச்சல் விளையாட்டில் ஈடுபடத் துணிந்தேன்.
நீரில் மூழ்காமல் காக்கும் ரப்பர் கவசம், மிதவை என்று சகல பாதுகாப்புடன் இருந்தாலும் உடனடியாக நீருக்குள் இறங்காமல் கடற்கரையிலேயே வெகுநேரம் அமர்ந்திருந்தேன். “கடலுக்கு பெயர் வைக்க வேண்டும், இல்லை கடலே போதுமா” என்ற பிரான்ஸிஸ் கிருபாவின் வரி நினைவுக்கு வந்தது .
சுற்றிலும் மணலில் விலங்குகளின் எலும்புகளைப் போல உடைந்த பவளப் பாறைகள் சிதறிக் கிடந்தன.
எனக்கு முன் கடல் ஒரு பெரிய படுதாவாக விரிந்து கிடந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை வெயில் , வைரச்சுடரென கடலின் மீது பொழிந்து கொண்டிருந்தது. பச்சைநிறத்தில் கட்டி கற்கண்டைச் செதுக்கி வைத்ததைப் போல இருந்தது கடலுடைய மேற்பரப்பு. அலைகளின் கூர்முனைகள் சூரிய ஒளி பட்டு ஒளிர்ந்தன. கண் கூசச் செய்யும் வெயிலில் சுற்றிலும் அலையடிக்க நீரில் வெறுமனே அமர்ந்திருந்தேன் . ஒரு பெரிய அலை வந்து முழுவதுமாய் என்னை நனைத்தது.
அடுத்தடுத்து அலைகள் மேலே வந்து மோத மெல்ல அச்சத்தின் கனம் குறைவதைப் போல உணர்ந்தேன்.
கடற்கரையில் தலைக்குமேல் கடலை கவிழ்த்து போட்டதுப்போல் வானம் நீலமாய் விரிந்து கிடக்க, நம்மை செயலிழக்கச் செய்யும் அச்சம் சார்ந்து யோசனை எழுந்தது. இத்தகைய அச்சத்துக்கு அடிப்படை, வாழ்வை முடிந்தவரை நம் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க எண்ணுவதே என்று தோன்றியது.
பயம் என்பது வேறொன்றுமில்லை, நமக்கு நிகழும் அல்லது நிகழப் போகும் எதன் மீதும் நமக்கு கட்டுபாடு இல்லை என்பதை உணர்வது. நாம் எப்போதும் நமது பாதங்கள் உறுதியான நிலத்தில் பதிந்து இருப்பதையே விரும்புகிறோம். ஒவ்வொரு அடியையும் அளந்து பார்த்து எச்சரிக்கையுடன் எடுத்து வைப்பதையே விரும்புகிறோம். ஆனால் கடல் அப்படிப்பட்ட நிச்சயத்தையோ உறுதியையோ நமக்கு அளிப்பதில்லை .
கடலில் நீரில் மூழ்காமல் என்னை காக்கும் வழி , அதை எதிர்த்து போரிட்டு கட்டுப்படுத்த முயலாமல் அதன் போக்கில் சென்று அதனூடே பயணிப்பது என்பது புரிந்தது. இப்போது வெயில் அத்தனை உறைக்கவில்லை . நீருக்குள் இறங்குவது என்று தீர்மானித்தேன்.
கரையோரமாக அதிக ஆழமற்ற இடத்தில் பாதுகாப்பு கவசங்களுடன் இறங்கினேன். மெல்ல மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு நீருக்குள் மூழ்கினேன்.
மூழ்கியவுடன் கடலடியில் நான் கண்ட காட்சியை உன்னதம் என்றும் , அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வை கழிபேருவகை என்றும் சொல்லலாம். ஒரு உன்னத அனுபவத்தைப் பற்றி பேசும் எமர்சன் “நான் முழுமையான பேருவகையை அனுபவித்தேன். அச்சத்தின் விளிம்பைத் தொடும் அளவுக்கு மகிழ்ச்சியில் நிறைந்திருந்தேன்” என்கிறார். கிட்டத்தட்ட அதைப் போன்ற ஒரு உணர்வு.
மாபெரும் மரகதப்பாறையாக ஒளிர்ந்து கொண்டிருந்த கடலுக்கடியில் முற்றிலும் வேறொரு உலகம் காத்திருந்தது. வர்ணங்களாலான ஒரு மாய உலகம். ஆயிரக்கணக்கான மீன்கள் கூட்டம் கூட்டமாய்க் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தன. எண்ணற்ற வண்ணங்கள், எண்ணற்ற வடிவங்கள் புள்ளிகள் , கோடுகள், கட்டங்கள் என உடல்களில் பலவிதமான வடிவங்களைத் தாங்கிய மீன்கள் சிறிதும் பெரிதுமாய்ப் பவளப் பாறைகளுக்கிடையில் நீந்திக் கொண்டிருந்தன. ஊதா , மஞ்சள், சிவப்பு என அடர்நிறங்களில் அலங்கரித்த மணப்பெண்ணாகப் பவளப்பாறைகள் நீருக்குள் மெல்ல அசைந்தன.
முதலில் அதிக நேரம் மூச்சை கட்டுப்படுத்த தெரியாமல் திணறினேன். ஓரிரு விநாடிகளுக்கு மேல் நீருக்கடியில் இருக்க இயவில்லை. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த ஸ்நோர்க்கெலிங் கருவியை பயன்படுத்தி மூச்சு விடும் நுட்பம் புரிந்தது. இன்னும் ஆழமாக கடலுக்குள் நீந்த தொடங்கினேன்.
தண்ணீருக்குள் மூச்சு விட பழகிய பின் நீண்ட நேரம் நீருக்குள் இருப்பது சிரமமாக இல்லை. என்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான மீன்கள் உயிருள்ள ஒற்றைச் சிந்தனையைப் போல ஒருங்கிணைப்புடன் நகர்ந்தன.
மயில் கழுத்து நிறத்தில் ஒரு மீன் என் கன்னத்தை உரசியபடி சென்றது. இன்னொரு மீன் என் தோள் வளைவில் நுழைந்து பின்னங்கழுத்தை நீந்திக் கடந்தது. இரண்டு உள்ளங்கைகளையும் நீருக்குள் முழுதும் மூடாமல் குவித்தேன். தந்த நிறத்தில் குட்டி குட்டியாய் மீன்கள் உள்ளங்கையை தங்களது மூக்கால் மோதின. சாம்பல் நிற உடலில் ரோஜாப்பூ நிறத்தைக் கரைத்துத் தெளித்ததைப் போன்ற தோற்றமளித்த சற்று அகலமான மீன் என் முகத்துக்கு அருகே வந்து என் கண்களை நேராகப் பார்த்தது.
மருதாணி போட்ட உள்ளங்கைகளை ஒத்தச் சிவப்பில் ஒரு மீன்கூட்டம் காற்றில் தழல் அசைவது போல நீந்திச் சென்றது. குட்டிச் சுறாக்கள் அங்குமிங்கும் பயமின்றித் திரிந்தன. சங்கு சங்காய் அவற்றைச் சுற்றி அத்தனை மீன்கள். இடதும் வலதும் முன்னும் பின்னும் நிற்காமல் அலைந்து கொண்டிருந்தன மீன்கள். ஒரு கணம் கூட சோம்பி விடாத பரபரப்பான இயக்கம்.
நீருக்கடியில் மூழ்கியபடி மீன்களோடு மீனாக மிதப்பது மிகப் பெரிய பரவசத்தை அளித்தது. உடல் எடையற்றுப் போக , நீருக்குள் விழுந்த இலையொன்று அலைகளால் அடித்துச் செல்வது போல் என்னை மறந்து நீருக்குள் மிதக்கத் தொடங்கியிருந்தேன். கடல் ஒரு மாபெரும் மீன்தொட்டியாகவும் நான் அதிலொரு மீனென நீந்தித் திளைப்பதாகவும் தோன்றியது. எத்தனை பெரிய அனுபவம் ? ஆனால் அது ஏன் அச்சமூட்டுவதாகவும் உள்ளது?
தனது தீர்ப்பாற்றல் பற்றிய திறனாய்வு (Critique of the power of judgement) என்னும் நூலிலும், பின்னர் நடைமுறை பார்வையில் மானுடவியல் என்னும் நூலிலும் இம்மானுவேல் காண்ட் உன்னதத்தை (The Sublime) விவரிக்கிறார். ‘உன்னதம்’ என்பது புலனுணர்வு சார்ந்த ஒரு அழகியல் அனுபவமாகும்.

வாழ்க்கையில் மறக்க முடியாத பல தருணங்கள் நம்முள் ஆழ்ந்த வியப்பையும் அச்சத்தையும் எழுப்புகின்றன. அப்படிப்பட்ட அனுபவங்களையே “உன்னதமானவை ” (The Sublime) என்று அவர் அழைக்கிறார் . பிரமிப்பு தான் ஆனால் அச்சம் கலந்த பிரமிப்பு. உன்னத அனுபவங்கள் நமக்கு ஒரே நேரத்தில் மிரட்சியையும் மெய்மறத்தலையும் தருகின்றன. அவை நம்மை மீறிய ஒரு ஆற்றலின் முன்னால் நம்மைச் சக்தியற்று நிற்கச் செய்கின்றன. அவற்றையே பேரனுபவங்கள் என்றும் பெருந்தரிசனங்கள் என்றும் அழைக்கிறோம். காண்ட் அழகு (Beauty) என்பதை இணக்கம், இன்பம் மற்றும் அமைதி உணர்வைத் தூண்டும் ஒன்றாகவும் உன்னதம் என்பதை வியப்பு மற்றும் பிரம்மாண்டத்தின் அனுபவமாகவும் வரையறுக்கிறார். கலை அல்லது இயற்கை போன்ற நம் புலன்களைக் கவரும் எதுவொன்றிலும் அழகு காணப்படுகிறது. அழகு என்பது அளவு , நுட்பம் , மற்றும் ஈர்ப்பு ஆகியவற்றால் அளக்கப்படுகிறது. அது பார்ப்பவருக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல் சிந்திக்கவும் ரசிக்கவும் வைக்கும் ஓர் அழகியல் அனுபவமாகும். மறுபுறம் அச்சத்தையும் அசௌகரியத்தையும் ஒரு சேர அளிக்க கூடிய அழகியல் அனுபவங்களே உன்னத அனுபவங்கள் . கான்ட் (Kant) உன்னதத்தை ஒரு “எதிர்மறை இன்பம்” (negative pleasure) என்று கருதுகிறார்.
இது பெரும்பாலும் வானுயர்ந்த மலைகள் அல்லது சீற்றம் கொண்ட கடல்கள் போன்ற பரந்த சக்திவாய்ந்த நிகழ்வுகளால் தூண்டப்படுகிறது. உன்னத அனுபவங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார் காண்ட்.
ஒரு அனுபவம் நமது புலன்களுக்கு அளவிடற்கரியதாக இருப்பதை கணித ரீதியிலான உன்னதம்( The Mathematical Sublime) என்கிறார் காண்ட் .
மேகமற்ற ஒரு இரவில் விரிந்து கிடக்கும், நட்சத்திரங்கள் நிறைந்த வான வெளியை காணும் அனுபவத்தை இதற்கு உதாரணமாக கூறலாம் . கணித ரீதியான உன்னதத்தின் போது, அதை அனுபவிப்பவர் காட்சி புலனுணர்வால் ஒரே நேரத்தில் முழுமையாக உள்வாங்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய ஒன்றை எதிர்கொள்கிறார். ஒரு நாற்காலியைப் பார்ப்பது போல ஒருவரால் கிராண்ட் கேன்யனின் (Grand Canyon) ஒட்டுமொத்தப் பகுதியையும் ஒரே பார்வையில் பார்த்துவிட முடியாது. ஒரே பார்வையில் உள்வாங்க முடியாததால் அது எல்லையற்ற ஒன்றாக, உன்னதமாக அவரது புலன்களுக்குத் தெரிகிறது.
அதே போல் எரிமலையின் வெடிப்பை , பிரவாகமாய் சுழித்து கொண்டோடும் ஆற்றுப்பெருக்கை காணும் அனுபவங்களை இயங்காற்றலின் உன்னதம் ( The Dynamical Sublime ) என்கிறார். ஆற்றல் ரீதியான உன்னத அனுபவத்தில், சூறாவளி , சுனாமி போன்ற எல்லையற்ற ஆற்றல் கொண்டதாகத் தோன்றும் ஒரு இயற்கை அனுபவம் நமது புலன்களால் உணரப்படுகிறது. வானத்தை கிழிக்கும் மின்னலுடன் இடியின் முழக்கம் பூமியையே அதிரச் செய்வதைக் கேட்கும் போது ஏற்படும் உணர்வைக் கூட இயங்காற்றலின் உன்னதம் எனலாம்.
காண்ட்டின் கணித ரீதியான உன்னதத்தை எனது நீரச்சத்தோடு ஒப்பிட்டு பார்க்கலாம். ஒரு பெருங்கடலுக்கு முன் நின்றுகொண்டு பார்க்கையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் அந்த எல்லையற்ற நீர்ப்பரப்பை நம் கண்களால் ஒரே கணத்தில் அளவிட முடிவதில்லை; அது அளவில் எல்லையற்றதாகத் தோன்றுகிறது.
இந்தத் திகைப்பூட்டும் அனுபவம், நம் மனத்தின் பகுத்தறிவுத் திறனை (Reason) எல்லையற்ற தன்மையைப் (Infinity) பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. உடனே நமது பகுத்தறிவு, தான் கற்பனை செய்யும் அந்த முடிவற்ற பிரம்மாண்டத்திற்கு இணையான ஒரு காட்சியைப் புலனுணர்வு வழங்க வேண்டும் என்று விரும்புகிறது.
இருப்பினும், மனிதக் கண்களாலும் புலன்களாலும் அந்த எல்லையற்ற பேராழியின் முழுப் பரிமாணத்தையும் ஒரே புள்ளியில் காட்டிவிட முடியாது. நாம் எவ்வளவுதான் பரந்து நோக்கினாலும், கடலின் ஒரு பகுதியை மட்டுமே நம் புலன்களால் பார்க்க முடிகிறது (உண்மையில் பெருங்கடலும் பூமிக்கு உட்பட்ட ஒரு குறிப்பிட்ட எல்லை கொண்டதே). இதன் விளைவாக, அளவிட முடியாத அந்தப் பெருவெளி நமக்குள் ஒருவித அசெளகரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
பிரமாண்டத்தைக் குறித்த இந்த அச்சமே நமக்கு உன்னதம் என்றழைக்கக் கூடிய ஒரு பேரின்ப அனுபவத்தை அளிக்கிறது என்பது காண்ட்டின் முடிவு. ஏனெனில், புலன்கள் தோற்கும் அந்த இடத்தில், எல்லையற்ற தன்மையைப் பற்றிச் சிந்திக்க முடிகிற நமது பகுத்தறிவின் வியத்தகு பேராற்றல் வெளிப்படுகிறது. கண்ணால் பார்க்க முடியாத எல்லையற்ற பரப்பைக்கூட, மனித மனதால் சிந்திக்க முடிகிறது. ஒரு எல்லையற்ற மனத் திறனால் (பகுத்தறிவால்) மட்டுமே அளவில் எல்லையற்ற ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும்.
எனவே, நம் கண்முன்னே விரிந்து கிடக்கும் அந்தப் பிரம்மாண்டமான இயற்கையை விட, உண்மையில் அந்த எல்லையற்ற தன்மையைச் சிந்திக்கும் நமது பகுத்தறிவுள்ள மனமே (Rational Mind) அதை உன்னதமாக்குகிறது என்கிறார் காண்ட்.

மறுபுறம் , ரால்ஃப் வால்டோ எமர்சனின் ‘அனுபவம்’ என்னும் கட்டுரை, மனித இருப்பின் பிடிபடாத, சிதறுண்ட இயல்பை ஆராய்கிறது. உலகம் எப்போதும் தன்னியல்பில் நமக்குப் புலப்படுவதில்லை; நமது அப்போதைய மனநிலைகளே பல நிறக் கண்ணாடிகளைப் போல் உலகிற்கு தங்களது நிறத்தைப் பூசி, அதன் தோற்றத்தையும் பொருளையும் வடிவமைக்கின்றன என்று எமர்சன் கூறுகிறார்.
இலக்கியம் , வரலாறு போன்ற புறக்காரணிகளை விட ஒருவர் தன்னைப் பற்றியும் இந்த உலகத்தைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கு அவரது தனிப்பட்ட அனுபவமே மிகுந்த சக்தி வாய்ந்த வழிமுறையாகும் என்று கூறும் எமர்சன், வாழ்க்கை என்பது கணிக்க முடியாத அல்லது திட்டமிட முடியாத “ஆச்சரியங்களின்” தொடர்ச்சி என்கிறார்.
“ நாம் நமக்கு நிகழும் தற்செயலான விபத்துகளின் மூலமாகவே வளர்கிறோம்” (thrive by casualties) என்றும் மனிதனுடைய சிறந்த ஆற்றல் வெளிப்படும் இடங்கள் பெரும்பாலும் திட்டமிட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல், பூடகமாகவும் தன்னிச்சையாகவும்( Oblique and spontaneous) இருக்கும் என்றும் அவர் அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
இக்கட்டுரையை ஒரு முடிவற்ற படிக்கட்டின் உருவகத்துடன் தொடங்கும் எமர்சன் “நாம் விழித்தெழுந்து ஒரு படிக்கட்டில் நம்மைக் காண்கிறோம். நமக்கு மேலே இன்னும் பல படிக்கட்டுகள் கண்ணுக்குத் தெரியாத தூரம் வரை உயர்ந்து செல்கின்றன”. மனிதப் பார்வையால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு எல்லையற்ற பெருவெளியைக் குறிக்கும் இந்த உருவகத்தை , காண்ட்டின் “கணித ரீதியிலான உன்னதத்தோடு நாம் ஒப்பிட்டு பார்க்கலாம்.
எனக்கு முன்னால் எல்லையற்றதாக விரிந்து கிடந்து என்னை அச்சமூட்டிய அந்த மாபெரும் நீர்ப்பரப்பு, அந்த கடலடி உலகத்தை கண்டபின்பு எனக்குள் இருக்கும் இந்த உன்னதமான அக ஆற்றலைக் கண்டறிவதற்கான ஒரு தூண்டுகோலாக மாறியது .
அதுவரை என்னை வியாபித்திருந்த அச்சம், மன அழுத்தம் அத்தனையும் கரைவதாக உணர்ந்தேன். காண்ட்டின் கோட்பாட்டின்படி , உன்னதம் என்பது எல்லையற்ற சற்றே அச்சுறுத்தும் ஒரு அனுபவத்தை குறிக்கிறது. ஆனால் உண்மையில் இயற்கையின் பகுதியான எதுவும் உண்மையில் எல்லையற்றவை அல்ல; பிரபஞ்சத்தில் எல்லையற்றதும் உன்னதமுமானது நம்முடைய பகுத்தறிவுள்ள மனமேஎன்று காண்ட் வாதிடுகிறார். நம்முடைய சொந்த பகுத்தறிவு எவ்வளவு சக்தி வாய்ந்தது மற்றும் எல்லையற்றது என்பதை உணர்த்துகின்றன என்பதால்தான் இயற்கை நிகழ்வுகளை நாம் உன்னதமானது என்று கருதுகிறோம் என்பது காண்ட்டின் முடிவு
இதை மறுக்கும் எமர்சன், “நாம் இருக்கிறோம் என்பதை உணர்வதே மனிதனின் வீழ்ச்சி (Fall of Man)” என்று கூறுகிறார். ஏனெனில் அந்தக் கணத்தில் நாம் உலகை நமது அகத்தின் வழியாக நமது சுய முன் அனுபவங்களின் லென்ஸ்களின் (subject-lenses) வழியாகவே காண்கிறோம் என்கிறார் அவர். நாம் இயற்கையின் ஊடே பேய்களைப் போல நழுவிச் செல்பவர்கள் என்றும், அவதானிப்பவருக்கும் அவதானிக்கப்படும் பொருளுக்கும் இடையே ஒரு “கடக்க முடியாத கடல்” இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
நமது வாழ்வின் உன்னத தருணங்கள் என்பது , வாழ்க்கையின் ஒரு புதிய மகத்துவமான பகுதிக்கு மிக அருகில் இருப்பதாக நம்மை உணரச் செய்வன. அவையே மகத்துவத்தின் முழுமையான கம்பீரத்தை( The August Magnificience) வெளிப்படுத்தும் தருணங்கள் . அப்படிப்பட்ட உன்னத அனுபவத்தை அடைவது என்பது இயற்கையுடனோ அல்லது ஒரு தெய்வீக ஆற்றலுடனோ ஒரு ஆழமான தொடர்பை உணர்வதாகும்.
இதனாலேயே உன்னத நிலையை மனித எண்ணத்திற்குள் ( அறிவுக்குள்) மட்டுமே சுருக்கும் காண்ட்டின் கோட்பாட்டை நம்மால் முழுமையாக ஏற்க முடிவதில்லை. நம் அறிவால் புரிந்து கொள்ள முடியாத , நம் அறிவினால் அடைய முடியாத ஒன்றையே நாம் உன்னதம் என்று கருதுகிறோம் என்பதே உண்மை.
இருப்பினும், இயற்கையின் பிரம்மாண்டமான சக்திவாய்ந்த நிகழ்வுகள் நமக்கு ஏன் பிரமிப்பையும் பரவசத்தையும் அளிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள காண்ட்டின் கோட்பாடு ஒரு சிறந்த தொடக்கப் புள்ளியாக அமைகிறது என்பதை மறுக்க முடியாது.
சற்று தூரத்தில் என் மகனும் நீந்திக்கொண்டிருந்தான்.
நிலத்தில் வாழக் கூடிய வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அவனுக்கு நிறைய விதிமுறைகளும் நடைமுறை வழக்கங்களும் ( Rules and Routines) தேவைப்படுகின்றன. ஆனால் நேர்மாறாக அவனுக்கு நீரின் கட்டுப்பாடற்ற தன்மை, அதன் ஒழுங்கற்ற பிரவாகம் ஆசுவாசத்தை அளித்தது . தண்ணீர் மீது நீருக்குள் என் மகனது கால்கள் ஆடிய நடனத்தைக் கண்டேன். தரையில் காலூன்றி நடக்கச் சிரமப்படும் குழந்தை நீருக்குள் உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் துள்ளியபடி இருந்தான்.
ஒருநாள் அவன் நிலத்தின் விதிமுறைகளையும் பழகி கொள்ளுவான் என்று அந்தக் கணம் ஒரு நம்பிக்கை வந்தது. கடலைக் குறித்த, வாழ்வைக் குறித்த அச்சங்கள் குறைந்து புதிய திறப்புகளுடன் , உன்னதத்தை அனுபவித்த பரவசத்தோடு கரையேறினேன்.
நான் சற்றும் எதிர்பாராத விதமாக இரண்டு மூன்று ஓங்கில் குட்டிகள் என் கண் முன் துள்ளின. என் மகன் உற்சாகக் கூக்குரலுடன் அந்த டால்ஃபின்களைத் துரத்தியபடி நீந்தினான்.
அவனது சத்தத்தைக் கேட்டு என் மகள் உட்பட மேலும் சில பிள்ளைகள் அவனோடு சேர்ந்து கொள்ள அந்த ஓங்கில் குட்டிகள் அவர்களோடு ஓடி (நீந்தி ) பிடித்து விளையாடத் தொடங்கியது. இயற்கையின் இரு வேறு அங்கங்களான குழந்தைகளும் ஒங்கில்களும் இணக்கத்துடன் விளையாடும் காட்சி வாழ்வின் மீதான என் நம்பிக்கையைக் கூட்டியது. இந்த மாபெரும் இயற்கையின் ஒரு பகுதியாக அதன் ஓரு துளியாக என்னை உணரவைத்தது.
நீரில் மேயும் மீன்கள்
நிலத்தில் தியானிக்கும் மலைகள்
ஆழத்தில் தூங்கும் பவளங்கள்
கடலை மயக்கும் ஆறுகள்
கூடி அழைக்கின்றன
காலையில் தவழும் கைக்குழந்தையை.
விளையாடக்கூடப் பழகாத பிள்ளை
சும்மா சும்மா பார்க்கிறது அம்மா முகத்தை.
அவள் கண்ணில் சங்கமிக்கின்றன
எல்லாக் கடல்களும்.
ஜெ. பிரான்சிஸ் கிருபா
நாம் எப்போதும் வாழ்வின் வழுக்கும் மேற்பரப்புகளில் வாழ்கிறோம் . வாழும் கலை என்பது அந்த வழுக்கும் மேற்பரப்புகளின் மீது திறமையாகச் சறுக்கிச் செல்லக் கற்றுக்கொள்வதுதான்.
நாம் ஒவ்வொருவரும் நமக்கே உரிய வாழ்க்கைப் பயணத்தை ஏற்றுக்கொண்டு, சாதாரணமான அன்றாட அனுபவங்களுக்குள் மறைந்திருக்கும் அசாதாரணங்களின் அமைதியான வெளிப்பாடுகளையும் நுண்ணிய உண்மைகளையும் கண்டறிய வேண்டுமென்றே இந்த அனுபவம் எனக்கு வலியுறுத்தியது .
அன்றாட வாழ்க்கையின் மாயைகளுக்கும் நிலையற்ற தன்மைக்கும் மத்தியில், நிகழ்கணத்தை முழுமையாக உணர்வதன் வாயிலாக வாழ்வின் மீதான நம்பிக்கையை வளர்த்து கொள்வதே நாம் செய்யக்கூடியவை .
நமக்குள் முரண்படும் எண்ணங்களும் குழப்பங்களும் இருந்தாலும், நமது தனிப்பட்ட கனவையும் நித்தியத்திலிருந்து வரும் உயிராற்றலையும் நம்பி வாழ்வதே மகோன்னதம் என்பதை நான் உணர்ந்த போது என் கண்களில் கடல் நிறைந்திருந்தது. நானும் கடலாகி இருந்தேன்.

பா.ரேவதி
சிங்கப்பூரில் வசித்துவரும் பா.ரேவதி, கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், மங்கையர் மலர் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் வெளிவரும் 'தி சிராங்கூன் டைம்ஸ்' மாதாந்திர இதழிலும் , நுட்பம் , நீலி ஆகிய மின்னிதழ்களிலும் இவரின் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தற்சமயம் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
